சூரப்புலி – 7

சில இரவுகளில் அது குகைக்குள்ளே தனியாகப் படுத்துத் தூக்கம் வரும் வரையில் பகலிலே நடந்த சம்பவங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும். அன்றைய சம்பவங்களிலிருந்து மெது வாகப் பழைய வாழ்க்கையைப் பற்றிய நினைப்பும் வரும். பவானி ஆற்றில் வந்த வெள்ளத்தைப்பற்றியும், பாக்கு வியாபாரியின் மாளிகை யிலே தன் வாழ்க்கையைப்பற்றியும் அது எண்ணிக்கொண்டிருக்கும். அந்தச் சபை நாயை ஒரு நாள் பழிவாங்க வேண்டும் என்ற கோபமும் அப்போது உண்டாகும். உருளைக்கிழங்கு மண்டியிலே இருந்த காவல்காரர்களைப்பற்றியும் நினைக்கும். அதே சமயத்தில் தாடிக்கார னுடைய நினைவு வந்து அது குமுறும். அதன் கண்களிலே கோபக் கனல் கொழுந்துவிடும். 

இவற்றிற்கு மத்தியிலே அந்தத் துறவியைப்பற்றிய நினைவும் சில வேளைகளில் வராமற் போகாது. அந்த மனிதனைப் பற்றி அது ஒரு தனிப்பட்ட ஆச்சரியத்தோடு யோசித்துப் பார்க்கும். அவன் எதற்காக அதனிடத்திலே அன்பு காட்டினான்? மனிதரெல்லாம் அதற்குத் துன்பமே கொடுத்தார்கள். பாக்கு வியாபாரியின் மகனான சிறு பையன் கூடத் துன்பமே செய்தான். இந்த மனிதன் எதற்கு வேறு விதமாக நடந்தான்? அவன் எதற்காக அதன் எலும்புகளை பொருத்தி வைத்துக் கட்டினான்? எதற்காக அவன் உணவும் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தான்? முகத்தை மூடிக்கொண்டு ஏன் உதவி செய்தான்? பிறகு எங்கே போய்விட்டான்? அவன் மனிதனல்லவோ? வேறு வகையான ஒரு பிறவியா? அவனுக்கும் தாடிக்காரனைப் போலத் தாடியிருந்ததே ! காட்டிலே வாழ்கின்ற ஆண் வரையாட்டிற்குக்கூடத் தாடியிருக்கிறது. ஆனால் அது மனித இனமல்ல. அது போல அவன் வேறு இனமா? அவனிடம் அன்பு நிறைய இருக்கிறது. அவனைப் பார்த்துப் பழகிக்கொள்ள வேண்டும். ஆனால் அவன் எங்கே இருக்கிறானோ ?  இவ்வாறு சூரப்புலியின் உள்ளத்திலே எண்ணங்களும், கேள்வி களும் எழும். துறவியைப் பற்றிய எண்ணம் பல தடவை வந்ததால் அவரைப் பார்க்க வேண்டும் என்று அது விரும்பியது. இந்த விருப்பம் புதியதாக ஏற்பட்ட ஒரு சம்பவத்திற்குப் பிறகு மிக அதிகமாயிற்று. ஒரு நாள் சூரப்புலி ஒரு முள்ளம்பன்றியைக் கண்டது. அதனோடு குறும்பாகச் சண்டையிட ஆரம்பித்தது. காளைப் பருவத்துத் துடுக்கே இந்தச் சண்டைக்குக் காரணம். ஆனால் சூரப்புலி முள்ளம்பன்றியின் மேல் பாய் முயன்றபோது முள்ளம் பன்றி தனது நீண்ட கூரிய முட்களில் ஐந்தாறை அதன் கழுத்திலும் மார்பிலும் தைக்கும்படி செய்துவிட்டது. அது உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு உடம்பெல்லாம் முள்ளாக நின்றதைக் கண்டு சூரப்புலி பின்வாங்கியது. முள் தைத்த இடமெல்லாம் வலியெடுத்தது. அதனால் முள்ளம்பன்றியை எதிர்த்து நிற்காமல் குகைக்கு ஓடி வந்துவிட்டது. அங்கே வந்து முட்களையெல்லாம் வாயில் கவ்வியும், கால்களால் தள்ளியும் எடுக்க முயன்றபோது துறவியின் நினைப்பு அதற்கு அதிக மாயிற்று. அந்த மனிதர் இப்பொழுது பக்கத்திலிருந்தால் முள்ளை யெல்லாம் பிடுங்கிவிடுவதோடு காயத்திற்கு மருந்தும் போடுவார் என்று அது நினைத்தது. துறவியின் மேலாடையில் கிழித்த சில துணிகள் குகைக்குள்ளே கிடந்தன. அவற்றைச் சூரப்புலி நன்றாக முகர்ந்து பார்த்தது. அந்த மாதிரி மோப்பம் பிடித்து அவரைக் கண்டு பிடிக்க நினைத்தது. அவர் பக்கத்திலேயே எங்காவது இருப்பாரென்று எண்ணி நாள்தோறும் சுற்றுப்புறமெல்லாம் தேடித் தேடி அலைந்தது. ஒருநாள் இவ்வாறு ஓடிக்கொண்டே அது வெகு தூரம் சென்று விட்டது. இதுவரையிலும் காணாத சிறிய ஆறு ஒன்று அங்கே தென்பட்டது. அதன் கரை ஓரமாகவே சூரப்புலி நீண்ட நேரம் ஓடிற்று. கடைசியாகத் திரும்பலாம் என்று நினைக்கும் சமயத்தில் ஆற்றின் கரையிலே நல்ல அழகான இடத்திலே ஒரு பர்ணசாலை கண்ணுக்குப் புலப்பட்டது. சூரப்புலி அதனருகே சென்றது. யாரும் அங்கிருக்கவில்லை. அதனால் அது மெதுவாகப் பர்ணசாலைக் குள் நுழைந்தது. உள்ளேயும் யாரும் இல்லை. அது காலியாக இருந்தது. சில கிழிந்த துணிகள் மட்டும் அங்குமிங்கும் கிடந்தன. அவற்றைச் சூரப்புலி முகர்ந்து பார்த்தது. அவை அந்தத் துறவிக்குக் சொந்தமானவை என்று அதற்குத் தெரிந்துவிட்டது. அதனால் அது அங்கேயே இருந்தது. துறவியைச் சந்திக்கத் தீர்மானித்தது. இரவு சூழ்ந்தது. ஆனால் யாரும் அங்கு வரவில்லை. சூரப்புலி பர்ணசாலைக்குள்ளேயே படுத்துக்கொண்டிருந்தது. 

பர்ணசாலையிலேயே சூரப்புலி இரவு முழுவதும் படுத்திருந்தது . மறுநாள் மாலை வரையிலும் அந்தப் பக்கத்திலேயே அங்குமிங்கும் உலாவிற்று. எப்படியாவது அந்தத் துறவியைக் காணவேண்டு மென்று அதற்கு ஆசை. ஆனால், மாலை வரையிலும் அங்கு யாரும் வரவில்லை. அதனால் மேலும் அங்கேயே இருந்து துறவியைக் காண முடியாதென்று அதற்குத் தோன்றியது. அவர் வேறெங்காவது போயிருக்கலாம். அல்லது இருக்கையை மாற்றிக்கொண்டிருக்கலாம். இவ்வாறு நினைத்துக்கொண்டே சூரப்புலி அவரைத் தேடிப்போக . எண்ணிற்று. பர்ணசாலைக்குள் சென்று நன்றாக மோப்பம் பிடித்தது. பிறகு, அவருடைய காலடி சென்றுள்ள பக்கமாக மோப்பம் பிடித்துக் கொண்டே சென்றது. ஆற்றை அடையும் வரையில் அதற்கு எவ் விதச் சந்தேகமும் ஏற்படவில்லை. அதுவரையிலும் நிச்சயமாக மோப்பம் பிடிக்க முடிந்தது. அதற்குமேல் கரையோரமாக மேலும் கீழும் ஓடிப்பார்த்தது. கொஞ்ச தூரத்திற்கு மோப்பம் கிடைத்ததே ஓழிய அதற்கு மேல் ஒன்றும் புலனாகவில்லை. துறவி கரையோரமாக மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ செல்லவில்லை என்பது தெரிந்து விட்டது. அதனால் அவர் ஆற்றைக் கடந்துதான் போயிருக்க வேண்டும். 

சூரப்புலி ஆற்றில் குதித்தது. ஆற்றில் ஆழம் அதிகமில்லை. அதனால் நடந்தே அக்கரைக்குச் செல்ல முடிந்தது. அக்கரை சென்றதும் சூரப்புலி மீண்டும் மோப்பம் பிடித்துத் துறவி சென்ற சிறிய கால்நடைப் பாதையைக் கண்டு பிடித்துவிட்டது. அந்தப் பாதை குறுகலாக இருந்தாலும் அடிக்கடி பலர் நடந்த காரணத்தால் நன்றாகத் தெரிந்தது. அதன் வழியாகவே சூரப்புலி வேகமாக ஓடிற்று . 

ஆனால், இருள் பரவ ஆரம்பித்ததும் அது வேகத்தைக் குறைத்துக் கொண்டு காலடிச் சத்தம் கேட்காதவாறும், சுற்றுமுற்றும் பார்த்து எச்சரிக்கையோடும் நடக்கத் தொடங்கியது. போகப் போகக் காட்டின் அடர்த்தி குறையலாயிற்று. சில இடங்களில் மரங்களே இருக்கவில்லை; சில குற்றுச் செடிகளும் மலைப்புல்லுமே இருந்தன. அவற்றின் வழியாகப் போய்க்கொண்டிருக்கும்போது மெதுவாக எதுவோ அதிர்வது போல ஓசை கேட்டது. இன்னும் கொஞ்ச தூரம் போன போது அந்த ஓசை தடதடவென்று அதிகமாயிற்று. இதுவரையிலும் சூரப்புலி பல வகையான காட்டு ஒலிகளைக் கேட்டிருக்கிறது; அவை எப்படி அல்லது எதனால் உண்டாகின்றனவென்றும் அதற்குத் தெரியும். சிறிய ஒலியிலிருந்தும் அது பிராணிகளை அறிந்து கொள்ளும். ஆனால் இது போன்ற இடைவிடாத பெரிய ஓசையை அது இன்று வரையிலும் கேட்டதில்லை. அதனால், மேலே நடவாமல் தயங்கி நின்றது. அடுத்த நாள் பகல் வெளிச்சம் வருமுன் இனி அடியெடுத்து வைக்கக்கூடாது என்று அதற்குத் தோன்றிற்று. உடனே அங்கே ஒரு மறைவான புதரைக் கண்டுபிடித்து அதற்குள்ளே சென்று மெதுவாகப் படுத்தது. அப்படிப் படுத்ததும் அதற்கும் பழைய நினைவு வந்தது. முதன் முதலாக அது கானத்தில் புகுந்து ஒரு புதரிடையே இப்படித் தானே படுத்தது? அந்த நினைவு வந்ததும் அதற்குத் தூக்கம் பிடிக்க வில்லை. விழித்துக்கொண்டே எச்சரிக்கையோடு விடியுமளவும் படுத்திருந்தது. 

காலையிலே சூரிய கிரணங்கள் காட்டில் புகுந்து எங்கும் வெளிச் சம் ஏற்பட்டவுடன் சூரப்புலி மேற்கொண்டு தனது பிரயாணத்தைத் தொடங்கிற்று. வரதர தடதடவென்று அதிரும் ஓசை அதிகமா யிற்று. ஆனால், இரவிலே ஏற்பட்டது போன்ற அச்சம் இப்பொழுது ஏற்படவில்லை. எனினும் சூரப்புலி எச்சரிக்கையோடு சென்றது. 

இப்பொழுது காதைத் தொலைக்கும்படியாகப் பேரிரைச்சல் கேட்கலாயிற்று. ஆனால் சிறிய பறவைகளையும் புனுகு பூனை முயல். போன்ற சிறிய விலங்குகளையும் தவிர வேறு பெரிய பிராணிகளின் அறிகுறியே தெரியவில்லை. சூரப்புலி ஆச்சரியப்பட்டுக்கொண்டே அடியெடுத்து வைத்தது

ஒரு திருப்பத்திற்கு வந்து புதர் மறைவிலிருந்து இடப்பக்கமாகத் திரும்பும்போது திடீரென்று ஒரு மலையருவி கண்ணுக்குத் தோன்றிற்று. பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஓடிய அதே சிறிய ஆறு அங்கு ஒரு பாறையிலிருந்து கீழே அருவியாகச் சுமார் 15 அடி உயரத்திற்கு விழுந்து கொண்டிருந்தது. அந்த அருவியே தடதடவென்று ஓசை யுண்டாக்குகிறது என்று சூரப்புலிக்குத் தெரிந்ததும் அது தன் சந்தேகத்தையெல்லாம் விட்டுவிட்டு வேகமாகக் கீழே செல்லலாயிற்று . 

அருவியின் கீழ்ப்பகுதியிலே ஓரிடத்தில் அகன்ற பாறையொன்று சற்று உயரமாக ஒரு மேடையைப் போல அமைந்திருந்தது. அதன் மீது ஒரு காவி நிறமான பை அவிழ்ந்தே கிடந்தது. சூரப்புலி அப்பையை முகர்ந்து பார்த்து, அது துறவிக்குச் சொந்தமான தென்று கண்டு கொண்டது. உடனே, அது ஆவலோடு பைக்குள் தலையை விட்டுப் பார்த்தது. அதிலே சில புத்தகங்களும், ஒரு சிறிய கத்தியும் இருந்தன. அந்தக் கத்தியால் மூங்கில் பத்தைகளைச் சீவித் தன் கால்களில் வைத்துக் கட்டியதை சூரப்புலி உணர்ந்து. கொண்டது. ஆதலால், துறவி அங்கேதான் பக்கத்தில் எங்காவது 

இருப்பாரென்று அது மகிழ்ச்சியோடு அங்குமிங்கும் சுற்றிய பார்த்தது. துறவியை எங்கும் காணோம். அங்கிருந்து மலை காட்டைவிட்டுக் கீழிறங்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையிலே அவர் சென்றிருக்கவேண்டும் என்று மட்டும் அது மோப்பத்தால் அறிந்து கொள்ள முடிந்தது. 

இருந்தாலும் அதற்கு ஒரு வீணான ஆசை . மறுபடியும் பர்ணசாலைக்குப் போனால் அங்கே ஒரு வேளை அந்தத் துறவி இருப்பாரோ? பையை எடுத்துக் கொண்டு போய் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று அது விரும்பிற்று. உடனே, வாயில் பையை நன்றாகக் கவ்வி, அதனுள்ளிருக்கும் பொருள்கள் கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டு, வந்து வழியிலேயே வேகமாகத் திரும்பிப் பர்ணசாலைக்குச் சென்றது. 

சூரப்புலி எதிர்பார்த்தது போலத் துறவி அங்கிருக்கவில்லை. அது பர்ணசாலைக்குள் ஒரு மறைவிடத்தில் பையை வைத்துவிட்டு மீண்டும் அருவியை நோக்கிப் புறப்பட்டது. தூரத்திலேயே அருவியின் ஓசையைக் கேட்டு இந்த முறை அது பயமடையவில்லை. அருவியை அடைந்ததும் நாலாபக்கமும் ஆவலோடு மீண்டும் சுற்றிப் பார்த்தது. பிறகு ஒற்றையடிப்பாதை வழியாக அது மலைக்காட்டை விட்டுக் கீழிறங்கி நடக்கலாயிற்று. கொஞ்சங் கொஞ்சமாக நிலத்தின் தன்மை மாறிக்கொண்டே வந்து கடைசியில் பயிர் செய்யும் நிலப் பகுதியே வந்துவிட்டது. சூரப்புலி மோப்பம் பிடித்துக்கொண்டே தொடர்ந்து சென்றது. துறவியைக் கண்டுபிடிக்காமல் திரும்புவ தில்லை என்ற உறுதி அதன் உள்ளத்திலே ஏற்பட்டிருக்க வேண்டும். 

அன்று கதிரவன் மறைந்து இருள் கூடுகின்ற சமயத்திலே அது மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. அங்கு வந்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வரிசையாக எழுந்தன. அதன் இளமைப்பருவ நிகழ்ச்சிகள் அந்த ஊரில் தானே நடந்தன? சூரப்புலி பல வீதிகளின் வழியாக யாதொரு நோக்கமுமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தது. அங்கு வந்த பிறகு துறவியின் அடிச்சுவடுகளை மோப்பம் பிடித்து அறியமுடியவில்லை, காட்டுப்பாதையிலே நடமாட்டம் அதிகமாக இராததால் மோப்பம் பிடிப்பது சாத்தியமாயிற்று. இங்கு மக்கள் நடமாட்டம் அதிகம். துறவி அந்த வழியாகச் சென்று சில நாள்கள் ஆகியிருக்க வேண்டும். அதனால், சூரப்புலியின் மிக நுட்பமான மோப்பம் பிடிக்கும் சக்தியும் பயன்படவில்லை. 

மூங்கில் தடியால் அடிபட்ட உருளைக்கிழங்கு மண்டியின் வழியாகச் சூரப்புலி இரவு பன்னிரண்டு மணி சுமாருக்குச் சென்றது. அந்த இடத்தைக் கண்டதும் அதற்குத் திடீரென்று கோபம் உண்டாயிற்று. சட்டென்று வீதியை விட்டு மண்டியின் முன் பகுதிக்குள் நுழைந்தது. அன்றிரவும் அங்கே தாழ்வாரத்தில் இரண்டு பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நல்ல வேளை. அவர்கள் பழைய ஆசாமிகள் அல்ல. பழைய ஆசாமிகளைப் போலவே அவர்களும் தூக்கத்தில் சூரப்புலிகளாக இருந்தாலும் ஆட்கள் வேறு. அதனால் அவர்களைப்பற்றிச் சிந்திக்காமல் வெளியே வந்தது. மீண்டும் வீதிகளின் வழியாகச் சுற்றலாயிற்று. சிறிய குட்டியாக இருந்த போது அது இப்படித்தானே அந்த விதிகளில் அலைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்

முருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதைமுருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் களியனூர் எனும் ஊரில் முருகன் என்ற கொல்லன் வாழ்ந்து வந்தான். கொல்லன் என்பவன் இரும்புப் பொருட்களில் வேலை செய்பவன். அந்த சமயங்களில் கார், பஸ் போன்ற வாகனங்கள் இல்லாததால் குதிரை வண்டி, மாட்டு வண்டி ஆகியவற்றையே மக்கள் பயணம்

சூரப்புலி – 3சூரப்புலி – 3

அக்குரல் அடங்கிய பிறகும் மலைச் சாரலிலே எதிரொலி வெகுநேரம் வரையிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் கானகமே கொஞ்ச நேரம் பயந்து மெளனமாக இருந்தது போலத் தோன்றிற்று. அந்தக் குரலைக் கேட்டு எல்லாப் பிராணிகளும் திகைத்துப்போய் ஊமையாகி விட்டனவோ என்னவோ?