ஒவ்வொரு குழந்தையின் முதல் சிரிப்பும் விலை மதிப்பில்லாதது. பொக்கை வாய் சிரிப்பிலிருந்து ஒரு தேவதை பிறக்கிறாள் என்ற முன்னுரையுடன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது டிஸ்னியின் டிங்கர்பெல். டிங்கர் என்றால் உலோகத்தில் செய்த பொருட்களை ரிப்பேர் செய்பவர் என்ற பொருள் உண்டு. இந்தக் கதை கூட அந்த ஓட்டை உடைசலை சரிசெய்யும் டிங்கரைப் பற்றித்தான். இந்த தேவதையின் மொழி நம் மனிதக் காதுகளுக்கு மணி ஒலிப்பதைப் போன்றிருக்குமாம். எனவேதான் டிங்கர்பெல் என்ற பெயர் என்று காரணம் சொல்கிறார்கள்.
இனி கதைக்கு வருவோம். குழந்தையின் முதல் சிரிப்பு அழகான பூவாய் உருமாறி பறந்து சென்று நெவர்லாண்ட்டின் ஒரு பகுதியில் இருக்கும் ‘பிக்சி ஹாலோ’வை அடைகிறது. அந்த நிலத்தின் ராணி மந்திரத்துகளான பிக்சி டஸ்ட்டை தெளித்து அதனை ஒரு அழகான தேவதையாக உருமாற்றுகிறார். இனி அடுத்தபடியாக அவளுக்கான திறமைகளைக் கண்டறிதல். ஒவ்வொரு முறையும் பனிக்காலம், வசந்தகாலம் முதலிய பருவங்களுக்குத் தேவையான வேலைகளை செய்வதே அந்த தேவதைகளின் பணி. மலர்களை வர்ணம் பூசி மலரவைக்கும் மலர் தேவதைகள், நீர் தேவதை, வெளிச்சம் தொடர்பான வேலைகளை செய்யும் தேவதைகள், காற்றினை சுழன்றடிக்கச் செய்யும் காற்று தேவதை. குளிர்காலத் தூக்கத்திலிருந்து மிருகங்களை எழுப்பும் தேவதைகள், இவர்கள் அனைவருக்கும் வேண்டிய தட்டு முட்டு சாமானத்தை செய்து தரும் டிங்கர் தேவதைகள் என்று பல பிரிவுகள் உண்டு. இவர்கள் அனைவரும் வசந்தகால தேவதைகள்.
புதிய தேவதை மற்றவற்றை விரும்பினாலும் டிங்கர் செய்யவே அவள் படைக்கப்பட்டவள் என்பது அப்போது நடக்கும் அதிசயத்தில் அனைவருக்கும் விளங்குகிறது. டிங்கர்பெல் என்ற நாமகரணம் சூட்டப்பட்டு அவளது இருப்பிடத்திற்கு அழைத்து செல்லப் படுகிறாள். பாபில், கிளான்க் என்று இரண்டு தோழர்களும் அவளுக்குக் கிடைக்கின்றன. இருவரும் அவளுக்கு வேலைகளை விளக்குகின்றனர். இதன் நடுவே நீர்தேவதை சில்வர்மிஸ்ட், தோட்டத்தின் தேவதை ரோசாட்டா, வெளிச்ச தேவதை இரிடசா, மிருக தேவதை ஃபான் ஆகியவர்களின் நட்பையும். காற்று தேவதை விடியாவின் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொள்கிறாள் பெல்.ஒவ்வொரு சீசன் போதும் மெயின்லாண்டிற்கு சேன்று வசந்தம் வருவதற்கான வேலைகளை செய்வது தேவதைகளின் கடமை. டிங்கர்கள் அங்கு செல்வதில்லை என்பதால் அதிருப்தி அடையும் பெல். சிறு சிறு கருவிகள் உருவாக்கி அதனை ராணியிடம் காண்பித்து எப்படியாவது மெயின்லாண்ட் போய்விடத் துடிக்கிறாள். ஆனால் ராணி அவளிடம் டிங்கர்கள் செல்ல அனுமதி இல்லை என்று சொல்ல வருத்தம் அடைகிறாள். தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தனது தொழிலை விட்டுவிட்டு மற்ற துறைக்கு செல்ல முயல்கிறாள். அவளது தோழியரும் அவரவர்களின் துறையினை பெல்லுக்குக் கற்றுத் தருகின்றனர். சின்னஞ்சிறு பறவைக்கு குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுத் தந்தால் அவர்களின் எதிரியான பருந்திடம் மாட்டிக் கொள்ள நெருடுகிறது, காலை மாலை வெளிச்சத்தை அவளால் குப்பிக்குள் அடைக்க முடியவில்லை. மென்மையாக நீரை தூவ முடியவில்லை. மெயின் லாண்டுக்கு போகும் நேரம் நெருங்குகிறது. பெல்லின் வேலைகளை பகிர்ந்து கொண்டு அவளைப் பயிற்சிக்கு அனுப்புகின்றனர் பாபிலும், க்ளார்க்கும். இதனை அவர்களது தலைவி ஃபேரி மேரி கண்டு கொண்டு வருத்தம் அடைகிறார்.
எதையும் இதுவரை தனக்கு வராதது கண்டு வெறுத்து போய் கடற்கரையில் ஒதுங்கும் பெல், அங்கிருந்த சிறு சிறு பொருள்களைக் கொண்டு உடைந்து கிடந்த ஒரு நடனம் ஆடும் பொம்மையை சரிபடுத்துகிறாள். அதனை மறைந்து பார்க்கும் அவளது தோழிகள் அனைவரும் பெல்லிடம் இது தான் உனது திறமை என்று எடுத்துக் கூறுகின்றனர்.
கடைசியாக பெல் விடியாவின் உதவியை நாடுகிறாள். விடியா பெல்லுக்குத் தலைகுனிவை ஏற்படுத்த ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் காட்டு முற்செடிகளை அடக்கிப் பிடித்து ஓரிடத்தில் அடைத்து வைத்தால் மெயின்லாண்டிற்கு ராணி அனுப்புவார் என்று தப்பான வழியைச் சொல்லித் தருகிறாள். காட்டு முற்களைப் பிடிக்கும் முயற்சி பெரிய விபரீதமாகி அந்த முற்கள் வசந்த காலத்திற்காக தேவதைகள் தயார் செய்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் அழித்து விடுகிறது. இதனால் அனைவரின் முன்பும் குற்றவாளியாக நிற்கிறாள் பெல்.
தான் செய்த தவறைத் தானே சரி செய்ய எண்ணி கிடைக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டு அசாதாரண வேகத்தில் மறுபடியும் வேலைகளை செய்யத் தன்னால் முடியும் என்று சொல்லி அதே போல அவளது சக தோழிகளின் துணையுடன் செய்து முடிக்கிறாள் பெல். முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்பவர்களிடம். நான் செய்து முடிப்பேன். ஏனென்றால் நான் ஒரு டிங்கர் அதுதான் எனது பலம் என்று ஆணித்தரமாக சொல்கிறாள்.
பெல்லின் முற்செடிகளைப் பிடிக்கக் காரணம் விடியாதான் என்று கண்டறிந்து அவளைத் தண்டிக்கிறார் ராணி. பெல் சரியான நேரத்தில் அத்தனை வேலைகளையும் செய்து முடித்தமைக்காக மெயின் லாண்ட் சென்று வரும் வாய்ப்பும் அவளுக்குக் கிடைக்கிறது.
நமது பலம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் இந்தப் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் பார்க்கலாம்.