Tamil Madhura கதை மதுரம் 2019,கல்யாணக் கனவுகள்,தொடர்கள்,யாழ் சத்யா யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10

 

நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.

 

அன்று ஞாயிற்றுக் கிழமை. காலையிலேயே நுவரெலியா மாவட்டத்திலிருந்த ஹோட்டன் சமவெளிக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்கள். (Horton Plains National Park in Nuwara Eliya) ஒருநாள் வைஷாலி பேச்சு வாக்கில் உலக முடிவைத் தான் இதுவரை பார்த்ததில்லை என்று சொல்லியிருக்கவும் சஞ்சயன் அழைத்துச் சென்றிருந்தான்.

 

வைஷாலி அதிகாலையிலேயே எழுந்து பிரைட் ரைஸ் செய்து இரண்டு பார்சல்கள் கட்டிக் கொண்டாள். தண்ணீர்ப் போத்தல், யூஸ், சிப்ஸ் என்று குடிப்பதற்கும் கொறிப்பதற்குமாக சிலவற்றையும் எடுத்து ஒரு தோள்ப்பையில் வைத்து பிக்னிக் போவதற்கு ஏற்ற வகையில் பக்காவாகத் தயாராகினாள்.

 

ஹோட்டன் சமவெளி கொஞ்சம் குளிர் அதிகமான பிரதேசம் தான். அதனால் நல்ல மொத்த டெனிம் ஜீன்ஸ், கழுத்து வரை மூடிய ஸ்வெட்டரும் அணிந்து, மேலே ஒரு மெல்லிய லெதர் ஜக்கெட்டையும் போட்டுக் கொண்டாள். நடப்பதற்கு இலகுவாக ஜொக்கிங் சப்பாத்துக்களை அணிந்து விட்டுக் கழுத்தில் ஒரு மப்ளரையும் சுற்றிக் கொண்டாள். அப்போது மோட்டார் சைக்கிளின் ஹோன் சத்தம் கேட்கவும் தோள்ப்பையை முதுகில் மாட்டிக் கொண்டு வீட்டையும் பூட்டிக் கொண்டு வெளியே சென்றாள் வைஷாலி.

 

சஞ்சயன் தான் வந்திருந்தான். வைஷாலி பின்னே ஏறி அமரவும் வண்டியைக் கிளப்பியவன் அந்த வளைந்த பாதைகளில் மிகக் கவனமாகவே வண்டியைச் செலுத்தினான். முன்பெல்லாம் அவன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வேகம் பற்றி யோசிப்பதே இல்லை. எங்காவது மலையிலிருந்து விழுந்து இறந்தால் தான் என்ன என்று யோசிப்பான்.

 

ஆனால் இப்போது வைஷாலியின் வரவுக்குப் பின் தன்னிலேயே அவன் மிகக் கவனம். அப்படியிருக்க வைஷாலி பின்னால் அமர்ந்திருக்கும் போது கேட்கவும் வேண்டுமா? ஹோட்டன் சமவெளியைக் காலை பத்து மணி போல அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள்.

 

சஞ்சயன் வைஷாலியின் தோள்ப்பையை வாங்கித் தனது தோளில் போட்டுக் கொண்டான். வைஷாலி சஞ்சயனின் கமெராவைத் தனது கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டாள். சுற்றி வரப் பார்த்துக் கொண்டே உலக முடிவுக்குச் செல்ல என்று இருந்த ஒடுங்கிய பாதையூடாக நடக்க ஆரம்பித்தனர். சில இலங்கையர்களும் பல வெளிநாட்டவர்களும் கூட இவர்களுக்கு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தனர். அண்ணளவாக போக வர பத்து கிலோமீட்டர்கள் நடக்க வேண்டுமே.  ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமே.

 

“ஹேய் சஞ்சு…! அங்க பாருடா… அதெல்லாம் என்ன விலங்குகள்? கூட்டமாக நிற்குது…”

 

கூறிக் கொண்டே கமெராவினுள் அந்தக் காட்சியைப் படம் பிடித்தாள். பச்சைப் பசேலென்ற புல்வெளியில் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த அந்த விலங்குகள் கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருந்தது.

 

“அது தான் மரை…”

 

“ஓ…”

 

என்றவள் மேலும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தாள். சஞ்சயனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

 

அப்போது இவர்கள் முன்னே ஒரு ஜோடி கை கோர்த்தபடி ஆங்கிலமும் பிரெஞ்சும் கலந்தடித்துப் பேசியவாறு சென்று கொண்டிருந்தனர். பெண்ணைப் பார்க்கத் தமிழ்ப்பெண் போல தான் இருந்தது. ஆனால் அந்த ஆணோ சீனாக்காரன் போல இருந்தான். ஆனால் உயரமாக இருந்தான். வைஷாலியின் பார்வை அடிக்கடி அவர்களைப் பின் தொடர்ந்ததை சஞ்சயனும் கவனிக்கத் தவறவில்லை.

 

ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்ததில் தாகம் எடுத்திருக்க மரங்கள் அடர்ந்த அந்தக் காடு போன்றிருந்த பிரதேசத்தில் தாழ்ந்திருந்த ஒரு மரக் கிளையில் ஏறி அமர்ந்தாள் வைஷாலி.

 

“என்ன அதுக்கிடையில கால் நோகுதா உனக்கு?”

 

“இல்லைடா… தண்ணி விடாய்க்குது. நீயும் இரு… கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகிட்டுப் போவோம்…”

 

வைஷாலி கூறவும் சஞ்சயனும் அந்த மரக் கிளையில் அவள் பக்கத்தில் அமர்ந்தான். அந்த இடத்தில் வெயில் இல்லாதிருக்கவே குளுகுளுவென்றிருந்த குளுமை போட்டிருந்த மெல்லிய ஜக்கெட்டையும் தாண்டி உடலினுள்ளே ஊடுருவ, ஒரு தடவை மேனியைச் சிலிர்த்துக் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டாள் வைஷாலி.

 

யூஸை எடுத்துக் குடித்துக் கொண்டே அவள் செய்கையைப் பார்த்தவன், அவள் குளிரால் நடுங்குவது புரிய தனது ஜக்கெட்டை கழட்டி அவளது தோளைச் சுற்றிப் போட்டு விட்டான். மறுக்காமல் ஏற்றுக் கொண்டவள்,

 

“உனக்கு குளிரேல்லையா?”

 

“நாமெல்லாம் எதையும் தாங்கும் இரும்பு தெரியுமா…?”

 

என்று கூறி வலது கையை வளைத்துப் பிடித்து ஏதோ ஆணழகன் போட்டிக்குப் போவது போல செய்து காட்டினான். வாய் விட்டுச் சிரித்த வைஷாலி,

 

“காணும். காணும்… உந்த வெத்து சீனைப் போடுறதை நீ விடவே இல்லையா…?”

 

“அதெல்லாம் நம்ம ரத்தத்திலேயே ஊறினது டார்லிங்… அப்படியெல்லாம் லேசில விட முடியாது. அதுசரி. நீ ஏன் அந்த உயர்ந்த சீனாக்காரனையும் அந்த தமிழ் பிள்ளை ஜோடியையுமே அடிக்கடி பார்த்துக் கொண்டு வந்தனீ?”

 

“ஹா… ஹா… அதைக் கவனிச்சிட்டியா? அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஒற்றுமையாகச் சந்தோசமாகக் கதைச்சுக் கொண்டு போறாங்க பார்த்தியா? இத்தனைக்கும் ரெண்டு பேரும் ஒரே நாடோ, ஒரே மொழியோ, ஒரே மதமோ எந்த விதமான ஒற்றுமையும் இல்லை. அப்படியிருக்க எப்படி அவங்களால ஒற்றுமையாக, சந்தோசமாக இருக்க முடியுதுடா?”

 

‘எல்லாம் இருந்தும் முரளிக்கும் எனக்கும் இடையில் ஏன் இந்த மகிழ்ச்சி அற்றுப் போய் விட்டது?’ என்ற அவள் கேள்வி தொக்கி நின்றதை அவனும் புரிந்து தான்  இருந்தான்.

 

“அதொன்றும் பெரிய விசயமில்லை வைஷூ… அதுதான் நம்ம ஆட்கள் சொல்லி வைச்சிருக்கிறாங்களே… காதலுக்கு கண்ணில்லை என்று…”

 

“லூசு… லூசு… உன்னைப் போய்க் கேட்டனே… என்னைச் சொல்ல வேணும்… சரி… சரி… வாடா… தொடர்ந்து நடப்போம். இப்பவே சூரியன் உச்சத்துக்கு ஏறிட்டுது.”

 

சஞ்சயனிடம் சொல்லி விட்டுத் தொடர்ந்து நடந்தாலும் வைஷாலியின் உற்சாகம் கொஞ்சம் குறைந்திருந்தது எனலாம். அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அணி வகுத்துக் கொண்டிருந்தன. அதில் பிரதானமான கேள்வி, ‘காதல் என்றால் என்ன?’ என்பது தான்.

 

கொஞ்சம் வேகமாக நடந்து கொண்டிருந்த சஞ்சயனின் கையை எட்டிப் பிடித்தாள் வைஷாலி. சின்ன வயதில் தொட்டுப் பழகுவதெல்லாம் இவர்களிடையே மிகச் சாதாரணம் தான். இருந்தாலும் இந்த நீண்ட இடைவெளியின் பின்னர் வைஷாலி எப்போதும் சற்று ஒதுங்கியே தான் நடந்து கொள்வாள். அவள் வயதுக்கேற்ற முதிர்ச்சியும் பக்குவமும் தன்னிச்சைச் செயலாய் தற்பாதுகாப்புக் கருதி அவளை அவ்வாறு நடக்க வைக்கிறது என்று புரிந்து கொண்ட சஞ்சயனுக்கும் அது பெருமையே.

 

அவ்வாறிருக்க இப்போது இவள் தானாகவே அவனை நெருங்கி அவன் கைகைளைப் பிடிக்கவும் இவனோ திடுக்கிட்டுப் போய் அவளை நிமிர்ந்து நோக்கினான். அவளோ அதை எதையும் கவனிக்காது, அவனை மேலே நடக்க விடாது தடுத்தவள்,

 

“சஞ்சு…! காதல் என்றால் என்னடா?”

 

“ஆ…!!!”

 

திறந்த வாய் மூடாது அவளை வியப்பாய் பார்த்தான்.

 

“லூசு…! இப்ப என்ன கேட்டன் என்று இப்பிடி முழிக்கிறாய்? உன்ர மனசில காதல் பற்றி என்ன நினைக்கிறாய் என்று சொல்லு. அவ்வளவு தான். அதுக்குப் போய் பேய் முழி முழிக்கிறாய்…”

 

சஞ்சயனின் முழங்கைக்குள் தனதை கொடுத்து இருவரும் கை கோர்த்தபடி தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.

 

“என்னைப் பொறுத்தவரை காதல் என்றால் அன்பு தான் வைஷூ. தனக்குப் பிடிச்சவளை சந்தோசமாக வைச்சிருக்க வேணும். அவள் மனம் புண்படாமல் வைச்சிருக்க வேணும். அவள் தப்புச் செய்யிற நேரத்தில அதைச் சுட்டிக் காட்டி அதைத் திருத்த வேணும். நன்மையோ, தீமையோ எல்லாவற்றிலும் அவள் கூடவே அவளுக்குப் பக்க பலமாக இருக்க வேணும்.”

 

“அடேய்… போதும்டா… நிப்பாட்டு… நிப்பாட்டு… விட்டால் வைரமுத்துவின் காதலித்துப் பாருக்குப் போட்டியாகக் கவிதை எழுத ஆரம்பிச்சிடுவாய் போல…”

 

“சும்மா போடி… நீதான் கேட்டாய்… பிறகு நான் சொல்ல வெளிக்கிட்டால் பிறகு என்னைக் கடிக்கிறாய்…”

 

“சரி… சரி… கோபிக்காத மச்சி… ஒன்று கேட்டால் உண்மையைச் சொல்ல வேணும்.”

 

“என்ன… உலகம் தலைகீழாகச் சுத்துதோ… என்னட்ட எல்லாம் பெருசாப் பீடிகை போடுறாய்… என்ன கேட்க வேணுமோ கேட்டுத் தொலைடி…”

 

“நீ இதுவரைக்கும் யாரையுமே லவ் பண்ணேல்லையாடா?”

 

அவள் கேட்கவும் நடையை ஒரு நிமிடம் நிறுத்தியவன் அமைதியானான். கோர்த்திருந்த கைகளை விடுத்து அவன் முன்னே வந்தவள்,

 

“ஸொரிடா சஞ்சு… உன்ர பேர்சனல்ல ஓவரா மூக்கை நுழைச்சிருந்தால் மன்னிச்சிடுடா…”

 

“போடி முயல் குட்டி… எப்ப இருந்து நீயெல்லாம் ஸொரி கேட்கிற அளவுக்கு இவ்வளவு டீஸன்டாக மாறினனீ? இந்த அதிசயம் எப்படி நடந்துச்சு?”

 

“டேய்….! இப்பவும் இந்தப் பட்டப் பெயரெல்லாம் ஞாபகம் வைச்சிருக்கிறியா? நான் எதிர்பார்க்கவே இல்லை…”

 

“பட்டப் பெயர் வைச்சவனே நான் தானே… எப்படி நானே அதை மறப்பேன்டி வெங்காயம்…?”

 

“சரி… சரி… நீ கதையை மாற்றாமல் நான் கேட்ட கேள்விக்கு விடையைச் சொல்லு…”

 

“ஹூம்…! கம்பஸ் படிக்கிற நேரத்தில ஒவ்வொரு வருசமும் ஃபெஸ்ட் இயர் பிள்ளையள் வரேக்க யாரையும் கரெக்ட் பண்ணுவம் என்று பாக்கிறது தான். நம்ம மூஞ்சிக்கு எங்க அதெல்லாம் ஒண்டும் செட் ஆகேல்ல. சரி… நமக்கும் இந்த லவ்வுக்கும் வெகு தூரம் என்றிட்டுப் பாடத்தைக் கவனிச்சதில கடைசில கிடைச்சது ஹோல்ட் மெடல் மட்டும் தான்.”

 

“நான் நம்ப மாட்டேன். நீ நல்ல ஹான்ட்ஸம்மாத் தானே இருக்கிறாய். உனக்குப் பின்னால நாலைஞ்சு பெட்டையள் என்றாலும் சுத்தியிருப்பாளுகளே… நீ சும்மா ரீல் விடாதைடா…”

 

“ஹூம்… கம்பஸில மூன்றாம் வருசம் படிக்கேக்க ஒரு பிள்ளை கேட்டது தான். எனக்கு ஏனோ இன்ரெஸ்ட் இருக்கேலடி. அவளை ரிஜெக்ட் பண்ணினதில பிறகு வேற ஒருத்தியும் என்ர பக்கமே திரும்பிப் பார்க்கேல்ல…”

 

“ஹா… ஹா… உனக்கு நல்லா வேணும்… ஏன் அம்மாவையும் உனக்குப் பொம்பிளை பார்க்கேல்லையோ?”

 

“பார்க்கினம் தான்டி. ஆனால் எனக்குப் பிடிக்க வேணுமே. அக்கா ஒழுங்கு படுத்தி ஒரு பிள்ளையைப் போய் மீட் பண்ணினான். எனக்குச் சரி வரும் போலத் தோணேல்ல. உடனே மாட்டன் என்றிட்டன். அதோட அம்மா, அக்காக்கும் கோபம் வந்து, நீயே எந்தக் கழுதையையாவது பார்த்துக் கட்டிக் கொள்ளு என்று சொல்லிக் கை கழுவிட்டினம்.”

 

“ஹா… ஹா… ஆனால் எனக்கு எங்கேயோ உதைக்கிற போல இருக்கே. யாரையும் மனசில வைச்சிராமால் ஐயா எதுக்கு இவ்வளவு காலம் இப்பிடி பிரம்மச்சாரியாராய் இருக்கிறிங்கள் என்று தெரியேல்லையே… உண்மையைச் சொல்லுடா கழுதை… என்ன விசயம்?”

 

பேச்சு வாக்கில் நடந்த தூரம் தெரிந்திருக்கவில்லை. உலக முடிவையே அடைந்திருந்தனர்.

 

“ஹேய் வைஷூ…! இங்க பாரு… வந்தாச்சு…”

 

மணி நடுப்பகல் ஒன்றை அண்மித்திருக்க சூரியன் வானின் உச்சியில் நின்று அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தான். சற்றி வரக் காணும் திசை எங்கும் மலைத் தொடர்கள் காட்சியளிக்க எங்கும் பச்சைப் பசேலென இருந்தது. வெண்ணிற முகில்கள் அங்கொன்று இங்கொன்றாய் மலை முகடுகளை உரசி சுகம் விசாரித்துச் சென்று கொண்டிருந்தன. சில மலைத் தொடரை மேகங்கள் மூடி வெறும் வெள்ளைப் புகை மூட்டமாய் தான் காணக் கிடைத்தது.

 

எத்தனை தடவைகள் பார்த்தாலும் மனது சலிக்காத காட்சிகள் இவை. வைஷாலி அனைத்துப் பக்கங்களும் ஓடி ஓடி ஆசை தீரப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டாள். முகம் விகசிக்க அவள் மகிழ்ச்சியின் உச்சியில் இயற்கையன்னையின் அழகில் திளைத்திருப்பதைப் பார்த்து சஞ்சயன் மனதும் நிறைந்தது. அவளோ இயற்கையை ரசிக்க இவனோ அவளை மனம் குளிரப் பார்த்திருந்தான்.

 

அப்போது சஞ்சயனை அழைத்தாள் வைஷாலி.

 

“சஞ்சு…! நான் விழுகிற போல போஸ் குடுக்கிறன். என்னை இதில வைச்சு ஒரு போட்டோ எடுடா…”

 

“லூசாடி நீ… அறிவில்லை…? எதில விளையாடுற என்று ஒரு விவஸ்தை இல்லையே… போன கிழமை தான் ஒரு ஜேர்மன்காரன் விழுந்து ஃபொடியைத் தேடி எடுக்கவே கஸ்டப் பட்டவங்கள்… கெதியா இங்கால வாடி லூசி…”

 

அவன் கோபமாகக் கத்தவும் அவளுக்கோ அந்த உலக முடிவை எட்டிப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை மேலும் வலுப்பட்டது. நாலாயிரம் அடி உயரத்திலிருந்து கீழே அதாள பாதாளத்தைப் பார்க்கும் அனுபவம் என்பது சும்மாவா? இவர்கள் நின்ற உயரத்திற்குக் கீழே கூட முகில்கள் உலாப் போய்க் கொண்டிருந்தன. அவற்றை எட்டிப் பிடித்துத் தொட்டு மகிழ்ந்து விட மாட்டோமா என்று வைஷாலியின் மனம் பரபரத்தது.

 

அவள்  உண்மையாகவே மிகுந்த ஆவல் கொண்டிருப்பதைப் பாரத்து அவள் ஆசையை நிறைவேற்ற விளைந்தவனாய் அந்த மலை மேட்டின் உச்சிக்கு அருகே மெது மெதுவாய் அடியெடுத்து வைத்து அழைத்துச் சென்றான் சஞ்சயன். பள்ளத்தாக்கை எட்டிப் பார்க்கக் கூடிய தூரம் வந்ததும் அவளைத் தன்புறம் நிறுத்திப் பின்புறமிருந்து அவள் வயிற்றைச் சுற்றித் தன் கைகளைக் கோர்த்து அவளைத் தன்னோடு பின் பக்கமாய் இறுக அணைத்துக் கொண்டான்.

 

முதலில் அவன் செய்கை புரியாமல் வைஷாலி திகைத்துத் தடுமாறித் திணறினாலும் பின்னர் அவன் நோக்கம் புரிந்து பேசாமல் இருந்தாள். சஞ்சயன் தனது கால்களை கொஞ்சம் அகல விரித்து வைத்து நன்றாக ஊன்றி நின்று கொண்டு இவளை இறுக அணைத்துப் பிடிக்க, வைஷாலி கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாய் முன்னே எட்டிப் பார்த்தாள்.

 

“ஸ்ப்ப்பா…. என்னடா இது… இப்பிடி இவ்வளவு ஆழமாக இருக்கு? கீழேயே முகில் எல்லாம்  போய்க் கொண்டிருக்கு. கீழே உத்துப் பார்க்க பார்க்க வெறும் இருட்டாகத் தானடா இருக்கு சஞ்சு…”

 

சொல்லியவள் ஆசைக்குப் பல புகைப்படங்களை விரும்பிய கோணங்களில் எடுத்துக் கொண்டாள்.

 

அப்போது அங்கே போட்டிருந்த ஒரு கல் மேடையில்  இளைப்பாறிக் கொண்டிருந்த அந்த தமிழ், சீனா ஜோடி இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண் சஞ்சயனை நோக்கியவள்,

 

“ஹாய் சஞ்சு…! நான் ஷானவி… என்னை ஞாபகம் இருக்கிறதா? அது அப்புறம் கதைப்பம். இப்போ உங்களை போட்டோ எடுக்கவா? இந்த போஸில… ரொம்ப அழகான ஜோடியாக இருக்கிறிங்களாம் என்று லீ சொல்லுறான்…”

 

கூறியவள் சஞ்சயனின் சம்மதத்தை அவனது தலையசைப்பால் பெற்றுக் கொண்டு சஞ்சயன், வைஷூ ஜோடியை விதம் விதமாகக் கிளிக்கித் தள்ளினார்கள்.

 

அதற்குள் வைஷாலியும் புகைப்படங்கள் எடுத்து முடித்திருக்க அந்த ஆபத்தான இடத்தை விட்டு நகர்ந்து சிறிது தூரம் தள்ளியிருந்த அந்த கல் மேடையில் ஷானவி, லீ தம்பதிகளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சஞ்சயனும் அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

 

“நீங்கள் ரெண்டு பேரும் பின்பக்கமாகக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நின்று வேர்ல்ட் என்ட் பார்த்த ஸீனை இன்ரநெட்டில போட்டால் டைட்டானிக் போஸ்க்குப் பிறகு உங்கட போஸ் தான் வைரல் ஆகும் போல…”

 

அந்தத் தமிழ் பெண் மென்மையாய் சொல்லிச் சிரிக்கவும் சஞ்சயனும் வைஷாலியும் கூடப் புன்னகைத்தார்கள்.

 

“உண்மையாக என்னை ஞாபகமில்லையா சஞ்சயன்…? கம்பஸில படிக்கிற போது யாழ்ப்பாண கம்பஸால டூர் வந்த போது உங்களை மீட் பண்ணியிருக்கிறேன். நீங்க ஸ்டுடென்ட் யூனியன் பிரசிடென்ரா இருந்தனிங்கள் அப்போ…”

 

“ஓ… இப்போ ஞாபகம் வந்திட்டுது. ஸொரி ஷானவி. நான் முதலில முகத்தை வடிவாகக் கவனிக்கவில்லை… நீங்க இப்ப என்ன செய்யிறீங்க…?”

 

“இது என்ர புருஷன் லீ… கல்யாணமாகி இவரோடேயே சௌத் கொரியாவில செட்டில் ஆகிட்டேன்…”

 

“ஆ… ஓகே… இவ என் ப்ரெண்ட் வைஷாலி. உங்க ரெண்டு பேரையும் பார்த்த நேரம் இருந்து எப்பிடி வேற நாட்டுக்காரரை லவ் பண்ணி சந்தோசமாக இருக்குறாங்க என்று என்னட்ட சொல்லிட்டே வந்தாள். வைஷூ…! இவ என் ப்ரெண்ட் தான். நீ இப்ப நேராக இவங்களிட்டேயே கேட்டுக் கொள்ளலாம்…”

 

வைஷாலி சஞ்சயனை முறைக்க சிரித்த ஷானவி, ஒரு விஸிட்டிங் காட்டை எடுத்துக் கொடுத்தவள்,

 

“இதில என்ர வாட்ஸ்அப் நம்பர் இருக்கு. எந்த வித தயக்கமும் இல்லாமல் ஹோல் பண்ணுங்கோ. நாங்க ஆறுதலா எல்லா விசயமும் கதைப்பம். நாங்க இப்போ கீழ இறங்கப் போறம். நல்லூர்க் கந்தன் அருள் வைச்சால் பிறகு மீட் பண்ணுவோம்…”

 

கூறி விட்டு அவர்களிடம் விடை பெற்றுச் சென்றாள் ஷானவி. லீயும் ஒரு சிறு முறுவலோடு தலையசைத்து விடைபெற்றான். அவர்கள் செல்வதையே வைத்த விழி வாங்காது பார்த்திருந்தாள் வைஷாலி.

 

“லீ, ஷானுவின் மகிழ்ச்சி வைஷாலி வாழ்விலும் கிடைக்குமா?”

 

1 thought on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 4ஒகே என் கள்வனின் மடியில் – 4

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. காதம்பரியைப் போலவே நீங்களும் வம்சியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்பிங்கன்னு தெரியும். இந்தப் பதிவில் அவனோட பதில்தான் பிரதானம். படிச்சுட்டு சூட்டோட சூடா ஒரு வார்த்தை எழுதுவிங்களாம். ஒகே என் கள்வனின்

ஒகே என் கள்வனின் மடியில் – 11ஒகே என் கள்வனின் மடியில் – 11

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இம்சிக்கு அல்சர் மாத்திரை, அமருக்கு ஹெல்மெட், கேட்டுக்கு தலைவலி மாத்திரை என்ற நம்ம  ஆஸ்தான ஜோதிடர் குல திலகம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வாணிப்ரியா அவர்களின் ஆருடம்  இந்த

உள்ளம் குழையுதடி கிளியே – 27உள்ளம் குழையுதடி கிளியே – 27

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பகுதி உள்ளம் குழையுதடி கிளியே – 27 படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் மகிழ்வேன். அன்புடன், தமிழ் மதுரா.