Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 01

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 01

திவான் லொடபட சிங் பகதூர்

பூலோக விந்தை

  • நமது சென்னை இராஜதானிக்கு வடக்கில் சுதேச அரசரால் ஆளப்பட்டு வரும் பெரிய சமஸ்தானம் ஒன்று இருக்கிறது. ஊரைச் சொன்னாலும் சொல்லலாம், பெயரை மாத்திரம் சொல்லல் ஆகாது என்பது விவேகிகளால் அநுபவபூர்வமாகக் கண்டு பிடிக்கப் பட்ட முக்கியமான கொள்கை. ஆதலால், நாம் அந்த சமஸ்தானத்தின் உண்மையான பெயரைச் சொல்லாமல், அதை பூலோக விந்தை என்ற பெயரால் குறிப்போம். அந்த பூலோகவிந்தையை ஆண்டு வரும் அரசருடைய பெயர் பலவித விசேஷங்களோடு கூடி ஒன்றரைமயில் தூரம் நீண்டு, ஒரு பெரிய கூட்ஸ் வண்டியில் வைத்து இழுத்தாலும் மாளக்கூடாத அபார மாட்சிமை வாய்க்கப் பெற்றிருப்பதால், அதை நாம் பூர்த்தியாக எடுத்துக் கூற இந்தச் சிறிய ஸ்தலபுராணம் இடந்தராது என்பது நிச்சயம். சூராதிசூர வீராதிவீர மன்னாதிமன்ன அதி வீர தீர புஜ பல பராக்கிரம கோலாகல உப்பில்லாமல் கலக்கஞ்சி குடித்து வானத்தை வில்லாய் வளைத்து ஆற்று மணலைக் கயிறாய்த் திரித்த ராஜாதிராஜ அதி ராஜா……..பகதூர் என்று முற்றுப்புள்ளி வைக்க இடமே கொடாமல் அது வெகுதூரம் போய்க் கொண்டே இருக்கும். அந்த அரசர் இங்கிலீஷ் கல்வியில் ஆழ்ந்த பரிச்சயம், விசேஷமான புத்திசாலித்தனம் முதலிய சிறப்புகள் உடையவர். தாம் தமது சமஸ்தானத்தைப் பழைய கர்னாடக முறைப்படி ஆடாமல், புது நாகரிக முறைமைப்படியும் இங்கிலீஷ் தேசங்களின் உதாரணங்களைப் பின் பற்றியும் ஆளவேண்டும் என்றும், குடி மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து நீதி வழுவாமல்,ஒழுக வேண்டும் என்றும், அவர் மிகுந்த விருப்பங்கொண்டு, அந்தக் கோரிக்கை பரிபூர்ணமாக நிறைவேறுவதற்குத் தாம் எவ்விதமான உபாயம் தேடலாமென்று யோசித்து யோசித்துப் பார்த்து, முடிவில் அது விஷயமாக டில்லியிலுள்ள இராஜப் பிரதிநிதியுடன் கடிதப் போக்குவரத்து செய்தார். இராஜப் பிரதிநிதியின் கீழ் மாதா மாதம் 3000 ரூபாய் சம்பளம் வாங்குகிறவரும், சட்டங் களையும் இராஜாங்க நிர்வாக முறைகளையும் முற்றிலும் கரை கண்ட அதி மேதாவியுமான ஒருவர் இருக்கிறார் என்றும், அவருக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளமும் சர்வ அதிகாரமும் கொடுத்து அவரை திவானாக வைத்துக்கொண்டால், அவர் பழைய காலத்து ஊழல்களை எல்லாம் அடியோடு வேரறுத்து, நவீன முறைகளை எல்லாத் துறைகளிலும் ஸ்தாபித்து, அந்த சமஸ்தானத்திற்குப் புத்துயிர் கொடுத்து, அது இந்திய தேசத்திற்கே நடுநாயகமாய் விளங்கும்படி செய்து விடுவார் என்று இங்கிலீஷ் இராஜப் பிரதிநிதி யுக்தி கூற, சுதேச மன்னர் அதை ஏற்றுக்கொண்டு, உடனே அந்த உத்தியோகஸ்தரை திவானாக நியமித்து, அவரைத் தமது பட்டணத்திற்கு வருவித்துத் தமக்கிருந்த இரண்டு அரண்மனைகளுள் ஒன்றை ஒழித்து அவருடைய குடும்ப வாசத்திற்கு அதைக்கொடுத்து, அவருக்குரிய ஆள் மாகாணங்கள் எல்லோரையும் நியமித்துக் கொடுத்து, அவருக்குத் தேவையான சகல செளகரியங்களையும் முஸ்தீபுகளையும் செய்து கொடுத்துத் தமது அதிகாரம் முழுதையும் அவர் சுயேச்சை யாகச் செலுத்தலாம் என்று அனுமதி அளித்துவிட்டார்.

 

  • புதிய திவான் வந்தபிறகு, சொற்ப காலத்திற்குள், அவர் தமது சட்ட ஞானத்தை எல்லாம் பூர்த்தியாகக் காட்டத் தொடங்கியதோடு, தமக்குக் கீழ்ப்பட்ட எந்த அதிகாரியானாலும் சட்டத்திற்கு ஒர் இம்மியளவு தவறாக நடப்பானானால், அவனை உடனே வேலையிலிருந்து தகையர் செய்யலானார். அரசனது அரண்மனயின் செலவைக் குறைக்க வேண்டுமென்ற கருத்தோடு அவர் அங்கிருந்த சிப்பந்திகளுள் பெரும்பாலோரை விலக்கினார்; பழைய காலத்துக் கட்டிடங்களை எல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கிப் புதிய கட்டிடங்களை எழுப்பி நகரத்தைப் புதுப்பித்தார். அநேகமாய் எல்லாத் துறைகளிலும், அவர் தமது கவனத்தைச் செலுத்தி பழைய விஷங்களையும் பழைய ஸ்தாபனங்களையும், பழைய மனிதர்களையும் நீக்குவதிலும் மாற்றுவதிலுமே கண்ணுங் கருத்துமாயிருந்து, தர்ம சத்திரங்கள், தேவாலயங்கள் முதலிய இடங்களில் அபரிமிதமாகச் செலவிடப் பட்டு வந்த பணத் தொகைகளை சிக்கனமாகச் செலவிடத் தக்க வழிகளையும் கண்டுபிடித்து அநுபவத்திற்குக் கொண்டுவந்தார். அவரால் நன்மையடைந்த சிலர் அவரைப் புகழத் தலைப்பட்டனர். அவரால் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பந்திகள் ஜீவனோபாயத்திற்கு வழியின்றித் தவித்து அவரைப் பகைத்துத் தூற்றலாயினர். அவர்களுள் நூற்றுக் கணக்கானவர்கள் சோம்பேறிகளாயும் முடுச்சுமாறிகளாகவும், திருடர்களாயும் மாறி, சமயம் பார்த்து ஊரில் கொள்ளைஅடிக்கவும், திருடவும், சூதாடவும் ஆரம்பித்தனர். அதற்குமுன் தாசில்தார் ரெவினியூ இன்ஸ்பெக்டர் முதலிய உத்தியோகங்களை வகித்திருந்தவர்கள் பலரும் மேற்படி கோஷ்டியில் சேர்ந்து கொண்டனர்.

 

  • ஆனால், தாம் எத்தகைய எளிய நிலைமையில் இருந்தாலும், தமக்கு எவ்விதமான தாழ்மையும் சோதனையும் நேரிட்டாலும், தாம் தமது நற்குணத்தையும் ஒழுக்கத் தூய்மையையும் விட்டு, தீய வழியில் செல்லல் ஆகாது என்ற மனவுறுதியும் சன்மார்க்கப் பிரவர்த்தியுமுள்ள மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராயினும், எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் இருப்பது சகஜம் ஆதலால், மேலே கூறப்பட்டபடி வேலையிலிருந்து விலக்கப்பட்ட தாசில்தார் ஒருவரிடம் சமயற்காரனாக இருந்த ஒர் ஏழை மனிதன் அந்தத் தாசில்தாரை விட்டு விலக நேர்ந்தது. அவனுக்கு ஒரு நோயாளி மனைவியும் ஏழு குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் உண்பித்து சவரக்ஷிக்க வேண்டியதுதான விலக்க இயலாத பெருத்த பொறுப்பு அவனுக்கே வந்து சேர்ந்தது. ஆகையால், தனது அநாதரவான துர்ப்பாக்கிய நிலைமையில் தான் எவ்விதமான தொழிலைச் செய்து பொருள் தேடி அவ்வளவு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவது என்ற கவலையும் மலைப்பும் தோன்றி அவனை இரவுபகல் வதைக்கத் தொடங்கின.

 

  • அவன் பல பெரிய மனிதர்களிடம் சென்று தனக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுப் பார்த்தான். எவ்விடத்திலும் வேலை கிடைக்கவில்லை. வீட்டிலோ குழந்தைகள் பசியோ பசியோவென்று பறக்கிறார்கள். நோயாளியாகப் படுத்திருந்த மனைவிக்கு மருந்து கொடுக்க வைத்தியர் முன் பணம் கேட்கிறார். மருந்திற்கும் கஞ்சிக்கும் வழி இல்லாமையால், அவளுடைய உயிர் நிமிஷத்திற்கு நிமிஷம் போய்க் கொண்டே இருக்கிறது. அவன் போஜனம் செய்து மூன்று நாட்களாயின. பிறரிடம் போய்த் தனது ஏழ்மைத் தனத்தை வெளியிட்டு யாசகம் கேட்பது அவனுக்கு ஆண்மைத்தனமாகத் தோன்றவில்லை. யாசகம் வாங்குவது, திருடுவது, பொய் சொல்வது முதலிய காரியங்களைச் செய்து வயிற்றை வளர்ப்பதிலும், தானும் தனது பெண்டு பிள்ளைகளும் கூண்டோடு மடிந்து அழிவதே அவனுக்கு சிலாக்கியமாகத் தோன்றியது. அத்தகைய கதியற்ற நிலைமையில், அந்த மனிதன், அந்த ஊரில் இருந்த வரப்பிரஸாதியான ஒரு பிள்ளையார் கோவிலை அடைந்து, பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து “சுவாமி ஆண்டவனே! விக்ந விநாயகமூர்த்தி ! உலகத்தாருடைய இடர்களையெல்லாம் போக்கி, அவர்களுடைய கோரிக்கைகள் நிர்விக்நமாகக் கைகூடும்படி செய்து வைக்கும் சர்வ ஜனரக்ஷக தயா பரனே! இந்த ஏழையின் விஷயத்தில் நீர் இப்படிப் பாரா முகமாய் இருப்பது நியாயமா? கோடாநுகோடி ஜனங்கள் உண்டு ஜீவிப்பதற்கு இடங்கொடுக்கும் இந்த மகா அகண்டமான உலகத்தில், நான் ஜீவனோபாயத்திற்கு வழியின்றித் தவிக்கிறேனே! திருடர்களும், சூதாடிகளும், மோசக்காரர்களும் வெகு சுலபத்தில் ஏராளமான பொருளைச் சம்பாதிப்பதும், மகா அலட்சியமாக அதை விரயம் செய்வதுமாய் இருந்து சந்தோஷமாகக் காலந் தள்ளுகிறார்களே. மானமாகவும், நாணயமாகவும், ஒழுங்கான வழியிலும் உழைத்துப் பொருள் சம்பாதிக்க வேண்டுமென்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்திருப்பவனான எனக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை! கடவுளே உம்முடைய நீதிபரி பாலனம் இப்படியும் இருக்குமா? இன்றைய தினம் அந்திப் பொழுதிற்குள் எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டாவிடில், நானும், என் குடும்பத்தாரும் மாண்டுபோவது நிச்சயத்திலும் நிச்சயம்.

 

  • சுவாமீ ! என்னுடைய அவஸ்தையைக் கண்டு நீர் இரங்கா விட்டாலும், ஒரு பாவத்தையும் அறியாத பகுத்தறிவற்ற என்னுடைய சிறு குழந்தைகள் படும்பாட்டைக் கண்டு கூடவா உமக்கு மனதிரங்கவில்லை. ஆ தெய்வமே எங்கள் மேல் கருணா கடாக்ஷம் வையும் ஐயனே!’ என்று கூறி நிரம்பவும் உருக்கமாகக் கடவுளை வேண்டி ஸ்தோத்திரம் செய்த பின் கோவிலை விட்டு வந்துகொண்டே இருந்தான். அதற்கு முன் அவனுடன் பழகிய மனிதர்கள் ஆங்காங்கு குறுக்கிட்டனர். ஆதலால், அவர்களைப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் அவனுக்கு ஒருவித லஜ்ஜை தோன்றிப் போராடியது. ஆகையால் அவன் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடி நடந்துகொண்டே சென்றான். அவ்வாறு அவன் சென்றது எப்படி இருந்ததென்றால், உலகத்திலுள்ள சகலமான பொருள்களுக்கும் பூமிதேவியே உரிமை உடையவளன்றி, மனிதர்கள் வகித்துக்கொள்ளும் உரிமை பொய்யான உரிமையாதலால், தான் போலிச் சொந்தக்காரரின் தயவை நாடுவதைவிட உண்மைச் சொந்தக்காரரின் தயவை நாடுவதே கண்ணியமான காரியம் என்று நினைப்பதுபோல இருந்தது. அவ்வாறு அவன் சிறிது தூரம் சென்று கொண்டே இருக்க, தரையில் மணலின் மறைவில் கிடந்த ஏதோ ஒரு வஸ்து பளிச்சென்று மின்னி அவனது கவனத்தைக் கவர்ந்தது. அவன் அதை உற்று நோக்கிக் கீழே குனிந்து அந்த வஸ்துவைக் கையில் எடுக்க, அது ஒரு முழு ரூபாய் என்பது உடனே தெரிந்தது. இரண்டொரு நிமிஷ நேரம் வரையில் அவன் அதை உண்மையென்றே நம்பவில்லை. ஆனாலும், அது பட்டப் பகல் வேளையாதலாலும், தான் விழித்த விழியோடும், தெளிவான அறிவோடும் வழி நடந்து வந்துகொண்டிருந்த உணர்வு நன்றாக இருந்தமையாலும், அது உண்மையில் வெள்ளி ரூபாய்தான் என்கிற நிச்சயம் அவனது மனத்தில் எற்பட்டது. அந்த ரூபாயை அவன் எடுத்தவுடன், தான் அதை உடனே செலவிட்டுத் தன் குடும்பத்திற்கு ஆகவேண்டிய அவசர காரியங்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனது மனத்தில் உண்டாக வில்லை. யாராவது அந்த வழியாய்ச் சென்றபோது, அந்த ரூபாய், அவரிடமிருந்து தவறிக் கீழே விழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், தான் அதை அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றஎண்ணமும் தோன்றின. அந்தப் பணத்தை இழந்தவர், தன்னைப் போல ஒருவேளை ஏழையாக இருந்தால், அந்த எதிர்பாராத நஷ்டத்தால், அந்த மனிதர் எவ்வளவு தூரம் வருந்தித் தவிப்பார் என்றும், அந்தப்பணத்தை சம்பாதிக்க அதன் சொந்தக்காரர் எவ்வளவு தூரம் சிரமப்பட்டிருப்பாரோ என்றும் தான் எவ்விதமான பிரயாசையுமின்றி அன்னியருடைய பணத்தை அபகரித்துக் கொண்டால், அது செரிக்காமல் பலவித வியாதிகளையும் துன்பங்களையும் விசனத்தையும் உண்டாக்குமென்றும் சமயற்காரன் பலவாறு எண்ணமிட்டவனாய் நாற்புறங்களிலும் திரும்பி, யாராகிலும் மனிதர் போகின்றனரோவென்று கவனித்துப் பார்த்தான். எவரும் காணப்படவில்லை. அவன் மேலும் சிறிது நேரம் அவ்விடத்தில் நின்ற படி, அந்தப் பணத்தைத் தான் என்ன செய்கிறது என்பதைக் குறித்து யோசனை செய்தான். அவன் நல்ல கூர்மையான புத்தியும் வியவகார ஞானமும் உடையவன். எவருக்காவது புதையலோ அல்லது வேறு பொருளோ பாதை முதலிய பொது இடங்களிலிருந்து அகப்பட்டால், அதன் கிரயம் 10 ரூபாய்க்கு மேற்படுமானால், அதை அவர் போலீசாரிடம் ஒப்புவிக்க வேண்டுமென்றும், அதற்குக் குறைவான பெறுமானமுடைய பொருளாக இருந்தால், அதைக் கண்டெடுத்தவரே எடுத்துக் கொள்ளலாமென்றும் அந்த சமஸ்தானத்தில் சட்டம் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை அவன் அறிந்தவன். ஆதலால், தான் அதைப் போலீசாரிடம் கொடுத்தால், அவர்கள் சட்டப் பிரகாரம் அதை வாங்கிக் கொள்ளமாட்டார்கள் என்று அவன் உணர்ந்தான். தான் கண்டவர்களிடத்தில் எல்லாம் அதைப்பற்றிப் பிரஸ்தாபம் செய்தால், ஒவ்வொருவரும் அது தம்மால் போடப்பட்டதென்றே சொல்லுவார்கள். ஆதலால், அதன் உண்மையான சொந்தக் காரரிடம் அது போய்ச் சேராதென்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையால், தான் ஒரு யுக்தி செய்யவேண்டும் என்ற யோசனை அவனுக்குத் தோன்றியது.

 

  • அந்த நகரத்தில் சுமார் ஆயிரம் வீடுகளே இருந்தமையால், தான் ஒவ்வொரு நாளிலும் சுமார் 50 வீடுகளுக்குச் சென்று, அவ் வீடுகளில் உள்ளவர்கள் இன்ன இடத்திற்கு அருகில் ஏதாவது பொருளை இழந்ததுண்டா என்று விசாரிக்கவேண்டும் என்றும்,எவரொருவர் தாம் ஒரு ரூபாயைப் போட்டுவிட்டதாகச் சொல்லுகிறாரோ அவரிடம் அதைக் கொடுத்துவிட வேண்டுமென்றும் அந்த சமயற்காரன் தீர்மானித்துக் கொண்டான். ஒரு வேளை அந்த மனிதர் ஒரு ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை இழந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியதாகையால், அவன் அந்த ரூபாய் கிடந்த இடத்தைச் சுற்றிலும் சிறிது தூரம் வரையில் போய் நன்றாகத் தேடி ஆராய்ச்சி செய்து பார்த்தான். வேறு பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே அந்த மனிதர் இழந்தது ஒரு ரூபாய் தான் என்று அவன் தீர்மானித்துக்கொண்டு, உடனே அவ்விடத்தை விட்டு நடந்து பக்கத்திலிருந்து ஆரம்பமான தெருவிலுள்ள வீடுகள் ஒவ்வொன்றிலும் புகுந்து, தான் தீர்மானித்துக் கொண்டபடி விசாரணை செய்ய, சிலர் தாம் எந்த வஸ்துவையும் இழக்கவில்லை என்றும், சிலர் தாம் நகையை இழந்ததாகவும் கூறினார்களேயன்றி, எவரும் ஒரு ரூபாயை இழந்துவிட்டதாகக் கூறவில்லை. தான் சங்கற்பித்துக் கொண்டபடி, அவன் அன்றைய கணக்கிற்கு 50-வீடுகளில் சென்று விசாரணையைத் தீர்த்துக்கொண்டான்.

 

  • அவ்வாறு பிரயாசைப்பட்டதனாலும், நீண்ட பட்டினி யாலும், அவன் சோர்வடைந்து தத்தளித்தவனாய்த் தன் வீட்டை அடைந்தான். அவ்விடத்தில் அவனது மனைவியும், குழந்தைகளும் பட்டினி கிடந்து, நெருப்பில் விழுந்த புழுக்கள்போலத் துடித்த வண்ணமிருந்த மகா சங்கடமான காட்சியைக் காணவே, அந்த சமயற்காரன் தனது சொந்தக் கஷ்டங்களை மறந்தவனாய், அவர்களது துன்பத்தைத் தான் எவ்விதம் விலக்குவது என்று மறுபடியும் யோசனை செய்து பார்த்தான். தன்னிடமிருந்த ரூபாயை உபயோகித்து அவர்களைக் காப்பாற்றலாமா என்ற ஒரு நினைவு அவனது மனத்தில் தோன்றியது. ஆனாலும், அவன் ஒரே உறுதி யாக, “சே இது எவனுடைய பணமோ இதை நான் செலவிடக் கூடாது” என்று ஒரே முடிவாகத் தீர்மானித்துக் கொண்டவனாய் இருக்க, மற்றவர்களது அவஸ்தையும் கூக்குரலும் அதிகரித்து, அவன் சகிக்கக் கூடிய வரம்பிற்கு மிஞ்சிவிடவே, அவனது மனத்தில் இன்னொரு யுக்தி தோன்றியது.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 17சாவியின் ஆப்பிள் பசி – 17

 பெருந்தொகை ஒன்று கைக்கு கிடைத்ததும் சாமண்ணாவின் மனம் கிறுகிறுத்தது. சட்டென தாயாரின் முகம் மின்னி மறைந்தது. தாயின் கையில் அதைக் கொடுப்பது போலவும், அவள் காலில் விழுந்து வணங்குவது போலவும், அவள் ஆனந்தக் கண்ணீரோடு நிற்பது போலவும் தோன்றியது. “சேட்ஜி! நாடகம்

சாவியின் ஆப்பிள் பசி – 16சாவியின் ஆப்பிள் பசி – 16

“தசாவதாரம்” என்று காண்ட்ராக்டர் கண்ணப்பதாஸ் கூறினார். “ஏகப்பட்ட பணம் செலவாகுமே!” என்றார் சிங்காரப் பொட்டு. “செலவழிச்சு நடத்தினோம்னா கூட்டம் மொய்ச்சுத் தள்ளும்” என்றார் வக்கீல். “டாக்டர் என்ன நினைக்கிறாரோ?” என்று சிங்காரப் பொட்டு மெதுவாக நிரவல் செய்தார். டாக்டர் கண்ணைக் கொஞ்சம்

கல்கியின் பார்த்திபன் கனவு – 48கல்கியின் பார்த்திபன் கனவு – 48

அத்தியாயம் 48 பழகிய குரல் குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு