Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02

    • அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்குஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந் தான். அவ்விடத்தில் அந்த சமயற்காரனுக்கு மைசூர் மகாராஜனுடைய அரண்மனையிலிருந்த ஒரு சமயற்காரனது சிநேகம் உண்டாயிற்று. அந்த அரண்மனைச் சமயற்காரன் புதிய புதிய மிட்டாய் தினுசுகள் செய்வதில் நல்ல தேர்ச்சி பெற்ற மகா நிபுணன்.

 

    • இப்பொழுது இந்தியா தேசமெங்கும் பிரபலமடைந்து, எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் மைசூர் பாகு என்ற மிட்டாயியை அந்த சமயற்காரன்தான் புதியதாய்க் கண்டுபிடித்து, அப்போது மைசூர் மகாராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அதைக் கொடுத்து, அவர்களிடம் தங்கத்தோடுப் பரிசும் சர்வ மானியமும் பெற்று மிகுந்த கீர்த்தியோடு விளங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய சிநேகத்தையும் பிரியத்தையும் எப்படியோ சம்பாதித்துக் கொண்ட நமது பூலோக விந்தை சமயற்காரன் மைசூர்பாகு என்ற புதிய மிட்டாயி செய்யும் முறையை அவனிட மிருந்து கற்றுக்கொண்டு வந்து, அதைப் பல தடவைகளில் செய்து தனது எஜமானரான தாசில்தாருக்குக் கொடுத்து, அவரால் அபாரமாக மெய்ச்சப்பட்டிருந்தான். அந்த நினைவு அவனுக்கு உண்டாயிற்று.

 

    • தான் வழியில் கண்டெடுத்த ஒரு ரூபாய் மறுநாள் வரையில் வீணில் தன்னிடம் தூங்கிக்கொண்டிருக்கும். ஆதலால், தான் அதன் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து அவரிடம் கொடுக்கிற வரையில், அதை அவரிடமிருந்து தான் வட்டிக்கடனாய் வாங்கினது போல பாவித்து உபயோகித்துக்கொள்வது தவறல்ல என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் உடனே கடைக்குப் போய் சர்க்கரை, கடலைமாவு, நெய் பிறகு, மண்பாத்திரங்கள் முதலியவற்றை வாங்கிக் கொணர்ந்தால், அரை நாழிகை சாவகாசத்தில், தான் மைசூர்பாகு தயாரிக்கலாம் என்றும், அதைத் தான் எடுத்துக் கொண்டுபோய் அதிக ஜன நடமாட்டமுள்ள கடைத்தெருவில் அதை வைத்துக்கொண்டு விற்றால், அது புதிய தினுசு மிட்டாய். ஆதலால், ஜனங்கள் ஆசையோடு அதை உடனே வாங்கிவிடுவார்கள் என்றும், அதனால் தனக்கு சுமார் மூன்று ரூபாயாவதுகிடைக்கும் என்றும், தான் கண்டெடுத்த ரூபாய்க்கு இரண்டு அணா வட்டி சேர்த்து, அதைத் தனியாக வைத்துவிட்டு, பாக்கிப் பணத்தின் ஒரு பாகத்தை மறுநாளைய முதலாக வைத்துவிட்டு, மிச்சமுள்ளதைத் தான் தனது குடும்ப சவரக்ஷணைக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு யுக்தி நமது சமயற்காரனுக்குத் தோன்றியது.

 

    • தனது குடும்பத்தினர் பட்டினி கிடந்து சாகும் தருணத்தில், தான் அவ்விதம் செய்வது தவறாகாது என்று நினைத்து அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்ட நம் சமயற்காரன் பணத்தோடு உடனே கடைக்குப் போய்த் தனக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்து ஒரு நாழிகை நேரத்தில் அவைகளை மைசூர்பாகாக மாற்றித் தனது குழந்தைகள் மனைவி ஆகிய எல்லோருக்கும் சில துண்டுகள் கொடுத்துவிட்டு, மிகுதி யிருந்த பெரும் பாகத்தையும் எடுத்துக் கொண்டு, கடைத்தெரு விற்குப் போய் அதிக ஜன நடமாட்டமாயிருந்த ஓரிடத்தில் தனது மிட்டாயியை வைத்துக்கொண்டு ‘மைசூர் மகாராஜா சாப்பிடும் புதிய மிட்டாய்’ என்று அதன் புகழைப் பலவாறு எடுத்துக் கூறி அதை விற்க எத்தனித்தான்.

 

    • அவ்விடத்திற்கு வந்த பெரியோரும் சிறியோருமான சில ஜனங்கள், அந்தப் புதிய தினுசு மிட்டாயினைப் பார்த்து அளவற்ற ஆச்சரியமும் குதூகலமும் அடைந்தவர்களாய் நெருங்கி இனாமாகக் கொஞ்சம் கொஞ்சம் வாங்கித் தின்னு மாதிரி பார்ப்போரும், அப்போதைக்கப்போது ஒரு காசு கொடுத்து வாங்குவோருமாய் அந்த மிட்டாயின் புதுமையான மணத்தையும் உருசியையும் கண்டு களிப்படைந்து அதைப் பற்றி அபாரமாகப் புகழ்ந்து கொண்டே செல்லலாயினர். மைசூர் பாகின் கீர்த்தி வெகு சீக்கிரத்தில் நாலா பக்கங்களிலும் பரவத் தொடங்கியது. அந்தக் காலத்தில் பணம் கிடைப்பது அரிதாதலால், அப்போது ஒரு பைசாவுக்கு வாங்கியது இப்போது ஒரு ரூபாய்க்கு வாங்கு வதற்குச் சமமாகக் கருதப்பட்டிருந்தது.

 

    • ஆகவே, நமது சமயற்காரன் பைசா வியாபாரமாகவே செய்து கொண்டிருந்தான். ஆதலால், இரண்டொரு நாழிகை காலத்தில்அவன் எட்டணாவிற்கு விற்றான். அப்போது மாலை நேரம் வந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. மற்ற கடைகளில் விளக்கெண்ணெய் விளக்குகள் முணுக் முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தன. ஆனாலும், நமது சமயற்காரனிடம் அந்த விளக்கும் இல்லை. ஆதலால், அவன் அருகிலிருந்த ஒரு கடையின் வெளிச்சத்தில் ரஸ்தாவின் ஓரத்தில் தனது மிட்டாயித் தட்டை வைத்து விற்கத் தொடங்கினான். அப்போது சுமார் இருபது முப்பது மனிதர்கள் ஒரே கும்பலாக அவ்விடத்திற்கு வந்து, நமது சமயற் காரனுடைய மிட்டாயி தட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் பார்வைக்குப் பணக்காரர்கள் போலவும், கண்ணியமான மனிதர்கள் போலவும் காணப்பட்டனர். ஆனாலும், அவர்கள் ஒருவரையொருவர் தாறுமாறாக வைது கொள்வதும், பரிகாசம் செய்து கொள்வதுமாய் இருந்தனர்.

 

    • அவ்வாறு வந்து நமது சமயற்காரனை வளைத்துக் கொண்ட வர்களுள் மூன்று நான்கு மனிதர்கள் மிட்டாயித் தட்டண்டை வந்து “என்ன மிட்டாயிப்பா இது? பார்வைக்குப் புது மாதிரியாக இருக்கிறதே! வாய்க்கு எப்படி இருக்கும்?’’என்றனர். உடனே சமயற்காரன் “இதற்கு மைசூர்பாகென்று பெயர்; நிரம்பவும் இனிப்பாகவும் மணமாகவும் இருக்கும். வாங்கிக் கொள்ளுங்கள்’’என்றான். அதைக் கேட்ட அவர்கள் நால்வரும் கொஞ்சம் சாப்பிட்டு மாதிரி பார்த்து தலைக்கு ஒவ்வொரு துண்டி எடுத்து சரேலென்று வாயில் போட்டுக்கொண்டு “ஆகா அமிர்தம் போல இருக்கிறதே! பேஷ் பேஷ்! அச்சா சஹ்பாஷ்! இந்த மாதிரி மிட்டாயியை நாங்கள் பிறந்தது முதல் இதுவரையில் சாப்பிட்டதே இல்லையப்பா அடாடா என்ன இன்பம் என்ன ருசி” என்று கூறிய வண்ணம், தங்களுக்குப் பின்னாலிருந்த மற்றவர்களைப் பார்த்து “நீங்களும் சாப்பிட்டு மாதிரி பாருங்கள் இந்தத் தட்டில் இருப்பதையெல்லாம் நாமே வாங்கிக்கொண்டு பணம் கொடுத்து விடுவோம்’’என்று கூறிக்கொண்டே, தட்டிலிருந்து ஒவ்வொரு துண்டாய் எடுத்தெடுத்துப் பின்னாலிருந்த ஒவ்வொருவரிடமும் கொடுத்துக் கொடுத்து, “இந்தா, நீ சாப்பிட்டுப் பார், இந்தா, நீ சாப்பிட்டுப் பார்’’என்று கூறி தானம் வழங்கினர்.

 

    • அங்கே வந்திருந்தோர் சுமார் இருபதின்மரே இருந்தனர். அந்தத் தட்டில் நூற்றுக் கணக்கில் மிட்டாயித் துண்டுகள் இருந்தனவானாலும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு, ஒரே விழுங்காய் விழுங்கிவிட்டு, சுற்றிக்கொண்டு இன்னொரு பக்கமாய் வந்து, ‘’எனக்குக் கொடுங்கள். நான் சாப்பிட்டுப் பார்க்கவில்லை” என்று கூறியபடி பன்முறை வந்து வந்து வாங்கித் தின்று ஐந்து நிமிஷத்திற்குள் மிட்டாயித் தட்டைக் காலி செய்துவிட்டனர். அவர்களது விபரீத மான செய்கையைக்கண்டு அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்த நமது சமயற்காரன், ‘’ஐயா எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறீர்களே’’என்று கேட்க வாயைத் திறப்பதற்குள் அவர்கள் பெருத்த ஆரவாரம் செய்து, அத்தனை துண்டுகளையும் தின்று விட்டனர்.

 

    • அதைக் கண்ட சமயற்காரன் அவர்கள் எல்லோரும் அடக்கு வாரற்றுத் திரியும் துஷ்டர்கள் என்றும், தான் அவர்களிடம் கண்டிப்பாகப் பேசினால் அவர்கள் தனக்கு ஏதாகிலும் தீங்கு செய்வார்கள் என்றும் நினைத்து அஞ்சி நயமாகப் பேசத்தொடங்கி, “ஐயா! இங்கே இருந்த மிட்டாயிகளின் மொத்த விலை ரூபாய் மூன்று ஆகிறது. நான் பரம ஏழை. இதை விற்று இதனால் கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு போனாலன்றி, என் வீட்டிலுள்ள என் பெண்சாதியும் பிள்ளைகளும் இறந்து போய் விடுவார்கள். தட்டிலிருந்த மிட்டாயி முழுவதையும் நீங்களே எடுத்துக் கொண்டீர்கள். ஆகையால் தயவு செய்து மூன்று ரூபாய் கொடுத்து விடுங்கள்’ என்று பணிவாகக் கேட்க, அவனுக்குப் பக்கத்தில் நின்ற சில முக்கியஸ்தர்கள் புரளியாக நகைத்து, “ஆகா; மிட்டாயிக் கடைக்காரர் பலே கெட்டிக்காரராய் இருக்கிறாரே மாதிரி பார்ப்பதற்காக நீர் எல்லோருக்கும் கொடுத்து வந்ததுபோல எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தீர்; அதற்குள்ளாகவே உம்முடைய தட்டு காலியாகிவிட்டது. மிட்டாயி நன்றாக இருக்கிறது என்பதைப்பற்றி ஆட்சேபனையே இல்லை. நீர் இப்போது எவ்வளவு மிட்டாயி கொடுப்பதானாலும், நாங்கள் அதற்குப் பணம் கொடுத்துவிட்டுப் போகிறோம். வேறே எங்கேயாவது இன்னும் மிட்டாயி வைத்திருந்தால், போய் அதைஎடுத்துக்கொண்டு வாரும். நாங்கள் மாதிரிக்காக எடுத்துக் கொண்ட தற்குக் காசு கொடுக்க நியாயமில்லை. ஆகையால் நாங்கள் உமக்கு ஒரு பைசாகூடக் கொடுக்கவேண்டிய கடமை ஏற்படவில்லை’’என்றனர்.

 

    • அதைக் கேட்ட சமயற்காரன் அடக்க இயலாத ஆத்திரமும், ஆச்சரியமும், ஏமாற்றமும், விசனமும் அடைந்து, “ஐயா! நான் ஏழை. நான் இதை முதலாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். இதில் ரூ. 1-2-0 நான் நான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியவன். தயவு செய்து ஏழையக் காப்பாற்றுங்கள்’’என்று கூறிக் கைகுவித்துக் குனிந்து அவர்களை வணங்கிக் கெஞ்ச, அவர்களுள் முரடாயிருந்த சிலர் நிரம்பவும் கோபங் கொண்டவர் போல நடித்து அவனைத் தாறுமாறாக வையவும் அதட்டவும் தொடங்கி, “அடேய் அயோக்கிய நாயே! மாதிரி கொடுப்பதற்கே போதாமலிருந்த சொற்ப மிட்டாயியை வைத்துக்கொண்டு நீ விற்றுப் பணம் பிடுங்கவா பார்த்தாய்! புது மாதிரியான மிட்டாயியைக் கொண்டுவந்து ருசிபார்க்கச் செய்து எங்களுடைய ஆசையைப் பிரமாதமாகக் கிளப்பிவிட்ட நீ அதற்கு மேல் காசுக்கு மிட்டாயி கேட்டால் இல்லையென்று சொல்லி, எங்களுக்கு அநாவசியமான தொந்தரவு கொடுக்கிறாயா? இப்போது நாங்கள் வேறே மிட்டாயி எதையாவது வாங்கித் தின்றாலன்றி, எங்கள் நாக்கின் தினவு அடங்காதுபோலிருக்கிறது. அதற்கு நீதான் உத்திரவாதி’’என்று கூறி அவனை வையவும் அடிக்கவும் முயன்றனர்.

 

    • வேறொருவன் அவனுடைய தட்டின் மேலிருந்த காசுக் குவியலின்மீது கையைப் போட்டு ஒன்றுகூட பாக்கி விடாமல் எல்லாவற்றையும் அப்படியே அள்ளிக் கொண்டு கும்பலில் நுழைந்து அப்பால் நகர்ந்து ஓடிப்போய் விட்டான். அதற்குள் வேறு சிலர், “அடேய்! அடேய்! காசை எடுக்க வேண்டாம். அதைக் கொடுத்துவிடு’’ என்று கடைக்காரனுக்குப் பரிந்து பேசு கிறவர்கள் போலக் கூவிக்கொண்டே, ஒடிப்போனவனை பின் தொடர்ந்து, “அடேய்! நில் நில் ஓடாதே; காசைக் கொடுத்து விட்டுப் போ’’என்று கூச்சலிட்ட வண்ணம் அப்பால் நழுவிப் போய்விட்டனர்.

 

    • மிஞ்சி நின்ற மற்றவர்கள் மிட்டாயிக்காரனிடம் நிரம்பவும் அநுதாபமாகவும், விசனகரமாகவும் இரக்கமாகவும் பேசத் தொடங்கி, ‘’ஐயா கடைக்காரரே இன்று உம்மை விட்டு விடுகிறோம்; நாளைக்காவது நீர் தட்டு நிறைய மிட்டாயி கொண்டுவாரும். அதன் விலை எவ்வளவானாலும், உடனே கொடுத்து விட்டு நாங்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுகிறோம். என்ன இருந்தாலும், அந்த அயோக்கியன் உம்முடைய காசை எடுத்துக்கொண்டு போனது தப்பிதம்தான். நீர் இவ்விடத் திலேயே இரும். நாங்கள் போய் அவனைப் பிடித்து, உம்முடைய காசை வாங்கிக்கொண்டு வந்து உம்மிடம் கொடுத்துவிட்டுப் போகிறோம்’’என்று ஆறுதல் மொழி கூறிவிட்டு அப்பால் நழுவிப் போய் விட்டனர்.

 

    • அவ்வாறு போனவர்களுள், தன் பழைய எஜமானரான தாசில்தாருடைய அடையாளங்கள் கொண்ட ஒரு மனிதரும் இருந்ததாக நமது சமயற்காரன் உணர்ந்தான். அந்தத் தாசில்தார் தமது வேலையை இழந்த பிறகு கண்ணியமான தொழில் எதையும் செய்யமாட்டாமல், தம்மிடமிருந்த சொத்தை அபிவிருத்தி செய்ய எத்தனித்து சூதாட்டத்தில் இறங்கினார். அப்படி இறங்கியதில், அவரிடமிருந்த சொத்து முழுவதும் அடியோடு போய்விட்டது. அவர் தமது கண்ணியத்தையும் நாணயத்தையும் விட்டு அந்த முடிச்சு மாறிக் கும்பலில் சேர்ந்துகொண்டார். உண்மையில் அவரே நமது சமயற்காரனுடைய பழைய எஜமானராயினும், அவரே எவ்விதமான இழி தொழிலில் இறங்கமாட்டாரென்று நமது சமயற்காரன் எண்ணி, அது வேறே யாரோ ஒருவர் என்று நினைத்துக் கொண்டான்.

 

    • அவர்கள் எல்லோரும் கடைத் தெருவில் ஜனங்கள் நட மாட்டமிருந்த காலத்தில் அவ்வாறு தனது பொருளைக் கொள்ளை அடித்துச் சென்றதை நினைக்க நினைக்க நமது சமயற்காரன், ‘’என்ன ஆச்சரியம் இது! இந்த ராஜ்யத்தில் கேள்விமுறை இல்லையா? புதிதாய் வந்த திவான் மகாராஜனுடைய அரண்மனையில் சிப்பந்திகள் கொள்ளையடிக்கிறார்களென்று அவர்களுள் பலரை வேலையிலிருந்துதகையர் செய்து விட்டு, நிரம்பவும் கண்டிப்பான முறைகளை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஊரில் பொதுஜனங்களுடைய சொத்தை இப்படிப் பட்ட திருடர்கள் கொள்ளையடிப்பதை நிறுத்துவதற்கு அவர் யாதொரு ஏற்பாடும் செய்யவில்லை! ஆகா! என்ன அக்கிரமம் இது இனி நான் என்ன செய்கிறது வழியில் கிடந்து அகப்பட்ட ரூபாயை நான் வட்டியும் முதலுமாக அதன் சொந்தக்காரரிடம் சேர்க்க வேண்டுமென்று நினைத்த நினைவும் பலியாமல் போய் விட்டதே! அதுவுமன்றி, என் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதற்கு நான் கடைசியான ஜீவாதாரமாக எண்ணிய இந்த முயற்சியும் இப்படிப் பலிதமடையாமல் போய்விட்டதே! இனி நான் என்ன செய்வேன்! எப்படி நான் வீட்டிற்குப் போய் என் குழந்தைகளின் முகத்தில் விழிப்பேன்! இன்றைக்காவது தாங்கள் சாதத்தைக் காணலாமென்று என் குழந்தைகள் ஆவலோடு வழி பார்த்திருப் பார்களே! நான் வெறுங்கையோடு போனால், அவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்து ஏங்கி அப்படியே விழுந்து விடுவார்கள்! ஐயோ! தெய்வமே இன்னம் எவ்வளவு காலந்தான் நீ என்னையும் என் குடும்பத்தாரையும் சோதனை செய்ய எண்ணுகிறாயோ தெரியவில்லையே!” என்று பலவாறு பிரலாபித்துத் தனக்குத் தானே சிந்தனை செய்தவனாய்த் தான் உடனே அந்த ஊர்த் திவானிடம் சென்று அன்று நடந்த கொள்ளையைப் பற்றிப்பிராது செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனாய்க் கடைத் தெருவை விட்டு திவானுடைய ஜாகையின் வாசலுக்குப் போய்ச் சேர்ந்து அங்கிருந்த ஒரு சேவகனைக் கண்டு அவனிடம் தனது வரலாற்றையும், தனது குடும்பத்தின் இப்போதைய நிலைமையையும், தனது மிட்டாயியும் காசும் கொள்ளையிடப்பட்ட விவரத்தையும் கூறி, விஷயங்களை எல்லாம் திவானிடம் சொல்லும் படி அவனிடம் பணிவாக வேண்டிக்கொள்ள, அதைக் கேட்ட சேவகன் மிகுந்த இரக்கமும் பச்சாதாபமும் தோற்றுவித்தவனாய், உடனே திவானிடம் போய் விட்டுத் திரும்பிவந்து “அப்பா! நீ சொன்ன சங்கதிகளை எல்லாம் நான் திவானிடம் சொன்னேன். அவர் எல்லா விஷயங்களையும் சட்டப்படியே நடத்துகிற மகா கண்டிப்பான மனிதர். இது கச்சேரி செய்யும் நேரமல்லவாம். நீ எழுத்து மூலமாக உன் பிராதை எழுதி எடுத்துக்கொண்டு வந்து, நாளைய தினம் காலை11 – மணிக்குமேல் அவர் கச்சேரி செய்யும் போது கொடுக்க வேண்டுமாம். அப்படிக் கொடுத்தால் அவர் சட்டப்படி விசாரித்து, நீதி செலுத்தவதாகச் சொல்லுகிறார்’’என்றான்.

 

    • அதைக் கேட்ட நமது சமயற்காரன் விசனத்தினாலும் ஏமாற்றத் தினாலும் அப்படியே குன்றி உட்கார்ந்துபோய், “ஆகா! என்ன மனித ஜன்மம்! என்ன நீதி இது! நாளைய தினம் 11-மணி வரையில் நானும் என் குடும்பத்தாரும் பிழைத்திருந்தால் அல்லவா? அதற்குமேல் இவரிடம் பிராது கொடுக்க நான் வர முடியும்; சட்டம் இப்படியும் இருக்குமா? மனிதர்கள் ஏழ்மைத் தனம், இல்லாமை பசி, தாகம் முதலிய துன்பங்களுக்கு இலக்கானவர்கள் என்பதை சட்டம் இலட்சியமே செய்கிறதில்லை போலிருக்கிறதே. அவர்களை கேவலம் உயிரற்ற ஒரு யந்திரம் என்றே சட்டம் மதிக்கிறது போலிருக்கிறதே. ஆனாலும், சட்டத்தை அநுபவத்தில் பிரயோகிக்கும் மனிதர்கள் கூடவா கொஞ்சமும் ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்கவேண்டும்!’’என்று வாய் விட்டுக் கூற, அதைக் கேட்ட சேவகன் “அப்பா! நான் என்ன செய்வேன். இந்த திவான் மகா கண்டிப்பான மனிதர். யாராவது தாம் ஏழை என்று இவரிடம் சொல்லிக் கொண்டால், அதை இவர் உண்மை என்று உடனே ஏற்றுக்கொள்ளுகிறதே இல்லை. ஏனென்றால், சிலர் சுலபமாகப் பணம் சம்பாதித்துப் பிழைப்பதற்கு அதை ஒரு தந்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அதனால் அவர்கள் சோம்பேரிகளாய் மாறி மற்ற மனிதருக்கு ஒரு பாரமாக இருந்து வருகிறார்கள் என்றும் எண்ணி, உண்மையிலேயே பட்டினி கிடந்து இறப்பவர்களாக இருந்தாலும், அதையும் இலட்சியம் செய்கிறதில்லை. ஆகையால், இவரிடம் இப்போது காரியம் பலிதமாகாது. உன்னுடைய பரிதாபகரமான நிலைமையைக் கேட்டறிந்தது முதல், என் குடல் கலங்கிப்போய் மனம் தவிக்கிறது. என் கைவசத்தில் இப்போது எட்டணா பணம் இருக்கிறது. இதை நான் தருகிறேன். நீ கொண்டுபோய் உன் குழந்தைகளுக்குச் சாப்பாடு செய்துவை” என்று நிரம்புவும் அநுதாபத்தோடு கூறித் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தான். அந்த எளிய சேவகனது பெரும் போக்கான புத்தியையும் தயாள குணத்தையும் கண்டு, மிகுந்த வியப்பும் களிப்பும் அடைந்த சமயற்காரன், “ஆகா! இந்த ராஜ்ஜியத்தில்இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்யமுள்ள மனிதரும் இருக்கிறார்களா! இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆனாலும் ஒரு விஷயம். நான் அன்னியருடைய பொருளின்மேல் ஆசை வைப்பதே கூடாது என்ற விரதத்தை உறுதியாக அநுஷ்டிப்பவன்; என்னுடைய சொந்த உழைப்பினால் எனக்குக் கிடைக்கும் பொருளே என்னுடைய பொருளன்றி மற்றது என்னுடைய பொருள் ஆகாது. அதைக்கொண்டு நான் என்னுடைய உடம்பை வளர்ப்பது நியாயமல்ல. ஆகையால், உங்கள் பொருள் உங்களுக்கே இருக்கட்டும்’’என்றான்.

 

    • அதைக் கேட்ட சேவகன் மன இளக்கமடைந்து ஆநந்தக் கண்ணிர் விடுத்து, “ஆகா! பெண்டுபிள்ளைகள் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் மகா விபரீதமான நிலைமையில் இந்த உலகத்தில் வேறே யாராவது இப்படி நடந்துகொள்வார்களா இது மகா அதிசயமான காரியமாக இருக்கிறது! இருக்கட்டும், நீர் இதை இனாமாக வாங்கிக்கொள்ள வேண்டாம்; இதை ஒரு கடனாக வைத்துக் கொள்ளும். நீர் மறுபடியும் பணம் சம்பாதிக்கும்போது எனக்கு இந்த எட்டணாவைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்; வாங்கிக்கொள்ள மறுக்காதீர்’’என்றான்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15

கனவு – 15   இந்த உலகத்தில் கடைமை தவறாதவன் யார் என்று கேட்டால் அது காலம் ஒன்றே. மழை வந்தால் என்ன? வெயில் அடித்தால் என்ன? பனி பொழிந்தால் என்ன? சுனாமியே வந்து சுருட்டிப் போட்டால் என்ன? எதைப் பற்றியும்

ராணி மங்கம்மாள் – 26ராணி மங்கம்மாள் – 26

26. பேரனின் ஆத்திரம் விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில் தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11

11 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அக்ஷரா பேசிய அனைத்தையும் யோசித்தவனுக்கு எவ்வளவு பாசமான குடும்பம் இருந்திருந்தா அவங்க இல்லேன்னாலும் மதிப்புகுடுத்து அவங்க சொன்னமாதிரி வாழ்வேன்னு சொல்லுவா. அதுவும் குழந்தைங்களோட அப்டியே தனியா  வாழ்றவ எவ்வளோ பிரச்னை வந்திருக்கும்.. விஷயம்