Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்,Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 13,14,15

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 13,14,15

திகாலையில் எழுந்த சுஜிக்குத் தலையெல்லாம் பாரமாக இருந்தது. நல்லவேளையாக நாகரத்தினம் வீட்டுக்கு வரவில்லை. கண்கள் சிவந்திருக்க காரணம் கேட்ட சுந்தரத்திடம் தலைவலி என்று கரகரத்த குரலில் முணுமுணுத்தபடியே குளிக்கச் சென்றாள். சுந்தரம் ரெண்டு சுக்கைத் தட்டி, காபி போட்டு வைத்திருந்தார்.

“தடுமம் வேற புடுச்சுருக்கும் போல இருக்கே. இந்த சுக்கு காபி குடி பாப்பா தலைவலியும், தடுமமும் குறையும். இன்னைக்கு எதுவும் சமைக்காதே. கடைக்குப் போனதும் ஆப்பமும், தேங்கா பாலும் சீனன்கிட்ட வாங்கிக் குடுத்தனுப்புறேன். சாயங்காலம் சீக்கிரமா வந்துடுறேன் ரெண்டு பேரும் கோனார் கடைக்கு போய் கறிதோசை சாப்பிட்டுட்டு வரலாம் என்ன” என்று கூறியபடி அவளது பதிலுக்காக முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார்.

“பாக்கலாம்பா. நான் இப்ப கோவிலுக்கு போயிட்டு வாரேன். இன்னைக்கு மினிகூட காலேஜ் க்கு போய் ஏதாவது சீட் காலியா இருக்கான்னு கேட்கணும்”.

“சரிம்மா. பத்திரமா போயிட்டு வா.”

‘ச்சே… என்னோட அவசர புத்தியால, இவளோ மார்க் வச்சு இருந்தும் புள்ள சீட்டுக்காக கஷ்டப் பட வேண்டியதா போச்சே. அன்னைக்கு மட்டும் சுஜி பேசுனத காது கொடுத்துக் கேட்டுருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்’ சிந்தி விட்ட பாலையும், கொட்டிட்ட சொல்லையும் நெனச்சுக் கவலைப் பட்டார்.

‘வேற எந்த வீட்டுக்குப் போய் இருந்தாலும் சுஜிக்கும் விக்கிக்கும் இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் தலையில வச்சு தாங்கி இருப்பாங்க. அதிர்ஷ்டமில்லாத எனக்கு பிள்ளைகளா பிறந்தது தான் அவங்க செஞ்ச ஒரே தப்பு’ இவ்வாறு நினைத்தபடியே கிளம்பினார் சுந்தரம்.

தேர்வுக்கு முன்பு கோவிலுக்குச் செல்ல சுஜி விரும்பியதால் முதலில் கோவிலுக்கு வந்திருந்தனர் மினியும், சுஜியும்.

‘மீனாக்ஷி தாயே எனக்கு வாழ்க்கையில் கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இது. எப்படியாவது இடம் கிடைக்க அருள் புரி’ என்று மனமுருகி வேண்டினாள் சுஜி. வழக்கம்போல் புன்னகை புரிந்தாள் மீனாள். மினியின் ஸ்கூட்டியில் இருவரும் தேர்வு நடக்கும் இடத்துக்கு விரைந்தனர்.

தென் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தொடர் உணவகம் அதிதி. விடுதியுடன் கூடிய உணவகம் என்பதால் ஓரளவு கூட்டமும் இருந்தது. நீண்ட நாட்களாக உணவு சம்பந்தமான தொழில் செய்ததின் தாக்கமாக ஒரு கேட்டரிங் காலேஜ் ஆரம்பித்தனர். செய்முறை தேர்வு வைத்து மட்டுமே மாணவர்கள் சேர்த்து கொள்ளப் படுவார்கள். அதில் சேருபவர்களுக்கு ஒரு நிபந்தனை. வகுப்பு நேரம் போக விடுதியில் தங்கி, கட்டாயமாக சில மணி நேரம் அவர்களின் உணவகத்தில் வேலை செய்ய வேண்டும். அதற்கு கணிசமான சம்பளமும் கொடுக்கப்படும். இது மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் என்று நிர்வாகம் கருதியது. ஆனால் அதுவே சிலருக்கு உவப்பாக இல்லை. அதை பற்றி கவலை படாத நிர்வாகம் குறைந்த மாணவர்கள் என்றாலும் போதும், சிறந்த மாணவர்கள் மட்டுமே எங்களது குறிக்கோள் என்று செயல் பட்டு வந்தது.

மினியும், சுஜியும் குறித்த நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே தேர்வு நடக்கும் இடத்திற்குச் சென்று விட்டனர். கூடியிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது சுஜிக்கு சற்று பயமாக இருந்தது. இவ்வளவு போட்டியா? என்னால் இதில் ஜெய்க்க முடியுமா? இதை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை. இந்தப் போட்டியில் ஜெயித்தால் நான் வாழ்வில் வெற்றி பெற்று விடுவேன்.

காலையில் எழுத்துத் தேர்வு அவளுக்கு கடினமாக இல்லை. பொது அறிவு, ஆங்கில புலமை என்று எளிதாகவே இருந்தது. CBT எனும் computer based test என்பதால் முடிவு உடனேயே தெரிந்து விட்டது. தேர்வு பெற்ற ஐம்பது பேருக்கு மதியமே செய்முறைத் தேர்வு அதில் தேறியவர்களுக்கு மறுநாள் நேர்முகத் தேர்வு என்று சொன்னார்கள்.

14

செய்முறைத் தேர்வில் பத்து பத்து பேராக உள்ளே சென்றார்கள். அவர்களுக்கு ஆளுக்கொரு ஏப்ரன் (apron) கொடுக்கப்பட்டது. அவர்கள் முன்னே ஒரு சிறிய அடுப்பு, வெட்டுவதற்குத் தேவையான கத்திகள் மற்றும் பலகை வைக்கப்பட்டு இருந்தது.

வந்திருந்தவர்களில் வெளிமாநிலத்தவர்களும் கணிசமான அளவு இருந்ததால், அவர்களுக்கும் புரியும்படி அங்கே இருந்த சமையல்கலை நிபுணர் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

“வணக்கம் நண்பர்களே எனது பேர் பழனிச்சாமி. இந்த செய்முறைத் தேர்வை நடத்தும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. மற்ற கல்லூரிகளைப் போல் அல்லாமல் இது முழுக்க முழுக்க சமையலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கல்லூரி. இதைத் தவிர மற்றவையும் கற்றுத்தரப்படும். இங்கே வந்து இருக்குறவங்க எல்லாருக்கும் ஓரளவு சமையல் தெரியும்னு நம்புறோம். கல்லூரில சேர்ந்து கத்துக்கலாம்னு நினைத்தால் மன்னித்துவிடுங்கள். ஓரளவு சமையல் தெரிந்தால் மட்டுமே இந்தப் படிப்பு உங்களுக்கு சுலபமாக இருக்கும். எங்களது செய்முறைத் தேர்வு உங்களுக்கு இந்தப் படிப்பை படிக்கும் ஆர்வமும், அதற்கு உண்டான பொறியும் இருக்கிறதா என்று கண்டறியும் முயற்சியே தவிர, நீங்கள் சமையல் வல்லுநரா என்று பரிட்சித்துப் பார்ப்பது இல்லை. கண்ணாடிக் கல்லையும், வைரத்தையும் பிரிப்பது போல. பிரிக்கப்படும் வைரங்கள் எங்கள் கல்லூரியில் பட்டை தீட்டப்படும். ஒரு ரகசியம் நாங்கள் சொல்லும் செய்முறைகளைச் சரியாக பின் பற்றுங்கள், வெற்றி கிட்டிவிடும்.

உங்களுக்கு 15 நிமிடம் தரப்படும். வீடியோவில் காட்டப்படும் பௌச்செட் எக் செய்முறை பார்த்து அதன்படி 3 பேருக்குத் தயார் செய்ய வேண்டும். உங்களுக்குத் தேவையானதை இங்கே இருந்து எடுத்து செல்லலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

பலகாரத்தின் பேரே வித்தியாசமாக இருக்க தனது பயத்தைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்ட சுஜி வீடியோவை கவனிக்க ஆரம்பித்தாள். தண்ணீரைக் கொதிக்க வைத்து, பின்னர் அதில் சிறிது உப்பும் போட்டு விட்டு, முட்டையை உடைத்து ஊற்றினார் ஒருவர், அவ்வப்போது கலக்கினார். சில நிமிடத்தில் அது சிறிய இட்லி போல் வெந்து மேலே வந்தது. பார்க்க சுலபமானதாக இருந்தாலும் செய்வது சுலபமில்லை என்று தெரிந்தது.

முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்தாள் சுஜி. அதில் உப்பு போட்டுவிட்டு, பின்னர் முட்டையை உடைத்து ஊற்ற, அது அப்படியே கரைந்து பூ இதழைப் போல் பிரிந்தது. சை… என்னோமோ தப்புப் பண்ணுரோமே… என்னவா இருக்கும், ஏதோ ஊத்துனான்களே என்ன அது… என்று சற்று யோசித்தாள். சட்டென்று நினைவுக்கு வர மறுத்தது. பின் போய் பொருட்கள் இருக்கும் இடத்தைப் பார்த்தாள். ஒரு குடுவையில் இருந்த திரவம் சற்று குறைந்திருக்க, பக்கத்தில் சென்று பார்த்தால் அது வினிகர். அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி எடுத்துவந்தாள். வேகமாக போய் சுடுதண்ணியைப் பிடித்தவள், அதனை சுட வைக்க, சட் என்று தண்ணீர் கொதிநிலைக்கு வந்துவிட்டது. பின் உப்பையும், வினிகரையும் கலந்தாள். உடைத்து ஊற்றிய முட்டை இன்னும் திருப்தியாக இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தவள், வினிகர் எடுத்து வந்த கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி, பின் மெதுவாக நீரில் போட்டாள். அதன் அடியில் ஒரு கரண்டியை வைத்து இருந்ததால் ஓரளவு ரௌண்டாகவே வந்தது. ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை எடுத்து பௌச்செட் எக்ஐ அதில் போட்டு பின் ரொட்டியின் மேல் வைத்து அலங்கரிக்க ஆரம்பித்தாள்.

தனது சித்தி வீட்டிற்கு விருந்துகளுக்கு செல்லும் போது நூடுல்ஸ் செய்பவர்களைக் கவனித்து இருக்கிறாள். அவர்கள் அதனை முதலில் சுடுநீரில் போட்டுவிட்டு நன்றாக வெந்தவுடன் குளிர்ந்த நீரில் போடுவார்கள். ஏன் இப்படி என்று கேட்டதற்கு, அப்பத்தான் குழையாது பாப்பா. இல்லேன்னா ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கும் என்று சொன்னது அவளது நினைவில் இருந்தது. அந்த அறையில் நடந்தபடி அனைவர் செய்யும் வேலையையும் பார்த்துக் கொண்டிருந்த பழனியின் கண்களில் ஒரு மெச்சுதல் தெரிந்தது.

டுத்த தேர்வு டெசெர்ட் செய்வது. கொடுக்கப்பட்டது ஐந்து நிமிடங்கள். அதற்குள் மூன்று பேருக்கு டெசெர்ட் செய்து முடிக்கவேண்டும். ஐஸ்கிரீம், ஜெல்லி, கேக், பிஸ்கட், பால், சீஸ், பழங்கள் என்று எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சற்று யோசித்த சுஜி, தேர்ந்து எடுத்தது ஸ்டிராபெர்ரி, வனிலா ஐஸ்கிரீம், பிஸ்கட்.

ஸ்டிராபெர்ரியை நறுக்கியவள், மிக்சியில் அதனை சக்கரையுடன் கலந்து நன்றாக அரைத்தாள். பழகூளை சற்று சாப்பிட்டுப் பார்த்த சுஜி கொய்யாப்பழ விதைபோல் பல்லில் அதன் விதை மாட்டுவதை உணர்ந்தாள். சாப்பிடும் யாருக்கும் அது தொந்தரவாக இருக்கும். வேறு செய்ய நேரமில்லை. அருகே இருந்த வடிகட்டியை பார்த்ததும் சட்டென்று அதை எடுத்து ஜூஸை வடிகட்டினாள். பின்னர் ஒரு சிறிய கரண்டி ஐஸ்கிரீம், அதன் மேல் கால்கப் ஜூஸ், அதன் மேல் மறுபடியும் ஐஸ்கிரீம், அதன்மேல் அரைகுறையாக பொடிக்கப்பட்ட பிஸ்கட், அதற்கு மேல் சிறிதாக நறுக்கப்பட்ட ஸ்டிராபெர்ரி என்று பார்க்கவே வண்ணமயமாக கவர்ந்து இழுக்கும்படி இருந்தது. அவள் செய்த டெசெர்ட் மூன்று டம்ளர்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது. எந்த டம்ளரிலும் எந்த ஒரு பொருளும் அதிகமாகவும் இல்லை கம்மியாகவும் இல்லை.

வெற்றிகரமாக செய்முறைத் தேர்விலும் தேறிவிட்டாள் சுஜி. மறுநாள் நேர்முகத் தேர்வு.

15

செய்முறைத்தேர்வு முடிவு தெரிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது நன்றாக இருட்டி விட்டது. எப்படி வீட்டுக்குச் செல்வது என்று யோசித்தபடி நின்று கொண்டு இருந்தவள் சொடுக்கு சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.

“யெஹ் மினி! நீ எப்ப வந்த?”

“காலைல எட்டு மணிக்கு”.

“அடப்பாவி! அப்ப நீ இன்னும் வீட்டுக்கே போகலையா?”

“உனக்கு ரிசல்ட் என்ன ஆச்சுன்னு தெரியாம எப்புடி வீட்டுக்குப் போறது? நீ நிச்சயமா செலக்ட் ஆயிருப்பன்னு தெரியும். இருட்டிடுச்சுன்னா எப்படி வீட்டுக்குப் போவ?”

“அதுக்காக… நான் என்ன சின்ன புள்ளயா? அது சரி இவ்வளவு நேரம் வெளிலயா நின்னுட்டு இருந்த?”

“எதுத்தாப்புல பாரு, ஒரு லைப்ரரி இருக்குல்ல. அதுல உட்கார்ந்து கிட்டு, ஜன்னல் வழியா பார்த்துக்கிட்டு இருந்தேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் மினி. ஹ்ம்ம்… மழைக்குக் கூட லைப்ரரி பக்கம் போக மாட்ட, ஏதாவது சாப்பிட்டியா?”

“அதெல்லாம் கரெக்டா செஞ்சுட்டேன். இந்தா சூடா இந்தக் கடலைய சாப்பிடு.”

“எங்க வாங்கின? கண்ணுக்கு எட்ன தொலைவுல ஒரு கடையும் திறக்கல.”

“ஒரு சுமாரான பிகர் வந்து என்கூட கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுச்சு. அது டிபன், காபி எல்லாம் வாங்கிக் கொடுத்துச்சு. நான் கடலை மட்டும் ரெண்டு பொட்டலமா வாங்கிக்கிட்டேன்.”

“இன்னைக்கு ஒரு இளிச்சவாயன் உன் கிட்ட மாட்டிகிட்டானா?”

“நானா போய் கேட்டேனா? இல்லையே! வாங்கிட்டு வந்து கைல திணிச்சா, நான் என்ன செய்ய முடியும். அந்தப் பையனுக்கு இன்னைக்கு கணக்குல செலவுன்னு இருக்கு. அதுக்கு நான் பொறுப்பில்லப்பா.”

சுஜி வீட்டுத் தெரு மொனையில் இறக்கி விட்ட மினி, “சுஜி நான் இன்னைக்கு நைட் ஒரு விசேஷத்துக்காக திருநெல்வேலி போறேன். அங்கேருந்து அப்டியே நெல்லை எக்ஸ்பிரஸ்ல மெட்ராஸ் போறேன். நாளைக்கு நீ தனியா வந்துடுவியா?”

“கண்டிப்பா. நீ கவலைப்படாம போயிட்டு வா.”

இவ்வளவு தனக்காக பார்த்து பார்த்து செய்யும் மினியை வீட்டுக்குக் கூட அழைக்க முடியாத தனது நிலைமையை எண்ணி வருத்தத்தோடு வீட்டுக்குச் சென்றாள் சுஜி.

தொலைகாட்சிப் பெட்டியில் இருந்து கவிஞர் வைரமுத்துவின் ‘தோழிமார் கதை’யை உருகி உருகி பாடிக் கொண்டிருந்தனர் சின்மயியும், மகதியும்.

ஆத்தோரம் பூத்த மரம், ஆனை அடங்கும் மரம்
கிளையெல்லாம் கூடு கட்டிக் கிளி அடையும் புங்க மரம்
புங்க மரத்தடியில், பூ விழுந்த மணல் வெளியில்,
பேன் பார்த்த சிறு வயசு, பெண்ணே நினைவிருக்கா?

சிறுக்கி மக பாவாட சீக்கிரமா அவிருதுன்னு,
இறுக்கி முடி போட்டு எங்காத்தா கட்டிவிட,
பட்டுச் சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக,
இடுப்புத் தடத்தில் நீ எண்ண வச்ச நெனைவிருக்கா?

மருதாணி வச்ச வெரல் மடங்காம நானிருக்க,
நாசமா போன, நடு முதுகு தானரிக்க,
சுருக்கா நீ ஓடி வந்து சொரிஞ்ச கதை நெனைவிருக்கா?

கருவாட்டுப் பானையில, சிறுவாட்டுக் காசெடுத்து,
கோனார் கடை தேடி, குச்சி ஐஸ்சு ஒண்ணு வாங்கி,
நான் திங்க நீ கொடுக்க, நீ திங்க நான் கொடுக்க,
கலங்கிய ஐஸ் குச்சி, கலர் கலரா கண்ணீர் விட,
பல்லால் கடிச்சு பங்கு போட்ட வேளையில,
வீதி மண்ணில் ரெண்டு துண்டா விழுந்திருச்சே நெனைவிருக்கா?

வெள்ளாறு சலசலக்க, வெயில் போல நெலவடிக்க,
வெள்ளித் துருவல் போல வெள்ளை மணல் பளபளக்க,
கண்ணா மூச்சி ஆடையில கால் கொலுச நீ தொலைக்க,
சூடு வைப்பா கிழவின்னு சொல்லி சொல்லி நீ அழுக,
எங்காலு கொலுச எடுத்துனக்கு மாட்டி விட்டு,
என் வீட்டில் நொக்கு பெத்தேன் ஏண்டி நெனைவிருக்கா?

பல்லாங்குழி ஆடயில பருவம் திறந்து விட,
ஈரப் பசை கண்டு, என்னமோ ஏதோன்னு,
சாகத்தான் போறேன்னு சத்தமிட்டு நாங்கத்த,
விறு விறுன்னு கொண்டந்து வீடு சேர்த்த நெனைவிருக்கா?

ஒண்ணா வளர்ந்தோம், ஒரு தட்டில் சோறு தின்னோம்,
பிரியாதிருக்க ஒரு பெரிய வழி யோசிச்சோம்.
ஒரு புருஷங்கட்டி, ஒரு வீட்டில் குடி இருந்து
சக்களத்தியா வாழ சம்மதிச்சோம் நெனைவிருக்கா?

ஆடு கனவு கண்டா அருவா அறியாது.
புழுவெல்லாம் கனவு கண்டா கொழுவுக்குப் புரியாது.
எப்படியோ பிரிவானோம், இடி விழுந்த ஓடானோம்,
இருவது வயசோட, இருவேறு திசையானோம்.

தண்ணி இல்லாக் காட்டுக்கு தாலி கட்டி நீ போக,
வரட்டூறு தாண்டி வாக்கப்பட்டு நாம்போக,
ஒம்புள்ள, ஒம்புருஷன், ஒம்பொழப்பு ஒன்னோட,
எம்புள்ள, எம்புருஷன், எம்பொழப்பு என்னோட.

நாளும் கடந்துடுச்சு, நர கூட விழுந்துடுச்சு,
வயிற்றில் வாழ்ந்த கொடி வயசுக்கு வந்துடுச்சு.
ஆத்தோரம் பூத்த மரம், ஆனை கட்டும் புங்க மரம்
போன வருஷத்துப் புயல் காற்றில் சாஞ்சிடுச்சு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’

அத்தியாயம் – 12   இரவு ஏழரை மணிக்கு ஜலந்தரை அடைந்தது சென்னை-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ். சாய், காப்பி என குரல்கள் காதில் விழ ஆரம்பிக்க, “நந்தா எந்திரி…. ஊர் வந்துடுச்சு. அஞ்சு நிமிஷம்தான் இந்த ட்ரைன் ஸ்டேஷன்ல நிக்கும். அதுக்குள்ளே இறங்கல,

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5

மதியம் அனைவரும் உணவு உண்டுக்  கொண்டிருந்தனர். குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கூடத்தில் இருந்தனர். தலை வாழை இலையில் உணவு பரிமாறி  இருக்க, அரவிந்த், முதல் பெண் சுதாவின் கணவன் நாதன், இரண்டாவது மகள் சங்கீதாவின் கணவன் கதிர், புதிதாக

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 23தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 23

டிக் டிக் டிக் என்ற கடிகார முள் நகரும் ஓசையைத் தவிர அந்த அறையில் வேறொன்றும் சத்தமில்லை. ஏஸியை நிறுத்தியிருந்தான் ராம். சற்று உற்று கவனித்தால் சிண்டு மூச்சு விடும் ஒலி கேட்டது. இவனாச்சும் நல்லாத் தூங்கட்டும் என்று ராம் நினைத்துக்