5 + 5

“அம்மா டிபன் பாக்ஸ் கட்டினியா” கத்தினாள் வசந்தி.

“எல்லாம் ரெடி… மத்தியானம் சாப்பிட தக்காளி சாதம், முட்டை பொரியல் வச்சிருக்கேன். இன்னைக்காவது முழுசா சாப்பிடு”

 

“சரிம்மா… மத்யானம்  ஸ்பெஷல் க்ளாஸ் வச்சிருக்கேன். ஒவ்வொரு க்ளாஸ் பிள்ளைகளும் சாப்பிட்டுட்டு பத்து கணக்கு போடணும். இதுனால சூத்திரம் எல்லாம் மனப்பாடம் ஆகுமே…  பரீட்சை சமயத்தில் பார்முலா எல்லாம் குழாயை திறந்தா கொட்டுற தண்ணி மாதிரி கொட்டும்”

“அடிப்போடி … குழாய்ல தண்ணியைப் பாத்தே மாமாங்கமாச்சு. லாரி தண்ணியை லைனில் நின்னு பிடிக்கிறோம். இவ வேற வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு”

 

“நீ பேசுறது நடைமுறை வாழ்க்கை. நம்ம பசங்க நல்லா படிச்சு தெளிவா இருந்தா இந்த சிக்கல் எல்லாம் தீர்ந்துடும். டீச்சருங்க நினைச்சா ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நல்ல தலைவனை உருவாக்க முடியும்”

 

“வேலைக்கு சேர்ந்து ஆறுமாசம் தானே ஆச்சு இப்படித்தான் பேசுவ… அஞ்சு வருஷம் கழிச்சு இந்த சமுதாயம் உன்னைத் தலையில் தட்டி அதோட வழிக்குக்  கொண்டு போய்டும் பாரு”

 

“உன்கிட்ட பேசிட்டே இருந்தா ஸ்கூலுக்கு நேரமாயிடும்” அரக்க பரக்கக் கிளம்பினாள்.

 

அவர்களின் கிராமமான மணக்கோட்டையில் இருக்கும் ஒரே பள்ளியில் மொடமொடப்பான கஞ்சி போட்ட காட்டன் புடவை, கழுத்தை மறைத்த ஜாக்கெட்,  கையில் குடை, பன் கொண்டை சகிதம் கடலோரக் கவிதை ஜெனிபர் டீச்சரைப் போல நுழைத்த வசந்தியிடம்  அனைத்து மாணவர்களும் தேடி வந்து காலை வணக்கம் சொன்னார்கள். அவளும் பெருமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

 

ஆசிரியப் பணி அவள் விரும்பி ஏற்றுக் கொண்டது. அவள் பள்ளியில் படிக்கும் சமயத்தில், பாடம் எடுப்பதைத் தவிர மற்ற  வேண்டாத வேலைகளில் பொழுதைப் போக்குவதையே  நேரமாகக் கொண்டிருந்த ஆசிரியைகளே அவளுக்கு வாய்த்தார்கள். டியூஷன் வகுப்பு எடுப்பதிலும், உடல்நிலை சரியில்லை என்று போலி சான்றிதழ் வழங்கிவிட்டு தன்னிடம் தனது கல்வியை ஒப்படைத்த மாணவிகளின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிய ஆசிரியைகளும் கண்டு வெறுத்து போனவள்,  தான் படித்து ஒரு சிறந்த ஆசிரியையாக வேண்டும் அப்போதே முடிவெடுத்தாள். அவ்வண்ணமே  கணிதத்தைத் தேர்வு செய்து மேல்படிப்பு முடித்து ஆசிரியப் பணிக்கு வந்திருக்கிறாள்.

 

சற்று நேரத்தில் தலைமை ஆசிரியர் கூப்பிட்டு அனுப்பவும்  அவரது அறைக்கு நுழைந்தவளின் முகத்திலிருந்த புன்சிரிப்பு அவர் சொன்ன தகவலைக் கேட்டு  வாடியது.

 

“நம்ம அலமேலு டீச்சர் லீவ் முடிஞ்சு வந்தது பார்த்திருப்பீங்க. இனிமே அவங்க பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தை எடுப்பாங்க. உங்களுக்கு வேற வகுப்பு ஒதுக்கப்படும். அதுவரை மூணாம் வகுப்பு கணக்குப் பாடத்துக்கு உங்களைப் போட்டிருக்கோம்”

 

கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று, இனிமேலும் படிக்க ஆர்வத்துடன் இருப்பவளை. அந்தப் பள்ளியிலே நேர்மையாகவும் நியாயமாகவும் வேலை செய்யும் ஒரு சிறு பெண்ணின் திறமையை சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற உறுத்தலே சிறிது கூட தலைமை ஆசிரியருக்கு இல்லை.

 

“சார் அதில்லை…”

 

“மூணாவது  எடுக்குறதில் ஒண்ணும் கௌரவக் குறைச்சல் இல்லைம்மா”

 

“நான் அப்படி நினைக்கலை சார். பத்தாம் வகுப்புக்கு இன்னும் ரெண்டு மாசத்தில் தேர்வு வருது. அதுக்குத் தயார் படுத்திட்டு இருக்கேன். இப்ப மாத்தினா பிள்ளைகளுக்கு கஷ்டம். அதைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க”

 

“இங்க பாரும்மா… இது தனியார் பள்ளி. நீங்க கூட டெம்பரவரியாத்தான் சேர்ந்திருக்கிங்க. உங்களை நம்பி எப்படி பத்தாம் வகுப்பு மாதிரி பொதுத் தேர்வு நடக்கும் வகுப்பைத் தர முடியும். வாதாடிட்டு இல்லாம  வகுப்புக்குப் போங்க”

 

“எனக்குத் தெரியும்… இந்த அலமேலு இத்தனை நாள் சிக் லீவ் எடுத்துட்டு வந்திருக்கா. நீ கஷ்டப் பட்டு பாடத்தை எடுப்ப, கடைசில சென்டம் ரிசல்ட் வரும்போது நான்தான் கணக்கு டீச்சர்ன்னு இளிச்சுட்டு ப்ரைஸ் வாங்கிப்பா… நினைச்சாலே எரியுது” என்று சக தோழி சொன்ன போது கூட எழுந்த மனக்குமுறலை அடக்கிக் கொண்டபடி மூன்றாம் வகுப்புக்கு சென்றாள் .

 

அங்கு வந்தான் ஒரு குட்டி வில்லன் சதிஷ். அவனது தந்தை பெரிய கான்டராக்டர் அதனாலோ என்னவோ தெனாவெட்டு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

 

“இந்த வயசில் இப்படி ஒருத்தனைப் பாத்ததே இல்லைம்மா… தேளை எடுத்து மத்த பசங்க மேல போடுறதும், க்ளாஸ்ல படுத்து தூங்குறது, இதில் நேத்து கூடப் படிக்கிற  பொண்ணு புஸ்தகத்தைத் திருடி அது மேல ஒண்ணுக்கு போயிருக்கான். இவனை எல்லாம் கண்டிச்சு வளக்கல பிற்காலத்தில் இந்த ஊரே கஷ்டப்படும்” என்று தாயிடம் புலம்புவாள்.

 

“அவன் அப்பா எதோ ஜாதி கட்சில பெரிய ஆள். அதனால அவனைக் கண்டிக்காதே”

 

“இதென்ன வேடிக்கை…. பாடம் சொல்லித் தர இடத்தில் ஜாதிக்கென்ன வேலை”

“நம்ம கூட  பிறப்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவங்கதான். மறந்துடாத”

 

“சீட்டு கிடைக்கிறதில் மட்டும்தான் அரசாங்கம் சலுகை காமிக்குது. பாடம் எல்லாருக்கும் ஒண்ணுதான். எந்த சமூகத்தை சேர்ந்தவரா இருந்தாலும் அதே பாடத்தைத்தான் படிக்கணும்.  என் க்ளாசில் மாணவர்களின் படிப்புக்கு நான்தான் பொறுப்பு. அவங்க முன்னேற்றம் ஒண்ணுதான் என் குறி. அதுக்கு இதெல்லாம் தடையா இருக்காது”

 

அவள் சொன்னது அவ்வளவு சீக்கிரம் பொய்த்துப் போகும் என்று அவளே நினைக்கவில்லை.

 

அன்று கணக்குப் பேப்பரைத் திருத்தித் தந்து கொண்டிருந்தாள் வசந்தி. ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தந்து அவர்களின் தப்பைத் திருத்தி எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தாள்.

 

“சதிஷ் இங்க வா…”

 

வேண்டா வெறுப்பாக எழுந்து வந்தான்.

 

அடிப்படை கணக்கிலேயே  தப்பு செய்யும் இப்படி ஒரு மக்குப் பயலை அவள் பார்த்ததே இல்லை. அவனிடம் மற்றொரு கேள்வித்தாளை நீட்டினாள். ஒற்றைப்படை கூட்டல் கேள்விகள் மட்டுமே அதில் இருந்தது.

 

“நீ போட்ட எல்லா கணக்கும் தப்பு. அதனால் சுலபமா இன்னொரு பேப்பர் ரெடி பண்ணிருக்கேன். இதுதான் உன்னோட டெஸ்ட் பேப்பர். இந்த க்ளாஸ் முடியுறத்துக்குள் எழுதித்தா”

 

ஆனால் இரண்டு நிமிடத்தில் விடைத்தாளை அவள் முகத்தில் வீசினான் சதிஷ். அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க, தனது சினத்தை அடக்கியவள் பொறுமையாக விடைத்தாளைப் பார்த்தாள்.

 

1+1 = 11
3+3 =33
5+5 =55 என்று எழுதி இருப்பதைக் கண்டு கோபத்தில்
“ஏண்டா 5+5 = 55 ஆ”

 

“ஆமா…” என்று தெனாவெட்டாக பதிலளிக்கவும் வகுப்பே சிரித்தது.

 

“அமைதியா இருங்க… இங்கென்ன ஆதிதித்யா காமெடியா நடக்குது..

 

சதிஷ் நல்லா யோசிச்சு சொல்லு 5+5 எவ்வளவு”

 

“55 தான்”

 

“இத பாரு கணக்கைத் தப்பா படிக்கக் கூடாது. தெரியலைன்னா கேளு சொல்லித்தரேன்”

 

“நீங்க ஒரு கூந்தலையும் புடுங்க வேண்டாம்… எல்லாம் எனக்குத் தெரியும்”
அவள் கட்டிக் காத்த பொறுமை பறக்க அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

 

“என்னது இது டீச்சர்ன்னு மரியாதை இல்லாம”

 

“என்னை அடிச்சுட்டேல்ல… இனி பாத்துக்குறேன்” வெளியே ஓடிவிட்டான்

 

அவன் சென்ற சற்று நேரத்தில் சற்று நேரத்தில் தலைமை ஆசிரியரிடமிருந்து வசந்திக்கு  அழைப்பு வந்தது.

 

அறையில் சதீஷின் தந்தை தோரணையாக அமர்ந்திருக்க, பக்கத்தில் தாயார் திரிபுரம் எரித்த சிவனைப் போல வசந்தியை முறைக்க, மேலும் சில அல்லக்கைகைகள்,   அவர்கள் முன்னே கைகட்டி பவ்யமாக தலைமை ஆசிரியர்,

 

“ஏம்மா சாரோட பையனை மாட்டை அடிக்கிற மாதிரி குச்சியால் அடிச்சியாமே… நம்ம ஸ்கூலில் அடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கே. அதை எப்படி மீறலாம்” என்றார் அவளிடம் மட்டும் வீரத்தைக் காட்டி.

 

“அதே மாதிரி ஆசிரியருக்கு மரியாதை தரணும், முறைதவறி பேசக்கூடாதுன்னும் சட்டம் இருக்கு சார். அதை மாணவன் கடை பிடிக்கலைன்னா திருத்தும் உரிமை ஆசிரியருக்கு இருக்கு”

 

“பெரிய டீச்சர். நீங்கள்லாம் எப்படிப் படிச்சு வந்திங்கன்னு தெரியாது” என்றான் தகப்பன் நக்கலாக

 

“கண்டிப்பா உங்களுக்கு தெரியாது சார். நான் படிச்ச மாதிரி படிச்சிருந்தால் இப்படி மரியாதை தெரியாம இருக்க மாட்டிங்க”

 

“இங்கபாரும்மா உன் விவரம் கேட்க இங்க வரல… எதுக்காக என் பையனை அடிச்ச…”

 

“அப்படிக் கேளுங்க… சாதாரண கூட்டல் கூட உங்க மகனுக்குத் தெரியல. 5+5 = 55 ன்னு சொல்றான். சரியாய் சொல்லித்தறேன்னு சொன்னால் ஒரு கூந்தலும் வேண்டாம்னு க்ளாஸ் முன்னாடி சொல்றான்”

 

“அதுக்காக அடிச்சுடுவியா… ஒரு கேள்விக்கு பல விடைகள் இருக்கும். நீ எதிர்பார்க்கும் விடைதான் ஒரு குழந்தை சொல்லணும்னு நினைக்கிறது தப்பு. நீ நினைக்கிறதுதான் சரி, அதைத்தான் ஒரு வகுப்பே சொல்லணும்னு நினைக்கிறது சர்வாதிகாரம்” குறுக்கிட்டார் ஒருவர்.

 

எரிச்சலாய் பார்த்தாள் “யாரு சார் நீங்க..”

 

“நான்  பத்திரிகையை சேர்ந்தவன். உண்மை சொல்வேன் அதை மக்களுக்கு உரக்க சொல்வேன்”

 

“நீங்க யாரா வேணும்னாலும் இருங்க, எதை வேணும்னாலும் சொல்லுங்க. ஆனால்  5+5 = 10 என்பது கணக்கு. அந்த ஒரு விடைதான் சரி. மற்றது எல்லாமே தப்புத்தான்”

 

“அப்படித்தான் சொல்விங்க…. எங்க இன மக்கள் என்ன சொன்னாலும் உங்களுக்குத் தப்புத்தான்” என்று சதீஷின் தகப்பன் சொல்ல

 

“ஏண்டி… படுபாவி வாத்திச்சி  என் மகன் முகத்தில் தடம் பதியிரா மாதிரி அடிச்சிருக்கியேடி… உன் கையில் கட்டை முளைக்க” என்று சாபம் தந்தார் தாய்.

 

“இல்ல சார் அவங்க பத்தாம் வகுப்பிலிருந்து மூணாம் வகுப்புக்கு மாத்தினத்தில் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டாங்க. இனிமே அப்படி நடக்காம பாத்துக்குறேன்”

 

“ஓ… உங்க கோபத்தையும் ஆத்திரத்தையும் இந்த சிறு குழந்தை மேல காமிச்சுருக்கிங்க. உங்களுக்கு மறுபடியும் கோபம் வந்தால் இது மாதிரி இன்னொரு தடவை நடக்காதுன்னுறதுக்கு என்ன உத்திரவாதம். இவங்கல்லாம் ஆசிரியப் பணிக்கே ஒரு கரும்புள்ளி”

 

“சார் வேற ஏதேதோ சம்மந்தமில்லாம பேசிட்டு இருக்கீங்க. நான் கேக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க 5+5 எவ்வளவு?”

 

“அதுக்கு ஒரு விடைதான்  இருக்கணும்னு அவசியமில்லை. படிப்பு விஷயத்தில் இப்ப ஒண்ணு  சரின்னு சொல்லுவாங்க அப்பறம் அது தப்பு இதுதான் சரின்னு சொல்வாங்க.அதனால் பய்யன் சொன்னது கூட சரியான விடையா இருக்கலாம்” என்றார் மற்றொருவர். அவர் வக்கிலாம்.

 

தலைமை ஆசிரியர் எரிச்சலுடன். “இங்க பாருங்கம்மா உங்களால் ஸ்கூலில் ஏகப்பட்ட பிரச்சனை பேசாம இந்த மாசத்தோட நின்னுக்கம்மா”

 

“இந்த மாசம் புல்லா எதுக்கு… இன்னைக்கே இவளை நிறுத்து”

 

“அப்படி திடுதிப்புன்னு நிறுத்தினா ஒரு மாசம் சம்பளம் எக்ஸ்டரா தரணும். அதுக்கு எனக்கு அதிகாரமில்லை”

 

“அதை நான் ஒரே செக்கில் தரேன். இந்தம்மா சம்பளம் எவ்வளவு”

 

“5000 ரூபாய்”

 

“பூ…. இந்தக் காசுக்குத்தான் இப்படி ஒரு ஆட்டமா.. எங்க வீட்டு வேலைக்காரிக்கு உன்னை விட சம்பளம் அதிகம் தெரியுமா..” என்றாள் சதீஷின் தாய்.

 

“போன மாச சம்பளம் 5000 அப்பறம் இந்த மாச சம்பளம் 5000 ஆக பத்தாயிரம்” எழுதப் போனான் சதீஷின் தகப்பன்.

 

“இல்ல… 55000 எண்ணி வச்சால்தான் கணக்கு சரியாகும்… ஏன்னா 5+5 = 55 ” என்றாள்  வசந்தி தீர்மானமாக.

 

1 thought on “5 + 5”

  1. 5+5=55 concept super. 55000கொடததாரா இல்லையா . வசந்தியின் துணிச்சல் ரொம்பபிடிச்சிருக்கு. உண்மையா ன உழைப்புக்கு மரியாதை 5500தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிறைப்பறவைசிறைப்பறவை

  அந்த சிறிய ஜன்னலின் வழியே சுளீரென்று வெயில் அறையில் அமர்ந்திருந்த என் மேல் பட்டது. வெயில் சட்டையில் ஊடுருவித்  தோலை சுட, அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த தெள்ளிய நீல வானைப் பார்த்தேன். போன வருடம் இந்நேரம் நானும் என் தம்பியும்

அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை இரண்டு – ஐயம் தீர்க்கும் ஆசான்   அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமிஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி (தமிழ்க் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை