Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 14

அறுவடை நாள் – 14

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 14

 

“வெளிநாட்டு பயணிகள் எல்லாம் இந்தியாவுக்கு வரும் பொழுது அவங்களோட தகவலை ரிஜிஸ்டர் பண்ணி இருப்பாங்களே அவங்க வேணா அப்ரோச் பண்ணி பார்க்கலாம் என்று நினைக்கிறீர்களா மேடம் அதற்கு டைம் எடுக்குமே”

 

“ஆமா கிரேஸ், அதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும். ஆனால் நம்ம இன்னொரு வழியை ட்ரை பண்ணப் போறோம்”

 

“என்னது மேடம்?”

 

“மிஸ்ஸிங்  கேஸ் பத்தின விவரங்களை ஒரு டேட்டாபேஸ்ல போட்டு நமக்கு ஆக்சஸ் கொடுத்திருந்தாங்கன்னு அல்லி ஒரு தடவை சொன்ன நினைவு”

 

“ஆமாம் மேடம். காணாம போனவங்களைப் பத்தின தகவலை எல்லாம் சென்ட்ரல் சர்வர் ஒன்னில் சேமிச்சு நமக்கு அதில் போயி பார்க்க லாகின் தந்திருக்காங்க. ஆனால் அதில் பிரச்சனை இருக்கு”

 

“என்னது? “

 

“ அதை முறைப்படி அப்டேட் பண்றது கிடையாது. அதனால காலாவதியான தகவல்கள் நிறையா இருக்கும்”

 

“ஏன் அப்டேட் பண்றதில்லை” தென்னாடனிடமிருந்து கேள்வி வந்தது. 

 

“எல்லா இடத்திலும் நடக்குறதுதான். இப்பல்லாம் போலீஸ் அதிகாரிகளும் டெக்னாலஜில அப்டேட்டடா இருக்காங்க. தொலைநோக்கு பார்வையோடு திட்டம் எல்லாம் போட்டு செயல்படுத்தவும் ஆரம்பிக்கிறாங்க. ஆனா அவங்களை வேற இடத்துக்குத் தூக்கிப் போட்டதும் அவங்க போட்ட திட்டம் அப்படியே நின்னுடுது” பதிலளித்தார் விஜயா

 

“ரொம்ப நல்ல திட்டம். வெளிநாட்டில் எல்லாம் இந்த மாதிரி தகவல்களை ஷேர் பண்ணிக்கிறதாலதான் குற்றவாளிகளை சீக்கிரம் பிடிக்க முடியுது”

 

“சரி, நம்ம கேஸுக்கு வருவோம். அல்லி நம்ம கணக்குப்படி இந்தப் பொண்ணு செத்து நாலைஞ்சு வருஷம் ஆயிருக்கும். அதனால தகவல் பதிவாயிருக்கும்னு நம்புறேன்”

 

“ஸ்டேஷன்ல போயி பாத்துறலாம் மேடம்”

“கிளம்பு”

 

அடுத்த முப்பதாவது நிமிடத்தில் காவல் நிலையக் கணினி விவரங்களைக் கக்கியது. 

 

“ஐயோ வெளிநாட்டு பயணிகள் இத்தனை பேரு மிஸ்ஸிங்கா?” வாயைப் பிளந்தாள் அல்லி. 

 

“எல்லாத்தையும் பாத்தா இன்னும் ஒரு மாசம் ஆகும். வெளிநாட்டு பெண்கள், பதினெட்டில் இருந்து நாப்பது வயசு இருக்குறவங்க. குறிப்பா ஐரோப்பாவை சேந்தவங்களை பில்டர் பண்ணு”

 

“அது ஏன் பதினெட்டு டூ நாப்பது. ரேஞ்சு ரொம்ப அதிகமா இருக்கே”

 

“நல்ல முழு வளர்ச்சியடைஞ்ச ஒரு பெண்ணின் மண்டை ஓடு அதனால குறைந்தபட்சம் பதினெட்டு. சாம்பிள் கண்டாமினேட் ஆயிருந்தா முடிவு துல்லியமா இருக்காதுன்னு தென்னாடன் சொன்னதால நாப்பது வயசு வரை பாக்க சொன்னேன்”

 

“வேற ஏதாவது பில்டர் பண்ணனுமா?”

 

“கேரளா, கன்யாகுமரி பக்கம் வந்த டூரிஸ்ட்டா இருந்தால் அதை முதலில் எடு”

 

அடுத்த இரண்டு மணி நேர பரபர தேடலுக்குப் பிறகு ஐந்து பெண்களின் விவரங்களைத் தனியாக எடுத்து வைத்தார்கள். 

 

“நம்ம தேடுற  விவரங்கள் இந்த அஞ்சு மிஸ்ஸிங் கேஸ்க்கு பொருந்தி இருக்குது மேடம். இதுல இருந்து நம்மளோட விசாரணையை தொடங்கலாம்னு  நினைக்கிறேன்”

 

ஐந்து பெண்களின் விவரங்களை சரி பார்த்த விஜயா 

 

“அல்லி இந்த அஞ்சு பெண்களைப் பத்தின விவரங்கள், பல கோணங்களில் இருக்கும் படம் இதெல்லாம் வாங்கப் பாரு. முதலில் ஸ்டேஷனோட அபிஷியல் மெயில் பாக்ஸிலிருந்து மின்னஞ்சல் மூலமா குடும்ப நபர்களைத் தொடர்பு கொண்டு அறிமுகப் படுத்திக்கோ. இந்த கேஸ்களைக் கையாண்ட போலீஸ்க்காரங்கிட்ட பேசி மத்த விவரங்களை நமக்கு அனுப்ப சொல்லுங்க”

 

“காலையில முதல் வேலையா இத முடிச்சிடுறேன் மேடம்” என்று அல்லி உறுதி அளித்தாள்.

 

***

 

ஸ் ஸ்டாப்பில் இறங்கிய பாப்பம்மாவுக்கு சற்று முன்னரே கிளம்பி  வந்திருக்கலாம் போல் தோன்றியது. சோபியாவின் வீட்டிற்கு தானே கிளம்பி வந்து விடுவதாக சொல்லி இருப்பதற்கு பதில் அவர்கள் அம்மா வீட்டுக்கு சென்று அங்கிருந்து அவளுடன் கிளம்பி வந்திருக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டாள்.

 

ஏனென்றால் சோபியாவின் மாமியார் வீடு ஊரை விட்டு சற்று தள்ளி இருந்த பகுதியில் இருந்தது பஸ்ஸில் இருந்து இறங்கி ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும்

 

நகரை விட்டு தள்ளி இருந்த நல்ல விசாலமான இடம். ஆதலால் வீடுகள் அந்த இருட்டில் பளிச்சென்று தெரியும். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் ஒரு ஒழுங்கில்லாமல் கொட்டி இருந்ததைப் போல அந்த வீடுகளும் இருந்தது.

 

குளிர்ந்த காற்று பாப்பம்மாவின் மேல் மோதியது .மெல்லிய நிலவொளி இருந்தாலும் இருள் கொஞ்சம் கொஞ்சமாக அப்ப ஆரம்பித்தது. பென்சில் ஓவியம் போலத் தோன்றி  சுற்றிலும் இருந்த புதர்களும் மரங்களும் அந்த இருளில் பூதங்களாக திகிலூட்டின.

 

அங்கே ஒரு மிகப் பழைய தேவாலயம் கூட பராமரிப்பற்றி இருந்தது. அதன் பின்னர் ஒரு பாழடைந்த கல்லறை வேறு. ‘பயமா எனக்கா? பயத்துக்கே பயம் காட்டுறவடா நானு’ என்று சொல்லி  இமேஜை மெய்ண்டெயின் செய்து கொண்டிருந்த பாப்பம்மாவுக்கே உள்ளூர பயமாக இருந்தது.

 

இருந்தாலும் மனதை தைரியப்படுத்திக் கொண்டு ஒரு வழியாக சோபியாவின் மாமியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

 

“நீ தான் அவள பாத்துக்க வந்த நர்சா? ஏன் சோபியா  கூடவே வர்றதுக்கு என்ன?” என்று சலித்துக் கொண்டாள்  சோஃபியாவின்  மாமியார்.

 

“ஆஸ்பத்திரியில் வேலை இருந்தது.  இன்னைக்கு சாயந்திரம் தான் ரிலீஸ் பண்ணி விட்டாங்க”

 

“சரி சரி உள்ள போ. சோஃபியா வலது புறம் இருக்குற ரூமில் இருக்கா. உனக்கும் அங்கேயே தங்க பாய் தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்து வைக்கச் சொல்லுறேன்”

 

பாப்பம்மாவைப்  பார்த்ததும் சோபியாவின் முகத்தில் நிம்மதி.

 

“அக்கா வழியில் பார்த்தீர்களா எவ்வளவு குளிரு? கல்லறைத் தோட்டம் எல்லாம் பாழடஞ்சு இருந்துச்சில்ல கா” 

 

“சோபியா உனக்கு நைட்டு கஞ்சி மட்டும் போதும்னு சொன்னியாமே .அம்மா சொன்னாங்க. இந்தா சுடச் சுட கஞ்சி கொண்டாந்திருக்கேன் குடி. கஞ்சி மட்டும் குடிச்சா  உடம்பு தேறாது. அதனால செவ்வாழைப் பழம் ரெண்டு கொண்டு வந்து இருக்கேன். இன்னும் ஒரு மணிக்கூறு கழிச்சு ரெண்டு பழமும் சாப்பிட்டுட்டு  பாலையும் குடிச்சிடனும்” என்று சொல்லிக் கொண்டே ஒருத்தி அறைக்குள் நுழைந்தாள் 

 

இது யாரு என்று பார்வை பார்த்த பாப்பம்மாவிடம் 

 

“ஓ! நீங்க தான் அம்மா சொன்ன நர்.சா நான் நான் ஜோஸ்லின் இந்த வீட்டு குசினிக்காரி. சமையல் காரின்னும் சொல்லலாம்”

 

“ஓ அப்படியா நான் பாப்பம்மா  கொஞ்ச நாள் சோபியாவை பாத்துக்கிறதுக்காக வந்து இருக்கேன்”

 

“நல்லது கா நீங்க பாத்துக்கிட்டிங்கனா நான் கொஞ்சம் தூங்குவேன். இல்லாட்டி ராத்திரி பூரா சோபியா சரியா தூங்காம என்னை எழுப்பிவிட்டுகிட்டு  இருக்கும்”

 

“உன்னை ஏன்  எழுப்பி விடுது? சோபியா வீட்டுக்காரர் எங்க போனாரு? அவரு இங்க படுக்க மாட்டாரா?” என்று விவரமாக கேள்வி கேட்டாள்  பாப்பம்மா.

 

“இதுக்கு உடம்பு சரியில்லைன்னு  தம்பி தனியா போய் படுத்துக்குது. ராத்திரி எல்லாம் முழிச்சிட்டு இவ கத்துறா. காலைல சீக்கிரம் தம்பி கடைக்கு போகணும் இல்ல. அதனால கொஞ்சம் தூங்கணும்னு மொட்டை மாடியில் போய் படுத்துக்கும். குளிர் மழை அதிகமா இருந்தா பக்கத்து ரூம்ல போய் படுத்துக்கும். நானும் அம்மாவும் சோபியா கூட படுத்துக்குவோம்”

 

“நெஜமா சோபியா?”

 

“ஆமா சிஸ்டர் எனக்கு ராத்திரி தூங்கவே முடியாது. ராத்திரியான எனக்கு காதுல குரல் கேட்க ஆரம்பிச்சுடும். அந்த சாத்தான் வந்துட்டேன் நீ தூங்கவே கூடாதுன்னு சொல்லிட்டே இருக்கும். அதனால என்னையே அறியாம கத்த ஆரம்பிச்சிடுவேன்”

 

“சரி இன்னைக்கு நான் துணைக்கு இருக்கிறேன், என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்”

 

ஜோஸ்லின் வேறு சற்று வம்பு பேசும் குறைய குணம் உள்ளவள் போல் தெரிந்தாள்.

 

“அக்கா நெசமாலுமே இந்த பக்கம் காத்து கருப்பு இருக்குது. ஆனா அது எல்லாத்தையுமே அஃபெக்ட் பண்ணாது. சில பேரை மட்டும் தான் பண்ணும். சோபியா வீட்ல ரெண்டு மூணு பேரு இந்த மாதிரி பாதிக்கப்பட்டிருந்தாங்களாம். ஒருவேளை அந்த ராசி தான் இவளுக்கு இருக்குது போல இருக்கு”

 

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ஜோஸ்லின்”

 

“அம்மா தான் சொன்னாங்க. சோபியா இருக்காளே  அவளுக்கு இந்த பயத்திலேயே ரெண்டு தடவை அபார்ஷன் ஆயிடுச்சு. உடனே எங்க அம்மா அவளோட சொந்தக்காரங்க பூராத்தையும் விசாரிச்சுட்டாங்க. அவ தூரத்து சொந்தம் யாரோ ரெண்டு பேருக்கு இந்த மாதிரி இருந்ததாம். இவளுக்கும் அந்த பாதிப்பு இருக்குமோ அப்படின்னு அம்மா பேசிட்டு இருந்தாங்க”

 

“அப்படியா நீ இருக்குறப்பையா இதெல்லாம் சொன்னாங்க. சாதாரணமா வேலையாட்கள் இருக்கும்போது இதெல்லாம் பேச மாட்டாங்களே”

 

“அக்கா நான் என் வசதி வாய்ப்பினால நான் இந்த வீட்ல வேலைக்காரின்னு சொல்லிக்கிறேன். ஆனா உண்மையிலேயே தூரத்து சொந்தம். அம்மா எனக்கு சித்தி முறை ஆகணும். 

எனக்கு தாய்தகப்பன் யாருமில்ல.  ஒரு நாளு அம்மா என்னைய சொந்தக்காரங்க வீட்ல பார்த்தாங்க. சமையல் புடிச்சு போயி வேலைக்கு வான்னு கூட்டிட்டு வந்துட்டாங்க. 

கூட்டிட்டு வந்தாலும் என்னோட ஏழ்மை நிலைமையைப் பாத்து எனக்கு சொந்தம்னு மரியாதையும்  தர முடியல. ஆனா வேலைக்காரியாவும் ட்ரீட் பண்ண முடியல. ரெண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வச்சு கவனிச்சுக்குவாங்க”

 

“ஓ அப்படியா? சொந்தக்காரின்னா நீ சொல்றது உண்மையாத்தான் இருக்கும்.  நீ எதோ சோபியாவுக்கு குறைன்னு சொல்றியா?”

 

“தெரியல அக்கா. ஆனால் சோபியா தினைக்கும் கன்னா பின்னான்னு நைட்டு கத்துது. அத பாத்தேன் இத பாத்தேன்னு சொல்லுது. என் கண்ணுக்கு இதுவரைக்கும் ஒன்னும் தெரிஞ்சது இல்லை. அம்மா அப்பா தம்பி யாரு கண்ணுக்கும் தெரிஞ்சது கிடையாது. ஆனால் ஒரு நாளைக்கு இங்கே வந்து வேறொரு விருந்தாளி பேய்னு கத்துக்கிட்டு பயந்துட்டு ஓடினாங்க” 

 

“நிஜமாவா”

 

“நிஜந்தாங்க்கா. ஆனா நான் ஒண்ணுத்த  நோட்டீஸ் பண்ணி இருக்கேன். வர்ற வழில  ஒரு கல்லறத்  தோட்டம் பார்த்திருப்பீங்களே? அதுல ஏதாவது அகால மரணம் நடந்துச்சுன்னா இந்த பொண்ணு கத்துறது ஜாஸ்தி ஆயிடுது. இன்னைக்கு கூட அங்க விஷம் குடிச்சு செத்துப் போன ஒரு பொண்ணப்  பொதைச்சாங்க. அதனால இன்னைக்கு நைட்டு சோபியாவ கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க”

 

“அப்ப பேய் வந்து அடிக்குதுன்னு சொல்ற” இன்று நக்கலாக கேட்டாள் பாப்பம்மா

 

“சோபியாவும் அதைத்தான் சொல்லுது. உண்மை என்னன்னு அந்த கடவுளுக்கு தான் தெரியும்”

 

நானும் அதை கண்டுபிடிக்க தானே வந்திருக்கேன் என்று நினைத்துக் கொண்ட

பாப்பம்மாவும் வீடு முழுவதும் சோதித்து பார்த்து விட்டாள். ஒரு இடத்தில் கூட வித்தியாசமாக தெரியவில்லை.

 

சோபியாவின் கணவன் கடையை பூட்டி விட்டு 11 மணிக்கு வந்தான் வரும்போது தெரிந்தது களைத்து போய் இருக்கிறான் என்று. வந்ததும் அவனுக்கு தாய் இரவு உணவு பரிமாறினார். அவனோ தட்டை எடுத்துக் கொண்டு சோபியாவிடமே வந்து விட்டான்

 

“சோபியா ரெண்டு வாய் வாங்கிக்கோ” என்ற படி அவளுக்கு ஊட்டி விட்டு விட்டு தானும் அதே தட்டில் சாப்பிட்டுவிட்டு மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

அதன் பின்னர் “சோபியா எனக்கு ரொம்ப தூக்கம் வருது. நாளைக்கு கடையில வேலை அதிகம் நான் தூங்குறேன், நீயும் தூங்குறியா”

 என்று சொல்லிவிட்டு அவன் கிளம்புவதற்கு 12 மணி நெருங்கி விட்டது. பாப்பம்மாவுக்கும் வேலையெல்லாம் முடித்துவிட்டு இங்கு வந்து இவன் கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்ததில் தூக்கம் சொக்க ஆரம்பித்து விட்டது.

 

நள்ளிரவு தன்னை மறந்து நல்ல தூக்கத்தில் இருந்தாள் பாப்பம்மா. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஏதோ ஒரு சத்தம் எழுப்பி விட்டது. என்னமோ ஒரு சங்கடம் அவள் வயிற்றை பிசைந்தது.

 கண்களில் கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள்.  சட சடவென பெய்யும்  மழை போல, அதற்கு நடுவே  மிருகங்களின் உருமலைப்  போலத்  தோன்றியது .

 

அத்துடன் ஏதேதோ சப்தங்கள் மெதுவாக முயன்று எழுந்தாள்.அந்த மங்கலான வெளிச்சத்தில் எங்கிருந்தோ பறவைகள் கத்தும் சத்தம். நாய்களின் ஊளை மற்றும் ஏதோ அழுகுரல்கள் கேட்டன. அவற்றுக்கு நடுவே அந்த சுவற்றின் மூலையில் முதுகைக் காட்டிக்கொண்டு ஏதோ ஒரு உருவம் நின்றது. 

 

அதன் முதுகு ஏறி இறங்கியது. வால் போன்ற ஒன்று நீண்டு இருந்தது. தோல் முதலை போல இருந்தது. அதில் ரத்தம் அப்பியிருந்தது. ஓநாயின் உறுமலுடன்  அந்த உருவம் நின்று கொண்டிருந்தது. அவளது இருதயமே அதனை கண்டு சில்லிட்டு  விட்டது. மெதுவாக அந்த உருவத்தின் கண்களில் இருந்து ஓடி ஒளிந்து முடிந்தால் அந்த வீட்டை விட்டு தப்பிக்க முடியுமா என்று திகைத்துப் போய் பார்த்தாள். ஆனால் அவளது கால்கள் கோந்து போட்டது போல தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டது. பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சடார் என்று அந்த உருவம் திரும்பியது

 

“என்னை சோதிக்க வந்திருக்கியா? ஆமா நான் தான் இங்க இருக்கேன். நான்தான் சோபியாவோட ரெண்டு குழந்தையும் சாப்பிட்டேன். இன்னைக்கு எனக்கு ஒரு புது சாப்பாடு கிடைச்சிருக்கு. இந்த படி கைகளை காண்பித்ததில் அதில் ஏதோ ஒரு மனிதனின் கால்கள் அதன் வாயிலிருந்து ரத்தம் ஒழுகியது. அந்த கோரக்காட்சியைப்  பார்த்த பாப்பம்மா  வீல்  என்று அலறியபடி மயங்கி விழுந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post