Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 12

அறுவடை நாள் – 12

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 12

சோபியாவின் வீட்டிலிருந்து மண்டை குழம்பி வெளியே வந்தனர் விஜயாவும் கிரேசும். 

“இந்தப் பொண்ணுக்கு நீ சொன்ன மாதிரி மனநோயா இருக்குமோ?”

“ஆன்ட்டி க்ரைஸ்ட் மாதிரியான நம்பிக்கைகள் மக்கள் கிட்ட இருக்கு. ஆனால் நம்ம மாதிரி போலீஸ்காரங்க அறிவியல் பூர்வமாத்தானே ஆய்வு செய்யணும். ஒரு வேளை பலமணி நேரம் தனியாவே இருக்குறதால இந்த மாதிரி எண்ணங்கள் இந்தப் பெண்ணுக்கு மனசுல ஏதாவது கோளாறு வந்திருக்குமோ?”

“இருக்கலாம். சரியா இன்வெஸ்டிகேட் பண்ணனும் கிரேஸ். இல்லைன்னா இவளோட உயிருக்கே ஆபத்தாயிரும். பேசாம இன்னும் கொஞ்ச நாள் அம்மா வீட்ல இருக்க சொல்லுங்க”

“அது முடியாதும்மா” என்றார் சோபியாவின் அம்மா.

“திருமணம் முடிஞ்சதும் அவ அவங்க வீட்டுப் பொண்ணாயிட்டா. இனிமேல் கஷ்டமோ நஷ்டமோ அங்கதான் அவ வாழ்க்கை” என்று உறுதியாக சொன்னவரைப் பார்த்து மனதிற்குள்ளே தலையில் அடித்துக்கொண்டார் விஜயா. 

“ஏம்மா பெண் குழந்தைகள் எல்லாம் விற்பனை பொருளா? என்னோட பொண்ணு இனிமே உன்னோடது. நீ அவளை அடிக்கலாம், உதைக்கலாம் என்ன வேணும்னாலும் செய்யலாம். என்ன செஞ்சாலும் உன் காலடியிலேயே அவ கிடப்பான்னு சொல்லாம சொல்றிங்களா?”

“ஒருவகைல அப்படியும் சொல்லலாம்”

“பிரச்சனையே இல்லாத வாழ்க்கைன்னா நீங்க சொல்றது சரி. குழந்தைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டிய தாய்தந்தையே கல்யாணத்தைக் காரணம் சொல்லி கழட்டி விடுறது என்ன நியாயம்? விருந்தும் மருந்தும் மூணு நாள்ன்னு சொல்லி அவங்களை விருந்தாளியாக்கி விரட்டி விடுறிங்களே? இந்தப் பொண்ணு கஷ்டம்னா வேற எங்க போகும்?” விஜயாவும் விடாமல் காட்டமாய் கேள்வி கேட்டார். 

“எங்களுக்கு இவ ஒருத்தி மட்டுமா பிள்ளை. இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்கே. இவ வீட்டில் இருந்தா அவங்களுக்கு எப்படி கல்யாணமாகும்? ஏற்கனவே இவ செஞ்ச பைத்தியக்காரத்தனம் வெளிய தெரியாம மறைக்க நாங்க பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும். 

இங்கபாருங்கம்மா உங்களுக்குப் புண்ணியமா போகட்டும் இனிமே நீங்க இங்க வராதிங்க. என் ரெண்டாவது பொண்ணை அடுத்த வாரம் நிச்சியம் பண்ண  வராங்க. 

இந்த மாதிரி சமயத்தில் சோபியா பைத்தியம் மாதிரி தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணிட்டா. இதை மறைக்கிறதுக்குள்ள எங்களுக்கு  பெரும்பாடா போச்சு. கர்ப்பம் கலைஞ்சுருச்சுன்னு வெளில சொல்லி இருக்கோம். 

இப்ப  போலீஸ்காரங்க அடிக்கடி வீட்டுக்கு வர்றாங்கன்னு தெரிஞ்சா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சந்தேகப் படுவாங்க. கல்யாணம் தடங்கலானா எங்க குடும்பத்துக்கே பெரிய அவமானமாயிரும்”

வெளியே வந்த விஜயா ஒரு பெருமூச்சுவிட்டார். 

“நானும் போலீஸ் வேலைக்கு சேர்ந்து இத்தனை நாள்ல பாத்துட்டேன் மேடம். இந்த பொண்ணுங்க, குடும்ப கவுரவம் இந்த விஷயத்தில், அடிச்சாலும் குடும்ப கவரவத்தைக் காப்பாத்திக்கிட்டு புருஷன் வீட்டுலயே இருக்கணும். இந்த மாதிரி கொள்கைகள் எல்லாம் பாராபட்சம் பார்க்காம எல்லா மதத்திலையும் இருக்கு”

“மதத்தில் இல்ல கிரேஸ். எல்லா மனுசங்ககிட்டயும் ஆழமா பதிஞ்சிருக்கு. ஒரு பொண்ணுக்கு படிக்க வைச்சேன், கல்யாணம் பண்ணி வச்சேன்னு ஊருல பெருமை பீத்திக்கிட்டு திரியுற இந்த பெரிய மனுசனுங்க, அந்த பொண்ணுக்கு தேவையான போது கூட நிக்க மாட்டானுங்க. 

வீட்டுக்காரன் அடிச்சு உதைச்சு கற்பழிச்சு பிஸிக்கல் அபியூஸ், மெண்டல் டார்ச்சர்  செஞ்சா கூட அடிக்கிற கைதான் அணைக்கும், ஆம்பளை சிங்கம் அப்படித்தான் இருப்பான் நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு சொல்லி அதே நரகத்துக்கு அனுப்பும்.  

பைத்தியங்களா…  இப்பத்தாண்டா உங்க சப்போர்ட் அவளுக்கு  தேவை. நீங்க இப்ப ஒழுங்கா ஆதரிச்சு அவளைப் பாத்துக்கிட்டா நாளைக்கு எங்களுக்கு வேலையே இருக்காதுன்னு யாரு இந்த மரமண்டைங்களுக்கு புரிய வைக்கிறது?”

“யாரு மேடம் இந்த மாங்கா மண்டையங்களுக்கு புரிய வைக்கிறது. புள்ளைய படிக்க வைன்னா, அந்தப் பணத்தை வச்சு கல்யாணம் பண்ணித் தந்துருவேன்னு நியாயம் பேசுவானுங்க. உன் வீட்ல நீ சோறு போடுற,  காசைத் தந்து இன்னொருத்தனை கடைசி வரை சோறு போடுன்னு சொல்லுற. பேசாம அந்த துட்டில் உன் மகளைப் படிக்க வச்சா அவளே யாரு கையையும் எதிர்பாக்காம தன்னம்பிக்கையா நிப்பா”

“இதெல்லாம் தலதளபதி படமா எடுத்தா விளங்குமோ என்னமோ. இப்ப சோஃபியாவை எப்படி காப்பாத்துறது. அந்த வீட்டுக்குப் போனா சாத்தான் பிடிச்சுக்கும்னு பினாத்துறாளே. மறுபடியும் தற்கொலை முயற்சி பண்ணா எப்படி காப்பாத்துறது கிரேஸ்?”

என்ன செய்வது என்று புரியாமலேயே கையைப் பிசைந்து கொண்டு  விஜயாவும் கிரேசும் விழிக்கையில்  அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது பாப்பம்மா தான் அது

“மேடம், ஹாஸ்பிடல்ல செமயா மாட்டிக்கிட்டேன்  மேடம்” அவளது குரலில் பதட்டம்.

“பதறாத பாப்பம்மா…  என்ன நடந்துச்சுன்னு விவரமா சொல்லு”

“நீங்களும் அல்லியும் வந்துட்டு போனத சிசிடிவி ல பாத்துட்டு, போலீஸ்காரங்க என்னை விசாரிக்க வந்திருக்கிறதா யாரோ  சீஃப் கிட்ட போட்டு கொடுத்துட்டாங்க போல இருக்கு. அவர் என்னை வரச் சொல்லி இருக்காரு. இப்ப அவரு ரூமுக்கு தான் போயிட்டு இருக்கேன்” குரலில் ஏகப்பட்ட அச்சம். 

இது என்ன புது தலைவலி என்று முகத்தை சுருக்கினார் விஜயா. ஒரு சில வினாடிகள் தான் அதன் பின்னர் “சரி. ஒன்னும் பயப்படாதே. ஏதாவது கேட்டா நான் சொல்ற மாதிரி அப்படியே சொல்லு”

அந்த மருத்துவமனையின் சீஃப் சிங்காரம் பார்வையாலே எரித்து விடுவதைப் போல பாப்பம்மாவை  முறைத்தார். அவர் அருகிலே இருந்த தடியாட்கள் இருவரும் அவரது உத்தரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் வேட்டை நாய்களாய் நின்றிருந்தார்கள். சிங்காரம் ம்ம்  என்று சொன்னால் போதும் பாய்ந்து வந்து பாப்பம்மாவின் கதையை முடித்து விடுவார்கள்.

“அப்ப உன்னை பார்க்க வந்த ரெண்டு பேரும் போலீஸ்தான். அதை நீயே ஒத்துக்கிற. ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல”

“வேலையை விட்டு அனுப்பிடுவிங்களோன்னு  பயந்துட்டேன் சார் மன்னிச்சுக்கோங்க. வீட்ல என்னை நம்பி ஒரு பெரிய குடும்பம் இருக்கு. நான்தான் அவங்களுக்கு சாப்பாடு போடணும்” 

“கதையெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை. அவளுங்க ரெண்டு பேரும் எதுக்கு வந்தாங்க?”

“வந்து, அன்னைக்கு ராத்திரி ஒரு பொண்ணை  அட்மிட் பண்ணாங்கல்ல,  அந்தப் பொண்ணோட  பொருள்களை எல்லாம் எடுத்து லாக்கர்ல வச்சுட்டு இருந்தாங்க. அதுல ஒரு செயின் தவறி விழுந்துருச்சு. அதுதான் இவ்வளவு நகை இருக்கே, ஒரு சின்ன செயினை எடுத்தா தெரியவா போகுது அப்படின்னு எடுத்து வித்துட்டேன் சார்”

“அது சரி, அதுக்கும் போலீஸ்க்கும் என்ன சம்பந்தம்?”

“அந்த நகையை நான் தான் வித்ததுன்னு கடைக்காரன் சொல்லிட்டான் போல இருக்கு. என்னை விசாரிச்சுட்டு இவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க. ஒருவேளை அந்த புள்ள புகார் தந்து இருக்கும் போல இருக்கு”

என்றால் பச்சை புள்ளையைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு.

“நீ என்ன பதில் சொன்ன?”

“கீழ கிடந்தது யாரும் கேக்கல எடுத்து வித்தேன்னு சொன்னேன்”

“ஏன் அப்படி சொன்ன?”

“நிஜம்தான் சார். கீழதான் கிடந்தது”

“நம்ம ஹாஸ்பிடல் பேரை சொன்னியா”

“இல்ல சார் கடைவீதில தரைல கிடந்ததுன்னு சொன்னேன்”

“ஏன் அப்படி சொன்ன”

“ஹாஸ்பிடல் பேரை சொன்னா திருடின்னு சொல்லிடுவாங்களோன்னு பயம்மா இருந்தது”

“சரி நீ போ”

“இந்த வேலையை விட்டு மட்டும் எடுத்துறாதீங்க சார் ரொம்ப கஷ்டப்பட்டுருவேன், நான்  எடுத்தது தப்புதான் வேணும்னா சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமா புடிச்சுக்கோங்க”

“அத நான் பாத்துக்குறேன். நீ கெளம்பு.  உன்னை இங்க வேலையில வச்சிருக்கிறதா வேணாமா நீ யோசிச்சு சொல்றேன்”

அவள் அங்கிருந்து சென்றதும்” யாருடா அந்த பொண்ணு”

 “கொக்கரக்குளத்தில் இருந்து வந்த பொண்ணு”

“நகை எல்லாம் பத்திரமா வைக்கிறது இல்லையாடா… இப்படித்தான் தடயத்தை விட்டு வைப்பீங்களா”

“வழக்கமா ரொம்ப பத்திரமா வைப்போம். நகை எல்லாம் உருக்கி வித்துடுவோம். ஆனா ஒரு சங்கிலி மட்டும் எப்படியோ தவறி போயிடுச்சு. இவ திருட்டுக்கு புதுசு போல இருக்கு அது தெரியாம திருடி வித்துட்டா.

 இப்ப என்ன சார் செய்றது? நமக்கு ஏதாவது பிரச்சனை வருமா? அந்த பொண்ணு வீட்ல இருந்து ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்பாங்களோ…”

“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பொண்ணு காணம்னு கம்ப்ளைன்ட் தர தானே செய்வாங்க. இவ திருட்டு நகைக்காக போலீஸ் விசாரிக்க வந்திருக்காங்க நினைச்சுட்டு இருக்கா. ஆனா காணாம போன பொண்ணத்  தேடி, அவளோட நகையை விசாரிச்சு இருக்காங்கன்னு தெரிஞ்சுதுன்னா நமக்கும் பிரச்சனை வரும் .இவ வாய தொறக்க கூடாது அவங்க கண்லையும் படக்கூடாது”

“பேசாம பாப்பம்மா கதய முடிச்சுடலாமா”

 “இவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா போலிஸ் சந்தேகம் நம்ம பேர்ல தான் திரும்பும். அதனால பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல் எதுலையாவது கொஞ்சம் டிரான்ஸ்பர் பண்ண முடியுதான்னு பாரு. கொஞ்ச நாள் அங்க வேலை பார்த்துட்டு வந்தா இந்த விஷயம் எல்லாம் அமுங்கிடும்”

“சரிங்க சார். உங்கள பாக்க பாஸ்டர் வந்து இருக்காரு”

“என்ன விஷயமா வந்திருக்காரு”

“அவங்க பேத்திய அட்மிட் பண்ணி இருந்தாங்க இல்லையா… சோபியா… தற்கொலை கேஸ்”

“ஆமா,ஆமா அவர வரச் சொல்லு”

பாஸ்டர் உள்ளே நுழைந்ததும் சம்பிரதாயமான விசாரிப்புகள் முடிந்த பின்னர்,

“என் பேத்தியோட உயிரை காப்பாத்தி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி டாக்டர். இப்ப அவள மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பனும். அங்க போறதுக்கே பயப்படுறா. அவ மாமியார் இன்னொரு தடவை தற்கொலை எதுவும் பண்ணிப்பாளோ பயப்படுறாங்க. எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணனும் பண்ணனுமே”

“சொல்லுங்க பாதர்”

“அவ உடல்நிலை தேருற வரைக்கும் உங்க மருத்துவமனையில் இருந்து நர்ஸ் யாரையாவது கொஞ்ச நாள் அவ கூட அனுப்பி வச்சீங்கன்னா உதவியா இருக்கும்.  எங்களுக்கு ரெண்டாவது பொண்ணோட கல்யாண வேலை இருக்கிறதுனால முதல் பொண்ண கவனிக்கறதுக்கு ஆளுங்கள வீட்ல இருந்து அனுப்ப முடியல. அதுவும்  இல்லாம சம்பந்தார் வீட்டில் போய் நம்ம போய் தங்க முடியாதுங்களே… “

சில வினாடிகள் யோசித்தார் சிங்காரம். அதன் பின்னர் “ஒரு லேடி இருக்காங்க. அவங்கள உங்க பேத்தி கூட கொஞ்ச நாள் தங்குறதுக்காக அனுப்பி வைக்கிறேன். ஒரு ரெண்டு மாசம் இருந்தா போதுமா”

“நன்றி டாக்டர். இது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா? ஒரு மூணு மாசத்துக்கு அரேஞ்ச் பண்ணீங்கன்னா நீங்க தரத விட கொஞ்சம் அதிகமா சம்பளம் போட்டு தந்துடறேன்”

“பணமெல்லாம் என்ன ஃபாதர்  உங்களோட ஆசீர்வாதம் எங்க மருத்துவமனைக்கு  இருந்தால் அதுவே போதும்”

பாப்பம்மாவின்  அழைப்பை எதிர்பார்த்து கொஞ்சம் பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்த விஜயா அவள் சொன்ன செய்தியை கேட்டதும் ஆனந்த அதிர்ச்சியாகிவிட்டார்.

“அப்ப நீதான் அந்த சோபியாவை கவனிச்சுக்கப் போற… வாரே  வா…  அங்க போயி எதுனால அந்த பொண்ணுக்கு இந்த மாதிரி நடக்குதுன்னு  கண்டுபிடிக்கணும்ன்னு நினைச்சேன். பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி உன்னையே சிங்காரம் அனுப்ச்சி வச்சிருக்கார் பாத்தியா. சோபியாவை நல்லா கவனிக்கிற, அங்க நடக்குற தகவல் எல்லாத்தையும் என்கிட்ட சொல்ற”

“கண்டிப்பா மேடம்” என்றாள்.

“பரவால்ல அந்தப் பொண்ணோட அம்மா யோசிக்காததை நம்ம பாதிரியார் யோசிச்சிருக்கார்னு நினைக்கும்போது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கு மேடம்” என்றார் கிரேஸ். 

“சரி, கிரேஸ் இந்த திருப்தியோட தென்னாடானைப் பாக்கலாம். மண்டையோட்டு கேஸ் விஷயமா பேச வீட்டில் காத்திருக்காராம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post