Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 8

அறுவடை நாள் – 8

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 8

இரவு பாதி உறங்கி கொண்டிருந்த வேளையில் மொபைலில் அழைப்பு வந்து எழுப்பி விட்டது. 

எப்பொழுதும் தலைமாட்டிலேயே வைத்திருக்கும் மொபைலை விஜயாவின் கைகள் தன்னால் எடுத்தது. 

“தற்கொலை முயற்சியா?”

….

“ காப்பாத்தியாச்சா?”

….

“பிழைச்சாச்சுல்ல… அஞ்சு நிமிஷத்தில் வெளியே நிப்பேன். வண்டியை எடுத்துட்டு வா… “

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு சாதாரண சிந்தட்டிக் சேலையில் விஜயாவும், அப்பாவியாக ஒரு காட்டன் சுடிதாரை போட்டுக்கொண்டு தூக்கம் நிறைந்த கண்களுடன் அல்லியும் வண்டியில் ஏறினர். 

“தூரத்திலேயே நிறுத்திக்கோ… போலீஸ்னு தெரிய வேணாம்”

தனியார் மருத்துவமனைக்கு சற்று தொலைவிலேயே இறங்கி நடந்து உள்ளே சென்றனர். 

“என்ன… “ என்று வரவேற்பறையில் தெனாவெட்டாய் கேட்டான் ஒருவன். 

“டாக்டர் வர சொல்லிருக்காங்க”

“சிங்காரமா?”

“ஆமாம்” என்று சொல்லி வைத்தார். 

“எங்கேயும் நிக்காம மூணாவது மாடிக்கு போய்டணும்” என்று அதிகாரம் செய்தான். 

“யாருடா” என்ற மற்றவனிடம்.

“சிங்காரம் வர சொல்லிருக்காராம்… “ என்றான். 

“என்னது சின்ன பொண்ணுங்க எல்லாம் அடிக்கடி வந்துட்டு போறாங்க…  அது கிழமாச்சே“

“இது வேற விஷயத்துக்கு… இதுக்கு மேல கேக்காதே… “ என்றபடி நகர்ந்தான். 

அவர்கள் பேசியதை துல்லியமாகக் காதில் வாங்கியபடியே… “என்ன நடக்குது அல்லி”

“நிறைய நிழல் வேலை எல்லாம் இங்க நடக்குதாம். ஆனால் புகார் வராம எங்க நடவடிக்கை எடுக்க” சலித்துக் கொண்டாள் அல்லி. 

“இப்ப கூட புகாரா வந்திருக்கு… அனபிசியலா வந்திருக்கோம்”

“அதுவும் நட்ட நடுராத்திரி தூக்கம் முழிச்சு வந்திருக்கோம்.” என்றாள் அல்லியும்.

தங்களுக்கு தகவல் தந்த நபரிடம் குறுஞ்செய்தி அனுப்பி அந்த நபர் தந்த தகவலின் படி ஒதுக்குப்புறமாக இருந்த அறைக்கு சென்றனர். 

“சொல்லு பாப்பாத்தி” 

“மொத்தம் ரெண்டு தற்கொலை முயற்சி கேஸ். ட்ரக் எதுவும் இல்லை. வயித்தை காலி பண்ணி காப்பாத்தியாச்சு. ரெண்டு குடும்பமும் காதும் காதும் வச்சாப்பில டிஸ்சார்ஜ் பண்ணி விடியறதுக்குள்ள கூட்டிட்டு போக பிளான் பண்ணிருக்காங்க. ரெண்டும் சின்னப்பொண்ணுங்க. ஒண்ணுத்துக்கு பதினாறு வயசுதான் ஆச்சு. இன்னொரு பொண்ணுக்கு இருபது இருக்கும்”

வெளியே சென்று பார்த்துவிட்டு “அந்த பெரிய பெண்ணை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க மேடம். இது ரெண்டாவது தற்கொலை முயற்சி அவளுக்கு”

“விலாசத்தை தா பாப்பாத்தி. அல்லி நாளைக்கு கிரேஸை போய் பாத்துட்டு வர சொல்லணும். இன்னொரு பொண்ணு யாரும்மா”

“பாமினி, பதினாறு வயசு”

“பதினாறு வயசில் என்ன தற்கொலை முயற்சி” கடுப்பானார் விஜயா. 

“காதல்… காதல்… காதல்….” 

“அடக்கடவுளே…. பதினாறு வயசில் என்ன காதல் ஊதல். இருக்குற நேரம் படிக்கவே பத்தாது. இதில் காதலிக்க ஏது நேரம் இந்தப் பொண்ணுங்களுக்கு“ தலையில் அடித்துக்கொண்டார். 

“அத்தை மகன், மாமா மகன், பக்கத்து வீடு, எதிர் வீடு…?” அல்லி அடுக்க, 

“செல்லு டிவில வர தறுதலைம்மா” துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதார் பெண்ணின் தகப்பன். 

“காப்பாத்தினது சரி, எப்படி கன்னத்தில் கை பதிஞ்ச தடம் இருக்கு? அடிச்சிங்களா?”

“என் பொண்டாட்டி ஆத்திரத்தில் அடிச்சிட்டாம்மா”

சொந்தக்காரர்கள் போல சென்று நைசாக மிரட்டி பெண்ணின் அப்பாவை ஓரமாக வெளியே டீக்கடை ஒன்றுக்கு இழுத்து வந்துதான் விசாரித்துக் கொண்டிருந்தனர். 

“செல்லு வாங்கித் தந்தா படிக்க முடியும். வீடியோ பாக்கணும்னு சொன்னதால மாட்டை வித்து வாங்கித் தந்தேன். இந்தக் கழுதை அதில் சேனலாமே அதில் பேசுற பையன காதலிக்குதாம். அவனும் காதல் பண்ணுறானாம். ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப் பிளான் பண்ணிட்டு பேங்கு கடனுக்கு கட்ட வச்சிருந்த பணத்தை எடுத்துட்டு கிளம்பிட்டா… 

நாங்க கண்டுபிடிச்சு பஸ்ஸில் ஏறுறதுக்கு மின்னயே தடுத்துட்டோம். அதுனால வீட்டுக்கு வந்து மருந்து குடிச்சுட்டாம்மா… “

“நீங்க சொல்றதை எப்படி நம்புறது? பிள்ளை ஓடிப்போனா குடும்ப மானம் போயிருமேன்னு நினைச்சு நீங்களே மருந்து குடுத்து கொல்ல வாய்ப்பிருக்கே… “ சரியாக பாயிண்டை பிடித்தாள் அல்லி. 

அதில் இருந்த பெரிய ஓட்டையை கண்டுபிடித்தாலும் விஜயா ஒன்றும் சொல்லவில்லை. அல்லியே கண்டு பிடிக்கட்டும். 

“அப்பறம் எதுக்காக நானே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்து காப்பாத்தணும் தாயி?”

நியாயமாகவே பட்டது இருவருக்கும். இருந்தாலும் அவரிடம் ரகசியமாக ஸ்டேட்மென்ட் வாங்கிவிட்டு அந்தப்பெண்ணுக்கும் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்று  புத்தி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். 

அந்த யூடியூப் சேனலில் இருக்கும் பய்யனின் வந்த காணொளிகள் பல பச்சை வார்த்தைகள், நீல வண்ணம், ரெட்டை அர்த்தம் வகையறாக்கள். அது அவனது சேனல் இல்லை. தொகுப்பாளன் மட்டுமே அவன். அதில் இருக்கும் செய்திகள் எல்லாம் பயங்கர கவர்ச்சிகரமான தலைப்பில்தான் இடம் பெறும். அழகியுடன் உல்லாசம், பக்கத்து வீட்டுக்காரருடன் இளம்பெண் ஓட்டம் இதெல்லாம் சில சாம்பிள்கள். 

“அல்லி இந்த குடும்பத்தை கண்காணிப்பிலேயே கொஞ்ச நாள் வச்சிரு ,அந்தப்பொண்ணு ஸ்கூலுக்கு போகும்போதும் வரும்போதும் கண்காணி. அந்தப் பய்யன் தொல்லை கொடுக்காம பாரு”

“ இந்த சேனல் ஏற்கனவே உங்களுக்கு தெரியும்னு சொன்னிங்களே மேடம்”

“ஆமாம் அல்லி. கிளுகிளுப்பா செய்தி போடுவாங்க. ஆனால் பொய்யான செய்தி ஒருதரம் போட்டுட்டாங்க. அதில் எனக்கு பயங்கர வருத்தம்”

“என்ன செய்தி”

“மதுரைல ஒரு கொலை. அம்மாவும் இளைய மகனும் வீட்டில் இருக்குறாங்க. அப்பாவும்  முதல் மகனும் ஊருக்கு போயிருந்தாங்க. இதில் யாரோ உள்ளே புகுந்து வீட்டில் இருந்த ரெண்டு பேரையும் கொன்னுட்டாங்க. 

 

பத்திரிகை தர்மத்தை கடைபிடிக்கிற எல்லா பத்திரிக்கைகளும் கொலை நடந்திருக்கு போலீஸ்காரங்க துப்புத்துலக்குறாங்கன்னு நேர்மையா போட, இவங்க மட்டும்  கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனைக் கொன்ற மகாலச்சுமின்னு செத்து போன அம்மாவோட படத்தைப் பெருசா  போட்டு, அக்கம்பக்கத்து வீட்டில் அதையே உறுதி செய்றாங்கன்னு இவர்களே பொய் சொல்லி கிளுகிளுப்பா ஒரு கதை எழுதி வித்துத் தள்ளிட்டாங்க. 

 

உண்மை என்னான்னா திருட வந்த கும்பல் ஒன்னு அம்மா மகன் அடையாளம் சொல்லிடக் கூடாதுன்னு கொன்னுடுச்சு. இவங்களோ அந்த அப்பாவி பெண்ணை  தப்பான பொம்பளையா முத்திரை குத்திட்டாங்க. இது எவ்வளவு பெரிய அநியாயம். 

உண்மையை பல  பத்திரிக்கைகள் நேர்மையா போட்டாங்க. ஆனால் இவங்க  மறுப்பும் சொல்லல, அவங்க முதலில் சொன்னதைத் திருத்தக் கூட இல்லை. கடுப்பாகி நான் மேலிடம் வரை கொண்டு போய்ட்டேன். அப்பறம் ஆன்லைனில் இருந்து அந்தத் தகவலை எடுத்தாங்க. எதோ அந்த லேடிக்கு என்னால முடிஞ்ச உதவி”

“அப்ப ஏற்கனவே இன்னொரு பஞ்சாயத்தும் ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க”

“சண்டைல கிழியாத சட்டையே இல்லை அல்லி” சிரித்தார். 

“மணி ஏழாச்சு மேம். வீட்டில் போயி குளிச்சுட்டு கனகசபையை பாக்க போகலாம்”

“இந்த மண்டையோடு கேஸ் இருக்கே இந்த மாதிரி கிருத்துவம் புடிச்ச கேஸ நான் பார்த்ததே இல்லை” என்று ஆரம்பித்தார் பாரன்சிக் டிபார்ட்மெண்ட்டில் அந்த கேசுக்கு பொறுப்பான  கனகசபை.

வழக்கமாக, கேஸ்களில் கிடைக்கும் எவிடன்ஸ்களை போலீஸ் டிபார்ட்மெண்ட் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும். பிரச்சினை ஏற்படுத்திய மண்டை ஓட்டினை எடுத்து டேபிளில் பாதுகாப்பாக வைத்துவிட்டு கனகசபை தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்த மண்டையோடு இருக்கே, இது ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற காட்டுப்பகுதியில் ஒரு நாள் அகப்பட்டது. ஊர்க்கார பயலுக யாரோ அந்த பக்கம் போறப்ப அவங்க கால தட்டி விட்டு இருக்கு. அதை கண்டுட்டு போலீஸ்க்கு போன் போட்டுட்டாங்க.

அதே சமயத்துல மண்டையோட்டுக்கு  சொந்தமான உடல் ஒன்று இருக்கணுமே…  அது எங்க? அப்படின்னு சொல்லி சுத்துப் பத்தில்ல ஒரு கிலோ மீட்டர் நல்லா தேடி சலிச்சு போயிட்டோம். 

புதுசா எங்கயாவது குழி தோண்டி இருக்காங்களா அப்படின்னு போலீஸ் தேடி சலிச்சிருச்சு. எதுவுமே எங்க கண்ணுல அம்படல.

 

 இதை சுத்திலும் டிஎன்ஏ எதுவும் எடுத்து ரிசர்ச் பண்றதுக்கு ஒரு துளி சதை, முடி  கிடையாது. மோப்ப நாய் வந்தும் கூட பிரயோசனமில்ல. சுத்தமா எங்களுக்கு லீட் கிடைக்கல. 

எங்களுக்கு கிடைச்சதெல்லாம் ஒரு மட்டையோடு… கழுவி தொடச்சு வச்சாப்புல மழையிலயும் பனியிலையும் நனைஞ்சு சுத்தமா இருக்கிற ஒரு மண்டையோடு மட்டுமே”

“ஆமா சார், கேஸ்ல லீட் எதுவுமே இல்ல அப்படின்னு கிரேஸ் கூட சொல்லிட்டு இருந்தாங்க. இந்த மண்டையோட்டை வச்சு நீங்க ஏதாவது கன்குலூஷன்  வந்திருப்பிங்களே… அது என்னன்னு சொல்ல முடியுமா?”

” இது ஒரு பெண்ணோட மண்டை ஓடு, அது மட்டும் உறுதியா சொல்ல முடியும் அப்புறம் இந்த பொண்ணு இறந்து போயி ஒரு நாலு அஞ்சு வருடங்கள் இருக்கலாம் அப்படின்றது என்னோட கணிப்பு. உடல் பகுதி அம்புட்டுச்சின்னா மேற்கொண்டு எங்களால விசாரணைக்கு உதவ முடியும்”

“நன்றி சார். இது பத்தின கேச நான்  விசாரணைக்கு எடுத்து இருக்கேன். உங்களோட டீம்ல யாராவது கான்டாக்ட் அசைன் பண்ணா வசதியா இருக்கும்”

“இந்த கேஸ் விஷயமா உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் தென்னாடன கேட்டுக்கலாம்”

கனகசபையிடம் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த விஜயா எதில் இருந்து ஹோட்டலில் ஒரு டீயை சொல்லிவிட்டு ” என்னதான் வேக்காடா இருந்தாலும்  டீய குடிக்காம மூளை வேலையே செய்ய மாட்டேங்குது” என்றார்.

“ஆமா மேடம் இன்னும் அஞ்சு நிமிஷத்துல தென்னாடன் வந்துருவான். வெயிட் பண்ண சொல்லி இருக்கான்”

“உன் கிளாஸ்மேட்டா?”

“காலேஜ் மேட் மேடம். என்னோட சீனியர்..  எங்க ஊர்க்கார பையன் தான்”

“சரி, வேலையில் இருக்கும் பொழுது இந்த சீனியர் தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க அப்படிங்கிறத பாக்காம ப்ரொபஷனலா அவரு வேலைக்கு மரியாதை கொடுத்து பேசுவது நல்லது”

“சரி மேடம்”

சிறிது நேரத்தில் வந்த தென்னாடன் அவ்வளவாக உயரம் இல்லை. இருந்தாலும் அந்த கண்ணாடி போட்ட கண்களுக்குள் ஒரு சரியான துறுதுறுப்பு.

“குட் மார்னிங் மேடம்… எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் தென்னாடன். உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. இந்த கேஸ் விஷயமா நீங்களும் அல்லியும் நிறைய பேசினதா சொன்னாங்க. உங்களோட கெஸ்ஸ என்கிட்ட சொன்னீங்கன்னா அந்த கோணத்துலயும் நான் சிந்தித்து பார்ப்பேன்”

“ஆமா மேடம், அல்லியும் நானும் இதை பத்தி நிறைய பேசி இருக்கோம். முதலில் இது ஒரு பெண்ணின் மண்டை ஓடு”

“கனகசபை கூட இது ஒரு லேடியோட ஸ்கல்லா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாரு… சோ, அதே கோணத்துல தான் நாங்க எங்க விசாரணை ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்.

பிராபளம் என்னன்னா,  இந்த ஊர்ல மிஸ்ஸிங் கேஸ் ஜாஸ்தி. அதுல எந்த லேடின்னு எப்படி கண்டுபிடிக்கிறது? டிஎன்ஏ இருந்தா கூட இந்த மிஸ்ஸிங் ஆளுங்களோட டி என் ஏ கூட மேட்ச் பண்ணி பார்க்கலாம் இந்த கேஸ்ல அதுக்கும் வழி இல்ல ஏன்னா வெறும் மண்டை ஓடு மட்டும் தான் கிடைச்சிருக்கு”

“நீங்க சொல்றது சரிதான் மேடம். ஆனா நான் சொல்ற ஒரு தகவல் உங்களுக்கு உதவியா இருக்கும்னு நம்புறேன்”

“சொல்லுங்க தென்னாடன்” சுறுசுறுப்பானார்.

“வழக்கமா ஸ்கல்லை வைத்து ஆணா பெண்ணா அப்படின்னு நாங்க செக் பண்ணும் பொழுது சில மேஜர் சில குறிப்புகள் எல்லாம் கருத்தில் எடுத்துப்போம். அதுல ஒன்னு நெத்தி அமைப்பு. மூக்கு தண்டில், அதாவது கண்ணாடி போடுற இடத்துல இருக்கிற ஸ்கல் ஆண்களுக்கு கூர்மையாகவும் பெண்களுக்கு கொஞ்சம் மொழுக் கட்டையாக இருக்கும்.  கன்னங்களோட கதுப்புகளோட அமைப்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும். 

அதே மாதிரி காதுகளுக்கு கீழ மண்டையோடு ஜாயின் பண்ற இடத்துலயும் வித்தியாசத்தை பார்க்கலாம் இந்த மாதிரி எங்களுக்குன்னு சில கைடு லைன்ஸ் இருக்கு அத வச்சு தான் ஒரு ஸ்கல் ஆணா பெண்ணா அப்படின்னு டிசைட் பண்ணுவோம்”

“ஆமா நானும் கேள்விப்பட்டு இருக்கேன் இந்த மாதிரி குறிப்புகளை வச்சு நீங்க சொல்ற ப்ரடிக்ஷன் 100% சரியாகவே இதுவரைக்கும் இருந்திருக்கு”

“எப்படி ஆண் பெண் அப்படின்னு நாங்க வகைப்படுத்துகிறோமோ அதே மாதிரி ஹியூமன் ரேஸ் ஒவ்வொண்ணுக்கும் ஸ்கல் வித்தியாசப்படும். 

குறிப்பா சொல்லணும்னா மூக்கு அமைப்பு அது ஆசியர்களுக்கு இருக்கும் அமைப்பு மாதிரி ஐரோப்பியர்களுக்கு இருக்காது.ஆப்பிரிக்கர்களுக்கும் இது வித்தியாசமா இருக்கும். அதே மாதிரி கண்ணோட உள் அமைப்பு சதுரமாவும் இல்ல உள்நோக்கியோ வித்தியாசமா இருக்கும்”

பொரி தட்டியது விஜயாவுக்கு “அப்ப இந்த ஸ்கல் ஆசியர்களுக்கு அதாவது இந்தியர்களுக்கு உரியது இல்லை அப்படின்னு சந்தேகப்படுறீங்களா?”

“நூறு சதவீதம் அப்படித்தான் சொல்ல முடியாது. ஆனால் நான் என்னுடைய தியரியோட ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இது ஐரோப்பியர்களுக்கு இருக்கும் ஸ்கல் மாதிரி மனசுக்கு படுது”

“அப்ப இது ஐரோப்பிய பெண்ணோட மண்டையோடா இருக்க சந்தர்ப்பம் இருக்கு இல்ல”

“நான் அப்படித்தான் நினைக்கிறேன் மேடம். ஆனால் ஸ்கல்லை ரேஸை வச்சு இனம் பிரிக்கிறதை நம்ம நாட்டில் இன்னும் அக்செப்ட் பண்ணிக்கல. பட் வெளிநாடுகளில் இந்த ஸ்கல்ல வச்சுட்டு ரேசை கண்டு பிடிக்கிறது சர்வ சாதாரண விஷயம். அது சில கேஸ்ல கோர்ட்டுகளில் அக்சப்ட் கூட பண்ணி இருக்காங்க”

“எதுவுமே இல்லாததுக்கு இந்தத் தகவல் எவ்வளவோ உதவியா இருக்கும் தென்னாடன். 

 இதுக்கு அடுத்து என்ன? எப்படி நம்ம பிரசீட் பண்ணலாம்? இப்ப அந்த ஸ்கல் மேல முகத்தை ரீபில்ட் பண்ற மாதிரி, ரீகன்ஸ்ட்ரக்ட் பண்ற மாதிரியான டெக்னாலஜிஸ் எல்லாம் இருக்கு அப்படின்னு நான் படிச்சிருக்கேன். சோ அந்த மாதிரியான முயற்சிகள் எதுவும் நம்ம இதுல பண்ண முடியுமா?”

“தாராளமா முயற்சி பண்ணி பார்க்கலாம் மேடம்”

“அப்ப அந்த ஸ்டெப்க்கு போகலாம் தென்னாடன். ஒருவேளை அந்த ஸ்கல்ல வச்சு முகத்தை தோரயமா ரீகன்ஸ்ட்ரக்ட் பண்ண முடிஞ்சது என்றால், ரேஸயும் கூட நம்ம கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு. அப்ப உறுதியா இது நம்ம ஊர் பொண்ணா ஐரோப்பிய பொண்ணான் னு தெரிஞ்சிரும்”

“ஓகே மேடம் என் கிளாஸ்மேட் ஒருத்தன் இது சம்பந்தமா ரிசர்ச் பேப்பர் உனக்கு ப்ரெசென்ட் பண்ணி இருக்கான் அவன் கிட்ட இது விஷயமா இன்னைக்கே கலந்து பேசுறேன் உடனடியா இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறேன்”

“ரொம்ப நன்றி தென்னாடன்”

மேலும் சில விவரங்களை பேசிவிட்டு வெளியே வந்த போது இருட்டு அறையில் ஒரு சின்ன அகல் விளக்காய் வெளிச்சம் தெரிந்தது போன்று விஜயா உணர்ந்தார்.

காவல் நிலையத்திலோ அவர் படாத பாடு பட்டு பிடித்த கார் கேஸினை விடுவிக்க வேலை நடந்து கொண்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறுவடை நாள் – 1அறுவடை நாள் – 1

அறுவடை நாள்     அத்தியாயம் – 1   காலை கதிரவன் கண் விழிக்கும் முன், அதற்குப் போட்டியாக தனது வேலையை ஆரம்பித்திருந்தார் விஜயா. ‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்று முணுமுணுத்தபடியே முருகனை வணங்கியவர், சூடாக காய்ச்சிய பாலை