அத்தியாயம் – 22
மாற்றம் மட்டும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். துன்பங்கள் மேகம் சூரியனை மறைப்பது போல வரலாம். அது கடந்து நல்லது நமக்கு நடக்கும் என்பது தீர்மானமென்றால் நடந்தே தீரும் என்பதுதான் சத்தியம்.
விஷ்ணுபிரியா வேண்டாம் என்று முன்னரே சொல்லி இருந்தாலும் பாலாஜி பத்மினி இருவரின் கடிதப் போக்குவரத்தும் தொடர்ந்தது என்பதுதான் நிஜம். அந்த கடிதங்களைப் படிக்கும் நேரம்தான் அவளுக்கு சந்தோஷமான நேரம் என்பதும் மறுப்பதற்கில்லை. அந்த கடிதம் கூட சில நாட்களாக இல்லை. அவனுக்கு தந்த சாப்பாடு திரும்ப வருகிறது.
அது தெரிய வந்தபோது விஷ்ணுப்ரியாவும் பதில் பேசவில்லை. ஏதோ யோசனையோடு “பத்மினி, அந்த பாலாஜியை நீ ஏன் லவ் பண்ணல”
“இது என்ன கேள்வி ஆன்ட்டி. அப்பல்லாம் அப்படி தோணல”
“இப்ப அப்படித் தோணுதா?”
அமைதியாக இருந்தவள் “காதல். நல்ல வாழ்க்கை இதெல்லாம் அமைய ஒரு யோகம் வேணும் ஆன்ட்டி” என்றால் விரக்தியோடு
“ஒரு பேச்சுக்குத்தான் கேக்குறேன். பாலாஜி மாதிரி ஒரு மாப்பிள்ளை உங்க வீட்டில் பார்த்திருந்தா என்ன பண்ணிருப்ப?”
“நானும் அதே பேச்சுக்கே சொல்றேன். சந்தோஷமா குடும்பம் நடத்திருப்பேன் ஆன்ட்டி”
இருவரும் சிரித்தபடி நகர்ந்தார்கள்.
வீட்டினுள் சென்ற விஷ்ணு, ராதாவை போனில் அழைத்தார்.
“என்னம்மா இப்ப கூப்பிட்டிருக்க?”
“அந்த பாலாஜியோட விவரம் தெரியணுமே? உன்னால வாங்கித் தர முடியுமா? முடிஞ்சா அவனை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா?”
“என்ன திடீருன்னு”
“ பத்மினி நிலைமை வலிக்கலையான்னு கேட்டியே. என் மனசு வலிக்கு மருந்து போட ஆரம்பிச்சிருக்கேன்”
அன்று சனிக்கிழமை. பழனியம்மாவின் அலைப்பேசி எண்ணை எப்படியோ வாங்கி வந்திருந்த பத்மினி,
“ஆன்ட்டி, இது பழனியம்மா டீச்சரோட நம்பர். என் போனில் காசில்லை. உங்களோட போனைத் தாங்களேன் என்றாள்”
“ஏண்டி கொஞ்சம் பணத்தை எடுத்து டாப் அப் பண்றதுக்கென்ன? ஆத்திர அவசரத்துக்கு வேண்டாமா? “
“என் கைல பணமே தர்றதில்லை. போனும் டாப் அப் பண்றதில்லை. நான் யாருக்கும் பேசுறதில்லை. அதனால தேவைப்படல”
“சரி, இந்தா போன்”
பாலாஜியிடம் தந்திருந்த எண்ணை அழைத்தவள் “டீச்சர் நான் பத்மினி பேசுறேன். நல்லாருக்கீங்களா”
அவர்களைப் பேச விட்டுவிட்டு அங்கிருந்து குளிக்க சென்றவர், திரும்பியபோது விக்கி விக்கி அழுது கொண்டிருந்த பத்மினியைக் கண்டார்.
“என்னடி என்னாச்சு”
போனை சுட்டிக் காட்டி அழுத்தவளிடம் இருந்து பிடுங்கி, பழனியம்மாவின் என்னை ரீடயல் செய்தார்.
“நான் விஷ்ணுபிரியா. பத்மினிக்கு இன்னொரு அம்மா மாதிரி. அவ ஏன் அழறா?”
“வந்துங்க, பத்மினி அப்பா செத்ததுக்குக் கூட ஏன் வரலன்னு கொஞ்சம் கோச்சுக்கிட்டேன். அப்பத்தான் தெரிஞ்சது அவளுக்கு அவ அப்பா செத்ததே தெரியாதுன்னு. கேட்டு அழுவ ஆரம்பிச்சுட்டா”
அது விஷ்ணுப்ரியாவுக்கே அதிர்ச்சி. எந்த தகப்பனின் மருத்துவ செலவிற்காக இங்கு அடிமையாக விற்கப்பட்டாளோ அவர் இறந்தது கூட இவளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆக பத்மினியை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றி பாலாஜியிடம் சொல்லி ஊருக்கு அனுப்பி விடலாம் என்று நினைத்தால் அவளுடையது சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் கும்பல் போலிருக்கிறது.
“அன்னைக்கு என் நாத்தனார் என்னைக் கூப்பிட வந்தப்ப கூட இப்படி நடந்திருக்கும்னு நினைக்கல. என் மாமியார் வீட்டைப் பாத்துக்க ஆள் வேணும்னு என்னை விட மாட்டேன்னு சொல்லுச்சு.
இவங்களை பத்தி தெரியும். ஆனா எங்க வீட்டில் கூட என்கிட்டே சொல்லலையே ஆண்ட்டி. நான் அந்த அளவு பாவம் செஞ்சவளா?”
கண்கள் கலங்க அவளை அணைத்துக் கொண்டவள், “ராமரைக் கூட தசரதன் கிட்டேருந்து பிரிச்சாங்க. அவர் என்ன குற்றம் செஞ்சாரு?”
சற்று நேரம் அவரது மடியில் படுத்து ஆறுதல் தேடியவளின் முதுகை வருடியவர்.
“பத்மினி, நம்ம வாழ்க்கை பயணத்தில் கடவுள் சிலரை சேர்ப்பார், சில உறவுகளைப் பிரிப்பார். அது எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு பாக்கும்போது நம்ம நல்லதுக்குத்தான்னு உணருவோம்”
போனில் ராதாவை அழைத்தவர் “ராதா உங்கப்பா சொந்தக்காரங்க கல்யாணம்னு ஊருக்குக் கிளம்பி போயிருக்கார். பக்கத்து வீட்டு அகிலா ஹாஸ்பிடலுக்கு டெஸ்ட்டுக்கு போயிருக்கா. வர ராத்திரி ஆயிரும். ஷாமிலிக்கு ஏதோ எண்ட்ரன்ஸ் பரிட்சையாம் பிரசாந்த் கூட்டிட்டு போயிருக்கான்.
முன்னாடியே சொன்ன மாதிரி நானும் பத்மினியும் கிளம்பி வரோம். நான் சொன்ன ஏற்பாட்டைப் பண்ணி வை”
பேசிவிட்டு “பத்மினி கிளம்புடி”
“வீட்ல சொல்லல”
முகம் சிவக்கக் கத்தினார் விஷ்ணு “ஏண்டி அறிவில்லை. ரெண்டு குடும்பமும் உன் சம்மதமில்லாம அடிமையா வச்சிருக்கு. பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு. கிளம்பி வா”
அவ்வளவு நேரம் ஷாக்கில் இருந்த பத்மினி தெளிவுக்கு வந்தாள். போதும் இத்தனை நாளும் அடிமையாக இருந்தது போதும். இனிமேல் இந்த வீட்டில் ஒரு வினாடி கூட இருக்கப் போவதில்லை.
டாக்சி ஒன்றில் கிளம்பி ராதா வீட்டினை வந்தடைந்தனர்.
“பிரசாந்த், தாலி எல்லாம் உன் மனசில் ஓடிக்கிட்டு இருக்குமே” என்றாள் ராதா பத்மினியிடம்.
அவள் பதில் சொல்லவில்லை.
“அம்மா வீட்டுக்கு ஒரு முக்கியமான விருந்தாளி வருவாங்க. அவங்களை கொஞ்சம் கவனிச்சுக்கோ. நான் பத்மினியை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்துடுறேன்.
பத்மினி, இந்தா புது சேலையை கட்டி விடுறேன் வா”
வடநாட்டு பாணியில் கட்டிவிட்டு, முகம் தெரியாமல் தலையில் முந்தானையை முக்காடு போட்டுவிட்டாள்.
“இப்ப எங்கக்கா போறோம்”
“வாயை மூடிட்டு நான் கூட்டிட்டு போற இடத்துக்கு வர்ற. நான் என்ன சொன்னாலும் மறுத்து பேசாத”
மும்பையின் செலவச் செழிப்பான ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பிற்கு சென்றார்கள். அங்கே எட்டாவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள்.
“கோன்” என்று கேட்டபடி வந்து கதவைத் திறந்த பெண்மணி ராதாவைப் பார்த்ததும் முகம் வெளிறிப் போனாள். மேடிட்டு இருந்த அந்த வயிற்றில் ராதாவின் கண்கள் சென்றது.
“நிது டார்லிங் யாரது?” என்று கேட்ட வண்ணம் பிரசாந்த் வந்தான். அந்த வீட்டின் சோபாவில் படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த ஷாமிலியும் கண்ணில் பட்டாள்.
“என்ன பிரஷாந்த் சார். இங்க ஒரு குடும்பம் நடக்குது போல. எங்க பத்மினிக்கு உங்க பதில் என்ன?”
அடுத்து நடந்த நிகழ்வுகள் எல்லாம் சரித்திரம்தான்.
அவ்வளவுதான்… மும்பை வாழ்க்கை முடிந்துவிட்டது. இந்த ஏழு வருட வாழ்க்கை கிட்டத்தட்ட கனவு போலத்தான். என்ன… அந்தக் கனவு வலி நிறைத்ததாகப் போனதுதான் வருத்தம். இந்தப் பயணம் அந்த வலிகளிலிருந்து அவளை விடுத்திருக்கிறது. இனிமேல் அகிலாவின் துணிகளை அலச வேண்டியதில்லை, அவளது அசிங்கம் பிடிச்ச பேச்சுக்கள் எனக்கு மட்டுமில்லை வேறு யார் காதிலும் விழாது. ஷாமிலியின் உதாசீனம் காயப் படுத்தாது. அதற்கு மேல் என்றாவது பார்ட்டிக்களில் குடித்துவிட்டு, இரவு தொம்மென்று மேலே விழும் ஐம்பது வயது பிரஷாந்தின் இம்சை கிடையாது. கணவனுடைய தொடுதல் எப்படி இம்சையாகும்.
யார் சொன்னது ஆகாதென்று… தாம்பத்யம் என்பது வீணையின் இசை போல மென்மையான காதல் ராகமாக மீட்டப்பட வேண்டும். கணவனாக இருந்தாலும் கூட காதல் இல்லாத கலவி மஹா இம்சைதான்.
ஒரு வேளை பாலாஜி மாதிரி ஒரு ஆளா இருந்திருந்தா பிரஷாந்த்தைப் பிடிச்சிருக்கோமோ
காதல்… பாலாஜி… இந்த வார்த்தை அவளது மெல்லிய உணர்வுகளை மீட்டியது. பெண்மனம் பூவினும் மெல்லியது… தவிக்கும் நினைவோ கிள்ளியது…
ஆனால் தாலி கட்டி இழுத்துட்டு வந்ததாலேயே நான் ப்ரஷாந்த்தின் மனைவியா எப்படி மாற முடியும். ஒரு மனைவிக்குத் தேவையான எந்த ஒரு உரிமையும் அன்பும் அந்த வீட்டில் எனக்குக் கிடைச்சதில்லையே. தாலி கட்டினாதால் மட்டும் உடலுக்கும் உணர்வுக்கும் உரிமை கொண்டாடுவது கூட ஒரு வகையில் அடக்குமுறைதான், சர்வாதிகாரம்தான்.
நான் தாலிக்கு மரியாதை தர்றேன். ஆனால் அவனோ அவன் குடும்பமோ தந்தாங்களா? அப்பப்பா அதுவும் பிரஷாந்த்தின் வார்த்தைகள்
‘கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணல அதனால அது செல்லாது. நீ என் பொண்டாட்டின்னு உரிமை கொண்டாடினா இவளை ஊரிலிருந்து எங்கம்மாவுக்கு வேலை செய்றதுக்காகக் கூட்டிட்டு வந்தேன்னு சொல்லுவேன்.
‘அப்ப நான் பண்ணிக்கிட்ட ரெண்டு அபார்ஷன்…’
அதுக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இவ எங்கேயோ போயி கெட்டழிஞ்சதுக்கு நான் காரணமில்லைன்னு சொல்ல அதிக நேரமாகாது. எங்க போனாலும் உனக்குத்தான் சேதாரம் அதிகம்.
பிரஷாந்தின் வார்த்தைகளைக் கேட்டு ஏழைப் பெண்ணால் கண்ணீர் வடிக்கத்தான் முடிந்தது.
‘இதனால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.உனக்குத்தான் பிரச்சனை’ சுலபமாகக் கைகழுவிவிட்டான்.
அவளது எதிர்காலத்தை, வாழ்க்கையை, அன்பை, காதலை பிரஷாந்தின் சுயநலம் பிடித்த குடும்பம் மிச்சம் இல்லாமல் கொள்ளையடித்ததை நினைத்து இதயம் வலித்தது.
என்னவோ நினைத்துக் கொண்டாற்போல அவளது முகம் தெளிவடைந்தது.
“சரி, நானும் இப்ப மாசமா இருக்கேன். ராதாக்கா இது இவரு குழந்தைதான்னு மருத்துவ முறைப்படி நிரூபிக்கலாம்” என்றாள் பத்மினி.
இந்த எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ந்தான் பிரசாந்த்.
என்னடா போன வாரம்தான் அக்கா உங்க சானிட்டரி பேடை நான் எடுத்துக்குறேன். எங்க வீட்டில் இதெல்லாம் வாங்கித் தர மாட்டாங்க என்று சொல்லிவிட்டு வாங்கிச் சென்றாளே? ஓ பத்மினி அதுவா உன் திட்டம், பத்மினி சொன்னதை அப்படியே பிடித்துக் கொண்ட ராதா, “உன் மாமியாரோட வீடு இப்ப ஒரு கோடி பெறும்னு நினைக்கிறேன். நல்ல வக்கீலா பாத்து பேசினா உன் குழந்தைக்கு முப்பது லட்சமாவது வரும். கவலைப்படாதே”
நிதுவின் முகம் இருண்டது. வேகமாக அறைக்குள் சென்று திரும்பியவள் கைகளில் ஒரு குட்டி பை.
“இந்த பையில் அஞ்சு லட்சம் இருக்கு. நாளைக்கு பாங்க்ல டெபாசிட் பண்ண எடுத்து வச்சது. இதை அப்படியே எடுத்துக்கோ. ஆனால் என் இடத்துக்குப் போட்டி போடக் கூடாது”
ஒரு வினாடி யோசித்த பத்மினி. அந்த மூட்டையை எடுத்துக் கொண்டாள். “நீங்க எனக்குப் பண்ண துரோகத்துக்கு இந்தப்பணம் கால்தூசு கூடப் பெறாது. இருந்தாலும் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். இதோ பாரும்மா சத்தியமா இந்த நிமிஷத்தில் இருந்து உன் இடத்துக்கு போட்டியே போட மாட்டேன். இனிமே உன் வீட்டுக்காரரை நீயே வச்சுக்கோ. உன் பொண்ண விட்டுட்டு ஓடிப் போகாத. அப்படியே உன் மாமியாரையும் நீயே பாத்துக்கோ. வாங்கக்கா கிளம்பலாம்” என்ற பத்மினியின் குரலில்தான் எத்தனை உறுதி.
அசந்து போய் அவளைப் பிந்தொடர்ந்தாள் ராதா.
“ராதாக்கா இப்ப எங்க போறோம்”
“வீட்டுக்குத்தான்”
“எனக்கு எங்கேயும் போகப் பிடிக்கலக்கா. என்னை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விடுறிங்களா?”
“என்னடி இப்படி சொல்லுற. எங்க போகப்போற?”
“எங்க வீட்டு ஆளுங்களை பாத்து ஒரு கேள்வி கேட்டுட்டு வந்துடுறேன். கவலைப்படாதிங்க தப்பா ஒன்னும் செஞ்சுக்க மாட்டேன்”
“சரி நீ போட்ட போட்டில் அது புரிஞ்சிருச்சு. எதுக்கும் எங்கம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ”
பத்மினியிடம் பேசிய விஷ்ணு ப்ரியா “பத்மினி உனக்கு இங்கேருந்து கிளம்பி எங்கயாவது போகணும்னு இதயம் சொல்லுதா?”
“ஆமாம் ஆன்ட்டி”
“எனக்கும் இப்படித்தாண்டி இதயம் சொல்லுச்சு. என்னோட 24வது வயசு, ரெண்டு பெண் குழந்தைகள். இதில் இந்த ஊரு பொண்ணு ஒருத்தி கூட உங்க அங்கிளுக்கு பழக்கம். அது தெரிஞ்சப்ப இப்படித்தான் என் மனசு கதறுச்சு. எங்க வீட்டுக்குப் போனேன். போன வேகத்தில் கால்பந்தாட்டம் உதைச்சு இங்கேயே அனுப்பி வச்சாங்க.
ஊரு உலகத்துக்குத் தெரியாம, என் பொண்ணுங்களுக்குக் கூடத் தெரியாம மறைச்சு வெந்ததைத் தின்னு விதியேன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்.”
“ஆண்ட்டி”
“முட்டாள்தனமா எனக்கு பெரியவங்க செஞ்ச மூளைச்சலவையை உனக்கும் செஞ்சிருக்கேன்னு நினைக்கும்போதே கேவலமா இருக்கு.
மனசார சொல்றேன் பத்மினி எனக்கு உன்னை மாதிரி வாழ்க்கையை திருத்தி அமைக்க சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா மாத்திக்குவேன்”
“ஆண்ட்டி”
“உன் வேதனைக்கு இடமாற்றம் ஒரு தெளிவைத் தரலாம். உன் சார்பில் உன் இதயமா மாறி உனக்காக பேசி ஒரு முடிவு எடுத்திருக்கேன். அது உனக்கு சம்மதம்னு தோணினால் எனக்கு கால் பண்றியா?”
“சத்தியம் ஆன்ட்டி”
ட்ரைனில் ஏறி அமர்ந்து கொண்டாள் பத்மினி. ட்ரெயின் கிளம்பும்சமயம். யாரையோ எதிர்பார்த்தது போல பார்த்துக் கொண்டிருந்த ராதாவின் முகம் தெளிவடைந்து.
“பத்மினி ஆல் த பெஸ்ட்” கைகளில் முத்தம் கொடுத்து டாட்டா காட்டி சென்றாள் ராதா.
“ஏம்மா வீட்டுக்கு கூட கூட்டிட்டு வராம ட்ரைன்ல ஏத்தி விடச் சொன்ன?”
“வீட்டுக்கு வந்த பாலாஜிகிட்ட நிலமையை சொல்லி ஸ்டேஷனுக்கு அனுப்பி வச்சிருக்கேன். இது பத்மினி முடிவெடுக்கும் நேரம். இந்த சமயத்தில் நம்ம இருந்தா அதுவே பாலாஜியை அவ வேண்டாம்னு சொல்ல வாய்ப்பா போயிரும்”
“அவகிட்ட போன் கூட இல்லம்மா. எப்படி நம்ம காண்டாக்ட் பண்ணுவா?”
“எல்லாம் பண்ணுவாடி. நீ கிளம்பி வா”
“உனக்கு எப்படி தெரியும்?”
“ராதா ஹிஸ்டரி ரிபீட்ஸ். நடக்கும் சம்பவங்கள் அப்படியே தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஆட்கள்தான் வேற. விஷ்ணு இருந்த சூழ்நிலைல இப்ப பத்மினி இருக்கா. விஷ்ணுவால எடுக்க முடியாத இயலாததை பத்மினி எடுக்கப்போறா”
“அம்மா… உன் வாழ்க்கைல நிறைய ரகசியம் இருக்கு போல… வீட்டுக்கு வந்ததும் சொல்ற “
ஓடிக் கொண்டிருந்த ரயிலில் ஏதோ ஒரு பெட்டியில் ஏறி, பத்மினியின் கம்பார்ட்மெண்டை வந்தடைந்தான் பாலாஜி.
“பத்… பத்மினி”
மூச்சு வாங்க வியர்க்க விறுவிறுக்க தன் முன் வந்து நின்றவனைக் கண்டதும் திகைத்துப் போய் நிமிர்ந்தாள்.
“பாலாஜி…”
சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது… மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
“ம்ம்….”
மூச்சு வாங்குயவன் அதற்க்கு மேல் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து கொண்டான். தன்னை அசுவாசப் படுத்திக் கொண்டவனுக்கு பாட்டிலில் இருந்த நீரைப் பருகத் தந்தாள். ஓடி வந்த களைப்பு நீங்க சற்று இளைப்பாறினான்.
“ரெண்டு மூணு நாளா உங்ககிட்டேருந்து லெட்டர் வரலை. ஊருக்கு போயிட்டிங்களோன்னு நினைச்சேன்” கடைசி வரியில் அவளது குரல் கம்மியது.
காதலை சொல்லத்துடிக்கும் மனதுக்கும், தயங்கி நிற்கும் இதழுக்கும் இடையில் பெரிய போராட்டம் நடந்தது.
“வேலை போயிருச்சு. வேற வேலை தேடி அலைஞ்சுகிட்டிருந்தேன். என்னை ராதா காண்டாக்ட் பண்ணி பேசணும்னு சொன்னாங்க. பதறி அடிச்சு போட்டது போட்டபடி ஓடி அவங்க வீட்டுக்கு வந்தா இங்க அனுப்பி விட்டுட்டாங்க. ஓடி வந்து உன்னைப் பிடிக்கிறதுக்குள்ள பெரும்பாடாயிருச்சு”
அவளுக்காகவா… அவள் கண்களில் நீர் நிறைந்தது. அத்துடன் சிரிப்பும் வந்தது “தாங்க்ஸ்”.
“உனக்கும் அந்த வீட்டுல வேலை போயிருச்சுன்னு கேள்விப்பட்டேன்”
“ம்ம்…”
“இப்ப என்ன செய்யப் போற?”
“மணப்பாறைல நானில்லாம முறுக்கே விக்கலையாம். அதுதான் அங்கேயே போயிடலாம்னு இருக்கேன்.”
“கண்டிப்பா ஊருக்குப் போயாகணுமா”
“இந்த ஊர்ல எனக்கு வேறென்ன வேலை”
விழியோரம் காதல் கசிய அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான்
“இந்த ஊருல ஒரு ராஜா இருக்கான். இப்போதைக்கு ஒத்தைப் படுக்கை அறையோட ஒரு வாடகை வீடுதான் அவன் அரண்மனை . வேலையில்லாத அந்த ராஜாவோட அரண்மனைல அண்டா, குண்டா, அடுப்பு சட்டி, மளிகை எல்லாம் தாராளமா ரெண்டு பேரு புழங்குற அளவுக்கு இருக்கு. அவனோட குட்டி ராஜ்ஜியத்துக்கு நீ மகாராணியா வர சம்மதிச்சா ரொம்ப சந்தோஷப்படுவான்”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவள் மனம் சந்தோஷமாகத் துடித்தது.
அந்தியில் வந்தது சந்திரனோ, சந்திரன் போலொரு இந்திரனோ
முந்தைய நாளினில் என்தனின் முன்பலனோ
விழிகளில் தாமரை மலர அவனை சந்தோஷத் திக்குமுக்காடப் பார்த்தவள்
“நிஜம்மாவா… ட்ரைன்ல போயிட்டிருக்கோம்”
“அதெல்லாம் ஒரு விஷயமா அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கலாம். நீ பதில் சொல்லு”
“என் கைல இருக்குற காசுல வேலையில்லா ராஜாவும் ராணியும் சேர்ந்து கம்பனி ஒன்னு வைக்க சம்மதிச்சா மட்டுமே ராணியா வர சம்மதம்” பிரஷாந்திடம் சண்டை பிடித்து தனக்கென வாங்கித் தந்திருந்த பணத்தை நீட்டினாள்.
“இது…”
” இந்த காசு முன்னாடியே கிடைச்சிருந்தா எங்க அப்பாவுக்கு வைத்தியம் பாத்து இருக்கலாம். ஆனா அப்பா செத்து ரெண்டு மாசமாச்சாம்” கண்களிலிருந்து பொல பொலவென நீர் கொட்டியது.
“ஏம்மா… உனக்கு தகவல் கூட சொல்லலையா”
உதட்டைப் பிதுக்கினாள் “காலைல பழனியம்மா டீச்சர் சொல்லித்தான் தெரிஞ்சது. அம்மா அண்ணன் வீட்ல இருக்கு. இங்கிருந்து பிரஷாந்த் அனுப்புற பணத்துக்காக அண்ணன் வீட்ல வச்சிருக்கான். நான் ஊருக்குப் போயிட்டா பணம் எங்கிருந்து வரும். அதனால பம்பாயிலேயே மூத்த பொண்டாட்டி கைல கால்ல விழுந்து வேலைக்காரியா இருந்துக்கோன்னு சொல்லிட்டாங்க”
” அதுக்காக நியாயம் கேட்க ஊருக்குக் கிளம்பிட்டியாக்கும். வாழ்க்கை உனக்குன்னு என்னென்ன புதையலை வச்சிருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசையில்லையா உனக்கு”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இல்லை. இப்ப நிறையா இருக்கு…” அவள் சொல்லிமுடிப்பதற்கும் ரயில் அடுத்த நிறுத்தத்தில் நிற்பதற்கும் சரியாக இருந்தது.
“இங்கிருந்து பஸ் ஏதாவது பிடிச்சு நம்ம அரண்மனைக்குக் கிளம்பலாமா… அதுக்கு முன்னாடி உங்கம்மாகிட்ட போன் பண்ணி சொல்லிடு”
“உங்க போன் தாங்க. என் போனில் பணம் இல்ல. இருந்திருந்தா எப்பையோ உங்களை கால் பண்ணிருப்பேன்”
பிரஷாந்தை கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அவனது அலைப்பேசியைத் தந்தான்.
“ஆன்ட்டி… ” சந்தோஷம் குமிழிட பேசினாள்.
“ஒரு வேலைக்காரியா வீட்டை வீட்டுக் கிளம்பினவ, மஹாராணியா பாலாஜி வீட்டுக்குப் போய்ட்டு இருக்கேன். எனக்காக பேசிய என் இதயத்துக்கு நன்றி”
பாலாஜி அவளை அழைத்தபோது கடுமையாகத் தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள். “நான் எங்கிருந்தா உனக்கென்ன… பெத்த கடமைக்கு மாசாமாசம் அஞ்சாயிரம் அனுப்பிடுறேன். உனக்கும் எனக்கும் அவ்வளவுதான் தொடர்பு”
போனைப் பிடிங்கிக் கட் செய்தவன்.
“வா… ஊருக்கே சொல்ல வேண்டாமா”
என்ன சொல்லணும்
“ம்ம்…. ஊருக்கே நான் கண்டுபிடிச்ச ராணியைப் பத்தி சொல்லப் போறேன்
கோவில் சிலை போன்ற தலைவி
கோடி கலை கொண்ட மனைவி
தேடி நான் கண்ட துணைவி
தெய்வ வடிவான அருவி
அப்படின்னு”
“யாருகிட்ட…”
அவன் சுட்டிக் காட்டிய திசையில் வேலையை முடித்துவிட்டு டப்பாவாலாக்கள் கும்பலாக நின்றிருந்தார்கள். அதில் வயதானவராக இருந்தவரிடம் அழைத்துச் சென்றான்.
“உங்களில் ஒருத்தராலத்தான் இவை எனக்குக் கிடைச்சா… ஆசீர்வாதம் பண்ணுங்க”
இருவரும் வணங்க அவர் அதை எதிர்பார்க்கவில்லை. பார்த்ததுக் கொண்டிருந்தவன் ஒருவன் தனது வீட்டிற்கென வாங்கி வந்திருந்த இனிப்பு டப்பாவைப் பிரித்து அவரிடம் தர, “நாங்க வீர சிவாஜியோட படைகள். சிவாஜி மஹராஜ் மாதிரி வீரமா பிள்ளைகள் பெத்துக்கோ” இருவரையும் உளமார ஆசீர்வதித்து இனிப்பு வழங்கினார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தனது வீட்டுக்கு செல்லும் பாதையில் பத்மினியுடன் பயணித்துக் கொண்டிருந்தான் பாலாஜி.
கண்ணில் தென்பட்ட போஸ்டரில் எழுதியிருந்ததைப் படித்தாள்
“Sometimes the wrong train will get you to the right station… அப்படின்னா” பாலாஜியிடம் கேட்டாள்.
“சிலசமயம் தப்பா உன் கைக்கு வந்த டிபன் பாக்ஸ் கூட உனக்கு சரியான ராணியைத் தேடித் தரும்னு அர்த்தம்”
ஒரு வினாடி கேட்டுவிட்டு பின் கலகலவென பத்மினி நகைக்கத் தொடங்கினாள்.
நாடிய சொந்தம் உயிராய், உறவாய், நிழலாய் தொடர காதல் அவர்களைச் சுற்றி சுற்றி மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது.
சுபம்
பின் குறிப்பு – மும்பையில் இருப்பவர்கள் லட்சுமி விலாஸ் பத்மலட்சுமி விலாஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும். அங்கே அருமையான தமிழ்நாட்டு உணவு கிடைப்பதாகவும். முக்கியமாக அங்கு கிடைக்கும் மணப்பாறை முறுக்குக்கு தனி மவுசு என்றும் சொல்கிறார்கள். அந்த சுவீட் ஸ்டாலின் நிர்வாகி அமாவாசையின் தொடர்பு எண்ணைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கூட கடையின் முதலாளி மின்னலோனை ப்ரதிலிபியின் ப்ரைவேட் மெசேஜில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். விஷ்ணுப்ரியாவும் ராதாவும் கூட அப்படித்தான் அவனைத் தொடர்பு கொண்டு பத்மினியை ரயில்வே ஸ்டேஷனில் சந்திக்க வழி செய்தார்களாம்.
என்னோட நாள் இன்னைக்கு அழகா போச்சு… ரொம்ப னா தேடின கதை இன்னைக்கு தான் படிச்சேன்… செம… thanks mam…
Wow awesome