அத்தியாயம் – 11
வயிறு நிறைந்த நிமிடத்தில் என்னவோ பாலாஜியின் மனதும் ஒரு சேர நிறைந்தது. அதே நிறைவுடன் வேலையையும் தெம்பாகவே தொடர்ந்தான்.
“பாலாஜி சார் ஊர்லேருந்து யாராவது வந்திருக்காங்களா?” என்று யாரோ வினவ
“இல்லையே… ஏன் கேக்குற”
“முகமே சந்தோஷமா இருக்கு” என்று அவன் பதில் சொன்னதும் வேகமாய் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். சந்தோஷமாய் இருப்பதாகவே தோன்றியது. காரணம் என்னவாயிருக்கும் என்று யோசித்ததில் மதியம் வந்த கடிதமாக மட்டுமே இருக்கும் என்று மனது சொன்னது.
அந்தக் கடிதத்தை மறுமுறை கூடப் படித்துப் பார்க்க வழியில்லாமல் அதன் பின்னாலேயே எழுதி திருப்பி அனுப்பியது என்னவோ போலிருந்தது.
வேகமாய் தனது இருக்கைக்கு வந்தவன் அங்கிருந்த வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கர்மசிரத்தையோடு சிறு சிறு சீட்டுகளாக வெட்டினான். மேஜையில் குவிந்திருந்த பேனாக்களில் நன்றாக எழுதும் எழுதுகோல்கள் இரண்டு அவனது பாக்கெட்டில்.
இனிமேல் கடிதம் வந்தால் இந்த சீட்டுக்களில் மட்டுமே பதில் எழுத வேண்டும் என்று தீர்மானித்த பின்பே அவனால் நிம்மதியாக வேலையைத் தொடர முடிந்தது.
மாலை கேதரி காலி டிபன் பாக்ஸை கொடுத்தபோது சுவாரஸ்யமே இல்லாமல்தான் பெற்றுக் கொண்டாள் பத்மினி. தூக்கிப் பார்த்ததும் எடையில்லாமல் இருந்த டப்பாக்கள் சுத்தமாகக் காலி என்று செய்தி சொல்லியது. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஒரு வழியாக இன்றைய மதிய சாப்பாட்டுப் பொழுது ஓடியது.
பின்புற பால்கனிக்கு சென்று விஷ்ணுப்ரியாவின் தலை பக்கத்து வீட்டில் தென்படுகிறதா என்று பார்த்தாள். தென்படவில்லை ஆனால் அவரது பெண் ராதா வெளியே வந்தாள்.
“பத்மினி எப்படி இருக்க”
“நல்லாருக்கேன்கா… நீங்க எப்ப வந்திங்க”
“இப்பதான்… அம்மாவுக்கு முடியலன்னு அப்பா போன் பண்ணிருந்தார். அதுதான் பெர்மிஷன் போட்டுட்டு வந்தேன். இன்னும் நாலு நாள் அம்மா வீட்லதான்”
“ஆன்ட்டிக்கு இன்னமும் உடம்பு சரியாகலையா… சாதாரண தலைவலின்னு நினைச்சேன்”
“வாரத்துக்கு நாலுநாள் செவ்வாய் வெள்ளி, சஷ்டி, பிரதோஷம், பௌர்ணமி, சங்கடகர சதுர்த்தி, ஏகாதிசி இப்படி தலைக்கு தண்ணி ஊத்திட்டு அப்படியே காயவைக்காம கொண்டையை போட்டுட்டு வெளிய போனால் தலைவலி வராம என்னாகும்… ஸ்வாமிக்கு தர முக்கியத்துவத்தை ஸ்வாமி கொடுத்த உடம்பைப் பாதுகாப்பதிலும் தர வேண்டாமா… “
“அப்ப விரதமெல்லாம் வேண்டாமா…”
“தாயே… என்னை வம்பில் மாட்டி விடாதே… விரதம் பூஜை புனஸ்காரம் எல்லாம் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட உரிமை. அவங்கவங்க மனசு சார்ந்தது… நான் செய்றதுதான் சரி, நீ செய்றது தப்புன்னு அடுத்தவங்களோட நம்பிக்கையை சொல்ற அளவுக்கு முதிர்ச்சி இல்லாதவ இல்லை. ஒரு அக்கறைல உங்க உடல்நிலையையும் சேர்த்து பாத்துக்கோங்கன்னுதான் சொல்றேன்”
“ராதா அங்கென்ன பத்மினிக்கு பாடம் எடுத்துட்டு இருக்க… அம்மா முழுச்சிருவா தோசையும் மாத்திரையும் எடுத்து வை” என்று சந்தானம் குரல் கொடுக்கவும்
“எங்கம்மா கூட அமைதியா இருக்கா… ஆனா அவளை கவனிச்சுக்குறேன்னு எங்கப்பா படுத்துற பாடு இருக்கே…. அப்பறம் பாக்கலாம் பத்மினி” என்றபடி ராதா சென்றுவிட்டாள்.
அடக் கடவுளே இன்னமும் ஆன்ட்டிக்கு உடம்பு சரியாகலையா… இன்னைக்கு ஒரு லெட்டர் எழுதியாச்சு… நாளைக்கு என்ன செய்றது… மனதினுள் புலம்பியபடியே வீட்டினுள் சென்றவளின் காதில் அகிலா ஷாமிலியின் காரசாரமான வாக்குவாதம் விழுந்தது.
“திருட்டுக் கழுதை நீ பண்ற வேலை எல்லாம் தெரியாதுன்னு நினைக்காதே. நான் படுக்கைல விழுந்துட்டேன்னு நினைக்காதடி. நீ எங்க போற என்ன பண்றன்னு கண்காணிச்சிகிட்டேதான் இருக்கேன். என்னை ஏமாத்த நினைச்ச உன்னை கருவறுத்துடுவேன் பாத்துக்கோ” ஆங்காரியாய் கத்திக் கொண்டிருந்தாள் அகிலா.
படுத்த படுக்கையாக இருக்கும்போதே இந்த பாடு படுத்துகிறாளே… இவள் நடமாடும் பொழுது என்னென்ன செய்திருப்பாளோ… ஷாமிலியின் தாய் விவாகரத்து பெற்று சென்றதுக்கு இவளது தேள் கொடுக்கு நாக்குத்தான் காரணமாய் இருக்கும். ஒரு மனிதரை சித்திரவதை செய்யக் கூடிய மிக வலிமையான ஆயுதம் வார்த்தைகள் தான். அதனைப் பயன்படுத்த பலர் தயங்குவதே இல்லை.
ஆள் அரவம் கேட்டதும் படுக்கையில் படுத்தபடியே தலையைத் திருப்பிப் பார்த்தாள் அகிலா. பத்மினியைக் கண்டதும் சம்பாஷணையை ஹிந்தியில் தொடர்ந்தாள். ஆனால் ஷாமிலியின் சிவந்த முகத்தையும், கைகளின் முஷ்டியை அவ்வப்போது இறுக்கியதையும், பல்லைக் கடிப்பதையும் பார்த்து என்னவோ நடந்திருக்கிறது என்பதை பத்மினியால் எளிதாக ஊகிக்க முடிந்தது.
என்னவென்று யாரும் சொல்லப் போவதில்லை. கேட்டு என்ன பிரயோஜனம்… இரவு சமையலை முடித்தாள். தனது அறைக்கு ஷாமிலி சென்ற பின்பும் கூட தகரை கூரையில் பெய்த மழை போல அகிலாவின் பேச்சு தொடர்ந்தது.
அதைக் கேட்டு பத்மினியின் காதே வலிக்க ஆரம்பித்தது. சமையலறையின் கதவை சாத்திவிட்டு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள். எல்லா பாத்திரங்களையும் கழுவி முடித்ததும் மாலை திரும்பி வந்த டிபன்பாக்ஸ் கண்ணில் பட்டது.
காலையில் ஏதோ ஒரு வேகத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டாள். அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அவளால் கணிக்கவே முடியவில்லை. அதனால் அந்த டப்பாவைத் தொடவே பயமாக இருந்தது. அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து இந்த ஏழு வருடங்களில் அவளது மன தைரியமும், உடல் பலமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை அவளால் உணர முடிகிறது. அடி, உதை, திட்டு வாங்கி இந்த செக்கு மாட்டு வாழ்க்கை கூடப் பழகி விட்டதோ.
வாழ்க்கையில் ஒரு முறையாவது பக்கத்து வீட்டு ராதா அக்காவைப் போலக் கணவனுடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்து மும்பையை சுற்றிப் பார்க்க வேண்டும், ஒரு நாள் முழுவதும் திட்டு வாங்காமல் இருக்க வேண்டும். கணவன் தன்னைக் காயப்படுத்தாமல் இதமாக அணுக வேண்டும் இதெல்லாம் அவளது பேராசைகள்.
மனதைத் தேற்றிக் கொண்டு டப்பாவை எடுத்தவள் மிக மெதுவாய் அதனைத் திறந்தாள். சுத்தமாகக் கழுவி வைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் அவளை ஆச்சிரியப்படுத்தியது.
பிரஷாந்த் உண்ணும் போது கூட தட்டை சுற்றிலும் உணவை சிதற அடித்திருப்பான். அதன்பின் அந்தத் தட்டிலேயே கை கழுவுவான். முதல் சில நாட்கள் தண்ணீர் வழியும் எச்சில் பாத்திரங்களை சிங்கில் கழுவப் போட்டு அவன் சாப்பிட்ட உணவை சுத்தம் செய்வது மிகவும் அருவருப்பாகவே இருந்தது. அவனது தொடுதலையே தாங்கிக் கொண்ட அவளுக்கு இந்த எச்சில் பாத்திர அருவருப்பு மிகச் சிறிதாகவே பட்டது.
இன்னொரு முறை பாத்திரத்தைக் கழுவி வைத்தவள் தயக்கத்துடன் பையில் தான் எழுதிய சீட்டு இருக்கிறதா என்று பார்த்தாள். இருந்தது…. அப்ப பிரஷாந்த் பார்க்கவே இல்லையா… நல்லது… பெருமூச்சு விட்டவள் அதனைக் கசக்கப் போனாள்.
ஆனால் கடைசி நிமிடத்தில் வேறொரு நிறத்தில் பேனா மை இருந்ததை மூளை அறிவுறுத்த சற்று தாமதித்தாள். ‘நான் ஊதா பேனாலதானே எழுதினேன் இதென்ன கருப்பு எழுத்து…’ சமையலறையின் மங்கலான மஞ்சள் விளக்குக்குக் கீழ் நின்று அதனைப் படித்தாள்.
‘எனக்கு இந்த சப்பாத்தி ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படியே சமைக்கவும். கேசரியும், புளிசாதமும் மிகப் பிரமாதம். ரொம்ப பசில இருந்த என் வயிறும், மனதும் நிறைந்தது. நன்றி’
முதல் தரம் படித்த போது அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. படிக்கப் படிக்க அவள் மனதில் அதிர்ச்சி… அவள் மனது ஒரு புறம் நம்பியது மறு புறமோ இது நிஜமாகவே பிரஷாந்த் தானா… அவனால் இந்த அளவுக்குத் தன்மையாகப் பேசத் தெரியுமா என்று சந்தேகித்தது.
“பத்மினி” என்று பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து விஷ்ணுப்ரியா அழைத்த குரல் கேட்டு
“ஆன்ட்டி” என்று பதிலளித்தபடி விரைந்தாள்.
“சாரி பத்மினி என்னால இன்னைக்கு ரொட்டி செய்ய ஹெல்ப் பண்ண முடியல”
“ஆன்… ட்…டி..” அவரை அணைத்துக் கொண்டவளின் குரல் உடைந்தது.
“அழறியா என்ன… பத்மினி என்னாச்சு… பிரஷாந்த் திட்டினானா…”
“இல்லை ஆன்ட்டி… இந்தக் கடுதாசியைப் பாருங்களேன்…” அதில் தென்பட்ட எழுத்துக்களைப் பார்க்க முடியாது பத்மினியின் கண்கள் முழுவதும் நீர்.
“எங்க குடு…” வீட்டுக்குள் எடுத்து சென்ற விஷ்ணு வெள்ளேழுத்துக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எழுத்துக் கூட்டிப் படித்தார்.
ஆச்சிரியத்தில் அவரது கண்களும் விரிந்தன.
“உனக்காக இன்னைக்குத்தான் விரதம் இருக்கத் தொடங்கினேன். முதல் நாளே தலைவலி வந்ததேன்னு கவலைல இருந்தேன். அம்பாள் ஏதோ காரணத்துக்காகத்தான் உன்னையே பிரசாதம் செய்ய வச்சிருக்கா… பிரஷாந்த் மனசையும் மாத்திருக்கா பாரேன்”
“அம்மா இங்க என்ன பண்ற.. கொஞ்சம் உடம்பு சரியானா ஒரு இடத்தில் நிக்க மாட்டியா…” திட்டியபடியே வந்தாள் ராதா.
“அடிப்போடி.. பிரஷாந்த் திருந்திட்டான்… நான் கும்மிட்ட சாமி இவளுக்கு நல்ல வழி காமிச்சுடுச்சு”
இதழ்களைக் கேவலமாக வளைத்த ராதா… “சூரியன் மேற்கே தோன்றும்னு சொன்னாக் கூட நம்புவேன் பிரஷாந்தும் அவன் அம்மாவும் திருந்திட்டாங்கன்னு சொன்னா நம்பவே மாட்டேன். பகல் கனவு காணாம போய் ரெண்டு பேரும் ஆகுற வேலையைப் பாருங்க” என்றாள்.
ராதா சொன்னதை பத்மினியின் மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. அந்தக் கடிதத்தை பத்திரமாக சுருக்கத்தை நீவி தனது ட்ரங்க்குப் பெட்டியில் பட்டு சேலைகளுக்கு மத்தியில் வைத்தாள்.
பிரசாத்தின் வருகைக்காக நள்ளிரவிலும் தூக்கம் வழியும் கண்களுடன் காத்திருந்தாள். அவன் வந்ததும் விழுந்தடித்துக் கொண்டு பொருட்களை வாங்கி வைத்தாள். முகத்தை தூக்கம் போக அலம்பிவிட்டு
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா”
“வேண்டாம் வெளில சாப்பிட்டுட்டேன்” கைலியை உடுத்திக் கொண்டு குளியலறையில் புகுந்து விட்டான். அவன் வரும் வரை பொறுத்திருந்தாள்.
“இன்னைக்கு மத்யானம் சாப்பாடு ஒகேயா”
அன்று மதியம் பிரஷாந்த் அலுவலகத்திற்கே செல்லவில்லை. அவன் இல்லையென்றால் சாப்பாட்டை சாப்பிட்டுவிடுமாறு அங்கு வேலை செய்பவனிடம் சொல்லியிருந்தான். அது போல யாராவது சாப்பிட்டிருப்பார்கள்.
“ம்..ம்..” பொத்தாம் பொதுவாக சொன்னான்.
“இனிமே இன்னைக்கு செஞ்ச மாதிரியே சப்பாத்தி செஞ்சு தரட்டுமா… கொஞ்சமா எண்ணை ஊத்தி”
“ம்… ம்…”
“சாலட் பிடிச்சிருந்ததா”
அந்தக் கடிதம் கண்டது முதல் அவனை இனிமேலாவது கணவனாக நினைக்க எண்ணியது அவள் உள்ளம். அதற்கான முயற்சிகளை செய்யத் தொடங்கினாள். ஆனால் பிரஷாந்த்துக்கோ அந்த மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அழகான மனது இல்லை. வள்ளென்று அவளிடம் விழுந்தான்
“ஏண்டி தூங்க மாட்ட… உழைச்சுக் களைச்சு மனுஷன் வந்தா தூங்க விடாம நொய் நொய்ன்னு… ஓங்கி ஒரு அறை விட்டா தெரியும்”
பொங்கிய பாலில் தெளித்த தண்ணீரைப் போல பத்மினியின் மனம் அடங்கியது. கண்கள் கலங்க படுத்துக் கொண்டாள்.
அட பைத்தியமே உனக்கு அவள் சொல்ல வரது கூட புரியல… பத்து நீ சொல்லுறது இந்த எருமைக்கு புரியாது… ஷாமிலி என்ன பண்ணிட்டு இருக்க உனக்கு 17 வயசு ஆகுது இன்னும் கூட உங்க வீட்டு சுழல் புரியலையா
Wow awesome