Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 5

உன் இதயம் பேசுகிறேன் – 5

மாலை தொடங்கியதும் வீட்டை விட்டு வெளியே பத்மினியும், விஷ்ணுப்ரியாவும் கிளம்பினார்கள். பிளாட்டை விட்டுத் தள்ளி கேட்டுக்கு வந்ததும்

“ஒரு நிமிஷம் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு மாலை வெயிலில் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பை அண்ணாந்து பார்த்தாள்.

“என்னாச்சு… வீட்டை விட்டுக் கிளம்ப மனசு வரலையாக்கும். வீட்டுக்குத் திரும்பப் போகலாமா?”

“எப்போதும் வீட்டுக்குள்ள இருந்துதானே வெளிய பாக்குறேன். இன்னைக்கு வெளில நின்னு இந்த அப்பார்ட்மென்ட் எப்படி இருக்குன்னு பாக்கத் தோணுச்சு”

“சொல்லு… தேறுமா…”

“பெரிய கட்டடம்தான். ஆனால் அழுக்கா இருக்கு, அதனால பழசா தெரியுது”

“பழசேதான்… கட்டி இருபத்தி அஞ்சு வருஷமாச்சு. பத்து வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் காசு போட்டு வெள்ளையடிச்சோம். அதுக்கப்பறம் ஒண்ணும்  காணோம்”

“அவ்வளவு பழசா… நல்ல ஸ்திரமாவே இருக்கு”

“அந்தக் காலக் கட்டுமானம் ஓரளவு பரவால்லாம இருக்கும். அந்த சமயத்தில் இது டெவலப்பிங்க் ஏரியா. இங்கதான்  வாங்க முடிஞ்சது. அந்தேரிக்கு பக்கத்தில் இருக்குறது எங்களுக்கு வசதியா இருந்துச்சு. ஊரில் இருந்த வீட்டை வித்து இங்க பிளாட்டை வாங்கினப்ப எல்லாரும் சொந்தக்காரங்க எல்லாரும் இதைப் போலப்  பைத்தியம் உண்டான்னு பாத்தாங்க.

தனி வீடு சவுகரியம்தான். பிளாட்டுன்னா எந்த சுவரும் நம்மளுது இல்லை. வீடு நம்முதுதான் ஒரு அடி கூட நம்ம எதுவும் செய்ய முடியாது. அதுதான் நிதர்சனம். இப்ப என் மகளால இது கூட வாங்க முடியல”

“நிஜம்மாவா ஆன்ட்டி. உங்க பொண்ணுக்கு நாப்பதாயிரம் சம்பளம்னு சொன்னிங்க. வீடு முன்பணம் கட்ட பத்தாதா”

“சம்பளம் மட்டுமா ஏறுது  விலைவாசியும் சேர்ந்தே ஏறுதே. ரெண்டு பேரும் சேர்த்து ஒரு லட்சம் சம்பாரிக்கிறாங்க. வீட்டு வாடகையே முப்பதாயிரம் தர வேண்டியிருக்கு. தள்ளி வீடு பார்த்தா போக்கு வரத்து செலவு, பிரயாணம் செய்யும் நேரம்”

“இந்த முப்பதாயிரத்தை வீட்டுக் கடனா காட்டலாமே”

“கட்டலாம்தான். இந்தப் பக்கம் சுமாரான பிளாட் விலையே ஒரு கோடியை எட்டிடுச்சு. முன்பணத்தை அடிச்சு பிடிச்சுக் காட்டினாலும் மாசா மாசம் ஒரு லட்சம் வீட்டுத் தவணையை  கட்டணும். இவங்க சம்பளத்துல எங்க அதெல்லாம் முடியும்”

” எங்க ஊருல இருபதாயிரம் சம்பாரிச்சா போதும் ராணி மாதிரி வாழலாம்”

“கடனில்லாம சம்பாரிக்கிற இருபதாயிரம்னு சொல்லு”

“உண்மைதான் ஆன்ட்டி. எங்க வீட்டாளுங்களோட அசுர  உழைப்பு வட்டிக்கே போயிடுதே”

இருவரும் பேசியபடியே சிறிய சந்துக்களும், சுண்ணாம்பு காணாத சுவரும், திறந்த சாக்கடைகளை, ஒவ்வொரு தெரு  முனையிலும் பான் பீடா கடைகளும் நிரம்பியிருந்த ஜனசந்தடி மிகுந்திருந்த  பகுதிக்குள் நுழைந்தனர்.

ஒவ்வொரு சிறு வீடுகளிலும் பலர் இருக்க, குப்பைகள் தெருவில் பல இடங்களில் நிறைந்திருக்க, சிறுவர்கள் அதை பொருட்படுத்தாமல் அந்த இடத்திலேயே விளையாடினர்.

பெரியவர்கள் பீடாவை மென்று பார்க்கும் இடத்தில் எல்லாம் துப்பினார்கள். முன்மாதிரியாய் இருக்க வேண்டிய இவர்களே இத்தனை சுத்தன் எனில், இவர்களால் எப்படி இந்தக் குழந்தைகளுக்கு சுத்தத்தை போதிக்க முடியும்.

“க்ளீன் இந்தியா டீம் முதலில் இங்க வந்தாத் தேவலாம்” பத்மினியிடம் முணுமுணுத்தவாறு சாக்கடைக்கு அருகிலிருந்த ஒண்டு குடுத்தனத்திற்கு அழைத்து சென்றார் விஷ்ணுபிரியா.

1890களில் வீட்டு உணவை விரும்பிய பார்ஸி ஒருவர் ஒரு இளைஞனை வேலைக்கு அமர்த்தி தினமும் வீட்டிலிருந்து உணவை எடுத்து வரச்  செய்தார். அது இப்போது 5000 டப்பாவாலாக்கள் இரண்டு லட்சம் உணவுகளை டெலிவர் செய்யும் அளவுக்கு அந்தத் தொழில்  வளர்ந்துள்ளது.

அந்த ஐயாயிரம் தொழிலாளர்களில்  ஒருவன் தான் நாற்பத்தி ஐந்து வயது கேதரி. பூர்வீகம் மும்பைக்கு அருகே இருக்கும் கிராமம். தாத்தா காலத்தில் மும்பைக்கு பிழைப்புத் தேடி வந்தவர்களை உணவுப்பணி அரவணைத்துக் கொண்டது,

பத்து வயதில் படிப்பு மண்டையில் ஏறாது சுற்றிக் கொண்டிருந்த கேதரி பதினைந்தாவது வயதில் டப்பாவாலாவாக வேலைக்கு சேர்ந்தான். முப்பது வருடங்களாக அதையே தொடர்ந்து கொண்டிருக்கிறான். 51 வாரங்கள், வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை, பதினைந்தாயிரம் சம்பளம். பெரிய மனிதர்கள் குடியிருக்கும் அந்தேரியில் ஒரு வீட்டில் மனைவி பணிபுரிகிறாள். அரைநாள் வேலை. ஓரளவு சம்பளம். சில நேரங்களில் கேக் முதலான உணவுப் பொருட்களும் கூட சுவை பார்க்க எடுத்து வருவாள். இவர்கள் இருவரையும் நம்பிப் பிறந்து.  நான்கு குழந்தைகள். இதுதான் அவன் வாழ்க்கை.

வேலையிலிருந்து திரும்பி வந்து குளித்துக் கொண்டிருந்தான்.  அருகிலிருக்கும் துர்கா மந்திர்  செல்லவேண்டும். அதன்பின் தோழன் மங்கிலாலுடன் பான்பீடா கடையில் சந்திப்பு. தோழர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்கு வந்தவுடன் மனைவி எடுத்து வைத்திருக்கும் பெரிய  ரொட்டியையும், மசித்த பருப்பையும் எடுத்து உண்டுவிட்டு ஒற்றை அறை வீட்டில் ஒரு ஓரமாகக் கட்டையை சாய்த்துவிடுவான்.

இன்று அவனது டைம்டேபிளில் மாறுதல். மதராஸி பெண்கள் இருவர் அவளைப் பார்க்க வந்திருக்கின்றனர். அதில் வயதானவள் அறிமுகமானவள் போலிருக்கிறாள். யாராயிருக்கும்  என்று யோசித்தபடி குளித்துவிட்டு வந்தான்.

விஷ்ணுபிரியா கேதரியிடம் தன் கணவருக்கு சாப்பாடு எடுத்து சென்றதை  நினைவூட்டினாள்.

“அச்சா, அச்சா… அந்த பிளாட்டா நினைவிருக்கு. எனக்கு ஆட்களை விட அட்ரஸ்தான் சட்டுனு நினைவுக்கு வரும்… ” காவிப் பற்கள் தெரிய சிரித்தான்.

“உங்க மகனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போகணுமா”

“அதெல்லாம் இல்லை. இந்தப் பொண்ணோட வீட்டுக்காரருக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போகணும். அந்த பிளாட்டில் வீட்டு நம்பர் இருபத்தி நாலு. பக்கத்து வீட்ல வாங்கிட்டுப் போவிங்களே”

“ஆமாம்… நானே வந்து வாங்கிக்கிறேன். அட்ரஸ் தாங்க”

“அட்ரஸ் சொல்லுடி” என்றார் விஷ்ணுபிரியா பத்மினியிடம்.

“வீட்டு அட்ரெஸ்ஸா”

“அது அவனுக்குத் தெரியுதே. ப்ரஷாந்த்தோட ஆபிஸ் அட்ரஸ் சொல்லு”

“அட்ரஸ்… அட்ரஸ் தெரியாதே ஆன்ட்டி”

“அடிப்பாவி அட்ரஸ் தெரியாமயா  வந்த”

“காலைல அவர் கிளம்பினதும்தானே சொன்னாங்க. அதனால கேட்க முடியல. ஆபிஸ் பேரு  கூட எனக்குத்  தெரியாதே” விழித்தாள்.

இரு பெண்களும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த கேதரியிடம்.

“அட்ரஸ் சீட்டை எங்கேயோ போட்டுட்டாளாம். நீ நாளைக்கு வரும்போது இவ வீட்டில் வாங்கிக்கோ. இன்னும் நாலு நாளில் மாசம் பொறக்குது. அன்னைல இருந்து டிபன் வாங்கிட்டு போ”

“சரிம்மா …ஆனால் நாளைக்கு அட்ரஸ் தந்துடுங்க. நான் எங்க ஆபிசில் உங்க விவரங்களை பதியணும்”

அதன்பின் தினமும் உணவு தரவேண்டிய நேரம். பணம் விவரம் எல்லாவற்றையும் சொன்னான்.

“சரிப்பா நாங்க வர்றோம்” என்றபடி குழந்தைகளிடம் வாங்கி வந்த  பழங்களையும் பிஸ்கட்டையும் தந்துவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 5”

  1. மும்பை யோட அடித்தட்டு வாழ்க்கை முறையை கண்கூடாகக் காண முடியுது…உன் சாப்பாடு நல்லா இல்லை சொண்ணவனுகு எதுக்கு இதனை மெனகடல் பத்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 6உன் இதயம் பேசுகிறேன் – 6

அத்தியாயம் – 6  கேதரியின் குடியிருப்பைத் தாண்டியவுடன்     “பத்து மணிக்கு சாப்பாடு ரெடியாக இருக்கணுமாமே. எத்தனை கண்டிப்பா சொல்றான். ஒரு பத்து நிமிஷம் முன்ன பின்ன ஆனால்…”   “முன்ன.. ஆனால் ஓகே. பின்ன ஆனால் கிளம்பிடுவான்”  

உன் இதயம் பேசுகிறேன் – 8உன் இதயம் பேசுகிறேன் – 8

அத்தியாயம் – 8  ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே… பக்து ஜனோம் கி  ஸங்கட் , தாஸு ஜனோம்  கி  ஸங்கட் … பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு,

உன் இதயம் பேசுகிறேன் – 17உன் இதயம் பேசுகிறேன் – 17

அத்தியாயம் 17 பாலாஜிக்கு லட்சுமி விலாசின்  போன் நம்பரை  அழுத்தி அழுத்தி விரல்கள் தேய்ந்தது தான் மிச்சம். மறுமுனையில் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது தவிர யாரும் எடுத்த பாடு இல்லை. ‘சரியான எண் தானே. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு தானே