Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’

அத்தியாயம் – 13

ஊட்டி, குமரேசனின் வீடு. 

“முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு. 

“என்னடா சத்தம் ஓவரா இருக்கு”

“அந்த சஷ்டி கூடெல்லாம் என்னால ரூம் ஷேர் பண்ண முடியாது. அவனை வெளில எங்கயாவது தங்க சொல்லுங்க”

“டேய்… மடபய மகனே… முக்கியமான வேலைடா… சஷ்டி இங்கதான் தங்கியாகணும். மீராவுக்கு நம்ம ஹெல்ப் பண்ணியே ஆகணும்டா”

“மீராவுக்குத் தானே… பக்கத்துல இருக்குதே மீராவோட அப்பா வாங்கின வீடு, அதில் தங்க சொல்லுங்க”

“அதில் எல்லா எக்யூப்மென்ட்சும்  எக்கச்சக்க காசு போட்டு வாங்கி லாஃப் செட் பண்ணிருக்கோம்டா”

“ஹாங் அதுதான் மாடி இருக்குல்ல”

“இருக்கு… ஆனா மாடில மீரா தங்குறாளே”

“இவன் மீராக்கா ப்ராஜெக்ட்டை பண்ணத்தானே வந்திருக்கான். இவனையும்  அங்கேயே தங்கிக்க சொல்லுங்க”

“என்னது, மீரா தங்குற இடத்திலேயே சஷ்டியையும் தங்க வைக்கணுமா? ஹால்ப் பாயில்டு மண்டைய்யா… அறைஞ்சு பல்லைக் கழட்டிடுவேன் படவா. 

சஷ்டி உன் ரூமில்தான் தங்குவான் உனக்குப் பிடிக்கலைன்னா உன் ரூமை சஷ்டிக்குத் தந்துட்டு ஹாலில் படுத்துத் தூங்கு” என்று திட்டிவிடு செல்ல. உர்ரென்று இஞ்சி தின்ற குரங்கு மாதிரி அமர்ந்திருந்தான். 

இரண்டு நிமிடத்தில் ஏதோ நினைவில் வந்தது போல திரும்பி வந்தார் 

“டேய் பிங்கு, உன் லாப் டாப் எங்கிருக்கு”

“என் ரூமில் இருக்கு” என்றான் சலிப்பாக.

“அதை மீராவுக்கு தந்துடு”

“என்னது… “

“ரெண்டு மூணு வாரம்தானடா… நான்தான் அவளோட பொருள் எதுவும் உபயோகிக்க வேண்டாம்னு சொல்லிருக்கேன். ஏதோ டிராக் பண்ணிடுவாங்களாமே”

“ட்ராக் பண்றாங்களா… என்னவோ ராணுவ ரகசியம்… இவர் வேற” முணுமுணுத்தான். 

“இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல மீரா வந்துடுவா. ரூமை ரெடி பண்ணு. நான் கடைக்கு போயிட்டு வந்துடுறேன்” என்று கிளம்பியதும்தான் பிங்குவுக்கு உரைத்தது. 

வாட்ஸப் காலில் ‘அவசரம், மிக மிக அவசரம்’ என்று வந்திருந்த செய்திகளைப் பார்த்து பயந்து போன கண்ணன் பிங்குவை அழைத்தான். 

“என்னடா பிங்கு இத்தனை மண்டை ஓட்டை போட்டு மெசேஜ் அனுப்பிருக்க… என்னாச்சு”

“அண்ணா… மீராவுக்கு என்னோட லாப் டாப்பைத் தரணும்”

“அதுக்கு என்னடா….”

“க்ளீன் பண்ணனும் அண்ணா … ப்ளீஸ் செஞ்சுத் தங்களேன்”

“ஏண்டா டெலீட் பண்ணிடலாம்ல”

“ஊரில் இருக்குற சாப்ட்வேர் கேம்ஸ் எல்லாம் இருக்குன்னா… “

“அதைத்தவிர வேற ஏதாவது இருந்தது உங்கம்மாவைக் கூப்பிட்டுக் காட்டிடுவேன்” மிரட்டினான் கண்ணன். 

“மீரா ஏன் அவளோடதை யூஸ் பண்ணாம உன்னோடதை யூஸ் பண்ணனுமாம்”

“அதைக் கேட்டா அப்பா ஏதோ மீரா ராணுவ ரகசியத்தைக் கண்டு பிடிக்கப் போற மாதிரி ஏகப்பட்ட பில்டப் தர்றார்”

“அப்படி என்னடா ரகசியம்”

“அதுவா… “ என்று பிங்கு சுவாரசியமாக சொல்ல ஆரம்பிக்க, அவன் முடிப்பதற்குள் ரிமோட் பர்மிசனில் அவனது கணினியில் நுழைந்த கண்ணன் லேப்டாப்பில் தேவையானதை மட்டும் வைத்துவிட்டு மற்றதை சுத்தப் படுத்தி இருந்தான். 

“அந்தக் காட்டான் எதுக்குடா இங்க வர்றான்” சஷ்டியைத்தான் அப்படிக் கேட்டான் கண்ணன். 

“என்னமோ அவனுக்குதான் எல்லாம் தெரியுமாம். எங்கப்பா செய்ற வேலைண்ணா இது”

“பிங்கு… இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லடா”

“அந்தக் கொரங்கு வர்றது எனக்கும்தான் பிடிக்கல என்ன செய்றது”

“ஒண்ணே ஒண்ணு செய். அந்தக் கொரங்கு கிட்டேருந்து உங்கண்ணியைக் காப்பாத்து”

“அண்ணியா…”

“ஆமாம் நான் அண்ணன்னா மீரா உனக்கு அண்ணிதானே”

“நீ மீராவை லவ் பண்றியா? எத்தனை நாளா?”

“இப்பத்தான் ஒரு வாரமா… ஆமா, சஷ்டி எப்படி. என்கூட  காம்படிஷனுக்கு வந்துடபோறான்”

“நீ கவலைப்படாதே. அவனுக்கு காதல் சமாச்சாரம் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. நீ தைரியமா இருக்கலாம்”

“இருந்தாலும் நீயும் அவன் கூடவே இருந்து கண்காணிச்சுக்கிட்டே இரு” என்று தம்பியிடம் கட்டளையிட்டான். 

 

ரவு ஊட்டி வந்ததும் 

“என்னடா பிங்கு ஒரு கட்டில்தான் இருக்கு. நீ தரைல படுத்துக்கப் போறியா”

“ஹாங்…. இது என் கட்டில். உனக்கு கிழிஞ்ச கம்பளிப் போர்வையைத் தரைல விரிச்சு வச்சிருக்கேன். போர்வை கூட போன நாலு வருசம் முன்னாடி செத்து போன எங்க தாத்தா உபயோகிச்சது. படுத்து குளிரில் நடுங்கிகிட்டே தூங்கு”

தான் டூர் போகும்போது எடுத்து செல்லும் ஸ்லீப்பிங் பேகை, எடுத்து அதில் காற்றினை அடித்து, சவுரியமான படுக்கையாக மாற்றி அதில் படுத்துக் கொண்டவனை வாயில் ஈ புகுவது கூடத் தெரியாமல் பார்த்தான். 

“உன் ரூமை ரெடி பண்ணி வச்சிருக்குறதா உங்கப்பா போனில் சொன்னாரு. அப்பயே இந்த மாதிரி பிக்காரித்தனமான வேலை எல்லாம் செய்வேன்னு எதிர் பார்த்தேன். 

உன்னையெல்லாம் நான் நம்புறதே இல்லடா… அதுதான் காம்பிங் போறப்ப எடுத்துட்டு போற பெட்டி படுக்கையோட வந்துட்டேன். லைட்டை அணை தூங்கணும்” என்று திரும்பிப் படுத்தவன்தான். 

அடித்துப்போட்டாற்போல் தூங்கினான் சஷ்டி. அறையில் அவனுடன் பிங்கு மனதினுள் திட்டிக்கொண்டே ஒரு வழியாகத் தூங்கி விட்டான். இவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் அடிக்கிற குளிரில் வெளியில் சென்றா படுக்க முடியும்? 

காலை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டு கையில் ஒரு கப்பை நீட்டிய  மீராவிடம் வள்ளென்று விழுந்தான் சஷ்டி. 

“என்ன மீரா விளையாடுறியா… நடுராத்திரி அஞ்சு மணிக்கு எழுப்பினதே அதிகம், கப்பில் என்ன கஷாயத்தை நீட்டுற. இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது… போயி நல்ல ஸ்ட்ராங்க் காப்பி போட்டு எடுத்துட்டு வா… சர்க்கரை தூக்கலா இருக்கட்டும்” 

“காப்பி எல்லாம் கிடையாது சஷ்டி டீதான்”

கப்பை மறுபடியும் பார்த்தவன் அதில் வெறும் தண்ணீர் மட்டும் இருப்பதைக் கண்டு “இது டீயா. பச்சைக் கலர் தண்ணி மாதிரி இருக்கு”

“க்ரீன் டீ”

“க்ரீன் டீன்னா பச்சை கலர்லயே இருக்கணுமா… இதையெல்லாம் நான் குடிக்க முடியாது”

“அப்ப ஒண்ணு பண்ணுறேன். சுடுதண்ணி கொண்டு வரேன். அதில் வேணும்னா வாசத்துக்கு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு எடுத்துட்டு வரேன்”

“இங்க பாரு… உனக்கு டீ போடத் தெரியலைன்னா சொல்லு, ரெண்டு பேருக்கும் சேர்த்து கடைல டீ வாங்கிட்டு வரேன்”

“காலைல அஞ்சு மணிக்கு யாரு கடையைத் திறந்து வச்சிருக்கா”

“திறக்கலைன்னாலும் பரவால்ல, வாசல்லயே நின்னு கடை திறந்ததும் வாங்கிட்டு வர்றேன்”

ஸ்வட்டரை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பியவன் முன்னே வந்து நின்று கொண்டு கண் கலங்கியவள்.

 “சஷ்டி இதெல்லாம் எதுக்காக செய்யுறேன்… உங்க ஸிமல்லிங் சென்ஸை இம்ப்ரூவ் பண்ணத்தானே… நீங்க எவ்வளவு சீக்கிரம் பார்முலாவைக் கண்டுபிடிக்கிறீங்களோ அவ்வளவு சீக்கிரம் காப்பி, டீ போட்டுத்தரேன். உங்களுக்குப் பிடிச்ச ஃபுட் எல்லாம் சமைச்சுத் தரேன்.  அதுவரை ப்ளீஸ்.. கோ ஆப்ரேட் பண்ணுங்க சஷ்டி…” மீராவின் குரல் தழுதழுத்தது. 

பாவி சென்டிமெண்ட் சீன்லயே தாக்குறாளே என்றெண்ணியவண்ணம் “சரி… குளிச்சுட்டு வரேன். வேலையை ஆரம்பிக்கலாம்” என்றான்.

அடுத்த சோதனை காலை உணவில். “மீரா இந்த ப்ரெட் எல்லாம் எங்க வீட்டில் காய்ச்சல் வந்தால்தான் தருவாங்க” என்றான் சஷ்டி வெறுப்போடு

“உலகத்தில் பாதி பேருக்கு மேல இதைத்தான் மூணு வேளையும் சாப்பிடுறாங்க. காய்ச்சல் வந்தால்தான் சாப்பிடுவாங்கன்னு சொல்றது அவங்களை அவமானப் படுத்துறது மாதிரி இருக்கு… அப்படித்தானே அங்கிள்“ குமரேசனையும் கூட்டு சேர்த்துக் கொண்டாள்.

“ ‘இதெல்லாம் எங்க வீட்டில்’… இப்படி சஷ்டி மாமா ஆரம்பிச்சது கொஞ்சம் காசுத் திமிரில் பேசுற மாதிரி இருக்குல்லப்பா” என்றான் பிங்கு. 

“டேய் பிங்கு… படிக்கிற காலத்தில்  உனக்கு அசைன்மெண்ட் செஞ்சுத் தரலைன்னு இப்படிப் பழிவாங்காதடா… “ என்று அவனிடம் பாய்ந்தான் சஷ்டி. 

“சார் சொல்லுங்க சார். நான் அப்படியெல்லாம் பேசுற ஆளா… இந்த பிரட்டு கூட ஒரே ஒரு ஸ்பூன் சட்னி இல்ல எலுமிச்சை ஊறுகாய் தரச் சொல்லுங்க சார்… கம்முன்னு சாப்பிட்டுட்டு வேலை செய்றேன். காலைலேருந்து இந்தப் பொண்ணு என்னைக் கொலைப்பட்டினி போட்டிருக்கு. ஒரு வாயி காப்பி கூடத் தரல… என்னால மிடில சார்”

“சஷ்டி ஒரே பேச்சுதான். இன்னைக்கு வெற்றிகரமா வேலையை ஆரம்பிக்கிறோம். ஒரே வாரத்தில் காம்போசீசனைக் கண்டுபிடிச்சுட்டு பிரியாணியோட கொண்டாடுறோம்” முடிவாய் சொன்னாள் மீரா. 

பிரியாணியை நினைத்துக் கொண்டே சஷ்டி அடுத்த வாரம் காரமான மீன் குழம்பு, சிக்கன் பிரியாணி என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டே அந்த காய்ந்த பிரட்டை கஷ்டப்பட்டு விழுங்கியதைப் பார்த்து பிங்குவுக்கே பரிதாபமாக இருந்தாலும் 

“சஷ்டி இது ஆரம்பம் தான்… முதல்ல ஒரு வாரம் தாக்குப்பிடிக்கிறியான்னு பாக்குறேன். அப்படியே தாக்குபிடிச்சாலும் இன்னும் மூணு வாரத்தில் சேதுமாதிரி உன்னை மாத்தறேன் பாரு… பழிக்குப் பழி, புலிக்குப் புலி” வில்லச் சிரிப்பு சிரித்தான்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’

அத்தியாயம் – 16   இடைவிடாத பயிற்சியால் அடுத்த நாலைந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே யாருக்கும் தெரியவில்லை. சஷ்டி புலிப்பாய்ச்சலில் கற்றுக் கொள்ள , பிங்கு புளிப்பாய்ச்சலில் பின் நடந்துவர , மீரா புழிப் பாய்ச்சலில் அவர்களைப் பிழிந்து எடுத்துக்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 1’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 1’

அத்தியாயம் – 1   ‘டிங் டனாங்க், டிங் டனாங்க்’ என்ற மணி சத்தத்தைக் காதில் கேட்டவாறே அந்தக் கல்லூரியின் காம்பவுண்ட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தது அந்த பிஎம்டபிள்யூ. அப்படியே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த சிறிய பார்க்கிங்கில் லாவகமாக வண்டியை நிறுத்திவிட்டு

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’

ஹோட்டல் அறையில் நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார் குமரேசன். “இது பச்சை துரோகம் அம்மா” கோபத்தில் முகம் சிவக்க வெடித்தாள் மீரா.  “ரேச்சல் அப்பாவுக்கு பிஏ தானே… எப்படி மனைவின்னு கூசாம சொல்றா… உங்க மேரேஜ் சர்டிபிகேட்டை எடுத்துட்டு வந்து