Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 32

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 32

அத்தியாயம் – 32

 

நாகேந்திரன் தனது வீட்டை விட்டு சென்னைக்குப் படிக்க வந்ததே ஒரு கதை. பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பு திக்விஜயம் அனுப்புவதைப் போல இவரை மதராஸ் கல்லூரியில் முதுகலை படிக்க அனுப்பி இருந்தார்கள். அதற்கு ஒரே காரணம் மங்கை இன்னும் திருமண வயதை அடையவில்லை என்பதே. 

 

சில வருடங்களுக்கு  முன்னர், நாகேந்திரன் இளங்கலை படிப்பினைத் தொடங்கிய சமயம், கல்லூரியிலிருந்து இருந்து அழைத்து வரப்பட்டார். 

 

“நாகேந்திரா உனக்கே நல்லா தெரியும் நம்ம என் அண்ணனை நம்பித் தான் இருக்கோம்னு. நாகமங்கலத்தில் இருக்கும் சொத்து எதுவுமே நம்முடையது இல்லை. பிடி மண் கூட இல்லாத, அதாவது ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள் நாம.

 

இதுக்கு யார் காரணம்? எப்படி உங்க அப்பா சொத்தை தொலைச்சாரு? இதெல்லாம் பத்தி இப்ப பேசி பயனில்லை.

 

இப்ப பேச வேண்டிய விஷயம் ஒன்னே ஒன்னு தான். எங்க அண்ணனுக்கு ஆண் வாரிசு இல்லை. அதனால உங்கள்ல ஒருத்தர அவரோட வாரிசா தேர்ந்தெடுக்கணும்னு ஆசைப்படுறார்.

 

மூத்தவன் உடல்நிலை காரணமா  பட்டம் சூட்ட என்னால வற்புறுத்த முடியாது. அது நியாயமும் கிடையாது.

 

ஆனால் என்னோட அண்ணனுக்கு அப்புறம் அவருக்கு வாரிசா இருக்கிற தகுதி உனக்கு இருக்கு. அதை என் அண்ணனும் மனசார ஏத்துக்கிட்டாரு”

 

“மாமாவுக்கு அப்புறம் அவருடைய வாரிசா நானா? அது ரொம்ப பெரிய பொறுப்பும்மா” 

 

நாகேந்திரனின் கண்களின் முன்பு பறந்து விரிந்த பாகமங்கலத்தின் சொத்துக்களும், ராஜ்யத்தை வழி நடத்த வேண்டிய கடமைகளும் விரிந்தது.

 

“வேற வழி இல்ல. இது நாங்க எல்லாரும் கலந்து பேசி எடுத்த முடிவு.

 

இந்த சமயத்துல நான் உன்கிட்ட வேண்டி கேட்டுக்கிறது ஒன்னு தான். என் அண்ணனோட பொண்ணு மங்கையர்க்கரசியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்”

 

“என்னமா சொல்றீங்க? மங்கை சின்ன பொண்ணும்மா….” 

 

“உன்னை நாளைக்கே தாலி கட்டுன்னு சொல்லப் போறது கிடையாது. ஆனால் அவளுக்கு 18 வயசு முடிஞ்சதும் உங்க கல்யாணத்தை நடத்திடுவோம்”

 

அப்பாடி அதுக்கு இன்னும் சில வருடங்கள் இருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நாகேந்திரன்.

 

அவருக்கு மங்கை மேல் விருப்பும் கிடையாது வெறுப்பும் கிடையாது. மிகச்சிறு வயதில் அவளுடன் விளையாடி இருக்கிறார். அப்பொழுது மங்கையும் கூட மிக மிக சிறிய பெண் என்றே சொல்லலாம். 

 

அதன் பின்னர் படிக்கச் சென்று விட்டதால் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பமே குறைந்துவிட்டது. பண்டிகை நாட்களிலோ அல்லது அவர்கள் குடும்ப விழாவின் போதோ, உச்சி முதல் உள்ளங்கால் வரை தங்கத்தில் இழைக்கப்பட்டு, பட்டாடை உடுத்தி வரும் மங்கையின் முகமே அவருக்கு அவ்வளவாக நினைவில்லை.

 

அவளுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இந்த சோதனை எனக்கு மட்டும் தானா? நானாவது வெளியே சிறகடித்துப் பறந்து வருகிறேன். அந்த சிறு பெண்ணோ கூண்டுக்கிளியாக வளர்க்கப்படுகிறாள். 

 

மங்கைக்கு 18 வயதானதும் என்னுடன் திருமணம் என்று என்னிடமாவது அறிவிக்கிறார்கள். ஆனால் அவளுக்கு சாய்ஸே கிடையாது. ஒருநாள் மணவரை இழுத்து வந்து உட்கார வைத்து தாலி கட்டச் சொல்லப் போகிறார்கள். உண்மையிலேயே என்னை விட மங்கை நிலைமை தான் பாவம் என்று நினைத்துக் கொண்டார்.

 

பாகமங்கலம் நாகமங்கலம் குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்வது இயல்பு என்பதால், அவர்களது பழக்கவழக்கங்களை பற்றி நன்றாக அறிந்திருந்ததால், இந்த திருமணம் பற்றிய பேச்சு ஒன்றும் நாகேந்திரனுக்கு வியப்பினைத் தரவில்லை.

 

அவர் மனதில் நினைத்தது ஒன்றுதான் அவரது பெரிய அண்ணன் யுகேந்திரன் உடல்நிலை சரியாக இருந்திருந்தால், அவனை வாரிசாக்கி இருப்பார்கள். அவரது தம்பி மகேந்திரன் கூட இதைப் போன்ற ஒரு பதவியையும் வாழ்க்கையையும் மிகவும் என்ஜாய் பண்ணுவான். தான் நடுவில் இருப்பதால் வேறு வழி இன்றி இந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டேன்.

 

பாகமங்கலம் குடும்பத்திற்கு வாரிசு ஆவதற்கு ஆன முழு தகுதியும் திறமையும் அவரது தம்பி மகேந்திரனுக்கு மட்டுமே உண்டு என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

 

‘ஏம்மா என்னை விட மகேந்திரன் தானம்மா இதுக்கெல்லாம் பொருந்துவான். அவனுக்கு தான் அரசாங்க விஷயங்களில் ஆர்வம் அதிகம். நான் இந்த ஊரிலேயே இல்ல. படிக்கிறேன் என்று வெளியூர் போய்ட்டேன்.அவனோ சின்ன வயசுல இருந்து மாமா கூடவே சுத்திக்கிட்டு இருக்கான்.அதனால அவனுக்கு பட்டம் கட்டினா என்ன?” என்று கேள்வி கேட்டார்

 

“டேய் வாய மூடுடா, உனக்காக பேசி முடிச்ச பொண்ண தம்பிக்குப் பார்க்க சொல்ற…. ஏன், ஊர்ல ஏதாவது பொண்ணு உனக்காக காத்துட்டு இருக்காளா?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் வடிவு.

 

“நீங்க வேற ஏம்மா, எனக்கு நம்ம குடும்பத்தை பத்தி தெரியாதா? காதலிக்க எனக்கு நேரமும் இல்ல. இன்ட்ரஸ்ட்டும் இல்ல. 

 

அதுவும் நம்ம குடும்பத்தை பற்றி தெரிஞ்சா, கூடப் படிக்கிற மாணவர்கள் எல்லாம் என்னை விட்டுப் பத்தடி தள்ளியே நிக்கிறாங்க. அதனால படிக்கும் கல்லூரியில் என்னைப் பத்தின தகவல் யாருக்கும் தெரியாம பார்த்துக்கிறதே பெரும்பாடா இருக்கு”

 

மகனின் வார்த்தைகள் எதிலும் வடிவுக்கு நம்பிக்கை இல்லை. இந்த காலத்துப் பிள்ளைகளை மாதிரி ஏதாவது சேட்டைகளைச் செய்து அவளது அடம்பர அரச வாழ்க்கைக்கு வேட்டு வைத்து விட்டால், அதனை தனது மகனிடம் சொல்லிவிட்டார்.

 

“இந்த காலத்து பசங்களை நம்ப முடியாது. அதனால இனிமே நீ இங்கேயே மாமாவுக்கு துணையா இருந்துக்கோ. வெளியில எங்கேயும் போக வேண்டாம்”

 

அதன்பின் எப்படியோ தாயாரை சம்மதிக்க வைத்து, சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, மேற்படிப்பு படிப்பதற்காக சென்னையில் வந்து தங்கி இருக்கிறார்.

 

அவர் படிக்கும் கல்லூரி கூட பாகமங்கலம் ஜமீனின் நன்கொடையால் நடப்பது தான். முதல்வரிடம் அவர் ஜமீனின் வாரிசு என்று யாருக்கும் தெரியக்கூடாது என்று  அறிவுறுத்தி இருக்கிறார்கள். கல்லூரியைப் பொறுத்தவரை அவர் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை அவ்வளவுதான். 

 

சென்னையிலேயே அடையாறில் ஒரு பங்களாவில், இவருக்கு சமையல் செய்ய, வீட்டு வேலை செய்ய என்று ஆட்களை நியமித்து விட்டுத்தான் அவனது மாமா சென்றிருந்தார்

 

இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் அவருக்கும் மங்கைக்கும் திருமணம் ஆகிவிடும். அதுவரை தான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு துளி சந்தேகம் வந்தால் கூட அவரது அம்மாவும் மற்றவர்களும் குண்டு கட்டாய் தூக்கி பாகமங்கலத்திற்கு சென்று விடுவார்கள்.

 

காலை உணவு சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர்ந்தார் நாகேந்திரன். அவருக்கு வெள்ளி தட்டில் மூன்று நான்கு வகை உணவுகள் பரிமாறப்பட்டன. அதில் கருப்பாக அரிசியில் செய்த ஒரு இனிப்பு.அ தனை கார் அரிசி அல்லது கவுனி அரிசி என்று சொல்வார்கள்.

 

அந்த அரிசிக்கு மற்றொரு பெயர் அரசன் அரிசி. ஏனென்றால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மட்டும்தான் அந்த அரிசியில் செய்த உணவு சாப்பிட வேண்டும் என்ற ஒரு சட்டம் முன்னொரு காலத்தில் இருந்ததாம். அந்த அளவுக்கு பலமும் சக்தியும் நிறைந்தது.

 

இரவு முழுவதும் கவுனி அரிசியை ஊற வைத்து, மண்சட்டியில் சோறாக வடித்து, அதில் நாட்டுச் சக்கரையும் நல்லெண்ணையும் கலந்து வைத்திருந்தான் சமையல்காரன். 

 

பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சில வகை உணவுகளை அவர்கள் குடும்பத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதில் ஒரு 15 வகைநாட்டு ரக அரிசிகளும் உண்டு. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார் போல் அந்தந்த அரிசியில் உணவு சமைத்து வழங்கப்படும்.

 

உடல் நிலையை சீராக, பலமாக வைத்திருக்க வேண்டும். பலமான வாரிசுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதெல்லாம் ராஜ குடும்பத்தில் எழுதப்படாத சட்டங்கள்.

 

இவர்களெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.வெளிநாட்டை சேர்ந்த சில அரச குடும்பங்களில் கடல் உணவு சாப்பிட கூடாது, உடுத்தும் உடைகளில் கூட எவ்வளவு குளிராக இருந்தாலும் சிறுவர்கள் அரைக்கால் டவுசரும் சிறுமிகள் ஸ்கர்ட் அல்லது கவுன் வகை உடைகளை மட்டுமே உடுத்த வேண்டும்.

 

ராஜ வாழ்க்கை என்றால் முள் படுக்கையா என்று கேட்டால் அதுதான் இல்லை. தங்க நகை உறுத்துகிறது என்று யாராவது அணியாமல் இருக்கிறோமா?  கத்திரி வெயில் என்று விழாவிற்கு பட்டாடை உடுத்தாமல் இருக்கிறோமா? 

 

பணமும், புகழும், மரியாதையும் ஒரு போதை. ஒரு முறை சுவைத்து விட்டால் வாழ்க்கையில் அதிலிருந்து விடுபடவே முடியாதுதான். அதே போன்ற ஒரு சூழலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் முயல்கிறார். இருந்தாலும் விதி விடவில்லையே

 

தனக்குள் பேசிக் கொண்டே கல்லூரியை வந்தடைந்தார். காரினை பார்க் செய்தபோது தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் வழக்கம் போலவே ஏற்பட்டது.

 

சில மாதங்களாகவே அடிக்கடி இப்படித்தான் தோன்றுகிறது. அதுவும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த நிமிடங்களில் இருந்துதன்னை யாரோ கண்காணிப்பது போன்ற ஒரு உணர்வு. உற்றுப் பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் அவரைப் படுத்துகிறது.

 

 என்னைக்  கண்காணிக்க மாமா யாரையாவது ஏற்பாடு செய்திருப்பாரோ? இருக்கலாம், எனது பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருப்பார்.

 

மனதினை சமாதானப்படுத்திக் கொண்டே தனது வகுப்பறைக்கு சென்றார். ஒருவேளை நாகேந்திரன் சற்று உன்னிப்பாக கவனித்துப்  பார்த்திருந்தால் மந்தாகினி மறைந்திருந்து அவரையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டிருப்பார்

 

நாகேந்திரன் வகுப்பறைக்குள் சென்றதும் தூணுக்கு மறைவில் நின்ற மந்தாகினியும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு லைப்ரரி பக்கம் நகர்ந்தாள்.

 

“அவன் எட்டாக்கனி மந்தாகினி. உனது ஆசையை அழித்துவிடு” என்று சொல்லிய வண்ணம் அவள் முன்னே அமர்ந்தான் அவளது சீனியர் சுதர்சன்.

 

சுதர்சனின் தந்தை ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அவர் பதவி தந்த தைரியத்திலேயே முதல் வருட மாணவர்களை ராக்கிங் செய்வான். சில சமயம் அது எல்லை மீறியே இருக்கும்

 

மந்தாகினி முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்த போது, ஒருநாள் சுதர்சனிடம் வகையாகச் சிக்கிக் கொண்டாள். அவளை, பெட்டிக்கடையில் சென்று சிகரெட் வாங்கி வரச் சொன்னான்.

 

பயத்தில் வியர்த்து விறுவிறுத்து கடைக்குச் சென்று தொண்டை அடைக்க “அண்ணா, ஒரு சிகரெட் பாக்கெட்” என்று சொல்வதற்குள் அவள் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.

 

அப்போதுதான் பக்கத்தில் இருந்த நாகேந்திரன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

 

“யாராவது உன்னை வாங்கிட்டு வர சொன்னாங்களாம்மா?” என்று கேட்டான்.

 

ஆமாம் என்று பயந்து கொண்டே கண்களால் அந்த கும்பலைப் பார்த்தாள்.

 

“நீ போ… நான் பாத்துக்குறேன்” என்றபடி அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு ராகிங் கும்பல் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.

 

இன்னொரு பெண்ணை இழுத்து நிற்க வைத்து ‘நேத்து ராத்திரி அம்மா’  பாட்டை அதே ஹஸ்கி வாய்ஸில்  பாடச்  சொல்லி டார்ச்சர் செய்து கொண்டிருந்தான் சுதர்சன்.

 

“என்ன பிளாட்டா பாடுற? நடுவுல சங்கதி ஏதும் காணம். சிணுங்கல் வரணுமே” என்று சீண்ட, அந்தப் பெண் ஓ என்று அழுதது.

 

இதனைப் பார்த்தவுடன் நாகேந்திரனின் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. அந்தப் பெண் அழுவதை பார்த்து உரக்க சிரித்த சுதர்சனின் கன்னத்தில் இடி ஒன்று இறங்கியதைப் போன்று இருந்தது

 

“பெண்கள் கிட்ட நடந்துக்கிற முறையா இது? இன்னொரு முறை இந்த மாதிரி கேவலமான காரியத்தை செஞ்ச… அந்த இடத்திலேயே வெட்டிப் பொதைச்சிடுவேன்” கர்ச்சித்து விட்டு சென்றார் நாகேந்திரன்.

 

மாணவர்கள் முன்பு அடிவாங்கிய அவமானத்தை சுதர்சனால்  தாங்க முடியவில்லை. தனது தந்தையின் வழியாக கல்லூரி முதல்வரிடம் புகாரினை எடுத்துச் சென்றான். நாகேந்திரனை கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றார் அவனது தந்தை.

 

ஒரு நாள் தந்தை மகன் இருவரையும்  தனியாகப் பேச அழைத்தார் முதல்வர். 

 

“உங்க பையன் செஞ்சது பெரிய தப்புங்க. அதுக்காக அவனை வேணா டிஸ்மிஸ் செய்யலாம். ஆனா நாகேந்திரன் மேல கையே வைக்க முடியாது”

 

“அதெப்படிங்க எல்லாரு முன்னாடியும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி மகனைக் கை நீட்டிருக்கான். சுதர்சன் தப்பு செஞ்சிருந்தா, உங்க மூலமா என்கிட்டத்தானே கொண்டு வந்திருக்கணும். அதை விட்டுட்டு மாணவர்கள் முன்னாடி அடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்? என் மகன் அவமானப்பட்ட மாதிரியே அவனும் அசிங்கப்பட்டு இந்தக் கல்லூரியை விட்டே ஓடணும்”

 

 “சார் நீங்க சொன்னது ஒரு விதத்தில் நியாயம். ஆனால் என் நியாயத்தையும் புரிஞ்சுக்கோங்க” குரலைத்  தணித்தார். 

 

“இந்தக் கல்லூரியே அவரோடது தான். வெளியே தெரிஞ்சா மாணவர்கள் கூட இயல்பா கலந்து பழக முடியாதுன்னு யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு கேட்டிருக்கார்.

 

அவர் கல்லூரியில் படிக்கிற பிள்ளைங்க கிட்ட சுதர்சன் முறை இல்லாமல் நடந்ததுனால அவர் கண்டித்தார். இதில் என்ன தப்பு இருக்கு சொல்லுங்க? அந்தப் பொண்ணுங்க கம்பளைண்ட் தந்தா உங்க மகன் எதிர்காலம் என்னாகும் நினைச்சுப் பாருங்க”

 

அதன்பின் சுதர்சனின் அப்பா அமைதியாக அவனை இழுத்துக்கொண்டு வந்து விட்டார். 

 

சில நாட்களுக்குப் பின் அவர் சொன்ன விஷயங்கள் உண்மை என்று அறிந்து கொண்டு, கல்லூரிக்கு செல்லாமல் இருந்த  மகனைக் கண்டித்தார். 

 

“ஒழுங்கா வாய மூடிட்டு டிகிரி வாங்கிட்டு வீட்டுக்கு வா. பெரிய மனுஷங்களை எல்லாம் பகைச்சுக்க கூடாது சுதர்சன். உன்னை ஒரு பெரிய போலீஸ் அதிகாரி ஆகணும்னு கனவு கண்டிட்டு இருக்கேன். சில்ரத்தனமான வேலை செஞ்சு அந்த கனவக்  கெடுத்துறாதே”

 

அப்போதைக்கு கோபத்தீ அணைந்தது போல் தோன்றினாலும், பகை என்ற நெருப்பு சுதர்சனின் மனதில் கங்காய் கனன்று கொண்டிருந்தது. 

 

அவன் ஒரு தலையாய் காதலித்த  மந்தாகினி நாகேந்திரனை விரும்பியதைக்  கண்டதும் குரோதம் பெருகியது.

 

“நிஜமா தான் சொல்றேன் மந்தாகினி.  ஒவ்வொரு வருடமும் பீஸ் கட்டவே திணறுற குடும்பம் உன்னுடையது. இந்த கல்லூரியையே வச்சு நடத்துற குடும்பம் நாகேந்திரனோடது. அதனால தான் சொல்றேன் ஆசையை இப்பவே அழிச்சிடு” 

 

நாகேந்திரன் ஜமீன்  குடும்பம் என்பதை அப்போதும் தனது வாயால் பிரகடனம் செய்ய விரும்பவில்லை அவன். 

 

“எங்களை இணைக்கிற பாலமா அன்பும் காதலும் இருக்கும் பொழுது இந்த ஸ்டேட்டஸ் வித்தியாசம் எல்லாம் மறைந்துவிடும் சுதர்சன்” என்று அவனது வயிற்றெரிச்சலில் ஆசிட் ஊற்றினாள்.

 

“என்ன சொல்ற? நீயும் நாகேந்திரனும் காதலிக்கிறீங்களா? உன்ன அவன் திரும்பி கூட பாக்க மாட்டேங்குறான்”

 

“நீங்களே சொன்னிங்க  இல்லையா? அவ்ளோ பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், எல்லாருக்கும் தெரிகிற மாதிரி வெளிப்படையா காட்டினா அவங்க வீட்டில் எங்க காதலுக்கே சமாதி கட்டிடுவாங்க. அதனால வெளியே தெரியாமல் பார்த்துக்கிறோம்”

 

சுதர்சனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் ஓரளவாவது உண்மையாக இருக்க வேண்டும் என்று அவன் மனது ஓர் ஓரத்தில் சொன்னது. ஏனென்றால் நாகேந்திரனின் வீடு இருக்கும் அடையாறு பக்கம் சில முறை மந்தாகினியைப் பார்த்திருக்கிறான்.

 

என் வாழ்க்கையில் வந்த மிகப்பெரிய வில்லன் நாகேந்திரன். ‘டேய் ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைச்சது, உன்னைப் பழி வாங்காம விட மாட்டேன் டா’

அவன் மனதினுள் கறுவிக் கொண்டான்.

3 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 32”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

அத்தியாயம் – 11   இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?    யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38

அத்தியாயம் – 38 சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது.  “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினாலேயே கொஞ்சம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27

அத்தியாயம் – 27 அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும்  பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அவனின் பயம், அச்சம் எல்லாம் ஓட ஓட