3
“என்னது? நான் மன்னிப்பு கேட்கணுமா? என்னம்மா இது சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு. அந்த ஆளு எனக்கு துரோகம் பண்ணிருக்கான். நல்லா சேர்லயே அடிச்சு அவனை அந்த இடத்திலேயே கொன்னுட்டு இங்க வந்து தண்டனை கூட வாங்கிருந்திருக்கலாம். ஆனால் இது என்ன கேனத்தனமான ஒரு ரூல்”
“அப்படியெல்லாம் பேசக் கூடாது”
“அப்ப, புருசன் துரோகம் செஞ்சா கூட நாங்க எதிர்த்து குரல் கொடுக்க கூடாது?”
“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன். மூக்கு முட்ட ஃபுல்லா குடிச்சிட்டு வந்து உன்ன விடிய விடிய அடிச்சு கால ஒடச்சாலும் புருஷன் புருஷன் தான்.
‘வீட்டுக்காரன் சொன்னா ரெண்டும் ரெண்டும் மூணு’ இந்த மாதிரி பழமொழி எல்லாம் உங்களை எஜுகேட் பண்ணத்தானே பூலோகத்தில் சொல்லி வச்சிருக்கோம்,
போன வாரம் தாய்லாந்தில் ஒரு பத்தினித் தெய்வம் தன்னோட கணவனுக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் வேணும்னு விளம்பரம் கொடுத்து தேர்ந்து எடுத்திருக்கா. தினமும் செய்தித் தாளெல்லாம் படிக்கிறேல்ல, அவங்களை எல்லாம் ரோல் மாடலா எடுத்துட்டு கத்துக்க மாட்ட. என்ன பொண்ணோ?
சரி அத விடு, நளாயினி கதை எல்லாம் எதுக்காக சொல்லுறோம். வீட்டுக்காரன் தாசி வீட்டுக்குப் போகணும்னு ஆசைப்பட்டா கூட நீங்க கூடைல சுமந்துட்டுப் போகணும். அப்பத்தான் நீங்கல்லாம் பத்தினி லிஸ்ட்ல சேர்ந்து தெய்வமாவிங்க.”
கொலைவெறியுடன் சித்ராவைப் பார்த்தேன்.
“க்கும் உங்களைப் பத்தித் தெரியாது. பத்தினிங்களை எல்லாம் தினம் தினம் கொல்லுவிங்க. உயிரோட இருக்கும்போது அணு அணுவா துடிச்சு துடிச்சு சாக விட்டுட்டு, பத்தினி டேக் குத்தி, செத்ததும் எங்க போட்டோவுக்கு படையல் போட்டு, நீங்களே சாப்பிட்டுக்குவிங்க.
பூமிலதான் அப்படி நடக்குதுன்னா, இங்க என்னடான்னா பொம்பளைங்க முறை தவறி நடந்தா கும்பலா தள்ளி ஷாக் குடுப்பிங்க. அப்ப பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணறவனுங்களுக்கு என்ன தண்டனை?”
“அதுக்கும் ஸ்பெஷல் தண்டனை எல்லாம் இருக்கு. பூமில இருக்குற லூப் ஹோல்ஸ்ல தப்பிச்சு சந்தோஷமா இப்போதைக்கு இருந்தாலும். இங்க வந்தவுடனே போதுமான ப்ரூப் மட்டும் இருந்தது, அவனைக் கட்டி வச்சு தோலை உரிச்சுடுவோம். உன் புருஷனோட தண்டனை என்னன்னு அவன் இங்க வரும்போது தீர்மானம் பண்ணிக்கலாம். இப்போதைக்கு நீ உன்னோட நிலமையைப் பத்தி மட்டும் யோசி”
“என்னோட நிலமை என்ன? இப்ப அந்த நாயை நினைச்சாக் கூட கொலை வெறி வருது”
“இங்க பாரு வசு, இங்க ரூல்ஸ் எல்லாம் அவுட் டேட்டட் ஆயிட்டு இருக்கு. நானும் ரிவைஸ் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இருந்தாலும் இவ்வளவு பெரிய புக்கில் பாதி பக்கம் முடியுறதுக்குள்ள முதல்ல போட்ட விதிகள் எல்லாம் காலாவதியா ஆயிடுது. மாற்றத்தை இம்ப்ளிமென்ட் பண்ண நேரம் எடுக்கும்”
“அது என் ப்ராப்லம் இல்லை. ஆனால் நான் தப்பு பண்ணலை. ஐ டிசெர்வ் சொர்க்கம்”
“எனக்கு உன் நிலைமை நல்லா புரியுது வசு. நீ ரொம்ப அறிவாளி. நல்ல வேலைல இருந்த நீ உன் குடும்பத்துக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வீட்டில் இருந்த. பிடிச்சதை சாப்பிட்டதில்லை, ஆசைப்பட்ட இடத்துக்குப் போனதில்லை. சொல்லப்போனா உனக்கான வாழ்க்கையை நீ வாழவே இல்லை. அது எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.
ஆனால் எனக்கும் லிமிடேஷன்ஸ் இருக்குன்னு நீ புரிஞ்சுக்கணும். ஏழு ஜென்மமா இருக்குற உன் லைஃப் க்ராப்ல ரொம்ப இம்ப்ரெஸ் ஆனதாலதான் உன்னைக் கூப்பிட்டு வச்சு இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன்”
“சொர்க்கத்தைத் தவிர வேற ஆப்ஷன் இருக்கா?”
“ ஏழு ஜென்மமா கஷ்டப்பட்ட நீ இனிமேலாவது நல்லா இருக்கணும். அதனால, என் இன்புளுயன்ஸ் யூஸ் பண்ணி அஞ்சு நிமிஷம் உயிர் தரேன். நீ அவன் கிட்ட மன்னிப்பு மட்டும் கேட்டுட்டா நான் மத்த ஆப்ஷனைஸை சொல்லுறேன்”
“மன்னிப்பா, நானா? நெவர்”
“வசு, நீ நல்ல ஆத்மா, பூமில இருக்குற வரை அறிவாளியா இருந்த. அந்த அறிவை இப்ப உபயோகி”
சித்ரா என்னவோ க்ளூ தருகிறாள். என்னது அது? கருத்தை கச்சிதமாகக் கவ்விக் கொள் வசு.
***
பூமியில் மருத்துவமனையில் மானிட்டரில் பீப், பீப் என்ற ஒலி அதிகரித்தது.
“சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா?” நர்ஸ் அழைத்து வந்தார் கூடவே போலீசும், கருப்பு உடையில் வழக்கறிஞர் போல ஒருவர்.
என் முன்னே குழந்தைகள் கண்களில் நீருடன் நின்றிருந்தனர். அப்பாடி, கல்லூரி போகும்வரை இவர்களை வளர்த்துவிட்டேன். இவர்கள் இனிமேல் தன்னைத் தானே கவனித்துக் கொள்வார்கள். அது போதும்.
“வசுமதி, நினைவோடு இருக்கீங்களா? உங்களோட வாக்குமூலம் வாங்கணும்” சொன்னவர் ஜட்ஜ்? அல்லது வக்கில்? இல்லை வேறு யாராவது? என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மண்டை வெடித்து விடும்போல வலித்தது. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அஞ்சு நிமிஷத்தில் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட வேண்டும்.
கட கடவென ஒப்பித்தேன்.
“என் பேரில் இருக்கும் சொத்து பணம் நகை எல்லாம் என் பிள்ளைகள் பேரில் சரி சமமா மாத்திடுங்க. அவங்க படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உறுதி செஞ்சுடுங்க”
பிள்ளைகளிடம் சொன்னேன் “நீங்க ரெண்டு பேரும் உங்க அப்பாவை நம்பாதிங்க. ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனமா எடுத்து வைங்க. பண விஷயத்தை நீங்களே யோசிச்சு ஹாண்டில் பண்ணுங்க. அப்பறம் எக்காலத்திலும் உங்க லைஃப் பார்ட்னருக்கு துரோகம் செய்யாதிங்க. ஐ லவ் யூ போத்”
“அம்மா… “ அழுதார்கள்.
இதிலேயே மூன்று நிமிடங்கள் ஓடி விட்டன.
“ராகவன்” என்று நான் சொன்னதும் அவரை அழைத்து வந்தனர்.
“வசு, வசு…. “ என்று பதறியபடியே வந்தார் சே வந்தான்.
“சேரை தலைக்கு மேல நீயே தூக்கிப் போட்டுத்தான அது கைநழுவி உன் தலைல விழுந்தது. அதை இவங்க கிட்ட சொல்லிடு வசு. நான் உன்னைக் கொலை பண்ணுவேனா?”
மரணிக்கும் தருவாயில் இருக்கும் மனைவியிடம் தான் செய்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு கூட மனிதாபிமானம் இல்லாதவனிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதென்ன கொடுமை.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது இன்னும் பதினைந்து வினாடிகள்தான் நான் உயிரோடு இருக்கப் போவது.
“சாரி ராகவன். முதல் தடவை உங்க கிட்ட கோபமா பேசிட்டேன். மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க அப்பத்தான் ஜட்ஜ் கிட்ட பேசுவேன்.”
“சரி மன்னிச்சுட்டேன். நீ சாகறதுக்குள்ள இவங்க கிட்ட உண்மையை சொல்லிடும்மா. உன் புருசனோட வாழ்க்கை உன் கைலதான் இருக்கு”
“சொல்லுங்க வசுமதி. உங்க சாவுக்கு உங்க கணவர்தான் காரணமா?”
“ஆமாம். அவரை விட்டுறாதிங்க. கடுமையான தண்டனை தாங்க. என் சாவுக்கு அவர்தான் கா…ர… ” என் தலை அப்படியே சாய்ந்தது.
ஜெயில்ல களி தின்னுடா
“இவரை அரெஸ்ட் பண்ணுங்க” என்ற வார்த்தைகள் தேன் போல காதில் வந்து பாய்ந்தது. அதைக் கேட்டுக் கொண்டே விர்ரென்று மேல் நோக்கிப் பயணமானேன்.
மறுபடியும் ஆப்டர் லைஃப்.
“மன்னிப்பு கேட்கணும்னு தான் சொன்னிங்க. கேட்டாச்சு” என்றாள் வசுமதி.
“பயங்கர சாமர்த்தியமா மன்னிப்பு கேட்ட… ஈயம் பூசின மாதிரியும் இருந்தது. பூசாத மாதிரியும் இருந்தது. அப்படியே நேரத்தை தள்ளிக்கிட்டே போயி தலைல யாரு சேர் போட்டதுன்னு புல்லா முடிக்காம ஜூட்டானதையும் பாத்தேன்”
“அதுக்கும் உங்க ஆப்ஷனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே”
“இருக்கு. நீ உண்மையை மறைச்சதால சொர்க்கம் போக முடியாது. பட், நீ நினைச்ச பிளானட்ல நினைச்ச மறுபிறவி தர முடியும். மறுபடியும் அங்க முதலில் இருந்து ரீஸ்டார்ட் பண்ணனும். எந்த பிளான்ட் போற, சனி கிரகத்தில் கூட பூமில இருக்கிறதை விட பொம்பளைங்களுக்கு கஷ்டம் கம்மியாத்தான் இருக்கும். யோசிச்சு சொல்லு”
மறுபடியும் நல்ல பெண், நல்ல மாணவி, நல்ல சகோதரி, நல்ல மனைவி, தியாகத் திருவுரு மருமகள், அம்மா, ஐயோ… மொதல்ல இருந்தா…
என் மனதில் இருப்பதைப் படித்த சித்ரா சொன்னாள் “மறுபிறவி எடுக்குறதைத் தவிர உனக்கு இன்னொரு ஆப்ஷனை நான் தர்றேன்”
“சொல்லுங்க”
“இங்க ரூல்ஸ் எல்லாம் நிறைய மாத்த வேண்டி இருக்கு. இந்த இடைப்பட்ட காலத்தில் நல்லவங்க யாரும் தண்டிக்கப்படாம சேப் கார்டு பண்ண எனக்கு ஒரு மூளையுள்ள உதவியாளர் தேவை. நீ ரெடின்னா ஜாயின் பண்ணலாம்”
வாவ்… இனிமே பூமியிலேயே நரகத்தை பாத்துட்டு வந்த மனிதர்களை ஸ்ட்ரெய்ட்டா சொர்க்கத்துக்கு பேக்கப் பண்ணிட வேண்டியதுதான்.
“என் வேலையை எப்ப ஸ்டார்ட் பண்ணலாம் பாஸ்?”
பணிவுடன் கேட்ட என்னைப் பார்த்து புன்னகைத்து எனது கேபினுக்கு அழைத்து சென்றாள் எனது பாஸ் சித்ரா குப்தா.
மக்களே! இனி ஆப்ட்டர் லைஃப்க்கு வரும்போது வசுமதியோட ஆபீஸ் வழியைக் கேட்டு விசாரிச்சு வந்துடுங்க.
Wow. lovely.