இரவும் நிலவும் – 15
வயித்துல பிள்ளையை வெச்சுட்டு இப்படி வேகமா நடக்கிறாளே என நவநீதனுக்கு கலக்கமாக இருந்தது.
கூடவே அவளின் இந்த செய்கைகள் எல்லாம் அச்சத்தைத் தந்தது. இது வெறும் மூட் ஸ்விங் மட்டும் இல்லையோ? என யோசிக்க வைத்தாலும், வேறு என்னவாக இருக்கும் என அவனால் கணிக்க முடியவில்லை. அதோடு அவள் தன்னை விட்டு தனியறையில் நுழைவதை பார்க்கவும், தானும் இப்படித்தான் தனியறையில் இருந்துகொண்டு அவளை நோகடிக்கிறோமோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், தனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர்கள் தான் இங்கு யார்? நீண்டதாக வெளியேற்றிய பெருமூச்சுடன் செய்வதறியாது அமர்ந்திருந்தான்.
முன்புபோல் அன்னியோன்னியம் சுத்தமாகக் குறைந்திருந்த போதும், முகத்திருப்பல்கள் இல்லாது நாட்கள் நகர்ந்திருந்தது. சுபிக்ஷாவின் சீமந்தத்திற்கு நாளினை குறித்தார்கள். நவநீதனுக்கு கலக்கமாக இருந்தது. இத்தனை நாட்களும் சுபிக்ஷாவும் அவனுமாக இருந்த வீட்டில், இனி மீண்டும் தான் மட்டும் இருக்க வேண்டுமா? என நினைக்கவே கஷ்டமாக இருந்தது. அவளை அனுப்பவே அவனுக்கு மனமில்லை. ஆனால், தன்னிடம் சரிவரப் பேசாத மனைவியிடம் தன் ஆசையைக் கேட்கவும் அவனுக்கு வாயெழவில்லை.
எல்லாம் கொஞ்ச காலம் தானே என அந்த தற்காலிக பிரிவுக்குத் தன்னை ஓரளவு தயார் படுத்திக் கொண்டான். சீமந்தம் முடிந்து மனைவி பிறந்தவீடு சென்றதும், அவன் அடிக்கடி அங்கு விஜயம் செய்தான்.
பொதுவாக தான் பிறந்தகம் செல்ல வேண்டும் என்று கேட்கும்போதெல்லாம் அவ்வப்பொழுது அவளை இறக்கிவிட வருவானே தவிர, இப்படி இங்கேயே இருந்து அவன் அளவாளவியதில்லை. அந்த சுணக்கம் அவளுக்கு நிறைய உண்டு! இப்பொழுது இங்கேயே பெரும்பாலான நேரங்கள் குடியிருப்பவன் அவளுக்கு புதிராக தோன்றினான்.
ஆனால், நவநீதன் அத்தனை இயல்பாக அந்த வீட்டில் நடமாடினான். மனைவியோடு சேர்ந்து பாட்டு கேட்டான். அவளிடம் தன் வாழ்வில் நடந்த ஏதாவது நிகழ்வுகளை சொல்லிக் கொண்டிருப்பான். சமீபத்தில் வரைந்து முடித்த ஓவியங்களை கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்து காட்டுவான்.
வெறும் பொம்மை போல தான் சுபிக்ஷா அனைத்திற்கும் எதிர்வினை ஆற்றினாள். பின்னே, கூடவே ஒரே வீட்டில் இருக்கும்போது இதெல்லாம் செய்ததே இல்லை… இப்பொழுது மட்டும் என்ன? என்ற அலுப்பு அவளுக்கு!
அவளது ஈடுபாடற்ற தன்மையில், அவளுக்கு என்னவோ கோபம் என அவன் மனம் உறுதியாக நம்பியது. ஆனால், எந்த வகையிலும் அவளை நெருங்கவே இயலாதபோது கோபத்தின் மூல காரணத்தை அறிவது எப்படி?
சோர்ந்து போனாலும், மனம் தளராது தன் செயல்களை முன்பு போலவே தொடர்வான். ஒருமுறை உதடு பிதுக்கி அழும் ஒன்றரை வயது சிறுமியின் ஓவியத்தை கொண்டு வந்தவன், அவளுக்கு அதை பரிசளித்து, “நான் ரொம்ப ரசிக்கிற ஓவியம். நம்ம கல்யாணமான புதுசுல ஒரு கண்காட்சி இருந்ததே அதுக்காக வரைஞ்சேன். ஆனால், இதை அங்கே வைக்க மனமே வரலை” என சொல்ல,
அமைதியாக அதை வாங்கி பிரித்துப் பார்த்தவள் ஸ்தம்பித்தாள். அவளை நகலெடுத்தது போல இருந்தது அந்த சிறு குருத்து!
ஆச்சரியமும் அதிசயமுமாக அவள் பார்க்க, அந்த கண்காட்சியின் போது இவள் சாயலிலேயே அனைத்து பெண் உருவங்களையும் வரைந்து விட்டு தான் பட்ட அவஸ்தையை சொல்லி சொல்லி சிரித்தான்.
நவநீதன் என்ற மனிதனை கணிக்க முடியாமல் தடுமாறினாள் சுபிக்ஷா. இயல்பாக அவள் உருவமே அனைத்து ஓவியங்களுக்கும் வருகிறதென்றால், அந்தளவு அவள் அவனது மனதில் நீக்கமற நிறந்திருக்கிறாள் என்பது தானே பொருள். அவள் மனம் சற்று நெகிழ்ந்தது. ஆனாலும், அவளின் கோபம் முழுவதும் குறைவதாக இல்லை. பிள்ளை நல்லபடியாக பிறக்கட்டும், இவனோடான பஞ்சாயத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தாள்.
பிரசவ காலம் நெருங்கும் தருணம், மாமியார் வீட்டில் தான் அவன் ஜாகையே! அவளின் சின்ன சத்தத்திற்கும் எழுந்து கொள்வான். இவன் வேற? என அலுப்பாக கூட அவளுக்கு இருக்கும். லேசான வலி தொடங்கியபோதே மருத்துவமனைக்கு சென்று விடலாம் என்று சொல்லி விட்டான். சுபிக்ஷாவின் அன்னை பிரேமா கூட, தலை பிள்ளைக்கு பிரசவவலி ஆரம்பித்த பிறகு, பிள்ளை பிறக்க நேரம் எடுக்கும் அவசரமில்லாமலே செல்லலாம் என்று சொன்னாலும் அவன் கேட்டால் தானே!
சுபிக்ஷா மகளை பெற்றெடுப்பதற்குள் நவநீதன் பட்ட பாடு தான் அதிகம்! பிரசவ அறையினுள் அவள் வலியில் அலறும்போதெல்லாம் வெளியே அவன் தவியாய் தவித்தான். அவள் வலி பொறுக்க முடியாமல் துடித்த துடியில் அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. “இவ்வளவு வலியெல்லாம் அவ தாங்க மாட்டா… பேசாம ஆபரேஷன் பண்ணச் சொல்லுங்களேன்” என வருணிடம் கேட்க, அவனுக்கு என்ன சொல்லி இவனைச் சமாளிக்க எனத் தெரியவில்லை.
ஒருவழியாக அவர்களின் மகள் இந்த பூவுலகில் அவதரித்து விட்டாள். நவநீதனுக்கு மகளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. மனைவியின் அருகிலேயே இருக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. இன்னும் எத்தனை நாட்கள், அவர்கள் வர என ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டே இருந்தான். நாட்கள், வாரங்களானது, வாரங்கள் மாதங்களானது. மகளுக்குப் பெயர்சூட்டு விழா கூட முடிந்தது. நிலவிகா எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள். ஆனால், யாருமே எப்பொழுது அங்கே செல்வது என்ற பேச்சை மட்டும் எடுப்பதாகவே இல்லை.
நான்கு மாதங்களுக்கும் மேலாகப் பொறுமை காத்தவனால், அதற்கு மேலும் முடியும் என்று தோன்றவில்லை. சுபிக்ஷாவிடம் மெல்லப் பேச்சைத் தொடங்கினான்.
“சுபி…” என்றவன் அவளின் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்து அவனைப் பார்த்தாலே தவிர என்ன என்று கேட்கவில்லை.
“சுபி… நீ என் மேல கோபமாகி, என்கிட்டே இருந்து விலகி இருக்கியா?” என்னால் இந்த அளவு கூட உன்னைப் புரிந்து வைத்திருக்க முடியவில்லையே என்னும் உண்மை தவிப்பு அவனுள். அது அவனது வார்த்தையிலும், விழிகளிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது.
காலம் காலமாய் சொல்லி வளர்த்தது தான். ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்று. அவள் வீட்டிலும் சொல்லி வளர்த்திருக்கவே, அவனது விழிநீர் அவளுக்கு உறுத்தியது.
“ஏன் ஏதேதோ யோசிக்கறீங்க?” என்றாள் பட்டும் படாமலும். இல்லை என அவள் மறுக்காததே அவனுக்கு அதுதான் நிஜம் என உணர்த்தியது.
“இல்லை எனக்கு தோணுது” என்றான் தவிப்பான குரலில். உண்மையில் தவிக்கிறானா எனக்காகவா என்றிருந்தது அவளுக்கு. ஆனந்தமாக இல்லை, ஆச்சரியமாய்!
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்று மீண்டும் அழுத்திச் சொன்னாள்.
“பின்ன ஏன் அங்க வர மாட்டீங்கற?” யாசிக்கும் குரலில் கேட்டான்.
அது அவளை நெகிழ்த்திய போதும், துளியும் இளகாத குரலில், “குழந்தை வளரட்டும்ன்னு பார்த்தேன்” என்றாள்.
“புரியலை”
“என்னால பாப்பாவை தனியா பார்த்துக்க முடியும்ன்னு தோணலை. அவ இன்னும் கொஞ்சம் வளரட்டும்” எங்கோ பார்த்துக் கொண்டு பேசும் மனைவி அவனை வெகுவாக சோதித்தாள்.
“நான் இருக்கிறேன். இன்னும் வேணும்ன்னா வேலைக்கு ஆள் போட்டுக்கலாம்”
“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? அதோட வேலைக்கு வரவங்க எப்படி பார்த்துப்பாங்களோ?”
“இதுல எனக்கு என்ன சிரமம் சுபி? ஒருவேளை எனக்கு பார்த்துக்க தெரியாதுன்னு நினைக்கறியா? உங்க அம்மா நம்ம கூட வருவாங்களா? நான் வேணும்ன்னா அத்தை கிட்ட கேட்கவா?”
“அவங்களுக்கு நான் மட்டும் தான் பொண்ணா?” என்றாள் சுள்ளென்று.
அதுவும் சரிதான் என அவனுக்கும் பட்டதோ என்னவோ… தன் கைப்பேசியை எடுத்து தன் அன்னையை அழைத்தவன், எதிர்புறம் தேன்மொழி மகனின் அழைப்பை நம்ப முடியாது ஏற்றிருக்க,
எந்த முகாந்திரமும் இல்லாமல், நேரடியாக, “அம்மா, நீங்க வந்து எங்ககூட இருக்க முடியுமா? சுபியையும் நிலா பாப்பாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு இருக்கேன்” என அவன் தன் தாயிடம் கேட்டதை, சுபிக்ஷா அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தேன்மொழியின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அத்தனை நெகிழ்ந்து போயிருந்தார். கண்கள் கண்ணீரை நிறுத்தாமல் பொழிந்து கொண்டிருக்க, “அதைவிட எனக்கு வேற என்ன வேலை தம்பி…” என்றார் தழுதழுத்த குரலில்.
“தேங்க்ஸ் மா… வைக்கிறேன்” என்று உணர்ந்து சொன்னவன், அன்னைக்கு பேருவகை தந்திருக்கிறான் என அப்பொழுது அவனுக்குப் புரியவில்லை.
அழைப்பை துண்டித்ததும், “அம்மா… வரேன்னு சொல்லிட்டாங்க… இப்ப நீ என்கூட வர முடியும் தானே?” சிறுபிள்ளையின் ஆர்வத்தோடு கேட்ட கணவனை, சுபிக்ஷா விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அகல்யாவிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நவநீதன் தன் பெற்றோரை ஒதுக்கி வைத்திருக்கிறான் என்பதாகத் தான் அவள் சொன்னாள். அப்படிப்பட்டவன், இன்று தனக்காக அந்த ஒதுக்கத்தை ஒதுக்கித்தள்ளி அவர்களிடம் ஒன்றை கேட்கிறான் என்றால், அவனுக்கு அவள் மீது எத்தனை காதல் இருக்க வேண்டும்? அவளது விழிகள் நனைந்து விட்டது.
“உன்னோட கோபம் ஏன்னும் புரியலை… இப்ப இந்த அழுகை ஏன்னும் புரியலை…” அவளருகே அமர்ந்து அவளின் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு அவளின் நெற்றி முட்டி சொன்னான்.
“உங்க அம்மாகிட்ட பேசிட்டீங்க…”
“உனக்காக… நீ எனக்கு வேணும்… அதுக்காக எதையும் செய்வேன்…” என்று சொன்னவனின் காதலில் அவள் உருகிப் போனாள்.
அவனோ அவசரமாக, “இரு இரு…” என்று அவளிடமிருந்து விலகி வேகமாகப் போய் கதவை அடைத்துவிட்டு வந்தான்.
அவள் புரியாது நோக்க, “இல்லை… இப்பவும் உனக்கு மூட் ஸ்விங்கா இருந்து… நீ என்னைப் புரட்டி எடுத்து, நான் குட்டிக் கரணம் போட்டு… இதெல்லாம் மாமியாருக்கு தெரிஞ்சா என்னை என்ன நினைப்பாங்க… நான் ரொம்ப வீக் பாடிம்மா…” என்று பாவமாகச் சொல்ல, அவள் முகம் வாடியது.
அன்று அவன் பாட்டி சமைக்கும் உப்பு சப்பில்லாத உணவு எனச் சொன்னபோது, அப்பொழுதிருந்த மனநிலையில் யோசியாமல் விட்டிருந்தவள், இப்பொழுது எண்ணி கலங்கினாள்.
“உங்க பாட்டி சமைக்கிறது உங்களுக்குப் பிடிக்காதா?” என்றாள் தவிப்பான குரலில்.
“அப்படி சொல்லக் கூடாது சுபி… சாப்பாடே இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும்ன்னு சொல்லுவாங்க. பாட்டி சாப்பாட்டோட அருமை அவங்க என்னை விட்டு போனபிறகு தான் தெரிஞ்சது…” என்றான் பாட்டியின் நினைவில் கண் கலங்கியவனாக.
“நீங்க வளர்ந்தபிறகு ஏன் உங்க அப்பா, அம்மா கூட இருக்கலை நவீன்… அவங்க மேல எதுக்கு அத்தனை கோபம்?” அதுதானே மூல காரணம் இப்படி இவன் தனியனாக இருப்பதற்கு என்று தோன்ற அவனிடம் ஒருவழியாகக் கேட்டு விட்டிருந்தாள்.
அவனுக்கும் தன் மனநிலையைப் பகிரும் எண்ணம் இருந்தது போலும்! தன் ஏக்கங்களை, தவிப்புகளை, தேடல்களை மனைவியிடம் பகிர்ந்தவன், கூடவே, தனக்கு ஆதரவு தந்த தாத்தா, பாட்டியை வயசான காலத்தில் எப்படி தனியாக விட முடியும்? எனக் கூறி, அதனால் தான் அவர்கள் காலம் முடியும் வரையும் அவர்களோடே இருந்தேன் எனவும் சொன்னான்.
இரவும் ni
“அவங்க மறைவுக்குப் பிறகு போயிருக்கலாம் தான்… ஆனா, எனக்கு தோணவே இல்லை சுபி… என்னோட ஏக்கமும், தவிப்பும் அவங்க மேல கோபமா வெளிப்படுத்தக் கூட எனக்கு தோணலை… அவங்க யாரு எனக்குன்னு ஒரு மனநிலைக்கு வந்திருந்தேன்” என்று அவன் சொன்னதும், அவன்மீது சாய்ந்தவள், அவனின் நிலையை எண்ணி கண் கலங்கினாள்.
“இப்ப எனக்கு எல்லாமுமா நீ இருக்க சுபி? அதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த கெட்ட கனவு மாதிரி தான் எனக்கு இருக்கு… நான் இப்ப அதையெல்லாம் கடந்து வந்துட்டேன்…” என அவளின் தலையை வருடி அவன் சமாதானமாகச் சொல்ல,
“உங்ககிட்ட நான் மனசை விட்டு பேசியிருக்கணும் நவீன்… நீங்க தனியா தூங்குவீங்கன்னு சொன்னப்பவே உங்களைக் குட்டிக் கரணம் அடிக்க விட்டிருக்கணும். ஆனா எங்கே நீங்க என்னை விரும்பறீங்கன்னே எனக்குப் புரியலை… ஏதோ தங்கச்சிக்காகக் கல்யாணம் செஞ்ச மாதிரி தான் சொன்னீங்க…” என அவள் குறைபட,
“நிஜமாவா… உன்னால என் காதலை உணரவே முடியலையா?” என்றான் பாவமாக.
அவளோ அவனின் பெருமளவு ஒதுக்கத்தைச் சொல்ல, “நீ கொஞ்சம் யோசிக்கணும் சுபி. இத்தனை நாளும் ஒரு உறவும் இல்லாதவன் வாழ்க்கையில் புதுசா ஒரு உறவா நீ கிடைச்சிருக்க. அப்ப என் மனநிலை எப்படி இருக்கும். உன்னை எனக்கே எனக்கா பத்திரப்படுத்தி வெச்சுக்கணும்ன்னு இருக்கும் தானே… அது உன்னை மத்த உறவுங்க கிட்ட இருந்து பிரிச்சிடாதா? அதுதான் உனக்கான ஸ்பேஸ் தந்தேன்… அதாவது நீ உன் அம்மா வீட்டுக்கு வரும்போது நானும் கூடவே வந்து தொல்லை தராம, அவங்களோட நீ டைம் ஸ்பெண்ட் பண்ணனும் நினைச்சேன்…” என தன் நிலையை விளக்க,
“இதெல்லாம் முன்னாடியே சொல்லி இருக்கலாம் தானே…” என அசடு வழிந்தாள் மனைவி.
“நான் ஒன்னு யோசிச்சு பண்ண… அதை நீ ஒருமாதிரி அர்த்தம் எடுத்துக்க… நம்ம வாழ்க்கை ஒரே கூத்தா இருந்திருக்கு…” என நவநீதன் சொல்ல, சுபிக்ஷா விழுந்து விழுந்து சிரித்தாள். சிரிப்பு சத்தம் அந்த அறையைத் தாண்டி வெளியேயும் கேட்க, வருண் மிகவும் ஆறுதலாக உணர்ந்தான்.
இப்பொழுதெல்லாம் நவநீதன் இரவையும், நிலவையும் மனைவியைத் தோளில் சாய்த்து, அவளை கையணைவில் நிறுத்தி வைத்துக் கொண்டு தான் ரசிக்கிறான். சில நேரங்களில் இவர்களோடு நிலவிகாவும் இணைத்திருப்பாள். அவள் விழித்திருந்தால் மட்டும்! குட்டிக் கரணம் அடிக்க பயந்தோ என்னவோ, சுபிக்ஷாவை அழைத்து வந்த கையோடு மேலே அவனது… இனி அவர்களது எனக் குறிப்பிட வேண்டுமோ… அவர்களது தனியறைக்கு அழைத்துச் சென்று விட்டான்.
நள்ளிரவில் விழித்து இரவையும் நிலவையும் ரசிக்கும் கணவனை ஒட்டி உரசி நின்று தானும் நிலவோடு ஓர் ஆராய்ச்சி செய்வதை சுபிக்ஷா வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அவளாக எழுந்து அவனோடு இணைந்து கொண்டால் தான் இது சுமூகம்! இல்லையா, ஏன் என்னை எழுப்பவில்லை என ஒரு சண்டை வரும்… அவளை எழுப்பி விட்டாலோ… இப்பதான் தூக்கம் வந்துச்சு உங்க பிள்ளை என்னைத் தூங்க விடறதே பெருசு… அதை ஏன் கெடுக்கறீங்க என சண்டை போடுவாள்.
இப்பொழுதும் சுபிக்ஷாவின் மூட் ஸ்விங்கிற்கு நவநீதன் பலிகடாவாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். சிலபல குட்டிக்கரணங்களையும் அவன் போட வேண்டி இருக்கிறது.
இந்த தம்பதியினரையும், புதிதாகத் திருமண வாழ்வில் இணையவிருக்கும் வருண், அகல்யா தம்பதியினரையும் வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.
*** சுபம் ***
Nice story