Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 9

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 9

செல்லம் – 09

 

நாட்கள் அதுபாட்டில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. அன்று வரதர் ஐயா கடைக்கு வந்திருந்தார். அடுத்த நாள் கனடாக்குப் புறப்படுவதனால் எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்ல வந்தவரைப் பார்த்து எல்லோர் கண்களும் கலங்கின. போக முதல் பார்கவியோடும் தனியாகப் பேசி விட்டுத்தான் சென்றார் அந்தப் பாசமான முதியவர். 

 

“இங்க பார் கவிம்மா.. நீயும் எனக்கொரு பிள்ளைதான். நான் அப்பவே எங்கட வீட்ட வந்து இருக்கச் சொல்லவும் நீ கேட்கேல்ல. தனியாவே வாழத் தொடங்கிட்டாய். ஆனால் இப்பிடியே வாழ்ந்து முடிச்சிடலாம் என்று மட்டும் நினைச்சிடாதை. வாழ்க்கை அப்பிடி ஒண்டும் லேசானதில்லை. 

 

மனுசி போய்ச் சேர்ந்ததும் தனியாக நான் என்ன கஷ்டப் படுறன் என்று அனுபவிக்கிற எனக்குத்தான் தெரியும் பிள்ளை. வாழ்க்கைக்கு ஒரு துணை அவசியம். நட்போ, காதலோ, குடும்பமோ வாழ்றதுக்கு துணை தேவை. நீ இப்பிடி எல்லாரோடயும் ஓடும் புளியம் பழமுமாகப் பழகிறது நல்லது இல்லை. 

 

இப்ப மனோவை நம்பித்தான் உன்னை இங்க விட்டுட்டுப் போறன். இவ்வளவு காலமாக நான் கடையை விக்காம இழுத்தடிச்சிட்டு இருந்தது கூட உன்ர நிலைமை என்ன ஆகும் என்றதால தான். கடவுள் புண்ணியத்துல மனோ வந்து சேர்ந்தான். 

 

மனோவை எனக்குப் பிறந்ததில இருந்து தெரியும் கவிம்மா. தங்கமான பிள்ளை. உனக்கும் அவனுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருக்கு என்றது எனக்கும் விளங்காமலில்லை. மனசு விட்டுப் பேசு. உன்ர வாழ்க்கையில நடந்த ஒரு கெட்ட விசயத்தால எல்லா மனுசரையும் சந்தேகப்படுறதும் தப்பும்மா.. நீ புத்திசாலிப் பிள்ளை. இனியாவது பழசையெல்லாம் தூக்கிப் போட்டிட்டுப் புது வாழ்க்கையை ஆரம்பி. 

 

இந்தக் கடையையும் தாண்டி ஒரு உலகம் இருக்குது. ஒரு வாழ்க்கை இருக்குது. நான் அடுத்த வருசம் இங்க வரேக்க நீ குடியும் குடித்தனமுமாக இருக்கிறதைக் கண் குளிரக் காண வேணும் பிள்ளை. இதுதான் இந்தக் கிழவனிட கடைசி ஆசை என்று வைச்சுக் கொள்ளன். திரும்பத் திரும்பச் சொல்லுறன் கவிம்மா.. இருக்கிறது ஒரு வாழ்க்கை. முடிஞ்சு போன விசயங்களுக்காக நடப்பையும் பாழாக்கிடாதை. நீ இப்பிடி இருக்கிறதால உன்ர சந்தோசம் மட்டும்தான் பாழ். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவனெல்லாம் நல்லாத்தானே வாழுறாங்கள்.. உன்னை பற்றித் தப்பாக் கதைச்சவனெல்லாம் இப்பவும் வேற யாரையும் பற்றிக் கதைச்சுக் கொண்டு தானிருக்கிறாங்கள். அவங்களிட கதைக்குக் காது குடுக்காமல் நல்ல படியாக வாழு.. புரிஞ்சு நடந்து கொள்ளு கவிம்மா..”

 

ஒரு பெரியவராய் ஒரு தந்தையாய் அறிவுறுத்தி வி்ட்டு விடைபெற்றுச் சென்றார் வரதர் ஐயா. அவளுக்கிருந்த ஒரேயொரு ஆறுதலும் அவளை விட்டுப் பிரிந்ததில் மனம் கலங்கிப் போனாள் பார்கவி. அவள் அவரது தயவில் இருப்பது தெரிந்ததாலேயே அவளது பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாது இருந்தது. 

 

கண்களில் நீர் திரள சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளையே வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தான் மனோராஜ். 

 

‘இவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்க நான் இருந்தும் ஏன் தான் இவள் அதைப் புரிந்து கொள்ளுறாள் இல்லை..?’

 

மனம் சுணங்கியது அவனுக்கு. மெலிதாய் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், அவள் அருகே சென்றான். 

 

“பாரு! கைத்தறி பருத்திச் சேலை ஓர்டர் போட்டிருந்தமே.. போய் எடுத்திட்டு வருவமா? நேரிலேயே போய் பார்த்தால் தரம் என்ன போல என்று பார்த்து விலையையும் முடிவு செய்துட்டு வந்திடலாம். தினசரி உடுக்கிறதுக்கு நல்லா இருக்கு என்று இதுக்குத்தானே இப்ப டிமாண்ட் கூடவா இருக்கு..”

 

அவளுக்குமே ஒரு மாற்றம் வேண்டியிருந்தது. கடை மூடி ஒரு புறம் திருத்த வேலை நடந்து கொண்டிருந்தது. ஒன்லைன் பிஸ்னஸ் இவர்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே சென்று கொண்டிருக்க, மனோராஜ் அதிலேயும் முழுக் கவனம் செலுத்தினான். பழைய ஸ்டொக்கை காலி செய்யவென்று ஆரம்பித்து இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் கேள்விக்கேற்ப அவர்கள் தேவையறிந்து புதியவற்றையும் எடுத்துப் போடத் தயங்கவில்லை. 

 

பற்றிக் வேலை, கைத்தறிச் சேலைகள் போன்றவற்றை சுயதொழில் செய்யும் சிறு கைத் தொழிலாளர்களை தேடிச் சென்று ஓர்டர் எடுத்தான். அதில் நல்ல லாபமும் வர ஆரம்பித்தது. ஒன்லைன் பிஸ்னஸைக் கவனிக்க மட்டும் என்றே நான்கு பேரைத் தனியாக நியமிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் புதிய உடைகளுக்கான போட்டோசூட் செய்து அடுத்த வாரம் முழுவதும் தினமும் அப்டேட் செய்து கொண்டிருப்பார்கள். தனியாக வெப்சைட் ஒன்றும் ஆரம்பித்திருந்தான். 

 

மனோராஜூம் பார்கவியும் பற்றிக் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் அந்தக் கிராமத்துக்குச் சென்றார்கள். இருவருக்கும் அங்கு ஏக வரவேற்பு. அனாதரவான பெண் ஒருவர் தன்னைப் போன்ற நிலையிலிருந்த வேறு சிலரையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஆரம்பித்திருந்த தொழில் அது. 

 

கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் மூலம் இது பற்றி அறிந்த பார்கவி, நேரிலேயே வந்து பார்த்தவள் மனோவை அவர்களிடமே ஓர்டர் கொடுக்கச் சொல்லி விட்டாள். அவர்களது வேலையும் தரமாக இருந்தது. ஆனால் நிதிப் பற்றாக்குறையால் தங்களது தொழிலை முன்னேற்ற முடியாது தடுமாறிக் கொண்டிருந்தவர்களுக்கு மனோவே தேவையான பணத்தைக் கொடுத்து உதவி செய்தான். 

 

அந்த நன்றிப் பெருக்குடன் ஆர்வமாகவே அவர்களை வரவேற்றனர். தயாரித்து வைத்திருந்த அனைத்து ஆடைகளையும் ஒவ்வொன்றாக கவனமாக சரி பார்த்த பார்கவி திருப்தியுடன் மனோவிற்கு கண்ணசைத்தாள். அவனும் பணக் கணக்கைப் பேசி முடித்தான். 

 

முன்பு வந்திருந்த போது, அவர்கள் அனுமதியோடே அவர்கள் தொழில் தொடங்கிய விதம் பற்றி அனைத்தையும் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டாள் பார்கவி. அவர்கள் வேலை செய்யும் முறையை சிறு சிறு வீடியோக்கள், புகைப்படங்களாக எடுத்துக் கொண்டான் மனோராஜ். அவற்றைத் தொகுத்து அழகாக இவர்களது சமூக வலைத் தளங்களில் வெளியிட அந்தச் சிறு தொழிலாளர்களுக்கான கேள்வியும் பெருகியது. 

 

“உங்கட பேஸ்புக்ல பார்த்திட்டு இங்கேயும் நேரில வந்து வாங்கிறாங்கள் அக்கா. நான் நீங்க கடையில விக்கிற விலைக்கே தான் குடுக்கிறன். ஏனெண்டால் நான் குறைச்சுக் குடுத்துப் பிறகு உங்கட விற்பனையில எந்தப் பாதிப்பும் வந்திடக் கூடாதுதானே. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட எங்களை இண்டைக்கு இருபது பேரை வைச்சு வேலை செய்யக் கூடியது போல இந்தக் கொஞ்ச நாளில வளர்த்து விட்டிருக்கிறீங்கள். அந்த நன்றியை என்றைக்கும் மறக்க மாட்டோம் அண்ணா.. உங்கட விலைக்கு விக்கிறதால எங்களுக்கு லாபமும் கூடத்தானே..”

 

சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியோடு கூறினார் அந்தப் பெண். இவர்களும் கொள்வனவு செய்த பொருட்களோடு மகிழ்வோடே திரும்பினார்கள். 

 

இவர்கள் நகரத்திற்குச் செல்லும் வழியில் பெரியதொரு ஏரி இருந்தது. கடல்தானோ என்று வியக்கும் அளவிற்கு பெரிதாக அலையடித்தபடி இருந்த அந்த நீர்த்தேக்கத்தைக் கண்டு விட்டு மரங்கள் நிறைந்திருந்த ஒரு பக்கமாகக் காரை நிறுத்தினான் மனோராஜ்.

 

“கொஞ்ச நேரம் நிண்டிட்டுப் போவம் பாரு..”

 

காரை விட்டிறங்கியவன் வீதிக்கு எதிர்ப்புறமாக இருந்த கடையிலிருந்து குளிர்பானம் ஒன்றை வாங்கி வந்து அவளுக்கும் கொடுத்து விட்டுத் தானும் அருந்த ஆரம்பித்தான். பார்கவியும் ஏரிக்கரையில் கவிழ்த்துப் போட்டிருந்த படகில் ஏறி அமர்ந்து கொண்டே குளிர்பானத்தை சுவைத்தாள். 

 

“ராஜ்..! நாளண்டைக்கு கனகண்ணையிட பேத்திட பிறந்தநாள். மறக்காமல் கிப்ட் குடுத்து விடுங்கோ. நான் நாளைக்கு கடையில நிக்க மாட்டனெல்லே. கவிதா, தனக்கு உதவிக்கு ஒரு மேக்கப் செய்ய வரச் சொன்னவள். நான் போய்டுவன். என்ர மேசையில தான் வைச்சிருக்கிறன். கொண்டு போய் குடுத்து விடுங்கோ..”

 

“சரிம்மா..”

 

வரதர் ஐயா ஆரம்பித்து வைத்த பழக்கம் அது. கடையில் வேலை செய்பவர்களது பிறந்த நாட்கள் மட்டுமன்றி, அவர்களது வீட்டுக்காரர்களின் பிறந்த தினங்களுக்கும் ஏற்ற போல புடவையோ, வேட்டியோ பரிசளிப்பது வழக்கம். மனோராஜ் வந்த பிறகும், பார்கவி அதனை தொடர வைத்திருந்தாள். வரதர் ஐயா சரி, இப்போது மனோராஜ் சரி, ஊழியர்களை மாடு போல வேலை வாங்காது, இப்படி சின்ன சின்ன விடயங்களில் கூடக் கவனித்துக் கொண்டது அவர்களை உண்மையாக உரிமையோடு உழைக்க வைத்தது. 

 

“ராஜ்..! எனக்கொரு ஐடியா.. ஸ்டொக் ஒதுக்கேக்க பழைய மொடல் சாரி தான். ஆனால் வேற வேற கலர்ல நிறைய இருக்கு. நாங்கள் இப்ப பத்து கேர்ள்ஸ் இருக்கிறம். ஒரே கலர்ல பத்து இருக்கு. மூன்று கலர் சாரி செலக்ட் பண்ணினால் கடையை புதுசா ஓப்பின் பண்ணேக்க எல்லாருக்கும் யூனிபார்ம் போல குடுக்கலாம். ஃபோய்ஸ்க்கு சாரி கலர்ல சேர்ட்டும் வேட்டியும் குடுத்திடலாம். டெய்லி ஒரே கலர் சாரியைக் கட்டினாலும் ஃபோரிங். மூன்று கலரை மாறி மாறிக் கட்டேக்க சலிக்காது. என்ன சொல்லுறீங்கள்?”

 

“நல்ல ஐடியா தான் பாரு..”

 

அவன் அதற்கும் சம்மதம் கூறினான். குளிர்பானத்தை அருந்தி முடித்தவள் வெற்றுப் போத்தலை குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு ஆங்காங்கே எறிந்திருந்த பெப்ஸி, கோலா கான், சிப்ஸ், பிஸ்கெட் பக்கெட்டுகளை பொறுக்கிக் குப்பைக் கூடைக்குள் போட ஆரம்பித்தாள். காரில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோராஜ். திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக அவனிடம் வந்தாள் பார்கவி,

 

“ராஜ்..! சொல்ல மறந்திட்டன். பேஸ்புக்ல காவ்யாட போட்டோஸ்க்கு கீழ கண்டபாட்டுக்கு எவனோ ஒருத்தன் கொமெண்ட் பண்ணிறானாம். ஐஸூ சொன்னா. அந்த ஐடிய ப்ளொக் பண்ணிட்டாளாம். நீங்களும் அடிக்கடி பேஸ்புக்கை கவனிச்சுக் கொள்ளுங்கோ ராஜ். எங்களை நம்பியிருக்கிற பிள்ளையள். நாங்கள் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும்..”

 

“சரிம்மா..”

 

மறுபடியும் குப்பை பொறுக்கப் போனவளை அழைத்தான் மனோராஜ். 

 

“பாரு.. ஒரு நிமிசம் இங்க வா..”

 

“என்ன ராஜ்?”

 

“இதில இரு..”

 

படகைக் காட்டி அவளை அதிலே அமர வைத்தான்.

 

“உனக்கு கடையைத் தவிர வேற சிந்தனை கிடையாதா பாரு..?”

 

“அதுதானே சோறு போடுது.. அதைப் பற்றித்தானே யோசிக்க முடியும்..”

 

“அதுக்கு.. இருபத்து நாலு மணித்தியாலமும் கடையைப் பற்றி மட்டும்தானா யோசிப்பாய்..?”

 

“அப்ப வேற எதைப் பற்றி யோசிக்க ராஜ்?”

 

“உன்னைப் பற்றி..”

 

“எனக்கென்ன வந்தது.. என்னைப் பற்றி யோசிக்க என்ன இருக்கு..?”

 

“உனக்கு இப்ப எத்தினை வயசு பாரு..? இருபத்தைஞ்சு தானே ஆகுது.. இப்பிடியே காலம் முழுக்கத் தனியாகவே இருந்திடலாம் என்று முடிவெடுத்திட்டியா..?”

 

“ப்ளீஸ் ராஜ்.. தயவுசெய்து இதைப் பற்றிக் கதைக்க வேணாம்.. வாங்கோ போவம்..”

 

“விளையாடாதை பாரு.. நீ ஒண்டும் சின்னப் பிள்ளை இல்லை.. நடந்தது நடந்து போச்சு.. அதையே நினைச்சுக் கொண்டு எவ்வளவு காலம் தான் இப்பிடித் தனிமரமாக நிக்கப் போறாய்?”

 

“நான் ஒண்டும் பழசெல்லாம் நினைச்சுக் கொண்டிருக்கேல்ல..”

 

“அப்ப கல்யாணம் கட்டு.. நான் மாப்பிள்ளை பார்க்கவா?”

 

“ராஜ்.. உந்த விசர்க் கதையை நிப்பாட்டுங்கோ.. இப்ப காரை எடுக்கிறியளோ.. இல்லை நான் பஸ்ஸ பிடிச்சுப் போகவா?”

 

அவள் குணமறிந்தவன், மேலே பேசாது ஒரு பெருமூச்சை மட்டும் வெளியேற்றி விட்டு காரில் ஏறி அமர்ந்தான். அவளும் அருகில் ஏறியமர்ந்து சீற் பெல்ட்டை மாட்டிக் கொண்டவள் யன்னல் பக்கம் பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள். வீடு போய்ச் சேரும் வரை இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆளாளுக்குப் பல ஞாபகங்கள் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தன.

 

மனம் மாறுவாளா? இல்லை மறுதலிப்பாளா? 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3

செல்லம் – 03   மனோராஜைக் கண்டதும் வெறுப்பின் உச்சியிலும் கோபத்திலும் பார்கவியின் முகமே சிவந்து விட்டது. புது முதலாளியாக இவன் இருப்பான் என்று கனவிலும் இவள் நினைத்திருக்கவில்லை. அதிர்ச்சியை விட வெறுப்பே மண்டிக் கிடந்தது. வேலையாவது மண்ணாவது என்று எல்லாவற்றையும்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12

செல்லம் – 12   கடையில் அந்த மாதக் கணக்குகளின் வரவு செலவைச் சமப்படுத்தும் முயற்சியில் முனைந்திருந்தாள் பார்கவி. கடையின் தொலைபேசி அழைக்கவும் எடுத்துக் காதில் வைத்தாள்.   “ஹலோ..”   “ஹலோ.. ஓம் சொல்லுங்கோ..”   “உங்கட கடையில வேலை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7

செல்லம் – 07   ரெஸ்டாரன்ட்டில் உணவு உண்டு முடித்ததும், பார்கவி நேராக பல்பொருள் அங்காடிக்குத்தான் சென்றாள். தேவையான பொருட்களை பார்த்துக் கூடைக்குள் போட்டபடி இருந்த போது,  பின்னாலே மனோராஜின் குரல் கேட்டது.   “பாரு! ஒரு நிமிஷம்.. உன்னோட நான்