இரவும் நிலவும் – 8
அகல்யாவும் இந்த காலத்து இளம் யுவதி தானே… திருமணம் என்று வந்து விட்டால், என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என அவளுக்கும் தெரியுமே!
அவளுக்கு அண்ணன் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம் என்று தோன்றியது. கூடவே அண்ணியிடம் நல்ல முறையில் பேசுவது, வெளியில் அழைத்துச் செல்வது என்று இருந்தால்… இத்தனை அச்சங்களுக்கும் வாய்ப்பே இல்லையே என்று கலங்கியவள், இதுகுறித்து பேசிவிடுவோம் என்ற முடிவில் நவநீதனை நாடி சென்றாள்.
“என்ன குட்டிம்மா… இப்ப எல்லாம் நீ இத்தனை அமைதியா இருக்கிறதைப் பார்க்கவே வேடிக்கையா இருக்கு. என்ன தான் விஷயம்? அண்ணன்கிட்ட மறைக்காம சொல்லு…” அவன் ஆராயும் பார்வையோடு கேட்க, பலமுறை, பலரிடம் எதிர்கொண்ட கேள்வி ஆதலால், வெகு இயல்பாகவே சிறு புன்னகையில் மழுப்பினாள்.
“கொஞ்சம் சமத்தா இருந்தா எல்லாரும் இப்படியே கேட்டா எப்படிண்ணா?” முன்பானால் சிணுங்கலும், சலுகையுமாகக் கேட்டிருப்பாள். இப்பொழுதோ சாந்தமான முகத்துடனும் அழகாகப் பூத்த முறுவலுடனும் கேட்டாள்.
இதுவும் மிகவும் ரசிக்கும்படியாகவே இருக்க, “சரி சரி நீ சமத்து பிள்ளையாவே இரு. என் தங்கச்சி எப்படி இருந்தாலும் அழகா தான் இருக்கு” என்றான் மூத்தவன்.
பதிலுக்கு மெலிதாக சிரித்தவள், “அண்ணா உங்ககிட்ட ஒன்னு கேட்கணுமே” என்றாள் தயங்கியவாறே.
“கேளுடா…” என்றவன் யோசனையானான்.
“அண்ணா… அம்மா, அப்பா உன் விஷயத்துல தலையிட மாட்டாங்க. ஆக அவங்க இருக்கும் இடத்துல இருக்கிறதை நீ தவிர்க்கணும்ன்னு அவசியமே இல்லைண்ணா. அதோட கல்யாண வேலைகளுக்கு நடுவே நீ அவங்களை மட்டும் தவிர்க்கலைண்ணா. அண்ணியையும் சேர்த்துத் தான் தவிர்க்கிற…” உள்ளே போய் விட்ட குரலில் கலக்கத்துடன் அகல்யா சொன்னாள்.
அவளது கலக்கம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. எழுந்து வந்து அவளருகே அமர்ந்தவன், அவளின் கரங்களை ஆதரவாகப் பற்றி, “உன் அண்ணியைப் பத்தி நீ கவலைப்படவே வேண்டாம் குட்டிம்மா. அவளால கண்டிப்பா என்னை புரிஞ்சுக்க முடியும்” என்று உறுதியாகச் சொன்னவனின் முகம் பிரகாசித்தது. வெகு அழகாகப் பூத்திருந்தவனது புன்னகை அவளுக்குப் புதிது! அப்படி முகமும் விழிகளும் ஒளி சிந்த புன்னகைத்துக் கொண்டிருந்தான். அகல்யா அதிலேயே மனம் நிறைந்து போனாள்.
நவநீதன் உணர்ந்து தான் சொன்னான். சுபிக்ஷாவின் காதலை உணர்ந்தவனுக்கு அவள் தன்மீது எல்லையற்ற நேசம் காட்டுவாள்; தன்மீது நிறைய நம்பிக்கையை வைத்திருப்பாள்; தன்னை நன்கு புரிந்து கொள்வாள் என்றெல்லாம் உறுதி!
ஆனால், காதலுக்கான இவனது எதிர்வினை, ஒத்துழைப்பு இல்லையென்றால் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று அவனுக்குப் புரியத்தான் இல்லை.
என்ன தான் அண்ணனின் உறுதியில் மனம் தேறினாலும் சுணக்கம் முற்றிலும் அகலாததால், “சரிண்ணா ஆனா நீங்க ரொம்ப ஒதுங்கி இருக்கிற மாதிரி இருக்கு. பிளீஸ் பார்த்துக்கங்க…” என்று மட்டும் சொன்னவள், மேற்கொண்டு அவனை வற்புறுத்தவில்லை.
நவநீதனுக்கும் அப்படித் தோன்றியதோ என்னவோ சுபிக்ஷாவிடம் பேசுவோம் என்று முடிவெடுத்தான். அவள் மறைமுகமாக அவளின் காதலை மொழிந்துவிட்டுப் போன பிறகு, இருவருக்குள்ளும் நிறைய நிறைய கண்ணாமூச்சி ஆட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இதுவரை அவள் அவனிடம் பேசுவதற்கு முயற்சிக்கவே இல்லை. அவளின் சங்கடம் உணர்ந்ததாலோ என்னவோ அவள் போக்கிலேயே இவனும் விட்டு விட்டான்.
கூடவே நவநீதனுக்கு இன்னும் ஓர் அச்சமும் இருந்தது. பொதுவாக அவன் கொஞ்சம் பொஸசிவ். அதனாலேயே யாரிடமும் ஒட்டி உறவாட மாட்டான். இப்பொழுது சுபிக்ஷாவிடம் தன் பொஸசிவ்வை காட்டி அவளை அன்பு சிறையில் வைத்து வதைத்து விடுவோமோ… அதனால் இருவருக்கும் மனக்கசப்பு வந்துவிடுமோ… என்னும் அச்சம் அவனுள் வியாபித்திருக்க, கொஞ்சம் தள்ளியிருக்க முடிவு செய்திருந்தான்.
இந்த முடிவும் மிகவும் தவறானது என அவன் அப்பொழுது உணரவில்லை பாவம்!
இப்பொழுது தங்கை சொன்னதோடு, தனக்கும் சுபிக்ஷாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் நிறைந்திருக்க, சுபிக்ஷாவிற்கு அழைப்பு விடுத்திருந்தான். அவள் எதிர்பார்க்கவே இல்லை இந்த அழைப்பை… எங்கே மறுபடியும் இந்த திருமணம் ஒத்து வராது வேண்டாம் என்றெல்லாம் சொல்லி விடுவானோ என்று அச்சம் கூட அவளுக்கு! அவனது நடவடிக்கைகளும் அப்படித்தானே இருக்கிறது. நிச்சயத்தன்று பார்த்ததோடு சரி… அதன்பிறகு எந்த நிகழ்வுகளுக்கும் அவன் வரவே இல்லையே!
அவளாக விருப்பப்பட்டு மணப்பவன். இப்படித் தவிர்ப்பது அவளுக்கு மிகுந்த கஷ்டத்தை தந்தது. அண்ணன் ஒவ்வொரு முறையும் ஆராய்ச்சியாய் பார்க்கும் போதெல்லாம் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது போய் திருமணம் வேண்டாம் அது இதென்று இவன் பினாத்தினால் என்ன செய்வது என்ற கலக்கத்தோடும் அச்சத்தோடும் தான் அவள் அழைப்பையே ஏற்றிருந்தாள்.
அழைப்பை ஏற்றதும் சில நொடிகள் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது. அவள் பேசுவதாக காணோம் என்றதும், “எப்படி இருக்க?” என்றான் ஆழ்ந்த குரலில்.
அந்த குரல் அவளை என்னவோ செய்தது. அழுது கொண்டிருக்கும் குழந்தை ஆறுதல் தேடி தாய்மடி நாடி வருவதைப்போன்ற உணர்வு அவளுள்! “ஹ்ம்ம்… நீங்க?” என்றாள் மென்மையாக.
“பைன்…” என்றான்.
மேற்கொண்டு என்ன பேச என இருவருக்குள்ளும் தயக்கம், மீண்டும் அவனே, “வெளியே எங்கேயும் போகலாமா?” என்றான் ஆசையாக.
விழிகள் தெறித்து விடுவது என்றால் என்ன என்பதை அப்பொழுது தான் உணர்ந்து கொண்டாள் பெண்ணவள்! அவள் மௌனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவன், “வேலை இருந்தா பரவாயில்லை… இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நமக்கான நாட்கள் நிறைய நிறைய இருக்கப் போகுதே!” என்றான் இன்னும் ஆசையாக.
பேசுவது நவநீதன் தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது சுபிக்ஷாவிற்கு. சந்தோசம் குமிழியிட, “இல்லை… இன்னைக்கே நான் பிரீயா தான் இருக்கேன்…” என்று உடனடியாக பதில் சொல்லி விட்டாள்.
“சூப்பர்… எங்க போகலாம்?”
இது இன்னுமோர் ஆச்சரியம்! முடிவையும் அவளிடமே ஒப்படைக்கிறான். உள்ளம் பூரிக்க, “கோயில் போவோமா?” என்று கேட்டிருந்தாள்.
“ஆஸ் யூ விஷ்…” என்றவன் இன்னும் இன்னும் மயங்கினான் அவளை.
அவசரமாக, “நீங்க என்ன பிளான் வெச்சிருந்தீங்க?” என்று கேட்டாள். அவனது எக்ஸிபிஷன் நெருங்குவது அவளும் அறிந்தது தானே!
“பெருசா எதுவும் இல்லை… எக்ஸிபிஷன் ஹால் விசிட் செய்யணும். பிரேம் போட கொடுத்த படங்களை வாங்கணும்…” என அவன் சொல்ல, “சரி கோயில் போயிட்டு நீங்க அப்படியே உங்க வேலையை பாருங்க… நானும் இன்விடேஷன் கொடுக்கப் போக வேண்டியிருக்கு…” என்று அவள் சொன்னதும்,
தன் வேலை கெட்டு விடக்கூடாது என்று எத்தனை பார்க்கிறாள்? என அவனுக்கு அவள்மேல் மதிப்பு கூடியது. நிச்சயம் என்னைப் புரிந்து கொள்வாள்… என் நிறை குறைகளோடு என்னை ஏற்றுக் கொள்வாள் என்று காதலில் திளைத்தவனுக்கு, சுபிக்ஷா அவனது பாலைவன வாழ்வின் சோலை! அவளை எக்காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது என்பதில் வெகு உறுதியாக இருந்தான்.
ஆசையும் குதூகலமுமாக சுபிக்ஷா நவநீதனோடு கோயில் வந்தாள். பிரத்தியேக பேச்சுக்கள் இல்லை என்றாலும், பூஜைக்கு பூ வாங்கும்போது, அவளுக்கும் பூ வாங்கி தந்தது, அவளின் நடைக்கேற்ப தன் வேகநடையை குறைத்துக் கொண்டது, உடனே கிளம்பலாம் என்றெல்லாம் அவசரப்படுத்தாமல் நிதானமாக அவளோடு கோயில் மண்டபத்தில் அமர்ந்து தன கண்காட்சி பற்றிப் பேசிக்கொண்டிருந்தது என எல்லாம் எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்தது.
எல்லாம் ஒருவனைக் காணும் வரை தான். இவர்கள் அமர்ந்திருப்பதைக் கவனிக்காமல் அவன் தன் மனைவியுடன் கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தான். அவனைக் கவனித்துவிட்டவளின் முகம் இஞ்சி தின்ற குரங்கைப் போல இருந்தது.
சுபியின் முகமாறுதலைக் கவனித்துவிட்டு அவள் பார்வை சென்ற இடத்தை நோக்கித் திரும்பிய நவநீதன் வைரவேலை கவனித்துவிட்டு அடக்கமாட்டாமல் நகைத்தான். அவன் அபூர்வமாக சிரித்தான் என்றால், அவள் இமைக்க மறந்து கவனிப்பாள்.
இப்பொழுதும் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க முடியாமல், “ஸ்ஸ்ஸ்… நவீன் பிளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாக.
அவனுக்கு சிரிப்பு நின்றால் தானே! “பிளீஸ்… பிளீஸ்… அவர் வரதுக்குள்ள கிளம்பிடுவோம் வாங்க…” என்று அவள் அவசரப்படுத்த,
“அவன்கிட்ட எல்லாம் என்ன பயம்… பிரீயா விடு…”
“அச்சோ… புரிஞ்சுக்கங்களேன்… எனக்கு சங்கடமா இருக்கு…”
“கல்யாணத்துக்கு வருவானே அப்ப என்ன செய்வ?” குறுஞ்சிரிப்புடன் புருவம் உயர்த்தி கேட்க,
“என்னது கல்யாணத்துக்கு வருவாரா?” என்று அதிர்ந்தாள் அவள்.
“ஹே… எனக்கு பிரண்ட்ஸ் ரொம்ப கம்மி… நீ என்ன கல்யாணத்துக்கு வருவானான்னு சந்தேகமா கேட்கிற?”
“இல்லை… இல்லை… நீங்க அவர் கல்யாணத்துக்கு போகலை தானே அதுல அவரும் வர மாட்டாரு…” சிறுபிள்ளை போல அடமாக சொன்னவளைப் பார்த்து இன்னும் இன்னும் சிரிப்பு பொங்கியது.
சிரித்தவனின் முதுகில் அடி விழ, திரும்பி வைரவேலை பார்த்தவன் அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான்.
நவநீதனின் சிரிப்பையும் சுபிக்ஷாவையும் குறுகுறுவென பார்த்தவன், “என்ன? என்ன நடக்குது இங்க?” என வைரவேல் விசாரித்தான்.
“மச்சி… உன்னைப் பார்த்து ஒரு ஜீவன் பயப்படுதுடா…” என நவீன் சிரிக்க,
“யாரு உன் ஆளு? இதை என்னை நம்ப சொல்லற” என்றான் ஒரு மார்க்கமாக.
“நிஜம் மச்சி… எப்படி நடுங்கினா தெரியுமா?”
“டேய்… கோயில்ன்னு கூட பார்க்காம என்னை திட்டிட போறாங்க… நீ வேற ஏத்தி விடாத… என் பொண்டாட்டி வந்தா அவ்வளவு தான்… அவ சும்மாவே என்னைத் திட்டு திட்டுன்னு திட்டுவா… இதுல கூட ஆளு சேர்ந்துட்டா அவ்வளவுதான்…”
“ரொம்ப சாரிண்ணா… அன்னைக்கு ஏதோ கோபத்துல…” சுபிக்ஷா சங்கடப்பட,
“அவன் அதெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டான்… நீ வேற காமெடி பண்ணிட்டு…” என்று அவளிடம் சொன்னவன், “மச்சான் பொண்ணுங்க கரப்பாண்பூச்சிக்கு தானே பயப்படும்?” என வைரவேலிடம் தீவிரமாக கேட்க,
“டேய்… ஒரு மனுஷனை எப்படியெல்லாம் டேமேஜ் செய்யறீங்க ரெண்டு பேரும்…” என வைரவேல் பல்லைக் கடித்தான். அதற்குள் அவனது மனைவி பூஜாவும் வந்துவிட இருபுறமும் அறிமுகம் செய்து வைத்தவன், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடைபெற்றான்.
அவர்கள் சென்றதும் இருவருக்கும் ஒருசேர சிரிப்பு வந்தது. இருவருக்குமே அன்றைய நாள் நினைவில் வர சிரிப்பு சுலபத்தில் நிற்கவில்லை.
நவநீதன் சுபிக்ஷாவோடு இணைந்து வேலை செய்யத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வைரவேலின் பிராஜெக்ட் ஒன்றில் சுபிக்ஷா வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வழக்கம்போல எந்தெந்த ஓவியங்களை எங்கெங்கு வரிசைப்படுத்தலாம் என்பது தொடங்கி, வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப மாட்டுவோம் எனத் திட்டமிட்டு, வைரவேல், நவநீதன், இவள் என மூவருமாகக் கலந்துரையாட திட்டம் போட்டு… கலந்துரையாடலும் தொடங்கியிருந்தது.
வைரவேலுக்கு நவநீதனை அறிமுகம் செய்து வைக்கும்போதே, அவன் முறைத்துக்கொண்டே இருந்ததை அவள் கவனித்திருக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் உட்கட்சி பூசல் பற்றித் தெரியாமல், இவள் வழக்கம்போல நவநீதனின் ஓவியங்களைக் காட்டி, “இதில் எந்த மாதிரி வகையில் எந்த மாதிரி ஓவியங்கள் வேண்டும்ன்னு சொன்னால், அவர்தான் ஆர்ட்டிஸ்ட் நீங்க சொல்லுவதையெல்லாம் குறிப்பெடுத்துட்டு வரைஞ்சு தருவாரு” என சொல்ல,
வைரவேல் நவநீதனை முறைத்துக் கொண்டே, “இதெல்லாம் என்ன பெயிண்டிங்ஸ்? குப்பை மாதிரி இருக்கு” என சொல்லிவிட்டான்.
நவநீதன் சுபிக்ஷா முன்னால் என்ன விளையாட்டு என்ற கடுப்பில் கண்ணைச் சுருக்கி நண்பனை முறைத்தான்.
நண்பர்களின் விளையாட்டு புரியாததால், சுபிக்ஷாவிற்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. வாடிக்கையாளர்கள் இன்முகமாகப் பேச வேண்டும் என்று கற்பிக்கப்பட்டதை மறந்து அவரை முறைத்து நின்றவள், “உங்களுக்கு ஓவியங்களைப் பத்தி என்ன அறிவு இருக்குன்னு இதைக் குறை சொல்ல வந்துட்டீங்க? இதெல்லாம் என்ன மாதிரி ஓவியங்கள் தெரியுமா? இதை போயி என்ன வார்த்தை சொல்லிட்டீங்க… சும்மாவா சொன்னாங்க…” என்றவள் நல்லவேளையாக அத்தோடு நிறுத்திக் கொண்டு, ‘கழுதைக்குக் கற்பூர வாசனை எங்கே தெரிய போகுது?’ என மனதிற்குள் அவரை வறுத்தெடுத்தாள்.
அவளின் இந்த முகத்தை நவனீதனே எதிர்பார்க்கவில்லை. அவள் அதிகமாக வாயை விடுகிறாளே என்று புரிந்து கொண்டு,
“என்ன சுபி பேசறீங்க. நடங்க கிளம்பலாம்” அவளிடம் எச்சரிக்கை செய்துவிட்டு, அவளது கையைப்பற்றிக் கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு தான் வெளியில் சென்றான்.
பேயறைந்தது போல வைரவேலுக்கு இருந்தது. இந்த பொண்ணு ஏன் பத்திரகாளி மாதிரி மாறுச்சு? எப்பவும் சிரிச்சு சிரிச்சு அழகா பேசுமே… நல்லவேளை இங்கே வேற யாரும் இல்லை என அவசரமாகச் சுற்றும் முற்றும் காலி அறையைப் பார்த்துக்கொண்டு பெருமூச்சு விட்டான்.
“விடுங்க நவீ. என்ன பேச்சு பேசறாங்க…” வீர மங்கையாகச் சிலிர்த்து நிற்பவள் செய்வதைப் பார்க்க சிறுபிள்ளைத்தனமாகத் தோன்ற, அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான்.
அவன் கேலியாகச் சிரித்ததில் சங்கடமானவள், “ம்ப்ச் ஏன் இப்படி சிரிக்கறீங்க” என்றாள் வலது காலை தரையில் உதைத்தபடி.
அந்த செயலும் சிறுபிள்ளைத்தனமாகவே தோன்ற மேலும் மேலும் பொங்கிச் சிரித்தான். “என்னன்னு சொல்லுங்களேன்…”
“நீ தான் என்னன்னு சொல்லணும்? அதெப்படி எல்லாருக்கும் ஒரே விஷயம் பிடிக்கும்? ஒருத்தருக்குப் பிடிக்கிறது இன்னொருத்தருக்கு பிடிக்காம போகும். இதுக்கு போயி சின்ன குழந்தை மாதிரி சண்டை போடற”
“பிடிக்கலைன்னா… சொல்லறதுக்கு ஒரு விதம் இல்லை… அதெப்படி அந்த ஆளு குப்பைன்னு சொல்லலாம். அவனுக்கு சொட்டை விழ…” தீவிரமாக வசைபாடியபடி, சாபம் வேறு விட,
“அச்சோ… இது என்ன சாபம்… பாவம் மா அவன். விட்டுடு…” என்று சொல்லிவிட்டு அவளது சாபத்தை நினைத்தும் சிரிக்க, “அச்சோ! சும்மா சும்மா சிரிக்காதீங்க” என்றாள் சிணுங்கலாக.
“பின்ன அவன் என் பிரண்ட் தான். நான் அவனோட கல்யாணத்துக்கு போகலைன்னு கடுப்புல கலாய்ச்சிட்டு இருக்கான். அவன்கிட்ட போயி இப்படி சண்டை போடற… புதுசா கல்யாணம் ஆனவனுக்கு சொட்டை விழணும்ன்னு சபிக்கிற… உன்னோட…” கண்களும் முகமும் மலர்ந்து அவன் சிரிக்க, அவளை மறந்து அவனை ரசித்தாள்.
அவளது அசையாத பார்வையைக் கண்டு, அவள் முகத்தின் முன் கையசைத்து, “என்ன?” என அவன் புருவம் உயர்த்தி வினவ,
சங்கடத்தோடு முகத்தைத் தாழ்த்திக் கொண்டவள், “முன்னாடியே பிரண்ட்ன்னு சொல்ல வேண்டியது தான?” என்று முணுமுணுத்தாள்.
“அவன் பேசினதும் பட்டாசா பொறிஞ்சிட்டியே… அப்பறம் எங்க சொல்ல”
“ம்ப்ச்… என்ன இருந்தாலும் அவரு எப்படி குப்பைன்னு சொல்லலாம்?”
“எல்லாருக்கும் ஒரே விஷயம் பிடிக்கணும்ன்னு எந்த கட்டாயமும் இல்லை சுபி. பிடிக்கவும் பிடிக்காது. பொருள் மட்டும் இல்லை மனுஷங்களையே எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்குதா என்ன? எத்தனை பேரை எளிதா தூக்கி வீசிட்டு போயிடறாங்க. அம்மா, அப்பா தான் தெய்வம்ன்னு சொல்லறாங்க. அவங்களே தன் சொந்த குழந்தையைக் குப்பையா ஒதுக்கிட்டு போறதில்லையா?”
இத்தனை நேரமும் சிரித்து பேசியவன் இவனா என சந்தேகம் தோன்றுவதுபோல, அவனது கண்களில் தான் எத்தனை வலியும், வேதனையும்! அவள் ஊன்றி கவனிப்பதற்குள் தன்னை வேகமாக மீட்டுக் கொண்டான் நவனீதன். சுபிக்ஷா குழப்பமுற்றாள்.
அதன்பிறகு, வைரவேலை சமாதானம் செய்ய நவநீதன் சென்றபோது அவன் கலாய்த்து தள்ளி விட்டான். இருவருமே சிரித்த முகமாக வெளியேறியதைக் கவனித்த சுபிக்ஷாவிற்கு தன் குழப்பம் பின்னோக்கிப் போயிருந்தது.
Nice