செல்லம் – 08
அந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு கடையில் வேலை நெட்டி முறித்தது எல்லோருக்கும் என்றால் மிகையல்ல. ஸ்டோக்கில் தூங்கிக் கொண்டிருந்த உடைகள் எல்லாவற்றையும் தரம் பிரித்து அடுக்கியதிலேயே பார்கவிக்கு நேரம் போவது தெரியவில்லை. ஸ்டோர் ரூமே கதியாகக் கிடந்தாள். சில பெண்களை வைத்துக்கொண்டு விற்பனைக்குரியது, அனாதை ஆச்சிரமத்துக்குரியது என பிரித்து வகை குறித்துக்கொண்டாள்.
மனோராஜ் இடையிடையே தேநீரோ, குளிர்பானமோ கொண்டு வந்து கொடுத்துவிட்டு மேற்பார்வை செலுத்திவிட்டு செல்ல தவறவில்லை. அன்று வேலை முடிந்த நேரம் ஆதவன் புதிதாய் ஒரு ஐடியா சொன்னான்.
“மனோ அண்ணா.. என்ர வைஃப் ஒரு பியூட்டிஷியன். ஒன்லைன்ல சேல்ஸ் பண்ணுவதற்கு போட்டோ எடுத்து போடேக்க, நாங்க தனியா உடுப்பை எடுத்து போடுறதைவிட ஒரு ஆளுக்கு அதை போட்டு போட்டோ போட்டால் இன்னும் கூட அட்ராக்ஷன் ஆக இருக்கும். கூட ரீச்சாகும். என்ர வைஃப் அதுக்கு ஹெல்ப் பண்ணுவா. இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?”
“நிச்சயமாக நல்ல ஐடியாதான் ஆதி.. ஆனால் யாரை மொடலாக போடுவது? மொடலுக்கெல்லாம் காசு குடுக்கிற என்றால் இப்போதைக்கு நிதி நிலைமை கஷ்டம். அதைப்பற்றியும் யோசிக்கத்தானே வேணும்..”
அருகில் இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உடனே ஒத்துக் கொண்டாள்.
“மனோ சேர்! எனக்கு மொடல் மாதிரி இருக்க வேண்டும் என்றது சரியான விருப்பம். உங்களுக்கு சம்மதம் என்றால் நான் ரெடி சேர்..”
அந்த இருபது வயதுப் பெண் அழகாகவும் இருந்தாள். கண்களில் ஆசை மின்ன அவள் கேட்ட ஆர்வத்தைப் பார்த்து மனோவும் ஒத்துக் கொண்டான்.
“ஓகே காவியா! ஆனால் அதற்கு முதல் நான் உங்கட பெற்றோரைச் சந்திச்சுக் கதைக்க வேணும். உங்கட அம்மா, அப்பா ஒத்துக்கொண்டால் எனக்கும் சம்மதமே. அவள் அதற்கு சம்மதிக்க அன்று மாலையே மனோராஜும் காவியாவின் பெற்றோர்களைப் பார்த்து அவர்களின் சம்மதம் பெற்றுக்கொண்டான். எழுத்து மூலமாகவும் ஒரு ஒப்பந்தத்தை வாங்கிக்கொண்டான். அதற்கு தனியாக சிறு தொகையொன்று கொடுக்க ஒத்துக்கொள்ளவும் அந்த பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியாகவே ஒத்துக்கொண்டார்கள்.
“தம்பி..! காவ்யா வழக்கமாக பொம்பிளைப் பிள்ளைகள் அணியிற டி-ஷர்ட், ஜீன்ஸ், சல்வார், லெகங்கா, சாரி என்று சாதாரண உடை தானே அணியப் போகிறாள். அதனால எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு சந்தோசம் தான். உங்கட அப்பாவை எல்லாம் வடிவா தெரியும் தம்பி. அதனால உங்களில மிகுந்த நம்பிக்கை இருக்கு..”
அவர்கள் கூறியதைக் கேட்டு மனோவுக்கு தன் மேல் எத்தனை பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது மேலும் புரிந்தது. கடையில் வேலை செய்யும் இன்னொரு இளம் பையனும் ஆண்கள் ஆடைகளுக்கு ஒத்துக் கொண்டான். கனகண்ணை தன் மகள், மருமகனோடு பேசிவிட்டு பேரக் குழந்தைகளை அழைத்து வருவதாகச் சொன்னார். அடுத்த ஞாயிற்றுக்கிழமையே போட்டோ ஷூட் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். மனோ தனக்கே போட்டோகிராபி தெரியும் என்பதால் தானே புகைப்படங்கள் எடுத்து தருவதாகக் கூறினான். அவற்றை தானே பேஸ்புக்கில் அப்லோட் செய்ய செய்வதாகவும் சொன்னவன்,
“ஆனால் என்னால இருபத்துநாலு மணி நேரமும் ஒன்லைனில் இருந்து, வரும் மெசேஜ்க்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறதெல்லாம் முடியாத காரியம். அதற்கென்று தனியாக ஒரு ஆளை போடுவது நல்லது..”
அதைக்கேட்ட பார்கவி,
“ஐஸ்வர்யாவை இதற்குப் பொறுப்பாக போடுவோம். ஐஸ்வர்யாவின் முழுநேர வேலை இதுவாகவே இருக்கட்டும். அவளுக்கு ஒரு டபிளெட் வாங்கி கொடுத்தால் நல்லது. எங்கு போனாலும் கொண்டு செல்லக் கூடியதாகவும் இருக்கும். பகல் இரவு பார்க்காமல் வேலை செய்யவும் ஓகே.”
ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள். இப்படி ஒன்லைன் பிஸினஸுக்கு உரிய வேலையை மும்மரமாக தொடங்கினார்கள்.
அந்த ஞாயிற்றுக்கிழமை கடையில் வைத்தே போட்டோ ஷூட் செய்வதாக முடிவெடுத்தார்கள். உரிய ஆடைகளை, உரிய விதத்தில் அழுத்தி மடித்தார்கள்.
முகத்துக்கு இயற்கையாய் தோன்றக் கூடியது போல ஒப்பனை செய்வதில் ஆதவனின் மனைவி கவிதா சிறந்தவளாக இருந்தாள். அவளின் ஒப்பனையிலும் நேர்த்தியாக ஆடைகளை அணிவித்த விதத்திலும் காவியா அழகாக ஜொலித்தாள். ஒவ்வொரு உடையிலும் இரண்டு, மூன்று புகைப்படங்களை கடை மாடிப்படியில், அல்லது துணி வகைகளுக்கு முன்னால் வைத்து அழகாக எடுத்துக்கொண்டான் மனோராஜ்.
அவர்களுக்கு உதவுவதற்காக பார்கவியும் வந்திருந்தாள். அவளை பார்த்த கவிதா,
“அக்கா நீங்கள் சாரிக்குப் போஸ் கொடுத்தீங்களெண்டால் நல்ல வடிவாக இருக்கும். உங்கட உயரமும் உடம்பு வாகும் சூப்பராக இருக்கும் அக்கா. உங்கட இந்த நீண்ட தலை முடியே போதுமே. அம்சமாக இருக்கும்..”
அதைக்கேட்ட பார்கவியோ அதிர்ந்து போனாள். ‘அழகில்லை, கருப்பு நிறம் என்று முத்திரை குத்தப்பட்டவளை ஒரு பியூட்டிஷியன் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் உண்மையாகவே அவளால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.
“ப்ளீஸ் கவிதா.. விளையாடிக் கொண்டிருக்க நேரம் இல்லை இப்ப. என்னை கிண்டலடிக்காமல் வேலையைப் பாருங்கோ கவிதா..”
“அக்கா..! நான் சீரியசாதான் சொல்லுறன். உங்களுக்கு முகம் காட்ட விருப்பமில்லை என்றால் பாதி முகத்தை மறைத்தபடி கூட போஸ் கொடுக்கலாம். நீங்களாவது சொல்லுங்கோ மனோசேர்..”
“ப்ளீஸ் என்னால முடியாது.. என்ர போட்டோவைப் பார்த்துட்டு வார கஸ்டமரும் வாங்காம போக போறாங்கள். கடையிட பிஸ்னஸை குறைக்க வழி பாக்காதையுங்கோ. ப்ளீஸ் கவிதா இந்தக் கதையை விடுங்கோ..”
“அக்கா..! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஒரே ஒரு தடவை நான் ஒரு சாரி கட்டி ஒரு போட்டோ எடுத்துப் பார்ப்பம். அந்த போட்டோவ நீங்க பார்த்து உங்களுக்கு பிடிச்சிருந்தால் மட்டும் தொடர்ந்து எடுப்பம் சரியா?”
பார்கவி அதிர்ச்சியும் தயக்கமுமாய் மனோவை பார்த்தாள். அவன் புன்சிரிப்புடன் இவர்களின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தான். பார்கவியோ என்ன செய்வதென்று தெரியாமல் கவிதா அவளை அழகு என்று சொன்னதில் வந்த மகிழ்ச்சி ஒருபுறம் ஆட்கொள்ள பார்வையாலேயே மனோவிடம் கேட்டாள். அவள் கேள்வியைப் புரிந்து கொண்டவன்,
“கவிதா சொல்வது போல ஒரு தரம் ட்ரை பண்ணி பார்க்கலாம் பாரு.. உனக்குப் பிடிச்சிருந்தா போடலாம் இல்லையோ விடு. அவ்வளவுதான்..”
அவன் கூறவும் தயக்கத்தோடே கவிதாவுடன் சென்றாள். ஒரு பருத்திச் சேலையை அதற்குரிய ரெடிமேட் ரவிக்கையை அணிவித்து உரியவாறு மடிப்பெடுத்து மிக நேரத்தியாகவே கட்டி விட்டாள் பார்கவி. பார்கவியின் அழகைக் கெடுத்துக் கொண்டிருந்தது தாறுமாறாக அடர்த்தியாக வளர்ந்திருந்த புருவங்கள் தான். கவிதா அதையும் அழகாக ட்ரிம் பண்ணி விட்டாள்.
முகம், கை, கழுத்து, காதுகள் என்று வெளியே தெரியும் இடமெல்லாவற்றிற்கும் பவுண்டேசன் போட்டு விட்டு முகத்திற்கு அளவாய், இயற்கையாகத் தோன்றக் கூடியவாறு ஒப்பனையை செய்து விட்டாள். அன்றுதான் காலையில் தலைக்கு குளித்து காய வைத்திருந்த பார்கவியின் நீண்ட அலை அலையான கேசத்தை அழகாக வாரி விரித்து விட்டாள். சிறுசிறு அணிகலன்களையும் உரியவாறு அணிவித்தாள்.
பார்கவியை வெளியே அழைத்து வரவும், உண்மையில் அங்கிருந்த எல்லோருமே அசந்து தான் போனார்கள். மனோவோ அவளைக் கண்டு அத்தனை அதிர்ச்சியாயும் ஆர்வமுமாகப் பார்த்திருந்தான். பார்கவி இவ்வளவு அழகா? அவனால் நம்பவே முடியவில்லை. சிறு ஒப்பனை இத்தனை மாற்றங்களை கொண்டுவருமா?
காவியா கையே தட்டிவிட்டாள். சத்தியமா இது நீங்கள் என்றே நம்ப முடியேல்ல பார்கவியக்கா. இவ்வளவு நாளாக உங்கட வடிவை எல்லாம் எங்க ஒழிச்சு வைச்சிருந்தனீங்கள்? செமையா இருக்கிறீங்கள் அக்கா..”
காவியா கூறியதைக் கேட்டுக் கூச்சத்தோடு சிரித்தாள் பார்கவி.
“கவி..! நீயும் நல்ல பியூட்டிசியன் என்று இப்ப நம்புறன்டி..”
அமைதியான ஆதவன் கூடத் தனது பாராட்டைத் தெரிவித்தான்.
“ஆதியண்ணா.. இப்பிடி ஓவரா மனுசியோட வழியத் தேவையில்ல..”
காவ்யா சொன்னதைக் கேட்டு அங்கு ஒரு சிரிப்பொலி பரவியது.
எல்லோருடைய பாராட்டையும் கேட்டுக் கூச்சத்தோடு சிரித்தவாறு நன்றி கூறிக் கொண்டே மனோராஜை பார்த்தாள் பார்கவி. அவனும் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். பார்வையாலேயே விழுங்கிக்கொண்டு அதிர்ந்து போய் நின்று இருந்தான் மனோ. அவன் பார்வையே அவனுக்கும் பிடித்திருப்பதைப் புரிய வைக்க, கவிதா தான் அவனை நிஜ உலகிற்கு கொண்டு வந்தாள்.
“மனோ சேர்..! இப்ப என்ர வேலை முடிஞ்சுது. பாரு அக்காவை வடிவா போட்டோ எடுக்க வேண்டியது இனி உங்கட வேலை.”
கூறியவாறே மாடிப் படிகளில் பார்கவியை நிற்க வைத்தவள், கூந்தலை ஒரு பக்கமாக முன்னே விட்டு சேலை மடிப்பைக் கீழே குனிந்து சரி செய்வது போல பார்க்க சொன்னாள். பார்கவியும் அதேபோல செய்ய, மனோவும் சில படங்களை கிளிக்கித் தள்ளினான். உடனேயே ஆர்வம் தாங்காது எல்லோருமாக அதைக் கணனியில் இணைத்துப் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அவ்வளவு அழகாக வந்து இருந்தது. பார்கவிக்குக் கூட அது தான் தானா என்ற சந்தேகம் வந்தது. அழுதே விட்டாள்.
கவிதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டவள்,
“எனக்கு எப்படி நன்றி சொல்ற என்றே தெரியேல்ல கவிதா. ரொம்ப ரொம்ப நன்றிம்மா.. வடிவில்லை, வடிவில்லை என்றே கேட்டுப் பழகிப் போயிருந்த எனக்கு இந்த போட்டோவைப் பார்க்க சரியான சந்தோசமா இருக்கு. நானும் வடிவுதான் என்று நம்பிக்கை வந்திருக்கு. தாங்ஸ் எ லொட் கவிதா.”
குரல் தளதளக்கக் கூறிய பார்கவியிடம் இதமாய் பதிலளித்தாள் கவிதா.
“நீங்கள் வடிவு தான் பாரு அக்கா. நீங்கள் உங்களில அக்கறை இல்லாமல் இருந்தது தான் அப்பிடி வடிவில்லாம இருந்தது போல நினைக்க வைச்சதுக்குக் காரணம். உங்களை நீங்கள் சரியாகக் கவனிக்கிறது இல்லை. அவ்வளவுதான். மற்றபடி இந்த உலகத்தில வடிவில்லை என்று யாருமே இல்லை அக்கா. எல்லோருமே தங்களை கொஞ்சம் கவனமெடுத்து அழகு படுத்திக் கொண்டால் எல்லோருமே வடிவுதான். அழகுபடுத்துவது ஒண்டும் தப்பில்லை. எங்களை நாங்களே அழகாக வைச்சிருந்து, எங்களை நாங்களே நேசிக்கிறதில என்ன பிழை?”
கவிதா சொன்னதைக் கேட்டு பார்கவி சிரித்துக்கொண்டே ஆமோதிப்பதாய் தலையாட்ட, ஆதவன் குறுக்கிட்டான்.
“நிப்பாட்டு கவி.. கிடைச்ச ஹப்பில லெக்சர் அடிக்கத் தொடங்கிட்டியே. போ.. போ.. போய் காவ்யாக்கும் பார்கவியக்காவுக்கும் அடுத்த சாரியைக் கட்டி விடு..”
“நான் ஒண்டு சொன்னால் இந்த மனுசனுக்குப் பொறுக்காதை. உடன ஏதாவது சொல்ல வந்துடுவார். நீ வா காவ்யா..”
கவிதா புறுபுறுத்துக் கொண்டே பெண்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அன்றைய நாள் முழுவதும் போட்டோசூட்டிலயே நாள் கழிந்தது. மாலை ஐந்து மணி வரையும் கடையிலேயே சாப்பிட்டு, இடையிடையே குளிர்பானத்தோடுமாய் பாதி ஆடைகளுக்கான போட்டோசூட்டை முடித்திருந்தார்கள். எல்லோருக்கும் அயர்வாக இருந்தாலும் கூட வேலை நடந்த வேகத்தில் மிக மகிழ்ச்சியாகவே உணர்ந்தார்கள்.
மாலையில் எல்லோரும் புறப்பட்டிருக்க, அணிந்த ஆடைகளை உரியவாறு மடித்து அடுக்கி வைப்பதில் ஈடுபட்டிருந்த பார்கவியும் மனோராஜும் தான் எஞ்சியிருந்தார்கள்.
கணணியில் அனைத்து புகைப்படங்களையும் பதிவேற்றிக் கொண்டிருந்தவன் பார்கவியை அழைத்தான்.
“பாரு..! எந்த எந்த போட்டோவை பேஸ்புக்ல போடுறது.. விலை போடுறதா? எப்பிடி கப்சன் போடுற என்று சொல்லு ஒருக்கால்..”
கை வேலையை விட்டு விட்டு அவனருகே அமர்ந்தவள், தனது பக்கம் மடிக்கணணியைத் திருப்பியவள் எதைப் பதிவிடுவது என்பதை கூறிக் கொண்டே வேலையைப் பார்த்தாள். ஆனால் கேட்க வேண்டியவனோ அதைப் பற்றிய அக்கறையின்றி கதிரையில் வாகாய் சாய்ந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து எந்த வித சத்தத்தையும் காணாது நிமிர்ந்து அருகிலிருந்தவனை பார்த்தாள்.
“என்ன ராஜ்.. நான் சொல்லிக் கொண்டிருக்கிறன்.. நீங்க என்னடா என்றால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறியள்?”
“இவ்வளவு வடிவையும் இவ்வளவு நாளும் எங்க ஒழிச்சு வைச்சிருந்தாய் பாரு..? முந்தி நல்ல குண்டாய் இருந்தனிதானே.. இப்ப எப்பிடி மெலிஞ்சாய்? இனிமேல் ஒவ்வொரு நாளும் இப்பிடியே வடிவா வேலைக்கு வா பாரு.. பார்க்கவே நல்லா இருக்கு..”
“இப்ப இது உங்களுக்கு ரொம்ப முக்கியம். ப்ளீஸ் ராஜ்.. நேரம் போகுது.. வேலையைப் பாருங்கோ..”
“ப்ளீஸ் சொல்லு பாரு.. எனக்கு முக்கியம் தான். அவ்வளவு குண்டாக இருந்தனீ எப்பிடி இவ்வளவு கொடியிடை ஆளாக மாறினனீ?”
“அப்பா செத்ததோட சாப்பாடே வாயில வைக்க முடியேல்ல. முந்தி எப்ப பார்த்தாலும் நொறுக்குத் தீனியும் அதுவும் இதுவுமாகத் திண்டு வளர்த்த உடம்பு. அப்பா, பிறகு அம்மா ஒருத்தருக்குப் பின்னால ஒருத்தர் போய் சேர பசிக்கு மட்டும் தான் சாப்பிடறது. இதுதான் மெலிஞ்ச ரகசியம்.. போதுமா..? இப்ப வேலையைப் பார்ப்பமா?”
குரலில் எந்தவித தயக்கமோ தடுமாற்றமோ இன்றிக் கூறி முடித்தவள், வேலையில் ஆழ்ந்தாள்.
‘அம்மா, அப்பா எப்படி இறந்தனர் என்று ஏதாவது சொல்வாளா? என்று எண்ணி ஏமாந்தவனாய் ஒரு பெருமூச்சோடு வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
பார்கவி முன்பு போல இல்லாது மனோராஜுடன் சுமூகமாகவேதான் பழகுகிறாள். என்றாலும் அவன் எதிர்பார்த்த நெருக்கம் இன்று வரை ஏற்படாதது அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தையேதான் தந்தது.
காரிகையவள் மனம் திறப்பாளா? நண்பனவன் ஏக்கம் தீர்ப்பாளா?