செல்லம் – 02
காலையில் வழக்கம் போல அலாரம் அடிக்கவும் துடித்துப் பதைத்து எழுந்து வேலைக்குத் தயாரானாள் பார்கவி. இரவும் உணவு உண்ணாதது வயிறு தன் வேலையைக் காட்ட, அவசரமாக குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.
தோசைமா நான் இருக்கிறேன் என்று முகத்தைக் காட்ட மூன்று தோசைகளை வார்த்து ஹெட்சப்போடு உண்டாள். மதியத்திற்குச் சமையல் செய்யும் வலுவோ அவள் மனதில் இல்லை. அதனால் அதைப் பற்றிய சிந்தனையின்றி வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
வேலை இடத்தை அடைந்ததும் உரிய இடத்தில் தனது வண்டியை தரித்தாள். உள்ளே சென்றதும் வழமையான காலை வணக்கங்களை ஏற்றுப் பதில் வணக்கங்களை கூறிக் கொண்டே தன்னிருக்கைக்குச் சென்று அமர்ந்தாள்.
அவள் பணி புரிவது ஒரு ஆடை அகத்தில் தான். அந்நகரில் பல தசாப்தங்களாக வேரூன்றி இருந்த ஒரு கடை அது. இருந்தாலும் இப்போது வயதான முதலாளியால் சரியான கவனம் எடுக்க முடியாமல் வியாபாரம் படுத்து விட்டது. மூன்று மாடிகளிலிருந்த அந்தக் கடையில் பழைய வாடிக்கையாளர்கள் முதலாளி மேலிருந்த நம்பிக்கையில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் பெரிதாக லாபம் காண முடியவில்லை. வரவுக்கும் செலவுக்கும் கணக்குச் சரியாக இருந்தது. அந்தளவு கூட பார்கவியின் ஈடுபாட்டினால் தான் வந்தது எனலாம்.
பார்கவி இங்கு வேலையில் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. முதலாளி வரதர் ஐயாவை இவள் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யும் போது கண்டுதான் பழக்கமாகியது. அவள் அங்கு வேலையை விட்டு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டியபோது தற்செயலாகச் சந்தித்த வரதர் ஐயா அவள் உயிரைக் காப்பாற்றிப் புதுவாழ்க்கைக்கு வழி காட்டினார்.
அன்றிலிருந்து கடையையே தன் முழு நேரச் சிந்தனையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறாள். அவளின் பொறுப்புக் கடையை மேற்பார்வையிடுவது தான். ஆடைகளை உரிய விதத்தில் பிரித்து அடுக்குவதும் விற்பனையாளர்களை உரிய முறையில் வழிப்படுத்துவதும் நாள் இறுதியில் காசாளர் முடிக்கும் கணக்கைச் சரி பார்ப்பதுமாக அவள் பொழுது காலில் சக்கரம் கட்டியதாகவே பறந்து போய் விடும்.
இப்போதெல்லாம் மதிய உணவு இவளே சமைத்துக் கொண்டு வருவாள். வரதர் ஐயாவின் மனைவி இருக்கும் வரை இவளுக்கும் சேர்த்தே அவர் உணவு கொடுத்து விடுவார். மகளைப் போலவே எண்ணி இவளில் மிகுந்த வாஞ்சை உடையவர். அவர் இறந்த சில மாதங்களாக வரதர் ஐயாவுக்கும் இவளே உணவு சமைத்துக் கொண்டு வருவாள். இன்று அந்த மனோராஜின் சிந்தனையில் ஆழ்ந்து, உணவைப் பற்றி அக்கறையற்று வந்திருந்தாள். மதியம் கடையில் எடுத்துக் கொள்வோம் என்று எண்ணியவளாய் அன்றைக்கு வர வேண்டிய பொருட்களின் கொள்வனவுப் பட்டியலை எடுத்துச் சரி பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால் மனமோ வேலையில் ஒன்றுவதற்கு முரண் பிடித்தது. காரணம் வரதர் ஐயா கடையை இன்னொருவருக்கு விற்கப் போவதாக முடிவெடுத்தது தான். கடை கைமாறுகிறது என்ற செய்தியைக் கேட்டதும் பார்கவிக்கு ஒரு கணம் திக்கென்றது. வரதர் ஐயா இருந்தவரைக்கும் இந்த நான்கு வருடங்களாக எந்தவித பிரச்சனையும் இன்றி காலத்தை ஓட்டி விட்டாள். தன்னுடைய சொந்தக் கடையாகவே எண்ணி நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால் இனி புதிய உரிமையாளர்கள் எப்படியிருப்பார்களோ?
வரதர் ஐயாக்கு ஒரேயொரு மகள் தான். ஆனால் மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தது கனடாவில். மகள் காதல் என்று வந்து நிற்கவும் மகள் மீது உயிரையே வைத்திருந்த பெற்றோரால் மறுக்க முடியவில்லை. சந்தோசமாகவே திருமணத்தைச் செய்து வைத்தார்கள்.
மகளும் பெற்றோரைத் தங்களோடு வந்திருக்கச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டார். பேரப் பிள்ளைகள் மூவரும் பிறக்கும் போது வரதர் ஐயாவின் மனைவி அங்கு போய் சில பல மாதங்களாகத் தங்கி மகளுக்கு உதவி செய்து விட்டு வருவார். வரதர் ஐயா இங்கு கடையை அம்போ என்று போட்டு விட்டுப் போக முடியாமல் வருடத்துக்கு ஒரு தடவை இரண்டு மூன்று கிழமைகள் கனடா சென்று மகள் குடும்பத்தோடு தங்கி விட்டு வருவார்.
கடையை விற்று விட்டு கனடாவிலேயே வந்து தங்குமாறு மகள் கேட்டும் மகளுக்குப் பாரமாகப் போய்த் தங்க இவர் மனது இடங் கொடுக்கவில்லை. அதை விட பரம்பரையாக வளர்த்த தொழிலை யாருக்கோ விற்று விட்டுப் போகவும் பிடிக்கவில்லை.
வயது மூப்படைந்திருந்தாலும் இத்தனை வருடங்களாக பார்கவியின் உதவியோடு கடையைச் சமாளித்தார். ஆனால் அவருக்கு இப்போது கடைப் பொறுப்பு பெரிய பாரமாக இருந்தது. வயதின் மூப்பும் இத்தனை வருடங்களாகத் துணையாக இருந்த மனைவியின் இழப்புத் தந்த வலியையும் அந்த முதியவரால் தாங்க முடியவில்லை.
இனிமேல் வாழப் போகும் சில வருடங்களை மகளோடு கழிக்கவென முடிவெடுத்தார். மகள் இங்கே வந்து வியாபாரத்தைக் கவனிக்கப் போவதும் இல்லை. இவர்தான் அங்கே சென்று வாழ வேண்டும். கடையை வாடகைக்கு விட்டு இவர் காலத்துக்குப் பிறகு யார் பராமரிப்பது என்பது போன்ற கேள்விகள் எழ, கடையை முழுவதுமாக விற்பதுதான் தகுந்த தீர்வென எண்ணினார். அவரின் முடிவு அவருக்கே வலியைத் தந்தாலும் இதுதான் வாழ்க்கையின் நியதி எனும் போது அவரும்தான் என்ன செய்வது? வரும் போது எதைக் கொண்டு வந்தோம்.. போகும் போது எதைக் கொண்டு போகப் போகிறோம் என்ற மனநிலைக்கு வந்து விட்டார். பாவம்! அவரையும் குறைசொல்ல முடியாது.
ஆனால் பார்கவியின் நிலை? வரதர் ஐயா இந்த நொடி வரை சொந்த மகளாகவே அவளைப் பார்த்துக் கொண்டார். அவள் முடிவுகளுக்கு என்றும் மறுப்புச் சொன்னதில்லை. நட்டத்தில் போக ஆரம்பித்த கடை இவளின் வரவின் பின்னர் தான் கையைக் கடிக்காமல் ஓடத் தொடங்கியது. அதிலேயே இவள் மீது நல்ல நம்பிக்கை அவருக்கு. மனைவி இறந்த இந்தச் சில மாதங்களில் அவர் கடைப் பக்கம் எட்டிப் பார்ப்பது கூட இல்லை. பார்கவி தான் முழு வேலையையும் பொறுப்பாகச் செய்து கொண்டிருந்தாள். ஆனால் அனைத்துக்கும் இப்போது முடிவு காலம் வந்து விட்டது போலவே என்று எண்ணித் தவித்தாள்.
இந்தக் கடையை மேலும் நல்லபடியாக நடத்திப் பல மடங்கு லாபம் காணப் பல்வேறு வழிமுறைகள் அவள் மூளையெங்கும் பரவிக் கிடந்தன. ஆனால் அவற்றைச் செயற்படுத்தும் அளவுக்கு வரதர் ஐயாவுக்கு ஆர்வம் எழவில்லை. இப்போது அவையெல்லாம் வெறும் கனவுகளாகவே போய் விடுமோ என்று கூட அவள் மனம் கவலை கொண்டது.
இவள் வேலை நிலைக்குமா என்பதே முதலில் ஐயம்.. அப்படி நிலைத்தாலும் தனியாக வாழும் பெண்ணவளை மதித்து நடக்கக் கூடியவராக வேறு இருக்க வேண்டுமே. கடையை விற்கப் போவது யாரோ இளைஞனுக்கு என்று கூட ஒரு பேச்சு அடிபட்டு இவள் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருந்தது. பெற்றவர்களோடு வாழும் பெண்களுக்கும், கட்டிய கணவனோடு வாழும் பெண்களுக்குமே கூட வேலையிடங்களில் பாதுகாப்பற்ற நேரத்தில் அநாதையான இவளின் நிலை என்னாகுமோ?
வாழ்க்கையே வெறுத்துப் போய் சாகத் துணிந்தவளை வாழ வைத்தது உண்மையில் இந்தக் கடை தான். கறுத்துப் போன அவள் வாழ்வை வண்ணமயமான இந்த ஆடைகள் வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றன. எப்போதும் வாடிக்கையாளர்களினதும் விற்பனையாளர்களினதும் பேச்சுச் சத்தத்தால் கலகலத்துக் கொண்டிருக்கும் அந்த இடம், அவளது சொந்தப் பிரச்சினைகளை எண்ணிக் கொண்டிருக்க விட்டதில்லை.
இப்போது கூட அவளை மேலும் சிந்திக்க விடாமல் வரதர் ஐயாவின் குரல் தடுத்தது.
“நீ என்ன யோசனையில இருக்கிறாய் என்று தெரியும் கவிம்மா.. என்ர நண்பனிட மகன்தானம்மா கடையை வாங்கியிருக்கிறான். அதனால் நீ ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்ல. நல்ல பொடியன் தான். பயப்பிடாதை கவிம்மா..
நீ எப்பவுமே கடையை நல்லா நடத்துறதுக்கு ஆயிரம் யோசனை சொல்லுறாய். ஆனா அதையெல்லாம் உற்சாகமாகச் செய்ய உடம்பில பலமும் இல்லை மனசில தெம்பும் இல்லை. புது முதலாளி எல்லாத்தையும் செய்வானம்மா.. பழைய வேலையாட்கள் யாரையும் வேலையை விட்டு நிப்பாட்டக் கூடாது என்று அவனிட்ட சொல்லிட்டனம்மா. அதனால நீங்க எல்லாரும் ஒண்டுக்கும் பயப்பிடாமல் முந்தி மாதிரியே தொடர்ந்து வேலை செய்யலாம்.
கடையை பூட்டிட்டு கொஞ்சம் திருத்தம் செய்து திரும்பத் திறக்கலாம் என்று விருப்பப் படுகிறான். நானும் சரி சொல்லிட்டேன். உன்னைப் பத்தி அவனிட்ட வடிவா சொல்லியிருக்கிறன் கவிம்மா. உன்ர ஐடியாஸ் எல்லாம் அவனுக்கு வேணுமாம். நீதான் கூட இருந்து அவனுக்கு உதவி செய்யணும்மா..
கைமாத்தல் வேலை எல்லாம் ஓரளவு முடிஞ்சது. நான் வாற கிழமை கனடாக்கு வெளிக்கிடுறன். இண்டைக்கு மனோ கடையையும் உன்னையும் சந்திக்க வாறன் என்று சொன்னவன். உன்னோட கலந்து பேசி எப்ப கடையை மூடித் திருத்த வேலை தொடங்கலாம் எல்லாமே உன்னோட கதைச்சு பேசி முடிவெடுக்கிற என்று சொன்னான். ஆயுசு நூறு மனோ உனக்கு.. இங்க பார் கவிம்மா அவனே வந்திட்டான்..”
பார்கவிக்குச் சற்றும் அவகாசம் கொடுக்காமல் வரதர் ஐயா பேசி முடிக்கவுமே அந்த மனோ வந்து நின்றான்.
“ஹாய் செல்லம்..! நீதானா அந்த கவிம்மா.. அங்கிள் கவி கவி என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தக் கவி தான் பார்கவி என்று தெரியாமல் போச்சே எனக்கு.. வாட் எ சர்ப்ரைஸ் பேபி..”
வந்து நின்ற மனோராஜை அதிர்ச்சியோடும் வெறுப்போடும் பார்த்துக் கொண்டு நின்றாள் பார்கவி.
அவள் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைக்க வருங்காலம் என்னாகுமோ?