அத்தியாயம் – 16
விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன.
பின் ஒரு காலத்தில் நான் சுயசரிதை எழுதினா தேவைப்படும் என்று தனக்குள் சொல்லி சிரித்துக் கொண்டாள். அத்துடன் ஜர்னல் ஒன்று. தினமும் அவள் என்ன புதிதாகக் கற்றுக் கொண்டாள் என்ற விவரங்கள். எதுவும் இல்லையென்றாலும் அருகில் இருக்கும் ஒரு ஊரின் பேரோ அல்லது தெருவின் பேரோ உறங்குவதற்கு முன் ஓவியாவிடம் கேட்டு அறிந்து கொள்வாள்.
கற்றல் இருக்கிறதே அது போதை தரும் விஷயம். அதனை ஒரு தடவை சுவைத்துவிட்டால் இன்னும் இன்னும் என்று மூளை கேட்டுக் கொண்டே இருக்கும்.
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு குளிக்க எழுந்தாள். ஷாப்பிங் போகக் கூட நேரமில்லை. அவளுக்கும் ஓவியாவுக்கு சேச்சிதான் மளிகை பொருட்கள் வாங்கும்போது பக்கத்தில் இருக்கும் ஆயுர்வேத கடையில் சோப்பு, பவுடர் எல்லாம் வாங்கி வருகிறார்.
“நான் வாங்கித் தரத அப்படியே போட்டுக்குறிங்களே. உங்களுக்குன்னு என்ன வேணும்னு சொல்லுங்க பொண்ணுங்களே”
“சேச்சி, நீங்க என்ன சோப்பு போடுறிங்களோ அதையே நாங்களும் போட்டுக்கிறோம். உங்க அழகு ரகசியத்தை எல்லாம் சொல்லுங்களேன். வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? உங்களை வெயிலுக்கே காட்டாம வளத்தாங்களா? என்ன ஒரு கலர்! கிள்ளினா அப்படியே சிவந்துடுறிங்க சேச்சி. எங்களுக்கும் கொஞ்சம் இந்த அழகைக் கடன் தர்றது?”
கன்னத்தைக் கிள்ளுவாள் ஓவியா.
“போயி குளிங்கடி” என்று கையைத் தட்டி விடுவார்.
“சேச்சி இப்பத்தான் பாக்குறோம் கழுத்தில் என்ன தழும்பு?”
“அதெல்லாம் என் வாழ்க்கை போரில் பட்ட காயம். ரெண்டு பேரும் போயி குளிச்சுட்டு கிளம்புங்க”
மாரியம்மா அக்கா கஷ்டம் இல்லாதவங்க இந்த உலகத்திலேயே கிடையாது என்று சொன்னது அப்படியே எக்கோ எபெக்டில் செம்பருத்தியின் மனதில் ஒலித்தது.
இங்கு வந்து இத்தனை மாதமாகியும் இன்னும் அவினாஷைப் பார்க்கக் கூட முடியவில்லை என்பதுதான் அவளது வருத்தம்.
பக்கத்து அறையிலிருந்து ஓவியா ஓடி வந்து “அக்கா இந்த கணக்கு ஹோம்வொர்க் மட்டும் செஞ்சு வச்சுறேன். சாய்ந்தரம் டியூஷன்ல டீச்சரம்மா கேட்கும்”
“வீட்டுப்பாடம் மட்டும் நீதான் செய்யணும். நான் வேணும்னா உதவி செய்றேன்”
“சே.. இந்த பப்ளிக் எக்ஸாம் எப்பத்தான் முடியுமோ” என்று திட்டிக் கொண்டே ஓடினாள்.
செம்பருத்தியும் இனி கிளம்பி வேலைக்கு செல்ல வேண்டும். மாலை ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி அவளும் ஓவியாவும் பேருந்தில் கல்லூரிக்குக் கிளம்புவார்கள். அபிராமின் சிபாரிசு என்பதால் ஓவியாவைப் பாஸ் மார்க் வாங்கச் செய்வது வாத்தியார்களின் தட்ட முடியாத கடமை ஆயிற்று. எல்லாரும் சேர்ந்து அவளை மெனக்கெட்டு படிக்க வைத்தனர். ஒரு ஆசிரியர் மனது வைத்தால் படிப்பு வராது என்ற வார்த்தையே மாணவர்களின் அகராதியிலிருந்து நீக்கி விடலாம் என்று கற்றுக் கொண்டாள் செம்பருத்தி.
ஓவியாவுக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தந்த தற்காலிக ஆசிரியை ஸபமோல் அவளது வீட்டுப் பாடத்தைக் கண்டு இவளை எப்படித் தேற்றுவது என்றெண்ணி கலங்கிவிட்டார்.
“ஓவியாவுக்கு கணக்கே வரல. இவ பெயில் ஆனா தன்னோட பேரு கெட்டுப் போயிடும்னு எல்லாரும் என்கிட்டே இவளைத் தள்ளிட்டு போய்ட்டாங்க. இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம் ஷெம்பருத்தி. என்னைக் கல்யாணம் கட்டினவர் குடும்பத்தைப் பாக்க சவுதிக்கு போய்ட்டார். கொஞ்ச நாளா அவருக்கு உடம்புக்கு முடியல. எனக்கு இந்த வேலை நிரந்தரமானா இங்கேயே வந்துடுவார். ஆனா இவ பாசாகலைன்னா என்னோட வேலையும் போய்டும்”
“நீங்க கவலைப்படாதிங்க டீச்சர் நான் அவளை வீட்டில் படிக்க வைக்கிறேன்” என்று உறுதி அளித்தாள்.
“தினமும் காலைல இந்த பார்முலா எல்லாத்தையும் ஒரு தடவை பாக்காம எழுத வை செம்பருத்தி. அது போதும்”
“சரி டீச்சர்”
சபமோலைப் பார்ப்பவர்கள் அவளது மலர்ச்சியான முகத்திலும் அழகான உடைகளையும் கண்டு அவளுக்கென்ன வீட்டுக்காரன் அரபு நாட்டில் சம்பாரிச்சு கொட்டுறான். காசாசை பிடிச்சு இங்க வேலைக்கும் வர்றா பாரு. என்று அவளது காது பட பொறாமையில் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ஆனால் அவளது நிலையோ இப்படி.
சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் எத்தனை விதமான கவலைகள்? அவர்களைக் கரித்துக் கொட்டுபவர்களுக்குத்தான் எவ்வளவு வன்மம்? இந்த சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே. அதற்காகத்தான் முதுகலை சோசியாலஜியைத் தேர்ந்தெடுத்தாள்.
செம்பருத்திக்கு ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை கல்லூரி அதன் பின்னர் சில நாட்கள் கார் சில சமயம் பஸ் என்று வீட்டுக்கு வந்து சேர்வார்கள். இரவு உணவு முடித்துவிட்டு படிப்பு, மறுபடியும் அதிகாலை விழித்து படிப்பு என்று இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. சமீபத்திய தேர்வில் ஓவியா எல்லா பாடங்களிலும் பாஸாகி இருந்தாள். அதுவே அனைவருக்கும் சந்தோஷம்.
“குட், குட்… “ என்று பாராட்டி ஓவியாவுக்கு புதிய வாட்ச் ஒன்றைப் பரிசளித்திருந்தான் அபிராம்.
ஓவியா பள்ளிக்குக் கிளம்பிவிட, செம்பருத்தி வேலையில் ஆழ்ந்தாள். “செம்பருத்தி இன்னைக்கு வரும்போது கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வர்றியா?” என்று பைலைப் பார்த்த வண்ணம் கேட்டான் அபிராம்.
“சரி சார். ஆனால் நீங்க குடிக்கிற ப்ராண்ட் கொச்சில தானே கிடைக்கும். பேசாம கோபன் கிட்ட வாங்கிட்டு வர சொல்லலாமே”
“சொல்லலாம். ஆனால் நான் குடிக்கிற ப்ராண்ட் வாங்கித் தர மாட்டிங்கிறாங்க. அவங்களே தர்றதைத் தான் குடிக்கணும். இவங்க கிட்ட கேட்டால் உடனே பெரிய வீட்டுக்குத் தகவல் போயிரும். தினமும் காலைல எந்திரிச்சதிலிருந்து ராத்திரி தூங்குற வரை நான் என்னென்ன செய்யணும்னு ரிமோட் கண்ட்ரோல்ல என்னை இயக்குறது அராஜகம் இல்லை. கடுப்பா இருக்கு. ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு”
மது அருந்துவதைக் கூட நிறுத்தி விட்டிருக்கிறான். இந்த சின்ன சலுகை தரலாம். பெரிய வீட்டில் ஏன் சிறிய விஷயங்களில் கூட கட்டுப் படுத்துகிறார்களோ தெரியவில்லை.
“சரி சார். இன்னைக்கு நான் வேணும்னா காலேஜை கட் அடிச்சுட்டு வாங்கிட்டு வரேன்”
“ச்ச காலேஜை கட் பண்ணாதே. நான் வேறேதாவது செய்ய முடியுமான்னு பாக்குறேன்”
சிறிது நேரத்தில் வந்தவன். “ஒரு ஆள் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். தினமும் கல்லூரியில் கொண்டு வந்து தருவான். நீ வீட்டுக்கு எடுத்துட்டு வந்து என் கிட்ட தந்துடுறியா?”
இதில் ஒன்றும் வித்யாசமாகத் தோன்றாததால் சம்மதித்தாள். அதன்பின் தினமும் அவளது கல்லூரி மாணவன் ஒருவன் அவளிடம் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்றைத் தர, அதை எடுத்துக் கொண்டு வந்து அபிராமிடம் தருவாள். அது ஒன்றும் பிரம்மாதமில்லை. இருநூற்றி ஐம்பது மில்லிலிட்டர் அளவே கொள்ளும் சிறிய பாட்டில். கைப்பையில் அடக்கிவிடலாம். அபிராமும் அவளுக்காகக் காத்திருந்து ரகசியமாக வாங்கிச் செல்வான்.
“ஏன்கா இப்படி தொள தொளன்னு லூசா டிரஸ் பண்ணிட்டு வர்ற. புதுசு வாங்கலாம்ல” என்று இரு நாட்களாக ஓவியா நச்சரிக்கிறாள்.
இப்பத்தான் அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி வாங்கின புது ட்ரெஸ். சிலதெல்லாம் ரெண்டு மூணு தரம் தான் போட்டிருக்கேன். அதுக்குள்ளே என்ன புதுசு வேண்டிக்கிடக்கு என்றபடி பெட்டியிலிருந்து ஊரிலிருந்து வாங்கிய சல்வாரை எடுத்து அணிய, நிஜமாகவே ஆங்காங்கே தொங்கியது போலவே தோன்றியது.
சரி கொஞ்சம் நேரம் இருக்கிறது. தொங்கும் இடங்களில் பிடித்துத் தைக்கலாம். என்று காளியம்மாவை அழைத்து துணியை இழுத்துப் பிடித்துக் கொண்டு மார்க் செய்யச் சொன்னாள்.
“பாப்பா, மடிச்சு தைக்கவெல்லாம் முடியாது வெட்டித்தான் தைக்கணும். டைலர்கிட்ட கொடு நான் தச்சு எடுத்துட்டு வரேன். இல்லைன்னா பேசாம புது ட்ரெஸ் வாங்கிக்கோ. இதெல்லாம் நைட்டி மாதிரி இருக்கு”
“நிஜம்மாவாக்கா… “ அப்ப உடம்பு குறைஞ்சுடுச்சா? சந்தோஷத்தில் மத்தாப்பூவாய் மலர்ந்தது செம்பருத்தியின் முகம். இத்தனைக்கும் மாரியம்மாக்கா எழுதித் தந்த டயட்டைக் கூட கடை பிடிக்கவில்லை.
“இங்க எடை பார்க்க மெஷின் இருக்கா?”
“நல்லா கேட்ட போ… நம்ம அய்யாவை டாக்டர் பாக்க வருவாரே… அந்த ரூமில் இருக்கும். பாலா கிட்ட கேளு எடுத்துத் தருவான்”
குடுகுடுவென ஓடிச் சென்று எடை மெஷினைத் தேடி அதில் நின்று பார்த்தாள். எண்பது கிலோவிலிருந்து எவ்வளவு குறைந்திருக்கிறது? எழுபதா? இத்தனைக்கும் அவள் ஒன்றுமே செய்யவில்லையே.
“இதென்ன வீட்டில் எல்லாரும் இப்படி இளைச்சுட்டே போறிங்க” என்ற பாலனின் முணுமுணுப்பு அவள் காதிலேயே விழவில்லை.
மாரியம்மாவை அன்றே அழைத்து இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள். அவளது சாப்பாட்டு மெனுவை, சாப்பிடும் நேரத்தை மற்ற விவரங்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் மாரியம்மா.
“இதில் எனக்கு ஆச்சிரியமே இல்லடி”
“எப்படிக்கா? இத்தனைக்கும் நீங்க சொன்ன உணவு வகை ஒன்னு கூட பாலோ பண்ணலையே”
“பண்ணிருக்கியே… முதலில் சுவீட்டை நிறுத்திருக்க, ரெண்டாவது உணவில் உப்பு உறைப்பு இல்லாம காலைல பழைய சோத்து தண்ணி மோர் சேர்த்து குடிச்சிருக்க. அதெல்லாம் உன் அசிடிட்டி குறைச்சுடுச்சு. சீரகம், இஞ்சி, பெருங்காயம், வெந்தயம்னு ஹார்மோன், செரிமானம் ரெண்டையும் சரி செஞ்சுருக்கு. இன்னொன்னு கொத்தவரங்காய். அது கூட உன்னோட உடம்பு குறைய ஒரு காரணம்”
“இத்தனைக்கும் தேங்காய், தேங்காய் எண்ணெய், வெண்ணை எல்லாம் சாப்பிட்டேன்”
“எல்லாம் அளவோட எடுத்திருக்க. வீடியோ கால் வா… “
வீடியோ காலில் செம்பருத்தியைப் பார்த்த மாரியம்மா “அடியேய் செம்பருத்தி நீயா? முகமெல்லாம் பாதியா வத்திருச்சு. கேரளா செல்வதற்கு முன், பின் அப்படின்னு போட்டோ போடலாம் போல. ஸ்கின் டோன் கூட இம்ப்ரூவ் ஆயிருக்கு. எடை குறைஞ்சதால இருக்கலாம். முடி கொட்டுறது எப்படி இருக்கு?”
“எவ்வளவோ குறைஞ்சிருக்குக்கா ஆனால் ஃபுல்லா நிக்கல”
“அதுக்கு நேரமாகும். நம்ம உடம்புக்கு பிரச்சனைன்னா முதல்ல கொட்டுறது முடிதான். பிரச்சனை எல்லாம் சரியானதும் கடைசியாதான் முடி கொட்டுறது நிக்கும். ஸ்கின்னுக்கு என்ன போடுற”
“இங்க வெளிய போக நேரமில்லைக்கா அதனால பக்கத்தில் கிடைக்குற ஆயுர்வேத வேப்பிலை மஞ்சள் கலந்த சோப்பு, ஷாம்புதான்”
“என்ன செஞ்சியோ தெரியல ஆனால் அதைத் தொடர்ந்து செய். முதல்ல புது டிரஸ் வாங்கு. இது கோணியை சுத்திகிட்டு நிக்கிற மாதிரி இருக்கு”
“சரிக்கா… இந்த வாரம் போயி வாங்கிடுறேன்”
“உனக்கு பீரியட்ஸ் சரியா வருதா?”
மாரியம்மா கேட்டதும்தான் யோசித்தாள். முன்னெல்லாம் எப்போது ஆரம்பிக்கும் எப்போது நிற்கும் என்றே சொல்ல முடியாது. இப்போது மாதத்திற்கு ஒரு முறை என்று சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் வந்து விடுகிறது.
“நல்லது இன்னும் எடை குறைஞ்சு டோன் ஆகும்போது நாள் இன்னும் குறையும். தூக்கத்துக்கு நடுவில் எந்திருச்சு சாப்பிடுவியே அது இன்னமும் தொடருதா?”
“அதெல்லாம் இப்ப நின்னுருச்சுக்கா. படுக்கைல விழுகுறதுதான் தெரியும். பாத்ரூம் போகக் கூட நடுவில் எந்திரிக்கிறதில்லை”
“நல்ல உறக்கம் அப்படித்தான் இருக்கும். சரி, நீ ஒழுங்கா ஏழு மணி நேரம் தூங்குறியா?”
“எங்கக்கா முன்னாடி ஏழெட்டு மணி நேரம் நல்லா தூங்குனேன். இப்ப ஈவினிங் காலேஜ்ல சேர்ந்திருக்கேன். தூங்க லேட் ஆயிடுது”
“அதுதான் நம்ம ஹெல்த்துக்கு எதிரி. ராத்திரி பதினோரு மணிக்காவது தூங்கிடு. காலைல சீக்கிரமா எந்திரி. ஏழு மணி நேரமாவது தூங்க முயற்சி பண்ணு. நடை பயிற்சி செய்”
“சரிக்கா”
“ஒரு தரம் ஊருக்கு வந்து எங்களைப் பாருன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு. ஆனால் இப்போதைக்கு வந்துடாதே”
“ஏன் கா?”
“என்னமோ தெரியலைடி உங்க அத்தைக்காரி உன்னைப் பத்தி ஜலப்பிரியாகிட்ட விசாரிச்சிருக்கா? எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ”
“சரிக்கா… “ என்றாள் யோசனையுடன். எதற்காக இவளைத் தேடுகிறார்கள்? இதற்கு மேல் விவரம் கேட்க முடியாது. மாரியம்மா அக்கா நோயாளிகளைப் பார்க்கும் நேரம்.
எதற்காக அவளைத் தேட வேண்டும்? ஜலப்பிரியாவை அழைத்தாள்.
“ஏய் நானே உன்னைக் கூப்பிடணும்னு பாத்தேன்டி. நீ வேற காலைல வேலைக்குப் போயிருவ, சாய்ந்தரம் காலேஜுக்கு போயிருப்ப. எப்ப வருவேன்னு தெரியாதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். உங்க அத்தைக்காரி வீட்டில் என்னவோ பிரச்சனை போலிருக்கு”
“என்ன பிரச்சனை? அதுக்கும் என்னை தேடுறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“தெரியலடி… உங்கத்தக்காரி என்கிட்டே கேட்டா… நான் மெட்றாஸ்ல காலேஜுல படிக்கிறன்னு சொல்லிட்டேன். போன் நம்பர் கேட்டுச்சு. வக்கீலுக்குத்தான் தெரியும்னு சொல்லிட்டேன். ஒருமுக்கியமான விஷயம்டி உங்க அத்தையோட புது மருமக அந்த கவிதா கல்யாணமாகி இந்த ஆறு மாசத்துக்குள்ள ரெண்டு தரம் கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போய்ட்டா… என்ன நடக்குதுன்னு தெரியலடி… எதுக்கும் நீ இந்தப்பக்கம் எட்டி கூட பாத்துடாத”
அவள் அத்தையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தபோதே அவள் சற்றும் எதிர்பாராத இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கின.
எந்த அவினாஷை சந்திக்க முடியாமல் வெண்மேகம் வந்து நீந்தாத வானமாக ஏங்கினாளோ அவனை இப்படி ஒரு சூழ்நிலையில் பார்ப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முன் கூனிக் குறுகி ஒரு குற்றவாளியாய் நிறுத்திய இந்த விதியை என்ன சொல்ல?
Nice
Thanks Bargavi
Ha ha… இந்த அபிராம் இருக்கானே… இவன நம்பி இந்த செம்பருத்தி பொண்ணு…
நம் சமூகத்தில் நம்முடன் பயணிக்கும் சராசரி பெண்களின் பிரச்சனைகளை அழகா ஹான்டில் பண்றீங்க. Nice epi… waiting ✋
Thanks KPN