Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’

அத்தியாயம் – 19

யாதவ்வின் காதல் ஈடேறுமா?

 

 

கவின்யாவின் அறையில் உடை மாற்றி அங்கிருந்த ஒற்றை ஸோபாவில் அமர்ந்திருந்தான் யாதவ். கவியோ அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அந்த ஒப்பனையைக் கலைப்பதில் ஈடுபட்டிருந்தாள். நெற்றிச்சுட்டியை எடுத்து விட்டு அவள் நீண்ட கூந்தலை ஏதோ விதமாக சுருட்டி போட்டிருந்த அந்த கொண்டையைக் கலைப்பதற்கு போராடிக் கொண்டிருந்தாள்.

 

 

அருணியிடம் அலங்காரங்களைக் கலைப்பதற்கு உதவி கேட்டிருந்தாள் தான். ஆனால் அவளோ “நீயாச்சு..

உன் புருஷனாச்சு…” என்று தனது அறைக்கு சென்றிருந்தாள். இப்போது வேறு வழியில்லை. அருணியினது அறைக்குச் சென்று அவள் உதவியைக் கேட்டிட வேண்டியதுதான் என்று சலித்தபடி எழுந்தவளை யாதவின் குரல் மறித்தது. 

 

 

நான் ஹெல்ப் பண்ணவா கவி…?” மென்மையாக கேட்டவனிடம் மறுக்க முடியாது மௌனமாய் தலையசைத்தாள். 

 

 

அவனும் அவளை நிலைக் கண்ணாடி முன்னால் இருந்த அந்த உயர்ந்த முக்காலியில் உட்கார வைத்து விட்டு தலையிலே சொருகியிருந்த ஒவ்வொரு கிளிப்பாக கழட்டத் தொடங்கினான். 

 

 

கவி… ஒண்டு கேட்டா தப்பா நினைக்க மாட்டீரே….”

 

 

இல்ல…. கேளுங்கோ…”

 

 

என்ன கேட்கப் போகிறான் என்று படபடத்து துடித்த இதயத்துடிப்பு எங்கே அவனுக்கு கேட்டு விடுமோ என்ற பயத்தில் மனதை அடக்கியபடி அவன் கேள்விக்காய் அவன் முகத்தை நிலைக் கண்ணாடியில் நிமிர்ந்து பார்த்தாள். அவனும் ஒரு நொடி அவளது கண்களை நேராக ஊடுருவிப் பார்த்து விட்டு கருமமே கண்ணாக தொடர்ந்து அவள் கூந்தலை கலைத்துக் கொண்டு கேட்க நினைத்ததைக் கேட்டான். 

 

 

கவி… ஏன் தாலி கட்டேக்க அழுதீர்? என்னைக் கட்ட வேண்டியதாப் போச்சுதே என்று கவலையாக இருந்துச்சா…?” 

 

 

ஆதங்கமும் கவலையுமாய்  கேட்டவனை ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். அதற்குள் அவன் முழுவதுமாக கொண்டையைப் பிரித்திருக்க முக்காலியை விட்டு இறங்கி தலையை வாரக் கையிலே சீப்பை எடுத்தவள்,

 

 

சத்தியமாக எனக்குத் தெரியாது யாதவ் நான் ஏன் அழுதேன் எண்டு…. ஆனா உங்களை கல்யாணம் பண்ணினதுக்காக அழேல என்று மட்டும் தெரியும்…. நீங்க என்னை மரி பண்ண நான் குடுத்து வைச்சிருக்கணும் யாதவ்… என்ர பிரச்சினை எல்லாம் தெரிஞ்சும் அதெல்லாம் பெரிசுபடுத்தாமல் நீங்க என்னோட பழகுறது எவ்வளவு பெரிய விசயம்… பிறகு நான் எப்பிடி உங்களை கட்ட வேண்டியதாப் போச்சு என்று கவலைப் படுவேன்…”

 

 

ரொம்ப தாங்ஸ் கவி… நான் ரொம்ப அப்செட் ஆகிட்டன். அப்புறம் ரெஜிஸ்ரேஷன்ல நீர் நோர்மலா சிரிச்சுக் கதைக்கவும் தான் எனக்கு உயிரே வந்துச்சு…”

 

 

ஹ்ம்…. ஈவினிங் ஸாமைப் பார்த்ததும் மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு… அம்மாட ஆசைக்காக எங்க அவரிட வாழ்க்கையோட விளையாடிட்டனோ என்று ரொம்ப உறுத்தலா இருந்துச்சு… அவரும் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டு ரெஜிஸ்ரேஷனுக்கு வந்ததும் இவ்வளவு நாளும் கவலைப்பட்டு குழம்பின எல்லாம் தீர்ந்து போய்ட்டுது”

 

 

ஓமோம் கவி… நல்ல ஃபோய்… ரொம்ப அமைதியாக வந்து சந்தோசமா வாழ்த்திட்டுப் போனார்… நீர் எனக்குக் கிடைச்சிருக்காட்டில் நான் நிச்சயமாக அவரை மாதிரி இருந்திருக்க மாட்டன்… ஒண்ணு தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்து போத்தலும் கையுமா இருந்திருப்பன்… அல்லது நீர் நல்லா இருக்கக் கூடாது என்று பழிவாங்க துடிச்சிருப்பன்… இப்பிடி நீர் நல்லா இருக்கோணும் என்று வாழ்த்திற அளவுக்கு நான் நல்லவன் இல்லை…”

 

 

அவனின் பதிலைக் கேட்டு மென்மையாக சிரித்தவள்,

 

 

ஏதோ ஸாமைப் பார்த்த பிறகு மனசில இருந்த பாரமெல்லாம் இறங்கி இனியாச்சும் கொஞ்சம் என்ர புருஷனைப் பற்றி அறிஞ்சு கொள்ளலாம் என்று தோணுது… 

 

 

தலையெல்லாம் ஜெல் வைச்சது… சரியா ஒட்டுது. நான் போய் முழுகிட்டு  (தலைக்குக் குளித்து விட்டு) வாறன். ப்ளீஸ் குறை நினைக்காதீங்கோ… ஃபோர் அடிச்சால் என்ர கொம்பியூட்டர்ல ஏதாவது நோண்டிட்டு இருங்க. கவி என்ற போல்டர்ல என்ர போட்டோஸ் இருக்கு. பாக்கிற என்றால் பாருங்கோ. நான் கெதியா வாறன்…”

 

 

கணவனிடம் உரைத்து விட்டு அவளது அறையோடு இணைந்திருந்த குளியலறையை நோக்கி விரைந்தாள். அவள் தலையைக் கழுவி குளித்து முடித்து ஒரு கருநீல நீளப் பாவாடையும் அதற்கேற்ப மெல்லிய இளநீலத்தில் ரீசேர்ட்டும் அணிந்து அவளின் நீண்ட கருங் கூந்தலை ஈரம் போக உலர்த்தியபடி வெளியே வந்த போது கவி சொன்ன மாதிரியே யாதவ் அவளது புகைப்படங்களோடு ஒன்றிப்போய் இருந்தான். 

 

 

என்ன போட்டோஸ் பாத்து முடிச்சாச்சா…?” 

 

 

என்றவளின் குரல் கேட்டு தலையைத் திருப்பிப் பார்த்தவனால் அவளை விட்டு விழிகளை அகற்ற முடியவில்லை.  ஈரத் தலையோடு எந்த வித ஒப்பனைகளும் இன்றி புத்தம்புது மலராக நின்றவளை பார்த்து அந்த கணவனும் தான் என்ன செய்வான் பாவம்.

 

 

நிலைக் கண்ணாடிக்கு முன் அமர்ந்து ஹெயார் ட்ரையரால் தலையை உலர வைக்க ஆரம்பித்தாள். கணணியை விட்டு எழுந்து வந்தவன்,

 

 

கவி… ரொம்ப வடிவான முடி உமக்கு.நான் காய வைக்கவா…?” 

 

 

ஆசையாகக் கேட்ட கணவனிடம் மறுக்கவா முடியும்? ஹெயார்ட்ரையரைக் கொடுத்தாள். அவனும் வெகு லாவகமாக தன் விரல்களால் அவள் கூந்தலை அளைந்து விளையாடி, சிறிது சிறிதாக கூந்தலைப் பிரித்துக்காய வைக்கத் தொடங்கினான். 

 

 

ஷாம்பூ வாசம் முகத்தில் தாக்க பாண்டியனின் அதே சந்தேகம் யாதவ்க்கு. பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் இயற்கையாகவே உள்ளதா? இல்லையா? என்று. பாண்டிய மன்னனாய் மாறி மறுபடி ஒருவன் இங்கே கூந்தல் அழகில் தன் இதயம் தொலைத்தான்.

 

 

அவளின் நீண்ட கூந்தலின் பெரும் பகுதி காய்ந்ததும் தானே சீப்பை எடுத்து வாரத் தொடங்கினான். ஒரு ஆணின் நெருக்கம் அறிந்திராதவளுக்கு யாதவ்வின் செய்கைகள் எல்லாம் புதிதாக வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க வைத்தன. செய்வதறியாது முகத்திலே செம்மையேற உட்கார்ந்திருந்தாள். 

 

 

சீப்பால் வாரி விட்டவனுக்கு பின்னல் போடத் தெரியாமல் முயன்று விட்டு விரித்த கூந்தலாகவே விட்டு விட்டான். யாதவ் “டன் கவி…” என்றவுடன் சடாரென எழுந்தவள் பின்னால் நின்றிருந்த யாதவ்வோடு மோத அவளை அப்படியே அணைத்துக் கொண்டான் அந்த ஆசைக் காதலன். 

 

 

இதயத் துடிப்பு எகிற மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் நடுங்கி படபடத்தவளின் நெற்றி வகிட்டில் தன் முதல் முத்தத்தை பதித்தவன்,

 

 

பயப்பிடாதையும் கவி… நாங்க கொஞ்சம் கதைச்சுப் பழகி ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அண்டர்ஸ்டான்டிங் வந்த பிறகு மிச்சத்தைப் பார்த்துக்கலாம்… அப்பிடியெல்லாம் நான் காய்ஞ்ச மாடு கம்பில பாய்ஞ்ச மாதிரி உம்மளில பாய மாட்டன்… ஸோ ரிலாக்ஸ்ஸா இரும்…”

 

 

சிரித்தவாறே கூற இவளும் கொஞ்சம் அமைதியடைந்தாள். அவனிடமிருந்து மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டவள் தனது பால் வண்ண வதனத்தில் குங்குமத்தை நெற்றியிலும் வைத்து உச்சி நடு வகிட்டிலும் அழகாக இட்டுக் கொண்டாள்.

 

 

குங்குமத்துடன் அவள் வதனத்தை கண்ணாடியில் பார்த்தவனுக்கு அவள் இனி தன்னவள், அந்த அழகுப் பெட்டகத்தின் கணவன் தான் என்பதை நினைக்கவே பேருவகை தோன்ற சற்று முன் தன்னுயிர்க் காதலிக்கு கொடுத்த வாக்கை மறந்து அவள் பட்டுக் கூந்தலை ஒதுக்கி அவள் பின்னங் கழுத்தில் மென்மையாய் தன் உதடுகளைப் பதித்தான். 

 

 

எதிர்பாராத நொடியில் ஏற்பட்ட இந்த திடீர் முத்தத்தில் விதிர்விதித்து உள்ளே உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மின்சாரம் தாக்கிய உணர்வு ஏற்பட கண்களை மூடிக் கொண்டாள். அவளின் கொடியுடலில் ஏற்ப்பட்ட நடுக்கம் உணர்ந்து அவளை விட்டு விலகினவனுக்கு அப்போது தான் சிறிது நேரம் முன்னால் தான் கொடுத்த வாக்கு நினைவுக்கு வர மனைவியிடம் சற்றே வெக்கப்பட்டு 

 

 

ஸொரி கவி… குங்குமத்தோட உன்னைப் பார்த்ததும் ஏதோ தடுமாறி விட்டேன். இனி கவனமா இருக்கிறன் சரியா…?” என்று மன்னிப்பு கேட்டான்.

 

 

கன்னங்கள் செம்மையுற சரியென தலையசைத்தவள் கட்டிலின் அருகே சென்று விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளையே பார்த்து கொண்டிருக்க மென்மையாக சிரித்து விட்டு,  

 

 

நீங்களும் இங்கேயே படுங்கோ… படங்களில வாற மாதிரி பாய் விரிச்சு நான் கீழ படுக்கவோ அல்லது நீங்கள் காலை மடக்கிக் கஸ்டப்பட்டுப் படுக்க ஸோபாவோ இங்க இல்லை. ரொம்ப டயர்ட்டா இருக்கு யாதவ்… நான் நித்திரை கொள்ளப் போறன்…”

 

 

என்றவள் கட்டிலின் வலப்பக்கம் சுவரோரமாகப் படுத்துக் கொண்டாள். ஆசைக் காதலியே அருகில் தூங்க சம்மதம் சொல்லிய பிறகும் வேறெங்கேயும் தூங்க அவன் என்ன முட்டாளா? தானும் சென்று அவளுக்கு எதிர்புறமாக திரும்பிப் படுத்துக் கொண்டான். அன்றைய தினத்தின் அத்தனை அசதியும் ஒருங்கே சேர இருவரும் சொற்ப நிமிடங்களிலேயே தங்களை மறந்த ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டனர். 

 

 

அடுத்த நாள் காலை பத்து மணிக்குத் தான் கண் விழித்தாள் கவின்யா. படுக்கையை விட்டு எழ எத்தனித்தவள் முடியாது போகவே தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள். அவளைக் காதல் கொண்டு மணம் புரிந்திருந்த அவள் கணவனின் கையொன்று அவள் இடையை அணைத்திருந்தது. 

 

 

அதைக் கண்டதும் முழுதாக துயில் கலைந்தவள் அவனது கையை எப்படி எடுப்பது என்று சிந்தனையில் ஈடுபட்டாள்.  அவன் கரத்தை தான் நீக்கும் போது அவன் எழுந்து விட்டால் என்ன செய்வது என்று சிந்தித்தவாறே மெதுவாக அவன் கரத்தை அசைத்தாள். ஆனால் அதுவோ உடும்புப் பிடியாக அவள் சிற்றிடையை தனக்குள் அடக்கியிருந்தது. 

 

 

தனது முயற்சியில் தோல்வியுற்றவள் காலையில் தாயார் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவு கூர்ந்து அவனை மெதுவாக தட்டி எழுப்பினாள். 

 

 

இஞ்சருங்கோ… இஞ்சருங்கோ… டைம் ஆகிட்டு… எழும்புங்கோப்பா…”

 

 

மெல்லிய குரலில் என்றாலும் ஆஸ்தான மனைவிக்குரிய வார்த்தைகளால் அவள் அழைத்ததும் இந்த இரண்டரை மாதங்களாக அவன் கண்ட கனவுதானா அல்லது நிஜமே தானா என்று புரியாத குழப்பத்தோடு கண்களை சற்றே திறந்தான் யாதவ். 

 

 

அருகே தெரிந்த மனைவியின் மதிமுகத்தை வருடினான் இடையை அணைத்திருந்த கரத்தை எடுத்து. அவள் பட்டுக் கன்னத்தின் மென்மையை உணர்ந்ததும் சிரித்துக்கொண்டே,

 

 

கனவல்ல… நிஜம் தான்… குட் மோர்னிங் கவிக்குட்டி… ரொம்ப நேரம் தூங்கிட்டனா…?”

 

 

என்று கட்டிலை விட்டு எழுந்தான். தானும் கூடவே எழுந்து போர்வையை உதறி மடித்து வைத்தவாறு,

 

 

நீங்க மட்டுமில்லை… நானும் தான் நல்ல நித்திரை… அம்மா சந்நிதி கோயிலுக்குப் போய்ட்டு அப்பிடியே நல்லூருக்கும் போய் உங்கட வீட்டையும் போக வேணும் எண்டவ… நான் முதல்ல குளிச்சிட்டு வாறன்…” 

 

 

என்றவள் மாற்றுடையோடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். யாதவ் சோர்வோடு ஸோபாவில் சுருண்டு கொண்டான். 

குளியலறையில் இருந்து மஜந்தா வண்ணத்திற்கு நீலக்கரை போட்ட புடவை உடுத்தி வெளியே வந்தவள் ஸோபாவில் சுருண்டிருந்த யாதவ்வை எழுப்பி தயாராகி வருமாறு அனுப்பினாள். நித்திரைக் கலக்கத்தோடு மாற்றுடை ஏதுமின்றி குளிக்கச் சென்றவன் கவியின் நீள துவாலையை இடுப்பில் கட்டியவாறு வெளியே வந்தான். 

 

 

நிலைக் கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்து சிறு ஒப்பனை செய்து கொண்டிருந்தவள் ஈரம் சொட்டிய தலையோடு வெற்று மார்போடு இடுப்பில் தனது துவாலையோடு வந்தவனைப் பார்த்து வெக்கிச் சிவந்தாள். அவனோ இவளைக் கவனிக்காது தனது பெட்டியைக் குடைந்து உடைகள் தேடுவதில் மும்மரமாயிருந்தவன்

 

 

ஸொரி கவி… ட்ரெஸ் எடுக்க மறந்து போய் பாத்றூம் போய்ட்டன். அதுதான் உம்மட டவலை கேக்காமலே யூஸ் பண்ணிட்டன்… இப்ப நான் என்ன ட்ரெஸ் போட…? கோயிலுக்கு போற படியால் வேட்டி கட்டவா…?

 

 

இயல்பாய் கேட்டான். ஆனால் கணவனை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு பதில் சொல்ல இவள் தான் தயங்கி விட்டு,

 

 

ஓம்… வேட்டியே கட்டுங்கோ… நீங்க ரெடியாகி வாங்கோ… நான் அம்மாவேட்ட போறன்… உங்களுக்கு கோப்பியா…? ரீயா…? எது பிடிக்கும்?”

 

 

என்றவளுக்கு எதுவென்றாலும் சரி என்று சொல்லி விட்டு அவன் வேட்டி கட்ட தயாராகவும் இவள் விழுந்தடித்து அறையை விட்டு வெளியேறினாள். 

 

 

வரவேற்பறையில் சுடர் ஒளி பத்திரிகையோடு அமர்ந்திருந்த சந்திரஹாசனுக்கு ஒரு காலை வணக்கத்தை வைத்து விட்டு தாயைத் தேடி சமையலறைக்கு சென்றாள். அங்கே மதிய உணவிற்குரிய ஆயத்தத்தில் இருந்தவரிடம்

 

 

அம்மா… அருண் எங்க…? அவள்ட சத்தத்தையே காணம்…?”

 

 

ஹூம்… அவள்தான் இப்ப என்னோட கதைக்கிறதே இல்லையே… வெள்ளன எட்டு மணிக்கே எங்கையோ வெளிக்கிட்டுப் போய்ட்டாள்… அப்பாக்கு சொல்லி இருப்பாள்… அப்பாட்ட கேட்டுப் பார்…”

 

 

கல்யாண வீட்டு களைப்பு தீராமல் என்னைக் கூடப் பார்க்காமல் காலையிலேயே அப்படி எங்கே போயிருப்பாள் என்று சிந்தனை மேலோங்க தனக்கும் கணவனுக்குமாய் தேநீர் கலந்து எடுத்தவள் ஒரு தட்டில் வைத்து தங்கள் அறைக்கு எடுத்துச் சென்றாள். 

 

 

அங்கே தங்க நிற கரைபோட்ட பருத்தி வேட்டியில் அடர் நீல நிற சேர்ட்டில் தன் பளீர் புன்னகை முகத்தில் பளிச்சிட தயாராக இருந்தான் யாதவ். கணவனின் அழகு கண்களில் பட்டாலும் அதைக் கருத்தில் கொள்ளாது தேநீரை அவனிடம் கொடுத்து விட்டு தானும் ஒன்றை அருந்த ஆரம்பித்தாள். ஆனால் அவள் மனமோ தங்கை எங்கே போயிருப்பாள் என்பதிலேயே சுற்றிச் சுழன்றது.

 

 

அருண்யா எங்கே சென்றிருப்பாள்…

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’”

    1. தாமதத்திற்கு மன்னிக்கவும். இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’

அத்தியாயம் – 31 குழந்தை பெறுவாளா அருண்யா?   பூங்காவில் சுற்றியதில் கால் வலிக்க ஆயாசமாய் கட்டிலில் படுத்திருந்து பேசிக் கொண்டிருந்த போதே அருண்யா குழந்தை வளர்ப்போமா எனக் கேட்டது. ஸாம் எழுந்தே உட்கார்ந்து விட்டான்.      “உண்மையாவா சொல்லுறாய்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 16’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 16’

அத்தியாயம் – 16 காதல் கை கூடுமோ?   அந்த நாள் காலை வழக்கம்போல அழகாகவே விடிந்தது. அதிகாலை நான்கரை மணி போல வீடு வந்திருந்த சந்திரஹாசனும் அருண்யாவும் இன்னும் போர்வைக்குள் புரண்டு கொண்டிருந்தனர். காலையிலேயே எழுந்து விட்ட கவின்யா தனது

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’

அத்தியாயம் – 20 அருண்யா எங்கே…? காலையில் எழுந்ததுமே தந்தையிடம் இரவு ஸாம் அழுததைப் பற்றிக் கூறித் தான் சென்று பார்த்து வருவதாக ஸாம் வீட்டிற்கு சென்று விட்டாள் அருண்யா. ஸாமின் மனநிலையை புரிந்து கொண்டவர் மகளைத் தடுக்கவில்லை.  அந்த நல்ல