Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’

அத்தியாயம் – 11

பொங்கு தமிழ் 

27.06.2003.

சர்வதேச சமூகத்தையே அந்த சிறிய நிலப் பரப்பை நோக்கி பார்வையை திருப்ப வைத்த தினம். ஆம். யாழ் மருத்துவ பீட மைதானத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் அரங்கே அது. அண்ணளவாக இரண்டு லட்சங்களிற்கும் அதிகளவான தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திரண்டிருந்தனர். 

எமது நிலம் எமக்கு வேண்டும்

 எமது நிலமே எமக்கு வேண்டும்”

என்ற ஒற்றைக் கோஷத்திற்குள் ஈழத் தமிழர்களின் அனைத்து கனவுகளையும் உள்ளடக்கி அதை சர்வதேச நாடுகளுக்கு தெரியப் படுத்தும் நோக்கோடு யாழ் பல்கலைக்கழக அரங்க செயற்பாட்டுக் குழுவும், பெண்கள் பபண்பாட்டு மையமும் இணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆளுமையோடு ஒழுங்கமைக்கப்பட்ட சரித்திர நிகழ்வது. 

தமிழினம்  ஒன்று ஈழத்திலே அடக்கி ஒடுக்கப்பட்டு, அவலமே உருவாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொண்ட தினமது. அந்த பாவப்பட்ட மக்களின் அடிமன ஆசைகளை, கனவுகளை, அவர்களின் சுதந்திர தாகத்தை அரங்க ஒன்று கூடல் மூலம் வெளிப் படுத்தியது இந்த பொங்கு தமிழ். 

சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம், மரபு வழித் தாயகம் எனும் ஈழ மக்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்ததேயன்றி அரசுக்கோ, சகோதர மொழி மக்களுக்கோ எதிராகவோ, அவர்களின் கௌரவங்களை பாதிக்கும் வகையிலோ நடாத்தப்படவில்லை.

யாழ் நகரமே மஞ்சள், சிவப்பு வர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டு விழாக்கோலம் பூண்டது. பொங்கு தமிழ் பானையை ஏற்றிய ஊர்தி எழுச்சிப்பாடல்கள் உரத்து ஒலிக்க நகரின் மூலை முடுக்கு, சந்து பொந்தெங்கும் சென்று மக்களுக்கு அழைப்பை விடுத்தது. 

யாழ் மருத்துவ பீட மைதானத்தில் உயர்ந்த, பெரிய, நீள மேடை அமைக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள் வண்ணத்தால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பொங்கு தமிழின் குறுயீடாக மாபெரும் பொங்கல் பானை ஒன்றும் எழுந்து நின்றது.

இராணுவ ஆக்கிரமிப்பால் தங்கள் வளங்கள் சூறையாடப்பட்டுள்ளதை சித்தரிக்கும் முகமாக ஒரு பாழடைந்த வீடானது முட்கம்பி வேலிக்குள் ‘மிதிவெடிகள் கவனம்!’ பலகையுடன் காணப்பட்டது. அங்கு மக்கள் குடியிருக்கவில்லை, நச்சு விலங்குகளே வாழ்கின்றன என்பதைக் காட்ட அந்த வீட்டைச் சுற்றி பெரிய மஞ்சள் நிற நச்சுப் பாம்பு வளைத்து நின்றது.

ஆண், பெண் பேதமின்றி அரங்க ஆற்றுகையாளர்கள் அனைவரும் மஞ்சள், சிவப்பில் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து அரங்க நெறியாளர்களால் சொந்தமாக எழுதி இசையமைக்கப் பட்டிருந்த எழுச்சிப் பாடல்களை தவில், தபேலா, பறை, நாதஸ்வரம், ஹார்மோனியம், சல்லாரி, சங்கு வாத்தியங்கள் முழங்க மக்களின் உணர்ச்சிகள் வீறு கொண்டு எழ உரத்துப் பாடினர். 

அந்த பாட்டுக்காரர் குழுவிலே தன் படிப்பையும் ஒதுக்கி தன்னை இணைத்திருந்தாள் கவின்யா. பல நாட்கள் காலையிலிருந்து மாலை வரை நடந்த ஒத்திகைகளிலும் பங்குபற்றி தன்னினத்திற்கு தன்னாலான பங்களிப்பை உகந்தளித்திருந்தாள். 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே           
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.”      

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்

தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் 

செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

பண்டைப்பெரும் புகழ் உடையோமோ இல்லையா?

பாருக்கு வீரத்தை சொன்னோமோ இல்லையா?

எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?

எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?

செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?

முந்தா நாள் விட்ட பிஞ்சுகள் திமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா?

தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா

தமக்குத் தமிழகம் (தமிழீழம்) அடிமையே என்றும்

சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?”

என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் புரட்சி பாடல்களும் அங்கே பாடப் பெற்று மக்கள் உணர்ச்சிப் பிழம்பாக தாங்களும் சேர்ந்து உரத்த குரலில் பாடி ஆடி இடையிடையே 

எமது நிலமே எமக்கு வேண்டும்” என்ற கோஷத்தையும் தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருந்தனர்.

இங்கே அதிகாலை சந்திரஹாசன் வீட்டில் பெரும் பிரளயமே நடந்து கொண்டிருந்தது. ஆம். தெய்வநாயகியும் அருண்யாவும் வாக்குவாதத்தின் உச்சக் கட்டத்தில் இருந்தார்கள். 

அக்காவைப் பாடப் போறதுக்கு விட்டியள் தானே… அப்பாவும் அங்க தானே நிப்பார். பிறகேன் என்ன மட்டும் போக விடுறியள் இல்லை…?”

கோபத்தில் துடித்த உதடுகளும் உணர்ச்சி வசத்தால் வெளியேறிய பெரு மூச்சுக்களுமாக தாயிடம் கத்திக் கொண்டிருந்தாள் அருணி.

ரெண்டு மாசத்தில சோதினையை வைச்சுக் கொண்டு அந்த வெய்யிலுக்க போய் நின்று கத்தி வருத்தத்தை தேடப் போறியே..? கவி மேடையில இருப்பாள். அப்பா முன்னால கெஸ்ட்டோட இருப்பார். நீ அங்க வாற லட்சக் கணக்கான சனங்களுக்க எந்த மூலையிலையாவது போய் நிப்பாய்… ஏதாவது பிரச்சினை வெடிச்சால் உன்னை எங்க என்று போய் தேடுறதாம்? ஒரு இடமும் போகத் தேவையில்லை. வீட்டில இருந்து படி. நீ போகாட்டில் அங்க பொங்குதமிழ் நடக்காதுதானே….”

அம்மா… விசர்க்கதை கதைக்க வேணாம் சரியோ… இப்பிடியே எல்லாரும் நீ போய் தான் நடக்கப் போகுதோ… நான் போய்த்தான் நடக்கப் போகுதோ என்று யோசித்தால் பிறகு அங்க யார் தான் போவாங்கள்? பள்ளிக்கூடத்துக்கு முன்னால பஸ் வந்து ஏத்திக் கொண்டு போகும். நான் போற போறதுதான்…”

உன்னை தனிய என்றபடியால் தானே போகாதை எண்டுறன். இந்த கால் மட்டும் வீங்கி நடக்கேலாமப் போயிருக்காட்டில் நானே கூட்டிக் கொண்டு போயிருப்பனே… இந்த வீங்கின காலோட நான் எப்பிடி அங்க வந்து அவ்வளவு சனத்துக்க நிக்கிற…?”

அதுக்காக நான் போகாமல் இருக்கேலாது. நீங்கள் வீட்ட நில்லுங்கோ. நான் போகப் போறன். ஏழு மணிக்கு பஸ். நேரம் போட்டுது. நான் வெளிக்கிடப் போறன்…”

கூறியபடி அருணி கிணற்றடியை நோக்கி நகர வழக்கம்போல கணவருக்கு அர்ச்சனையை ஆரம்பித்தார் தெய்வநாயகி. 

இந்த மனுஷன் எந்த கவலையும் இல்லாமல் அஞ்சு மணிக்கே வெளிக்கிட்டுப் போச்சுது. நானெல்லே இந்தப் பெட்டையோட கிடந்து மாரடிக்க வேண்டிக் கிடக்கு… இவள் தன்ர பிடிவாதம். எப்பிடியும் போவாள். வீட்டுக்குத் திரும்ப வாற வரைக்கும் நான் தான் இனி வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேணும். என்ர கவலை ஆருக்கு விளங்கப் போகுது? பாழாய் போன கால் இப்ப பார்த்து நடக்க முடியாம போய்ச்சுது…”

பாவம் தெய்வநாயகியும். நேற்று தான் கிணற்றடியில் வழுக்கி விழுந்து காலில் அடிபட்டு வீங்கி சரியாக நடக்க முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார். 

தன் குறிக்கோளே நோக்கமாக பாடசாலை நண்பிகள், ஊர் மக்களோடு சேர்ந்து அருணியும் பொங்குதமிழ் அரங்கு மைதானத்தை அடைந்திருந்தாள்.

கூடியிருந்த ஜன சமுத்திரத்தில் இவளும் ஓர் நீர்த் திவலையாக தன்னையும் இணைத்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தாள். இராணுவ ஆக்கிரமிப்பை குறிக்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் அருகே இவள் நின்றிருந்தாள் தன் நண்பர்களுடன்.

நேரம் செல்லச் செல்ல எழுச்சிப் பாடல்களால் தூண்டப் பட்ட மக்கள் சிலர் அந்த முட்வேலியைப் பொருட்படுத்தாது வேலியின் உள்ளே ஏறிக் குதித்து கண்ணிவெடிப் பதாதைகளை பிடுங்கி எறிந்து அந்த வீட்டின் உச்சியில் ஏறி அங்கே ஒரு கொடியை ஏற்றினார்கள். முள்வேலியையும் பிடுங்கி அப்புறப் படுத்தினார்கள்.

இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் அல்ல. தங்கள் காணிகள், வீடுகளை இழந்திருந்த மக்கள் உணர்ச்சி மேலிட்டால் தங்களை மீறி செய்தவை.  ஏதோ தங்கள் சொந்த வீட்டையே அடைந்து விட்ட திருப்தி அந்த பாவப்பட்ட சனங்களுக்கு.

ஸாமும் நண்பர்கள் குழாமும் அந்த ஜன சமுத்திரத்தில் கோஷமிட்டவாறே அங்குமிங்கும் நீந்திக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டைப் பார்க்க என்று அவர்கள் வந்து கொண்டிருந்த போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. 

கொடியேற்ற வீட்டில் ஏறிய சில இளைஞர்கள் முட்கம்பி வேலியை பிடுங்கி எறிந்த போது அது அருகிலே நின்றிருந்த அருண்யாவின் மீது விழுந்தது. திடீரென எதிர்பார்க்காமல் வந்து விழுந்த முட்கம்பி வளையம் அவளைச் சூழ அவ்வளவு நேரம் தொண்டை தண்ணீர் வற்றக் கத்தியதால் ஏற்பட்ட களைப்பும் சேர அப்படியே மயங்கி விழுந்தாள்.

சிறிது தூரத்திலிருந்தே நடந்ததை அவதானித்த ஸாம் விரைந்து அந்த இடத்துக்கு சென்று நிலைமையைப் பொறுப்பெடுத்தான். சூழ நின்று செய்வதறியாது திகைத்து நின்ற அருணியின் தோழிகள் தங்கள் ஆசானே வந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டு பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தனர். 

முட்கம்பியை கவனமாகப் பிரித்து நிரோஜனிடம் கொடுத்து ஒதுக்குப்புறமாக எறியப் பணித்துவிட்டு சுதனிடமிருந்த தண்ணீர் போத்தலை வாங்கி சிறிது தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து “அருண்… அருண்…” என்று மெதுவாக அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான். 

தண்ணீர் பட்டதும் பிரக்ஞை அடைந்தவள் மெல்ல சுதாரித்து எழுந்தவள், “சொறி ஸாம் சேர்… முள்ளுக்கம்பி விழவும் பயந்து போனன்…”

உம்மட வீரம் எல்லாம் வாயால மட்டும் தான் என்று தெரியும் தானே.தோளில கையில எல்லாம் கம்பி கிழிச்சிருக்கு. கெதியா வாரும்.

போய் மருந்து கட்ட…”

அப்போதுதான்  குனிந்து தோளைப் பார்த்தவள் சட்டை கிழிந்து காயத்திலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு அழ ஆரம்பித்தாள். 

சும்மா சின்னப் பிள்ளை மாதிரி அழ வேணாம் அருண்யா. படிக்கிற நேரத்தில ஆர் உம்மை இங்க எல்லாம் வரச் சொன்ன? வாயை மூடிக் கொண்டு பின்னால வாரும்.”

என்று அவளைக் கடிந்து கொண்டு, சுதர்சனை நடந்த விடயத்தை சந்திரஹாசனிடம் தெரிவித்து அவரைப் பயப்பிட வேண்டாம் என்றும் அருணியை வீட்டுக்கு அழைத்து செல்வதையும் தெரிவிக்கச் சொல்லி விட்டு, சுதன் வழி ஏற்படுத்தித் தர பக்கத்தில் அலங்காரத்துக்கு நடப்பட்டிருந்த பெரிய மஞ்சள் கொடியை கழற்றி அருணியின் தோளை மூடி ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி முகாம் ஒன்றை நோக்கி அவளை அழைத்து சென்றான்.

அங்கே சென்று நான்கு இடங்களில் கீறியிருந்த காயங்களுக்கு மருந்திட்டு கொண்டு அவர்களின் அறிவுரைக்கிணங்க யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று ஏற்ப்பூசியும் போட்ட பின்னர் அவளை அவள் வீட்டுக்கு அழைத்து சென்றான் ஸாம். 

மகள் வீடு வந்து சேர மாலையாகும் என்று எண்ணியிருந்த தெய்வநாயகி மதியமே “அம்மா…” என்றழைப்புடன் அருண்யா வர பயந்து விட்டார். வாயிலிலேயே ஸாம் புறப்பட எத்தனிக்க அருணி தான் அவனை விடாப்பிடியாக உள்ளே அழைத்து வந்திருந்தாள்.

அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டால் என்ன சொல்லி வையப் போகிறாரோ தெரியலையே… இந்த அருண் வேறு என்ர சொல்லைக் கேட்குதில்லையே என்று மனசுக்குள் புலம்பியபடி படபடத்த நெஞ்சை அடக்கியபடி உள்ளே சென்றான் ஸாம். 

அம்மா… அங்க முள்ளுக்கம்பி எனக்கு மேல விழுந்து மயங்கி விழுந்திட்டன்… பிறகு இவர் தான் கூட்டிக் கொண்டு போய் மருந்து கட்டி ஊசி போட்டிட்டு வீட்ட கூட்டிட்டு வந்தவர்…”

ரொம்ப நன்றி தம்பி… இந்த பிள்ளைக்கு அப்பவே சொன்னான் போகாதை என்று. என்ர சொல்லு கேட்டால் தானே… அதுசரி… நீங்கள் எந்த ஊர் தம்பி…?”

இதயம் அதிவேக ரயில் வண்டி போல தடதடக்க உடம்பெல்லாம் முத்து முத்தாக வேர்க்க ஸாம் தன் பெயரைச் சொல்ல எத்தனிக்க அருணி முந்திக் கொண்டாள். 

அம்மா… இது எங்கட ரியூஷன் மாஸ்டர்…. ப்ளீஸ்மா… முதல் குடிக்க ஏதாச்சும் கொண்டு வாங்க…”

சரி சரி…இருங்கோ தம்பி… கொண்டு வாறேன்…”

லூஸா சேர் நீங்கள்… பேரைச் சொல்லி இருந்தீங்க என்றால் அம்மா நல்ல சாத்து தந்திருப்பா…”

ஓமோம்… எனக்கு டென்ஷன்ல என்ன சொல்லுற என்று தெரியேல்ல…”

ஓகே… ஓகே… உங்கட விவரங்கள சொல்லாமல் பொதுவாக கதையுங்கோ…”

தெய்வநாயகி ஒரு தட்டிலே காரட் கேக்கும் இன்னொரு தட்டிலே குளிர்ந்த எலுமிச்சம்பழச்சாறும் கொண்டு வந்தார்.

ஸாமிடம் கேக் தட்டை நீட்டி உபசரித்தார். பிகு பண்ணாமல் ஒரு கேக் துண்டை எடுத்து கொண்டான்.

அருண்யா வீட்ட படிக்கிறவவா அன்ரி (ஆன்ட்டி)…? ஒழுங்காக படிச்சால் அகில இலங்கைல முதலாவதாக வரலாம். அவ்வளவு மூளை இருக்கு… ஆனால் கொஞ்சம் குழப்படிதான் கூடிப் போச்சு…”

அருணின் முறைப்பைப் பொருட்படுத்தாது அக்கறையுள்ள ஆசிரியனாக நல்லாவே போட்டுக் கொடுத்தான். 

ஏதோ இப்ப கொஞ்ச நாளா படிக்கிறாள் தம்பி. அகில இலங்கைல இல்லாட்டிலும் மாவட்டத்தில முதலாவதாக வந்தாலே போதும். இனி எல்லாம் அந்த செல்வச் சந்நிதி கந்தன்ட கைல.”

என்ன அருண்யா சத்தமில்லாமல் இருக்கிறீர்… ஐலண்ட் ஃபெஸ்ட் வருவீர் தானே…”

ம்… பார்ப்பம் ஸேர்… ஏதோ என்னால முடிஞ்ச வரை படிக்கிறேன்…” 

குட்… சந்திரஹாசன் சேருக்கு அருண்யாவை நினைச்சு பயப்பிட வேணாம் என்று தகவல் சொல்லியாச்சு ஆன்ட்டி. நீங்களும் கவலைப்படாம இருங்கோ… அருண்யா வடிவா ரெஸ்ட் எடும்… நான் போய்ட்டு வாறன்…”

சரி தம்பி. பத்திரமா அருணிய கொண்டுவந்து விட்டதுக்கு ரொம்ப நன்றி தம்பி.”

அவர்களிடம் விடைபெற்று கொண்டு ஸாம் தன் வீடு நோக்கி சென்றான். அருண்யாவுக்கு பெரிதாக எந்த ஆபத்துமில்லாமல் காப்பாற்றிய நிம்மதி அவன் மனதில் தோன்றியது. 

ஆனால் பாவம் அவன். அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.இன்னும் சில மாதங்களில் அவன் சொர்க்கத்தின் உச்சிக்கே சென்று பின் நரகத்தின் அனைத்து வேதனையையும் அனுபவிக்கப் போகிறான் என்று. 

ஸாமின் வாழ்க்கையைத் திருப்பிப் போடவிருக்கும் அந்த இரு நிகழ்வுகளும் என்ன?  

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 23’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 23’

அத்தியாயம் – 23 அருண்யா மாறியது ஏன்?   கவின்யா சொல்லியிருந்த மாதிரியே வைத்தியர் விடுதிக்கு மதியம் ஒரு மணிக்கு சென்றவன் வரவேற்பறையில் காத்திருக்கத் தொடங்கினான். சிந்தனை முழுவதும் அருணிக்கு என்னாகியிருக்கும் என்பதிலேயே சுற்றிச் சுழன்றது. “சொரி ஸாம்… ஒரு எமெஜெர்ன்ஸ்ஸி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’

அத்தியாயம் – 26 நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?     அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’

அத்தியாயம் – 24 மாறுவாளா அருண்யா?      ஸாம் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய போது அங்கே அருண்யா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.     அவளைக் கண்டதும் கண்களில் முட்டிய நீரை சுண்டி விட்டபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் தொலைக்காட்சி