Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’

அத்தியாயம் – 10

சொல்லாயோ சோலைக்கிளி

 

 

வருஷங்கள் இரண்டு உருண்டோடியது. கவின்யா மூன்றாம் ஆண்டிலும் ஸாம் அபிஷேக் இறுதி ஆண்டில் பல்கலைக்கழகத்திலும், அருண்யா வர்த்தக பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கும் (+2) படித்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (+1) பரீட்சையில் அனைத்து பாடங்களுக்கும் அதி திறமைச் சித்தி அடைந்திருந்தாள் அருண்யா.  கவின்யா போல எல்லோரும் அவளையும் உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பாள் என எதிர்பார்க்க அவளோ வர்த்தக பிரிவைத் தேர்ந்து எடுத்து இருந்தாள். 

 

 

கவிக்கு ரகசியமாக சொன்னாள். “நமக்கு உந்த மனுஷ உடம்பை வெட்டுக் கொத்துற வேலையெல்லாம் சரி வராது. உனக்கு தெரியும் தானே அக்கா… நாம ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழுற ஆக்கள். நம்ம வீரம் எல்லாம் வெறும் வாயால தானே. அப்புறம் டொக்டரா வந்திட்டு ராப்பகலா வேலை செய்ய எல்லாம் நம்மால முடியாது. அதுவும் முக்கியமா உந்த ஜெயசீலன் வாத்திட்ட வதை பட என்னால முடியாதுப்பா…”

 

 

அவள் காரணங்கள் கேட்டு கவிக்கு அழுவதா? சிரிப்பதா? என்றிருந்தது. 

 

 

அக்கா… அப்புறம் இன்னொரு விசயம் சொல்லவா? நீ உன்ர படிப்பிலேயே எப்பவும் இருப்பாய். எனக்கு ஒன்றும் சொல்லித் தர மாட்டாய். நான் கம்பஸ் போகேக்க உனக்கு கல்யாணம் ஆகிடும். அப்ப நான் ஸாம் அத்தானிட்ட கேட்டு படிக்கலாமே. அவர் தானே பச் டொப்பாம் ஒவ்வொரு செமஸ்டரும்…”

 

 

உயர்தர வகுப்புக்கு செல்ல ஆரம்பித்த வேளையில் நடந்த உரையாடல் இது. 

 

 

அருணியின் கதையை கேட்டு ஆச்சரியத்தால் விழி விரித்த கவி,

உதெல்லாம் உனக்கு எப்பிடித் தெரியும்டி? நான் சொல்லவே இல்லையே…?”

 

 

ரொம்ப ஷொக் ஆகக் கூடாதும்மா. இதுக்கே இப்பிடின்னா…. நாம சொல்லப் போற விசயத்தை கேட்டு மயங்கி விழுந்திடாதை…”

 

 

என்ன சொல்லு… ஓவர் ஸீன் போடுறாய்?”

 

 

வல்வெட்டித்துறை பிள்ளையார் கோயிலடி லைப்ரரில வைச்சு ஸாம் அண்ணா எக்கனமிக்ஸ்ஸும், நிரோஜன் அண்ணா எக்கவுன்ற்ஸ்ஸும், சுதர்சன் அண்ணா கொமர்ஸ்ஸும், சுதன்  அண்ணா இங்கிலிஷும் ஸ்பெஷல் கிளாஸ் சொல்லித் தரப் போகினம். சனி, ஞாயிறு பின்னேரம் ரெண்டு மணில இருந்து ஆறுமணி வரைக்கும்….”

 

 

என்ன அருண் சொல்லுறாய்? அம்மாக்கு தெரிஞ்சால் விட மாட்டாவே… தேவையில்லாமல் புதுப் பிரச்சினை இழுத்து விடாதை. இப்ப என்னத்துக்கு ஸ்பெஷல் கிளாஸ்?”

 

 

அப்பாவுக்கு சொல்லிட்டன். அப்பா ஓகே சொல்லிட்டார்… அம்மாவுக்கு தெரியிற நேரம் பார்த்து கொள்ளுவம்… நான் என்ன தனியவே போகப் போறன். எங்கட வகுப்புப் பிள்ளையள் பத்துப் பேருக்கு மேல போகப் போறம்… நீ மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் போகேல்லையா? பிறகென்ன  பிரச்சினை உனக்கு நான் போறதில?”

 

 

இல்லை அருண்… ஏற்கனவே அம்மா ஸாமில கொலை வெறில இருக்கிறா… இது வேற தெரிஞ்சால் சும்மா வீண் சண்டை வருமே என்று தான்…”

 

 

நீ சும்மா அம்மாவை சாட்டாதை அக்கா… உனக்கு வேற பிரச்சினை… ஸாம் அண்ணாவை வகுப்பில யாரும் பெட்டையள் சைட் அடிச்சாலும், லைன் போட்டாலும் என்று… அதுதான் உனக்கு அவர் வகுப்பெடுக்கிற பிடிக்கேல்ல…”

 

 

சும்மா விசர் கதை கதைக்காதை அருண்… நான் ஏன் அப்பிடி நினைக்கிறேன்? என்னட்டயே அந்தாள் லவ்வ சொல்லாமல் திரியுது… உங்களுகளிட்ட சொல்லத்தான் அவருக்கு துணிவு வந்திடுமாக்கும்… நம்மாளு அப்பிடி எல்லாம் மத்தவங்க கிட்ட சாதாரணமா சாஞ்சிட மாட்டார்..”

 

 

உனக்கு அவ்வளவு உறுதி இருந்தால் சும்மா இருக்கா. நான் ஸாம் அத்தானிட்ட படிக்கப் போற போறதுதான்…”

 

 

ஓகேடி… அம்மாவுக்கு தெரியாமல் பார்த்து கொள்… நீ முடிவு பண்ணிட்டால் அதை யாரால மாத்த முடியும்?”

 

 

அருணியிடம் சம்மதம் சொல்லி இருந்தாலும் கவியின் மனதோ உழன்று கொண்டிருந்தது. ஸாமோ, மற்றவர்களோ தன்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்ற கோபமும் கவலையும் அவள் மனதை அரித்தது. 

 

 

தன்னை விடுத்து ஸாம் அருணியோடு இவ்வளவு அன்யோன்யமாக பழகுவது வேறு சாதாரண பெண்களுக்கே உரிய பொறாமை உணர்வை தோற்றுவித்தது. 

 

 

அவருக்கு என்னோட மட்டும் தான் கதைக்க ஏலாது… மிச்ச எல்லாரோடயும் நல்லா வழிவார்…” என்று மனசுக்குள் ஒரு சகஷ்ட நாம அர்ச்சனை ஒன்றை ஸாமிற்கு வழங்கினாள் அந்த அப்பாவிக் காதலி.

 

 

ஸாம் தன்னை காதலிப்பது புரிந்தும் படிப்பைக் குழப்பக் கூடாது என்று தான் அமைதியாக இருக்கிறான் என்று அவன் காரணத்தை சரியாக ஊகித்து தன் படிப்பிலேயே கவனத்தை செலுத்தினாள் கவி. முதல் வருடம் அவள்தான் அவர்கள் வகுப்பில் முதலாவது. இதுவே தொடர வேண்டும் என்று வேண்டாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் முதல் தர வைத்தியர் ஆவதை இலட்சியமாக கொண்டு கடுமையாக உழைத்தாள். 

 

 

அடிக்கடி வல்வெட்டித் துறையில் உள்ள வீட்டுக்கு வருவதில்லை. நல்லூரடி அறையிலேயே அவளும் அஞ்சலியும் புத்தகங்கள்,  கொப்பிகளோடு குடித்தனம் நடத்தினர். ஏதாவது பண்டிகைகள் என்றால் மட்டும் வீட்டுக்கு வருவாள். 

வீட்டுக்கு வந்தால் அருணியின் கதைகள் கேட்கவே நேரம் சரியாகி விடும். அத்தோடு முக்கிய காரணம் அவளின் ஸாம் புராணம் இவள் மனதையும் அலைக்கழித்து கொஞ்ச நாளைக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாது போனதே.

 

 

அவள் வீட்டுக்கு வராத வார இறுதிகளில் தெய்வநாயகி சமைத்து சாப்பாடும் நொறுக்குத்தீனிகளும் செய்து கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவார். அருண்யாக்கு ரியூசன் வகுப்புகள் இருப்பதால் அவள் போவதில்லை. ஸாமின் வகுப்பு மட்டும் இல்லை என்றால் ரியோவில் ஐஸ்கிரீம் குடிக்க என்று முதல் ஆளாக கவியைப் பார்க்க அருணி புறப்பட்டிருப்பாள். 

 

 

அருண்யா இயற்கையிலேயே கெட்டிக்காரி. ஸாமிடம் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்த பிறகு அவனது புத்திமதிகள் கேட்டுக்கேட்டு கொஞ்சம் தன் வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு படிப்பிலே நல்ல கவனம் செலுத்த ஆரம்பித்து இருந்தாள். தெய்வநாயகிக்கே நம்ப முடியவில்லை. எப்படி இந்த அதிசயம் நடக்கிறது என்று. ஏனெனில் அவள் பிறந்ததிலிருந்து மேசையிலிருந்து படித்ததைக் கண்டறியாதவர் ஆயிற்றே.

 

 

முன்னைய வகுப்புகளில் பரீட்சைக்கு முதல் நாள் தான் அருண்யா புத்தகத்தை தூக்குவாள். அதுவும் மேசையில் இருந்து படிப்பதில்லை. வீட்டின் பின்னால் இருக்கும் கறுத்த கொழும்பான் மாமரத்தின் பதிந்த கிளையிலோ அல்லது குவித்து வைத்திருக்கும் மணல் கும்பியிலோ தான் புத்தகமும் கையுமாக இருப்பாள். அதையும் விட்டால் வரவேற்பறை ஷோபாவில் குப்புற படுத்துக் கொண்டு படிக்கிறேன் என்ற பெயரில் தூங்கிப் போவாள்.

 

 

இப்போதெல்லாம் அருணியின் வால் தனம் குறைந்திருந்தாலும் அவள் கலகலப்பு அவளை விட்டுப் போகவில்லை. தெய்வநாயகிக்கு எதிர்த்து ரெண்டு கதை கதைக்காட்டில் அவளுக்கு தூக்கம் வராதே. கவியோடு தினமும் இரவில் தொலைபேசியில் கதைப்பாள். 

 

 

ஒருநாள் இவள் ஸாமைப் பற்றிக் கூறுவதை கேட்ட சந்திரஹாசன் அருண்யாவைக் கூப்பிட்டு கண்டித்திருந்தார். கவியோடு ஸாமைப் பற்றி கதைத்து அவள் மனதை குழப்ப வேணாம் என்று.  அதன் பிறகு அருணியும் அதை நிறுத்தி விட்டாள். அவளுக்கா சொல்வதற்கு வேறு கதைகள் இல்லை…

 

 

ஸாமின் மனதிலோ கவியைத் தவிர வேறு நினைப்பில்லை. அருணியின் கெட்டித்தனத்தை கண்டு எப்படியாவது அவளை அகில இலங்கை ரீதியில் முதலிடம் வர வைக்க வேண்டும் என்ற வெறியில் அவளை விடக் கடுமையாக உழைத்தான். கடந்த கால வினாக்கள், எல்லா மாவட்டங்களிலும் வெளி வரும் மூன்று பாட பரீட்சை வினாத்தாள்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் கடும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான். 

 

 

அவன் இராப் பகலாக முழித்திருந்து சிறுகுறிப்புகள் அருணிக்காக எடுப்பதைக் கண்டு ஒருநாள் அந்தோனி கூட ஸாமைப் பார்த்து கேலியாக சிரித்தார். 

 

 

அடே தம்பி… நீ சோதினை எடுக்கேக்க இப்பிடி படிச்சிருந்தாய் என்றால் நீ முதலாவதாக வந்திருப்பியே…”

 

 

அப்பிடி இல்லைப்பா… இதே பாடங்களை நான் கம்பஸில மேலதிக விளக்கங்களோட படிக்கிறன். அதால இப்ப எனக்கு ஏஎல் (+2) பாடம் ஈஸியா இருக்கு. அருண்யா உண்மையிலயே நல்ல கெட்டிக்காரிப்பா. ஆனா என்ன சரியான விளையாட்டுப் புத்தி… படிக்க கள்ளம்… அதுதான் நான் நோட்ஸ் எடுத்து குடுத்தால் கொஞ்சம் பஞ்சி இல்லாமல் படிப்பாள்.”

 

 

சரி தம்பி. படிப்புக்கு செய்யிறது போற வழிக்கு நமக்கும் புண்ணியம்… உன்ர படிப்பையும் கவனிச்சுக் கொண்டால் சரி..”

 

 

சரிப்பா… என்னைப் பற்றிக் கவலைப் படாதீங்கோ… நான் என்ர பாடமெல்லாம் அன்றன்றைக்கே படிச்சிடுற… அதால கிழமை நாட்கள் அருணிக்கு… இன்னும் ரெண்டு மாசம் தானேப்பா சோதினைக்கு கிடக்கு…”

 

 

அக்காக்காரி மாதிரி அவளும் முதலாவதாக வந்தால் எங்கட ஊருக்கு தானே பெருமை. ஒரு இனத்தையே தலைமை தாங்குற அறிவுள்ள மண்ணுடா இது… இவ்வளவு நாள் சண்டைகளுக்குப் பிறகு இப்பதான் பிள்ளையள் திரும்ப படிக்கத் தொடங்கியிருக்குதுகள்…”

 

 

ஓமப்பா… வீரத்தில மட்டுமில்ல.. படிப்பிலையும் நாங்க குறைஞ்ச ஆக்களில்லை என்று காட்டணும்…”

 

 

ஆனா இந்த பாழ் படுவாங்கள் பிள்ளையளை படிக்க விடுறாங்களே… சரியா பிள்ளையள் படிக்க உக்காருற எட்டில இருந்து பத்து மணிக்கு கரண்டை நிப்பாட்டுறாங்கள். சோதினை கிட்ட வரவர தான் பாட்டுக் கோஷ்டியளைக் கொண்டு வந்து போடுறாங்கள்…

 

 

கரண்ட் ஊருக்க வந்த உடன எங்கட சனமும்  முதல் வேலையா ரீவி தானே வாங்கிச்சுதுகள்… இவ்வளவு நாளும் காணாததை கண்ட பொடி பெட்டையள் எல்லாம் அதே தவமாக் கிடக்குதுகள்…

 

 

வெளி மாவட்டத்துக்காரனெல்லாம் அந்த இந்த சாமானுகள் என்று கொண்டு வந்து விக்க இதுகளும் என்ன ஏதென்று இல்லாமல் வாங்கி ஏமாறுதுகள்…

 

 

எல்லாத்தையும் விட கொடுமை எங்கட பொம்பிளைப் பிள்ளையளிட உடுப்புகள்… இறுக்கிப் பிடிச்ச குட்டைப் பாவாடையளைப் போட்டுக் கொண்டு காலை வளைச்சு வளைச்சு சைக்கிள் ஓடிப் போகுதுகள்… தம்பியவங்களிட கட்டுப்பாட்டில இருக்கேக்க உப்பிடி அரைகுறையாக திரியலாமே…

 

 

எல்லாம் கலிகாலம் முத்திப் போச்சு… நாகரீகம் என்ற பெயரில எங்கட கலாச்சாரத்தை மாத்தப் பாக்கிறாங்க.. எங்கட சனமும் விசயம் புரியாமல் காணாததைக் கண்டிட்டு நின்று ஆடுதுகள்…

 

 

ஓமப்பா… இந்த பிள்ளையளிட உடுப்புகள் சரியான மோசம். போன சனிக்கிழமை பருத்தித்துறை டவுணுக்க உந்த டைட்ஸ்கேட் போட்டவைய சைக்கிளால இறங்கி வீடு வரைக்கும் உருட்டிக் கொண்டு போக சொல்லிட்டாங்களாம் அண்ணனவை…”

 

 

அட ஓமப்பன்… சங்கத்தில பொடியள் சொன்னவங்கள் தான். யாழ்ப்பாண பக்கமும் ஒழுக்கமாக உடுப்பு போடேல்ல என்றால் கூப்பிட்டு வைச்சு கண்டிச்சு அனுப்புறாங்களாம்”

 

 

எங்கட சனத்துக்கு அடைச்சு வைச்சு திறந்து விட்ட பீலிங். வெளிய வந்ததும் என்ன செய்யிற என்று தெரியாமல் தலைகால் புரியாமல் நின்று ஆடுதுகள்..”

 

 

சமாதான பேச்சுவார்த்தை எப்பிடி முடியப் போகுதோ தெரியேல்ல… அதுக்குள்ள எல்லாக் கறுமத்தையும் அனுபவிச்சிடோணும் என்ற ஆசை எங்கடயளுக்கு… அதுகளையும் குறை சொல்லி என்ன செய்யிற… நாங்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து கிடைச்ச சமாதானம் இது எண்டதை எங்கட சனங்கள் மறந்து போகுதுகளே…”

 

 

மறந்த என்று சொல்லேலாதப்பா… முப்பது வருஷமா சண்டை சண்டை என்று எங்கட சனம் என்ன நல்ல விசயத்தை அனுபவிச்சுதுகள் சொல்லுங்கோ பாப்பம்… நீங்கள் கப்பலால கொழும்பு போய் கொண்டு வந்து தந்து தானே எங்களுக்கு அப்பிளே தெரியும்…

 

 

படம் பார்க்கிற என்றால் பள்ளிக்கூட லீவுக்கு வெய்ட் பண்ணிக் காத்திருந்து ஊர் சனம் எல்லாம் ஒரு வீட்டில கூடி காசு சேர்த்து ரீவி, ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து ஒரே இரவில விடிய விடிய தொடர்ச்சியாக நாலோ, ஐந்தோ படம் பார்ப்பம்…

 

 

அப்பிடி வாழ்ந்திட்டு இப்ப கரண்ட் இரவில கொஞ்ச நேரம் என்றாலும் இருக்குது என்று, பொழுதுபோக்கு விசயங்களில கவனம் செலுத்துறதை பிழை சொல்லேலாதேப்பா…”

 

 

அதை நான் பிழை சொல்லேல்ல தம்பி… ஆனால் கண்ட படங்களையும் பார்த்து தானே உந்த பிள்ளையள் உப்பிடி உடுப்புகள் போடுதுகள்…”

 

 

படத்தைப் பார்த்து இல்லப்பா… விக்கிற கடைக்காரங்களைக் கேட்கணும் இதை நீங்கள்…”

 

 

அவன் வருமானத்துக்கு எதையும் விப்பான். வாங்கிற எங்கடையளுக்கு அறிவு எங்க போச்சு…”

 

 

ம்ம்… அதை விடுங்கப்பா… நாளைக்கு கம்பஸில பொங்கு தமிழ் செய்றாங்க… கவி பாடுறாள் போல…”

ஏனடா அந்த பிள்ளை உதுகளில பாடுது… இப்ப சமாதானம் என்றாலும் நாளைக்கே நாட்டு நிலைமை எப்பிடி மாறும் என்று தெரியாது… தேவையில்லாமல் ஏன் வில்லங்கத்தை விலை குடுத்து வாங்குவான்?”

 

 

என்னப்பா நீங்களே இப்பிடி சொல்லுறியள்..? பொங்கு தமிழ் என்ன சட்ட விரோத நிகழ்ச்சியே இல்லையே… பள்ளிக்கூட, கம்பஸ் பிள்ளைகள், பொதுசனம் எல்லாம் சேர்ந்து ஆர்மி பிடிச்சு வைச்சிருக்கிற எங்கட நிலங்களை திரும்ப தரச் சொல்லி கேட்கிறதை சர்வதேச சமூகத்திற்கு காட்ட செய்யிற ஒரு எழுச்சி நிகழ்வு தானே… இதில பாடுறதில என்னப்பா வரப் போகுது..? அவள் எழுச்சிப் பாட்டுத் தான் பாடுறாளாம். பொங்கு தமிழில நாடகம் போடுற ஆக்களில எண்பது வீதமான ஆக்கள் பொம்பிளைப் பிள்ளையள் தானப்பா… கவி வல்வெட்டித் துறைப் பெட்டையப்பா… அவள் இரத்தத்திலேயே யாருக்கும் பயப்பிடாத வீரம் கலந்திருக்குப்பா…”

 

 

இல்லையப்பு… நீங்கள் பொடியன்கள் பரவாயில்லை. நாளைக்கு பொம்பிளைப் பிள்ளையள்ட எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேணும் எல்லே… திரும்ப எப்ப சண்டை தொடங்குதோ தெரியேல்ல… அந்த பயத்தில தான் சொன்னனான். எதுக்கும் அந்த பிள்ளையை கவனமாப் பார்த்து கொள்ளப்பன்…”

 

 

ஓமப்பா… எனக்கு அதை விட வேற என்ன வேலை..

 

 

அப்பாவும் மகனும் நாட்டு நடப்பை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை ஸாம் காப்பாற்ற போவது கவின்யாவை இல்லை வேறோருவரை என்று. 

 

 

ஸாம் காப்பாற்ற போகும் அந்த நபர் யார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 12’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 12’

அத்தியாயம் – 12 ஸாமின் வாழ்க்கையில் விளையாடுவது யார்?   அருண்யாவின் உயர் தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன. அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாவதாக வந்து தமக்கைக்கு தான் ஒன்றும் சளைத்தவளில்லை என்று நிருபித்து இருந்தாள். ஊரே

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’

அத்தியாயம் – 26 நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?     அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 11’

அத்தியாயம் – 11 பொங்கு தமிழ்  27.06.2003. சர்வதேச சமூகத்தையே அந்த சிறிய நிலப் பரப்பை நோக்கி பார்வையை திருப்ப வைத்த தினம். ஆம். யாழ் மருத்துவ பீட மைதானத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் அரங்கே அது. அண்ணளவாக இரண்டு லட்சங்களிற்கும்