Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’

அத்தியாயம் – 06

கவி சந்தித்தாளா ஸாமை

 

கவின்யாவுக்கு பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக வாழ்விலே முதலாவது நாள். 

 

 

வெண்ணிற பருத்தி ஷல்வாரில் இடப் பக்கத் தோளில் ஷோலை நீள வாக்கில் போட்டிருந்தாள். இடது கையில் கறுப்பு பட்டியிட்ட மணிக்கூடும் காதுகளில் ஒற்றை வெண் முத்துத் தோடுகளுமாக அவள் ஆயத்தமாகி தந்தையின் காரை நோக்கி வரவும் பாடசாலைக்கு ஆயத்தமாகி கொண்டிருந்த அருண்யா

 

 

யார் இந்த தேவதை

யார் இந்த தேவதை

ஒரு கோடி பூக்கள் 

உலகெங்கும் உண்டு
இந்த பெண் போல அழகான பூவொன்று உள்ளதா”

 

 

பாட ஆரம்பித்தாள். 

 

 

விடிய காலமை பம்பல் (கேலி) அடிக்காமல் போ அருண்” சொன்ன கவியிடம்,

 

 

வாவ்… அக்கா! உண்மையா சூப்பராக இருக்கிறாய்… இப்பவே பாக்க டொக்கடரம்மா மாதிரி இருக்கிறாய் தெரியுமா? கவனமாக கூட்டிக் கொண்டு போங்கோப்பா… பொடியள் எல்லாம் பின்னால வரப் போகுதுகள்…”

 

 

அருணி முடிக்க முதல் அவள் பின்னால் வந்து முதுகில் ஒன்று போட்ட தெய்வநாயகி,

 

 

கெதியா போய் பள்ளிக்கூடம் போற வேலையை பார்… அவளைப் பார்… டொக்டரா வரப் போறாள்… நீயும் இருக்கிறியே…. ஆடு, மாடு மேய்க்கத் தான் லாயக்கு…”

 

 

நான் ஏன் ஆடு மாடு மேய்க்கோணும்… நான் ஏஎல் எடுத்து முடிய அஜித் மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணி ஜாலியா இருப்பன்… நமக்கு உந்த காலம் பூராவும் படிக்கிற வேலையெல்லாம் சரி வராது. விளங்கிச்சோ… கெதியா மாப்பிள்ளை பாக்கிற வேலையைப் பாருங்கோ… சொல்லிப் போட்டன்… அதுவும் ரெஸ்டோரன்ற் வைச்சிருக்கிறவனா… அப்பத்தான் நான் சமைக்கத் தேவேல்ல…”

 

 

அடி செருப்பால… ஓஎல் கூட எடுக்கிற வழிய காணேல்ல… கழுதைக்கு கலியாணம் கேட்குதோ? முதல் உந்த மொட்டை மண்டைய ஒருத்தனும் கட்ட மாட்டங்கள். தலைமுடியை வள முதல்ல… இப்ப பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுது… கெதியா போய் தலையை இழு…” 

 

 

அம்மாவும் மகளும் போடும் சண்டையை பார்த்தவாறே புன் சிரிப்புடன் கவியும் சந்திரஹாசனும் விடை பெற்று யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கிச் சென்றார்கள். 

 

 

பல்கலைக்கழக வாயிலுக்கு சிறிது தூரம் முதலே கவின்யாவும் அவள் தோழி அஞ்சலியும் காரை விட்டு இறங்கினர். இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் கண்டு விட்டால் இன்னும் அதிகமாக ராகிங் செய்வார்களே என்ற பயத்தில். 

 

 

அவளது பாடசாலை தோழி அஞ்சலியும் மருத்துவ பீட அனுமதி பெற்றிருந்தாள். அவளையும் கவி தன்கூடவே அழைத்து வந்திருந்தாள். இருவருமாக சேர்ந்து தங்கிக் கொள்வதாக முடிவெடுத்து நல்லூரடியில் சந்திரஹாசனின் நண்பர் ஒருவரின் வீட்டு மாடியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து இருந்தனர். 

 

 

மருத்துவ பீட அனுமதி பெற்ற மகிழ்ச்சியைவிட ராகிங் பயமே அதிகமாக இருக்க இருவரும் தங்கள் பீடத்தை நோக்கி சென்றனர்.

 

 

முகாமைத்துவ பீடத்தைக் கடந்து தான் மருத்துவ பீடம் செல்ல வேண்டும். இவர்கள் வருவதை தூரத்திலேயே கண்டு விட்டான் சுதர்சன். முதலாம் ஆண்டு மாணவி ஒருவரை நர்ஸரி ரைம் பாட சொல்லி வதைத்துக் கொண்டு நின்ற நிரோஜனின் தோளை மெதுவாக சுரண்டினான்.

 

 

அடே மச்சான்… அது எங்கட கவியும் அஞ்சலியும் எல்லே… பாரடா.. நாங்கள் எல்லாம் கொழும்பு என்று நினைக்க அக்காவும் தங்கையுமா நல்லா பூச் சுத்திட்டாங்கள்.”

 

 

கடுப்பாகிய சுதர்சனை மெதுவாக அடக்கிய நிரோஜன் ஸாம் எங்கே என்று பார்த்தான். அவனோ கவி வரும் திசைக்கு எதிர்ப்புறமாக இருந்த இருக்கையில் இருந்து சில மாணவர்களை கையாலே நீச்சல் அடிக்க உத்தரவு போட்டுக் கொண்டிருந்தான். இடையில் இருந்த மிகப் பெரிய மரம் வேறு வாயிலை மறைத்துக் கொண்டிருந்தது.

 

 

அதை அவதானித்து விட்டு நிரோஜன் பக்கத்தில் நின்ற வடமராட்சி பிரதேசம் இல்லாத வேறு இடத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் ரகசியமாக ஏதோ சொன்னான். அவர்களும் மகிழ்ச்சியாக தலையை ஆட்டிக் கொண்டனர். கவி அவர்கள் இருந்த இடத்தை நெருங்க முதல் அவள் காணதவாறு நிரோஜனும் சுதர்சனும் ஒரு முதலாம் ஆண்டு மாணவியுடன் கடலை போட முயன்று கொண்டிருந்த சுதனையும் இழுத்துக் கொண்டு ஸாம் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்கள். 

 

 

கவியும் அஞ்சலியும் பக்கத்தில் வந்ததும் “அக்காமார் ரெண்டு பேரும் எங்க போறீங்க?” என்றான் ஒருத்தன்.

 

 

அவனது கடுமையான குரலைக் கேட்டுப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள கவிக்கு பேச வார்த்தையே வரவில்லை. அஞ்சலி தான் தன்னை சமாளித்துக் கொண்டு “நாங்க மெடிக்கல் பக்கல்டி” என்றாள் அவர்கள் முகாமைத்துவ பீட மாணவர்கள் என்பதை அறிந்து. 

 

 

மெடிக்கல் பக்கல்டி என்டால் என்ன கொம்பு முளைச்சிருக்கே உங்களுக்கு? இங்க எல்லாரும் ஜப்னா கம்பஸ்… அதுக்குப் பிறகு தான் மிச்சம் எல்லாம். ஓகே? சீனியர்ஸ்ஸ கண்டால் முதல்ல குட் மோர்னிங் சொல்ல வேணும் என்று தெரியாதா?”

 

 

இருவரும்  இல்லை என்று மெதுவாக தலை அசைத்து விட்டு மெல்லிய குரலில் “குட் மோர்னிங் சீனியர்” என்றார்கள். 

 

 

எந்த ஊர் நீங்கள்? என்ன பேர்

 

 

வல்வெட்டித் துறை… கவின்யா…” 

 

 

தும்பளை.. அஞ்சலி…”  

 

 

ஓ அஞ்சலியா? எங்க அஞ்சலி பாப்பா மாதிரி உன்ர பேரைச் சொல்லு பாப்பம்”

 

 

உள்ளே தோன்றிய கடுப்பை மறைத்தபடி,

ஒரெலி, ரெண்டெலி, மூணெலி, நாலெலி, அஞ்சலி”

 

 

மூன்று வயது குழந்தை மாதிரியே சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் அனைவரும் நகைத்தனர். கவிக்கே அடுத்து தன்னை என்ன கேட்க போகிறார்களோ என்ற பயத்தை மறந்து புன்னகை மலர்ந்தது. 

 

 

அவர்கள் இருவரையும் ஸாம் இருந்த மரத்திற்கு சிறிது தூரம் அப்பால் அழைத்து சென்றிருந்த படியால் ஸாமினாலும் அவர்கள் குரலைக் கேட்க முடியவில்லை. 

 

 

ரெண்டு பேரும் ஒரு தேவாரம் பாடுங்கோ பாப்பம்” 

 

 

சாதாரண தரப் பரீட்சைக்குப் பின் மறந்து விட்டிருந்த தேவாரம். எதைப் பாடுவது என்று குழப்பத்தில் கவியைப் பார்த்தாள் அஞ்சலி.

 

 

தினமும் காலை ஆராதனையில் கவின்யா தேவாரம் பாடுவதினால் மனப்பாடமாயிருந்த தேவாரத்தை பாட ஆரம்பித்தாள். அஞ்சலி அவளோடுசேர்ந்து வாயசைத்தாள்.

 

பிடியதன் உருகுமை கொளமிகு கரியது

வழிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கரிகண பதிவர அருளினன் மிகுகொடை 

வடிவினர் பயில்வலி வளமுறை இறையே”

 

 

தேனினும் இனிய குரலில் உள்ளம் கசிய நெக்குருகி தன்னை மறந்து கண்களை மூடி அவள் பாட அனைவரும் தங்களை மறந்து எழுந்து நின்றனர். 

 

 

அவள் பாடி முடித்ததும்,

சரி… சரி… பாட்டுப் பாடின எல்லாம் காணும்… ஃபாக்கை இங்க வைச்சிட்டு இந்த பூவை பிடி” என்று பக்கத்திலே செவ்வரத்தை செடியில் மலர்ந்திருந்த அழகிய சிவப்பு கொத்து செவ்வரத்தம் பூ ஒன்றை பறித்துக் கொடுத்தான் ஒருவன்.

 

 

அந்த மரத்துக்குப் பின்னால இருக்கிற ஃப்ளு சேர்ட் போட்டவரிட்ட இந்த பூவைக் குடுத்து ஐ லவ் யூ சொல்லிட்டு வா”

 

 

கேட்டதும் தான் தாமதம் கவியின் கண்கள் பொலபொலவென கண்ணீர் உகுக்க ஆரம்பித்தன. தன் கண்ணாளனிடமே இன்னமும் காதலைச் சொல்லாமலிருக்க விளையாட்டுக்கே என்றாலும் கண்டவனிடம் எல்லாம் போய் காதல் சொல்லி விட முடியுமா என்ன?

 

 

நோ…. என்னால முடியாது. வேற ஏதாச்சும் சொல்லுங்கோ அண்ணா… நான் செய்யிறன்… இது மட்டும் என்னால ஏலாது…”

 

 

என்னடி… இது ராக்கிங்கா… வேற ஏதுமா…? நீ சீனியரா… நாங்க சீனியரா…? நாங்க சொல்லுறதைத் தான் நீ செய்யணும்… புரிஞ்சுதா…?”

 

 

விழிகளால் வழிந்த நீரைத் துடைத்தபடி,

அதுக்காக கண்ட கண்ட ஆக்களிட்ட போயெல்லாம் என்னால இதைச் சொல்ல முடியாது.”

 

 

அத்தனை நேரமாக பதுமையாக பயந்தபடி நின்றவள் கொஞ்சம் நிமிர்ந்தே அவர்களோடு ஒரு யுத்தத்திற்கு ஆயத்தமாகினாள். 

 

 

கவி… வேணாம்டி… அவங்கள் சொல்லுற மாதிரியே செய்திடு. பிறகு ஒவ்வொரு நாளும் கூப்பிட்டு வதைப்பாங்கடி…” காதுக்குள் கிசுகிசுத்த தோழியையும் கணக்கெடுக்கவில்லை அந்த பேதை. 

 

 

தன்னவன் வாய் மொழியாக இந்த மூன்று சொற்களை கேட்கவும் அதன் பிறகு தன் வாயால் பகரவும் இரு வருடங்களாக காத்துக்கொண்டு இருப்பவள் ராக்கிங் என்ற பெயரில் அந்த வார்த்தையின் புனிதத்தை அழித்து விட விரும்பவில்லை.

 

 

தனது முடிவிலேயே உறுதியாக நின்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் சீனியர் மாணவர்கள் தான் திகைத்து நின்றார்கள். அவர்கள் ஏதோ திட்டம் வகுக்க இவள் என்னடா என்றால் பிடிகொடுக்கவே மாட்டேன் என்கிறாளே. 

 

 

அடியே…. உனக்கென்ன பெரிய ஐஸ்வர்யா ராய் என்ற நினைப்பே… பெருசா சீனைப் போடுறாய்… இப்ப சொன்னதைச் செய்யிறியா… இல்லை சொல்லும் வரைக்கும் இதிலயே நிக்கப் போறியா… நாங்கள் ஒண்டும் உங்கட பக்கல்டி ஆக்கள் மாதிரி அம்மாஞ்சியள் இல்ல தெரியும் தானே… தூசனத்தால விளங்கப் படுத்த முதல் நாங்கள் சொல்லுறதைச் செய்யடி…”

 

 

அவனின் டியிலும் தூசனம் என்ற வார்த்தையிலும் நெஞ்சம் கலங்கியவள் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று சிந்தித்தாள். சண்டைக்காரனை விட சாட்சிக்காரனின்  காலில் விழுவது மேல் என்று நினைத்து முடிவெடுத்தவளாக பூவை வாங்கிக் கொண்டாள்.

 

 

சீனியர் மாணவர்கள் முகத்திலோ தங்கள் திட்டம் வெற்றி பெற்றதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லாக கவியை பின் தொடர்ந்தனர். அவர்களே எல்லோரும் செல்ல தான் மட்டும் அங்கே நின்று என்ன செய்வது என்று அஞ்சலியும் கவியின் கூட சென்றாள். 

 

 

இட்ட அடி நோகாமல் தரையைப் பார்த்தவாறே அந்த நீலச் சட்டைக்காரன் நாசமாப் போகக் கடவது என்று அவனை சாபம் போட்டபடி அவனிடம் என்ன சொல்லலாம் என்று எண்ணியவாறு மூளையைக் கசக்கியவாறே மரத்தைக் கடந்து போட்டிருந்த இருக்கைகள் பக்கம் வரவும்,

 

 

அட கடவுளே… கவி… கவி… யாரென்று பாரடி….” என்ற அஞ்சலியின் படபடத்த அதிர்ச்சி குரலில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு முகத்திலே உணர்சிக் குவியல்.

 

 

அஞ்சலியின் கவி என்ற அழைப்பைக் கேட்டு தன்னவள் பெயரை யார் இங்கே உரைப்பது என்று திரும்பிப் பார்த்த ஸாம் பெயருக்குரிய தன் நாயகியே எதிரில் நிக்கவும் ஒரு கணம் அது உண்மை தானா என்று குழம்பி விட்டான்.

 

 

என்னடா மச்சான்… கனவா? நிஜமா?  என்று பாக்கிறியா? எல்லாம் நிஜம் தான்… உன்ர கவிதான்..

சந்தேகம் என்றால் இப்ப பார்…” என்று கூறிய நிரோஜன் ஸாமின் தொடையில் இறுக்க கிள்ளி விட்டான். 

 

 

ஸ்ஸ்… ஆ….” என்று சத்தமாக அலறியபடி எழுந்த ஸாம் கவியையே ஆசை தீரப்பார்த்துக் கொண்டு நின்றான். அவளும் அவனையே அத்தனை நேரம் இருந்த பதட்டமும் கவலையும் தீர விழிகளிலே காதல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

 

டேய் மச்சி… இதைத்தான் அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள்… என்று கம்பர் சொல்லியிருப்பாரோ…?” மிக அக்கறையாக நிரோஜன் காதிலே சுதன் கிசுகிசுக்க,

 

 

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது” 

 

 

சுதர்சன் பாட ஆரம்பிக்க கவியின் பின்னால் வந்த மற்றைய மாணவர்களும் கோரஸாக மிகுதியைத் தொடர்ந்தனர்.

வாசப்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது
அந்தி வெயில் குழைத்து
செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்
வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது
காதல் சுகமானது”

 

 

அவர்கள் பாடல் கேட்டு அந்தி வானமாய் முகம் செங்கொழுந்தாக மென்னகை முகிழ நின்ற கவியிடம்,

 

 

மேடம்… நாங்கள் சொன்னதை நீங்கள் இன்னும் செய்யலையே… கெதில போய்ச் சொல்லுங்கோ… இது சீனியர் ஓடராக்கும்…” 

 

 

என்று அவளை ஐ லவ் யூ சொல்லப் பணித்தவன் இலகு குரலில் சிரித்து கொண்டே கூறினான். 

 

 

அட கடவுளே… தனிமையில் கூற எண்ணியிருந்த தன் காதலை இப்படியா எல்லார் முன்னாலும் வெளிச்சம் போட்டு சொல்வது… அதுவும் அவன் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று காத்திருப்பவள்… சிந்தித்தது ஒரு கணமே…

 

 

வன்… டூ… த்ரி… என்று எல்லோரும் கூச்சலோடு கவுண்ட் டவுன் போட்டுக் கொண்டிருக்க யாருமே எதிர்பாராத விதமாக இவள் மெல்லிய நீல நிறத்தில் சேர்ட் போட்டிருந்த நிரோஜனிடம் சென்று பூவை நீட்டி,

 

 

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் நிரோஜன் அண்ணா… ஆபத்தில இருந்த போது நீங்கள் உங்கட தங்கச்சி என்று சொல்லி காப்பாத்தினதை என்றைக்கும் மறக்க மாட்டன். ரொம்ப தாங்ஸ் அண்ணா… நான் எப்பவுமே உங்க தங்கச்சி தான்..

உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் நிரோஜன் அண்ணா…”

 

 

என்றாள். நிரோஜனே ஒரு கணம் திகைத்து நிக்க, இவளோ ஸாமைப் பார்த்து “எப்படி?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள். வாய் விட்டே ஸாம் நகைக்க,

 

 

நோ… நோ… இது செல்லாது… நீங்க ஸாமிட்ட தான் ஐ லவ் யூ சொல்ல வேணும்” எல்லோரும் கோரஸாக குரலெழுப்பினர்.

 

 

நீங்கள் டார்க் ஃப்ளூவா, லைட் ஃப்ளூவா என்று சொல்லேல. தமிழில சொல்லக் கூடாது என்றும் சொல்லேல… ஸோ… நீங்கள் சொன்னதை நான் செஞ்சிட்டன்.. நேரம் போய்ட்டு… நாங்க போய்ட்டு வாறோம்…” என்று சொல்லியபடி கண்களாலேயே ஸாமிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் விரிவுரை நடக்கும் இடம் நோக்கி அஞ்சலி பின் தொடர ஓடி விட்டாள். மாணவர்களின் “ஓ…ஓஓ…” சத்தம் அவர்களைத் தொடர்ந்தது.

 

 

இங்கு ஸாமோ மகிழ்ச்சியின் உச்சாணிக் கொம்பில் நின்றான். அருண்யா சொன்னதைக் கேட்டு தன் காதல் கைகூடாதென்றே முடிவுக்கு வந்திருந்தான். 

 

 

ஆனால் இன்று கவின்யாவை இங்கு கண்டதுமே அவனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் அவள் போகாதது தனக்காகவே என்று புரிந்தது. தன்னைக் கண்டதும் அவள் நயனங்களால் பேசிய காதல் பாஷை அவனுக்கு மட்டுமே புரிவதாய் தன் மீது அவள் கொண்ட காதலை தெள்ளெனப் புரிந்து கொண்டான்.

 

 

நடக்கப் போவதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் தான் ஏது? வாழ்க்கை ஒன்றும் திறந்த புத்தகம் இல்லையே… பின்னே தட்டிப் பார்த்து முடிவை அறிந்து கொள்ள… இணையத்தில் வெளியாகும் தொடர் கதை போல் காத்திருந்து தான் முடிவை அறிய வேண்டும். 

 

 

கவின்யா, ஸாமின் காதல் ஈடேறுமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

அத்தியாயம் – 15 யாருக்கு மாலை?   பரீட்சைகள் முடிந்த அன்றைக்கே கவின்யா வல்வெட்டித்துறையிலுள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த நேரமிருந்து ஓய்வெடுக்காது வரவேற்பறையையே சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கொண்டிருந்த மகளைப் புரியாமல் பார்த்தார் தெய்வநாயகி.      “இவ்வளவு நாளும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 24’

அத்தியாயம் – 24 மாறுவாளா அருண்யா?      ஸாம் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய போது அங்கே அருண்யா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.     அவளைக் கண்டதும் கண்களில் முட்டிய நீரை சுண்டி விட்டபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் தொலைக்காட்சி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’

அத்தியாயம் – 10 சொல்லாயோ சோலைக்கிளி     வருஷங்கள் இரண்டு உருண்டோடியது. கவின்யா மூன்றாம் ஆண்டிலும் ஸாம் அபிஷேக் இறுதி ஆண்டில் பல்கலைக்கழகத்திலும், அருண்யா வர்த்தக பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கும் (+2) படித்துக் கொண்டிருந்தார்கள்.     கல்விப் பொதுத்