Tamil Madhura சிந்தனை துளிகள் இன்று ஒரு தகவல் -19

இன்று ஒரு தகவல் -19

கிறுக்குசாமி கதை – யார் பிச்சைக்காரன்?

கிறுக்குசாமி தங்கியிருந்த மடத்தில் தனகோடி என்ற ஒரு வியாபாரி சில நாட்கள் தங்கினார். தனகோடி வியாபாரத்தில் கெட்டிக்காரர். கல்லைக் கூட விற்று காசு சம்பாதித்து விடுவார். அதனால் சற்று செருக்குடனேயே இருப்பார்.

அவர் தினமும் காலை கிறுக்குசாமி சுறுசுறுப்பாக எழுந்து தியானம் செய்வதையும் முருகவழிபாடு  செய்துவிட்டு ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதையும், அதன்பின் உழவாரப் பணிகளிலும் இயற்கை விவசாயத்திலும் நேரத்தை செலவிடுவதையும் இரவு நேரங்களில் கோவில் மண்டபத்தில் பக்தர்களோடு அளவளாவி அவர்களது பிரச்சனைகளுக்கு செவி சாய்ப்பதையும், பின்னர் நிம்மதியாகப் படுத்து உறங்குவதையும் அங்கு தங்கி இருந்த நாட்களில் நோட்டமிட்டார்.

செல்வந்தனான தன்னிடம் பலர் பண உதவி வேண்டி நின்றும் கிறுக்குசாமி ஒரு காசு கூடக் கேட்டதில்லையே என்ற வியப்பு அவரிடம் ஏற்பட்டது. தனகோடிக்கு  கிறுக்குசாமி மேல் நன்மதிப்பு உண்டானது. அவரும் தனக்கும் ஏதாவது அறிவுரை சொல்லும்படி கிறுக்குசாமியிடம் கேட்பார். ஆனால் கிறுக்குசாமியோ புன்னகையுடன் நகர்ந்துவிடுவார்.

இப்படி நாட்கள் செல்கையில் ஒரு நாள் தனகோடி அந்த ஊரை விட்டுக் கிளம்பும் நாள் வந்தது. கிறுக்குசாமியை அழைத்த அவர் அவரது கைகளில் பத்தாயிரம் ரூபாய்களைத் திணித்தார்.

“கிறுக்குசாமி இந்த பத்தாயிரம் ரூபாயை தானதர்மங்களுக்கு செலவிடுங்கள். உங்களிடம் தரும் பணம் உருப்படியான காரியத்திற்கு பயன்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

“ஆனால் இந்தப் பணத்தை நான் வாங்கிக்கணும் என்றால் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்லணும்” என்றார் கிறுக்குசாமி.

அவர்மேல் இருந்த நன்மதிப்பால் தனகோடியும் சம்மதித்தார்.

“உங்ககிட்ட இருக்குற பணத்தை என்கிட்ட தந்துட்டீங்களே உங்களுக்கு பணம் வேணும்னா என்ன செய்வீங்க?”

பலமாக சிரித்த தனகோடி “என் வீட்ல கோடிக் கோடியா பணம் சம்பாரிச்சு வச்சிருக்கேன். இந்தப் பணம் என்ன இன்னும் பத்தாயிரம் கூட வேணும்னா கேளுங்க தரேன்”

“சரி, உங்ககிட்ட யாராவது இப்படி பத்தாயிரம் ரூபாயை தூக்கி வச்சுக்கோங்கன்னு தந்தா என்ன செய்வீங்க?”

“சந்தோஷமா வாங்கி வச்சுப்பேன். ஒவ்வொரு நாளும் நான் வியாபாரம் செய்றதே மேலும் மேலும் சம்பாரிக்கத்தானே. பணம் வேணும்னு தானே கடவுளை தினமும் கேக்குறேன். அந்தப் பணத்தை யாராவது சும்மா தூக்கித் தந்தால் வேண்டாம்னா சொல்லுவேன்” என்றார் ஏளனத்தோடு.

அவரது பணத்தை அவரிடமே திருப்பித் தந்த கிறுக்குசாமி “மன்னிச்சுக்கோங்க இந்தப் பணத்தை நான் வாங்கிக்க முடியாது?”

“ஏன்?” திகைப்போடு கேட்டார் தனகோடி.

“நீங்களே வசதி இல்லாத ஏழை. உங்ககிட்ட இருந்து எப்படிங்க பணம் வாங்க முடியும்?”

“அடேய் பிச்சைக்காரப் பயலே, என்னை ஏழைன்னு சொல்ல உனக்கு என்ன தைரியம்?” ஆத்திரத்தோடு கேட்டார் தனகோடி.

“உங்க வீட்டில் எவ்வளவு பணம் இருக்குனு முக்கியம் இல்லை. உங்க மனதில் எவ்வளவு நிறைவு இருக்குன்னு பாருங்க. கடவுள் தந்ததில் எனக்கு போனது போக அதிகம்னு நினைக்கிறதை அடுத்தவங்களுக்கு பகிர்ந்தளிக்கிற  நான் பிச்சைக்காரனா? இல்ல கோடிக் கோடியா பணம் இருந்தும் திருப்தி இல்லாம தினமும் கடவுள் முன்னாடி நின்னு இன்னும் பணம் வேணும், இன்னும் நிறைய பணம் கொடுன்னு கேக்குற நீங்க பிச்சைக்காரனா?”

தனகோடி கிறுக்குசாமியின் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது வாயடைத்து நின்றார்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இன்று ஒரு தகவல் – 16இன்று ஒரு தகவல் – 16

கிறுக்குசாமி கதை – யார் பொறுப்பு? கிறுக்குசாமி அன்று தனக்குப் பிடித்தமான குதிரை வண்டியில் ஏறி பக்கத்து ஊருக்கு ஒரு முக்கியமான வேலையாகக் கிளம்பினார். அவருடன் அவரது ஊர்க்கார வாலிபன் தங்கராஜனும் இணைத்துக் கொண்டான். தங்கராஜனுக்கு பல பிரச்சனைகள். அதனால் மனம்

இன்று ஒரு தகவல் -13இன்று ஒரு தகவல் -13

அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் கதை இதுதான். அவன் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே

இன்று ஒரு தகவல் -15இன்று ஒரு தகவல் -15

கிறுக்குசாமி கதை ‘கிறுக்குசாமி’ இப்படி ஒரு பெயரா என்று உங்களில் பலர் எண்ணக்கூடும். என்ன செய்வது அதுதான் அவரது காரணப்பெயர். கிறுக்குசாமி பழனிக்கு அருகில் இருக்கும்  நெய்க்காரப்பட்டியில் திவ்யமாய் சொந்த வீடு, கடை, தோப்பு துரவுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர். ஒரு கெட்ட