Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 1’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 1’

அத்தியாயம்  – 01

இரு மலர்கள் 

அருண்! அடியே… அருண்  கெதியா வாடி… எனக்கு நேரம் போகுது… எனக்கு டியூட்டி வேற ஒபிஸ்க்கு முன்னால. பிறகு பிரின்ஸி கதிரேசனம்மா சாமி ஆடத் தொடங்கிடுவா… ப்ளீஸ் டி…” 

என்று தனது துவிச்சக்கர வண்டியுடன் வீட்டு வாயிலில் நின்றபடி தனது தங்கை அருண்யாவை அழைத்துக் கொண்டிருந்தாள்  கவின்யா.

எத்தனை தரம் உனக்குச் சொல்லுறது கவி? அவளை அருண் என்று கூப்பிடாதே என்று… உப்பிடி கூப்பிட்டு கூப்பிட்டே அவளை பொடியன் மாதிரி ஆக்கி வைச்சிருக்கிறாய். நீயும் அப்பாவும் அவளுக்கு ஓவராத் தான் செல்லம் குடுக்கிறியள்” என்று கவியை வைதவாறே அவளின் மதிய உணவைக் கொடுத்தார் அவளின் அன்புத் தாயார் தெய்வநாயகி. 

அதை வாங்கி பாடசாலை பையினுள் வைத்தவாறே, “அருண்! இப்ப நீ வரவில்லையோ நான் போறன்… பிறகு பஸ்ல இடிபட்டுக் கொண்டு வா…” உள்ளே நோக்கி மறுபடியும் குரல் கொடுத்தாள். 

இப்பத்தானே அவளை இப்பிடி கூப்பிடாதே என்று சொன்னான். என்ர சொல்லை எப்போதாவது யாராவது காதில விழுத்திறியளா? எல்லாம் உங்கட அப்பாவை சொல்லோணும். அவர் தான் ஒபிஸ் திறக்கிற மாதிரி விடிய வெள்ளன போடுவார். கேட்டால் நான் நேரத்தோடு போனால் தானே பிந்தி வாறவையில நடவடிக்கை எடுக்கேலும் என்று ஒரு சாட்டுச் சொல்லுவார். உங்கள் ரெண்டு பேரையும் நான் தனிய மேய்க்க வேண்டிக் கிடக்கு. எல்லாம் என்ர தலைவிதி” 

என்று தனது கோபத்தையெல்லாம் வழக்கம்போல வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் தனது கணவர் சந்திரஹாஸனில் காட்டியவாறே தனது செல்ல கடைக்குட்டி ‘அருண்’, ‘அருணி’ எனப்படும் அருண்யா என்ன செய்கிறாள் என்று பார்க்க உள்ளே விரைந்தார். 

தமக்கையின் அழைப்பு காதில் விழுந்திருந்தும் அவள் தன்னை விட்டு விட்டுச் செல்ல மாட்டாள் என்ற  துணிவில் தனது காலை உணவை ஆற அமர அரைத்து கொண்டிருந்தாள் அந்த பாசமலர்.

அருணி! அக்கா பாவமெல்லே… எவ்வள நேரமா கூப்பிடுறாள் பார்… வெள்ளன எழும்பு என்றால் கேட்கிறியா? சாப்பிட்டது போதும். கெதியா போ… அவள் வேற ஹெட் பிறிபெக்ட் (மாணவத் தலைவி) உன்னால பேச்சு வாங்கப் போகிறாள்.” என்று சாப்பிட்டு முடித்த மகளின் உணவுத் தட்டை வாங்கியவாறே அவளுக்கும் ஒரு மண்டகப்படியை நடத்தி முடித்தார் தெய்வநாயகி. 

தாயின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் இருக்க அவள்தான் ஒன்றும் கவின்யா இல்லையே. 

பெத்த மகளை சாப்பிடாதே என்று சொல்லுற ஒரே ஒரு தாய் இந்த உலகத்திலேயே நீ தான் தெய்வநாயகி! இந்த பாவம் உன்னை சும்மா விடாது பார்” என்று அவருக்கு சாபம் போட்டவாறே பாடசாலைக்குரிய வெள்ளைப் பாதணியை அணிந்து பாடசாலை பையையும் தூக்கிக் கொண்டு தனது தமக்கையை நோக்கி ஓடினாள்.

என்னையே எதிர்த்து மரியாதை இல்லாம கதைக்கிறியா? பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்ட வா… உனக்கு வாயிலேயே சூடு போடுறன்” என்ற தாயை சட்டை செய்யாமல் கவின்யாவின் துவிச்சக்கர வண்டியின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

அம்மா! போய்ட்டு வாறோம்” என்று இருவரும் ஒருமித்த குரலில் தாயிடம் விடைபெற்றவாறே இருபது நிமிடங்கள் தூரத்தில் இருந்த வடமராட்சியின் புகழ் பெற்ற பெண்கள் பாடசாலையான பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையை நோக்கி விரைந்தார்கள் அந்த சகோதரிகள்.

இந்து சமுத்திரத்தின் நித்திலமான இலங்கை ஒன்பது மாகாணங்களாகவும் அதற்குள்ளே உப பிரிவுகளாக இருபத்தைந்து மாவட்டங்களாகவும் ஆட்சி முறைமைக்காகப் பிரிக்கப் பட்டுள்ளது. 

அதற்கமைய வட மாகணத்திலே அமைந்திருக்கும் ஓர் மாவட்டம் தான் யாழ்ப்பாணம். யாழ் மாவட்டமும் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், யாழ்ப்பாணம், தீவகம் என்று ஐந்து வலயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 

இதிலே வடமாகணத்திலே உள்ள யாழ் மாவட்டத்தில், வடமராட்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஓர் நகரம் தான் பருத்தித்துறை.

இது மாங்காய் வடிவிலே இருக்கும் இலங்கைத் தீவின் தலைப் பகுதியில் அமைந்திருக்கும் முனைப் பகுதியாகும். பண்டைய காலம் தொட்டு வர்த்தக துறைமுகமாக விளங்கிய இடம், பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டதனால் பருத்தித்துறை என்னும் காரணப் பெயரைப் பெற்றது. 

இலங்கைத் தீவின் கரையோரங்களில் பயணித்த ஒல்லாந்து மாலுமி பெட்ரே இம்முனைப் பகுதியானது இலங்கையின்  வடமுனையாக சிறந்த கேந்திர நிலையமாக விளங்குவதைக் கண்டு பொயின்ற் பெட்ரோ(Point Pedro) என்று பெயரிட்டார். இன்றைக்கும் ஆங்கிலத்தில் இந்த பெயரே புழக்கத்தில் உள்ளது. சிங்களத்திலே பேதுரு துருவ என்று அழைப்பார்கள். 

இந்த பருத்தித்துறை நகரிலே தான் வடமராட்சிக்குப் புகழ் சேர்க்கும் எத்தகைய செல்வங்களை அழித்தாலும் அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் அந்த மிகப் பெரிய இரண்டு பாடசாலைகளும் அமைந்துள்ளன. 

ஆண்களுக்கான ஹாட்லி கல்லூரியும், பெண்களுக்கான மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையும் ஆறாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரையான ஆங்கில, தமிழ் மொழி மூல கல்வியை வழங்கி இலங்கை மண்ணுக்கு எத்தனையோ பெரும் மாமேதைகளை இரு நூற்றாண்டுகளாக தந்து கொண்டிருக்கின்றன.  

ஆம். ஆங்கிலேயர்களின் வருகையின் போது ப்ரிட்டிஸ் மிஷனரிகளினால் 1823 ஆம் ஆண்டு மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையும் 1838 ஆம் ஆண்டு ஹாட்லி கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டது. பல பல்கலைக் கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அமைச்சர்கள்,பாரளுமன்ற உறுப்பினர்கள் என்று பல தரப்பட்ட புத்தி ஜீவிகளை உருவாக்கிய பெருமை இக் கல்லூரிகளைச் சேரும். இலங்கை பிரதமர் ஈறாக அங்கே படித்திருக்கிறார்கள். 

சந்திரஹாஸன் குடும்பம் வசிப்பது பருத்தித்துறைக்கு அருகே இருக்கும் சிறுநகரான வல்வெட்டித்துறையில்.கடற்கரை பட்டினமான இங்கே தான் ஈழத்து முருகன் ஆலயங்களில் பெயர் பெற்ற தொண்டைமனாறு செல்வச் சந்நிதி கந்தன் வீற்றிருந்து அருள் பாலிப்பது. 

ஈழப் போராட்டத்தின் வேர் பிறந்ததும் இந்த வீரம் செழிந்த மண்ணிலே தான். 

பெரும்பாலான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு விளங்கிய வல்வெட்டித் துறையில் இருந்து அவர்கள் பாடசாலைக்குச் செல்ல குறைந்தது இருபது நிமிடங்கள் எடுக்கும். 

உரிய நேரத்திற்குள் சென்று விட வேண்டும் என்ற தவிப்பில் கவி மிதிவண்டியை தன் பலம் கொண்ட மட்டும் வேகமாக மிதித்து கொண்டிருந்தாள். இது பற்றி எதுவித கவலைகளுமின்றி பின்னாலிருந்த அருணியோ அப்போது வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த ஜெமினி படப் பாடலான ‘ஓ போடு’ பாடலைப் பாடிக் கொண்டு வந்தாள்.

பிந்தி வெளிக்கிட்ட காணாது என்று உனக்கு ஓபோடு கேட்குதா? நானே கடுப்பில இருக்கிறன். பேசாமல் வாயை மூடிட்டுவா” என்று கடிந்து கொண்ட கவின்யாவின் படபடப்புக்கு பாடசாலைக்கு தாமதம் ஆகிவிடுமோ என்ற பதட்டத்தை விட பாடசாலை செல்லும் வழியில் அவர்கள் இன்றும் நிற்பார்களோ என்ற கலக்கம் தான் மேலோங்கி இருந்தது. 

இதை எதையும் கணக்கெடுக்காது தமக்கையின் சொல்லை செவி மடுத்தவளாய் ஓ போடிலிருந்து ஒல்லிக் குச்சி ஒடம்புக்காரி என்று தனது ஆஸ்தான நாயகன் அஜித் குமார் படமான ரெட் படப் பாடலுக்கு தாவியிருந்தாள் அருண்யா.

வெள்ளைப் பாடசாலை சீருடையிலே, மடித்துக் கட்டிய  இரட்டைப் பின்னல்களுடன் வெள்ளைப் புறாக்களாக பறந்து கொண்டிருந்தவர்களில் மூத்தவள் கவின்யா உயர்தரம்(+2) விஞ்ஞான பிரிவு இரண்டாம் ஆண்டில் பரீட்சையை எதிர்நோக்கி காத்திருப்பவள்.

அவளை விட மூன்று வயது குறைந்த அருண்யாவோ பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த வருடம் சாதாரண தரப் பரீட்சை (+1) எழுத வேண்டுமே என்ற கவலை எல்லாம் வீட்டுக்காரருக்கே தவிர அவளுக்கு இல்லை. 

இரு சகோதரிகளும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்தாலும் தோற்றத்திலும் குணத்திலும் இரு துருவங்கள்.

மூத்தவளோ சாதாரண பெண்களிற்கு சற்றே அதிக உயரத்தில் மெல்லிய கொடியான உடல்வாகுடன் தந்தையின் உயரத்தையும் தாயின் எலுமிச்சை மஞ்சள் தேகத்தையும் கொண்டு விளங்கினாள். அவளின் மருண்ட மான் விழிகளே புதிதாக காண்போரை திரும்ப ஒரு தடவை பார்க்க வைக்கும். இடைவரை அடர்ந்து தொங்கிய அவள் கருங் கூந்தல் அவளின் அழகுக்கு இன்னும் அணி சேர்த்தது.

சின்னவளோ பெரியவளுக்கு நேர் மாறாக தந்தையின் மா நிறத்தையும் தாயின் உயரத்தையும் கொண்டு கவின்யாவின் தோளுயரத்தில் தான் இருப்பாள். கொஞ்சமே குண்டாய் தளதள தக்காளியாய் பளபள பப்பாளியாய் எப்போதும் முகத்திலே சிறுநகை துலங்க ஒரு அமுல் பேபி தான். நீண்ட முடியிருந்தால் பாடசாலைக்கு நேரத்தோடு எழுந்து தயாராக வேண்டும் என்பதற்காக தனது தலை முடியை குட்டையாக டயானா கட் வெட்டி இருந்தாள். 

மூத்தவளின் அழகு காண்போரை திரும்பிப் பார்க்க வைக்கும் என்றால் இளையவளின் துடுக்குத் தனமான பேச்சும் குறும்புத் தனமும் அனைவரையும் ரசிக்க வைக்கும். 

கவின்யா மிக அழுத்தமாக, அதேநேரம் தெளிவாக, சுருக்கமாக, பொறுமையாக பேசுவாள். அருண்யாவோ இதெல்லாம் என்ன விலை என்று கேட்கும் ரகம். ‘நித்திரை கொள்ளும் போதாவது வாயை மூடுவியா?’ என்று அடிக்கடி ஆசிரியரிடம் திட்டு வாங்குபவள்.

பாவம். அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது திறந்த வாயுடன் கடைவாய் வழியத் தான் அந்த பச்சை மண் தூங்குவது என்று. ஆனால் அவள் பேச்சுக்களும் நடத்தைகளும் ரசிக்கவே வைப்பதாலும் வகுப்பிலே முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவதாலும் வீட்டைப் போல பாடசாலையிலேயும் அவள் செல்லப் பிள்ளையே.

கவின்யாவும் கல்விநிலையில் குறைவில்லை. எப்படியும் உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடுவாள் என்று அவள் ஆசியர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவளும் அதற்கு தன்னாலான முயற்சியை செய்து கொண்டிருக்கிறாள். 

பாடசாலைக்கு இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த சந்தியைக் கடக்கும் போது வேகமாக துடித்த இதயத்தை சீர்படுத்த பெருமூச்சுக்களை வெளியேற்றியவாறு மிதிவண்டியை இன்னும் வேகமாக மிதித்தாள். ஆனால் அவள் உள்ளப் படபடப்புக்கு காரணமானவர்கள் அங்கே இல்லாத காரணத்தினால் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். உரிய நேரத்திற்குள் சென்றடைந்தமையால் ஏற்பட்ட நிம்மதி பெருமூச்சை வெளியேற்றியவாறே, பாடசாலைக்கு ஐநூறு மீற்றர்கள் சுற்றளவுக்கு அப்பாலேயே மிதிவண்டியை விட்டு இறங்கி உருட்டிக் கொண்டே பெண்களுக்கு தனியாக சென்று கொண்டிருந்த வரிசையில் தன்னையும் இணைத்து கொண்டாள்.

பேருந்திலிருந்து இறங்கி சென்று கொண்டிருந்த மாணவிகள் வரிசையில் தன்னை முறைத்த அந்த ஆறாம் வகுப்பு சிறுமிகளைக் கணக்கெடுக்காது  தனது நண்பிக்கு முன்னால் சென்று தன்னை நுழைத்து கொண்டாள் அருணி.

பருத்தித்துறை வெளிச்சவீட்டிற்கு அருகே நீலக் கடலின் அலையோசை என்றும் இசை பாடுவதைக் கேட்குமாறு கட்டப்பட்டிருந்த அந்த இரு கல்லூரிகளும் உள்நாட்டு யுத்த காலத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு பாதிக் கட்டிடங்கள் இராணுவத்தினரின் பாவனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. 

பாடசாலைக்குள் பிரவேசிப்பதற்கு தினமும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இராணுவ சோதனையைக் கடந்தே செல்ல வேண்டும். 

ஐநூறு மீற்றர்களுக்கு அப்பாலே வாகனங்களை விட்டிறங்கி வரிசையாக நடந்து சென்று அமைக்கப் பட்டிருக்கும் சோதனைச் சாவடிகளில் புத்தகப் பைகளைத் திறந்து காட்டி, உடற் பரிசோதனை என்ற பெயரில் அவர்கள் தடவல்களை சகித்து தான் தினமும் அந்த மாணவர்கள் கல்வி கற்று வந்தார்கள். 

அந்த பிஞ்சுகள் அப்படி என்ன ஆபத்தை விளைவிக்கப் போகிறார்கள் என்று நினைத்தார்களோ தெரியாது. சாப்பாட்டு பெட்டி வரை திறந்து பார்த்தே சோதனை பண்ணி அனுப்புவார்கள். 

இவளுகள் திறந்து பாத்து கைபட்ட சாப்பாட்டைச் சாப்பிடவே வயித்தைப் பிரட்டுது” என்று புலம்பும் கவிக்கு, “விடக்கா… அவளுகளும் தான் தங்கட சொந்த வீடுகளை விட்டுவிட்டு வந்து இங்க கிடந்து காயுறாளுகள். எங்கட சாப்பாட்டைப் பார்த்தென்றாலும் ஏதோ மனசு ஆறட்டும்” என்று அருணி சொல்லும் பதிலால் புன்னகை தான் மலரும். 

சோதனைகள் முடிந்து பாடசாலையை நெருங்கியதும் “பள்ளிக்கூடம் முடிய கேற்றடியில வந்து நில்லு” என்று தங்கையிடம் கூறியவாறே துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தை போனவள் மனதோ ‘ஏன் இன்றைக்கு அவர்கள் வரவில்லை’ என்று அதையே சுற்றி வட்டமிட்டது. 

யார் அந்த அவர்கள்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

அத்தியாயம் – 15 யாருக்கு மாலை?   பரீட்சைகள் முடிந்த அன்றைக்கே கவின்யா வல்வெட்டித்துறையிலுள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த நேரமிருந்து ஓய்வெடுக்காது வரவேற்பறையையே சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கொண்டிருந்த மகளைப் புரியாமல் பார்த்தார் தெய்வநாயகி.      “இவ்வளவு நாளும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 27’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 27’

அத்தியாயம் – 27 ஒளியேற்றுவானா ஸாம்?   அடுத்த நாள் மதிய இடைவேளையின் போது வைத்தியர் விடுதி வரவேற்பறையில் கவிக்காகக் காத்திருந்தான் ஸாம். எதற்காக வரச் சொன்னாள், என்ன விசயமாக இருக்கும் என்று மனதிற்குள் பலத்த யோசனை. இருந்தாலும் எதையும் இது

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’

அத்தியாயம் – 13 யாதவ் காதல் நிறைவேறுமா?   யாதவ்மித்ரனின் வார்டை அடைந்த அனுஷியா,  “டேய் அண்ணா…! சுகமாகி வீட்டுக்கு போனதும் ரெண்டு வீட்டை எனக்கு எழுதி வைக்கிற வேலையைப் பார். சரியா?” “உண்மையாவா சொல்லுறாய் அனு…? என்ர வயித்தில பாலை