Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 5 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 5 – ஆர். சண்முகசுந்தரம்

5

மலையக்காளுடைய சொந்த ஊர் சென்னிமலை. அவளுடைய இயற்பெயர் மாரக்காள். சென்னிமலைக்காரி என்று தான் சொல்வார்கள். நாலைந்து வருஷத்திற்கு முன் அவள் அங்கு வந்த சேர்ந்த போது ‘மாரா’ என்றே பக்கத்து வீட்டுக்காரியும் கூப்பிடுவாள். இன்று அந்தப் பக்கத்து வீட்டுக்காரியே, ‘மலையக்கா இன்னும் மில்லிலிருந்து வரலியா சாமி?’ என்று குஞ்சாளிடம் கொஞ்சுகிறாள்.

இந்த மில்லில் சேருவதற்கு அவள் பட்டபாடு இத்தனை அத்தனை என்று சொல்ல முடியாது. கிட்டானுக்குக் கிடைத்தது போல் ஒரு கருப்பண்ணன் எல்லாருக்கும் கிடைத்து விடுவார்களா?

முதலில் மாரக்காள் சிங்கநல்லூருக்குப் போவதென்றா புறப்பட்டாள்? எங்கோ கால்கள் போனபடி நாலைந்து வயதுக் குழந்தையையும் இடுப்பில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். கீழே விட்டால் அது நடக்கிறதா? இடுப்பில் வைத்துக் கொண்டே இவளால் நடக்க முடிகிறதா? நிழல் கண்ட இடத்தில் உட்காருவது, வாய்க்கால் ஓடினால் தண்ணீர் அள்ளிக் குடிப்பது – யாரோ பரிதாபப்பட்டு – குழந்தை சிணுங்குகிறதே என்று என்னவாவது தந்தால் அதன் ‘வயித்தை’ நிரப்பிக் கொண்டே எட்டு நாள் நடையாய் நடந்து திருப்பூரை அடைந்து விட்டாள். சென்னிமலையை விட்டுப் போய்விட்டால் போதும் என்பதே அவளது வைராக்கியம். அவள் அவ்விதம் கடின விரதம் பூணக் காரணமாயிருந்தவன் கட்டிய கணவன் தான்! ‘அவெ மனுசனா? பரதேசிப் பய!’ என்று தேங்காய்க்கடை சின்னப்பாப்பா கூறுவதை ஒரு நாள் நிரூபித்தே காட்டிவிட்டான்.

ஆரம்பத்தில் ஒழுங்காகத்தான் மாரக்காளின் கணவன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான். மிளகாய் வியாபாரமும் செய்து வந்தான். மிளகாய் காரம் அல்லவா? காரத்தைத் தொட்டுக் கொண்டிருப்பவனுக்கு ‘இனிப்பும்’ வேண்டும் என சில கூட்டாளிகள் இனிமை கூட்டினார்கள். சென்னை மலை அடிவாரத்தில் ‘பட்டைச் சாராயம்’ காய்ச்ச நல்ல வசதி. குடிகாரர்களுக்கும் ஆடு, கோழி வறுத்துத் தின்ன மரங்களும் பாறையும் செறிந்த அந்த இடம் சரியான வசதியை அளித்தது. லாபம் வருகிறதோ இல்லையோ இதயதாபம் அவனை ‘குடி! குடி!’ எனத் தகித்த வண்ணமிருந்தது. கூட்டாளிகள் ‘வா! வா!’ என வருந்தி அழைத்தனர். அப்படி இரண்டு ஜீவன்கள் இருக்கின்ற நினைப்பே அற்றுவிட்டது அவனுக்கு. இரவில் ரகளை! பகலில் ரகளை! எந்நேரமும் ரகளையாக அது மாறி, ‘எல்லே! சோறு ஆக்கிலையா?’ என்று மனைவியை விறகுக் கட்டையால் அடிக்கும் அளவுக்கு அவன் மிருகமாகிவிட்டான். அப்போதும் அவன் சகித்துக் கொண்டுதான் இருந்தாள். யார் செய்த புண்ணியத்தாலோ ரத்தம் சிந்தாமலேயே அவளுக்கு விடுதலை கிடைத்தது. அவளுடைய கணவன் ‘கைமொதலை’ இழந்துவிட்டான்! கடைபரப்ப முடியவில்லை! கட்டுப்பானைச் சரக்கும் கிட்டுவதாயில்லை! நண்பர்கள் போயே போய்விட்டார்கள்! ‘பணமில்லாத சிநேகிதம் என்னய்யா சிநேகிதம்!’ என்று அவர்களிடம் கேட்டிருந்தால் சொல்லி இருப்பார்கள்.

ஒரு குளிர்ந்த நேரமாகப் பார்த்து அந்த இடத்திற்கு இறுதி வணக்கம் செலுத்தி கண்காணா இடத்தை நோக்கி நடையைக் கட்டி விட்டான். காவி வேட்டி கட்டிக் கொண்டு தான்.

மனைவி, மகளைப் பற்றி நினைப்பில்லையா அவனுக்கு? தன்னைப் பற்றிய நினைப்பே இல்லாமல் போகிறவனுக்கு மற்றவர்களைக் குறித்த எண்ணம் எப்படி வரும்? அப்படி வருவதானால், மாரக்காளுக்கு அதனால் என்ன நன்மை?

திருப்பூரில் கொஞ்ச நாள் வீட்டு வேலைகள் செய்தாள். பனியன் கம்பெனிகளில் வாசல் கூட்டும் உத்தியோகம் கிடைத்தது! ஒன்றிலும் அவளால் ஒட்டிக் கொள்ள முடியவில்லை. முதலில் மனது சரியாக இருக்க வேண்டும். சரிப்படாத மனது அவளுடையது. பள்ளத்தில் சகதியில் சிக்கிக் கொண்ட பார வண்டியை ஒண்டி மேட்டுக்கு கொண்டு வர முடியுமா? எப்பாடு பட்டேனும் தன் பெண்ணை நல்லவிதமாக வளர்க்க வேண்டும். அதற்கு ‘எந்தவித’மும் அவள் கண்களுக்குத் தோன்றவில்லை. சோமனூரில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் நல்ல கூலி கிடைக்கிறதென்று கேள்விப்பட்டாள். வாழைத் தோட்டத்து ஐயன்கோவிலுக்கு முதலில் சென்றாள். அடேயப்பா! அங்கே என்ன கூட்டம்! சக்தியுள்ள சாமி என்றால் இந்த நாளில் கூட்டத்துக்குக் குறைச்சல் உண்டா? சிங்கநல்லூர் பக்கத்து பஞ்சாலைகளில் வேலை செய்கின்ற பல பெண்கள் வந்திருந்தார்கள். ‘நோக்காட்டுச் சீவன்’களும் ஏராளம்! அந்த ஐயன்கோயில் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும்! தீராத நோய்கள் தீர்ந்துவிடும். அவள் கேட்டதும் அம்மாதிரிதான், கண்டதும் காண்பதும் அப்படித்தான் இருந்தது. மாரக்காளுக்கு ‘பசி’ நோய்தான். தன் சிறுசுக்கும் தனக்கும் பசி தீர்ந்தால் போதும் என்பதே அவள் பிரார்த்தனை.

‘உனக்கு ஏதாச்சும் வேலை செய்யத் தெரியுமா?’ என்று தாபத்துடன் ஒரு பாட்டி விசாரித்தாள். தேங்காய் மூடி ஒன்றும் பெரிய ‘மொந்தப் பழம்’ ஒன்றும் குழந்தை கையில் தந்தாள்.

மாரக்காளுக்கு எல்லாப் பெண்களுக்கும் தெரிந்த வேலைகள் தான் தெரியும். அதுதான் வீட்டு வேலை!

“நான் மில்லு வேலைக தெரியுமான்னு கேக்கறேன்” என்றாள் அந்தப் பாட்டி, இவள் தடுமாறுவதைக் கண்டு.

பக்கத்தில் நின்ற பார்வதி கூறினாள்: “அதென்ன பாட்டி ஏரோப்ளேன் ஓட்டற பெரிய வேலை! கண் பாத்தா கை செய்யாதா?” என்று ஊக்கமூட்டிப் பேசினாள்.

“எங்க ஊரிலே எல்லாரும் தறி நெய்வாங்க. எனக்கு ராட்டை சுத்தத் தெரியும். நல்லா நூல் நூப்பேன்…”

மாரக்காள் பேச்சை முடிக்கு முன், “போதுஞ்சாமி அப்படீண்ணா ‘வொயிண்டிங்’லே, ‘ரோலிங்’லே சேர்ந்து நல்லா நீ பொளச்சுக்குவே” என்றாள் பாட்டி.

பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சில ஆங்கிலச் சொற்கள் – அதாவது தாங்கள் வேலை பார்க்கும் பகுதிகளை ஆங்கிலத்தில் சொல்லியே பழக்கம். அவற்றைத் தமிழ்ப்படுத்தினாலும் ‘என்னவோ’ போல் இருக்கும்.

சிங்கநல்லூருக்கு வந்தவுடன் அவ்வளவு எளிதான மில் வேலை கிடைத்து விடவில்லை. படியூர்க்காரப் பையன் ஒருவன் – தங்கள் பக்கத்துக்காரியே என்று தன் அண்ணனிடம், அப்பனிடம் – அவர்களும் ‘உள்ளே’ வேலை பார்க்கிறவர்கள் தான் – பலமாகச் ‘சிபார்சு’ செய்து, நூல் சுற்றும் ‘டிபார்ட்மெண்ட்’டுக்குள்ளேயும் நுழையச் செய்து விட்டான்! அங்கேயுள்ள மேஸ்திரி அம்மாள் – அட ராமா! மேஸ்திரி அம்மாளுக்கு ‘எமனம்மா’ என்ற சிறப்புப் பெயர் உண்டு. வேலையிலும் எமன்! வேலை வாங்குவதிலும் எமன்! அப்படிக் கண்டிப்புக்களும் இல்லாவிட்டால் நூல் சுற்றும் பெரிய மூங்கில் குழாயிலேயே ‘மாலை’ செய்து போட்டுவிட்டுப் போய்விடுவார்கள் சக பெண் தொழிலாளிகள்! வெளியே பூனைக்குட்டி மாதிரி சொரூபத்துடன் இருப்பவர்கள் தான் – வேலை ஊர்ஜிதம் என்று ஆனவுடன் – உள்ளே ‘கால் ஊன்ற’ ஆரம்பித்துவிட்டால் – பிறகு புலிகள் தான்! பெண்புலி என்ன சாமான்யப்பட்டதா?

மாரக்காள் ‘இனி அல்லுமில்லே! அலட்டுமில்லே! என்று தான் நான்கு நாள் நம்பி இருந்தாள். ஐந்தாவது நாள் மாரக்காள் அங்கே எவ்விதம் வந்து சேர்ந்தாள் என்ற சர்ச்சை – சிறு ஆராய்ச்சி நடைபெற்றது. அது வளர்ந்தது! உருவெடுத்தது! விஸ்வப்பிரம்மமாக உயர்ந்தது! மாஸ்டர் சிங்காரம் பிள்ளைக்குத் தெரியாமல் காற்றுக்கூட மில்லுக்குள் பலமாக அடிக்கக் கூடாது! அவருக்கே உரித்தான மரியாதைகள், மாமூல்கள் எல்லாமே உண்டு.

“நீ மாஸ்டர்கிட்டே ‘சீட்டு’ வாங்கீட்டு வா” என்று மேஸ்திரி அம்மாள் மாரக்காளை வெளியே அனுப்பிவிட்டாள்.

அவளுக்குப் படியூர்ப் பையனைத்தான் தெரியும். மாஸ்டர் வரை விஷயம் சென்று விட்டதென்று அறிந்து அவன் பெட்டிப் பாம்பாகி விட்டான். மீறிச் செய்ய வழி இல்லை! மறுபடி போய்ச் சொன்னால், ‘மிந்தியே எங்கிட்டே ஏண்டா சொல்லல்லே?’ என்று சீறுவார். மாஸ்டரின் தயவின்றிக் காலம் கழித்தல் ரொம்ப ரொம்பச் சிரமம்!

“அவன் என்ன தலையையா தூக்கிவிடுவான்? அவங்கிட்டேயே போய்க் கேட்டுப் பாக்கறதுதானே?” என்று ஒருத்தி மாரக்காளுக்கு வழி காட்டினாள்.

மாஸ்டரின் வீடு மில் ‘குவார்ட்ட’ரில் இருந்தது. முகப்பு வீடு. மிகப் பெரியது. மற்றவை ‘லைன்’ வீடுகள். ஏஜண்ட் ஆபீசைச் சேர்ந்தவர்கள் அவைகளில் குடியிருந்தார்கள்.

சிங்காரம் பிள்ளைக்கு மூன்று மனைவிகள். ஒவ்வொருத்தருக்கும் நாலைந்து உருப்படிகள்! மூத்த மனைவி கூட இன்னும் கட்டுத் தளராமல் இருந்தாள். கொஞ்ச நாளாக என்னவோ நரம்புக் கோளாறு! இல்லாவிட்டால் அவள் கூட இன்னும் சலிக்காமல் பெத்துத் தள்ளிக் கொண்டே இருப்பாள்! நரம்புத் தளர்வுகளோடு தலைவலி, எந்த மருந்து மாயங்களுக்கும் அடங்காத தலைவலி அது. வைத்திய சாஸ்திரத்திற்குள் அடங்கும் ‘வலி’யாக இருந்தால் சிங்காரம் பிள்ளை பெரிய டாக்டர்களை அழைத்து இன்னும் குணப்படுத்தாமல் விட்டிருப்பாரா? இளைய இரு மனைவிகளுக்கும் தனித்தனி இலாக்காக்கள். பிள்ளை அவர்கள் தம் வீட்டையும் பஞ்சாலையைப் போல் கருதி இலாகாக்களைப் பிரித்து ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்திருந்தார். துளிச்சத்தம் கேட்கக் கூடாது! அவருடைய பிறவிக்குணத்தை அப் பெண்கள் நாயகங்கள் ஐயந்திரிபுக்கு இடமின்றி அறிந்திருந்தார்கள். ஆகவே, வீட்டிற்குள் பூசல் தலைகாட்டவில்லை.

குழந்தைகள் – ஒரு வயது முதல் ஒன்பது வயது வரை – பெரிய இரண்டு மூன்று பெண்களுக்குத் திருமணம் ஆகி ஆண்டு பத்துக்கு மேலாகிறது. சிறுசுகள் வாசலில் வாதநாராயண மர நிழலில் ஆனந்தமாகச் சச்சரவிட்ட வண்ணம் விளையாடிக் கொண்டிருக்கும். பார்த்துக் கொள்ளப் பணிப்பெண்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் முதல் மனைவிக்குச் சதா உடம்பை, தலையை, காலைக் கையை அமுத்தியும் தடவியும் வேலைக்காரிகளின் கைகள் தான் காப்புக் காய்த்துவிட்டன.

மாரக்காள் வேகமாகச் சென்று மாஸ்டர் வீட்டின் வாசலை மிதித்தாள். அதற்கப்புறம் அவளது வேகம் தடைப்பட்டது. குழந்தைகளின் கும்மாளமும், ரேடியோவின் ‘கரகர’ப்பும் தாளிதத்தின் வாசனையும் – ஏன் ஒன்றுமே கண்ணிலும் மனத்திலும் படவில்லை. அவளை வருத்திக் கொண்டிருக்கும் துக்கம் தன் குறையை எவ்விதம் ஆரம்பிப்பது என்பதைப் பற்றியே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது! திண்ணையில் கிடந்த பலவிதப் பொம்மைகள் குஞ்சாளைக் கவர்ந்தது. பழக்கப்பட்ட வீடு மாதிரி சிறுமி உட்புகுந்து பொம்மைகளை எண்ண ஆரம்பித்தது. தம்பி, தங்கை, ‘சிறிசு, பெரிசு’கள் ‘புதுமுகத்தை’ வரவேற்கக் கூடிவிட்டன! தாயைக் கூட சிறுமி மறந்து ‘பொம்மை உலகில்’ மூழ்கி விட்டாள்!

அப்போது – ஒரு பெரிய அலறல்! சாதாரணமாகக் கேட்கக் கூடிய அலறல் அல்ல அது! ஆட்டைக் கழுத்தறுத்தால் பலமாக அலறும்! பன்றி இருக்கிறதே பன்றி! பன்றியை எந்தக் கத்தியாலும் அறுக்க முடியாது! பன்றியைக் கொல்ல கடப்பாறையால் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அடிப்பார்கள்! அந்த அடியே இடி இடிப்பது போலிருக்கும். அப்போது அந்தப் பிராணி உலகையே கூட்ட முயல்வது போல் பேரொலி உண்டாக்கும்! அப்பப்பா! அம்மாதிரிதான் பின் கட்டிலிருந்து கடைசி மூச்சை விடுகிற பயங்கரத் தொனியாகக் ‘கிடு கிடு’த்தது! மாரக்காள் ஏதோ சக்தியால் உந்தப்பட்டவளாக உள்ளே ஓடினாள்! ஆம், ஓடாமல், அவளால் நிற்க முடியவில்லை.

நீட்டுப்போக்கில் அமைந்த நடு அறை ஒன்றில் உருளையை உருட்டி விட்டாற் போல் மாமிச பிண்டம் மல்லாக்கப் படுத்திருந்தது. மடிந்திருந்த அதன் கைகள் நெற்றியைச் சேர்த்து தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. அபத்தமே கூறும் அபார வலிதான் என்று! வலி எங்கே? எல்லா இடத்திலும் தான். மறுபடியும் வீடதிர வீதியதிர ஓங்கார நாதம் கிளம்புமோ என்கின்ற கவலையோ என்னவோ மாரக்காளுக்கு! துணிந்து கட்டில் மீது பக்கத்தில் உட்கார்ந்து தலையைத் தொட்டால். நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். காய்ச்சல் இல்லை. உடம்பே குளிர்ந்து கிடந்தது. மாரக்காள் கைபட்டு துளி ஆட்டமோ அசைவோ அந்த உருவில் உண்டாகவில்லை. எத்தனையோ இரும்புப் பிடிகள் ‘தடவி’த்தந்திருக்கும் போலும்! ஆனால் சாப விமோசனம் நாளது வரை நடக்கவில்லை. மாரக்காள் மூச்சுக் காற்றுப் பட வேண்டும், நோய் நீங்க வேண்டும் என்பது ஆதி விதியோ என்னவோ?

முதல் மனைவிக்கு வியப்பு! இரண்டாவது மூன்றாவது மனைவிமார்களுக்கு ஆச்சர்யம்! மாஸ்டர் பிள்ளைக்கு பேரதிசயம்! இவ்விதம் புதுமையை நிகழ்த்திய மாரக்காளுக்கு மில்லில் நிரந்தர வேலை கிடைத்துவிட்டதில் அடுத்த வீட்டுக்காரிக்கும் அளவற்ற ஆனந்தம் தான்.

கடந்த மூன்று வருஷங்களாக அவள் ஒரு விதத்தில் நிம்மதியுடனேயே நாட்களைக் கழித்து வந்தாள். பரதேசம் போன கணவன் பவானி ஆற்றில் மூழ்கிவிட்டான் என்று நம்பகமான தகவல் கிடைத்திருந்தது. அது தகவல் என்றாலும் ஊர்ஜிதமான செய்திதான். எப்போதுமே கடுமையான வயிற்றுவலி அவனுக்கு. பட்டைச் சாராயத்தின் விளைவு, பரிசு! அடுக்கடுக்காக கோளாறுகள் ஏற்படவே உள்ளூர்க்காரன் முன்னிலையிலேயே – முடிவைத் தேடிக் கொண்டான் அவன்! சாகத் துணிந்தவனுக்கு ஆறும் முழங்கால்தான்! மூட்டைப்பூச்சி மருந்து ஒரு பக்க பலம்! அதை உட்கொண்டிராவிட்டால் வெள்ளத்திலிருந்து மீள வழியுண்டு. இவ்வளவு சேதியையும் கேட்ட பிறகு ‘கட்டுக்கழுத்தி’ மாதிரி சிவப்புச் சேலை கட்டிக் கொள்ள மாரக்காள் விரும்பவில்லை.

அவளுடைய போக்கே அலாதியானது. தானுண்டு தன் மகள் உண்டு. எதிர்வீட்டுக்காரி என்ன செய்து கொண்டிருந்தாலும் அவள் ஏறெடுத்தும் பாராள்!

இன்னொரு இயற்கைக் குணம். ஆம், அதை இயற்கை என்று தான் சொல்ல வேண்டும். யாருடன் அவள் பழகினாலும் ஒரு பாசத்தையும் பரிவையும் ஏற்படுத்தி விடுகிற சக்தியை எப்படியோ பெற்றிருந்தாள். கூத்தாண்டிப் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த விருந்தினர்கள், பண்டிகை விருந்தாளிகளாக நில்லாமல் நிரந்தர ‘வீட்டாளி’களாகத் தங்கிவிட்ட காரணமும் – ரகசியமும் அடங்கிக் கிடக்கிறது!

கருப்பண்ணனை பல நாட்களாகவே தெரியும். நல்ல பழக்கமும் கூட. ஆனால் நாச்சப்பனையும் கிட்டானையும் கூட்டிக் கொண்டு வந்த சமயம் கருப்பண்ணனுக்குக் கூடத் தெரியாது தானும் அங்கே ஒன்றாக கலந்துவிடுவோம் என்று!

முன்பு இரண்டொரு வீடுகளில் – சினேகிதர்கள் வீடுகளில் தான் – சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அவன் செய்வதென்ன? தோழர்களே, ‘அட, ஓட்டல் சோறு எதுக்கப்பா? வேணுமானா சோத்துக்குக் காசைக் குடுத்திரு’ என்றார்கள். இவனும் கணக்குப் பார்த்துப் பணம் தருகிற அழுத்தக்காரன் அல்ல. ‘செட்டா’க இருப்பவன் தான். ஆனாலும் குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகிய பின்னர் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறதா? எவ்வளவுதான் அன்னியோன்யமாக இருந்தாலும் – மற்றவர்கள் – சம்பந்தமில்லாதவர்கள் ஏதோ ‘கதை’ கட்டி விடுகிறார்கள். அதில் அவர்களுக்கு என்ன திருப்தியோ! வீண்பழிகள் பலவற்றைச் சுமந்து கொள்ளலாம். பொறுத்துக் கொள்ளலாம். வீட்டின் விளக்கே அவனால் ‘கருமை’யடைகிறது என்றால் கருப்பண்ணனைப் போன்றவர்களால் அதை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?

‘இனிமே ஒருத்தர் வீட்டி’லும் கை நனைப்பதில்லை!’ என்று கங்கணம் கட்டிக் கொண்டான். இப்போது அந்தக் கங்கணத்தை அவிழ்த்து மாரக்காள் வீட்டில் வைத்துவிட்டான். அத்துடன் நாச்சப்பனையும் அவனுடைய அருமை புதல்வனையும் தன்னுடன் ஒன்றாகப் பிணைத்துக் கொண்டான்! இப்போது மாரக்காள் வீட்டில் சோற்று வேளைக்கு ஐந்து சீவன்கள்! இதை நினைக்க அவளுக்கே சிரிப்பாக இருக்கும்!

*****

கோவை மாநகரின் உட்புறத்தேயும் நகருக்கு வெளியேயும் மூன்று பக்கங்களிலும் பஞ்சாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன. நான்காவது பக்கமாகிய மேற்கே பேரூர் என்னும் திருத்தலமும் இருமருங்கும் வயல்களும் செறிந்து கிடப்பதால் தொழிற்சாலைகளோ, பஞ்சாலைகளோ, அங்கே விரிவடைய ஏதுவில்லை. கிழக்கே திருச்சி ரோடு, அவினாசி ரோடு செல்கின்ற மார்க்கத்தில் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் நீட்டலாம். வடக்கே மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் சாலைகளில் தொழிலகங்கள் அமைத்துக் கொண்டே இருக்கலாம். இன்னும் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. தெற்கிலும் அப்படித்தான். பொள்ளாச்சி வரை தொழிற்கூடங்களாக நிர்மாணித்த வண்ணம் இருக்கலாம்.

பஞ்சாலை ஆகட்டும் எந்த ஆலை ஆகட்டும் உயிர் கொடுப்பவன் தொழிலாளி! உயிரைக் கொடுத்துப் பாட்டாளி அல்லவா பாடுபடுகிறான்? அவனை மையமாக வைத்துத்தான் ‘பகடை’ ஆடப்படுகிறது! சதுரங்கக் காய்கள் உருட்டப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் முதல் சுதந்திரத் தேர்தல்கள் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. ஒரு இருபது ஆண்டுத் தொழில் வளர்ச்சி – குறிப்பாக யுத்தம் முடிந்த பிறகு தொழில் துறையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி கோவை மாவட்டத்தில் செல்வத்தைக் கொழித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. கிராமம், நகரம் எங்குமே பணம் தாராளமாகப் புழங்கிக் கொண்டிருந்தது. புழங்குவதா? பணம் புரண்டு கொண்டிருந்தது! பஞ்சமில்லை! கடனுக்குத்தான்! எல்லாருக்குமே சுலபமாகக் கடன் கிடைத்தது! பலர் பணத்தை என்ன செய்வதென்று அறியாது – நன்றாகச் செலவழித்தார்கள்! செலவழிக்கத் தெரியாதவர்கள் ‘பிறரிடம்’ தந்தார்கள்! பின்னர் ‘திரும்பி’ வந்தது! வராமலும் போயிற்று! அது தனிக் கதை!

“பணம் தண்ணி பட்ட பாடுங்கறது இதுதானப்பா!” என்றான் நாச்சப்பன். ஒப்பணக்காரத் தெருவில் ஒரு ஐஸ் போட்ட கலரைக் குடித்துக் கொண்டே.

மாரக்காளுக்கு ஐஸ் ஒத்துக் கொள்வதில்லை. குஞ்சாள் இரண்டு கலர் குடித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 12கல்கியின் பார்த்திபன் கனவு – 12

அத்தியாயம் 12 வம்புக்கார வள்ளி பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள் செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும், அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டுவந்து சிவனடியார் முன்பு வைத்தாள். அவர்மிக்க ருசியுடன் அதைச்

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணிகளாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றிலிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். சரேலென்று, “அப்பச்சி!

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 2திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 2

மருதாம்பா வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விட மாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிப்பட்டுப் பட்டினி கிடந்து நோயும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு