Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 2 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 2 – ஆர். சண்முகசுந்தரம்

2

கருப்பண்ணன் பலமாகச் சிரித்துக் கொண்டு, “அதென்ன தம்பி அப்படிச் சொல்றே? உன்னையுட்டுட்டு அப்பன் இங்கே என்ன செய்யுது? இங்கே ஓட்டற வண்டியை அங்கேயுந்தா வந்து ஓட்டினாப் போச்சு?”

சிறுவன் தலையை ஆட்டினான்.

“அப்ப நீ வந்தரே!” என்று அன்பாகச் சொன்னான் கருப்பண்ணன்.

அவனுடைய குரலில் ததும்பிய குழைவு பையனைத் திக்கு முக்காடச் செய்தது. அப்பனைப் பிரிந்து, இல்லை அப்பன் தன்னைப் பிரிந்து தனியாக எப்படி இருக்கும் என்று ‘சடா’ரென்று பதில் சொல்லி இருப்பான். ஆனால் முடியவில்லை.

கிட்டப்பனுடைய சின்னஞ்சிறு உள்ளக்கிடக்கையை நொடிக்குள் கருப்பண்ணன் அறிந்து கொண்டு விட்டான். நூற்றுக்கணக்கான ஆட்களுடன் தினசரி பழகும் மேஸ்திரி அல்லவா? சட்டென்று வார்த்தைகளில் சொல்லி விடுகிறதாலே சொல்லாத நெஞ்சங்களை அவன் அதிகமாகப் புரிந்து கொள்கிறவன்! “செரி, இப்ப என்ன அவசரம்? அப்பங்கிட்டே நானே கேக்கறேன். இன்னைக்கு எந்த ஊரு சந்தைக்குப் போயிருக்குது? ஊத்துக்குளிக்கா? செங்கப்பள்ளிக்கா?” என்று பேச்சை மாற்றினான் கருப்பண்ணன்.

“எல்லாச் சந்தைக்கும் அப்பன் போகாது. எப்பாச்சும் காங்கயம் சந்தைக்கு வாடகை கெடச்சாப் போகும். நித்தமும் ஊத்துக்குளிக்குத்தான் போய்வாரது” என்று தன் தந்தையுடைய ‘போக்குவரத்து’ அட்டவணையைப் பரப்பினான் மகன்.

“அட என்னப்பா? ஊத்துக்குளிக்கு எட்டு நாளைக்கும் வாடகை கெடைக்குமா?” ஆச்சரியத்தோடு விசாரித்தான் கருப்பண்ணன். சிறுவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்போதுதான் கருப்பண்ணனுக்கு எவ்வளவு தூரம் தான் ஊரைவிட்டுச் சென்று விட்டோம் என்கிற உண்மை புலப்பட்டது. ஊத்துக்குளி மார்க்கம் நல்ல ராஜபாட்டை. ரயிலுக்குப் போகிறவர்கள், ஊத்துக்குளி சென்று பஸ்ஸைப் பிடிப்பவர்கள், வழியில் வாரத்திற்கு மூன்றுதரம் வெவ்வேறு ஊர்களில் கூடும் சந்தைகள், இன்னும் திருப்பூர், தாராபுரம் செல்பவர்களுக்கு குதிரை வண்டிகள் கிடைக்கும் ‘நாலு ரோடுகள்’ – இவ்வளவும் கணத்தில் அவனுக்குப் பளிச்சிட்டன. நாச்சப்பன் வண்டி மாத்திரம் என்ன? இன்னும் இரண்டு வாடகை வண்டிகள் ஓடினாலும் தாங்கும்! ஆனால் அது சிறுதொழில்? குறைந்த வருமானம்! இல்லாவிட்டால் நாச்சப்பனுக்குப் போட்டியாக யாராவது முளைத்திருப்பார்கள்!

மாலை விளக்கேற்ற மாரியம்மன் கோயிலுக்கு இரண்டு மூன்று பெண்கள் கைவிளக்குடன் வந்தார்கள். முத்துக்கவுண்டரும் இருக்கையை விட்டு எழுந்தார். இனி அதிக நேரம் அவர் பேசிக் கொண்டிருக்க மாட்டார். மேய்ச்சல் மாடுகளைப் பார்க்கா விட்டால் அவருக்குத் தலை வெடித்துவிடும். என்ன தலை போகிற காரியம் இருந்தாலும் எல்லாமே அதற்கு அடுத்தபடி தான். இரும்புப்பூண் தடி படிக்கட்டில் பட்டு ‘டிங்’ என்று ஓசை எழுப்பிற்று.

கருப்பண்ணன், “எந்திரிச்சிட்டீங்களா?” என்றான்.

“பொறு! பொறு! பட்டியான நேரம் சொல்றேன்!” என்று செல்லமாக அதட்டிக் கொண்டே அங்கிருந்து மெல்ல முத்துக்கவுண்டர் நடந்தார்.

கிட்டப்பன் கண்கள் செல்லியாத்தா கோயிலைத் தாண்டி செல்லக்கா வலசுத் திருப்பம் வரை வண்டி வருகிறதா என உற்று நோக்கிக் கொண்டிருந்தன. திருப்பத்திற்கு வந்துவிட்டால் சத்தம் கேட்குமே! ஓடைக்கற்கள் ஒவ்வொரு அடியும் சக்கரத்தை இடறச் செய்யும்.

கருப்பண்ணனை நாலைந்து வீட்டுக்காரர்கள் இரவுச் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தார்கள். அவன் ஒரு மாதம் தங்கி இருந்தாலும் விருந்தாளிதான்! இந்தத் தடவை சுற்றுப்பக்கத்தில் எங்காவது ஒரு காட்டை வாங்கிப் போட விலை பேசிக் கொண்டிருந்தான். தோட்டம் ஒன்றும் விலைக்கு வராது. கிணற்றில் தண்ணீருள்ள தோட்டங்கள் கிராமத்திற்கு ஒன்றிரண்டிற்கு மேலிராது. தாராபுரம் தாலுகாவில் கீரனூர் பிரதேசம் எப்போதுமே வறட்சிக்குப் பெயர் பெற்றது. தண்ணீர்க் கிணற்றை விற்பதும், தங்கக் கிணற்றை விற்பதும் இரண்டும் ஒன்றே தான் அங்கேயுள்ளவர்களுக்கு.

‘யார் வீட்டிற்குப் போகலாம்’ என்பதைப் பற்றிக் கருப்பண்ணன் யோசித்துக் கொண்டிருந்தான்.

கிட்டானையும் தன்னோடு சாப்பிடக் கூட்டிச் செல்லலாமென்ற நோக்கம்; பையனும் வரச் சம்மதிப்பான். நாச்சப்பனும் ஒன்றும் சொல்லி விடப் போவதில்லை. அவன் மடிக்குள் கட்டி வரும் முறுக்கு, வடை, கிழங்குகள் ஒரு ராத்திரிக்குள் கெட்டுப் போகாது. காலையில் தின்று விட்டுப் போகிறான். அனால் அப்பன் வருவதற்கு முன் பையனுக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இருட்டியும் விட்டது. ‘இன்னும் சற்றுப் பார்க்கலாம். நாச்சப்பன் வந்த பிறகு எந்த வீட்டிற்குள்ளாவது நுழைந்தால் போச்சு! இலை போட்ட வீட்டில் உட்கார்ந்து விடுவது!’ என்று தீர்மானத்துக்கு வந்தான். கருப்பண்ண மேஸ்திரி எந்த விஷயத்திலும் முன் கூட்டியே ஒரு ‘தீர்மான’த்திற்கு வந்து விடுவான்!

சைக்கிள் மணியை எவனோ ‘கணகண’வென்று அடித்தான். கிட்டப்பனுக்கு ‘திக்’கென்றது. அப்படித் தலைதெறிக்க வாகனத்தை உருட்டியும் ஒலித்தும் வருகிற ஆள் இவர்களை நோக்கியே கன வேகமாக வந்து கொண்டிருந்தான். என்ன சேதி கொண்டு வருகிறானோ?

அவன் என்னத்தைச் சொல்லி இருந்தாலும் கருப்பண்ணனை வாயடைத்து நிற்கச் செய்திருக்க முடியாது. வண்டிக்கார நாச்சப்பன் பார வண்டிக்கடியில் சிக்கி முழங்காலுக்குக் கீழே எலும்பு முறிந்து விட்டதாம். வண்டியை நகர்த்தி ஆளை எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம்! என்ன கொடூரம்! பெரும் பாரம் நெஞ்சில் ஏறிக் கொக்கரிப்பதைப் போன்றிருந்தது அவனுக்கு. கிட்டப்பன் நிலை தள்ளாடித் தடுமாறிக் கொண்டிருந்தான். கண்களில் ‘கதகத’வென்று கண்ணீர் பொங்க, பேச மாட்டாது உதடுகள் துடிக்க பரிதாபமாகச் சைக்கிளில் வந்த ஆசாமியையே பார்த்துக் கொண்டு நின்றான். அப்பன் பள்ளத்தில் விழுந்துவிட்டனா? குமரன் அதள பாதாளத்திற்குள்ளல்லவா விழுந்து எழுந்திருக்க வழியின்றித் தேம்பித் தேம்பி அழுகிறான்.

*****

 

ஒண்டிப்புதூர் தர்மர் வைத்தியசாலையில் கட்டிலின் மீது நாச்சப்பன் படுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய இடது காலில் தொடையிலிருந்து கணுக்கால் வரை பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. பக்கத்தில் சிறு மணல் மூட்டைகள். பெரிய ‘பந்தக்கால்’ அளவு இடக்கால் முழுதும் வீங்கி இருந்தது. படுக்கையிலிருந்து அசையக் கூட முடியாது. துணைக்குக் கிட்டப்பன் கட்டிலுக்குக் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

நாச்சப்பன் இந்தத் தர்மர் வைத்தியசாலைக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. அவன் எங்கே வந்தான்? அவனால் வரத்தான் முடியுமா? கருப்பண்ணன் கொண்டு வந்தான். அங்கே வருவதற்கு ஏற்பாடுகளைச் செய்தான். சிங்கநல்லூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் தான் இருந்தது அந்த வைத்திய சாலை. ஆதலால், காலை, மாலை இருவேளைகளில் அவன் கண்காணிப்பு உண்டு. கண்ணும் கருத்துமாகத் தான் கவனித்துக் கொண்டான் கருப்பண்ணன். ஏக்கத்தில் பையன் உருக்குலைந்து போய்விடப் போகிறானோ என்பதுதான் அவன் கவலை. கருப்பண்ணன் இல்லாவிட்டால் சிறுவன் செத்துச் சுண்ணாம்பாக ஆகி இருப்பான். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை!

“இன்னும் எத்தனை நாளாகும் அப்பா கட்டெல்லாம் அவுக்கறதுக்கு?” என்று தொண்டைக்குள்ளிருந்து பேசினான் நாச்சப்பன்.

“ஆகற நாள் ஆகிட்டுப் போவுது. உனக்கென்ன கண்ணா? ராசாவாட்டப் படுத்திரு” என்றான் கருப்பண்ணன்.

கிட்டப்பனுக்குக் கூட மேலும் பல மாதங்கள் ஆகும் என்பது தெரியும். அவன் சும்மாவா இருக்கிறான்? மாதக் கணக்கில் வருஷக் கணக்கில் அங்கே படுக்கை போட்டுக் கொண்டிருப்பவர்களோடு தினசரி பேசிக் கொண்டிருக்கிறானே? இளம் எலும்பு கூடுவதற்கே அவசரப்பட்டால் முடியாது. ஐம்பதிற்கும் மேல் எலும்பில் முறிவு என்றால் அதுவும் கீழ்க்கால் எலும்பில் பலத்த அடி என்னும் போது மூணே முக்கால் நாழிகைக்குள் எந்த மந்திரத்தைச் சொல்லிக் குணப்படுத்துவது?

வைத்தியர் தருமர் ரொம்பக் கெட்டிக்காரர்தான். யாருமே மறுக்க முடியாது. ஒவ்வொரு நோயாளியையும் – நோய் எது? எலும்பு, நரம்பில் அடிபட்டவர்களை நேராக அவரே கவனித்தார். பச்சைக் குழந்தைகளிலிருந்து பாட்டி பாட்டன் வரை அங்கே சிகிச்சை பெற வருவார்கள். எல்லாம் தைல முறைதான். அவராகக் கண்டுபிடித்ததல்ல. முன்னோர்கள் கண்டுபிடித்து – வழிவழியாக அந்தத் தலைத் தயாரிப்பு முறை ‘குடும்ப ரகசிய’மாகவே இருந்து வருகிறது. எவ்வளவோ பேர் கேட்டார்கள். தர்மர் சொல்ல மறுத்து விட்டார். ‘சொன்னால் பலிக்காது ஐயா’ என்று சுருக்கமாகக் கூறிவிட்டார். தைலம் தயாரிக்கக் கற்றுக் கொண்டால் மட்டும் போதாது என்பது தனி விஷயம். தர்மரைப் போல் சிறு வயதிலிருந்தே வைத்தியம் செய்வதைப் பார்த்துப் பார்த்து அது கைவர வேண்டும். தொட்டால் – தொடுவது என்ன – பார்த்தாலே சொல்லி விடுவார். இன்ன இடத்தில் அடிபட்டால் இங்கே தான் இப்படி எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவருக்கு அத்துபடி… தடவுவதும் நீவுவதும் தனிக் கலை. ‘ஐயோ’ என்று ஒரு கணம் கேட்கும். அடுத்த கணம் சிரிப்புச் சத்தம் கூடவே ஒலிக்கும். வைத்தியருக்குச் சற்றும் ஒழிவு ஓய்ச்சல் கிடையாது. அருகே தோட்டத்தில் அவருடைய பங்களா. நல்ல வசதியான குடும்பம். வருகிறவர்களிடம் நாலு அணா மட்டும் உண்டியலில் போடச் சொல்லுவார். தர்மர் வைத்தியசாலை உண்மையில் தரும வைத்தியசாலை தான்!

சிலர் ஆங்கில வைத்தியத்திற்குப் போட்டி – எதிரி என்று கூறுவார்கள். வைத்தியர் அதை ஏற்றுக் கொள்வதில்லை. பெரிய பெரிய டாக்டர்களிடம், பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளில் வருஷக்கணக்கில் பார்த்தும் குணம்பெறாத பலர் இவரிடம் குணமடைந்து சென்றார்கள். இன்னும் வெளிநாடுகளிலிருந்து வந்த சில பிரமுகர்களின் தீராத சுளுக்குகளை, முறிவுகளை இவர் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் குணப்படுத்தி விட்டார். அவர்கள் தந்த நற்சாட்சிப் பத்திரங்கள் முகப்பில் சுவரில் கண்ணாடி பிரேம் போட்டுத் தொங்கவிடப் பட்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து மட்டும் அல்ல வடநாட்டிலிருந்தும் பல செல்வர்கள் இவரை நாடி வந்தார்கள். இந்தத் தைலத்தின் மகிமையை உணர்ந்த ஒரு தொழிலதிபர், ‘உற்பத்தியை அதிகரித்து பாட்டில்களில் அடைத்து மார்க்கெட்டில் விட்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாமே’ என்றார். ‘எனக்குப் பணம் வேணும்னாத்தானுங்களே அதைப்பத்தி யோசிக்க வேணும்’ என்று சொல்லிவிட்டார் வைத்தியர்.

நாச்சப்பனுக்கு வைத்தியருடைய கீர்த்தி அத்தனையும் தெரியாது. திருப்பூர் ஆஸ்பத்திரிக்கு திட்டம்பாளையம் மூப்பர்கள் வண்டியில் போட்டுத் தூக்கிக் கொண்டு வந்தது கூட ஞாபகத்தில் இல்லை. மேடும் பள்ளமும் பாளையும் நிறைந்த வண்டித் தடத்தில் – ஒரு இடத்தில் சக்கரம் இரு பெரிய கற்களுக்கிடையே சிக்கிக் கொண்டது. காளையை அவிழ்த்து விட்டுவிட்டு அருகில் பனை ஏறிக் கொண்டிருந்த நாலைந்து மூப்பர்களை மேட்டுக்கு வண்டிச் சக்கரத்தைத் தூக்கி நிறுத்தக் கூப்பிட்டான். அவர்கள் முன்புறம் பிடித்தார்கள். இவன் பின்புறம் பிடித்தான். வண்டி பாரம் தாங்காமல் குடை கவிழ்ந்துவிட்டது. முன்னால் நின்றவர்கள் விலகிக் கொண்டார்கள். ஆனால், நாச்சப்பன் வண்டிக்கும் கீழே அகப்பட்டுக் கொண்டான். ஆள் மிஞ்சியதே அதிசயம். மூச்சுப் பேச்சில்லை. திருப்பூர் டாக்டர் ‘ஊசி’ போட்ட பிறகு கண் விழித்துப் பார்த்தான். டாக்டர் சொன்னார்: “கோவைக்கே கொண்டு போய் விடுங்கள். பெரிய ஆஸ்பத்திரியில் தான் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கவேணும். மொக்கை அடி என்று சொல்வதற்கில்லை! எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கலாம்…”

டாக்டர் சொன்னது சரிதான். முழங்காலுக்கும் கீழே எலும்பு முறிந்திருந்தது. ரத்தம் உறைந்திருந்தது. மூன்று வாரம் டாக்டர்கள் நன்றாகத்தான் எல்லாம் செய்தார்கள். ஆனால் கடைசியில் அவர்கள் சொன்னதுதான் நாச்சப்பனுக்கு மூர்ச்சை உண்டாக்கி விட்டது. “காலை எடுக்கத்தான் வேணும்.”

நாச்சப்பன் கத்தி விட்டான். “நா ரெண்டு காலோடேயே செத்துப் போறேன்.” கிட்டப்பன் அலறினான். ஆனால் கருப்பண்ணனோ அப்பன் மகன் இருவரையும் சமாதானம் கூட செய்யாமல் ஆஸ்பத்திரியிலிருந்து ஒண்டிப்புதூர் தர்மர் வைத்திய சாலைக்கே ஓரேயடியாகக் கொண்டு வந்து விட்டான்.

“அட! நல்லானா ஆகுது. இல்லாட்டி அந்த அப்பனுக்குப் பதிலா இந்த அப்பன் இருக்கறதா நெனச்சுக்கப் போ” என்றான்.

அப்போதுதான் நாச்சப்பனுக்கும் உயிர் வந்தது. எப்படியாவது “பையன் நல்லா இருந்தாச் செரிங்கோ” என்பது தான் அவன் வேண்டுகின்ற வரம்! அந்த வரத்தைக் கருப்பண்ணத் தெய்வம் வலிய முன் வந்து அளித்துவிட்டதே!

நாச்சப்பனுக்கு வைத்தியசாலைக்கு வந்த புதிதில் ஏற்பட்ட பயம் நீங்கிவிட்டது. எத்தனை நாளானாலும் நன்றாகிவிடும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது. முன்னைப் போல் கால் ‘வணங்காமல்’ போனாலும் நடக்கலாம். இன்னொருவர் துணையின்றி ‘போக வர’ இருக்கலாம். படுக்கையில் விழுந்து பையனுக்குத் தொந்தரவாக, பார்க்கிறவர்களுக்குப் பரிதாபமாக ‘நொண்டிச்சீவன்’ என்ற பேரைச் சுமந்து கொண்டு மீதி நாட்களைக் கழிக்க வேண்டியதில்லை.

எந்தெந்த ஊர்களிலிருந்தெல்லாம் வந்து சேர்ந்தவர்கள் அங்கு நிறைந்திருந்தார்கள். பெரிய மதில் சுவர். உள்ளே ‘வராண்டா’வில் கூட சிலர் கீழே படுக்கை விரித்துப் படுத்திருந்தார்கள். அத்துடன் வெளியிலிருந்து சிகிச்சைக்காக தினசரி பலர் வந்து சென்றார்கள். பத்துப் பதினைந்து தங்கும் அறைகள், உணவு சமைக்கவும் வசதியாக அமைந்திருந்தன. அந்த அறைகளுக்கு மட்டும் சொற்ப வாடகை. பெரும்பாலும் மாதக் கணக்கில் தங்கி இருக்க வேண்டியவர்களுக்கே அறைகள் தரப்பட்டன. நாச்சப்பனும் அப்படி ஒரு அறையில் தான் கட்டிலின் மீது படுத்துக் கொண்டிருந்தான்.

கிட்டப்பன் சோறு ஆக்கிப் பழக்கப்பட்டவன். ரசம் வைப்பான். தேங்காய் துவையல், எப்போதாவது பொறியல்களும் பண்ணுவான். ஆனால் தந்தைக்கும் மகனுக்கும் ‘ருசி’யாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேணும்’ என்கிற நினைப்பே அற்றுவிட்டது. சீக்கிரம் அங்கிருந்து போய் விட வேண்டும். எவ்வளவு சீக்கிரமாகப் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகக் கிளம்ப வேண்டும். இது அவர்கள் கையில் இல்லையே! வைத்தியராகப் பார்த்துச் சொல்ல வேண்டும். வைத்தியரிடம் சுலபமாகக் கேள்வி கேட்க முடியுமா? அவர் தான் அதிகமாகப் பேசுவதில்லையே? கருப்பண்ணன் கேட்கலாம். அவன் கேட்காமலா இருப்பான்? ஆனால் சதா கருப்பண்ணனை ‘நச்சரிச்சு’க் கொண்டிருப்பதும் நன்றாயிராதே!

“என்னண்ணா! நீ சிரிச்ச மொகத்தோடே இருந்தாத்தானே பையனும் செழுசெழுப்பா இருப்பான்!” என்றான் கருப்பண்ணன். அப்போது கிட்டப்பன் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வரச் சென்றிருந்தான்.

“எனக்கென்னப்பா?” நாச்சப்பன் தெம்பாகத்தான் பேசினான்.

“அண்ணா! என்னை ஏமாத்தப் பாக்காதே!” சிரித்துக் கொண்டே கருப்பண்ணன் கூறிவிட்டு, “ரண்டு பேரும் இங்கே இருக்கறதாப் போச்சு! ஊரிலே யாராச்சும் பாத்துக்கிட்டா இருக்காங்க?” என்றான். நாச்சப்பனுடையை உள்மனதைத் துருவ முயன்று கொண்டிருந்தான்.

உண்மையில் இந்த ஏழெட்டு நாளாக தன்னுடைய செவலைக் காளை என்னாச்சு என்ற நினைப்புத்தான் அவனை அலட்டிக் கொண்டிருந்தது. சீரழித்தது. ‘தீவனம் தண்ணி சரியா வைப்பாங்களா? பாங்கு பணிக்கையாக யார் பாத்துக்குவாங்க’ என்ற எண்ணம் அவனை வதைத்த வண்ணம் இருந்தது. முகம் கூட வாடிவிட்டது.

செவலைக் காளைக்கு ஒரு ஆபத்தும் இல்லை. பார வண்டியை மேடேற்றும் முன்பே காளையை அவிழ்த்து கிளுவ மரத்தில் கட்டி விட்டுத்தானே நாச்சப்பன் துணைக்கு ஆட்களைக் கூப்பிட்டான்? திட்டம்பாளையம் சேமலை மூப்பன் கட்டுத்தரையில் அது சுகமாகக் கொம்பை ஆட்டிக் கொண்டிருந்தது. சேமலை மூப்பன் பண்ணையும் சிறுசுதான். ஆனால் அவனுடைய மனைவி ஊத்துக்குளி டீக்கடைகளுக்குப் பால் ஊற்றி வந்தாள். அதனால் கறவைக்கு எந்த வேளையிலும் அவன் வீட்டில் பஞ்சமில்லை. எருமையும் மாடுகளுமாக ஏழெட்டு உருப்படிகள். பால் வற்றிவிட்டால் உடனே பசுவை விற்க மாட்டான். மறுபடியும் கன்று ஈனும் வரை அவனே காப்பாற்றுவான். அத்துடன் அவன் ஒரு சிறு கருப்பட்டி வியாபாரி. குண்ணத்தூரில் கருப்பட்டி கொள்முதல் செய்வதோடு சரி. வசதியுள்ள மூப்பர்கள் பனை மரம் ஏறப் போவதில்லை. இருந்தாலும் காசு கொடுத்தாவது பனங்காய் விலைக்கு வாங்கி எப்படியும் பண்டம் பாடிகள் வயிறு ‘கொறயக் கொறய’ப் போட்டுக் கொண்டிருப்பான்.

செவலைக் காளை ரொம்ப உல்லாசமாக ‘ஒடை’த்தட்டாத காளை மாதிரி அங்கே இருப்பதொன்றும் நாச்சப்பனுக்குத் தெரியாது. இன்னொரு சங்கதியும் அவனுக்குத் தெரியாது. அதுதான், காளையையே முப்பனாருக்கு விற்றுவிட்டால் என்ன என்று கருப்பண்ணன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். ஏனென்றால் முன்னைப் போல் இனி வண்டி ஓட்டும் தொழிலை நாச்சப்பன் மேற்கொள்ள முடியாது – உடம்பு வளைந்து கொடுத்தாலும் உள்ளம் வளையாது – அவன் மனதைத் தளர விட்டுவிட்டான்! இந்த நிலையில் ஊருக்கு அனுப்புவது சரியல்ல. பையனை மில்லில் சேர்த்துவிட்டு, ஒரு சின்ன வீடாகப் பார்த்து நாச்சப்பனைச் சிங்கநல்லூரிலேயே குடி அமர்த்துவது எனத் திட்டமிட்டான் கருப்பண்ணன். இதற்காக ஆலோசனை, புனராலோசனை எல்லாம் முன் கூட்டியே செய்ய வேண்டியதில்லை. சொல்கிற போது சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தான் கருப்பண்ணன். அதற்குள் ஐந்தாறு மாதங்கள் ஓடிவிட்டன!

சிங்கநல்லூரிலிருந்து பீளமேடு செல்கிற குறுக்கு ரோட்டில் வரதராஜபுரம் இருக்கிறது. அங்கே குடியிருப்போர் எல்லோரும் சுற்றுப்புற பஞ்சாலைகளில் வேலை செய்கின்றவர்கள். மில்லுக்குச் செல்லாதவர்கள் டீக்கடை, சில்லரைக்கடை, வெற்றிலைப்பாக்கு, சைக்கிள்கடை வைத்திருந்தார்கள். இரண்டொரு ‘லாண்டரி’களும், சிகை அலங்காரச் சாலையும் அங்குண்டு.

ஒவ்வொரு பஞ்சாலைக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை. மற்ற காரியாலயங்கள், சர்க்கார் ஆபீசுகள் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக ஆக்கி இருப்பது போல், விடுமுறை நாளாக்கி விட்டுவிட்டால் பஸ்ஸுகளும், சினிமாக் கொட்டகைகளும், பிரியாணிக் கடைகளும் இடம் கொள்ளுமா?

இரவு எட்டு மணிக்குமேல், ‘நைட் ஷிப்ட்டு’க்குப் போகிறவர்களைத் தவிர கும்பலாகக் கூடியிருந்தால் ஏதோ கூட்டம் நடைபெறுகிறது என்று கண்டுகொள்ளலாம். எல்லாக் கட்சிக் கூட்டங்களும் வரதராஜபுரத்தில் நடைபெறும். அது மில் ஏரியா! தொழிலாளர்களைத் தத்தம் கட்சிக்கு இழுப்பதே தொழிற்சங்கக்காரர்களின் குறிக்கோள்.

தனம் மில்லுக்கு எதிரே ஒரு சின்ன அறைக்கு பக்கத்தில் சர்வ கட்சிக்காரர்களின் கொடிகளும் பறந்து கொண்டிருந்தன. சைக்கிள்களில் கொடிகளை மாட்டி இருந்தார்கள். அருகே மைதானம். அங்கே மூங்கில்களின் உச்சியிலும் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. வாஸ்தவத்தில் மூங்கில் கொடிகள் தான் காற்றில் பறந்தன!

அறைச்சுவரில் அமரர் தொழிலாளர் தலைவர் என்.ஜி. ராமசாமியின் படம், இருபுறமும் பாரதியார், திரு.வி.க.வின் போட்டோக்கள், மலர் மாலைகள், சாம்பிராணிப் புகை, ஊதுவத்தியின் மணம். ஒரு தட்டத்தில் மிட்டாய்கள். சிறுவர்கள் மிட்டாய் பெறுவதை எதிர்பார்த்து சப்தமிடுவதையும் நிறுத்திக் காத்திருந்தார்கள்.

என்.ஜி.ஆர். என்று நெஞ்சம் கனியப் போற்றப்படும் அன்புத் தலைவரின் நினைவுநாள். எதை மறந்தாலும் நினைவுநாள் விழா நடத்துவதை ‘சங்கத்துக்காரர்கள்’ மறக்க மாட்டார்கள். கொடுமையை எதிர்த்த முதற் கட்டிளம் காளை. ஆணவத் தீயை அணைக்க முயன்று அதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இளஞ்சிங்கம். களத்திலே ஆதியிலே தன் இரத்தத்தைச் சிந்திய தமிழ் மகன்.

கட்சித் தலைவர்கள் வந்தாயிற்று. இனிக் கனல் மழை பொழியும். உரிமைக்குரல் சிந்து பாடும். ஒற்றுமை ஆலவட்டம் வீசும்.

தூரத்தில் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கிட்டப்பனுக்கு அது ஓர் ஆச்சர்யம்! பேராச்சர்யம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 11சாவியின் ஆப்பிள் பசி – 11

 அன்று மாலை சூரியகுளம் மைதானத்தைப் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். மூன்று மாதங்களாய் வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தில் பன்றிக் குட்டிகள் உலவிக் கொண்டிருந்தன. இன்னொருபுறம் சாணத்தை மலைபோல் குவித்து, வறட்டி தட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்த இடம் ஒரு புதுமைச் சிலிர்ப்புடன்

சாவியின் ஆப்பிள் பசி – 27சாவியின் ஆப்பிள் பசி – 27

அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந்தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஓடையில் முன்பெல்லாம் இருந்த ஒரு குதூகலமான உயிரோட்டம் இப்போது