Tamil Madhura சிறுகதைகள் அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

கதை இரண்டு – ஐயம் தீர்க்கும் ஆசான்

 

    • அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது.

 

    • பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி போவதற்கும் இடையே அந்தக் கிராமம் இருந்தது. வழிப் போக்கர்கள் சநிதித்துக் கொள்ளும் மைய ஊராக அது விளங்கியது.

 

    • அதனால் உழவுத் தொழிலைத் தவிர அந்தக் கிராம மக்கள் மற்றொரு தொழிலும் செய்து பிழைத்துக் கொள்ள வழியிருந்தது. வழிப்போக்கர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வது தான் அந்தத் தொழில்.

 

    • விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்கிற பண்பாடெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் வருகிற விருந்தினர்கள் விஷயத்தில்தான் கையாள முடியும். நாள்தோறும் விருந்தினர் வந்துகொண்டேயிருந்தால் அதெல்லாம் நடைபெறக் கூடிய காரியமா, என்ன? அதற்காக அந்த ஊர்க்காரர்கள் வருகிற விருந்தினர்களை விரட்டியடித்து விடவில்லை. அவர்களே உபசரிப்பதையே ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

 

    • இருக்க இடமும் உண்ண உணவும் தேடி வருபவன், அவை அடியோடு கிடைக்காவிட்டால்தான் வருத்தப்படுவான். காசு கொடுத்துக் கிடைக்குமென்றால் நல்லதாகப் போயிற்று என்றுதான் எண்ணிக் கொள்வான். முன்பின் தெரியாதவர்களிடம் பழகுகிற கூச்சம் சிறிதும் இல்லாமல் பழக முடியுமல்லவா? இந்த மாதிரியான நேரங்களில் காசு செய்கிற உதவி பெரியதுதான்.

 

    • அந்த ஊரின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மாமன்னர் அசோகர் அங்கே ஒரு சத்திரம் கட்டும்படி ஏற்பாடு செய்தார்.

 

    • சத்திரம் ஏற்பட்ட பிறகு அந்த ஊரின் சிறப்பு மேலும் அதிகமாயிற்று. வழிப்போக்கர்களுக்கும் நல்ல வசதியாயிற்று.

 

    • சத்திரத்து அதிகாரிகள் வழிப்போக்கர்களின் தராதரத்தையறிந்து வாடகை வசூலித்தார்கள். வாடகையில் உயர்வு தாழ்வு கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி யான வாடகைதான். ஆனால் ஏழைகளாயிருந்தால் வாடகை கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏழைகள் தாம் என்று சத்திரத்து அதிகாரிகள் தீர்மானித்து விட்டால் போதும். வணிகர்களும் மற்ற தொழில் செய்பவர்களும் சத்திரத்துக்கு உள்ள வாடகையைக் கொடுத்து விட வேண்டியதுதான். அந்தக் காலத்து மக்களிடையே ஒரு நல்ல பண்பாடு இருந்தது. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. உழைத்து நாலு காசு சம்பாதிக்கக் கூடிய வலுவும் திறனும் உள்ள எவனும் தன்னை ஏழை யென்று கூறிக்கொள்ள மாட்டான். அவ்வாறு கூறிக் கொள்வதையோ, கூறப்படுவதையோ அவமானம் என்று கருதுவான். அற நிலையங்களிலே போய்க் கையேந்துவது தன் தகுதிக்குக் குறைவானதென்று கருதுவான். தான் அனுபவித்த வசதிக்குரிய கூலியைக் கொடுத்துவிட்டால் தான் அவன் மன அமைதியோடு இருப்பான்.

 

    • எதையும் சம்மா பெறக்கூடாது என்ற எண்ணம் அந்தக் காலத்து மனிதனின் பண்பாடாக விளங்கி வந்தது.

 

    • இந்த மாதிரியான சில பண்பாடுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அசோகரின் அறநெறி ஆட்சி நிலைத்திருக்க முடியுமா என்ன?

 

    • அசோகர் கட்டிய அந்தச் சத்திரம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. ஆனால் அவர் மற்ற நகரங்களில் கட்டிய பெரிய பெரிய சத்திரங்களில் உள்ள எல்லா வசதிகளும் இந்தச் சத்திரத்திலும் இருந்தன.

 

    • குதிரைகள், ஒட்டகங்கள் கட்டுவதற்கான தனித்தனித் தொழுவங்கள், பசுமாடுகள் கட்டுவதற்கான கட்டுத் துறைகள் எல்லாம் பின் பக்கத்தில் இருந்தன. சத்திரத்தையடுத்த நந்தவனத்தில் குளிப்பதற்கான ஒரு கிணறும், மற்ருெரு மூலையில் குடி தண்ணிர்க் கிணறும் இருந்தன.

 

    • சத்திரத்தின் உள்ளே வழிப்போக்கர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்வதற்கான அறைகளும் படுத்துறங்குவதற்கான கூடங்களும், சமைத்து உண்பதற்தான கட்டுக்களும் வசதியாக அமைந்திருந்தன. சுவர்களில் யாரோ ஒரு சாதாரணச் சித்திரக்காரன் புத்தர் பெருமானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வண்ணப் படங்களாக எழுதியிருந்தான். அவை தவிர, உத்திரங்களின் மீதும், சத்திரத்து முகப்பிலும், புத்தர் பெருமானின் திருவாசகங்களும் அசோகருடைய நல்லுரைகளும் எழுதப் பெற்றிருந்தன.

 

    • சத்திரம் கட்டி முடித்து வெகு நாளாகிவிடவில்லை. புத்தம் புதிதாக இருந்த அந்த சத்திரத்திற்கு வந்த வழிப் போக்கர்களுக்கு அது தேவலோகம் போல் காட்சியளித்தது. பாடலிபுத்திரத்திலிருந்து புத்த கயாவிற்கும் கயாவிலிருந்து தலைநகருக்கும் போகும் வழிப் போக்கர்கள் பெரும்பாலும் புத்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் பிட்சுக்களாகவும் இருந்தார்கள். காசிக்கும் ராஜகிரிக்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள், வணிகர்களாகவும், பிராமணர்களாகவும், வேறு பல பெருந்தொழில் துறையினராகவும் இருந்தார்கள்.

 

    • யாராயிருந்தாலும் வரவேற்று இடங்கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. யாருக்கும் எவ்வித வேற்றுமையும் காட்டப்படவில்லை. எல்லோரையும் சமமாக நோக்கும் தன்மையே சத்திரத்து அதிகாரிகளிடம் காணப்பட்டது. எல்லாம் அசோக மாமன்னரின் நோக்கப்படியே யிருந்தது.

 

    • இந்தச் சத்திரத்துக்கு ஒருநாள் ஒர் இளைஞன் வந்து சேர்ந்தான். அவன் உடல் அங்கங்களிலே இளமையின் பூரிப்பும் கண்களிலே புதிய மினுமினுப்பும், முகத்திலே கவலையற்ற குதுரகலிப்பும் அவன் கடையிலே ஒரு துடி துடிப்பும் காணப்பட்டன.

 

    • காசியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தினரோடு அவனும் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தான். வந்தவுடன் அவன் மற்றவர்களைப் போலவே தனக்கு இடத்தேடிக் கொள்வதிலும், தன் துணிமணி படுக்கைகளை ஒழுங்கு படுத்துவதிலும், குளிப்பதிலும் உணவு தேடுவதிலும் ஈடுபட்டிருந்தான். மதிய உணவு முடித்த பிறகு சிறிது கேரம் இளைப்பாறி விட்டு, மாட்டு வண்டிகளில் அவர்கள் ராஜகிரி கோக்கிப் புறப்பட இருந்தார்கள்.

 

    • சத்திரத்தில் பதிவேட்டுக்காரன் அவன் பெயரைக் கேட்டபோது மகாலிங்க சாஸ்திரி என்று கூறினன். அந்தப் பெயரைக் கொண்டும், அவன் கூடவந்த ஆட்களைப் பார்த்தும் அவன் ஒரு பிராமண இளைஞன் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

 

    • சத்திரத்துப் பதிவேட்டிலே ஊர் பேர்தான் குறிக்கப் படுமே தவிர சாதி குலமெல்லாம் குறிக்கப்படமாட்டாது. எல்லாம் தோற்றம், வழக்கம், பேச்சு வார்த்தைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.

 

    • மகாலிங்க சாஸ்திரி என்ற அந்த இளைஞன், குளியல் முடித்து மற்றவர்களோடு, சத்திரத்தக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பிராமணர் வீட்டிலே போய்க் காசு கொடுத்துச் சாப்பாடு முடித்துக்கொண்டு வந்தான். மற்றவர்களோடு சேர்ந்து சத்திரத்து வெளித்திண்ணையிலே சிறிது சாய்ந்து ஓய்வுபெற முயன்றான்.

 

    • உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழ மொழி பொய்யாகாத வண்ணம் கூட வந்த பிராமணர்கள் குறட்டைவிட்டுத் தூங்கலானர்கள். மகாலிங்க சாஸ்திரி யும் தூங்கியிருப்பான். ஆனால், உத்திரங்களிலும், சுவர்களிலும் எழுதியிருந்த அந்த வாசகங்கள் அவன் கண்களைக் கவர்ந்துவிட்டன.

 

    • மெல்ல எழுந்து அந்த வாசகங்களே ஒவ்வொன்ருகப் படித்துப் பார்த்துக்கொண்டு வந்தான். வாசற்கதவருகில் வந்த போது உள்ளே உத்திரங்களில் இருந்த எழுத்துக்களும் தென்பட்டன. உள்ளே நுழைந்து வரிசையாகப் படித்துக்கொண்டு வந்தான். வேக வேகமாகப் படித்து அவற்றை அவன் உடனே மறந்துவிடவில்லை.

 

    • ஒவ்வொரு வாசகத்தையும் ஒருமுறைக் கிருமுறை படித்து, அவற்றின் பொருளே மனத்தில் வரச்செய்து, அவற்றைப் பற்றிச் சிந்தித்து, உள்ளம் ஒவ்வொரு கருத்தையும் ஒப்புக்கொண்ட பிறகுதான் அவன் அடுத்த வாசகத்தைப் படிக்கச் சென்றான்.

 

    • உண்மையே பேசு.

 

    • நல்லெண்ணம் கொள்.

 

    • நற்சொல் பேசு.

 

    • நற்செயல் புரி. உயிர்களுக் கன்பு செய்.

 

    • ஆசை யகற்று.

 

    • மக்கள் யாவரும் நிகரே.

 

    • குல வேறுபாடு கொள்ளாதே.

 

    • இப்படிப்பட்ட பல அறங் கூறு மொழிகளை அவன் படித்தான். காசியிலே பண்டிதர்களிடம் தான் கற்ற நூல்களிலே உள்ள நீதிமொழிகளோடு இவற்றை ஒப்பு நோக்கிப் பார்த்தான். அம்மொழிகளுக்கும் இவ்வாசகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தான். எவை ஏற்கத்தக்கன என்று மனத்திற்குள்ளே விவாதித்துக் கொண்டான். இதுதான் சரி. இதுதான் ஒப்பத்தக்கது என்ற முடிவுக்கும் வந்தான். அப்படி ஒவ்வொரு வாசகத்தையும் துருவி ஆராய்ந்து, இது உண்மைதான் என்ற முடிவுக்கு வந்தபிறகே அவன் கால்கள் இடம் பெயர்ந்தன. எல்லா வாசகங்களையும் படித்து முடித்த பிறகுதான் அவன் வெளி வாசற் பக்கம் வந்தான்.

 

    • ஏற்கெனவே அங்கிருந்தவற்றை யெல்லாம் படித்து முடித்து விட்டபடியால் அவன் திரும்பவும் தான் படுத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அப்போது, நுழை வாயிலில் கதவுக்கு மேலே எழுதியிருந்த எழுத்துக்கள் புதிதாக அவன் கண்களைக் கவர்ந்தன. முதல் முறை அவன் அவ்வாசகத்தைக் கவனிக்கவில்லை. இப்போது கொட்டை எழுத்துக்களில் பளிச்சென்று அந்த வாசகம் அவன் கண் முன்னே தோன்றியது. அவன் அந்த வாசகத்தையே திரும்பத் திரும்ப மனத்திற்குள் படித்து கொண்டான்.

 

    • எத்தனை முறை படித்தும் அவன் கண்கள் அந்த வாசகத்தை விட்டு அகலவில்லை. திரும்பத்திரும்ப அதன் பொருளைச் சிந்தித்துப் பார்த்தும் அவன் மனம் அதை – அக்கருத்தை – ஒப்புக்கொள்ள மறுத்தது.

 

    • மற்ற எல்லா வாசகங்களும் சரியென்று அவன் மனம் ஒப்புக் கொண்டு விட்டது. புத்த பெருமானின் புத்தம் புதிய புரட்சிகரமான அந்தக் கொள்கைகள் அவனுடைய இளம் உள்ளத்தைக் கவர்ந்தது வியப்புக் குரியதல்ல.

 

    • நேர்மையான நெஞ்சத்தோடு உண்மையை ஆராயும் அந்த இளம் உள்ளத்தில்லே அவை ஆழப் பதிந்தது ஆச்சரி யத்திற்கு குரியதல்ல.

 

    • ஆனால், மகாலிங்க சாஸ்திரியின் இளம் உள்ளம், புத்த பெருமானின் புதுக் கருத்துக்களைப் பொன்னே போல் போற்றி ஏற்றுக்கொண்ட அந்தத் தூய உள்ளம் இந்த ஒரு வாசகத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தன் உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த வாசகம் புத்த பெருமானுடையதாக இருக்க முடியாது என்று அவன் திண்ணமாக நம்பினான். அந்த வாசகம் அசோகர் தாமாகச் சேர்த்து எழுதச் சொன்னதாக இருக்கவேண்டும் என்றுதான் அவன் எண்ணினான்

 

    • புத்த பெருமானின் புதுக் கருத்துக்களை யெல்லாம் ஏற்றுக்கொண்ட இந்த மாமன்னர் ஏன் இந்தப் பழங் கருத்தையும் அவற்றோடு ஒப்ப வைத்துப் பரப்ப முன்வர வேண்டும் என்று அவன் மனம் கேள்வி தொடுத்தது.

 

    • இவ்வளவு சிந்தனைக்கு இலக்காகியும் அவன் மனம் ஒப்புக் கொள்ள மறுத்த அந்த வாசகம் இதுதான்.

 

    • மூத்தோரைப் போற்று

 

    • உயர்ந்தோரைப் போற்று என்றோ, பெரியோரைப் போற்று என்றோ, அந்த வாசகம் அமைந்திருந்தால், கல்வியால் உயர்ந்தோரைப் போற்று என்றோ, அறிவிற் பெரியோரைப் போற்று என்றோ, அனுபவத்தால் முதிர்ந்தோரைப் போற்று என்றே பொருளுரைத்துக் கொள்ளலாம்; மன அமைதி பெறலாம்! ஆனால் மூத்தோரைப் போற்று என்றால் வயதில் பெரியவர்களைப் போற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன பொருள் கொள்ள முடியும்?

 

    • அந்த வாசகத்தைப் பார்க்கப் பார்க்க இளைஞனுக்கு ஒருவிதமான அருவருப்பு வளர்ந்தது. மாமன்னர் அசோகர் சற்றும் பொருத்தமற்ற இந்த வாசகத்தையும் மற்ற வாசகங்களோடு இணையாக ஏன் எழுதினர் என்றுகூட நினைத்தான். அந்த வாசகத்தைப் படித்ததால் ஏற்பட்ட அதிருப்தி அவனுடைய முகத்திலே வெளிப்பட்டது மட்டு மல்லாமல் வாய்ச் சொற்களாகவும் வெளிப்பட்டது.

 

    • “சற்றும் பொருத்தமற்ற வாசகம்! மூடத்தனமான வாசகம்!” என்று வாய்விட்டுத் தனக்குள் பேசிக் கொண்டான்.

 

    • “தம்பீ. எந்த வாசகத்தைச் சொல்கிறாய்?” என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேள்வி எழுப்பியது.

 

    • இளைஞன் மகாலிங்க சாஸ்திரி திரும்பிப் பார்த்தான்.

 

    • குடியானவரைப் போன்ற உடை யணிந்திருந்த ஒருவர் திண்ணைத் தூண் ஒன்றிலே முதுகை வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய உடைதான் அவரை ஒரு குடியானவர் போல் காட்டியதே தவிர, அவருடைய வளையாத உடலும் நிமிர்ந்தகன்ற மார்பும் நேர் கொண்ட பார்வையும் எல்லாம் ஒருவிதமான கம்பீரத்தை உருவாக்கிக் காட்டின. அவருடைய கண்களிலே தோன்றிய அந்த ஒளி இளைஞனின் உள்ளத்தை எளிதாகக் கவர்ந்தது.

 

    • இளைஞன் மகாலிங்க சாஸ்திரியோ இரண்டு இதிகாசங்கள், நான்கு வேதங்கள், ஆறு சாத்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள், அறுபத்து நான்கு கலைஞானங்கள் அத்தனையும் ஆசான் மூலமாகப் பாடங்கேட்ட ஒரு வித்துவான். அந்த மனிதரோ ஒரு சாதாரண குடியானவர். இருந்தாலும் அவரிடம் தன்னேவிட ஏதோ ஒர் ஆற்றல் மிகப் பெரிய ஆற்றல் கூடுதலாக அமைந்திருப்பதாக இளைஞனுக்குத் தோன்றியது.

 

    • “அதோ எழுதியிருக்கிறதே, ‘மூத்தோரைப் போற்று’ என்று, அந்த வாசகத்தைத்தான் சொல்கிறேன்” என்று இளைஞன் இந்தக் குடியானவருக்குப் பதில் கூறினன்.

 

    • “அதிலே என்ன தவறு கண்டாய்?” திருப்பிக் கேட்டார் அவர்.

 

    • “ஐயா, அறிவாலோ அனுபவத்தாலோ பெரியவர்களைப் போற்று என்றால் பொருளிருக்கிறது. வயதால் மூத்தவர்களைப் போற்று என்ற பொருளை மட்டும் தருகின்ற இந்த வாசகத்தில் என்ன சிறப்பு இருக்கிறது? வயதில் மூத்தவர்களை யெல்லாம் இளைஞர்கள் போற்றிக் கொண்டிருந்தால், மூடத்தனத்தை ஆராதிப்பதைத் தவிர வேறு என்ன பயன் காணமுடியும்? நானும் எத்தனையோ நூல்கள் கற்றிருக்கிறேன். அவற்றில் எதிலும் இம் மாதிரியான அசட்டுக் கருத்தை நான் பார்த்ததில்லை. ஒரு குடியிலே பலர் பிறந்திருந்தாலும், அவருள்ளே மூத்தவனை வருக என்று வரவேற்போர் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்; அறிவுடையவனைத்தான் அரசனும் வழிபட்டு ஒழுகுவான் என்றெல்லாம் அறிஞர்கள் எழுதிவைத்த நூல்கள் முழங்குகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி நீங்கள் என் கருத்தை மறுத்து விடலாம். என் சிறிய வாழ்க்கை அனுபவங் கூட இந்தக் கருத்துக்கு மாறானதாகவே யிருக்கிறது” என்று கூறினான் மகாலிங்க சாஸ்திரி.

 

    • “தம்பி, உன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுகிறாயா?” என்று வேண்டிக் கொண்டார் பெரியவர்.

 

    • மகாலிங்க சாஸ்திரி, தன்னுள் அமைந்த ஏதோ ஒரு சூத்திரத்தைத் தட்டிவிட்டாற் போன்ற உணர்ச்சியுடன் முன்பின் தெரியாத அந்தக் குடியானவரிடம் தன் பிறப்பு வளர்ப்பெல்லாம் எடுத்துக் கூறத் தொடங்கி விட்டான்.

 

    • “ஐயா, ராஜகிரியிலே மகா பண்டிதர் சாம்பசிவ சாஸ்திரியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவருடைய மகன்தான் நான். என்னுடன் கூடப் பிறந்தவர்கள் -அதாவது எனக்கு முந்திப் பிறந்தவர்கள்-மூவர். என் இனச் சேர்த்து நான்கு பேர். என் அண்ணன்மார் மூவரையும் பற்றி நான் சொல்லிவிட்டாலே இந்த வாசகம் பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

    • “என் தக்தை பல ராஜ சபைகளிலும் வித்வ சபைகளிலும் பாடிப் பெற்ற பரிசுகள் பலப்பல. பொன்னகவும் பொருளாகவும், வீடாகவும், நிலமாகவும் அவர் தம் கலை ஞானம் ஒன்றைக் கொண்டே ஏராளமான சொத்து சேர்த்திருந்தார்.

 

    • “என் முதல் அண்ணன், பள்ளிக்கு ஒழுங்காகப் போகாமல் ஊர் சுற்றியாகவும் சூதாடியாகவும், தகாத நட்பினரோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான். அவனைத் தம் கண்ணிலேயே விழிக்க வேண்டாம் என்று விரட்டியடித்து விட்டார் என் தந்தை. ஆனால் அவர் இறந்த வீட்டிற்கு அண்ணன் அழுதுகொண்டே ஓடி வந்தான். இறந்த வீட்டிற்குத் துன்பத்தோடு வருபவனை விரட்டியடிக்கவா முடியும்? துக்க வீட்டில் நுழைந்தவன், தானே மூத்தவன் என்று வழக்காடி என் தந்தைக்குக் கொள்ளி வைத்தான். பிறகு கொள்ளி வைத்த உரிமையைக் காட்டி வழக்காடி எல்லாச் சொத்துக்களுக்கும் தானே நிர்வாகியாகி விட்டான். பின்னால் சொத்தில் பங்கு கொடுக்க முடியாதென்று கூறி எங்கள் மூவரையும் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான்.

 

    • “என் இரண்டாவது அண்ணன் ஒரு சோற்றுக் கட்டை. கல்வி அறிவும் கிடையாது; இயற்கை அறிவுங் கிடையாது; மூத்த அண்ணன் விரட்டியடித்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறிக் காசிக்குப் போய் அங்கு ஒரு சாஸ்திரி வீட்டில் சமையல் வேலை செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

 

    • “மூன்றாவது அண்ணன் ஒரு பைத்தியம். அவனைக் கண்டால் என் தாய்க்கு அறவே பிடிக்காது; என் தந்தைக் கும் பிடிக்காது. என் தந்தை இருக்கும்போதே அவன் அரைப் பைத்தியமாக இருந்தான். பின்னல் அவர் இறந்து மூத்த அண்ணன் எல்லோரையும் விரட்டியடித்த பிறகு இப்போது முழுப் பைத்தியமாகி விட்டான்.

 

    • “என் தாயோ, முத்த அண்ணனுக்குச் சாதகமாகப் பேசி எல்லாச் சொத்துக்களையும் அவனே ஆக்கிரமித்துக் கொள்ள உதவியாக இருந்தாள். அவன் கடைசியில் தன் மனைவியின் சொல் கேட்டு அவளேயும் அடித்து விரட்டி விட்டான். அவள் வீட்டு வேலைகள் செய்து கொடுத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாள்.

 

    • “நான் என் தந்தையின் வழியைப் பின்பற்றிக் காசியில் ஒரு பண்டிதரிடம் சென்று கல்வி கற்று வருகிறேன். இப்போது ராஜகிரிக்கு என் தாயைப் பார்த்துவரத்தான் போகிறேன்.

 

    • “இப்போது சொல்லுங்கள். என் அண்ணன்மார் மூன்று பேரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள்தாம். இவர்களில் யாருக்காவது கான் மரியாதை காட்டும்படியாக இருக்கிறதா? யாருக்கு நான் மரியாதை செய்து போற்ற வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்? எங்களை மோசம் செய்து வீட்டை விட்டு விரட்டிய மூத்த அண்ணனுக்கா? சோற்றுப் பிண்டமாகத் திரியும் என் இரண்டாவது அண்ணனுக்கா? அல்லது பைத்தியமாக விடுதியில் அடை பட்டுக் கிடக்கும் என் மூன்றாவது அண்ணனுக்கா?”

 

    • இளைஞன் கேள்விக்கு அந்த மனிதர் உடனே பதில் சொல்லவில்லை. அவர் வாய் திறந்து பேசமுன் மகாவிங்க சாஸ்திரி மீண்டும் அவரைக் கேள்வி கேட்டான்.

 

    • “என் வாழ்க்கை அனுபவத்தை அறிந்த பின்னும் நீங்கள் இந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லுகிறீர்களா? அசோகர் இப்படிப்பட்ட பொருளற்ற கருத்துக்களைப் பரப்பக் கூடாது!”

 

    • மகாலிங்க சாஸ்திரியின் இச் சொற்களைக் கேட்ட அந்தக் குடியானவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதித்தது.

 

    • “நீங்கள் இன்னும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வில்லை போலிருக்கிறதே!” என்று இளைஞன் மறுபடியும் கேட்டான்.

 

    • இவ்வளவு சொல்லியும் அந்த மனிதருக்கு அறிவில் படவில்லையே என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றவில்லை. வேறு யாருமாயிருந்தால் அவர்களைப் பற்றி இளே ஞன் அப்படித்தான் எண்ணியிருப்பான். ஆனால, அந்தக் குடியானவரிடம் ஏதோ ஒரு பெரிய ஆற்றல் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவர் தன் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டால், தான் ஒரு பெரிய சாதனை செய்த பலன் கிட்டும் என்பது போன்ற ஓர் உணர்வு அவனையறியாமல் அவன் மனத்தில் வேரூன்றி யிருந்தது.

 

    • “தம்பீ. என்மீது உனக்கு நம்பிக்கை உண்டாகிறதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.

 

    • “ஐயா இதற்கு முன் நான் உங்களைப் பார்த்ததோ, பழகியதோ கிடையாது. ஆனால், இன்று உங்களைப் பார்த்த உடனேயே, எனக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகி விட்டது” என்றான் இளைஞன்.

 

    • “அது போதும்! நான் இவ்வளவு நேரமும் நீ கூறியவற்றைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்; அவ்வளவும் கேட்ட பிறகு எனக்குத் தோன்றியது இதுதான்: உன் வாழ்க்கை அனுபவம் மிகச் சிறியது, அசோகருடைய அனுபவம் மிகப் பெரியது. நீ வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும்தான் கண்டிருக்கிறாய்; அசோகர் வாழ்க்கையின் இரு பக்கத்தையும் கண்டவர். அவர் முழுக்க முழுக்க அனுபவித்து அறிந்த உண்மைகளைத்தான் நாடெங் கும் பரப்பி வருகிறார். அவருடைய வாசகத்தின் உண்மையை உணர்ந்து கொள்ள நீ இன்னும் அனுபவம் பெற வேண்டும். அதற்கு நீ உன்னையே தியாகம் செய்து கொண்டு சோதனையில் ஈடுபட வேண்டும்.

 

    • அவருடைய சொற்கள் அழுத்தமாக இருந்தன. அவை இளைஞன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவருடைய சொல் எதையும் மீறிப் பேச வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லை.

 

    • தம்பீ, நான் உனக்கொரு வழி சொல்லுகிறேன். அந்த முறையில் நீ சோதனை செய்து பார். இந்தச் சோதனைகளுக்காக நீ மூன்று ஆண்டுகள் ஒதுக்கினால் போதும். என் சொல்லை நம்பி நீ உன் வாழ்க்கையில் மூன்று ஆண்டுகள் செலவிட முன் வருகிறாயா?” என்று அவர் கேட்டார்.

 

    • முன் அறிமுக மில்லாதவராக இருந்தாலும் அவரை நம்ப வேண்டும் என்று ஒர் உள்ளுணர்ச்சி கூறியது.

 

    • “சொல்லுங்கள்” என்றான் மகாலிங்க சாஸ்திரி.

 

    • “முதலில் உன் பைத்தியக்கார அண்ணனைப் போய்ப் பார். பைத்தியக்கார விடுதியிலிருந்து, நீ இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்துவிடு. அவனை உனக்கு மேலானவனாக மதித்து மரியாதை செய். அன்பு காட்டு. ஆதரித்துக் காப்பாற்று. ஓர் ஆண்டுக்குப் பிறகு சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று இதே இடத்தில் என்னே வந்து பார். அப்போது நான் அடுத்த சோதனையைப் பற்றிக் கூறுகின்றேன்” என்றார் அந்தக் குடியானவர்.

 

    • “சரி” என்றான் இளைஞன். அந்தச் சொல்லை அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அந்தக் குடியானவருக்கு இருந்தது. அவன் குடியானவரைப் பற்றி எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை. உடன் வந்த பிராமணர்களெல்லாம் தூங்கி எழுத்தபின் அவர்களோடு புறப்பட்டுச் சென்றான். போகும்போது குடியானவரிடம் “போய் வருகிறேன்” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டான்.

 

    • சரியாக ஓராண்டு கழிந்தது. புத்தாண்டு பிறந்தது. சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை வந்தது. மகாலிங்க சாஸ்திரி அன்று நண்பகல் நேரத்தில் அந்தக் கிராமத்துச் சத்திரத்துக்குள் நுழைந்தான். அவனை எதிர்பார்த்துக் கொண்டு அந்தக் குடியானவர் காத்திருந்தார்.

 

    • அவர் அருகில் சென்றவுடனேயே அவன் தானாகப் பேசத் தொடங்கினன். ஆனந்தத்தோடு “ஐயா, என் அண்ணனுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது!” என்று கூறினான்.

 

    • “எப்படி?” என்று கேட்டார் குடியானவர்.

 

    • “என் தாய்க்கு மூத்த அண்ணன் மேல் பற்று அதிகமாயிருந்தது. என் தந்தைக்கு இரண்டாவது அண்ணன்மேல் பாசம் அதிகமாயிருந்தது. என் மூன்றாவது அண்ணனுக்கு யாருடைய அன்பும் கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. நான் பிறந்த பின், தாய் தந்தை இருவருமே கடைசிப் பிள்ளையான என்னிடம் மிகுந்த அன்பு செலுத்தினர்கள். அந்த நிலையில் என் மூன்றாவது அண்ணன் முற்றிலும் ஒதுக்கப்பட்டவணுகி விட்டான். அன்புக்காக ஏங்கி ஏங்கி அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.

 

    • “சென்ற ஆண்டு நான் என் தாயைப் பார்க்கப் போனபோது தங்கள் கருத்துப்படி அண்ணனை என்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ளப் போவதாகச் சொன்னேன். “அவன் பைத்தியமாயிற்றே, வேண்டாம்” என்று முதலில் மறுத்தாள். பிறகு நான் ஒரே பிடிவாதமாயிருந்ததால் ஒப்புக் கொண்டாள். அவளும் எனக்குத் துணையாக வீட்டில் வந்திருந்து அண்ணனைக் கவனித்துக் கொள்ள முன் வந்தாள். நான் அண்ணனைப் பைத்தியக்காரனாகக் கருதாமல் அன்பும் மரியாதையும் காட்டி நடந்து கொண்டேன். இதைக் கண்டு என் தாயும் அவனிடம் அன்பாக நடந்து கொண்டாள். பிள்ளைப்பாசம் அப்போதுதான் அவளுக்கு ஏற்பட்டது. எங்கள் அன்பு கிடைக்கத் தொடங்கியபின், அண்ணனுடைய பைத்தியம் சிறிது சிறிதாகத் தெளிய ஆரம்பித்தது. இப்போது அவன் முற்றிலும் தெளிந்தவனாகி விட்டான். ராஜகிரியில் உள்ள ஒரு கோயில் மடப்பள்ளியில் அவன் வேலை பார்த்து வருகிறான்” என்று சொல்லி முடித்தான் இளைஞன்.

 

    • “சரி, அடுத்த சோதனையை நான் இப்போது சொல்லுகிறேன். நீயும் உன் மூன்றாவது அண்ணனும் இப்போது உங்கள் இரண்டாவது அண்ணனைப் போற்றி நடக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு இதே சத்திரத்தில் சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று என்னை வந்து பார்” என்றார் குடியானவர்.

 

    • “சரி, அப்படியே செய்கிறேன்” என்றான் அந்த இளைஞன். அன்று பகல் அவன் சத்திரத்திலேயே மற்றவர்களோடு சாப்பிட்டான். தனிச் சாப்பாடு தேடிப் பிராமணர் வீட்டுக்குப் போகவில்லை. புத்த பெருமான் கொள்கைகளில் அவனுக்குப் பற்று ஏற்பட்டிருந்தது. மாலையில் திரும்பவும் ராஜகிரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.

 

    • மறுபடியும் ஓராண்டு கழிந்தது. சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமை சத்திரத்துத் திண்ணையில் அந்தக் குடியானவர் அவனுக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவனும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தான்.

 

    • “ஐயா, காங்கள் இப்போதுதான் இன்பமாக, குடும்பமாக வாழ்கிறோம். என் அண்ணன்மார் இருவரும் என் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். என் தாயும் எங்கள் மூவரையும் தான் பெற்ற செல்வங்கள் என்று கருதுகிறாள். ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு வாழ்கிறோம். பெரிய அண்ணன் கூட இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லை. இரண்டாவது அண்ணன் இப்போது எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டான். சமையற்கலை பற்றி ‘பாக சாஸ்திரம்’ என்ற பெய ரில் அவன் எழுதிய புத்தகத்துக்கு ராஜகிரி மன்னர் பரிசு கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார்” என்று மகிழ்ச்சியோடு கூறினான் மகாலிங்க சாஸ்திரி.

 

    • “இந்தக் குடும்பப் பிணைப்பு ஏற்படக் காரணம் என்ன வென்று நினைக்கிறாய்?” என்று கேட்டார் குடியானவர்.

 

    • “அசோகருடைய பொன்மொழியும், அதைப் பின் பற்றிப் பார்க்க வேண்டுமென்ற தங்கள் தூண்டுதலும் தான் காரணம்” என்று இளைஞன் பதிலளித்தான்.

 

    • “இன்னும் ஒரே ஒரு சோதனை. இது சிறிது கடுமையான சோதனைதான். இதையும் செய்து பார்த்துவிடு” என்றார் குடியானவர். இளைஞன் கவனமாக அவர் கூறியதைக் கேட்டான்.

 

    • “தம்பி, இப்போது நீங்கள் மூன்று பேரும் உங்கள் பெரிய அண்ணன் வீட்டுக்குச் செல்லுங்கள். பணம் எதுவும் வேண்டாம் என்றும், உங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து வயிற்றுக்குச் சோறு போட்டால் போதும் என்றும் கேளுங்கள். அவன் வீட்டுக்கு உங்கள் தாயை முதலில் கூட்டிச் செல்ல வேண்டாம். வீட்டில் நீங்கள் இடம் பெற்ற பிறகு, உங்கள் அண்ணனிடம் மட்டுமல்லாமல் அண்ணியிடமும் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்” என்று சோதனையின் விவரத்தைக் கூறினர் குடியானவர்.

 

    • வழக்கம்போல் அடுத்த ஆண்டு சித்திரைமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று தம்மை வந்து சந்திக்கும்படி அவர் சொல்லத் தவறவில்லை.

 

    • ஒராண்டுக்குப் பிறகு இளைஞன் அவரைச் சத்திரத்தில் சந்தித்தான்.

 

    • “அசோகர் வாக்கு அமுத வாக்கு! ஐயா, இப்போது எங்கள் அண்ணன் தானகவே எங்களுக்குப் பல வசதிகள் செய்து கொடுத்திருக்கிறான் வாணிபத்தில் வரும் லாபத்தை எங்கள் ஒவ்வொருவர் பெயருக்கும் நிலம் வாங்கக் கூடப் பயன் படுத்தியிருக்கிறான்” என்று மகாலிங்க சாஸ்திரி மகிழ்ச்சியோடு கூறினான்.

 

    • “தம்பீ. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறாய்?”

 

    • “அம்மா அதிகம் செல்லம் கொடுத்ததால் அவன் தான்தோன்றியாக வளர்ந்தான். அப்பாவின் அளவுக்கு மிஞ்சிய திட்டமான கண்டிப்பு அவர்மீது வெறுப்பைத் தூண்டவே அவன் கட்டுப்பாடற்ற தறுதலையாக மாறி விட்டான். நாங்கள் யாவரும் அவனை மதிக்காமல் இருக்கவே அவன் எங்களைப் பகைவராகக் கருதி வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். இப்போது நாங்கள் எல்லோரும் அவனை மதித்துப் போற்றி நடந்ததைப் பார்த்தும், எங்களுக்குள்ளே நிலவும் அன்பைக் கண்டும் அவனும் மனம் மாறி விட்டான். ஐயா, உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்கள் குடும்பமே புது வாழ்வு பெற்றுவிட்டது” என்று கூறினன் இளைஞன்.

 

    • “இனிச் சோதனை எதுவும் தேவையில்லை. அசோகர் எழுத்துப் பொருள் பெற்றுவிட்டதல்லவா?” என்று கூறிச் சிரித்தார் குடியானவர்.

 

    • “ஐயா, அசோகரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றான் இளைஞன்.

 

    • “அசோகரை யாரும் எளிதாகப் பார்க்கலாம். தலைநகருக்குப் போனால் அரண்மனையில் அவரைப் பேட்டி காணலாம். சாதாரண குடியானவனை என்னிடம் பேசுவது போலவே அவரிடம் எந்தப் பிரச்சினை பற்றியும் பேசலாம்” என்று கூறினர் குடியானவர்.

 

    • மகாலிங்க சாஸ்திரி அன்றே தலைநகருக்குப் புறப்பட்டான். அதற்கு வேண்டிய ஆயத்தங்களோடுதான் அவன் ராஜகிரியிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.

 

    • அரண்மனையில் மாமன்னரைப் பார்க்க அவனுக்கு எளிதாக அனுமதி கிடைத்தது. மணி மண்டபத்தில் அரசர் வருகைக்காகக் காத்திருந்த பலரோடு அவனும் காத்திருங்தான். கணீர் என்ற மணியோசையைத் தொடர்ந்து எழுந்த வீணையின் மெல்லிய நாதத்துடன் அரசர் மண்டபத்தினுள் நுழைந்தார். அரியணையில் அவர் அமர்ந்தபின் எல்லோரும் எழுந்து வணங்கி நின்றனர்.

 

    • மகாலிங்க சாஸ்திரி மாமன்னரைக் காண விரும்புவதாக அரண்மனை அதிகாரி கூறினார். இளைஞன் எழுந்து நின்றான். அவன் வாய் திறக்குமுன் அசோகரே பேசினார்:

 

    • “அமைச்சர்களே, மகாலிங்க சாஸ்திரியை நான் நன்கு அறிவேன், அவர் இளைஞராயினும், பெரிய பண்டிதர், அவருடைய பணி நம் அரசுக்கு இன்றியமையாதது. அவரை நான் கமது மாவட்ட நீதிபதிகளிலே ஒருவராக நியமிக்கிறேன். இந்த ஆண்டுமுதல் அவர் ஒரு பிரதேச மகாமந்திரராகப் பதவி ஏற்று நமது அரசுக்குப் பணிபுரிய ஆணையிடுகிறேன்” என்று கூறினார்.

 

    அவருடைய குரலும் தோற்றமும் அவர் யார் என்பதை இளைஞனுக்குத் தெளிவாக்கிவிட்டன. குடியானவர் உருவத்தில் வந்து தன்னைக் கவர்ந்துகொண்ட பெருமான் அவர்தாம் என்று அறிந்து மகாலிங்க சாஸ்திரி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

விசுவின் ‘ராசியில்லா ராணி – ஆறாம்ப்பூ டீச்சர்!’விசுவின் ‘ராசியில்லா ராணி – ஆறாம்ப்பூ டீச்சர்!’

ராசியில்லா ராணி – ஆறாம்ப்பூ டீச்சர்! “அந்த ஆறாம்ப்பூ  ராணி டீச்சரை ஏன் எல்லாம் ராசியில்லா ராணின்னு சொல்றாங்க”? “நீ ஸ்கூலுக்கு புதுசா? “ “ஆமாம்” “அதான் உனக்கு தெரியல!, பாவம் அவங்க! கொஞ்ச வருசத்துக்கு முன்னால கல்யாணாமாச்சாம். அப்புறம் ஒரே

அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்

  அசோகர் கதைகள் கதை ஒன்று – துன்பம் போக்கும் அன்பர்   மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம்

சீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட்சீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட்

சீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட் (ஆங்கிலக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச் சுற்றி ஒடியது; சிலசமயம் அதன் கரைகளை