Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’

அத்தியாயம் – 21

 

அவர்களை வற்புற்தி அதினனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் வீட்டில் அதினன், மித்து, அவன் பெற்றோர், வெண்ணிலா, குழந்தைகள், பாக்யநாதன், கார்மேகம், பொன்னுமணி அனைவரும் இருந்தும் ஒரு விரும்பத்தகாத அமைதி நிறைந்திருந்தது.

பிள்ளைகளுக்கு உணவைத் தந்து மித்துவின் அறையில் அமர்ந்து விளையாடுமாறு சொல்லி அனுப்பினர்.

பிள்ளைகளுக்கு விளையாட போர்ட் கேம்ஸ் எடுத்துக் கொண்டு மாடியில் இருந்த மித்துவின் அறைக்கு சென்றபோதுதான் அவர்கள் உரையாடலை எதேர்சையாகக் கேட்க நேர்ந்தது அதினனுக்கு.

“அந்த வீடுன்னா இதெல்லாம் செய்ய முடியாது” என்றாள் ரதி.

“எந்த வீடு”

“நாங்க மதுரை வீட்ல வெண்ணிலம்மாவோட இருந்தோம்ல, வெற்றி குழந்தையா இருந்தான். ஆனா எனக்கு எல்லாம் நினைவு இருக்கு.  அப்பல்லாம் அப்பா, வீட்டுல இருந்தாலே எல்லாரையும் அடிப்பாரு. என்னை, வெற்றியை… வெற்றியை தலைகீழா தூக்கி பிடிச்சுட்டு தூணில் மண்டையை அடிச்சு உடைச்சிருவேன்னு மிரட்டுவாறு.

எங்களைக் காப்பாத்த நிலாம்மா வந்தா, அவங்க தலையை முடியைப் பிடிச்சு தர தரன்னு இழுத்துட்டுப் போயி ரூமை சாத்திட்டு அடி பின்னி எடுத்துடுவாரு. ரொம்ப அடிப்பாருன்னு நினைக்கிறேன். பாவம் அம்மா அழுவாங்க விட்டுருங்க, யாராவது என்னைக் காப்பாத்துங்கன்னு கத்துவாங்க”

“உங்கம்மாவை யாருமே காப்பாத்தலையா?” மித்துவின் குரலில் நடுக்கம்.

“யாரும் காப்பாத்த மாட்டாங்க. அப்பா போனதுக்கு அப்பறம் நிலாம்மா  அப்படியே செத்து போய்ட்ட மாதிரி இருப்பாங்க. பக்கத்து வீட்ல இருக்கவங்க யாராவது ஆஸ்பத்திரில சேர்ப்பாங்க.

நிலாம்மா ஆஸ்பத்திரில இருக்கும்போது எங்களைப் பாத்துக்க அப்பத்தா எங்க வீட்ல இருப்பாங்க. அப்பா தினமும் ஒரு ஆன்ட்டியைக் வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க. நாங்க அந்த ஆன்ட்டியைப் பத்தி வெளிய சொன்னா எங்களை கிணத்தில் தூக்கி எறிஞ்சுருவேன்னு அப்பா மிரட்டுவாறு”

“உங்க வீட்டில் கிணறு இருந்துச்சா?”

“இல்ல ஆனா ஊரு கடைசில ஒரு பெரிய கிணறு இருந்துச்சு. அதில்தான் எங்கம்மா விழுந்து செத்துப் போனாங்க. அங்க தூக்கிட்டுப் போயி எறிஞ்சுருவேன்னு மிரட்டுவாறு”

“உங்கம்மாவா… அப்ப இவங்க” குழப்பத்தோடு கேட்டாள் மித்து.

“வெண்ணிலா.. அதான் நிலாம்மா… இவங்க எங்க சித்தி. எங்கம்மாவோட தங்கச்சி. மதுரைல காலேஜ்ல படிச்சுட்டு இருந்தாங்க. எங்க நிஜ அம்மா தண்ணி எடுக்க கிணத்துக்குப் போனாங்களா அப்ப தவறி விழுந்து செத்து போயிட்டாங்க. எங்கம்மா பேரு… “

“மஞ்சுளா…  இதுதான் என் முதல் பொண்ணு பேரு” செஞ்சடைநாதனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாக்யநாதன்.

“மஞ்சுளா, வெண்ணிலாவோட எட்டு வயசு பெரியவ. தூரத்து சொந்தம், ரொம்ப ஆசைப்பட்டு கேட்குறாங்க, என்ஜீனியர் மாப்பிள்ளைன்னு சொன்னாங்கன்னு நம்பிப் பொண்ணு கொடுத்தேன். கல்யாணம் ஆனதும்தான் தெரிஞ்சது அவனுக்கு எல்லா கெட்டப் பழக்கமும் இருக்குனு.

இந்த சமயத்தில் பாபுவுக்கு வேலை வேற போயிருச்சு. சொந்த ஊருக்கே திரும்பி வந்துட்டான். ஆறு மாசத்துக்கு ஒரு தரம் பிஸினஸ் பண்ண காசு கேட்டு மஞ்சுளாவை வீட்டுக்கு அனுப்பி வைப்பான். அடி, உதை எல்லாம் உண்டு போலிருக்கு. இந்தக் கிறுக்குப் புள்ள அதை என்கிட்ட சொல்லல. ஒரு வேள ஆத்தாக்காரி யாராவது இருந்திருந்தா மனசுவிட்டு சொல்லிருக்கும். அப்பங்கிட்டயும் சொல்ல முடியல, தங்கச்சி சின்ன புள்ளன்னு அதுக்கிட்டயும் சொல்லல. மனசுலேயே வச்சு எங்கண்ணு மருகிருக்கு”

கண்களைத் துடைத்துக் கொண்டார் பாக்யநாதன்.

“இதுக்கு நடுவில் மஞ்சுளாவோட கையப் பிடிச்சுட்டு ரதி, கை புள்ளயா வெற்றி. அந்த சமயத்தில் பாபு வீட்ல பங்கு கேட்டு என்னை நெருக்குனான். நான் இது பரம்பரை சொத்து என் ரெண்டு பொண்ணுங்களுக்குத்தான் பாத்யதைன்னு சொல்லிட்டேன். அப்பத்தான் இந்த செய்தி வந்தது. என் பொண்ணு தண்ணி எடுக்கப் போனப்பா தவறி கிணத்தில் விழுந்துட்டான்னு

இவன் என்னமோ சொல்லிட்டான் போலா, மஞ்சுளா மனசு உடஞ்சு கிணத்துல விழுந்துடுச்சு. என் பொண்ணு செத்து ஒரு வருஷம் களிச்சுத்தான் அது தற்கொலை செஞ்சுகிடுச்சுன்னு  செய்தியே எனக்குத் தெரியும். முன்னாடியே தெரிஞ்சிருந்தா புகார் தந்திருப்பேன்.

அதுவும் எப்படி தெரியுமா… இந்தக் களவாணி இதை வேற பெருமையா வெண்ணிலாகிட்ட சொல்லிருக்கான். ”

வாயினில் துண்டை அடைத்துக் கொண்டு குலுங்கினார்.

“குடும்பம், வேலைன்னு பாத்துப் பாத்து தான் பொண்ணு கொடுத்தேன். காசாசை கொஞ்சம் இருக்குன்னு மனசில் பட்டது. ஆனால் இப்படி ஒரு சாத்தானுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேனேன்னு நினைக்கும்போது மனசு தாங்கல சார்”

“பாக்யா… உனக்கு என்ன சொல்லி தேத்துறதுன்னே தெரியல”

மனதை சமாதானம் செய்துக் கொண்டவர் போல

“மஞ்சுளா போனதுக்கப்பறம் ரதியும், கைப்பிள்ள வெற்றியும் எங்க வீட்லதான் வளர்ந்தாங்க. வெண்ணிலாவும் பொன்னுமணியும் பிள்ளைகளைப் பாத்துக்கிட்டாங்க. வெண்ணிலா காலேஜுக்குப் போயிட்டு இருந்தது. பொன்னுமணி மேல படிக்கல.

அப்பத்தான் அந்த அயோக்கியபயலோட அம்மா வெண்ணிலாவை ரெண்டாந்தாரமா கேட்டுச்சு. மஞ்சுளாவ அவனுக்குக் கொடுத்துட்டு நான் பட்ட பாடு போதாதா? வெண்ணிலாவையும் அவனுக்கே தருவேனா? நான் முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். அன்னைக்கு எல்லாத்தையும் வெண்ணிலாகிட்ட சொல்லி இருந்திருக்கலாம். கொஞ்ச நாளாகட்டும்னு தள்ளிப் போட்டேன். அதுவே எனக்கு வினையாப் போயிடுச்சு.

இந்தப் பய தினமும் வெண்ணிலா காலேஜு போகும்போது பார்த்து பேசி மனசைக் கரைச்சிருப்பான் போலிருக்கு. அவங்கம்மா பிள்ளைகளைப் பாத்துக்க ரெண்டாம் கல்யாணம் பண்ணி வைக்கப் போறதாவும் பிள்ளைகளை அவன் வீட்டுக்குத் தூக்கிட்டுப் போகப் போறதாவும் சொல்லவும் இந்தக் கிறுக்குப் பொண்ணு பயந்துடுச்சு. வெண்ணிலாவே கல்யாணம் பண்ணிக்கிட்டு பிள்ளைகளுக்குத் தாயா இருக்கலாம்னு ஒரு கொக்கி வேற போட்டிருக்கான். அவன் பசப்பு வார்த்தையை நம்பி தூண்டில் மீனா மாட்டிருச்சு.

நான் ஊரில் இல்லாத சமயம் நெருக்கி பதிவுத் திருமணம் பண்ணிருக்கான். எனக்கு விஷயம் தெரிஞ்சப்ப விஷயம் கைமீறிப் போயிருச்சு. மதுரைல இருக்குற வீட்டில் சட்டமா வந்து உக்காந்துக்கிட்டான். நிலாவோட படிப்பு அப்படியே நின்னுருச்சு.

அவனோட கொடுமைக்கு பயந்து அவன் நீட்டுன காகிதத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு தந்துட்டா போலிருக்கு. ஒரு நாள் அந்த வீடு அவனிதுன்னு சொல்லி எங்களைத் துரத்தி விட்டுட்டான்”

“இது அநியாயத்திலும் அநியாயமா இல்ல இருக்கு. நீ போலீஸ்ல சொன்னியா”

“சொன்னேன். அவன் என் பொண்ணுங்க ரெண்டு பேரும் கையெழுத்துப் போட்டுத் தந்த பத்திரத்தைக் காமிக்கிறான். கோர்ட்டுக்குப் போயிருக்கோம். அந்த வீட்டில் அவன் குடியும் கும்மாளமும் போட்டுட்டு இருக்கான். இங்க நாங்க அவன்கிட்ட இருந்து எங்க பொருளை மீட்க ஒரு பக்கம் சண்டை போட்டுட்டு இருக்கோம். இன்னொரு பக்கம் வெண்ணிலாவோட விவாகரத்து வழக்கு. ஒரு வழியா விவாகம் ரத்தாச்சு. அடுத்து வீடும் எங்க பக்கம் தீர்ப்பாகும்னு நம்புறோம். அதுக்கு இன்னும் எத்தினி வருஷம் ஆகுமோ”

“விவாகரத்துக்கே அத்தனை வருசம் இழுத்துச்சு. இனி வெற்றி காலேஜு போகும்போதுதான் வீடு கைக்குக் கிடைக்கும் மாமோய்” என்றான் கார்மேகம்.

“இவன் என்னோட அக்கா மகன் முறையாகுது. எங்களுக்குத் துணை இவன்தான். இவனையும் என் பொண்ணையும் சம்பந்தப்படுத்தி எல்லா இடத்திலையும் பேசி வைக்கிறான். இவனோட இருக்குற கள்ளத் தொடர்பாலதான் என் பொண்ணு வீட்டை விட்டுட்டு ஓடிட்டாளாம். குடும்பத்தை சேர்த்து வைங்கன்னு மனு கொடுத்திருக்கான்”

“பாக்யா எல்லாத்தையும் கொட்டிட்டல்ல, மெட்ராஸ் லாயரை உடனே போன்ல கூப்பிடு அதின்”

லாயருடன் பேசிவிட்டு கையோடு டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் அவருக்கு மெயிலில் அனுப்பி வைத்தான் அதினன்.

“அங்கிள் இது சுலபமா முடிச்சுடலாம். நீங்க முடிச்சிறக் கூடாதுன்னுதான் உங்களுக்கு இடைவிடாம தொந்தரவு தந்துட்டு இருக்கான். நாளைக்கே இதை கவனிக்கிறேன்” என்றான் அதினன்.

5 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’”

  1. Story super kka. Romba edharthama interesting a eludhureenga kka. Ella charactersum super. Unga eluthu unga sindhanai elame vera level. Nila indha naragathula irundhu veliya varala papom. Innum inum neriya eludhunga akka. Upcoming episodes konjam lengthya podunga kka. Quicka mudiyira mari iruku☺️. Waiting for you updates akka 😍☺️☺️☺️

  2. அப்பாடா அதினன் மூலமாவது வெண்ணிலாவுக்கு ஒரு நல்லது நடக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’

அத்தியாயம் – 7   சிவகுரு மற்ற கம்பனிகளில் சில வேலைகளை முடித்துவிட்டு அதினனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு வேலை செய்யும் ஒருவன் “சார் மீட்டிங்க்ல இருக்கார். நீங்க வந்த தகவலை சொல்றேன். உக்காருங்க சார். கூல் டிரிங்க்ஸ் கொண்டு வரட்டுமா?”

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’

அத்தியாயம் – 10 கண்களை மூடியபடி அவனது பாடலை நேரலையில் ரசித்துக் கொண்டிருக்கும் மாது, அவளது இமைகள் மெதுவாக உயர்ந்து கண்கள் குவளைப் பூக்களைப் போன்று விரிந்தது. அவளது கண்கள் அப்படியே உயர்ந்து அவனது கண்களை சந்தித்தது. “யாரும்மா நீ ஏஞ்சல்?”

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’

அத்தியாயம் – 19 அதினன் வீட்டை சுத்தம் செய்து குடி வந்து ஒரு மாதமாகப் போகிறது. தினமும் காலை எழுந்து குளித்து பத்து மணிக்கு ரெடியாகி விடுவான். அதற்குள் வெண்ணிலாவும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு