Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’

அத்தியாயம் – 3

டீ குடித்து முடித்த கையோடு “கார்மேகம் பத்து நிமிசத்தில் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன். டூரிஸ்ட் எல்லாம் கோவிலுக்கு போறவங்கல்ல, நாமளும் அதுக்குத் தக்கன குளிச்சுட்டு சுத்த பத்தமா சமைக்கலாம். நீ குளிச்சுட்டியா?”

“நீ இப்படி சொல்லுவேன்னு தெரியும். அதுதான் காலைலயே குளிச்சுட்டேன். பத்து நிமிசத்தில் சிவன் கோவிலுக்கு போயி சாமி கும்புட்டுட்டு வந்துடுறேன்” என்றபடி கிளம்பினான்.

வண்டியை ஓட்டி இருபது அடி தூரம் சென்றதும் “எனக்கும் துண்ணூறு வாங்கிட்டு வா” என்று வெண்ணிலா கத்தும் சத்தம் பின்னாடியே கேட்டது.

வழியில் பொன்னுமணி வீட்டின் முன் வண்டியை நிறுத்தி கிணிங்க் கிணிங்க்என்று வண்டியில் விடாமல் சத்தம் எழுப்பினான்.

“கார்மேகம் இப்ப போறியா, இல்ல கல்லைக் கொண்டி உன் வண்டியை உடைக்கவா?” என்று பொன்னுமணி கூச்சலிட

“ஏய் பொன்னுன்னு பேரு வச்சா கல்யாணப் பொண்ணு மாதிரி ஆடி அசைஞ்சுத்தான் வருவியா? சீக்கிரம் போயி வெண்ணிலாவுக்கு ஒத்தாசை பண்ணு”

“க்கும்… உன் மாமன் மவ மேலக் கரிசனம் பொத்துக்கிட்டு ஊத்துது…. கிளம்பிப் போக எங்களுக்குத் தெரியும்”

“வக்கண பேசிக்கிட்டு நிக்காம வெரசா கிளம்பிப் போ. நான் கோவிலுக்குப் போயிட்டு வந்துடுறேன்”

அரிட்டாப்பட்டியில் இருக்கும் குடைவரை சிவன் கோவில் அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தமானது. அந்தப் பகுதிகளில் பல சிறு சிறு குன்றுகள் உண்டு. அந்தக் குன்றுகளில் நவகிரங்களின் ஈர்ப்பு சக்தியை சித்தர்கள் ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்த குடைவரை சிவன் கோவிலை சுற்றியே அவை அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கோவிலுக்கு எதிரே இருந்த வற்றாத சுனை நீரை தலையில் தெளித்து பருகிக் கொண்டான். இந்த சுனை நீரில்தான் அபிஷேகப் பிரியனுக்கு அபிஷேகம் நடக்கும். பக்கத்தில் பெண் தெய்வம் இருக்கும் இடைச்சி மண்டபத்தையும் பார்த்துவிட்டு சிவன் கோவிலுக்கு வந்தான். அந்த நேரத்தில் அவ்விடத்தில் மனிதர்கள் அவனைத்தவிர யாரும் இல்லை. இறைவனுக்காக வாங்கி வந்த மல்லிகைப் பூச்சரத்தை அங்கே ஓரமாக வைத்துவிட்டு, சூடத்தை வெளியே ஏற்றி வைத்து வணங்கினான்.

வெளியே வைத்திருந்த சிவன் கோவில் துண்ணூரை நெற்றியில் அப்பிக் கொண்டு வெண்ணிலாவுக்கும் பொட்டலத்தில் மடித்துக் கொண்டு கிளம்பினான்.

கார்மேகம் வெண்ணிலாவின் வீட்டை அடைந்த பொழுது அனைவரும் எழுந்து விட்டிருந்தனர். பாயைச் சுருட்டி வைத்துவிட்டு வீட்டினைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் தங்கரதி. அவனைக் கண்டதும் “சித்தப்பா” என்று பெருக்குமாறை அப்படியே போட்டுவிட்டு வந்து அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“தங்கம் எந்திரிச்சிட்டியா… உன்னை வேலை செய்ய சொன்னதா வெண்ணிலா… அந்த விளக்குமாறை என்கிட்ட கொடும்மா” என்று கொஞ்ச…

“ஆமாம் சித்தப்பா! எழுப்பி விட்டு படுக்கையை மடிச்சு வீட்டைக் கூட்ட சொல்லிருக்கு அம்மா!”

“சரி, நான் கூட்டுறேன் நீ போயி படிம்மா”

“வேணாம் சித்தப்பா… இன்னும் கொஞ்சம்தான் இருக்கு நானே கூட்டிடுறேன். இன்னைக்கு லீவுதானே, குளத்தில் போயி நம்ம எல்லாரும் மீன் பிடிச்சுட்டு வரலாமா?”

“ஐ சித்தப்பா! மீன் பிடிக்கப் போறோம்” என்றபடி ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டு தொங்கினான் சிறியவன் வெற்றிவேல்.

அவனை தூக்கிக் கன்னத்தில் முத்தம் கொடுத்தபடி “இன்னைக்கு டூரிஸ்டு வாராங்க தங்கம். சமைச்சு சாப்பாடு எடுத்துட்டுப் போகணும். இன்னொரு நாள் கண்டிப்பா போகலாம்”

“போங்க சித்தப்பா… அப்பறம் மழை வந்துரும்”

“ஆமா, ஆமா மலை வரும் இன்னைக்கே போலாம் சித்தப்பா” என்றான் வெற்றி.

“வெயில் காலத்துல வறண்ட குளம், மழை வந்ததும் தானே நிறையும். அப்பறம் என்னாகும் வெற்றி”

“மண்ணில் தூங்கிட்டு இருந்த மீனெல்லாம் முழிக்கும். வளந்து நிறைய மீனாகும்” என்றான் வெற்றி

“பாரு இந்த அறிவாளிக்கு எவ்வளவு விசயம் தெரியுது… “

பாக்யநாதன் தலையைத் துவட்டியபடியே வந்தார் “புள்ளைகளா! இன்னைக்கு வீட்டுப் பாடத்தை சீக்கிரம் முடிச்சா… மலைக் கோவிலுக்கு உங்களைக் கூட்டிட்டுப் போவேன். சுனைத் தண்ணியைப் பிடிச்சுட்டு வரலாம். சரியா… “

“சரி தாத்தா… “என்றனர் இருவரும் ஆவலாக.

பொன்னுமணியின் மகன் ரங்குவும் அங்கே ஓடி வந்தான்.

“நீயும்தாண்டா குட்டிப் பயலே… உங்கம்மாகிட்ட சொல்லி டவுசர் போட்டுட்டு வா” என்றபடி வேஷ்டியைக் கட்டிக் கொண்டார்.

“டூரிஸ்டுங்க வர்ரதுக்குள்ள போயிட்டு வந்துடுங்க மாமா… “ என்று பாக்கியநாதனிடம் சொல்லிவிட்டு வெண்ணிலாவைத் தேடி சமைக்கும் இடத்திற்கு சென்றான்.

ஏழாம் வகுப்பு படிக்கும் தங்கரதியும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் வெற்றிவேலும் வீட்டுப் பாடத்தை செய்ய ஆரம்பிக்க, வெற்றியின் பழைய சிலேட்டில் பல்பத்தால் கிறுக்கிக் கொண்டிருந்தான் இரண்டரை வயது ரங்கு. யாரும் பார்க்காதபோது அதனை ஒரு கடி கடித்துக் கொண்டான்.

வீட்டின் பின்புறம் மூன்று கல் கூட்டி நடுவே கருவேல மர விறகு, சுள்ளி, தச்சு வேலை செய்பவர்கள் வேலைக்கு ஆகாது என்று ஒதுக்கிய மரத்துண்டங்கள் எல்லாவற்றையும் குவித்து வைத்த அடுப்பில் தீ பற்றி வேகம் கூட ஆரம்பித்திருந்தது. அதன் மேல் பெரிய பாத்திரத்தை வைத்து அரிசிக்கு உலை வைக்க தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.

பக்கத்தில் வெங்காயம் தக்காளிகளை நறுக்கியவண்ணம் பொன்னுமணி அமர்ந்திருக்க, எலுமிச்சம்பழங்களை சாதத்திற்காகப் பிழிந்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

“இந்தா… “ என்றவாறு இருவருக்கும் கோவில் துண்ணூரை வழங்கியவன் “நீ வேற வேலையைப் பாரு, நான் இதைப் பாத்துக்குறேன்”

“கார்மேகம், இது சாம்பிள் தான். பின்னாடி இன்னும் எட்டு மூட்டை எலுமிச்சை இருக்கு”

“அஸ்கு புஸ்கு… இதை மட்டும்தான் பிழிவேன்… வெண்ணிலா, இந்த ஜூஸை பாட்டில போட்டு விக்கிறான். விலை கம்மி, வேணுங்குற அளவுக்கு ஊத்திட்டு மிச்சத்தை அப்படியே பாட்டிலில் வச்சுக்கலாம். இனிமே அதை வாங்கிக்கலாமா?”

காலையிலிருந்து அவன் செய்வதற்கு மறுத்துக் கொண்டே வந்தது என்னவோ போலிருக்க “ஒரு பாட்டில் வாங்கிட்டு வா… வீட்டில சமைச்சுப் பாக்குறேன். நல்லாருந்தா வெளி சமையலுக்கும் உபயோகப்படுத்திக்கலாம்”

“கார்மேகம், நம்ம இப்ப ஜூஸ் புளிஞ்சு வச்சதே மறுநாள் சுவை மாறிடுதே, நாள்கணக்கா பாட்டிலில் எப்படி அதே சுவையோட இருக்கு. பாதி ஊத்திட்டு மூடி வச்சா கெட்டுப் போயிடாது?” அடுக்கடுக்காய் தனது சந்தேகத்தைக் கேட்டாள் பொன்னுமணி.

“ஆமாம்ல… இதெல்லாம் நான் யோசிக்கலையே” என்று வாய்விட்டு சொன்ன கார்மேகம் “ஏய் பொன்னு… என்னையெவே குழப்பி விட்டுட்டியா… ஆணியே புடுங்கல போ… “ என்றான் விளையாட்டுச் சலிப்போடு.

அடுத்தபடியாக அரிசியை சோறாக வடித்தெடுத்து, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் இரண்டையும் கிளறி பெரிய பாத்திரங்களில் போட்டு மூடி வைத்தனர். கொண்டைக் கடலை கூட்டும், உருளைக் கிழங்கை வேக வைத்து மசாலாவும் செய்தனர். உணவு அனைத்தும் ஆறும் வரை சற்று ஆசுவாசமாக அமர்ந்தனர்.

பொன்னுமணி மிச்சம் இருந்த எலுமிச்சை ஜூஸில் கொஞ்சம் வெல்லமும், துளி உப்பும் போட்டு பானைத் தண்ணி ஊற்றி ஜில்லென்று தம்ளரில் மூவருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள். குடித்ததும் மூவரும் புத்துணர்வாக உணர்ந்தனர்.

அடுத்ததாகத்தான் பெரிய வேலை. பொட்டலம் மடிப்பதற்கு வாகாகக் கட்டப்பட்ட  வாழை இலைகளையும், பழைய செய்தித்தாள்களையும் கொண்டு வந்து அவர்கள் நடுவே பொத்தெனப் போட்டாள் வெண்ணிலா.

“இது ஒண்ணு… எல்லாரும் ப்ளாஸ்டிக் டப்பால சுளுவா போட்டுத் தந்துடுறாங்க… நம்ம பொட்டலம் கட்ட மட்டும் ஒரு மணி நேரமாகுது” சலித்துக் கொண்டான்.

“ஐத்தான், இது மட்டும் எங்க பெரியப்பன் காதில் விழுந்தா அவ்வளவுதான் இன்னைக்கு புல்லா உன்னைத் திட்டித் தீக்கும்”

“அய்யோ பொன்னு மாமாகிட்ட சொல்லிடாதே”

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’”

  1. இப்படி பலப்பத்தை நைசா கடிச்சு டேஸ்ட் பார்க்காதவங்க யாராவது இருக்க முடியுமா? 😋 enaku site notification varala. Neenga epi pottathe theriyaa miss panniten.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’

அத்தியாயம் – 6   வளசரவாக்கத்தின் பிரதான சாலையிலே இருந்த அந்த நான்கு மாடி அலுவலகம் முழுவதும் கிரானைட் கற்களால் பளபளத்தது. அந்தக் கட்டடத்தின் வாயிலில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் தெரிந்தவர்களை மட்டுமே உள்ளே அடி எடுத்து வைக்க விட்டார். அங்கு வருபவர்கள்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’

அத்தியாயம் – 1   சிட்டுக்குருவிகள் கதிரவன் வரும் வேளையை உணர்ந்து முத்தம் கொடுத்து தங்களது இணைகளையும் குஞ்சுகளையும் எழுப்பி விட்டன. “கீச் கீச்” என்று அந்த ஆலமரமெங்கும் குருவிகளின் நலவிசாரிப்புக் குரல்கள்தான். அவையே அலாரம் போல செயல்பட்டு ஆடு மாடுகள்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’

அத்தியாயம் – 10 கண்களை மூடியபடி அவனது பாடலை நேரலையில் ரசித்துக் கொண்டிருக்கும் மாது, அவளது இமைகள் மெதுவாக உயர்ந்து கண்கள் குவளைப் பூக்களைப் போன்று விரிந்தது. அவளது கண்கள் அப்படியே உயர்ந்து அவனது கண்களை சந்தித்தது. “யாரும்மா நீ ஏஞ்சல்?”