Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5

அத்தியாயம் – 05

 

அதிகாலை நான்கு மணிக்கே துயிலெழுந்த ஈஸ்வர் காலைக் கடன்களை கழித்து விட்டு கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்தக் குளிர் நீரிலேயே நீராடினான். நீராடி விட்டு ஈரம் போகத் துண்டால் துடைத்தவன் ஒரு பருத்தி வேட்டியை உடுத்திக் கொண்டான்.

 

கிழக்குப் பக்கம் பார்த்து நின்றபடி ஏதேதோ மந்திரங்களை ஓதி வணங்கியவன், யோகாசனம் போல சில அப்பியாசங்களை செய்ய ஆரம்பித்தான். அரை மணி நேரம் கடந்திருக்க, நாகம்மன் ஆலய மணி ஒலித்துக் காலைப் பூசைகள் நடைபெறுவதை அறியத் தந்தது. 

 

மணிச்சத்தம் கேட்ட ஈஸ்வரும் உடனேயே தனது தோள்பையையும் எடுத்துக் கொண்டு ஆலயத்துக்குச் சென்றான். அங்கு உள்ளே செல்லாமல் வாசலில் நின்றே வணங்கியவன், ஆலய வெளி வீதிக்குச் சென்று நாகலிங்க மரத்தை நோக்கியவாறு சற்றுத் தொலைவில் ஒரு மரத்தினடியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். 

 

அமர்ந்ததுமே தனது தோள்பையிலிருந்து ஒரு வெள்ளைப் படம் வரையும் நோட்டுப் புத்தகத்தையும் பென்சிலையும் வெளியே எடுத்தான். முந்தைய நாள் கண்ட காட்சிகளை மனதில் கொண்டு வந்து வரைய ஆரம்பித்தான். 

 

அதிகாலை நேரம் இன்னமும் சூரியன் தன் கதிர்களை முழுதாய் வெளிப்படுத்தியிருக்காத பொழுது. அந்த அரைகுறை வெளிச்சத்திலும் அவன் சுற்றுப் புறம் எதையும் கணக்கிலெடுக்காது தன் மனதிலுள்ளதை வரைவதிலேயே கவனம் செலுத்தியிருந்தான். 

 

நாகன்யா வழக்கம் போலப் பெற்றோரோடு குதிரை வண்டியில் வந்து இறங்கினாள். அர்ச்சகர் உள்ளே அழைத்துச் சென்றதும் நாகம்மனுக்குத் தீபாரதனை காட்டுவதைக் கரம் கூப்பி வணங்கினாள். திரை போட்டு மூடியிருந்த குதிரை வண்டியிலிருந்து அவளால் வெளியே பார்க்க முடியவில்லை. அதனால் வெளி வீதியிலிருந்த ஈஸ்வரை கண்டிராதவள், உள் வீதியை வலம் வரும் போது எங்காவது அவன் தென்படுகிறானா என்று விழிகளாலேயே தேட ஆரம்பித்தாள். 

 

மூன்று முறை உட் பிரகாரத்தைச் சுற்றி வந்தும் நாகம்மா அவள் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. ஈஸ்வரைக் காண முடியாத சோகத்தோடு பாம்புப் புற்றுக்குப் பால் வைப்பதற்காகச் சென்றவள், அங்கு சிறிது தொலைவில் வரைந்து கொண்டிருந்தவனைக் கண்டு விட்டாள். 

 

அவனைக் கண்ட அடுத்த நொடியே இதயம் பந்தயக் குதிரை போல எம்பித் துடித்துக் கொண்டிருந்தது. எதையும் வெளிக்காட்டாமல் சர்ப்பத்துக்குப் பாலை வைத்து விட்டு அது அருந்தியதும் புற்றை வலம் வந்து வணங்கியவள், யாரும் எதிர்பாராத விதமாக நேராக ஈஸ்வரிடம் சென்றாள். 

 

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ஈஸ்வரோ அவளை மிக அருகில் கண்டதும் வியப்போடு நிமிர்ந்து பார்த்தான். 

 

“வணக்கம் நாகன்யா.. ஸாரி.. மன்னிக்கவும்.. வணக்கம் நாகம்மா..”

 

என்றவாறு தட்டுத் தடுமாறியவாறு கரம் குவிக்கவும் அவன் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகமும் பென்சிலும் கீழே விழுந்தது. தனது காலடியில் விழுந்த நோட்டுப் புத்தகத்தை மெதுவாய் குனிந்து எடுத்துப் பார்த்தாள் நாகன்யா. ஈஸ்வருக்கோ நெற்றியெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்ப ஆரம்பித்தன. நாகன்யா ஈஸ்வரிடம் செல்வதைக் கண்ட நாகேஸ்வரன் தம்பதியும் அவ்விடத்துக்கு விரைந்தார்கள். 

 

கையிலெடுத்த நோட்டுப் புத்தகத்தை ஒவ்வொன்றாக விரித்துப் பார்க்க ஆரம்பித்தாள். முதல் பக்கத்தில் நாகம்மன் ஆலயக் கோபுரம் அழகாய் உயர்ந்து நின்றது. அடுத்த பக்கத்தில் நாகன்யா பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றும் காட்சி. அடுத்த பக்கத்தில் வீட்டிலே அவள் சிம்மாசனத்தில் அமர்ந்து பத்திரிகை வாசிக்கும் காட்சி, அடுத்ததில் அவள் குதிரை வண்டியை விட்டு இறங்கும் காட்சி.

 

அனைத்துமே மிகத் துல்லியமாக பென்சில் கோட்டுச் சித்திரங்களாகக் காட்சி தந்தன. அவள் அணிந்திருந்த நகைககளிலிருந்து, புடைவையிலிருந்த புள்ளிகள், கோலங்கள் வரை அனைத்தும் தத்ரூபமாக வந்திருந்ததை வியந்து ரசித்தவள்,

 

“மிகவும் அழகாக வரைந்திருக்கிறீர்கள் ஈஸ்வர். இவற்றை எனக்குத் தர முடியுமா?”

 

“உங்களுக்குப் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்..”

 

“மிக்க நன்றி ஈஸ்வர். உங்களுக்கு மிகுந்த ஞாபக சக்தியும் அதனை விட அதிகமாக எதையும் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் இருக்கிறது. இல்லையென்றால் இவ்வளவு தூரம் துல்லியமாக வரைந்திருக்க முடியாது..”

 

“சிறு வயதிலிருந்தே வரைவது பிடிக்கும். முறையான பயிற்சியும் பெற்றுள்ளேன். ஓவியனுக்கு இவை அத்தியாவசியமான திறமைகள் தானே நாகன்யா.. மன்னிக்கவும் நாகம்மா..”

 

அவன் மறுபடியும் பெயர் சொல்லி அழைத்ததை ஒரு வியப்புடன் பார்த்தவள், அவன் விழிகளை நோக்கி ஒரு முறுவலைத் தவழ விட்டாள். 

 

“ஓவியங்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் ஈஸ்வர். உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் தயங்காது அப்பாவிடம் கேளுங்கள்.. நான் போய் வருகிறேன். சந்திப்போம்..”

 

கூறிவிட்டுக் குதிரை வண்டி நோக்கிச் சென்றவளை ஒரு புரியாத பார்வையோடு பார்த்திருந்தான் ஈஸ்வர். நாகன்யா மனதோ ஈஸ்வரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அவளைக் கண்டதும் அம்மா, தாயே என்று கூழைக் கும்பிடு போடாமல் சாதாரண ஒரு பெண்ணோடு பேசுவது போல அவன் பேசியதே அவளைப் பெரிதும் கவர்ந்தது. 

 

அவனது அத்தனை அற்புதமான ஓவியத்துக்குரிய பாராட்டைக் கூட மிக இயல்பாக ஏற்றுக் கொண்டது அவளை வியப்பில் ஆழ்த்தியது. பேச்சில் வரம்புக்கு மீறிய மரியாதையோ அல்லது ஏளனமோ எதுவுமின்றி மிகச் சாதாரணமாக அவன் அவள் கண்களை நேராகப் பார்த்துப் பேசிய விதம், அவளைக் கண்டதும் விழுந்தடித்து எழுந்திருக்காது மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தவாறே பதிலளித்த மிடுக்குக் கூட அவளை எதுவோ செய்தது. 

 

வண்டியில் அமர்ந்திருந்து அவன் வரைந்த படங்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் என்னமோ அவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது. 

 

நேரம் மதியமாகியிருக்க மதியப் பூசை முடிவடைந்ததும் கோவில் மடத்தில் அன்னதானம் இட்டார்கள். மற்றைய அடியவர்களோடு சேர்ந்து ஈஸ்வரும் உணவருந்த அமர்ந்தான். அனைவரும் அமரும் படி வரிசை வரிசையாகப் புற்பாய் விரிக்கப்பட்டிருந்தது. எந்தவித தள்ளுமுள்ளுமின்றி பக்தர்கள் பாய்களில் வரிசையாகச் சென்று அமர்ந்தார்கள். மிகுதிப் பேர் பொறுமையாக வெளியில் மரநிழலில் அமர்ந்து கொண்டார்கள். முதலில் வயதானவர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் உள்ளே அனுப்பியிருந்தார்கள். 

 

இவற்றை அவதானித்த ஈஸ்வர் தானும் இரண்டாவது பந்திக்காகக் காத்திருந்தான். அதனைக் கண்ட ஒருவர்,

 

“பட்டணத்துத் தம்பி.. நீங்களும் உள்ளே போய் சாப்பிடுங்கோ. உங்களுக்குப் பசியிருந்து பழக்கமோ என்னவோ? அங்கே பாருங்கோ இடம் இருக்கு..”

 

என்று கூறி அவனையும் உள்ளே அனுப்பினார். ஈஸ்வரும் தயங்கியவாறு சென்று அமர்ந்து கொண்டான். வாழை இலையைப் போட்டவர்கள்,  நல்ல பூப்போன்ற சாதத்தோடு நாலைந்து வகைக் கறி, பொரியல், வடை, பாயாசத்தோடு கல்யாண வீட்டு விருந்து போலவே பரிமாறப்பட்ட உணவைக் கண்டு வியந்து விட்டான். அத்தனை சுவையாக வேறு இருந்தது. 

 

நாகர்கோவில் பல விதங்களில் அவனை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருந்தது. தாங்களாகவே கட்டுப்பாடாக நடந்து கொள்ளும் ஊர் மக்கள் அவனை பெரும் வியப்பில் ஆழ்த்தினார்கள். இதே இன்னொரு ஊர் அன்னதானம் என்றால் கூட்டம் தள்ளுப்பட்டு நான் முந்தி நீ முந்தி என்று பந்திக்கு அடிபடுவார்கள். அதை விட இவ்வளவு சிரத்தையாகச் சிறப்பாக உணவுகள் பரிமாறப்படுவதில்லை. ஏனோ தானோ என்று தண்ணியாக ஒரு குழம்பு, கல்லும் நெல்லுமாய் ஒரு சோறு என்றிருக்கும். 

 

எல்லாவற்றையும் அவதானித்தவாறே ரசித்து ருசித்து வயிறார உண்டவன்,  நன்றி தெரிவித்து விட்டு ஊரைச் சுற்றி வரப் புறப்பட்டான். 

 

சுற்றிப் பார்க்கப் பார்க்க, நாகர்கோவில் அவனை ஆச்சரியத்தில் ஆழ வைத்தது. முதலில் அவனைக் கவர்ந்த விடயம், அந்தக் கிராமத்தின் தூய்மை. வீடுகளின் முன்போ, வீதிகளோ எங்கு பார்த்தாலும் சுத்தமாகக் கூட்டி விடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மனிதனுமே சுத்தத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்தால் மட்டுமே இது சாத்தியம் என்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. 

 

நான்கு தெருவுக்கு ஒரு வாசிகசாலையும் அதில் நாளாந்த பத்திரிகைகளிலிருந்து பல நூல்கள் வரை இருந்தன. பூட்டற்ற அந்த வாசிகசாலையை வியப்போடு பார்த்தவன், தாங்க முடியாமல் அங்கிருந்த நபர் ஒருவரிடம் கேட்டே விட்டான். 

 

“ஐயா..! இப்படித் திறந்த நூலகமாக இருக்கிறதே.. யாரும் புத்தகங்களைத் திருடிக் கொண்டு போக மாட்டார்களா?”

 

அந்தக் கிழவரோ சிரித்து விட்டு,

 

“ஒருவனால் திருட முடியாத செல்வமே கல்விச் செல்வம் தான் தம்பி.. திருடுகிறவன் என்ன செய்து விடப் போகிறான்? ஆசைக்குப் படித்து விட்டுத் தானாகவே கொண்டு வந்து வைத்து விடப் போகிறான்..”

 

அவர் கருத்தை ஆமோதித்தவாறே தன் பயணத்தைத் தொடர்ந்தவன் கண்களில் பட்ட அடுத்த விடயம், விவசாயத்தில் உபயோகிக்கப்பட்ட பல நவீன முறை இயந்திரங்கள். அவற்றையெல்லாம் வியப்போடு பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான். இவன் புகைப்படங்கள் எடுப்பதைத் கண்ட இளம் விவசாயிகள் இவனுக்குக் கை காட்டிச் சிரித்துக் கொண்டே தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள். 

 

இவனும் அந்த வயல் வேலைகளைப் பார்த்தவாறே சிறிது நேரம் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டான். வேலை முடித்த இளைஞன் ஒருவன் ஈஸ்வர் அருகில் வந்தமர்ந்தான். 

 

“வணக்கம் அண்ணா.. எந்த நியூஸ் பேப்பர் நீங்க?”

 

“நான் நியூஸ் பேப்பர் எல்லாம் இல்லைப்பா.. சாதாரண எழுத்தாளன் மட்டும் தான்..”

 

“ஆ.. சரி.. சரி..”

 

“புது வகையான இயந்திரங்கள் எல்லாம் உபயோகிக்கிறீங்களே.. இந்தச் சின்னக் கிராமத்தில இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? வரும் வழியில் பார்த்தேனே.. மற்றக் கிராமங்கள் எல்லாம் வரண்டு போய் இருக்க உங்க ஊர் மட்டும் எப்படி இவ்வாறு பச்சைப் பசேலென இருக்கு?”

 

“எல்லாம் அந்த நாகம்மன் மகிமை தான் அண்ணா.. நாகேஸ்வரன் ஐயா இராப்பகலாக எங்களுக்காகவே உழைக்கிறார். நாகம்மாட வாக்குப்படி நாங்க எல்லாருமே என்னதான் படிச்சிருந்தாலும் விவசாயம்தான் செய்யிறோம். அவ சொல்படி நாங்க படிச்ச படிப்பை விவசாயத்துக்கு உபயோகிக்கிறோம். உதாரணமாக நான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர். நான் கண்டுபிடிச்சது தான் இந்த நாற்று நடுற மிஷின். 

 

பத்துப் பேர் செய்யிற வேலையை இந்த மெஷின் வேகமாகவும் செய்து விடும். நாங்களே தேவையான இடங்களில மழைநீரைச் சேகரித்து வைத்து அதை உரிய அளவில உபயோகப்படுத்துறம். அதேபோல ஆத்திலயும் மண்ணள்ளாமல் அதைக் கவனமாகப் பாவிக்கிறம். எங்கட ஊர் வறளாமல் இருக்க அதுதான் காரணம். 

 

இந்த மண்ணுக்குத் துரோகம் பண்ணினால் நாகம்மா எங்களை சும்மா விட மாட்டா. அந்தப் பயத்திலயும் பக்திலயும் நாங்க எப்பவுமே இந்த மண்ணைப் பொன்னாகப் பராமரிக்கிறம். பூமித்தாயும் எங்களைக் கைவிடாமல் நல்லாவே வாழ வைக்கிறா..”

 

எட்டு முழம் வேட்டியோடு சுத்தப் பட்டிக்காட்டானாய் தோற்றம் தந்த அந்த இளைஞன் மெக்கானிக்கல் இஞ்சினியராக இருந்தும் அந்தக் கிராமத்து வாழ்க்கையை அத்தனை பூரிப்போடு ஏற்று வாழ்ந்து கொண்டிருப்பதும் அவனுக்கு அந்தக் கிராமத்தின் மீதிருந்த பற்றுதலும் அவனின் பேச்சில் வெளிப்பட்டது. ஈஸ்வர் ஒருவிதமான ஆச்சரியத்தோடு அனைத்தையும் குறித்துக் கொண்டு இளைஞனுக்கு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டான். 

 

சுற்றிலும் கொட்டிக் கிடந்த இயற்கை அழகை ரசித்தவாறே நடந்து கொண்டிருந்தவன் நாகேஸ்வரன் ஒரு மின்கம்பத்தின் உச்சியில் நிற்பதைக் கண்டு பதறிப்போய் அவரை நோக்கி ஓடிச் சென்றான். 

 

“என்னாச்சு சார்? நீங்க அங்க என்ன செய்யிறீங்க? கவனமாக இறங்குங்கோ..” 

 

மின்குமிழைப் பூட்டி விட்டு லாவகமாகச் சறுக்கிக் கொண்டே கீழே இறங்கினார் நாகேஸ்வரன். 

 

“சுகமா தம்பி..? எங்கட ஊர் என்ன சொல்லுது? இந்த பல்ப் வேலை செய்யேல்ல. அதுதான் மாத்தினேன்..”

 

“வேற யாரையும் சொல்லிச் செய்யலாமே.. கிராமத்துத் தலைவர் நீங்க போய்..”

 

இழுத்தவனைச் சிரிப்போடு பார்த்தார். 

 

“இந்தச் சின்ன வேலைக்கு ஆள் தேடவா தம்பி.. அதை விடுங்கோ.. உங்களுக்கு எல்லாம் வசதியாக இருக்கா?..”

 

“எல்லாமே அற்புதமாக இருக்கு சார்.. உங்க ஊர் மக்க எல்லாருமே தங்கம் சார். பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறாங்க. மிக்க நன்றி ஐயா..”

 

“எங்க ஊரு விருந்தாளி நீங்க.  கவனிக்க வேண்டியது எங்கட கடைமை தம்பி. அப்புறம் நானே உங்களை வந்து பார்க்க வேணும் என்றிருந்தன்.  நாகம்மா உங்களைச் சந்திக்க வேணுமாம். தனக்கும் படம் வரையச் சொல்லித் தர முடியுமா என்று கேட்டா..”

 

“உண்மையாவா சார்.. அது என் பாக்கியம்.. எப்ப வந்து சந்திக்கட்டும்?”

 

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பிரளயங்களுக்குத் தானே வழி சமைத்துத் தருவதை அறியாமல் சித்திர வகுப்புக்கு ஒழுங்கு செய்து விட்டுச் சென்றார் நாகேஸ்வரன்.

 

என்னாகுமோ? ஏதாகுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9

நாகன்யா – 09   அன்று காலையும் வழக்கம்போலவே விடிந்தது. பறவைகளின் கீச்கீச்சும் சேவல்களின் கொக்கரிப்பும் ஆலய காண்டாமணி ஓசையின் கணீரென்ற நாதமும் தினம் தினம் நாகன்யா ரசிக்கும் விடயங்கள். மரங்களின் மறைவிலிருந்து மெதுவாய் எழும் சூரியக் கதிர்கள் அந்தக் காலை

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4

அத்தியாயம் – 04   பேய்கள் உலாப் போகும் நடுநிசி நேரம். நாகர்கோவில் ஊருக்கு வெளியேயிருந்த அந்த மயானமே கரும் போர்வை போர்த்தி அந்த நள்ளிரவு நேரத்திற்கு மேலும் அச்சம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நாய்களும் நரிகளும் போட்டி போட்டபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தன. 

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11

நாகன்யா – 11   வீட்டை அடைந்த நாகேஸ்வரனை தவிப்புடன் வரவேற்றார் தேவி.    “ஈஸ்வர் தம்பி என்ன சொல்லிச்சுங்க?”   “அவன் யார் எவன்னே தெரியாதவன்னு நேற்று அந்தக் கத்துக் கத்தினாய்.. இப்ப என்னடா என்றால் தூங்காம காத்திருந்து விசாரிக்கிறாய்..