அத்தியாயம் – 28
மனைவியின் நடவடிக்கை எல்லாம் தனது இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். கஷ்டமாக இருந்தது அரவிந்துக்கு. தான் செய்த காரியம் எவ்வளவு தப்பு என்று உரைத்தது. நியூகாசிலுக்கு வேலை விஷயமாக வந்தவன் மனதினுள் வருத்தப்பட்டான். அவனிடம் கோவித்துக் கொண்ட சித்தாரா தொலைப்பேசியைக் கூட எடுக்க முயற்சி செய்யவில்லை.
முதல் நாள் காலையில் ஊருக்குக் கிளம்பும்வரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கிளம்பவே மனம் இல்லாமல், அவனுக்குக் காபியைப் போட்டுக் கொண்டிருந்த மனைவியிடம் பேசிக் கொண்டே அவளை செல்லமாக சீண்டிக் கொண்டிருந்தான்.
டோஸ்ட்டரில் பிரட் போட்டு பட்டர் ஜாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சித்து. அவன் சரியாக சாப்பிட மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். அதனால் முடிந்த அளவு இலகுவான உணவை கிளம்பும் முன் அவனுக்குத் தந்து விடுவாள்.
“ச்சே எனக்கு இந்த ஊர் ஒட்டவே மாட்டேங்குது சித்து. உன்கிட்ட வாங்கின பணத்தை உங்க பாட்டிக்குத் திரும்ப தந்துட்டு, திருச்சி பக்கத்துல ஒரு சின்ன வீடு வாங்கிட்டு அங்கேயே அம்மா கூட போய் செட்டில் ஆகிடலாம். நீ, நான், வனி, அம்மா, உன் பாட்டி, பக்கத்துலையே என்னோட அக்கா தங்கச்சி அவங்க குடும்பம். ஒரு நாள் கிழமைனா சொந்தத்தோட கொண்டாடிட்டு சந்தோஷமா இருக்கலாம்”
பின்னர் தயங்கியவனாக கேட்டான்
“உனக்கு சம்மதமா”
தனது பாட்டியையும் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டதும், அத்தோடு அவருக்கு பணத்தைத் திரும்பித் தர வேண்டும் என்ற எண்ணத்துடனும் பேசிய அரவிந்தை அணைத்துக் கொண்டவள்
“உனக்கு என்ன ஆசையோ அதுதான் எனக்கும் ஆசை அரவிந்த். எனக்கு தெரிஞ்சு நீ நியாயமா ஆசைப் படுறவன். அதை கண்டிப்பா கடவுள் நிறைவேத்துவார்”
இத்துடன் நிறுத்தி இருக்கலாம் அவன் தான் ஆரம்பித்தான் “நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை” என்று மெதுவாக பாட
சித்தாரா “எந்தப் படத்துலங்க இந்த வஜனம்? யப்பா… தெரியாம என் பின்னாடி ஒருத்தன் பாட்டுப் பாடிட்டு வருவான்னு சொல்லிட்டேன். நீயும் போட்டிக்கு பாட்டுப் பாடியே என்னைக் கொல்லுற. இந்த மாதிரி பாட்டுப் பாடி என்னை பயமூற்துன நானும் ஸ்ராவனி அம்மா மாதிரி சீக்கிரமா போய்டுவேன்” என்று சிரித்துக் கொண்டே விளையாட்டுக்குச் சொன்னாள்.
கடைசி சில வார்த்தைகளில் ரத்தமென சிவந்தது அரவிந்தின் முகம். “ச்சே உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது? யார் கூட உன்னை கம்பர் பண்ணுற? உன்னை மனசுல உயர்ந்த இடத்துல வச்சுருக்கேன்…
ஆனா நீ சில சமயம் நடந்துக்குறதும் பேசுறதும் தராதரம் இல்லாதவங்களோட உன்னை ஒப்பிட்டுக்குறதும் எனக்கு ரொம்ப வருத்தத்தமா இருக்கு”
திட்டிவிட்டு பெட்டியை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்து விட்டான். தனக்கென காலையில் எழுந்து உணவு தயாரிக்கும் மனைவியைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
ஒரு முழு நாள் ஆனது அவனுக்குக் கோபம் குறைய, அதன் பின் அவன் போன் அடித்தபோது சித்து எடுக்கவில்லை. இரண்டு நாள் ட்ரிப் வந்தது இரண்டு யுகம் போலத் தெரிந்தது அரவிந்துக்கு.
யோசித்தான், ஷைலஜா விஷயத்தை ஒரு முறை அவளிடம் பேசி விடுவது நல்லது. பேசாமல் இருப்பதுதான் சித்துவுக்குக் ஆர்வத்தைத் தூண்டுகிறது. மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்று சொல்வதைப் போலத் தான் சித்துவிடம் தான் போட்ட நிபந்தனையும். அவள் குணத்திற்கு இதுவரை பொறுத்துக் கொண்டிருந்ததே அதிசயம். வீட்டுக்குப் போனவுடன் அவளிடம் பேசிவிடவேண்டும்.
பாவம் இது காலம் கடந்த ஒன்று என்பது அவனுக்குத் தெரியுமா?
வழக்கம் போல் அன்நோன் நம்பரில் இருந்து வந்த போனை அலட்சியம் செய்தான் அரவிந்த். இந்த சேல்ஸ் ஆட்களிடம் இருந்து வரும் போன் கால்கள் தாங்க முடியவில்லை. அதனால் சந்தேகமான எண்களில் இருந்து வரும் அழைப்புக்களை வேலையில் இருக்கும் போது எடுக்க மாட்டான்.
எரிச்சலுடன் போனை வைத்த சந்திரிகா கணவனிடம் சொன்னாள். “இந்த அரவிந்த் கிட்ட முக்கியமான விஷயத்தை சொல்லலாம்னு பார்த்தா ஒண்ணு சிக்னல் கிடைக்க மாட்டேங்குது கிடைக்கும் போது அவர் போனை எடுக்க மாட்டேங்கிறார். வாய்ஸ் மெசேஜ் கூட பார்க்கல போலிருக்கு. இருங்க சீக்கிரம் கூப்பிட சொல்லி டெக்ஸ்ட் மெசெஜ் கொடுத்துட்டு வரேன்”
அரவிந்த் மெசெஜ் படிக்க முடியாமல் சார்ஜ் போட மறந்ததால் அவனது செல் தூங்கி விட்டிருந்தது.
அரவிந்த் ஊருக்குச் சென்றதும் அன்று முழுவதும் உர்ரென்று இருந்தாள் சித்தாரா. அவளுக்கே தான் அவனை வார்த்தையால் சீண்டியது தப்பு என்று புரிந்தது.
என்ன செய்வது ஆர்வக்கோளாறு அவனது முதல் மனைவியைப் பற்றித் தெரிந்துக் கொள்ள. ராஜேஷ்குமார் க்ரைம் கதை படித்தாலும் கூட பத்து பக்கம் படித்து விட்டு முடிவைப் படிக்கும் அளவு பொறுமை உள்ளவள். இவ்வளவு நாள் அவன் வார்த்தைக்கு எப்படி கட்டுப் பட்டாள் என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். வீம்பாக ஒரு நாள் அவனிடம் இருந்து வந்த அழைப்பினை எடுக்கவில்லை. அதற்குள் அவன் மேல் இருந்த கோவம் மறைந்து விட்டிருந்தது.
‘இந்த அரவிந்தும் தான் திமிர் பண்ணாமல் என்கிட்ட சொன்னாதான் என்ன? கோவத்தை சாப்பாட்டு மேலையா காண்பிக்குறது, வீட்டுக்கு வரட்டும் கவனிச்சுக்குறேன்’
என்று திட்டிக் கொண்டிருந்தவள் மனமாற்றம் வேண்டி மாலுக்கு சந்திரிகாவுடனும் குழந்தைகளுடனும் சென்றாள்.
அங்கிருந்த கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்தனர். பின்னர் ஆளுக்கு ஒரு ஸ்வீட் பாப்கார்ன் பாக்கெட் ஒன்றினை வாங்கிக் கொறித்துக் கொண்டு அமர்ந்தனர். அப்போதுதான் அந்தப் பெண்மணி வந்தாள்.
பொன் நிறம், மேலே முகச்சாயம் வேறு பூசி இன்னமும் சிவந்திருந்தாள். கண்களில் அடர்த்தியாக மை, சீராக பூசப்பட்ட உதட்டுச் சாயம், மிக மிக நேர்த்தியானதாகவும் பார்த்தாலே உயர்ந்தது என்றும் சொல்லக் கூடிய உடை அவளது முட்டிக்கும் சிறிது முன்னரே முடிந்திருந்தது.
தந்தத்தைக் கொண்டு செய்ததைப் போன்ற கால்களில் பொன் நிறக் கொலுசினை ஒற்றைக் காலில் அணிந்திருந்தாள். பார்ட்டிகளுக்கு என்று உடைக்குப் பொருத்தமாக செய்யப் பட்ட பிரத்யேக செருப்பு. காதுகளிலும், கழுத்திலும், கையில் போட்டிருந்த கைக் கடிகாரத்தில் கூட வைரம் மின்னியது.
ஒயிலாக நடந்து அவர்களை நெருங்கியவள், “என்ன சித்தாரா….. அதுதானே உன் பேர்? எப்படி இருக்க?” என்றாள்.
ஒரு வினாடி அடையாளம் தெரியாமல் திகைத்த சித்தாரா,
“ஹே! நீதானே கடைல என்னோட பர்ஸத் திருடினவ. பார்க்க வசதியானவ மாதிரி இருக்க, கைல ஐபோன் வச்சுருக்க. ஏன் இப்படி ஒரு திருட்டு புத்தி உனக்கு?” பட படவென பொரிந்தாள்.
அலட்சியமாக சந்திரிகாவிடம் திரும்பிய புதியவள், “ நீங்க இவளோட பிரெண்டா? ஒரு சாதாரண பர்ஸ், உள்ள இருவது பவுண்ட் பணம், ஒரு ஓட்டை செல் போன். இதை எடுத்ததுக்கு என்னைப் பார்த்து திருடின்னு திட்டுறாளே…
என்னோட ஆறடி உயர அழகான கணவன், குட்டி பொண்ணு இவங்களோட சேர்த்து என் வாழ்க்கை சந்தோஷம் எல்லாத்தையும் திருடிகிட்ட இந்த சித்தாராவைப் பார்த்து நான் என்ன சொல்லுறது? கொள்ளைக்காரின்னா? நீங்களே சொல்லுங்க”