Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 27

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 27

அத்தியாயம் – 27

ன்னீருக்கு என்ன செய்வது என்று யோசிக்க சில வினாடிகள் தேவைப்பட்டது. கதிர் குடும்பத்தோடு திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்காக நின்றுக் கொண்டிருந்தார். சரியாக பேச முடியவில்லை.  குடும்ப விஷயத்தை தொழில் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அன்பான மனைவி சத்யாவிடம் சொல்லி யோசனையைக் கேட்கலாம்தான் ஆனால் அவர் பேசியபின் அவள் பேசுவது சுதாவிடமாகத்தான் இருக்கும். முழுதுமாக நாதன் செய்த வேலையைப் பற்றித் தெரியாமல் சுதாவிடம் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை அவர்.

அக்கா தங்கைகளிலே கொஞ்சம் விவரமானவர் சுதாதான். நாதனிடம் வாழ்க்கைப் பட்டு சொந்த பந்தங்களில் அடி பட்டு இந்த அளவு விவரம் வந்திருந்தது. அடுத்து சாந்தா இபோதுதான் தெளிய ஆரம்பித்திருக்கிறாள். மற்றவர்கள் அம்மா, கணவன், அக்கா தங்கை என்று தங்களுக்குள் அன்புச்சங்கிலியைப் போட்டுக் கொண்டு இருக்கும் பாசமலர்கள்.

அரவிந்திடம கூட நல்ல உலக அனுபவம் இருக்கிறது. குடும்பச் சுமை அவனுக்கு சீக்கிரம் அதனைத் தந்துவிட்டது போலும். இருந்தாலும் அவனும் அக்கா தங்கை அம்மா என்று உயிரை விடுகிறான்.

சித்தாரா….. சரி சித்தாராதான் சரியான ஆள். ஓரளவு விவரம் தெரியும். படபடவென பேசினாலும் எந்த சமயத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்று தெரியும். உணர்ச்சி வசமும் படுவாள் அதே சமயம் சிந்திக்கவும் தெரிந்தவள். மற்ற பெண்கள் என்றால் பிடிக்காத ரெண்டாம் தாரமாய் போக மாட்டேன் என்று போராடி திருமணத்தை நிறுத்தி இருப்பார்கள்.

அவளுக்கு இந்தக் கல்யாணம் திடீர் என்று முடிவானாலும் அதிர்ச்சியைப் பக்குவமாக ஜீரணித்துக் கொண்டு, அரவிந்திடமும் முகம் காட்டாமல், விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்ட அரவிந்தின் மனதையும் வென்று விட்டாள்.  அவளிடம் கேட்கலாம் என்று யோசித்து லண்டனுக்கு போன் செய்தார் பன்னீர்.

“அண்ணா முக்கியமான விஷயமா இருக்கும்னு நினைக்கிறேன். அதுனாலதான் நீங்களே போன் செய்துருக்கிங்க. கட் பண்ணுங்க நான் கால் பண்றேன்” சட்டென்று விஷயத்தை கிரகித்தாள் சித்தாரா.

 

உடனே போன் செய்தவளிடம் சுருக்கமாக சொன்னார். “நாதன் எதுக்காக அங்க போனார்ன்னு தெரியலம்மா. எனக்கும் என்ன நடக்குதுன்னு தெரியல”

சில வினாடிகள் மௌனம் “அண்ணா அந்த கம்பெனிக்கு நிறைய பேர் வராங்கன்னு சொல்லுறிங்க, அவங்க லெட்டர் ஏதாவது செராக்ஸ் எடுத்தா அதுல எப்படியாவது ஒரு காபிய சுட்டு எனக்கு ஸ்கேன் செஞ்சு மெயில் பண்ணிட்டு மிஸ்டு கால் தாங்க. நான் லெட்டரை படிச்சுட்டு உங்களை கூப்பிடுறேன். லெட்டரை சுட முடியுமா?”

“என்னம்மா இப்படி கேட்டுட்ட, நான் வாழ்க்கையை ஆரம்பச்சதே ஒண்ணாம் நம்பர் பஸ்ல பிக்பாக்கெட்டாத்தான். இப்ப பாரு உன் அண்ணனோட கை வரிசைய”

சித்தாரா சொன்னதைச் செய்தவர் அவள் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அவளும் தாமதம் செய்யாமல் உடனே பதில் தந்தாள்.

“அண்ணா இந்தக் கம்பெனி நூறு சதவிகிதம் டுபாக்கூர் தான். சம்பளம் பாருங்களேன். நம்பவே முடியாத அளவு இருக்கு. இந்த அளவு சம்பளம் தர அளவுக்கு நாதனுக்கு தகுதி இருக்கா? அதைக்  கண்டிப்பா நாம யோசிக்கணும். ஒரு மாசம் முன்பணம் கட்ட சொல்லுறது நெருடுது.

அப்பறம் எல்லாத்துக்கும் மேல நாம தொடர்பு கொள்ள கபில்ன்னு ஒருத்தரை சொல்லி இருக்காங்க. அவர் மெயில் பாருங்களேன் கம்பெனி மெயில்  இல்லை, யாஹு மெயில். இவ்வளவு பெரிய கம்பெனில கான்டாக்ட் பண்ண இந்த மாதிரி காமன் மெயில் ஐடி யூஸ் பண்ணா மாட்டாங்க. அதுனால தான் சொல்லுறேன் கன்பார்ம்டா என்னமோ பிராட் நடக்குது”.

“இனிமே நான் பாத்துக்குறேன் கவலைப்படாதே”

ஒரு பார்சலை தயார் செய்தவர், கம்பெனிக்கு சென்றார். “கபில் அப்படின்னு ஒருத்தருக்கு முக்கியமான பார்சல் வந்திருக்கு. அவர் கையெழுத்து வேணும்” என்று விடாப்பிடியாய் கபிலின் அறைக்குள் நுழைந்தார்.

 

“எங்க மேன் சைன் பண்ணனும்” என்று எம்ஆர் ராதா குரலில் கேள்வி கேட்ட நபரை கூர்ந்து கவனித்தார்.

பன்னீரை உறுத்துப் பார்த்த கபில், “நீ…… நீ……. பன்னீர் தானே!”

ஆமாம் என்று தலையசைத்தார் பன்னீர்.

வேகமாய் அறைக்கதவை சாத்திய கபில்  “ பன்னீரு நீ மாறவே இல்லடா… அப்படியே இருக்க. உனக்குக் கல்யாணம் ஆயிடச்சாமேடா, நம்ம கூட்டாளிங்க சொன்னாங்க”

“நான் மாறவே இல்ல. நீதான் ரொம்ப மாறிட்ட கபாலி. இதென்னடா பேர் கபில்?”

“வயத்துப் பொழப்புடா, வெளியதாண்டா கபில், உள்ள அதே கபாலி தான்”.

“இதென்னடா வேஷம்”

“தொழில் தள்ளாடிடுச்சுடா. எவனும் பர்ஸ்ல பணம் வச்சிருக்க மாட்டிங்குறாங்க. பூரா கிரெடிட் கார்ட்டா  வச்சுட்டு கடன்காரங்களா சுத்துராணுங்க. உயிரைப் பணயம் வச்சு வீட்டுக்குள்ள போய் பீரோவை உடைச்சா, நகை  எல்லாம் கவரிங்.

ஐயோ… அதுவும்  காலேஜ் படிக்குற பசங்க இருக்குற வீட்டுல இன்னும் மோசம். காலேஜும், பசங்களும் சேர்ந்து வீட்டையே சூறையாடிடுறாணுங்க.

மெட்ராஸ்ல அவனவன் பிளாட் ஒண்ணு வாங்கிட்டு அறுவது வயசு வரை பேங்க்ல லோன் கட்டிட்டு இருக்கானுங்க. பேசாம பேங்க் ஒண்ணு ஆரம்பிச்சுடலாமான்னு  பார்த்தேன் முடியல. நானெல்லாம் என்ன உன்னை மாதிரி திருந்துற ஜாதியா? அதுனால இந்தக் கும்பல் கூட சேர்ந்துட்டேன். ஏதோ பிரச்சனை இல்லாம போகுது.”

 

“டேய் அவனவன் வீடு வாசலை வித்துக்  காசைக் கொண்டு வந்து கொட்டுறாண்டா. பாவம்டா”

“நான் என்னடா செய்வேன்? நானே இங்க ஒரு எம்ப்ளாயி அவ்வளவுதான்.ஆனா ஒண்ணுடா ஒரே ஒரு ஈமெயிலை நம்பி யோசிக்க கூட அறிவில்லாம பணத்தைக் கொட்டுற இவனுங்க இங்க இல்லைன்னா வேற எங்கேயாவது கண்டிப்பா ஏமாறத்தான் போறாங்க. உனக்கேண்டா ரத்தம் கொதிக்குது? இந்த மாங்கா மடையங்கல்ல யாரு உன் சொந்தக்காரன்?”

“ என்னோட சகலை. குணநாதன்னு பேரு. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி பணம் கட்டினார்”

“அந்த அல்டாப்பா? என்னமோ மலையே புரட்டப் போறேன்னு கதை அளந்துட்டு இருந்தான். வேணும்னா ஒண்ணு செய்யுறேன் அவன் பணத்தை மட்டும் திருப்பித் தந்துடுறேன். இப்ப கையோட வாங்கிட்டு போயிடு. ஏன்னா எப்ப இந்த இடத்தைக் காலி பண்ணுவோம்னு எனக்கே தெரியாது.”

“ஏண்டா இனிமேலாவது திருந்தக் கூடாது. என்கிட்ட வாடா கபாலி. உலகத்துல ஏமாத்தாம பொழைக்க ஏகப்பட்ட வழி இருக்கு ”

“இங்க பாரு, நீ திருந்திட்ட சரி. அதுக்காக எல்லாரையும் மாத்த முயற்சி செய்யாத. நானெல்லாம் திருந்த முடியாத ஜாதி. இப்ப திருந்துனேன், என்னை  இவனுங்க உயிரோட விட மாட்டானுங்க. உடம்பு தளர்ந்து போறப்ப வரேன். அப்ப என்னைப்  பார்த்துக்கோ”

“ரொம்ப நன்றிடா கபாலி. நீ எவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்தப் பணத்தைத் திருப்பித் தரேன்னு எனக்குத் தெரியும்”

கையோடு  பணத்தை ஒரு பையில் வைத்துத் தந்த கபாலி “ இந்தாடா…. இது உன் கல்யாணத்துக்கு நான் தர சீதனம். அண்ணிய ரொம்ப கேட்டேன்னு சொல்லுடா. என்னைக்காவது ஒரு நாள் உன்னை சர்ப்ரைஸா உன்னைப் பார்க்க வருவேன்”.

 

“நீங்க எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு வரலாம் கபாலிக்கபில். எங்க வீட்டுக் கதவு உனக்காகத்  திறந்தே இருக்கும்” கிளம்பினார் பன்னீர்.

தான் எதிர்பாராமல் பணம் சுலபமாக கையில் வந்ததை அவரால் நம்பவே முடியவில்லை. சித்தாராவிடம் சொன்னார்.

“சரிண்ணா, இப்ப என்ன செய்யப் போறீங்க?”

“கதிர் கூட பேசிட்டு, இந்தப் பணத்தை நாதன் வீட்டுல போய் தந்துட்டு வரலாம்னு நினைக்குறேன்”

“ஐயோ அண்ணா அப்பறம் அந்த ஆள் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நீங்கதான் கெடுத்துட்டிங்கன்னு உங்களைத் திட்டுவார்”

“பரவல்லம்மா, உண்மை தெரிஞ்சா சரியாய்டும்”

“அதுக்கு இன்னும் எவ்வளவு நாளாகுமோ, அதை அவர் நம்புவாரோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனா அதுவரை சுதாண்ணிய திட்டியே கொன்னுடுவார். பேசாம சுதாண்ணிய வீட்டுக்கு வர சொல்லி அவங்க கிட்ட நடந்ததை சொல்லுங்க. அவங்க வாழ்க்கையைப் பத்தி அவங்களே முடிவெடுக்கட்டும்”

“என்ன சொல்லிம்மா அவங்கள வீட்டுக்குக் கூப்பிடுறது? நாதன் அனுப்ப மாட்டாரே”

“காரணமா கிடைக்காது? சாரிகா டெலிவரி சமயம் அதை சொல்லி கூப்பிடலாம். இல்லேன்னா எங்க கல்யாணத்துக்கு அரவிந்தை வரவழைக்க இவங்க சொன்ன அதே பொய், அதுதான் அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி கூப்பிடுங்க”

அதே முறையைக் கையாண்ட பன்னீரும் கதிரும் சுதாவை வரவழைத்தார்கள்.

“கதிர், ஆதி அப்பா ஏதோ அமெரிக்கால ப்ளைட் கம்பெனில வேலை கிடைச்சுருக்குன்னு தலைகீழாத்தான் நடக்குறார். என் மாமியாரும் பையனைத் தாங்கோ தாங்குன்னு தாங்குறாங்க. மூணு வேலையும் பீட்சா, பர்கர், சூப் இப்படிதான் சாப்பிடுறார். தினமும் கோட் தான் போட்டுக்குறார். கேட்டா அமெரிக்க வாழ்க்கைக்குப் பழகுறாராம். இனிமே கடை எதுக்குன்னு, கடையை விக்க விலை பேசி முடிச்சுட்டார். இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ? எனக்கு ஒண்ணுமே புரியல போ.” விவரம் புரியாமல் புலம்பிய சுதாவைப் பார்த்து வருத்தப்படத்தான் முடிந்தது காத்திருக்கும் பன்னீருக்கும்.

மெதுவாக நாதன் வீட்டுக்குத் தெரியாமல் பணம் கட்டி ஏமாந்த விஷயத்தை சுதாவுக்கு சொன்னார்கள். கடை விற்கும் விஷயம் முன்னாடியே நடந்திருக்கும் அதனை இப்போதுதான் வீட்டுக்குத் தெரியப் படுத்துகிறார் என்ற அனுமானத்தையும் சொன்னார்கள். அனைத்தையும் கேட்டு அதிர்ந்து போனாள் சுதா.

கலங்கி நின்றவளிடம் “சுதா கவலைப் படாதே, உன் பணம் சேபா இருக்கு. ஊருக்குப் போறப்ப மறக்காம எடுத்துக்கோ”

“என்ன கதிர் இவ்வளவு விஷயம் நடந்திருக்கு நான் பாட்டுக்கு கிணத்துத் தவளையா இருந்திருக்கேன்” என்றவள் இரண்டு நாள் அமைதியாக இருந்தாள். நிறைய சிந்தித்தாள். ஒரு முடிவுக்கு வந்தாள்.

“பன்னீர் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல. ஆனா இந்தப் பணத்தை சித்தாராவுக்கும் அவங்க பாட்டிக்கும் திருப்பித் தந்திடுங்க. இது அவங்களை ஏமாத்தி வாங்கின பணம். என் வீட்டுக்காரர், என் நாத்தனார் கல்யாணம், வீடு வித்த பணத்துல பங்கு இப்படி நிறையா எங்க அம்மா வீட்டுல இருந்து புடுங்கி இருக்கார்.

சித்தாரா பாட்டி கிட்ட வாங்குனது அவர் செஞ்ச தப்புலையே மாபெரும் தப்பு. இப்படி அடுத்தவங்க வயிறை ஏரிய வச்சு வாங்கின பணம் எப்படி நம்மளை நல்லா இருக்க வைக்கும்? அவர் கண்டிப்பா இந்தக் கஷ்டத்தை அனுபவிக்கணும்” முடிவை சொன்னவளை ஆச்சிரியத்தோடு பார்த்தார்கள் ஆண்கள் இருவரும்.

“கதிர் ஒரு உதவி செய்யுறியா? எனக்கு ஒரு வேலை மட்டும் ஏற்பாடு செஞ்சுத் தா. இதுதான் நான் உன்கிட்ட கேட்டுக்குறது”

மின்னல் வேகத்தில் காரியங்கள் நடந்தேறின. சித்தாராவின் பாட்டியிடம் பணத்தைத் தந்தார்கள். சித்தாரா அதில் ஒரு பகுதியை எடுத்து எண்ணூர் அருகில் இருந்த இடத்துக்கு முன்பணம் கட்டி சுதாவின் பேரில் பதிவு செய்தாள்.

“அண்ணி… இப்ப அரவிந்துக்கு கடன் ரொம்ப இருக்கு. அதுனால  இந்தப் பணத்தை வச்சு அவர் கடனை அடைச்சுடுறேன். ஆனா, உங்க நல்ல மனசுக்கு பதிலுக்கு இந்த இடத்தை வச்சுக்கோங்க. கொஞ்சநாள்ல இந்த நிலம் மதிப்பு ஏறி இருக்கும். உங்களுக்கு உதவியா இருக்கும்”

சம்மதித்த சுதா “சித்தாரா முன்பணம் மட்டும் போதும். மாசத்தவணை நானே சம்பளத்துல இருந்து கட்டிக்குறேன்” என்று சொல்ல சித்தாராவும் அதுக்கு சம்மதித்தாள். இது எதுவும் நாதனுக்குத் தெரியாமலேயே நடந்தது.

நாதனுக்கு தான் ஏமாற்றப் பட்டது தெரிந்தபோது  தாங்க முடியாத அவமானம். பணம் இழந்தது வேறு ஆதங்கம். சுதா வேறு அவரைப் பார்க்கும் பார்வையே அவரை பயமூற்த்துவதாக இருந்தது. தங்கை செல்வியின் உதவியோடு கடையையாவது மீட்போம் என்றெண்ணி அவளை அழைத்தவருக்கு மற்றொரு அதிர்ச்சி

“அண்ணே, பணம் கட்டுறதுக்கு முன்னாடி என்னை ஒரு வார்த்தை கேட்டுருக்கக் கூடாது. உன் மாப்பிள்ளை இருக்காரே அவருக்கு வேலை கம்ப்யூட்டர் கம்பெனில இல்ல. ஏ.எஸ்.டி.ஏன்னா இங்க நம்ம ஊர் நில்க்ரிஸ், ஸ்பென்சர் மாதிரி கடை. அதுல வேலை பாக்குறாரு”

“அடப்பாவி மளிகைக் கடைல வேலை பாக்குறவனா? இங்க வந்து அவ்வளவு பந்தா பண்ணான்? ஏம்மா, என்னமோ அவனுக்கு பிரமோஷன் வந்துச்சுன்னு சொன்ன?”

“ஆமா இப்பத்தான் செல்ப் அடுக்குற வேலைல இருந்து டில்ல உட்கார்ந்து பில் போடுற வேலை கிடைச்சிருக்கு “

“அப்ப நீ வேலை பாக்குறது”

“அதே கடைல சிப்ஸ் அடுக்குற செல்ப்ல வேலை பாக்குறேன்” என்று சொல்லி அவர் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தாள்.

“அரவிந்த் அவனோட புதுப் பொண்டாட்டியோட கடைக்கு வந்திருந்தான். என்னைப் பார்த்தான். எனக்கு அவமானமா போச்சு. ஆனா அவன் கண்டுகிட்ட மாதிரி காண்பிச்சுக்கல. அப்பறம் அவன் இந்தக் கடைக்கே வரதில்ல.

அவன் ரொம்ப நல்லவண்ணா. எனக்கு அவனைக் கல்யாணம் பண்ணி வைக்க அண்ணிக்கு  மனசில்ல. அதுனால தான் நீயும் சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிச்சு இந்தப் பொறம்போக்குக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டிங்க. இந்த ஆள் என்னடான்னா காசு காசுன்னு பேயா பறக்குறான். ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் என்னை வேலை பார்த்து பணம் கொண்டு வர சொல்லுறான்.

அரவிந்த்தோட புதுப் பொண்டாட்டியப் பார்த்தப்ப எனக்கு என்ன கோவம் வந்தது தெரியுமா? பக்கத்துல  இருக்குற ஷெல்பைத்  தூக்கி அவ மண்டைல போடலாம் போல இருந்தது. என் நல்ல வாழ்க்கை கெட்டதே உன்னாலதான்”

பயந்து போனார் நாதன் அவர் தங்கைக்கு அவரைப் போலவே குணம். அங்கு  சித்தாரவிடம் ஏதாவது தகராறு பண்ணி விடக் கூடாதே.

“அவ கிடக்குறாம்மா. என்ன இருந்தாலும் அவ ரெண்டாந்தாரமாத்தான் போயிருக்கா. நீ அப்படி இல்ல. இந்த அரவிந்த் பயலையும் லேசா நெனச்சுடாதே அவனுக்கிருக்குற கடனை அடைக்க பொண்டாட்டிய வேலைக்கு போய் பணம் கொண்டு வர சொல்லுறானாம்.

அவளோட மெட்ராஸ் வீட்டை வேற இவனுங்க குடும்பமே சேர்ந்து வளைச்சு போட்டாச்சு. புதுசா ஒரு ரவுடி வேற அந்தக் குடும்பத்தோட வந்து சேர்ந்திருக்கான். நீ தப்பிச்சது நம்ம செஞ்ச புண்ணியம். அரவிந்த்  கூட சகவாசமே  நமக்கு வேணாம்”

“அப்படியா” என்று சமாதானம் ஆனாள் செல்வி.

பின்னர் சுதாரித்துக் கொண்டவளாக “நீ எப்படி கடைய என் அனுமதி இல்லாம விக்கலாம்? அதுல சட்டப்படி எனக்கும் பங்கு இருக்கு. சுதாண்ணி அம்மா வீட்டுல வீட்டை வித்தப்ப உன்னோட பங்கை சண்டை பிடிச்சு வாங்கிட்டு வந்தேல்ல…  இப்ப கடைய வித்த பணத்தை சரிபாதி எனக்கு தரல அப்பறம் நான் வக்கீலைப் பார்க்க வேண்டி வரும்” என்று சொல்லி நாதனின் வெந்து நொந்த புண்ணில் பலமாக வேலைப் பாய்ச்சினாள்.

வளர்த்த கடா முட்ட வந்தா? வச்ச செடி முள்ளானால்? என்ன செய்வார் நாதன். இப்போதைக்கு வாயை தைத்துக் கொண்டார்.

அடுத்து அவர் கனவிலும் நினைக்காத காரியங்கள் நடந்தன. அவரது கடையை விலைக்கு வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான் அவரது விரோதி பன்னீர். கடையைத் தனக்குத் தந்துவிடுமாறும், கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைத்து விடுவதாகவும் தனக்கு சிபாரிசு செய்யுமாறு  சுதாவிடம் சொல்லிப் பார்த்தார். எங்கே பன்னீர் அவர் பேச்சைக் கேட்டாலும் இந்த சுதா விடமாட்டாள் போலிருக்கிறது.

“இங்க பாருங்க அவனைத் திட்டிட்டு உங்களுக்காக அம்மா வீட்டு உறவையே முறிச்சுட்டு வந்திருக்கேன். இனிமே அந்த பன்னீர்கிட்ட ஈன்னு இளிச்சுட்டு உங்களுக்காக உதவி கேட்க முடியாது”

“அப்பறம் ஏண்டி அவன் வாங்கி இருக்குற நம்ம கடைக்கு மட்டும் வேலைக்கு போற? நீ வேலை பாத்து கொண்டு வர பணத்துல சாப்பிட நான் ஒண்ணும் மானம் கேட்டவன் இல்ல”

 

“அப்ப நீங்க இனிமே வீட்டுல சாப்பிட வேண்டாம்”

“என்னது?”

“ பன்னீர் உங்களைத் தானே வொர்கிங் பார்ட்னரா சேர சொன்னான். தந்தா கடைய முழுசா எனக்குத்தான்னு திமிரா பேசிட்டு நீங்கதான் வெட்டி கௌரவம் பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லிட்டிங்க. அதுனாலதான் நான் அந்த வேலையை எடுத்துகிட்டேன். நான் கண்டிப்பா  கடைக்கு வேலைக்குப் போவேன். உங்களால முடிஞ்சதைப் பார்த்துக்கோங்க”

என்று சொல்லி அவரின் வாயை அடைத்து விட்டாள்.

நாதன்  சித்தாராவிடம் ஏமாற்றிய பணம் அவளிடமே சென்று சேர்ந்து விட்டதையோ, பதிலுக்கு தன் மனைவி பெயரில் ஒரு மனை சென்னையில் வாங்கி அவளது சம்பளத்தில் பிடித்தம் செய்து பன்னீர் மாதாமாதம் தவணை செலுத்தி வருவதையோ, சுதாவுக்கே தெரியாமல் பன்னீர் அவளை வொர்கிங் பார்ட்னராய் மாற்றிக் கடையை அவள் தானே கவனித்துக் கொள்ளும் அளவுக்குப்  பயிற்சி தந்து வருவதையோ தெரியாமல் தனது உலகத்திலேயே உழன்று கொண்டிருந்தார் நாதன்.

இப்போது மதுரையில் நாதன் கையில் இருந்து பன்னீர் விலைக்கு வாங்கிய கடையில் எல்லாமே  சுதாதான். தினமும் ஸ்டாக் எடுப்பது, கணக்கினை ஒப்புவிப்பது என்று நாணயமாக நடந்து வருகிறாள்.

சென்னையில் வீட்டில் மனைவியிடம் கனிவாய் சொன்னார் பன்னீர்

“சத்யா உங்க அக்காவ வேலைக்காரியாக்கிட்டேன்னு நினைக்காதே. சரியான சமயத்துல அவங்களுக்கே அந்தக் கடையைத் திருப்பித் தந்துடலாம்”

மதுரையில் அதே சமயம் நாகராஜனிடம் இருந்து நாதனுக்கு போன் வந்தது

“கவலைப்படாதே நாதா. ஒரே ஒரு லட்சத்தை மட்டும் தேத்திட்டு வா,  மடிப்பாக்கத்துல  ட்ரேடிங் பத்தி சொல்லித் தராங்களாம். அதுல இருக்குற சீக்ரெட்ஸ்  கத்துகிட்டு ட்ரேட் பண்ணா ஒரே மாசத்துல முதல்ல விட்ட பணத்தையும் சேர்த்து  ரெண்டு மடங்கா சம்பாதிச்சுடலாம். என்ன சொல்லுற?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30

அத்தியாயம் – 30   கையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும் நேரம். ஊரில் இருந்து நேரம் கெட்ட

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’

அத்தியாயம் – 6 ஆத்தங்கரைக் காற்று சிலிசிலுக்க, பாதையின் இருமருங்கும் நந்தவனமாய் மாற்றியிருந்த பூக்காட்டை ரசித்தபடி தனது புது ஸ்கோடாவை செலுத்திக் கொண்டிருந்தான் ரஞ்சன். இளம் தொழிலதிபன். மதுரையிலிருக்கும் பணக்காரக் குடும்பத்தில் ஒருவன். அவனது சொந்தக் கம்பனியின் மூலம் மாம்பழக் கூழ்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10

“மாமியார் வீட்டுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி அம்மாவக் கும்பிட்டுக்கோ” பக்கத்து வீட்டு அவ்வா பார்வதியிடம் சொன்னார். சிவகாமியின் மறைவால் ஒரு வருடம் தள்ளிப் போயிருந்த திருமணம் அப்போதுதான் நடந்திருந்தது. கண்ணீருடன் படமாயிருந்த தாயை வணங்கிக் கிளம்பினாள் பார்வதி. கிளம்பும்போது ஒரு கேவல் எழுந்தது