Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 26

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 26

அத்தியாயம் -26

 

பாசிப்பருப்பு பச்சை நிற சேலையில் மடிப்பினை சரிபடுத்தி பின் செய்த சுதா, குட்டிக்யூரா  பவுடரை கர்சீப்பில் தெளித்து  லேசாக முகத்தில் ஒற்றிக் கொண்டாள். ஐடெக்ஸ் ஸ்டிக்கரை எடுத்து நெற்றியில் ஒட்டிக்  கொண்டாள்.

“சரித்த நான் கிளம்புறேன். நீங்க பாட்டுக்கு நான் கிளம்பினதும் கதவைப் பூட்டிட்டு, பக்கத்து வீட்டம்மா கூட பொரணி பேச போயிடாதிங்க. உங்க பையன காலேல இருந்து ஆளையே காணோம். நான் கிளம்பினதும் வீட்டுக்கு வருவாரு, சாப்பாடு போட்டு உடனே கடைக்கு பத்தி விடுங்க. சாயந்தரம் ஆதி வந்ததும் சாப்பிட சக்கரவள்ளிக் கிழங்கை வேக வச்சுக்  கொடுத்துடுங்க. அப்பறம் அவன் டியூஷன் போயிட்டு வரட்டும். ஏழு மணிக்கு நான் வந்து டிபன் செய்யுறேன்”

 

உள்ளே கடுப்பாக இருந்தாலும் மறைத்துக் கொண்டு மருமகளிடம் “சரி சரி”  என்றார் நாதன் குடியிருந்த கோவில்.

வாயைத் திறந்து பேச முடியுமா? தர்ச்சமயம் குடும்பத்துக்கே படியளக்கும் தெய்வமாயிற்றே.

சுதா சொன்னதைப் போலவே அவள் தலை மறைந்து ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தார் நாதன்.

“மகராணி கலெக்டர் உத்யோகத்துக்குக் கிளம்பிட்டாளாக்கும்……..  எனக்கு நாலு இட்லி எடுத்து வைம்மா  பசி உயிர் போகுது”

ஆறு இட்டிலியாய்  வைத்துத்  தட்டைப்  பையனிடம் தந்தவர் தனது ஆதங்கத்தைக் கொட்ட ஆரம்பித்தார்

“உனக்குத் தேவையாடா இதெல்லாம்? எப்படி ராஜா மாதிரி இருந்தவன் இப்படி கள்ளனாட்டம் சொந்த வீட்டுல வந்து சாப்பிட்டுட்டு இருக்க.

உன்னை கடைக்கு பத்தி விட சொல்லிட்டு போயிருக்காடா உன் பொண்டாட்டி.

கழுதையை செவுளுல ஒரு அறை விட்டு வீட்டுல உட்கார வைடா. அப்பறம் நீ போய் கடைல உட்காரு. எவன் என்ன செயுறான்னு பாக்குறேன்” என்றார் ஆவேசமாய்.

“க்கும்…. நான் கடைல உட்கார்ந்தா அப்பறம் நீதான் பார்க்கணும். பார்க்க நான் இருந்தாத்தானே. பேசாம போ கிழவி. உன் பேச்சைக் கேட்டு மேல் பூரா புண்ணானதுதான் மிச்சம்” கடுப்பாய் சொன்னார்.

“ஆமாண்டா நான்தான் உன்னை பணத்தைக் கட்டி ஏமாந்து போகச் சொன்னேன். இருக்குற கடையையும் தொலைச்சுபுட்டு வந்து நிக்குற உன்னை என்ன செய்யுறது? இப்ப உம் பொழப்பு மட்டுமில்லாம எம் பொழப்புமில்ல சீப்படுது  ”

 

ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார் அந்த அம்மா.

தினமும் கேட்கிற பாட்டாதலால் கண்டு கொள்ளாமல் தட்டில் இருக்கும் இட்லியிலே தன் முழுக்  கவனமும் செலுத்தினார் நாதன்.

உங்களுக்குத் தெரியாது மக்களே, மத்த ஆளுங்களா இருந்திருந்தா

 

அவங்க அழுத கண்ணீரு ஆறாப்  பெருகி  ஆன  குளிப்பாட்ட  

குளமாப்   பெருகி  குதிர குளிப்பாட்ட   

ஏரியாப் பெருகி எருது குளிப்பாட்ட

பள்ளமாப் பெருகி பன்னி குளிப்பாட்ட

 

இப்படி தல்லாகுளத்துத்  தண்ணீர்ப் பஞ்சமே தீர்ந்திருக்கும். நம்ம நாதனா இருக்குறதால அம்புட்டு அழுகையையும் அடக்கி வச்சுகிட்டு இருக்கார். இத்தனைக்கும் காரணம் ……………

 

ரவிந்த் வெளிநாடு போனதும் அவனுக்கு கிடைத்த கௌரவத்தை எண்ணி ஒரே காந்தல் நாதனுக்கு. அதுக்குத் தகுந்தார்ப்போல் தங்கை செல்வியின் கணவன் வெளிநாடு வெளிநாடு என்று அலப்பரை விட்டதும். தத்தி தத்தி பிளஸ் டூ படித்த தங்கை செல்வி

 

“அண்ணா உன் கூட பேச நேரமே இல்ல. நானும் இப்ப அவர் கம்பெனிலயே வேலைக்குப் போறேன்” என்று சொல்லி பத்து செகண்டில் போனை வைப்பதும் நாதனை வெறி கொள்ளச் செய்தன. அவரது சீட்டாட்ட நண்பர் நாகராஜனிடம் விவரம் கேட்டார்.

 

நாகராஜன் நாதனுடன் டிகிரி படித்து விட்டு சென்னையில் பல தொழில்கள் செய்து வருவதாக கேள்வி. இப்போது வெளிநாட்டுக்குப் போகப்போகிறாராம். இனிமேல் தான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கப் போவதாக ரொம்ப நாட்களாக  சொல்லி வருகிறார்.

 

தனது ஆதங்கத்தைக் கொட்ட நல்ல ஆளாக நாதன் தேர்ந்தெடுத்தது நாகராஜனைத் தான்.

 

“நாகராஜா, என் தங்கச்சி பிளஸ் டூ கூட அட்டெம்ப்ட் எழுதிதான் பாஸ் பண்ணா. அவ என்னடான்னா  மாப்பிள்ளை வேலை செய்யுற என்னமோ யே.எஸ்.டி.யே கம்பெனில வேலை  பாக்குறாளாம். எப்படிடா முடியுது?”

 

“அட எல்லாம் சாப்ட்வேர்டா. நம்ம ஊர்லதான் பிஈ கொண்டா , எம்ஈ கொண்டா , எம்சிஏ கொண்டான்னு உயிர எடுக்குறாங்க. அங்கெல்லாம் அப்படி இல்லடா. யாரு வேணும்னாலும் எந்த பீல்ட்டுல  வேணும்னாலும் நுழையலாம்”

 

பஜ்ஜியைக் கடித்து டீயைக் குடித்தவர் தொடர்ந்தார்

 

“ நம்ம மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ், ஆப்பிள் ஸ்டீவ் எல்லாரும் காலேஜ் கூட முடிக்கல. அங்க திறமைக்குத் தாண்டா மதிப்பு. அதுனாலதான் நானும் கோர்ஸ் ஏதாவது படிச்சுட்டு வெளிநாடு போயிடலாம்னு  பாக்குறேன்.

அங்க போய் நான் செய்யப் போற சாதனைகளைப் பார்த்துட்டு திறமையானவனுக்கு மரியாதை தராம ஒரு டிகிரி காகிதத்துக்கு மரியாதை தரோமேன்னு இந்தியாவே வருத்தப்படணும். வருத்தப் பட வைப்பேன்” ஆவேசமாய் கையில் இருந்த டீ கிளாஸ் மேல் சத்தியம் செய்தார் நாகராஜன்.

 

நாதனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. “டேய் அது என்ன கோர்ஸ்ன்னு சொல்லுடா நானும் படிச்சுட்டு உன்கூட வரேன்”

 

நாகராஜன் ரகசியமாக சொன்னார்.

 

“இப்பத் தான் புதுசா வந்துகிட்டு இருக்குற சாப்ட்வேர்  அது. அதுனால கத்துக்  கொடுக்க பீஸ் ரொம்ப அதிகம். நாம அதைக் கத்துக்கிட்டா ரிலீஸ் பண்ணுறப்ப உலகத்துல அதைப் பத்தி தெரிஞ்ச சில நூறு  பேருல நாமளும் ஒருத்தர். அதை சொல்லித்தரதுக்கு, இன்ஸ்டால் பண்ண, ப்ரோக்ராம் எழுத  இப்படி எல்லா வேலைக்கும் ஆளுங்க கிடைக்காம லட்சக்கணக்குல பணத்தைக் கொட்டிக் கொடுக்க தயாரா இருப்பாங்க. நம்ம வேணும்னா அமெரிக்கால கிடைக்குற  வேலைகளை மட்டும் எடுத்துக்கலாம்”

 

தனக்குத் தெரிந்ததை சொன்னார். தப்பாக இருந்தாலும் கண்டு பிடிக்கும் அளவு நாதனுக்குத் திறமை இல்லை என்பது நாகராஜனுக்குத்  தெரியாதா என்ன?

 

மயங்கிப் போன நாதன் சித்தாராவின் பாட்டியிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தைக் கட்டினார். அரவிந்தின் கல்யாண சமயத்தில் படித்துக் கொண்டிருந்தவர் அந்தத் தெம்பில் தான் சத்யாவின் பெண் பார்க்கும் வைபவத்தின் போது நடந்த கலாட்டாவில் சுதாவை தங்கத்தால் இழைப்பதாக சபதம் செய்தார்.

 

ஆனால் அந்த சென்டரில் அவரைப் போல நடுத்தர வயதுடையவர்கள் நிறைய பேர் படிக்க வந்திருந்தனர். நன்றாகப் படிப்பவருக்குத் தான் விசா என்று கம்ப்யூட்டர் நிறுவனம் சொல்லிவிட, நாதனுக்கோ அதில் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. வீட்டில் குமுதம் ஆனந்த விகடனில் கூட ரெண்டு வரியில் இருக்கும் ஜோக்ஸ் மட்டும் தான் படிப்பார். இப்போது பக்கம் பக்கமா   ப்ரோக்ராம் எழுத சொன்னா எப்படி? அல்கோரிதம்,  கான்செப்ட் என்று புரியாத மொழி பேசி பயப்படுத்தினார்கள். கஷ்டப்பட்டு டப்பா தட்டினார்.

 

வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருந்தது. நம்ம பணமா நஷ்டம்? சித்தாராவோடதுதானே…. இந்த கோர்ஸ்  சனியனை விட்டுட்டு நம்ம கடைக்கே போகலாம்ன்னு கூட ரெண்டு மூணு தடவை நினைச்சார். நாகராஜனின் தூண்டுதலால் வெளியில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு தட்டுத் தடுமாறி நேர்முகத் தேர்வுக்குப் போய் வந்தார். இதன் நடுவே அவருக்கு ஒரு மெயிலில் அப்பாயின்மென்ட்  லெட்டர் வந்தது . அதன் சாராம்சம் இதுதான்.

 

‘தாங்கள் எங்களது —– ஏர்லைனில் சீப் ஆபிசராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

தங்களது சம்பளம் மாதம் $20,199.76 மட்டுமே. இதனை அமெரிக்க டாலர் மட்டுமின்றி யூரோ, பவுண்ட் அல்லது வேறு கரன்சியில் வேண்டுமென்றால் முன்பே தெரிவிக்க வேண்டுகிறோம். உங்கள் உணவு, பதவிக்குத் தக்கபடி தங்குவதற்கு பிளாட்  மற்றும் மருத்துவக் காப்பீடு நிறுவனத்தில் வழங்கப்படும். அதைத் தவிர தாங்கள் அமெரிக்கா வருவதற்கு பயணச்சீட்டு மற்றும் இதர செலவுக்கு  $5000 மட்டுமே வழங்கப்படும்.  வருடத்திற்கு 30  நாள் மட்டுமே விடுமுறை தரப்படும். வேலை நேரம் வாரம் 40 மணி. இதற்கு சம்மதித்தால் மட்டுமே வேலையில் சேர முடியும்.

 

இந்தக் கடிதத்தேதி இட்ட ஒரு வாரத்திற்குள் வேலையில் சேருவதாக எங்களது இந்தியக் கிளையில் நேரில் சென்று கையெழுத்திட்டு  உறுதி தர வேண்டும். தராவிட்டால் இந்த வேலை காத்திருப்புப் பட்டியலில் உள்ள அடுத்தவருக்குச் சென்று விடும்.

 

 

எங்களது இந்தியக் கிளையின் விவரம் பின் வருமாறு:

 

————

——-

திருவல்லிக்கேணி

சென்னை.

 

 

பி.கு: இந்தியக் கிளைக்கு செல்லும் போது தங்களது விசாவிற்கும், மற்ற செலவுகளுக்கும் ஒரு  மாத சம்பளப் பணத்தை அட்வான்ஸ் பணமாக செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள். ரசீதைக்  காட்டினால்  மட்டுமே முதல் மாத சம்பளத்துடன் நீங்கள் கட்டிய முன்பணம் திருப்பித் தரப்படும்”

 

 

 

சொந்தக் காரவங்க விசேஷத்துக்கு போய் ரெண்டு நாள் டேரா போட்டு வந்தவர் அப்போதுதான் அந்தக் கடிதத்தைப் படித்திருந்தார். தனது தலைக்கு மேல் கண்ணுக்குத் தெரியாத கிரீடம் வந்து அமர்ந்து கொண்டதைப் போல மகிழ்ந்தவர் பரபரவென்று தேதியைப் பார்த்தார்.

 

‘சொக்கா!!!! வேலைல சேர இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு’.

 

அவசர அவசரமாக நாகராஜனிடம் கூட சொல்லாமல்  பணத்தைப் புரட்டிக் கொண்டு அந்த விலாசத்தைத் தேடி ஓடினார். அங்கே அவருக்கு முன்னே அவரது நண்பர் நாகராஜ் நின்றுக் கொண்டிருக்க நண்பர்கள் இருவரும் ஒரு அசட்டுச் சிரிப்பைப் பரிமாறிக் கொண்டனர்.

 

“ஏண்டா நான் தான் ஊருல இருந்து பணம் கொண்டு வரணும். சென்னைல  இருக்க நீ முன்னாடியே வந்திருக்கலாம்ல”

 

“நான் டெல்லி போயிருந்தேண்டா. நேத்துத்தான் வந்தேன். லெட்டர்ல போட்டு இருக்குற பணத்துக்கு மேலயே கேட்குறாங்க. இருக்குற பணத்தை எல்லாம் சுத்தமா வழிச்சுக்  கட்டிட்டேன்”

 

இருவரும் பேசிக் கொண்டே செல்ல, சவாரி ஒன்றை இறக்கி விட வந்த பன்னீர் சிந்தனையுடன் அவர்களைப் பார்த்தார் ‘இவனுங்க எங்க இந்த மொள்ளமாரி கம்பெனிக்கு வந்துட்டுப் போறாங்க’

திருச்சியில் இருக்கும் கதிரின் எண்ணைத் தட்டினார்.

1 thought on “என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 26”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33

அத்தியாயம் -33 “அப்பா…..  வேலவா! ஷண்முகா! பன்னிரு கண்களில் ஒரு கண்ணால் கூடவா அந்தக் குழந்தையைப் பார்க்கல. உனக்கு பன்னெண்டு காது இருந்தும் அந்தப் பச்சிளங் குரல் கேட்காத அளவுக்கு செவிடாய் போச்சா?”,   ஊரில் இருந்து திரும்பி இருந்த நான்சியிடம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35

 “சாதிச்சுட்டிங்க பாபு” கை குலுக்கினார் ராஜு. “சாதிச்சுட்டோம்” திருத்தினான் ஜிஷ்ணு. அவனது உழைப்புக்குக் கிடைத்த பலன். முதன் முறையாக, கடன் போக லாபமாய் அரை கோடி அவன் கைகளில் நின்றது. சந்தனா பெயரில் ஒரு நூறுகிராம் தங்கக் கட்டி வாங்கினான். வேலை