Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58

ஜெர்மனி சென்றதும் அவளை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு ராம் வேலையில் சேர்ந்தான். நாட்கள் நகர்ந்தன. இயல்பாகவே சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ளும் சரயு புதிய இடத்தில் பழகிக் கொண்டாள். கவலையை மறக்க உழைப்பை அதிகப்படுத்து என்பது அவளது வழக்கமாய் இருந்ததால் வேலையை சுளுவாய்க் கற்றுக் கொண்டாள். எதையும் அசால்ட்டாய் செய்து முடிக்கும் அந்த துரு துருப்பான இந்திய அழகியை அனைவருக்கும் பிடித்துவிட்டது. பேயாய் வேலை. தினமும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாத நடை என்று உடலை வருத்தியும் கண்ணை மூடினால் அந்தக் கள்ளன் வந்து சிரித்தான்.

“இன்ட்லோ நேனே மொகுடு.. நேனு செப்தே நுவு சேயாலி” என்று உரிமை கொண்டாடினான்.

“முந்து இக்கட ரா… இக்கட கூச்சோ” என்று மிரட்டினான்.

“உண்மையை மறைச்சேன். எதுக்காக… நீ வேணும்னு தானே. என்னை ஒரு பிச்சைக்காரனா நெனச்சு உன் லவ்வை பிச்சை போடுரா… நீ பிரிஞ்சா நான் செத்துடுவேன்ரா… பங்காரம் வேண்டாம்ரா” என்று கண்ணீர் விட்டுக் கதறினான்.

“அழுவாத விஷ்ணு… நான் பக்கத்துல இருந்தா உனக்கு நான் வேணும்னு தோணும். இப்ப கொஞ்சம் கொஞ்சமா நானில்லாத வாழ்க்கையைப் பழகிக்குவ. உன் குடும்பத்தோட வாழுவ… நீ சாக மாட்ட, என்னைக்காவது ஒரு நாள் என்னை பாக்கலாம்னு நம்பிக்கைல வாழுவ. இப்ப நான் வாழுற மாதிரி” சொல்லி அவனது நினைவைத் துரத்திவிடுவாள்.

இரவு நேரத்தில் கனவில் வந்து தாலாட்டுப் பாடச் சொல்லிக் கொஞ்சும் விஷ்ணுவை மட்டும் அவளால் விரட்டவே முடியவில்லை.

னதினுள் எரிமலையாய் குமுறும் காதலை அடக்கி, அமைதியாய் நடமாடும் சரயுவுக்கு சாப்பாடுதான் தகராறாயிற்று. உடன் தங்கிய பெண்கள் காலையில் ரசித்து உண்ணும், கொழுப்பு வழியும் அந்த becon-ஐப் பார்த்தாலே வாந்தி வந்தது. மதியம் சிவப்பு நிறத்தில் கிடைத்த ‘ஸ்வீட் அண்ட் ஸ்பைசி சிக்கன்’ இவளுக்கு ‘நாஸ்டி அண்ட் பிட்டர்’ சிக்கனாய் மாறிப் போனது. சைவ சாப்பாட்டைத் தேடினால் வெஜ் சாலட்டில் பச்சை ப்ரோகலியும், கோலிகுண்டு சைஸ் செர்ரி தக்காளிப்பழமும் அவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தது. பாலைக் காய்ச்சி ப்ரட்டுக்குத் தொட்டுத் தின்றாள்.

“என்னடி இளைச்சுட்டே போற. அந்தத் துரோகிய நினைச்சு பாலும் கசக்குதுன்னு பாடுதியோ? ஒழுங்கா சாப்பிடல பின்னிப்புடுவேன் பின்னி” உடம்பு எடை குறைவதைப் பார்த்து அணுகுண்டு கவலையுடன் திட்ட, பதிலுக்குப் புலம்பித் தள்ளினாள்.

“அணுகுண்டு சாப்பாடே நல்லால்லலே… அசைவத்தைப் பாத்தாலே உமட்டுது. என் ரூம் காரிங்க வேற எல்லா பாத்திரத்துலையும் கறியும் மீனும் சமைக்கிறாங்கலே… காலைல இவளுங்க பேக்கன் வறுக்குற நாத்ததுல எனக்கு வாந்தியே வந்துடுது. தினமும் பிரட் பால்தான் சாப்புடுதேன். எனக்கு நம்ம ஊர் கடைல ஊறுகா பொடி ஏதாவது வாங்கித்தாலே”

“லூஸு ஒரு மாசம் வியாதிக்காரி மாதிரி பிரட் சாப்பிட்டியா… என்கிட்டே சொல்லுறதுக்கென்ன?” திட்டி அவளுக்கு சின்ன ரைஸ் குக்கர், அரிசி, இலகுவாய் சாதத்தில் கலந்து சாப்பிட புளிக்காய்ச்சல், கறிவேப்பிலைப் பொடி, பருப்புப் பொடி, பிரீசரில் வைத்து சூடு படுத்தி சாப்பிடுமாறு ரெடிமேட் காய்கறி பொறியல் என்று வாங்கித் தந்து சென்றான்.

அந்த உணவும் சரயுவின் வயிற்றில் இறங்கவில்லை. சில நாட்கள் சென்றும் வாந்தியும் உமட்டலும் நிற்காமல் போகவே, சரயுவுக்கு சந்தேகம் தட்ட, நாட்களை எண்ணிப் பார்த்தாள். அன்னைக்கு அணுகுண்டு சந்தேகப்பட்டு மாத்திரை தந்தானே. அது ஒரு வேளை உண்மையாயிருச்சோ? சந்தேகத்தைப் புறம் தள்ளினாள்.

“ஆமா வருசக்கணக்கா புள்ளவரம் கேட்டு சுத்திவரவங்கலயே இந்த சாமி கண்ணெடுத்துப் பாக்க மாட்டேங்கு… ஒரே நாள் வாழ்ந்த எனக்குத் தந்துட்டுத்தான் வேற வேலை பாக்குதாக்கும்”

சலித்துக்கொண்டே அலுவலகத்துக்குப் பக்கத்திலிருக்கும் பார்மஸியில் ஈபிடி வாங்கி, இரவு அறையில் அனைவரும் உறங்கியதும் நடுங்கும் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பரிசோதித்தாள். அதில் தெரிந்த இரண்டு கோடுகள் சாமி அவளுக்கு வரம் தந்ததை உறுதி செய்ய, என்ன செய்வதென்றே தெரியாமல் மனம் அதிரத் திகைத்து நின்றாள்.

எட்டாத கோவிலில் குடியிருக்கும் சொக்கநாதனுக்கு என் குரல் எட்டிடுச்சோ

தூரத்து கோவிலில ஏத்தின தூண்டாவிளக்கு பலன் தந்துடுச்சோ

தாயில்லா பிள்ளைன்னு மதுரை மீனாச்சித்தான் மனசிரங்கி மடிப்பிச்சை போட்டாளோ

சரயுவின் கண்களில் கரகரவென நீர் வழிந்தது. பெட்டியைத் திறந்து ஜிஷ்ணுவின் பனியனை எடுத்தாள். “விஷ்ணு நமக்கு பாப்பா பொறக்கப் போவுது. உன்னோட காதல்பரிசு… தாங்க்ஸ்டா” என்று அவனது பனியனை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

சிலமாதங்கள் கழித்து கண்டுகொண்ட ராம் முதலில் திகைத்துப் பின் தோழியை அரவணைத்துக் கொண்டான்.

“யார்கிட்டயும் சொல்லாம ரகசியமா வச்சுருந்தியாக்கும்… ரொம்ப தைரியம்தான் உனக்கு… இதெல்லாம் மறைக்கக் கூடிய விஷயமா? அதுவும் டாக்டர்கிட்ட… எங்கிருந்துடி உனக்கு இந்த ஏமாத்து புத்தி வந்தது… எல்லாம் சகவாச தோஷம்” அவர்கள் நட்பில் புகுந்த கள்ளத்தனத்துக்கும் ஜிஷ்ணுவேதான் காரணம் என்று கற்பித்துக் கொண்டான் அணுகுண்டு.

“உனக்குக் குழந்தை மேல அவ்வளவு ஆசையா… உனக்கு வேணும்னு கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லிருந்தா நான் மறுக்கவா போறேன்… சரி பெத்துப்போம்…” அவள் சாய்ந்து கொள்ள தூணாய், அவளைக் காக்கும் அரணாய், பரிவில் அன்னையாய் மாறினான்.

சரயுவின் மணி வயிற்றில் வக்கணையாய் வந்தமர்ந்த மாயக்கண்ணனை நினைத்து சிரித்துக் கொண்டான் ராம்.

“எமகாதகப் பயடி… ஒரே நாள்ல வந்து உக்காந்துட்டானே” வியந்தான்.

இருவரும் ஒரு சிறு ப்ளாட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். ஒவ்வொரு முறை பேசும்போதும் சரயுவும் ராமும் திருமணம் செய்துக் கொண்டால் தான் பேசுவேன் வீட்டுக்கு வருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பொற்கொடிக்கு, சரயு பிள்ளையாண்டிருப்பது தெரிந்தால் தாலி கட்ட வைத்து விட்டுத்தான் ஓய்வார் என்று இருவரும் பயந்து அவரிடம் சரயுவின் கர்ப்பத்தைத் தெரிவிக்கவில்லை.

எது வந்தாலும் கவனித்துக் கொள்ளலாம் என்ற ராமின் ஓவர் கான்பிடன்ஸ்க்கு சரவெடியே ஆயிரம் வாலா பட்டாசு வைத்தாள். மசக்கை அவளைப் பாடாய் படுத்த, அம்மா வேணும் என்று மனம் கேட்டது. தன் தாய் வயதுடைய எல்லா பெண்களிடமும் வலியச் சென்று பேசினாள். அவர்களுக்கோ அந்த சின்னப் பெண்ணின் ஏக்கத்தை விட அவளது குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைப்பதே ஆசை. கோவிலுக்கு இறைவனை வணங்க வந்த சரயுவிடம்,

“ஆமாம் நீ ஏன் தாலி போடல… நிஜம்மாவே உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா… இல்ல சேர்ந்து வாழுறிங்களா?” என்று இங்கீதமில்லாமல் அந்தப் பெண் கேட்ட சமயம் அவர்கள் சம்பாஷணையை கேட்டு இறுகிய முகத்தோடு ராம் வந்தான்.

“உங்க பொண்ணு கூடத்தான் தாலி போடல… நிஜம்மாவே அவங்களுக்குக் கல்யாணமாயிருச்சா?” அமைதியாகக் கேட்டான்.

“ஹாங்… அவ வேலைக்குப் போற இடத்துல திருட்டு பயம். அதனால போடல”

“அதே காரணம்தான் எங்களுக்கும்…” கடுப்பாய் சொன்னான்.

“வைப்பை சொன்னதும் டாக்டருக்குக் கோவம் பொத்துட்டு வருது” மழுப்பலாய் பேசிய பெண்மணியை முறைத்தான்.

“இல்ல…” என்று எதோ சொல்ல வந்த சரயுவின் கையைப் பிடித்து,

“சரயு வாடி, நமக்கு தலைக்கு மேல வேலையிருக்கு… வெட்டியா பேசிட்டு நிக்கிறா” தர தரவென இழுத்து வந்தான். யார் கண்ணிலும் படாத இடத்துக்கு சென்றவன்,

“எங்கிருந்துடி இந்த மாதிரி வம்புக் கூட்டத்தை ப்ரெண்ட் பிடிச்ச… இனிமே இந்தம்மா கூட பேசினா பிச்சுருவேன் பிச்சு”

“அந்தம்மா உன்னை என் ஹஸ்பன்ட்ன்னு நெனச்சுட்டு இருக்கு. இல்லைன்னு சொல்ல வேண்டாமா?”

“வேண்டாம்”

“ஏன்” திகைத்துக் கேட்டாள்.

பெரிதாகியிருக்கும் அவள் வயிற்றைப் பார்த்தபடி சொன்னான். “சரயு, அப்பறம் உன் வயத்துல வளர்ற பிள்ளைக்கு யார் அப்பான்னு கேப்பாங்க”

உலகத்தில் தானிருக்கும் நிலை புரிய விக்கித்து நின்றாள் சரயு.

“இங்க பாரு ரோட்டுல பாக்குற ஒவ்வொருத்தங்களுக்கும் நம்ம விளக்கம் சொல்ல முடியாது. நம்மை நல்லாத் தெரிஞ்சவங்களே நம்ம உறவைப் புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க நினைக்கிறதை இனிமே திருத்த முயற்சி ட்ரை பண்ணாதே…”

இரவே கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தவளை பார்த்து அதிர்ந்தான் ராம். சரயு அவள் தாய் இறந்தபோதுதான் அழுது பார்த்திருக்கிறான். பள்ளியில் இடி மாதிரி விழும் அடிகளில் அவன் அழுதாலும் அழுத்தமாய் நின்று மேலும் அடி வாங்குவாள்.

“எலே சரவெடி ஏன்லே அழுவுற”

“என்னை உன் பொண்டாட்டின்னு நெனச்ச உன் வாழ்க்கையே வீணாகிடுமேலே. விஷ்ணு எனக்கும் புருஷன்தானே… நா மட்டும் ஏன் இங்க கஷ்டப்பட்டு உன் வாழ்க்கையையும் கெடுக்கணும்? நான் அவன்கிட்டேயே போயிடட்டுமா?”

“எங்கப்பனாவது செத்து போனதும் எங்களை விரட்டி விட்டாங்க. இவன் குத்துக்கல்லாட்டம் வீட்டுல இருந்தப்பவேதான உன் தாலியை அறுத்தாங்க… போடி… போ… அங்க அவனோட பொண்டாட்டி பிள்ளை எல்லாம் இருக்கும். அவன் நிம்மதியையும் கெடுத்துட்டு ஒரு ஓரமா உக்காந்து இன்னொரு அணுகுண்டை உருவாக்கு” கண்கள் கோவத்தில் மின்ன எச்சரித்தான்.

‘நம்மளப் பாத்தா விஷ்ணு மறுபடியும் தடுமாறுவானா, ரெண்டு இடத்துலையும் உண்மையா இருக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுவானே. என்னால விஷ்ணு கஷ்டப்படக்கூடாது. அவனப் பாக்கவே வேண்டாம்’ அதன்பின் சரயு வாயைத் திறக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 61தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 61

இருவாரங்களுக்குப் பின் தாயின் தாலாட்டு கேட்டு கண்கள் சொக்கி உறங்க ஆரம்பித்திருந்தான் அபி. மெதுவாய் சத்தம் கசிந்த அறைக்குள் பூனை போல் சென்றான் ஜிஷ்ணு. மகனை மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தபடி மெலிதான குரலில் தாலாட்டிக்கொண்டிருந்தாள் சரயு. ஜிஷ்ணு சொன்ன

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11

லக்ஷ்மியின் முயற்சியால் சரயு சற்று தேறினாள். தாயின் படம், அவரின் பொருட்கள் என சரயுவுக்கு அம்மாவை நினைவுபடுத்தும் பொருட்களை தந்தையின் உதவியோடு கண்ணுக்கு மறைவாக வைத்தாள். சிவகாமியின் சிறிய படம் ஒன்று மட்டும் பூஜை அறையில் வைக்கப்பட்டது. காலையில் எழும் சரயுவுக்கு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49

ராஜுவுக்கு ஜிஷ்ணு ஒரு ஆதர்சநாயகன். ரட்சிப்பதும், காப்பதும்தான் கடவுளின் அவதார நோக்கமென்றால் அவரைப் பொறுத்தவரை அவன் நாரணனின் அவதாரம். கோதாவரிக் கரையில் இருக்கும் குக்கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜூவின் தாத்தா. கரைபுரண்டு ஓடும் நதியில் படகோட்டி மக்களை அக்கரையில் சேர்ப்பதுதான் குலத்தொழில்.