Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 51

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 51

பாபு, சின்னம்மாவுக்கு அந்தக் குங்குமப் பொட்டையும் வச்சு விட்டுடுங்களேன்”. வேலைக்கு நடுவே சொல்வதைப் போல அருந்ததி சொல்லி ராஜுவை இழுத்து சென்றுவிட்டார்.

ஜிஷ்ணுவும் “ஆடாம நில்லுடி” என்றவாறு கர்ம சிரத்தையாக வட்டமாய் குங்குமப்பொட்டை வைத்து விட்டான். கண்களை மூடி முகத்தை அவன் வைப்பதற்கு வாகாகக் காட்டினாள்.

அஞ்சனம் எழுதிய கண்களில் பாண்டிய நாட்டுக் கொடியில் துள்ளும் மீன்களைக் கண்டு “பேரழகி…” முணுமுணுத்தான் ஜிஷ்ணு.

நிலவாய் ஒளிர்ந்த முகத்தை இரு கைகளிலும் பிடித்தவன், “சரவெடி, நீ சந்தமாமாலாண்டி முகம், ஆ நஷத்ராலலா மெரிசே கல்லு. மா தோடலோ பண்டே தேஜா மிரபகாய்லாண்டி திக்சனமைன முக்கு. கொருக்கு தினமனே செப்பே டொமாடோ பண்டண்டி புக்க, காரட் முக்கலாண்டி பெதவுலு… எந்த அந்தம்கா உன்னா…”

(“சரவெடி… அம்புலியாட்டம் முகம், விண்மீனா ஜொலிக்குற குறும்புக் கண்ணு, எங்க தோட்டத்துல விளையுற தேஜா மிளகாயாட்டம் கூர்மையா மூக்கு, கடிச்சு சாப்பிட சொல்லுற தக்காளிப் பழமாட்டம் கன்னம், காரட்டைக் கட் பண்ணி வச்சாப்புல லிப்ஸ். என்னடி இவ்வளவு அழகாயிருக்க…”)

புரியலை என்று அழகாய் உதட்டைப் பிதுக்கினாள்.

“ம்ம்ம்… இந்தப் புடவைல உன் அழகு அள்ளுது போ. என் கண்ணே பட்டுடுச்சு” மூக்கோடு முக்கை உரசிப் பேசியவன், கையோடு திருஷ்டி கழித்தான்.

“நீயும்தான் மாப்பிள்ளையாட்டம் ஜோரா இருக்க ஜிஷ்ணு” பதிலுக்கு தன் கண்ணோரத்திலிருந்து கண்மையை வழித்து அவன் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்தாள்.

“ஆமா வேஷ்டியை ஏன் பேன்ட் மாதிரி கட்டிருக்க?”

“எங்க ஊர்ல இப்படித்தான் கட்டுவோம்”

இரு கிளிகள் பேசும் மொழி புரியாவிட்டாலும் அதன் தொனியில் தொனித்த நெருக்கத்தையும் அன்பையும் வியந்தபடியே தயாராயினர் மூத்தஜோடி. அனைவரும் ஜிஷ்ணுவின் காரில் பொருட்களை அடுக்கி வைத்துவிட்டுக் கிளம்பினர்.

சூரியன் கடல் குளித்தேறும் நேரம். அந்த சுமோ ஆரவாரமில்லாத ரோட்டில் மெதுவாகச் சென்றது. மணமக்கள் கோலத்தில் ஜிஷ்ணுவும் சரயுவும் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, தங்கள் குழந்தைகளைப் பார்ப்பது போன்ற வாஞ்சையுடன் அவர்களைப் பார்த்தவாறு ராஜு தம்பதியினர் வந்தனர்.

“சீதாராம கல்யாணம் பாக்குறது மகாபுண்ணியம்” என்று சம்பாஷணையைத் தொடர்ந்தார் ராஜு.

“போங்க அங்கிள்… சீதையும் ராமரும் பட்ட கஷ்டத்தை உலகத்தில யாருமே படல. இளவரசனும் இளவரசியுமா ராஜ வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியவங்க காட்டுல கஷ்டப்பட்டாங்க. சீதை இதுக்கு மேல, ராமனை விட்டுப் பிரிஞ்சே போனாங்க…” சரயு அலுத்துக் கொண்டாள்.

ஜிஷ்ணு சாரதியின் வேலையோடு சேர்த்து மொழிபெயர்ப்பாளன் பதவியையும் ஏற்றுக் கொண்டான்.

“அது காதம்மா… சேர்ந்திருந்து அவங்க காதலை ஒவ்வொரு செயலிலும் காமிச்சிருந்தா அதெப்படிம்மா காவிமாயிருக்க முடியும். சாதாரணக் கதையா இல்லை மாறிருக்கும்.

நீங்க சொன்ன மாதிரி, ராமர் சீதை பிரிஞ்சிருந்ததுதான் அதிகம். ஆனாலும் ராமுடு உள்ளத்தில் சீதம்மாவத் தவிர யாருக்கும் இடமில்லை. சீதம்மா உயிரோடு கலந்தவர் ராமர். அவங்க ரெண்டு பேரும் வேறு வேறில்லை.

ராமைய்யா கதை நமக்கு என்ன சொல்லுதுன்னு பாருங்க. எனக்கு கஷ்டமே வரக்கூடாது நான் எப்போதும் சுகமா வாழணும்னு சொல்லல. ராமய்யாவுக்கு சீதம்மா மாதிரியும் சீதாம்மாவுக்கு ராமய்யா மாதிரியும் ஒரு துணை இருந்தா எத்தனைக் கஷ்டம் வந்தாலும் ஆனந்தமா எதிர்கொள்ளலாம்.

அதனாலதான் எனக்கு ஜானகியாட்டம் ஒரு மனைவியைத் தான்னு ஒவ்வொரு ஆணும் கேட்க, எனக்கு ரகுராமனாட்டம் ஏக பத்தினி விரதனைத்தான்னு பெண்கள் வேண்டிக்குவாங்க”

அவர் சொல்லி முடிக்கவும் கிராமம் வரவும் சரியாய் இருந்தது. ராஜுவும் அருந்ததியும் இறங்கிக் கொண்டு தாங்கள் அழைக்கும்போது உள்ளே வரச் சொல்லி சென்றனர்.

“ஹே சரவெடி… நிஜம்மாவே இந்த சேலைல கொள்ளை அழகா இருக்க… சீதை சிலையை வேற நீதான் எடுத்துட்டு வரப்போற… இன்னைக்கு எல்லாரும் அந்த ஜானகிதேவியே சீதையை எடுத்துட்டு வந்துட்டதா நெனச்சு உன்னையே பாக்கப் போறாங்க” என்றான்.

“பதிலுக்கு உன்னை ராமன்னு சொல்லுவேன்னு நினைக்காதே. கிருஷ்ணன்கிட்ட போய் ராமனோட சிலையைத் தந்திருக்காங்களேன்னு எல்லாரும் வருத்தப்படப்போறாங்க”

அவளது கன்னத்தைக் கிள்ளியவன், விரல் பட்ட இடம் சடுதியில் சிவப்பதை ரசித்தவாறு,

“உன் வாய் இன்னம் குறையாம அப்படியே இருக்கு… ஆமாம் நேத்து வாங்கின ரெடிமேட் எல்லாம் சரியா இருந்ததா” என்று வெகுளியாய் கேட்டான்.

“ம்ம்… ம்ம்…” என்றாள்.

“நேத்து உன்கிட்ட அளவு கேக்க போன் பண்ணா… கும்பகர்ணியாட்டம் தூங்கிட்ட… சூட் ஆகணுமேன்னு நெனச்சுகிட்டே வாங்கினேன். எல்லாம் ஓகேதானே” சந்தேகத்தோடு கேட்டான்.

பதில் சொல்லாமல் அலட்சியமாய் ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தாள் சரயு.

“திமிர் பிடிச்சவளே, நான் பேசுறது புரியுதா இல்லையா… பதிலே சொல்ல மாட்டேங்கிற” என்றவனின் முகத்தைப் பார்த்துப் பல்லைக் கடித்தவள்,

“சரியா இருக்கு, சரியா இருக்கு… போதுமா எனக்கே அளவெடுத்து தைச்ச மாதிரி டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கான்…” சொல்லும்போதே அவள் முகம் சிவந்துவிட்டது. எதனால் என்றுதான் அவனுக்குப் புரியாமல் போயிற்று.

“அதுக்கு தாங்க்ஸ் சொல்லாம ஏண்டி திட்டுற” சரியாகத் தேர்ந்தெடுத்ததைப் பாராட்டாமல் ஏன் கோவப்படுகிறாள் என்பதே அவன் சந்தேகம்.

“திட்டாம பின்ன கொஞ்சுவாங்களா… வாங்கிட்டு வந்தது ஒரே ஒரு ப்ளவ்ஸ். அதுவும் எனக்குன்னே அளவெடுத்து தச்சாப்புல… எப்படிடா இவ்வளவு சரியா வாங்கிட்டு வந்த… பொறுக்கி பொறுக்கி” பல்லைக் கடித்தபடி திட்டினாள்.

அவள் திட்டுவதின் காரணம் லேட்டாய் புரிய, கிசுகிசுப்பாய் “நிஜமேனா” (நிஜம்மாவா) என்று தன்னை மறந்து கேட்டுவிட்டு, கேள்விக்கு பதிலாய் சரயுவின் கையால் ஓங்கிக் கொட்டு வாங்கியதும், அந்த நாள் வாழ்க்கையின் பொன்னாளாய் பட்டது ஜிஷ்ணுவுக்கு.

சீதம்மாவின் அரண்மனையில் ஒரு மல்லிகைப் பந்தல். அதிலிருக்கும் சிறுமல்லியை மென்மையாகக் கொய்து அவளது கூந்தலை அலங்கரி. கைநிறைய பூக்களை சீதம்மா சூடக் காரணம். அவளைக் காண கோதண்டராமன் வந்து கொண்டிருக்கிறான்.

பாடல் தொடர, சீதைக்கு ஆடை அலங்காரத்தை செய்த சரயு தலை நிறைய மல்லிகையும், மைவிழியுமாய் நிமிர்ந்து பார்க்க, ராமரின் சிலையை கைகளால் ஜாக்கிரதையாய் அணைத்துப் பிடித்தவாறு வந்தான் ஜிஷ்ணு.

வசியக்காரன் ராமன் வந்துவிட்டான். அவன் வருகையே மதிமயக்குகிறது.

ஜிஷ்ணு ராமன் சிலையை சீதைக்கு அருகில் வைத்தான். சரயுவின் மை ஏந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட, கையேந்தும் வளையாட, தலையசைவில் காதணியும் ஆட அவற்றினுடன் சேர்ந்து அவனது மனமும் ஊஞ்சலாடியது. மிதமான அலங்காரத்தில் மணப்பெண் போல் ஜொலித்தவளைக் காதலுடன் பார்த்தான். என்னவென்று தெரியவில்லை சரயுவின் மீதான நாட்டம் ஒவ்வொரு ஷணமும் அடக்க முடியாத வெள்ளமாய் பெருகுகிறது. அவளைவிட்டு ஒரு வினாடி கூட விலக முடியாது என்று அவன் மனம் சொல்கிறது.

ஜிஷ்ணுவைப் பார்த்தவுடன் புன்னகையில் சரயுவின் முகம் மலர, மின்னல் வெட்டியதைப் போல செவ்விதழ்களுக்கு நடுவே கொற்கை முத்துக்கள் வெட்டி மறைந்தன, அவளது கண்ணும் சேர்ந்து சிரித்தது. ‘சிரிக்கிறா… கோபம் போயிந்தா’ என்று நினைத்தபடி பதிலுக்கு சிரித்ததில் அவனது ஹைதிராபாத் முத்துக்கள் பளிச்சிட்டன.

அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்கள் ராஜய்யாவையும் சின்னம்மாவையும் மனம் மகிழப் பார்த்தனர். சரயுவின் கழுத்திலிருந்த பாசிமணி அவள் ஜிஷ்ணுவுக்கு என்ன உறவு என்று சொன்னது. தனது ராஜய்யாவின் மனம் போல ஒரு மனைவி அமைந்தது அனைவருக்கும் ஏக மகிழ்ச்சி. ஜோடிப் பொருத்தத்தைப் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“சீதை எவ்வளவு அழகா இருக்காங்க பாரேன். இந்த அழகிக்காக ராமன் சண்டை போடலாம் தப்பில்ல” சரயு சீதையின் சிலையைப் பார்த்து சிலாகித்துச் சொல்ல,

“ஆமா சரயு – கொள்ளை அழகு, போனசா ராமர் மேல மூட்டை மூட்டையாய் அன்பு. நிஜம்மாவே A girl worth fighting for” அவள் மேல் கண் பதித்தபடி சொன்னான் ஜிஷ்ணு.

மொழி புரியாததால் அவளருகில் மூத்த பெண்மணி ஒருவர் ஜாடையில் சொல்ல சொல்ல, பாதி அதைக் கேட்டும், மீதியை ஜிஷ்ணு மொழி பெயர்ப்பாலும் புரிந்து கொண்டு பொம்மையைப் போல சடங்குகளைச் செய்தாள் சரயு.

மாலைகளை ராமனின் சார்பில் ஜிஷ்ணு தர, சீதையின் சார்பில் சரயு பெற்றுக் கொண்டாள். சடங்குகள் அனைத்திலும் ராமனின் இடத்தில் ஜிஷ்ணுவும் ஜானகியாய் சரயுவுமிருக்க, சடங்குகளோடு நடப்பது சீதாராம கல்யாணமா இல்லை சரயு-ஜிஷ்ணுவின் கல்யாணமா என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி நடந்தது. ராஜுவின் கைங்கரியமும் இதிலிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

மல்லிகைகளால் சுற்றப்பட்டிருந்த சிவப்பு நிற மங்களநாணை செவ்வனவே ராமர் பாதத்திலிருந்து ஜிஷ்ணு எடுத்து சரயுவின் கையில் தர, மூத்த சுமங்கலி ஒருவர் சரயுவின் கைபிடித்து சீதையின் கழுத்தில் பூட்டினார். அவள் ஒழுங்காகப் பூட்டுகிறாளா என்று கவனத்துடன் பார்த்த ஜிஷ்ணுவின் கண்களுக்கு சரயுவின் கழுத்திலிருந்த சிவப்புப் பாசியின் அர்த்தம் புரிய, கலக்கத்துடன் அருகில் நின்ற ராஜுவின் கைகளைப் பிடித்தவன், “ராஜு… சரயு கழுத்துல…” என்று திணற,

“சீதம்மா ராமைய்யா தகரிகி திருகி ஒச்சந்தி பாபு” (“சீதம்மா ராமனிடத்துல வந்து சேர்ந்துட்டாங்க பாபு”) என்றார் அவன் காதில்.

“நேனு ராமுடு காது ராஜு” (“நான் ராமனில்ல ராஜு”) வானளவு வருத்தத்துடன் சொன்னான்.

“மனசால சின்னம்மாவைத் தவிர வேற யாரையும் நீங்க சுமக்கல பாபு. என் கண்ணுக்கு நீங்க ராமுடுவாத்தான் தெரியுரிங்க” என்றார் உளப்பூர்வமாக.

இந்த இடம்தான் ராமன் சீதையின் கைகளைப் பற்றிய இடம். வானம் பூமியுடன் இணைத்துக் கொண்ட இடம். மூன்று முடிச்சுகளுடன் மூவுலகங்களும் அவர்களின் வாழ்வில் இணைந்த சுந்தரமான இடம். அவனுடன் ஏழு அடி எடுத்து வைத்ததால் இனி வரும் ஏழு ஜென்மங்களிலும் சீதை ராமனுக்கே சொந்தமாவாள்.

புதிதாய் ஏற்பட்ட பந்தத்தைப் பற்றித் தெரிய வந்ததால் ஆசையோடு பொறுப்பும் சேர்ந்துக் கொள்ள, கவனமாக சடங்குகளை செய்தான் ஜிஷ்ணு. சீதை ராமன் சிலையை சுமந்து அவனோடு வலம் வந்தபோது கிண்டலாக சொன்னாள் சரயு, “ஹே ஜிஷ்ணு இதென்ன… எல்லா சடங்கும் நாமளே செய்யணுமா?” என்று கேட்க,

‘இவளுக்கு தெரியாம நம்ம செய்யுறது சரியா’ என்ற வருத்தம் தோன்ற, ‘எனக்கு மட்டும் தெரிஞ்சதா என்ன… கல்யாணம் எப்படி நடந்திருந்தா என்ன, இந்த நொடில இவ என் மனைவி. அது மட்டும்தான் நிஜம்’ என்று உறுதியாகக் கூறிக் கொண்டான்.

“ஒத்துக்கிட்டோமே… அதனால செஞ்சுதான் ஆகணும். உனக்குப் பிடிக்கலையா சரயு?”

“என்னமோ நமக்கே கல்யாணம் செய்து வைக்கிறாப்பல வேடிக்கையா இருக்கு” புன்னகைத்தாள்.

‘பெண்ணே நமக்குத்தான் கல்யாணம்னு சொல்லுறாங்க. விடியாத பொழுதில், பிரம்ம முஹுர்த்தத்தில் ராஜுவோட வீட்டில், எனக்கே தெரியாம, உன் கழுத்துல மாலையைப் போட்டு உன்னை என் மனைவியா ஆக்கிட்டேன்’

“என்னை உனக்குப் பிடிக்காதுல்ல சரயு” வருத்தமாய் கேட்டான்.

“ச்சே அப்படியெல்லாம் இல்லை ஜிஷ்ணு. என்னால உங்க கூட ஒட்ட முடியாம ஒரு நெருடலிருக்கு. அது என்னன்னு எனக்கு சொல்லத் தெரியல. எனக்கு விஷ்ணுவைத்தான் பிடிக்குது. அவனோட இடத்தை உங்களால நெருங்க முடியாது. அவன்தான் என் உயிர்”

மிக அரிதாய் உணர்ச்சி வசப்படும் சரயுவின் ஆழமான வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டான். “அவனுக்கும் அப்படித்தான்ரா… நீதான் அவன் உலகம்” அவளது கைகளுடன் தனது கைகளைக் கோர்த்துக் கொண்டான்.

சீதம்மா அரண்மனையில் ஒரு மல்லிகைப் பந்தல். ஒரு சிறு கிளி அதில் மென்மையாக அமருகிறது. அக்கிளி பேசும் இனிமையான வார்த்தைகளைக் கேட்டாயா ராமா? சீதாவின் இதயம் ராமனின் பெயரை எதிரொலிக்கிறது. அதை ராமன் உணர்ந்த நிமிடம் இருவரும் ஒருயிரானார்கள். அவர்கள் கரங்கள் இணைந்த நொடி கொண்டாடப் படவேண்டிய தருணம். அவர்கள் கண்கள் சந்தித்த கணம் ஆனந்தம் பெருகவேண்டிய தருணம். ராமன் சீதையின் ஜோடிப் பொருத்தத்தை உலகம் கொண்டாடத் தொடங்கினர்.

“சுவாமியை வேண்டிக்கோரா” ஜிஷ்ணு சொல்ல,

“ராமா என் விஷ்ணுவை எனக்குத் திருப்பித்தா. அவனோட சந்தோஷத்தைத் தவிர எனக்கு வேற எதுவும் வேண்டாம். அவன் நல்லா இருக்கணும்னா நான் எது வேணும்னாலும் செய்வேன்.” என்று சரயுவும்,

“ராமா என் ஆசை என் கனவு என் வேண்டுதல் எல்லாத்தையும் எனக்கே தெரியாம நிறைவேத்தி வைச்சுட்டியே. சரயு என் மனைவி, கடவுள் சாட்சியா என் வாழ்க்கைல முறைப்படி நுழைஞ்சுட்டா… எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா?

இந்தக் கல்யாணத்தை நான் லேசா நினைக்கல. ஆனா எனக்கு இன்னும் ஜமுனாகிட்டயிருந்து விவாகரத்து கிடைக்கல. அவகிட்டயிருந்து சுலபமா விடுதலை கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். ஜமுனா டைவேர்ஸ் தந்தாலும் அந்தஸ்து வெறி பிடிச்ச என் சொந்தக்காரங்க அவ்வளவு சீக்கிரம் என்னை விடுவிக்க மாட்டாங்க. இதுல என்னை நம்பிப் பொறந்த என் பொண்ணு சந்தனா…

உண்மை தெரியாத சரயுவோட வாழ்க்கையை இந்த பொம்மைக் கல்யாணத்தைக் காரணம் காட்டி வீணாக்கிடக்கூடாது. சரயுகிட்ட இன்னைக்குக் கடைசி முறையா பேசப்போறேன். அவ என்னோட வாழுறதோட சந்தோஷமா வாழுறது முக்கியம். அவகிட்ட இந்தக் கல்யாணத்தைப் பத்தி நான் மூச்சு கூட விடப்போறதில்ல. ஆனா அவளை வேற யாரையாவது கல்யாணம் செய்துக்கும்படி வற்புறுத்தப் போறேன். தாலி கட்டின கையோட ஒரு கணவன் செய்யக் கூடாத காரியம்தான். மன்னிச்சுடு”

வேண்டி நிமிர்ந்தவனின் கண்களில் இன்னும் கரம் கூப்பி நின்றிருக்கும் சரயு பட, அவள் எதையோ தீவிரமாக வேண்டுகிறாள் என்று பட்டது.

தாமரை மலரைப் போல மலர்ந்த முகம். இவள் கண்கள் தரும் மயக்கத்தை விடவா திராட்சை ரசம் அதிக போதை தந்துவிடப் போகிறது. அவள் குயில் குரலில் அன்பு கலந்து சொல்லும் ‘விஷ்ணு’ என்ற அழைப்பின் இனிமையை விடவா ராகங்கள் இதம் தரப் போகிறது.

வெற்றிலை போடாமலேயே சிவந்திருந்த மெல்லிய இதழ்களைப் பார்த்தவுடன் ஆயுள் முழுவதும் இதனை முத்தமிடும் பாக்கியம் கிடைத்தால் போதும் என்ற உணர்வு தோன்றவும் திகைத்துப் போனான். சொர்க்கம் மதுவிலா இல்லை இந்த மாதுவிலா என்றால் இரண்டாவதைத் தான் ஜிஷ்ணு சொல்வான்.

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

சரயுவை கண்ணெடுக்காமல் பார்த்த ஜிஷ்ணுவிடம் மெதுவாகக் குனிந்து, “பாபு இந்த சக்கனி சுக்கக்கி இன்கெவரு முகுடுந்தா – மீரு லேகா” என்று ஆவலாகக் கேள்வி கேட்டார்.

(பாபு, இவ்வளவு அழகான அழகிக்கு வேற யாரு மாப்பிள்ளையா இருக்க முடியும், உங்களைத் தவிர)

தன்னையறியாமல் வெட்கச் சிரிப்பால் அவர் கூற்றை அங்கீகரித்தான் ஜிஷ்ணு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 4’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 4’

அத்தியாயம் – 4     ‘இவளேன் இந்த மாதிரி’ யோசனையுடன் தாவணியை நதிக்குத் தாரை வார்த்திருந்தவளுக்கு அவசரமாக தனது சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டான். பேய் மழையால் ஊரே அடங்கியிருக்க, அவளை யாருமறியாமல் ராஜேந்திரன் வீட்டிற்கு தூக்கிச் செல்வது ப்ரித்விக்குப் பிரச்சனையாக

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49

ராஜுவுக்கு ஜிஷ்ணு ஒரு ஆதர்சநாயகன். ரட்சிப்பதும், காப்பதும்தான் கடவுளின் அவதார நோக்கமென்றால் அவரைப் பொறுத்தவரை அவன் நாரணனின் அவதாரம். கோதாவரிக் கரையில் இருக்கும் குக்கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜூவின் தாத்தா. கரைபுரண்டு ஓடும் நதியில் படகோட்டி மக்களை அக்கரையில் சேர்ப்பதுதான் குலத்தொழில்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 11

லக்ஷ்மியின் முயற்சியால் சரயு சற்று தேறினாள். தாயின் படம், அவரின் பொருட்கள் என சரயுவுக்கு அம்மாவை நினைவுபடுத்தும் பொருட்களை தந்தையின் உதவியோடு கண்ணுக்கு மறைவாக வைத்தாள். சிவகாமியின் சிறிய படம் ஒன்று மட்டும் பூஜை அறையில் வைக்கப்பட்டது. காலையில் எழும் சரயுவுக்கு