Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 28

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 28

 

குண்டூர், கிருஷ்ணா டெல்டாவிலிருக்கும் வளம் கொழிக்கும் பகுதி. உலகத்தரம் வாய்ந்த மெக்சிகன் மிளகாய்களுக்கு சவால் விடும் தரத்தில் மிளகாய்களை விளைவித்து இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நகரம். ஆசியாவின் மிகப் பெரிய மிளகாய் சந்தையைக் கொண்டது. மிளகாயை மட்டுமே நம்பியிராமல் புகையிலை, பருத்தி என தனது விவசாய எல்லையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் நிறைந்தது. உலகத்தரம் வாய்ந்த பருத்தி சேலைகளுக்கு இங்கிருந்தும் பருத்தி செல்கிறது என்பது கூடுதல் தகவல்.

கிருஷ்ணா நதியின் கொடையால் நீருயர்ந்தது, நீருயர விவசாயம் கொழித்தது, விவசாயம் கொழிக்க அதற்கு துணை புரியும் உர வியாபாரம், காட்டன் மில்கள், சிறுதொழில்கள் பெருகின. தொழில் பெருகப் பெருக ஆட்கள் தேவை பெருகியது, அவர்களுக்குத் தேவையான கல்விக்கூடங்கள் அதிகமாயின.

இந்திய மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மிளகாயில் மட்டுமின்றி உலக மக்களின் உபயோகிக்கும் கறிப்பொடிகளிலும் கணிசமான அளவு இந்த உழைப்பாளிகளின் வேர்வை இருக்கிறது. இந்த வகையில் குண்டூர் தெலுங்கர்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி இந்தியர்களின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாயிற்று.

உலகத்தில் பெரிய மிளகாய் சந்தைகளில் ஒன்றான குண்டூர் மிளகாய் மார்கெட்டுக்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான் ஜிஷ்ணு. அவனுடன் இணைந்து கொண்டார் ராஜுகோகுலம். மார்கெட்டில் மிளகாய் மூட்டைகள் மலை போல் குவிந்துக் கிடந்தன. தினமும் விடியகாலையில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தால், காலை எட்டு மணிக்கு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை முடிந்து மார்கெட் காலியாகிவிடும்.

விடியலின் வெளிச்சத்தில் சூரியனின் செந்நிற வெளிச்சம் பட்டு மூட்டையிலிருந்த மிளகாய்கள் தணல் போல் ஒளிர்ந்தது.

சிவப்பு

ரத்தத்தின் நிறம்,

கதிரவனின் உக்கிரம்,

ஆத்திரத்தின் அடையாளம்,

எரிமலையின் குமுறல்,

அழிவின் கோரதாண்டவம்,

காயும் மிளகாயின் காந்தல்,

இதயத்தின் ரணம்

என்னுடையதைப் போல.

மனதில் ஓடியதைப் புறம் தள்ளி, செவச்செவ என்றிருக்கும் தேஜா வகை மிளகாய்களை கையால் அள்ளி எடை போட்டான். வெளிநாட்டு ஏற்றுமதி வகை. உயர்ந்த தரம்.

“எண்பது சொல்லுறான் பாபு” மெதுவாய் காதைக் கடித்தார் ராஜு.

மிளகாய்களை சோதித்துப் பார்த்தவன், “ஈரப்பதமிருக்கே எழுவத்தஞ்சுக்குக் கேளுங்க, எழுவத்தேழுக்கு முடிங்க” என்றான்.

“கொஞ்சம் காய வச்சுட்டு உடனே பாக் செய்து ஈரோப்பியன் மார்க்கெட்டுக்கு அனுப்பணும்” என்று கட்டளையிட்டான்.

சன்னம் மிளகாய் வகையை உள்நாட்டு விற்பனைக்கும் மிளகாய் பொடிக்கும் வாங்கினான். மக்கள் சிவந்த மிளகாய்ப் பொடிகளைக் காரம் என்றெண்ணி ஆரஞ்சு நிற மிளகாய்ப் பொடிகளைத் தேடி வாங்கிப் போவார்கள். மிளகாய்க்குக் காரத்தைத் தருவதே அதன் விதைகள்தான், விதைகள் கம்மியாக இருந்தால் சிவந்த நிறத்தில் மிளகாய்ப் பொடி கிடைக்கும். விதைகள் அதிகமாகக் காரம் அதிகமாகும், அரைக்கும்போது சிவந்த தோலுடன் கலந்த மஞ்சள் விதைகள் மிளகாய்ப் பொடிக்கு ஆரஞ்சு வண்ணத்தைக் கொடுக்கும். அதனால் ஆரஞ்சு வண்ண மிளகாய்ப் பொடியில் காரம் தூக்கலாகவே இருக்கும். ராஜு தனக்குத் தெரிந்தவற்றை வஞ்சமில்லாமல் அந்த இளைஞனுக்குக் கற்றுத் தந்தார்.

வெறும் ஆவக்காய் மட்டும் பணம் ஈட்டித் தராது என்றுணர்ந்து மிளகாய் ஏற்றுமதித் தொழிலிலும் ஈடுபட்டிருந்தான் ஜிஷ்ணு. மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுத் தர வேண்டும்? பரம்பரைத் தொழிலான விவசாயமும், வியாபாரமும் ஜிஷ்ணுவின் ரத்தத்திலேயே கலந்திருந்தது. ராஜுவின் அனுபவம் சரியான பாதையில் செல்ல உதவியது. ராட்சசனைப் போல் உழைத்தான்.

ஊறுகாய் வகைகளுக்குத் தேவையான மிளக்காய்களைப் பார்வையிட ஆரம்பித்தான்.

ஆவக்காயைக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாய் ஏற்றுக் கொண்டது ஆந்திர பூமி. அமிர்தம் வேண்டுமா, ஆவக்காய் வேண்டுமா என்றால் ஆவக்காயை தேர்ந்தெடுப்பார்களாம் இவர்கள்.

‘உலகத்தின் மிக அழகான குழந்தை, ஒவ்வொரு தாயிடமும்’, இதை அப்படியே உல்டா செய்து, ‘உலகத்தின் மிகச் சிறந்த ஆவக்காய் ஊறுகாய் செய்முறை, ஒவ்வொரு பாட்டியிடமும்’ என்று பெருமையாய் சொல்லும் மக்கள்.

அந்தப் பாட்டிக்கள் பலரிடம் பேசி, வீட்டில் ஜெயசுதாவின் ஊறுகாய் செய்முறையைப் பார்த்து ஒரு ரெசிப்பி தயாரித்து ஜெயெஸ் ஊறுகாய் பிராண்டில் வெளிவந்து மார்கெட்டில் சக்கை போடு போட்டது. ஊறுகாய் சிறப்பாக வர எள்எண்ணையும் மிளகாயும் மிக முக்கியம். தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருக்கும் சிறந்த எள் வியாபாரிகளிடமிருந்து நேரடியாக எள்ளைக் கொள்முதல் செய்து, மில்லில் அரைத்துத் தர செட்டியார்களிடம் ஒப்பந்தம் போட்டான். அவர்களும் சந்தோஷமாய் ஜெயெஸ் பிராண்டுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அடுத்து மிளகாய். வழக்கமாய் மெஷினில் மிளகாயைப் பொடி செய்து ஊறுகாயில் கலப்பார்கள். ஆனால் ஜிஷ்ணுவோ சிறந்த குண்டூர் மிளகாய்களைத் தருவித்து ஸ்பெஷலாய் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களின் மூலம் அதனை இடித்து, பொடி செய்து கலக்குமாறு உத்தரவிட்டான். இயந்தரத்தின் ப்ளேடால் வெட்டப்படும் மிளகாயை விட, இடித்துக் கலக்கப்படும் மிளகாய் ஒரு விதமான எண்ணையை சுரக்கும். அது உடலுக்கு நல்லது மட்டுமின்றி சுவையும் அலாதியாய் கூட்டும். அதனால்தான் கையால் இடித்தும் அரைத்தும் செய்யப்படும் பாட்டி சமையலில் ருசி அதிகம்.

வாங்கிப் போட்ட உபகரணங்களை தனது தேவைக்குப் பயன்படுத்தியது போக மீத நேரத்தில் பருப்புப் பொடி, மிளகாய் பொடி, இட்டிலி மிளகாய் பொடி என்று விற்பனை செய்து வியாபாரத்தைப் பெருக்கினான். அவனது ஊறுகாய் வகையும் கோங்குரா, ஆவக்காய், அல்லம் ஆவக்காய், பெல்லாம் ஆவக்காய், புளிஹோரா ஆவக்காய், தொக்கு மாங்காய், உசிரி ஆவக்காய் என இருவது வகைகளுக்கும் மேலாக விரிந்தது.

“ரெண்டு மணிக்குத்தான் ஹைதிராபாத்திலிருந்து வந்திங்கன்னு கேள்விப்பட்டேன். விடியகாலைல கிளம்பி மார்கெட் வந்துட்டிங்களே. வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க பாபு”

“பரவால்ல… எனக்கு டயர்ட்டா இல்லை. ராத்திரி போய் தூங்குறேன்” என்றபடி மிளகாய் குடோனுக்கு வந்துவிட்டான்.

சாதாரண ஆட்களுக்கே அங்கு இருக்கும் நெடி தாங்காமல் தும்மல் வந்துவிடும். சொகுசாய் வளர்ந்த ஜிஷ்ணு ஆரம்பத்தில் சில நாட்கள் கஷ்டப்பட்டான். அதன் பின் பழகிக் கொண்டான்.

“எப்படி பாபு இது!” என்று ஆச்சரியப்பட்டவரிடம்,

“வாழ்க்கைல நிறைய அட்ஜஸ்ட் பண்ணி பழகிருச்சு” என்று மெலிதாய் சிரித்தான்.

அதில் தெரிந்த வேதனையின் சாயல் ராஜுவை உலுக்கியது. அவரும் அரசல் புரசலாய் அவனது கல்யாண சங்கதி பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ‘பாபுவோட நல்ல மனசுக்கு, அவர் ஆசைப்பட்ட பொண்ணே அமைஞ்சிருக்கலாம்… வீட்ல இருக்குற பணம் பத்தாதா? இவரை வித்து வேற சம்பாதிக்கணுமா?’ பெருமூச்சு விட்டபடி, நிற்கவும் நேரமின்றித் தன்னை வலுக்கட்டாயமாய் வேலையில் மூழ்கடித்துக் கொண்டவனைப் பார்த்தார்.

காய வைத்த மிளகாய்களின் தரத்தை சோதித்து பாக் செய்ய அனுப்பச் சொன்னான். அனல் காற்றின் உக்கிரம் தணிந்திருந்தது. பள்ளிவிட்டுக் குழந்தைகள் ரோட்டில் பேசியபடி மகிழ்ச்சியாக நடந்து சென்றனர். அவன் மனதில் சரயு பள்ளிச் சீருடையில் மிரட்டியது நின்றாடியது. சில நிமிடங்களில் நினைவு தந்த சுகத்தில் லயித்திருந்தவனுக்கு மிளகாயின் சிவப்பு அழகாய்த் தெரிந்தது.

சிவப்பு,

ஜனனத்தின் நிறம்,

ரோஜாக்களின் இதம்,

அப்பிளின் சுவை,

 காதலின் நிறம்,

வெட்கத்தின் செம்மை,

அவனது முத்தத்தால் சிவந்த அவள் இதழ்களின் அழகு நிறம்…

 

ஜிஷ்ணுவின் மனது அமைதி கொண்டது.

‘சரயு உனக்குத் தெரியுமா…

உன்ன உன்ன நெனச்சு,

என் உசிரக் கையில் பிடிச்சு

நான் நொந்து வெந்து கிடக்கேன்

சிறு நூலாம்படையா இளைச்சு‘

வேலையை முடித்துவிட்டு தாரணிக்கோட்டைக்கு வண்டியை விட்டான். அவனுக்கென்று அவன் தாத்தா தந்த வீடு. கிராமத்து வீடு என்பதால் தமையன்களின் கருத்தைக் கவராது போயிற்று. அங்குதான் ஜிஷ்ணுவின் வாசம். கிடைத்ததை சாப்பிட்டுக் கொள்வான். அவன் சொல்லச் சொல்லக் கேட்காமல் ஒரு காரியரில் சாப்பாடு கொடுத்து விட்டிருந்தார் ராஜு. அவர் கூட இருக்கும்போது எப்படியாவது ஜிஷ்ணுவை சாப்பிட வைத்து விடுவார்.

“காலைலேருந்து சிகரெட் பிடிச்சுட்டே இருக்கிங்க பாபு. ராத்திரி கண்டிப்பா சாப்பிட்டுடுங்க… நாளைலருந்து வீட்டுல சமைக்க யாரையாவது ஏற்பாடு செய்யுறேன்” என்று அனுப்பி வைத்தார்.

வழக்கம்போல தன்னுடைய இரவு நேரத் துணையான மதுவைக் கையில் ஏந்தியவன், தன்னுடைய நினைவுகளில் மூழ்கினான். விஷ்ணு மனதினுள் திமிறினான்.

‘யூ ச்சீட்… ஒரு வருஷத்துல என்னை விடுதலை செய்துடுவேன்னு ஆசைகாட்டிட்டு இப்ப நிரந்தரமா புதைச்சுட்டியேடா…’ விஷ்ணு ஜிஷ்ணுவைக் குற்றம் சாட்டினான்.

ஜிஷ்ணு… சரயு கூட எப்படி எப்படியெல்லாம் வாழணும்னு கனவு கண்டேன் தெரியுமா… ஜமுனாவுக்குக் கணவனா இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்குடா… சொல்லவே நாகூசுது… தினமும் விபச்சாரம் பண்ணுற மாதிரி இருக்குடா… இந்தக் கொடுமை ஒரு வருஷம் மட்டும்தான்னு நெனச்சேன் இப்ப காலம் முழுசும் சிறைல தள்ளிட்டியேடோ’

‘விஷ்ணு… உனக்கு எப்படி இருந்தாலும் சரி… இப்ப நீ ஒரு குழந்தைக்குத் தகப்பன். அதனை நினைவில் வச்சுக்கோ… சரயுவை மறந்துடு அதுதான் அவளுக்கு நல்லது’ என்றான் தனது பிரெஞ்சு பியர்டைத் தடவியவாறு. தினமும் ஷேவ் பண்ணும்போது கண்முன் நின்ற சரயு ‘தாடி குத்துது’ என்று கம்ப்ளைண்ட் செய்வதால் அவளுக்குப் பிடிக்காத தாடியை கொஞ்ச காலமாய் வளர்க்கிறான்.

‘சரயு நான் தாடி வளக்குறேன்… உனக்குத்தான் குத்துமே… சோ இனிமே கனவுல வந்து விஷ்ணுவுக்கு கிஸ் தராதே’ என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டான்.

‘சரயுவோட அப்பாவுக்கு உடம்பு சரியிலைன்னு சொன்னாளேடா… இப்ப எப்படி இருக்காளோ… நான் ஏமாத்திட்டதா தப்பா நினைப்பாளே… அவளைப் பாக்கக் கூட கூட்டிட்டு போக மாட்டியா?’ என்று அலறியவனிடம்,

‘அவளைப் பாக்கக் கூட்டிட்டுப் போனா நீ சும்மா இருக்க மாட்ட… அவளை விட்டுட்டு வரமாட்டேன்னு அடம் பிடிப்ப… அவளும் உன்னை மறக்கமாட்டா… உன் வாழ்க்கை பாழானது பத்தாதா சரயுவோட வாழ்க்கையும் வீணாகனுமா?’ எதிர் கேள்வி கேட்டான் ஜிஷ்ணு.

பின்னர் சமாதானமாக, ‘விஷ்ணு நான் திரும்பிப் போக முடியாத ஒரு வழிப் பாதைல வந்துட்டேன். மனசைத் தேத்திட்டு சந்தனாவுக்காக ஒரு மெஷினாவும், ஒரு பணக்காரிக்கு கணவனாவும் வேலை செய்துட்டு இருக்கேன். சரயுவை என் வாழ்க்கைல இணைச்சுக்க வாய்ப்பில்லை… அதனால அவ என்னைப் பத்தித் தப்பா நினைக்கணும்… வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா இருக்கணும். நீ போனா அவ மறுபடியும் சலனப்படுவா… வேண்டாம்டா ப்ளீஸ்…’

முட்டாள் இப்ப மட்டும் அவ என்னை நினைக்காம இருப்பான்னா நினைக்கிற… சரயுவும் நானும் இன்னும் பூமிலதானிருக்கோம். ஒரே சூரியனுக்குக் கீழே, ஒரே நிலாவப் பார்த்துட்டு, மனசுக்குள்ள ஒருத்தரோட ஒருத்தர் பேசிட்டு, கனவுல ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டு இருக்கோம். அதை யாராலும் தடுக்க முடியாது.’ ஜிஷ்ணுவை ஏளனம் செய்தான் விஷ்ணு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9  கடற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 31

அத்தியாயம் – 31   “ஸ்ராவணியை படாதபாடு பட்டுக் காப்பாத்தினேன். வனி பொழைச்சுட்டா. இந்தத் தகப்பனோட வேதனை பொறுக்காம கடவுள் அவளுக்கு ஆயுளைக் கொடுத்துட்டார். அப்பறம் குழந்தையைத் தூக்கிட்டு அம்மாவைப் பார்க்கக் கிளம்பினேன். என்னோட நல்ல நேரம் வீட்டுக்குப் போனப்ப அம்மா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 36தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 36

முதலில் சுதாரித்தது சரயுதான். “நல்லாருக்கியா விஷ்ணு… உங்கம்மா நல்லாயிட்டாங்களா?” ஜிஷ்ணுவும் சமாளித்துக் கொண்டான். கையோடு முகமூடியையும் எடுத்து அணிந்து கொண்டான். “நல்லாயிருக்கேன் சரயு… அம்மாவுக்கு சரியாயிடுச்சு” “நீ இப்ப எங்க இருக்க?” “அமெரிக்காவுலதான் தங்கியிருக்கேன். ஆனா பிஸினெஸ் விஷயமா இந்தியாவுக்கு வந்துட்டுப்