Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 13

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 13

ரயு வயதுக்கு வந்ததறிந்து பட்டு சேலையுடனும் சீர்வரிசையுடனும் பார்த்துச் சென்றான் சம்முவம். லஷ்மிக்கு அது பேறுகாலம் அதனால் வரமுடியவில்லை.

பார்வதி வீட்டில், “உந்தங்கச்சி பெரியவளாயிட்டாளா? இதென்ன ஊருலகத்தில் நடக்காததா…” என்று மாமியார் கேள்வி எழுப்பியதில் ஒரு போன் விசாரிப்போடு சம்பாஷனை முடிந்து போயிற்று.

சரஸ்வதிக்குத் தந்தையின் அன்பைப் பெற வேண்டிய கட்டாயம், அதனால் வீட்டிற்கு வந்தாள். ஆனால் நெல்லையப்பன் அவள் வந்ததும் வெளியே சென்றுவிட்டார். அதனால் அவளும் தன் பங்குக்கு வார்த்தையால் அனைவரையும் குதறிச் சென்றாள்.

செல்லும்போது, “ஊரு உலகத்துல நடக்காத குத்தமா செஞ்சுப்புட்டேன். எங்கப்பனுக்கு என் முகத்தைப் பாக்கக் கூட வெறுப்பா இருக்கு, நான் கொண்டுவந்த சீரு மட்டுமென்னத் தேனாவா இனிக்கப் போவுது. அதை எடுத்துக்கிட்டு வாய்யா” என அவள் சரயுவுக்காக வாங்கி வந்த அன்பளிப்பையும் எடுத்துச் சென்றுவிட்டாள்.

அவள் பின்னாலேயே நாய்க்குட்டியைப் போல் ஓடினான் செல்வம். பின்னர் ஒரு நாள் சரயு பள்ளிக்குச் செல்லும்போது அந்தப் பரிசினைத் தந்தான்.

சாலையில்… ஒழுகிய வியர்வையைத் துடைத்தபடி நின்றுக் கொண்டிருந்த செல்வம், கையைக் காட்டிப் பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்த சரயுவை நிறுத்தினான்.

“இந்தா சரயு. உனக்குத் தரத்தேன் செயின் செஞ்சது. பாரேன் எஸ்ன்னு உன் பேர் போட்டிருக்கு. உங்கப்பா மேல கோவமா உங்கக்காத் திரும்பத் தூக்கிட்டு வந்துட்டா. உனக்குன்னு வாங்கினது உன்கிட்டே தந்துடலாம்னு வந்தேன். இந்தா… கழுத்துல போட்டுக்கோ”

அவனது கையில் சுமார் ரெண்டு பவுனிருக்கும் புது பாம்பே கட்டிங் செயின் மின்னியது. அதற்குத் தோதாய் ஆங்கிலத்தில் ‘எஸ்’ என்று பொறித்த டாலரும்.

“அக்கா கேட்டா?”

“அவ எங்க கேட்கப் போறா… கோவமா இதை வித்துட்டு வரச் சொல்லிட்டா… நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கிடுறேன். அப்பறம் அவ கோவம் தெளிஞ்சதும் சொல்லிக்கிடலாம். ஏரல்ல நானே வாங்கியாந்தேன். உனக்குப் புடுச்சிருக்கா?” என்று அவனது தேர்வைப் பற்றிக் கேட்டவனிடம்,

“ரொம்பப் பிடிச்சிருக்கு மச்சான்” என்றாள்.

“அப்ப போட்டுகிடுறது… பென்சில் டப்பாவுல வைச்சுட்டுத் தொலைச்சுடப் போற” என்று யோசனையுடன் சொல்ல, சரயுவும் மறுக்காமல் அணிந்து கொண்டாள்.

சும்மா சொல்லக் கூடாது, அந்த சங்கிலியைப் போட்டதும் சரயுவின் முகத்தில் ஒரு தனி சோபை தெரிந்தது. பள்ளிக்குச் சென்றதும் அன்று முழுவதும் மனோரமாவிடம் சலிக்காமல் தனது அக்காக்களின் பரிசினைப் பற்றி வாயடித்தாள். ஆனால் நெல்லையப்பன் ஓடுகாலி மாப்பிள்ளையின் செயின் வீட்டிற்குள் இருக்கக் கூடாதென்று கண்டிப்பாக சொல்லியதால் அந்தச் சங்கிலி அரிசிப் பானையில் சரயுவால் ரகசியமாய் ஒளித்து வைக்கப்பட்டது.

த்தாவது பரீட்சை முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள் சரயு. நானூறு மதிப்பெண்ணுக்கு மேல் நிச்சயம் வரும். யாரிடம் பகிர்ந்து கொள்வது? லக்ஷ்மி அக்காவிடம் சொன்னால் கோவில்பட்டி சீனிச்சேவோடு வந்து கொண்டாடுவாள். அவளுடன் அவளது இரண்டு பிள்ளைச்செல்வங்களும் ‘நை நை’ எனக் கத்திக் கொண்டே வந்துவிடும்.

“சரயு, பயத்தமாவைப் போட்டுக் குளிப்பாட்டுறதுல சின்னவன் தக்காளிப் பழமாட்டம் நெறமாயிட்டானில்ல” என்று ஆவலுடன் கேட்பாள்.

“ஆமா கல்யாணமானதும் தக்காளிப்பழம் எப்படி இருக்கும்ன்னே மறந்துட்டியா? நான் சொல்லுறேன் நல்லாக் கேட்டுக்கோ, உன் மவனுங்கள்ள ஒருத்தன் நவாப்பழம், இன்னொருத்தன் சப்போட்டாப் பழம். காக்காக் கூட வெளுத்திரும், இவனுங்க… சான்சேயில்ல… இவனுங்களுக்கு நிறம் வரணும்னா கொஞ்சம் பிளீச்சிங் பவுடர்ல வெளுத்துப் பாக்கலாம்” கிண்டலாய் சொல்லுவாள் சரயு.

தங்கையோடு சிரித்துவிட்டு, “நல்லவேளைடி இவனுங்க பொண்ணாப் பொறகல, அப்படி மட்டும் பொறந்திருந்தா கல்யாணம் பண்ணுறதுக்குள்ள சம்முவத்தோட செங்கல் சூளையே அழிஞ்சிருக்கும்”

“இதுக்குத்தேன் அன்னைக்கேத் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். கொஞ்சம் கலரா இருக்குற ஆளாப் பாத்துக் கட்டியிருந்தேன்னா இப்படிக் கவலைப்பட வேண்டிய அவசியமிருந்திருக்குமா?” தனது பேச்சைக் கேட்காமல் போனதை சுட்டிக் காட்டினாள்.

“பெரிய கிழவி புத்தி சொல்ல வந்துட்டா… சரி இவனுங்களைப் பாத்துக்கோ நான் சமைக்கிறேன். சமைஞ்ச பொண்ணுங்க நிறையா உளுந்து சாப்பிடணும்டி. உளுந்தம்பருப்பு சாதமும், புளி மிளகாயும் மதியத்துக்கு சமைக்கிறேன். நீ கொஞ்சம் எள்ளுத்துவையல் அரைச்சுடு. ராத்திரி சோறு வடிச்சு குழம்பு வைக்கலாம்” அவசர சமையல் செய்து சகோதரிகள் இருவரும் உண்டுவிட்டு, ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.

“போக்கா வெறும் சோறு சாப்பிடுற, மச்சான் பாத்தா… நான் அவ்வளவுதான்… என்னை வெட்டியே போட்டுடுவாரு” கறுப்பண்ணாசாமியைப் போலிருக்கும் சம்முவத்தின் வெள்ளை மனதை, அவனுக்குத் தன் அக்காவின் மேலிருக்கும் பிரியத்தை சரயுவும் புரிந்துக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

“அடிப்போடி, என் மாமியாருக்கு கறியோ, கோழியோ இல்லாம சோறு இறங்கமாட்டேங்கு. எதுவுமில்லைன்னா ரெண்டு கருவாட்டை வறுத்துக் கடிச்சுக்கிட்டு பழையசோறு திங்குது. என் நாத்தனாருங்க வந்தா மட்டன் பிரியாணி, கோழி வறுவல், மீன் குழம்புன்னு ஒரு ஊருக்கே சமையல் மணக்கும். எனக்கு அசைவத்தைப் பாத்தாலே மூஞ்சில அடிச்சமாதிரி இருக்கு. எனக்குத் தனியா ஒரு நாரத்தங்கா பச்சடியோ, இஞ்சுத் துவையலோ செஞ்சு வச்சுக்கிடுதேன்”

பனங்குடியிலிருந்து லக்ஷ்மி மத்தியானம்தான் தாய் வீட்டுக்கு வந்திருப்பாள். அன்றே பொழுதுசாய, “லச்சுமி மில்லு சாவியை எடுத்துட்டு வந்திட்டியே…” என்றழைத்துக் கொண்டே சம்முவமும் வந்திறங்கிவிடுவான்.

லச்சுமி அவன் பைக் சாவியைப் பிடுங்கி அதிலிருக்கும் மில் சாவியைக் காண்பிப்பாள்.

“அட மில்லு சாவியைக் காலைலதானே மாத்தினேன், மறந்துடுச்சு… சரி வந்ததுதான் வந்தேன் நாளைக்கு உன்னைக் கூட்டிட்டேக் கிளம்புறேன். ரவைக்கு உலைல ஒரு கை அரிசியை சேத்துப் போடச் சொல்லு உந்தங்கச்சிய”

சமையலறையிலிருந்து பதிலளிப்பாள் சரயு, “ஒரு கை சாப்பிடுற ஆளப் பாரு… உன் புருசனுக்கு சோறு போட புதுசா இன்னொரு உலைதான் வைக்கணும்”

கூடத்திலிருந்து குரல் கொடுப்பான் சம்முவம். “என்னலே கத்திரிக்கா… கருவாட்டுக் குழம்பு வைக்கக் கத்துகிட்டயா… லச்சுமி உந்தங்கச்சிக்கு சீக்கிரம் கத்துத்தாடி… அதுக்கப்பறம் எங்கக் கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று சொல்லி சரயுவிடம் மண்டகப்படி வாங்காவிட்டால் அவனுக்கு மாமியார் வீட்டுக்கு வந்த திருப்தியே இருக்காது.

சரசுவுக்கு குழந்தை இன்னும் உண்டாகவில்லை என்றெண்ணிக் கிறுக்குப் பிடித்தாற்போல் சுற்றுவதாகக் கேள்வி. எப்போது பார்த்தாலும் கோவில், குளம், சாமியார் என்று அலையவே அவளுக்கு நேரம் சரியாகப் போய்விடுகிறதாம். கடைப் பக்கம் போகும்போது செல்வம்தான் வீட்டு நிலையை சொல்வான். சரசைப் பார்த்தே மாசக்கணக்காகிவிட்டது.

பார்வதியோ புகுந்த வீட்டிலிருக்கும் கஷ்டத்தைப் புலம்புவதிலேயே சுகம் கண்டுவிட்டாள்.

“மாமியாருக்கு ஆபரேசன் செய்யணும். காசுக்கு எங்கன போவன்னு புடுங்கி எடுக்குறார் அந்த மனுசன். என் விதி இந்த மனுசனைக் கட்டிட்டு வம்பாடு படுறேன். நீயாவது நல்லா படிச்சு வேலைக்குப் போயி சந்தோசமா இருடி” எனப் புலம்புவாள்.

நெல்லையப்பன் கல்யாணமான தன் மூன்று பெண்களும் ஏதோ அடிச்சுகிட்டோ புடுச்சிகிட்டோ இருந்தாலும் கணவனுடன் சந்தோஷமாய் இருந்தால் போதும் என்ற மனோபாவத்துக்கு வந்திருந்தார்.

சரயு இன்னும் ரெண்டு வருஷம் படிக்கட்டும். பன்னெண்டாவது முடிச்சதும் கண்ணாலம் பண்ணிடலாம். மனக்கணக்கு போட்டவர், பக்கத்து வீட்டு அவ்வாவிடம் சரயுவுக்கு சமையல் கற்றுத் தருமாறு வேண்டுதல் விடுத்தார்.

“எட்டி நல்லா சமைக்கக் கத்துக்கோ. போற எடத்துல எம் பேரக் கெடுத்துடாத” என அவ்வா மறக்காமல் சரயுவிடம் சொல்லிவிட்டாள்.

மூஞ்சி வெயிலில் காயப்போட்ட சுண்டைக்காயாய் சுருங்கிவிட்டது சரயுவுக்கு.

“அப்பா பன்னெண்டாவது வரைதான் என்னைப் படிக்க வைக்கப் போறியா? எஞ்சினியருக்குப் படிக்க வைப்பேன்னு சொன்னியே”

“சிவாமி இருந்தப்ப சொன்னேன்லே. இப்ப அப்பாவுக்கு உடம்புக்கு முடியல. உன்னை சீக்கிரம் கண்ணாலம் கட்டிக் கொடுத்துட்டா ஒரு பெரிய கவலை தீரும்”

“அப்ப உன் கவலை தீரத்தான் எனக்குக் கல்யாணமா? நான் பேசாம வேலைக்குப் போய் உன்னை நல்லா பாத்துக்கிறேன்பா. இந்தக் கல்யாணப் பேச்ச விடு.”

“சின்னகுட்டி புரிஞ்சுக்கோல. வயசுக்கு வந்த பொண்ண வீட்டுல வச்சுகிட்டு எங்கனப் போனாலும் பயந்தடிச்சு ஓடியாறேன். உங்கப்பன் உடம்பு முன்ன மாதிரி உரமா இல்ல. எனக்கு ஏதாவது ஒண்ணு நடந்தா நீ நாதியத்து நிப்பலே. உன்னைத் தனியா தவிக்க விட்டா என் கட்ட கூட வேவாது”

“அப்படியெல்லாம் பேசாதப்பா. அம்மாதான் என்ன விட்டுட்டுப் போயிட்டு. நீயாச்சும் என் கூடவே இருப்பா”

“நான் எங்கலே போவேன். உனக்குக் கல்யாணம் முடிச்சுட்டு உன் கூடவே இருந்துடுறேன். நீதானே இந்த நெல்லையப்பனோட சிங்கக்குட்டி… நீதானே என்னைப் பாத்துக்கிடணும்” இளம் குருதின் மனதை மாற்றும் வித்தை தெரிந்தவராயிருந்தார் நெல்லையப்பன்.

தனது கையில் எதுவுமில்லை என்று சரயுவின் மனதுக்குப் பட்டது. சிறிது நேரம் எரிந்துக் கொண்டிருந்த அடுப்பை வெறித்தாள். “சரி நீ சொன்னபடி கேக்குறேன். ஆனா பன்னெண்டாவது படிக்கல அதுக்கு பதிலா பாலிடெக்னிக் படிக்க வை”

“அது…” தயங்கினார்.

“பதினொன்னாவது பன்னெண்டாவது ரெண்டு வருசம், இது மூணு வருஷம் அவ்வளவுதானே. ஒரே ஒரு வருசம் தானப்பா அதிகம்”

தாஜா செய்யும் சின்னக் குட்டியை பார்த்து சிரித்தார்.

“சரி… பாலிடெக்னிக்கே படி”

“தூத்துக்குடில கவர்மெண்ட் பாலிடெக்னிக் இருக்குப்பா. அதுல சேர்த்து விடுறியா? மெக்கானிக்கல் சேர்த்து விடு. படிச்சு முடிக்குற மட்டும் சமையல் கத்துக்க மாட்டேன். சமையல் கத்துகிட்டா நீ உடனே என்னை எங்கனயாவது தாட்டி விட்டுடுவ”

“சரி கழுத… ” தலையாட்டினார்.

“அப்பான்னா அப்பாதான்”. அவரைப் பிடித்து ரெண்டு சுற்று சுற்றினாள் சரயு. தலை கிறுகிறுத்துப் போய் அமர்ந்தார் நெல்லையப்பன்.

‘படிச்சதும் வேலைவாய்ப்பு ஆபிஸ்ல பதிஞ்சு வச்சுடணும். எப்படியாவது வேல வாங்கிடணும்’ மனதில் ரகசியமாய் உறுதிமொழி எடுத்துக் கொண்டாள் சரயு.

நானூத்தி அறுவது மதிப்பெண்கள் பெற்றிருந்தாள் சரயு. மனோரமா தூக்கித் தட்டமாலை சுற்றாத குறை.

“கலக்கிட்டடி. தெக்கத்திப் பொண்ணா… கொக்கா…” கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினார்.

“டீச்சர் நான் பாலிடெக்னிக் படிக்கணும்… மெக்கானிக்கல். எப்படி அப்ளை பண்ணுறதுன்னு சொல்றிங்களா?”

“பிளஸ் ஒன் படிக்கலையா?”

“அப்பாவுக்கு உடம்பு சுகமில்ல டீச்சர். அதனால சீக்கிரம் படிப்ப நிறுத்திடுவாங்க. ப்ளஸ் டூ படிக்கிறதுக்கு பதிலா பாலிடெக்னிக் படிச்சா ஏதாவது வேலை கிடைக்கும். கொஞ்ச நாள் கழிச்சு பார்ட் டைம்ல என்ஜினியருக்குப் படிப்பேன்”

‘விளையாட்டுப் பிள்ளைன்னு நெனச்சேன். இவ்வளவு தெளிவா திட்டம் போட்டிருக்கா பாரேன்’ வியந்தார்.

“சரி” என்றவர் சரயுவை அவள் கேட்ட துறையில் சேர்த்துவிட்டுத் தான் ஓய்ந்தார்.

“நீ இல்லாம நான்தாண்டி கஷ்டப்படுவேன்” கண்கள் கலங்கியவர்.

“பாஸ்கட் பால் மட்டும் தவறாம விளையாடு. அரசாங்க வேலை வாங்க விளையாட்டுத் துறைல வாங்குற சான்றிதழ்கள் உனக்கு உபயோகமாயிருக்கும்”

“சரி டீச்சர்”

மனோரமா சரயு மதியம் என்ன சாப்பிடுகிறாள் என கவனிப்பார். மாலை, சரயு விளையாடி முடித்ததும், விளையாட்டுப் பொருட்களை மனோரமாவின் அறையில் வைத்துவிட்டு, முகம் கழுவி வருவாள். அதற்குள் அவள் உண்பதற்குத் தயாராக மனோரமாவின் பையில் சிறு டப்பாவில் மொச்சைபயிறு சுண்டலோ, அவித்த பனங்கிழங்கோ, முந்திரிக்கொத்தோ, முறுக்கோ இருக்கும். அதை அவர் சாப்பிட எடுத்து வந்திருப்பார் என்று மற்றவர்களைப் போல் நம்ப சரயு முட்டாளில்லை. சில மாதங்களிலேயே தனக்கு ஸ்பெஷலாக டீச்சர் வீட்டிலிருந்து வருகிறது என்று கண்டு கொண்டாள். அதனால் சரயுவும் மறுக்காமல் உண்டுவிட்டே கிளம்புவாள்.

வயதுக்கு வந்த இரு வருடங்களில் மனோரமா அவ்வப்போது தந்த கவனிப்பில் நெகு நெகுவென வளர்ந்திருந்தாள் சரயு. ‘தங்கச் சிலையா இருக்கா… இனிமே இவளை பாதுகாத்துக்கிடறது இவளோட பொறுப்பு’ பெருமூச்சு விட்டவர்,

“ஆம்பளப்பசங்க நிறைய பேர் படிப்பாங்க சரயு. வெகுளியா அவிங்கட்ட பழகாதே. யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு இனம் பிரிக்கிற பக்குவம் உனக்கு வரல”

அப்போதைக்கு தலையாட்டிய சரயு அவர் சொன்னது எவ்வளவு உண்மை என ஒரு நாள் உணர்ந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14

அத்தியாயம் – 14 வழக்கத்துக்கு மாறாக அன்று காலை சித்தாரா எழுந்தபோது அரவிந்த் எழுந்து சென்று விட்டிருந்தான். ‘இவனுக்கு என்ன வந்தது? நான் வந்து காபி கொடுத்து, வனி அவன் மேல ரெண்டு குதி குதிச்சாத்தானே எழுந்திருப்பான்’ என்று எண்ணிக்  கொண்டே

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 36 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் –  36   சித்தாரா குழுவினர் வண்டியை நிறுத்தி வழியில் ஏறிக்கொண்ட நபரைப் பற்றி சித்தாரா ஊகித்தது சரிதானா என்று விவேகானந்தரைக் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு ஒரே வியப்பு. நடக்கப்போவது நல்லபடியாக முடிய வேண்டுமே என்று கவலை.   அதே

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19

அத்தியாயம் – 19 நடந்த  சம்பவங்கள் சிலருக்கு மகிழ்வையும், சிலருக்கு வருத்தத்தையும்  தந்தது. சத்யாவும் பன்னீரும் தங்களது மண  வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கதை பேச ஆரம்பிக்க, சுமித்ரா சத்யாவுக்கு கல்யாணம் நிச்சயமானதைப் பற்றி மகிழ்வதா இல்லை கோவித்துக் கொண்டு போன முதல் மகள் சுதாவைப் பற்றிக்