Tamil Madhura Uncategorized சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 01

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 01

அதிகாலை நேரம்… பனித்துகள்களின் ஈரம் கலந்து சுகமாய் வீசிய காற்று… மெலிதாக ஆதவனின் வெளிச்சக்கீற்றுகள் பரவியிருக்க, தாய்மார்கள் தங்கள் வீட்டு வாயிலைப் பெருக்கும் சப்தமான, ‘சர் சர் சர்…’ என்பது, அங்கிருக்கும் பறவையினங்களின் சப்தத்தோடு கலந்து இசைத்துக் கொண்டிருந்தது.

 

சுற்றத்தில் இந்த சத்தங்கள் வந்து கொண்டிருந்தாலும், அந்த தெருவின் சில வீடுகளுக்குள் இந்த சத்தம் நுழைய முடியாது. மீறி நுழைந்தாலும் யார் செவியிலும் எட்டிடாது.

 

அதுபோன்றதொரு வீட்டில், அன்னபூரணி காஃபி டம்ளருடன் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள். அவளுக்கு அதிகாலை சுப்ரபாதம், மெல்லிசை, இன்னிசை, தீம்த தீம்த தரனா… எல்லாமுமே.., ‘டடக் டடக்… டடக் டடக்…’ என்று அவர்கள் வீட்டின் கீழ்த்தளத்தில் பெருங்குரலெடுத்தோடும் விசைத்தறியின் இசை தான்.

 

எட்டு விசைத்தறிகளையும் “பெரியப்பா…” எனக் கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தவள், அவளது பெரியப்பா முத்துச்செல்வத்தைக் கண்டுபிடித்து விட்டாள்.

 

முத்துச்செல்வம் ஒல்லியான தேகம், லேசாக மேலேறிய நெற்றியுடன் மாநிறத்தில் இருந்தார். அடர் நீல நிற உள்பணியனும், மடித்துக் கட்டிய லுங்கியுமாகக் காட்சியளித்தவரின் அருகே சென்ற பூரணி, “காஃபியை குடிங்க பெரியப்பா. தறியை நான் பார்க்கிறேன்” எனச் சொல்லி காஃபி தம்ளரை நீட்டினாள்.

 

கைகளில் ஒட்டியிருந்த பஞ்சுத் துகள்களை தன் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த, சிவப்பு நிற காட்டன் துண்டினால் தட்டியவர், காஃபியை வாங்கிப் பருகத் தொடங்கினார். அந்த அதிகாலை நேரப் பனிக்காற்றுக்கு, சூடான காஃபி தொண்டைக்குழியில் இதமாக இறங்கியது.

 

“ஏன் புள்ளை நீ குடிச்சியா?”

 

“அதெல்லாம் ஆச்சுங்க பெரியப்பா. நீங்க போயி குளிச்சுட்டு, சாப்பிட்டு வாங்க. அதுவரை நான் கவனிச்சுக்கறேன்” எனத் தறிகளை மேற்பார்வையிடத் தொடங்கினாள்.

 

விசைத்தறிகளில், காடா எனப்படும் சாயம் ஏற்றப்படாத துணிகளை உற்பத்தி செய்வது அவர்களது தொழிலாகும். இப்படி உற்பத்தியாகும் துணிகள் குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு, சாயமேற்றி, டிசைனிங் செய்து, ஆயத்த ஆடைகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகம் செய்கின்றனர்.

 

விசைத்தறிகளின் சப்தம் அதிகமாக இருப்பதால், சுற்றிலும் கேட்கும் வேறு எந்த சப்தங்களும் அவ்வளவு எளிதாக அவர்களைத் தீண்டிடாது. இந்த சத்தத்தினூடே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதால், அனைவரின் பேச்சு சத்தமும் உரக்கவே வரும். சற்று பெரிய தொண்டை என்பார்களே அந்த ரகம்!

 

ஏற்கனவே அனைத்து மெஷின்களிலும் பெரியப்பா, நூலை இணைத்திருந்தார். மெஷின்களும் தடையின்றி இயங்கிக் கொண்டிருந்தது. ஆக, இடையில் ஏதும் விடுபட்டால் மட்டும் இவள் நேர்ப்படுத்த வேண்டியதாய் இருக்கும். சுற்றிச் சுற்றிச் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

நான்கு சென்ட் இடத்தினில் அளவாக, பாந்தமாகக் கட்டப்பட்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் வீடு அது. கீழே தொழில் நடத்த ஏதுவாக மெஷின்கள் போடப்பட்டிருக்க, முதல் தளத்தில் இவர்கள் தங்குவதற்கு வீடு கட்டியிருந்தனர்.

 

அந்த வீட்டை வாசஸ்தலமாகக் கொண்ட ஜீவன்கள், முத்துச்செல்வம், ஜோதிமணி தம்பதியர்களும், அவர்களின் தவப்புதல்வர்களான கோபாலகிருஷ்ணன், ரஞ்சிதாவும் அவர்களோடு இணைந்த கடைக்குட்டியாய் அன்னபூரணி. கோபாலகிருஷ்ணன் மட்டும் அவனது வேலை நிமித்தம் சென்னையில் வசிக்கிறான்.

 

அன்னபூரணிக்கு எட்டு வயது இருக்கும் சமயம், ஒரு விபத்தில் ஒருசேரத் தாய், தந்தை, தம்பி என மூவரையும் இழந்திருந்தாள். அதன்பிறகு பெரியப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறாள்.

 

அவளது சுட்டித்தனத்தையும், சேட்டையையும் பார்ப்பவர்களால், அவளுடைய இறந்தகாலம் குறித்து ஊகிக்கக் கூட முடியாததாய் இருக்கும்.

 

அவள் எத்தனையோ அழுது, கரைந்து… இனி யாரும் திரும்பி வரமாட்டார்கள் எனப் பொட்டில் அடித்தாற்போல் உணர்ந்து… ஆதரவு தந்த குடும்பத்தின் அரவணைப்பில் தன்னைத்தானே தேற்றி, இந்த நிலைக்கு வந்திருக்கிறாள் என்பதும் கூட, யார் பார்வைக்கும் தெரியாது தான்!

 

ஆனால், அது தானே வாழ்க்கை. புன்னகை புரிபவர்கள் எல்லாம் உதட்டளவில் புன்னகைக்கின்றனரா? அல்லது மனதளவில் இருந்துமா? என்று பலராலும், பலரிடமும் கணித்து விட முடிவதில்லையே!

 

பூரணியும் அப்படித்தான் பிறர் கணிப்புக்கு அப்பாற்பட்டவள்! யாராலும் அவளை எளிதாக யூகிக்க முடியாத போதும், வெளிப்பார்வைக்கு மிகவும் கலகலப்பானவள். அவளுடைய அதீத பொறுப்புணர்வும், பொறுமை குணமும் கூட யாரும் எளிதில் உணரா வண்ணம், இந்த கலகலப்பு சுபாவத்தின் பின்னே மறைந்து இருக்கும்.

 

“ஏன் புள்ளை நீ குளிக்கலை?” ரஞ்சிதா மாடியிலிருந்து எட்டிப்பார்த்துக் கத்திக் கேட்டாள். பின்னே, தறி சத்தத்தில் பேச்சுக்குரல் கேட்க வேண்டுமே!

 

“ஷ்ஷ்…” என அக்காவைப் பார்த்து வாயின் மேல் விரல் வைத்து சைகை செய்தவள், “இவ நம்ம பிளானை சொதப்பிடுவா போல…” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

 

இன்றைய தினம் “தைப்பூசம்”. அவர்கள் ஊரில், இந்த விசேஷம் சிறப்பாக நடைபெறும். ரஞ்சிதா கல்லூரி படிப்பை முடித்து விட்டு, ட்யூஷன் எடுக்கிறேன் எனப் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்க, இந்த வருடம் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படிக்கும் பூரணி, எதாவது காரணத்தைச் சொல்லி மட்டம் போட்டு விடலாம் என்று திட்டம் வைத்திருந்தாள்.

 

தங்கையின் புலம்பல் புரியாதவளாய் கீழிறங்கி வந்த ரஞ்சிதா, “என்னடி முனங்கற?” என்று கேட்டாள்.

 

ஒற்றைக் கையை இடுப்பில் ஊன்றி, இடது கையால் தன் நெற்றியை அடித்தபடி, “இன்னைக்கு என்ன ரஞ்சிக்கா?” என்றாள் பூரணி கோபமாக.

 

அவள் கோபத்தை கவனிக்காமல், “ஓ இன்னைக்கா… அம்மா இட்லி தான் அவிச்சிருக்கு” என ரஞ்சிதா இலகுவாக சொன்ன பதிலில், மூத்தவளைப் பார்த்து புசு புசுவென மூச்சு விட்டாள்.

 

“ஏன்டி இப்படி முறைக்கிற? இட்லி வேணாட்டி அம்மாகிட்ட தோசை கேளு, ஊத்தி கொடுப்பாங்க. இப்ப நீ மேல ஓடு, போயி குளிச்சுட்டு கிளம்பு. காலேஜுக்கு நேரம் ஆச்சல்ல. நான் தறியை பார்த்துக்கறேன்” எனத் தங்கையைக் கல்லூரிக்குக் கிளப்பப் பார்த்தாள்.

 

“நீயெல்லாம் ஒரு அக்காவா?” என முன்பைவிட முறைத்து நின்றாள் இளையவள். இம்முறை இரண்டு கைகளும் இடுப்பை ஊன்றியிருக்க, முகம் கடுகடுவென்றிருந்தது. தன்னைப் பார்த்தால் இட்லிக்கும், தோசைக்கும் சண்டை போடுபவள் போன்றா தெரிகிறது என்னும் கோபம் அவளுக்கு!

 

ஒன்றும் புரியாமல் ரஞ்சிதா விழிக்க, “நீ மட்டும் தைப்பூசத்துக்கு வீட்டுல இருப்ப, நான் காலேஜ் போகணுமா?”

 

“நான் டெயிலும் தானடி வீட்டுல இருக்கேன்” என்று ரஞ்சிதா அறிவாய் கேட்டு வைக்க, தங்கை மீண்டும் முறைத்தாள்.

 

சிறுபிள்ளை கோபம் தான் எத்தனை அழகு! அதை இன்று வரையிலும் பூரணியிடம் ரஞ்சிதா ரசிப்பாள். என்ன கோபத்திற்கான காரணம் தான் தெரிவதில்லை பாவம்!

 

தங்கையைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தபடியே,  “சாயங்காலம் தான காவடி தூக்குவாங்க. காலையில என்ன வேலை? போன வருஷம் ஸ்கூலுக்கெல்லாம் சத்தமில்லாம ஓடின தான?”

 

“அது… அது… போன வருஷம் உங்களுக்கும் காலேஜ் இருந்தது” என்றாள் திணறலாக.

 

“என்கூட எசலி (போட்டி) போடுவியா நீ? நான் படிச்சு முடிச்சுட்டேன்” என்றாள் மூத்தவள் பொறுப்பான குரலில்.

 

எப்படியும் மட்டம் போட முடியாது என்று புரிய, “போங்க…” என உதடு சுளித்து கல்லூரிக்குக் கிளம்பச் சென்று விட்டாள். அவள் சென்ற திசையைப் பார்த்து, ‘அடாவடி…’ எனச் செல்லமாய் முணுமுணுத்துக் கொண்ட ரஞ்சிதா தறிகளை மேற்பார்வையிடும் வேலையைத் தொடர்ந்தாள்.

 

அக்காவை முடிந்த மட்டும் முறைத்து விட்டு, கல்லூரிக்கு வேண்டா வெறுப்பாகக் கிளம்பி… பேருந்து நிலையத்தை நோக்கி நடையைக் கட்டியிருந்தாள் அன்னபூரணி.

 

பேருந்தில் இன்று வழக்கத்தை விடவும் கூட்டம் குறைவாக இருந்தது. அதைக்கண்டு சுருங்கிப்போனவளின் மனம், ‘நிறைய பேரு மட்டம் போட்டுட்டாங்க போலயே! நமக்கு சாமர்த்தியம் பத்தலை’ என்று அங்கலாய்த்துக் கொண்டது.

 

கல்லூரிக்குச் செல்லவே பிரியமில்லாமல் புறப்பட்டுச் சென்றவளை, அன்றைய நேரம் நன்றாகவே சோதித்தது. அவள் பயணித்த பேருந்து, பாதி வழியில் பிரேக் டவுன் ஆனது. அனைவரையும் மாற்றுப் பேருந்தில் செல்லும்படி பயணச்சீட்டில் குறித்துக் கொடுத்து நடத்துநர் அனுப்பினார்.

 

“இந்த ஓட்டை வண்டியை காயிலாங்கடையில கூட எடுத்துக்க மாட்டாங்க. இதை நம்ம ஊருக்கு அனுப்பிட்டு கொடுமை செய்யறாங்களே!” எனப் பள்ளி மாணவி ஒருத்தி போகிற போக்கில் கலாய்த்துச் சென்று விட, அதைக் கேட்ட பூரணிக்குச் சிரிப்பாக இருந்தது.

 

பழைய இரும்பு சாமானுக்கு பேரீச்சம்பழம் என்ற தினுசில் கூவிக் கொண்டு அருகில் எதுவும் வண்டி இருக்கிறதா என்று பார்ப்பவள் போலப் பார்வையைச் சுழல விட்டாள். சுழல விட்ட பார்வையில், அவன் விழுந்தான். நீதிவாசன்! பூரணியின் உடல் மெலிதாய் அதிர, விழிகள் பெரிதாக விரிந்தது அந்த சுயம்பு மனிதனைப் பார்த்து.

 

நீதிவாசன், ஜோதிமணியின் அண்ணன் மகன். அதாவது, ரஞ்சிதா, கோபாலகிருஷ்ணனுக்கு தாய்மாமன் மகன்! இவளுக்கு? அப்படியெல்லாம் இவள் யோசித்துப் பார்த்தது கிடையாது. பெரியம்மா சொந்தம் வந்தால், நலம் விசாரிப்பதோடு ஒதுங்கி இருந்து கொள்வாள். பல நேரம் அது கூட இல்லாமல் ஒதுங்கி இருந்து விடுவாள். பெரியம்மாவின் சொந்தங்களுக்கு இவளைப் பிடிக்காது என்று தெரியும். அவர்களின் புறக்கணிப்பை இனங்கண்டு கொள்ளும் பக்குவம், ‘அனாதை’ என்னும் அடையாளத்தால் சிறு வயதிலேயே வந்திருந்தபடியால், அப்பொழுதிலிருந்தே இந்த புரிதலுடன் தான் ஒதுங்கி இருப்பாள்.

 

ஆம்! அனாதை, அதுதான் அவளது அடைமொழி. அவளது எட்டு வயதில் மொத்த குடும்பத்தையும் இழந்து விட்டு நின்றதிலிருந்து இதே அடைமொழி தான். அந்த வயதில் அதற்கு அர்த்தம் கூட சரியாகப் புரியாது! ஆனால், அது போன்ற அடைமொழிகளும், குத்திக்காட்டல்களும், கடுஞ்சொற்களும் தான் அவளுக்கு நிறையப் பக்குவத்தைத் தந்துவிட்டிருந்தது.

 

நீதிவாசனை எதிர்பாராமல் இங்குப் பார்த்தவளின் விழிகள் அகல விரிந்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. இதற்கும் அவன் இவளைக் கவனிக்கக் கூட இல்லை, இருந்தும் உடம்பெல்லாம் உதறல் எடுத்தது போல உணர்வு!

 

யாரிடமோ பேசி முடித்தவன், அவனது காரை நோக்கி வர, ‘போச்சு என்னைப் பார்த்தா கண்டிப்பா திட்டு விழும். நாமளே சரண்டர் ஆகிடுவோம்’ என வேக எட்டுகளில் அவனது கார் அருகே சென்றாள்.

 

கார் கதவைத் திறக்கப் போனவன், யாரோ தன்னை நோக்கி வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். இவளைக் கண்டதும், ‘இவள் இங்கு எனச் செய்கிறாள்?’ எனப் புருவம் சுருக்கியவன், மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்க்க, அவளுக்கு நன்றாகவே உதறல் எடுத்தது.

 

அந்த பதட்டத்தில், பூரணி மனப்பாடம் செய்த செய்யுள் பகுதியை ஒப்புவிப்பவள் போலத் தொடங்கி விட்டிருந்தாள். “பாருங்க. எஸ் இருபத்திமூணு பஸ்ல தான் வந்தேன். வண்டி நின்னுடுச்சு. பிரேக் டவுன் போல! செட்டுக்கு போகுதாமா. அதுனால எல்லாரையும் இறக்கி விட்டுட்டாங்க” என சொன்னவள், அவன் குறுக்கே எதையோ சொல்ல வருவதைப் பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தாள்.

 

“இப்ப வேற பஸ்ஸை பிடிச்சு காலேஜ் போயிடுவேன். நான் காலேஜ் கட்டடிக்கறதுக்காக எல்லாம் பஸ்ஸை விட்டு இறங்கலை. இங்க தியேட்டர் கூட இல்லை தானே…” என படபடவென சொல்ல, அவசரமாகச் சுற்றிலும் நோட்டம் விட்டவனது பார்வை இப்பொழுது அவளிடம் கூர்மை பெற்றது. அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாய் அளவிட்டது. முகம் வேறு பயங்கர அழுத்தமாக, கடுகடுவென இருந்தது.

 

அவள் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து விட்டால் என்பதே அவனுக்குத் தெரியாது என்பதை அவள் அறியாள் பாவம்!

 

அவளிடம் போலியான பணிவையோ , பவ்வியத்தையோ நீதிவாசன் இதுவரையிலும் கண்டதில்லை. அதனாலேயே அவள் மீது சற்று நல்லெண்ணம். இவன் இருக்கும் இடத்திலிருந்து வெகுவாக ஒதுங்கித் தான் இருப்பாள். அதிலேயும் அவனுக்கு அவள்மீது நல்லெண்ணம் தான்! ஒரே ஒரு சிறு கரும்புள்ளி மட்டும். ஆனால், அதையும் அவன் பெரிதாய் எடுத்துக்கொண்டதில்லை. ஏதோ தெரியாமல் செய்திருப்பாள் என்னும் எண்ணம் தான் அதற்கும்!

 

அந்த கரும்புள்ளி தான் பூரணியை இப்படிப் படுத்திக் கொண்டு, உளற வைத்தது.

 

அன்னபூரணிக்கு சென்ற ஆண்டோடு பள்ளி வாழ்க்கைக்கு முழுக்கு என்பதால், அவளது தோழிகள் எல்லாரும் சேர்ந்து, ஒரே ஒருமுறை கிளாஸை கட்டடிப்போம் என இவளை கட்டாயப்படுத்தித் திட்டமிட்டிருந்தனர். திட்டமிட்டதன்படி அன்றையதினம் பள்ளிக்குப் போகாமல் சினிமா தியேட்டர் போயிருந்தார்கள். பூரணி, தன் வீட்டிற்குத் தெரியாமல், முதன்முதலில் செய்த செயலே அதுதான்! பெரியப்பாவிற்குத் தெரியாது. அவர் இதெல்லாம் ஒப்புக்கொள்ளவே மாட்டார். ஆனால், பெரியம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் வந்திருந்தாள்.

 

அந்த சமயம் பார்த்து, வசமாக நீதிவாசனிடம் மாட்டியிருக்க, அவன் பார்த்த பார்வை… இப்பொழுதும் அவளுக்கு நினைவில் இருக்கிறது. அத்தனை ஆத்திரமாகவும், கீழாகவும் பார்த்து வைத்தான்.

 

பின்னே, பள்ளியில் படிப்பவள், பெரியவர்கள் உடன் வராமல் தோழிகளுடன் வந்திருக்கிறாள். அதிலும், பள்ளியை கட்டடித்து விட்டு! படம் வேறு U/A சான்றிதழ். அவனுக்கு ஆத்திரம் வராமல் இருக்குமா? பொது இடம் என்பதால் அமைதி காத்திருந்தான்.

 

இதற்கும் அவளை நோக்கி வந்து, திட்டி பேசி இப்படி எதுவுமே அவன் செய்யவில்லை. வெறும் பார்வை தான்… அதற்கே அத்தனை சக்தி இருந்ததாக இன்று வரையும் நினைத்துக் கொள்வாள்.

 

அதன்பிறகு திரைப்படமாவது ஒன்றாவது… அப்பொழுதே தோழிகளிடம் மல்லுக்கட்டி விட்டு வீட்டுக்கு ஓடி வந்திருந்தாள். பெரியப்பா கேட்டதற்கு, “ரொம்ப தலைவலி பெரியப்பா அதுதான் ஸ்கூலுக்கு லீவு போட்டுடுட்டு, வீட்டுக்கு வந்துட்டேன்” என வாயிற்கு வந்ததை உளறி வைத்தாள்.

 

அன்று மாலையே நீதிவாசன் தன் அத்தை வீட்டிற்கு விஜயம்! வீடு தேடி வந்தாவது வாங்கு வாங்கென்று வாங்கி விட்டானா? என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை.

 

முறைப்பான ஒரு பார்வை! காரசாரமான சில கேள்விகள்! அடுத்தமுறை இதைச் செய்ததாக கேள்விப் பட்டால் கூட விஷயம் உன் பெரியப்பா காதிற்குப் போய்விடும் என மிரட்டல்! அவ்வளவு தான்!

 

ஹப்பா! பெரியப்பாவிடம் போயிருந்தால் கூட இத்தனை அஞ்சி இருக்க மாட்டாள் போல! அவன் தோரணையாய் கேட்ட ஒரு சில கேள்விகளிலேயே அப்படியொரு அச்சம் வந்துவிட்டிருந்தது.

 

அதன் தாக்கம் அவ்வப்பொழுது அவளுக்குள் எழும். இதற்கும் அந்தநாள் வரை, நீதிவாசனும், பூரணியும் சரியாக முகம் கொடுத்துக் கூட பேசிக் கொண்டது இல்லை என்று சொல்லலாம். அந்த சம்பவத்தின் பிறகும் கூட முன்போலவே தான் இருந்து கொண்டார்கள். எந்தவிதமான நேரடிப் பேச்சு வார்த்தைகளும் இருந்ததில்லை.

 

அவனிடம் போய், பய மிகுதியில் பேருந்து நின்றுவிட்டதற்காக விளக்கம் தந்து கொண்டிருக்கிறாள்!

 

அவளை மேலிருந்து கீழாகப் பார்த்து முறைத்தவனின் முகம் கோபத்தில் சிவந்திருக்க, அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், காரினுள் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பி விட்டான். அவன் முகத்திலிருந்த கோபம், கண்கள் இடுங்கிய விதம் அவளை தன்போல மிரள வைத்தது.

 

‘இப்ப என்ன சொதப்பி வெச்சேன்னு தெரியலையே? இவரு ஏன் இப்படி விரைப்பா, கோபமா போறாரு?’ எனக் குழம்பியபடி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 

அவன் எதையாவது பேசிவிட்டுச் சென்றிருந்தால் கூட அந்த விஷயத்தைக் கடந்து விட்டிருப்பாளோ என்னவோ, அவன் எதுவுமே பேசாமல் சென்றிருந்ததால்… அன்றைய நாள் முழுவதுமே அவனையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

‘இதே எனக்குப் பதிலா ரஞ்சியக்கா இருந்தாலும் இப்படித் தான் ஒரு வார்த்தை பேசாம போவாரா? அக்காவா இருந்திருந்தா, இந்நேரம் காலேஜுக்கே கூட்டிட்டு போயி விட்டிருப்பாரு… நானா இருக்கவும் என்கிட்ட பேசக் கூட மனசு வரலை’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.

 

உண்மையில் இவள் என்றில்லை. ரஞ்சிதா இருந்திருந்தாலும் கல்லூரியில் எல்லாம் நீதிவாசன் விட்டிருக்க மாட்டான் என்பது தான் உண்மை.

 

அதை அறியாத பூரணியோ, ‘இவரும் மத்தவங்க மாதிரி தான்’ என வெம்பிக் கொண்டாள். கூடவே அவளின் மனம், ‘அவனும் உண்மையிலேயே அப்படியா?’ என்கிற கேள்வியை அவளிடமே கேட்டது.

 

அவளுக்குத் தெரியுமே நீதிவாசன் அப்படி பாரபட்சம் பார்ப்பவன் இல்லையென்று! இவள் பெரியமனுஷி ஆகியிருந்த சமயம், குடிசை கட்டும் பொறுப்பை ஏற்க, இவளுடைய உறவினர்கள் யாருமே முன்வரவில்லை. இவளுடைய தாய்மாமன் இருந்தார் தான், எங்கே இவளுடைய திருமண வயது வரும் சமயம், அவர்கள் பையனுக்குத் திருமணத்திற்குப் பேசி விடுவார்களோ என எண்ணி சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.

 

அதனாலேயே விழா செய்வதா வேணாமா என வீட்டில் பெரும் குழப்பம். பெரியவளுக்குச் செய்து இவளுக்குச் செய்யாமல் விட்டுவிட்டால் சங்கடப்படுவாளே எனப் பெரியம்மா ஜோதிமணி தான், தன் அண்ணன் மகேந்திரனிடம் புலம்பியிருந்தார்.

 

“நான் செய்யறேன் மா… பூரணியும் எனக்கு மருமக புள்ளை தானே!” என்று தயங்காமல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அந்த பெரிய மனிதர்.

 

தந்தை ஏற்றுக்கொண்ட பொறுப்பிற்கிணங்க எந்தவித முக சுணக்கமுமின்றி நீதிவாசனும் முறை மாமன் முறைக்குக் குடிசை கட்டியிருந்தான். சீர் வரிசையிலும் எந்த குறையும் வைக்கவில்லை.

 

அது மட்டுமில்லாமல், பூரணி இதுநாள் வரையிலும் நீதிவாசனுடைய பார்வையில், ‘நம் சொந்தம்’ என்ற பிரத்தியேக பாதுகாப்பான உணர்வைத் தான் உணர்ந்திருக்கிறாள். ஆகையால், அவனை அப்படி பொத்தாம் பொதுவாக மற்றவர்களைப் போல, இவளை ஒதுக்கி வைப்பவன் என்றும் இவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

 

அவனது செய்கையில் கோபித்துக் கொள்ளக் கூட மனம் வரவில்லை. அதேசமயம் கோபம் இல்லாமலும் இருக்க முடியவில்லை. அவனுக்கு எதுவும் கோபம் இருந்திருக்குமோ என்று தவிக்காமலும் இருக்க முடியவில்லை. மொத்தத்தில் நாள் முழுவதும் அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

‘சரி கோபமா போனாங்கன்னா இன்னைக்கு சாயந்திரமும் வீட்டுக்கு வருவாங்க… அப்ப என்ன கோபம்ன்னு புரிஞ்சிடும்’ என்று அவளது மனம் ஆசுவாசமாய் நினைத்துக் கொள்ள, அது அவளுக்குள் தித்திப்பையும் தந்ததோ?

 

அதோடு நீதிவாசனின் பார்வையில் இவள் உணர்ந்தது ‘நம் சொந்தம்’ என்கிற உணர்வையா? இல்லை ‘என் சொந்தம்’ என்கிற உணர்வையா?

 

எது எப்படியோ… உண்மையில் அவனது பார்வை இரண்டில் எது என்று உறுதியாகக் கணிக்க முடியாத… குழப்பும்படியான பார்வை தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 37

37 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கோவிலில் பேசிக்கொண்டும், வேலை செய்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க ஆதியின் கண்கள் போனில் பேசிக்கொண்டே இருந்தாலும் திவியை சுற்றியே இருந்தது. சிறிது நேரம் சென்றதும் அம்மு “நகை எல்லாமே போட்டே இருக்கமுடிலமா” என்று புலம்ப மதி