Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’

அத்தியாயம் – 15

ன்று காலையில் நந்தனா எழும்முன்பே ப்ரித்வி கிளம்பிவிட்டிருந்தான். அவன் அதிகாலை கிளம்ப வேண்டியிருந்தால் அவனே எழுந்து கதவை பூட்டிவிட்டு செல்வான். நந்தனா மெதுவாக எழுந்து கல்லூரிக்குக் கிளம்புவாள்.

காலை யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள். “நந்தா…” எனக் குரல் கொடுத்தார் கர்ஜீவன்

விரைவாகக் கதவைத் திறந்தவள் அவரை உள்ளே வரச் சொன்னாள்.

“சாய் கொண்டு வரட்டுமா?”

எப்போழுதும் கலகலப்பாக இருக்கும் கர்ஜீவனின் முகம் சற்று வாட்டமாகவே இருந்தது “ப்ரித்வி எந்திருச்சுட்டானா”

“காலைலேயே கிளம்பிட்டாரே. ஏதாவது முக்கியமான விஷயமா அங்கிள்” பதட்டத்துடன் கேட்டாள்.

“இன்னைக்கு ப்ரித்வியோட பெற்றோர் நினைவுநாள். இன்னைக்கு பித்துப் பிடிச்சாப்பில இருப்பான். அதனால நான் கூடவே இருக்கிறது வழக்கம். இன்னைக்குன்னு பார்த்து என் சொந்தக்காரங்க வீட்டுக்கு போக வேண்டியிருக்கு”

முதல் இரவே ப்ரித்வி உணவை மறுத்துவிட்டு சென்றது நினைவுக்கு வந்தது. “நான் பாத்துக்கிறேன் அங்கிள்” என்றாள்.

 

கர்ஜீவனுக்க்கு மசாலா சாய் கலந்து தந்தாள். “ப்ரித்வி அப்பா ஹர்கிரனும் நானும் நண்பர்கள். படிக்கும்போது கிரிக்கெட்  டீம்ல இருந்தோம். நான் வேலைக்குப் போக, அவன் கிரிக்கெட் பால், பேட் உற்பத்தி செய்யும் பேக்டரி ஆரம்பிச்சான். கிரிகெட் பாலுக்கு சல்லிசா லெதர் கிடைக்கும்னுட்டு  யாரோ சொன்னாங்கன்னு தமிழ்நாட்டுக்குப் போனான். அவன் லெதர் வாங்கின கம்பெனில வேலை பார்த்தவதான் லக்ஷ்மி. அவளோட அமைதியும், குணமும் அவனுக்குப் பிடிச்சுடுச்சு. அவங்களோட காதல் லக்ஷ்மி வீட்ல மறுக்கப்பட்டது. லக்ஷ்மியோட அப்பா அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டார். கிரண் அவளைக் கூட்டிட்டு வந்தான். எங்க உதவியோட கல்யாணம் நடந்தது. மறுவருஷம் ப்ரித்வி பிறந்தான்.

 

கிரண்  இந்த பிளாட் வாங்கினான். எனக்குக் கல்யாணமாச்சு. பக்கத்து வீடு விலைக்கு வரவும் முன்பணம் கட்டி எங்களைக் குடி வர வச்சான். எல்லாம் நல்லாத்தான் நடந்தது. ஒரு நாள் குடும்பத்தோட சுற்றுலா போனாங்க. திரும்பி  வரும்போது ப்ரித்வி மட்டும்தான் உயிரோட வந்தான். அம்மா அப்பாவோட மறைவை நினைச்சு பைத்தியம் பிடிச்சமாதிரி நின்னான். சொந்தக்காரங்க அவங்க கூட வந்துட சொல்லிக் கூப்பிட்டாங்க ஆனா இவன் மறுத்துட்டான். அப்பத்தான் ப்ரித்வி தைரியமா மெட்ராஸ்ல போய் படிக்கிறேன்னு சொன்னான். நானும் மெட்ராஸ் அனுப்பினேன். என்னோட பணத்தை மறுத்துட்டு இந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை செலவுக்கு உபயோகிச்சான். அப்பறம் படிச்சு முடிச்சதும் மறுபடியும் இங்க வந்து தொழில் தொடங்கினான்.

எப்படியோ ப்ரித்வி தன்னைத் தேத்திக்கிட்டாலும் மாறாதது ஒண்ணு இருக்கு. அது ஹர்கிரண்-லக்ஷ்மி நினைவுநாள். எங்கிருந்தாலும் அந்த சமயத்தில ஊருக்கு வந்துடுவான். பித்துப் பிடிச்ச மாதிரி சுத்திட்டிருப்பான். அதனால அவனோடவே இருப்பேன். நாளாக நாளாக கொஞ்சம் தாக்கம் குறைஞ்சிருக்கு ஆனா மறையல. அவனுக்குக்  குழந்தை குட்டின்னு வந்தா கவனம் வேற பக்கம் போகும்னு நினைக்கிறேன்.

நீ இன்னைக்கு அவன் பக்கத்திலையே இருந்து பார்த்துக்கோ. ஏதாவது உதவி வேணும்னா என்னைக் கூப்பிடு” சொல்லிவிட்டு சென்றார்.

 

னது விடியலே அழிந்து விட்டதோ என்றது போன்ற கலக்கம் நிறைந்த மனத்துடன் கண்மூடி அமர்ந்திருந்தான் ப்ரித்வி. மணி ஒன்பது கூட ஆகவில்லை. ஆகையாய் இன்னும் வேலையாட்கள் வரவில்லை. யாரோ கதவைத் திறந்து வரும் ஓசை கேட்டு நிமிர்ந்தான். மேகப்போர்வையை விலக்கி எட்டிப் பார்க்கும் நிலவாய் நந்தனா வந்தாள். கனவோ என்று விழித்தவனின் மூக்கைப் பிடித்து ஆட்டியவள்

“இப்படித்தான் சொல்லாம கொள்ளாம ஓடி வருவிங்களா ப்ரித்வி”

“லெதர் நாத்தம் அடிக்குதுன்னு கூப்பிட்டாக்  கூட வரமாட்ட. இன்னைக்கு என்ன அதிசயமா இங்க. காலேஜ் போகல?” உள்ளிருந்து அழும் மனதை அவளுக்குத் தெரியாமல் மறைத்தான்.

“எங்க கிளாசே மாஸ் கட். நான் மட்டும் போனா கொன்னே போட்டுடுவாங்க. அதனால இன்னைக்கு முழுசும் உங்களோடவே  இருக்கலாம்னு வந்திருக்கேன். இருக்கலாமா ப்ரித்வி” கெஞ்சலாய்க் கேட்டாள். அந்த பிஸ்தா பச்சை சல்வாரில், நெற்றியில் திலக வடிவப் பொட்டு, மையெழுதிய கண்கள் ஆகியவற்றைப்  பார்க்கும்போது அவனது மனது அமைதியடைந்தது.

“இதுக்கெல்லாம் என்கிட்டே அனுமதி கேக்கணுமா?”

அவள் அருகில் இருப்பது அவனுக்கும் ஆறுதலாகவே இருந்தது.

“வேலை வெட்டி முறிச்சிட்டுருப்பிங்கன்னு ஓடி வந்தேன். இங்க என்னடான்னா மோட்டுவளயைப் பார்த்து கனவு கண்டுட்டு இருக்கீங்க” சொன்னவாறே தனது டிபன்பாக்சைப் பிரித்தாள்.

“இன்னைக்கு சூடான இட்லி, தக்காளிச் சட்னி, நெய் மிளகாய்ப் பொடி செஞ்சேன். சாப்பிட நேரமில்லைன்னு டிபன் பாக்ஸ்ல போட்டு எனக்கும் என் பிரெண்ட் சிந்துவுக்கும் எடுத்துட்டு வந்தேன். இப்ப கிளாஸ் போகலையே. சாப்பாடு வீணாயிடுமே. நீங்க சாப்பிடுங்க ப்ரித்வி”

“எனக்கு பசியில்லை நந்தா” கணினியை உயிர்பித்து வேலையைத் தொடங்கினான்.

“எனக்குப் பசிக்கிது ப்ரித்வி. நீங்க சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுறது” கேள்வியை சட்டை செய்யாமல் வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் வாயருகே ஒரு கரம் உணவை நீட்டியது. முதல் நாளிலிருந்தே சாப்பிடாமலிருந்த வயிறு உணவைக் கேட்க, நெய் மணத்தில் வாய் தானாகத் திறந்தது. அவனையறியாமல் நந்தனா ஊட்டி விட்ட உணவை உண்டு கொண்டிருந்ததை உணர்ந்தபோது நந்தனா கடைசி இட்லியை விண்டு தரத் துவங்கியிருந்தாள்.

“ஏன் ப்ரித்வி வயிறைக் காயப் போடுறிங்க” கடிந்தவாறு ஊட்டி முடித்தாள்.

“தாங்க்ஸ் நந்தா”

“இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொன்னா, நான் காலம் முழுசும் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும். இன்னொரு இட்லி வேணும்னா சொல்லுங்க. இல்ல எல்லாத்தையும் நான் சாப்பிட்டுடுவேன்”

“சாப்பிடு” என்று அவளை சாப்பிட வைத்தான்.

“ப்ரித்வி கிரிக்கெட் பாட் உற்பத்தி பண்ண இன்னொரு பேக்டரி ஆரம்பிக்கணும்னு சொன்னிங்களே. ப்ளீஸ் அதைப் பத்தி சொல்லுங்களேன்” அவனது இருக்கையில் சவுகரியமாய் அமர்ந்தவாறு கேட்டாள்.

சுவாரஸ்யமாய் சொல்லத் தொடங்கினான் “இங்கிலீஷ் வில்லோ ட்ரீ அப்படின்னு ஒரு மரவகைலதான் கிரிக்கெட் மட்டை தயார் செய்வாங்க. நல்ல உறுதியான மரம். ஆலமரம் மாதிரி ஆனா குட்டி குட்டி சடைசடையா தொங்கும். காஷ்மீர் பக்கமும் இந்த வகை மரங்கள் வளரும். காஷ்மீர் வில்லோ மரத்துல செய்யும் ப்ரீமியம் பாட், இங்கிலீஷ் வில்லோவை விட கனமானது. அதனால  உலகம் முழுவதும் பேமஸ். ட்வென்டி ட்வென்டிக்கு இந்த மரங்கள்ல செய்யுற பேட்கள்தான் பெரும்பாலும் உபயோகிக்கிறாங்க.

முதல் முதல்ல  கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சப்ப, நான் சொல்றது 1720ல  கிரிக்கெட் பேட் வடிவம் ஹாக்கி பேட் மாதிரியே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா மாறி இப்ப நாம உபயோகிக்கிற வடிவம் வந்திருக்கு.

மரத்தை வெட்டி பேட் வடிவத்துக்குக் கொண்டு வர, ஹாண்டில் செய்து பொருத்த இதுக்கெல்லாம் முறைப்படி செய்ய மெசின்களுக்கு முதலீடு செய்யணும். பெரிய இடமும் வேணும். நம்ம ஏற்கனவே இந்தத் துறைல கொஞ்சம் தரமான பொருட்கள் தந்து முன்னணில இருக்கறதால பேட் விற்பனைக்கு பிரச்சனையாய் இருக்காதுன்னு நினைக்கிறேன்”

“இந்த ஊர்ல விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவாங்களோ? எங்க பார்த்தாலும் கிரிக்கெட் விளையாட்டு, ஹாக்கி ஸ்டேடியம், மைதானம்னு நிறைஞ்சிருக்கு. அதுமட்டுமில்லாம கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் இதுமாதிரி விளையாட்டு சம்மந்தமான உபகரணம் செய்யும் இண்டஸ்ட்ரிகள் வேறு நிறையா இருக்கு”

“பேட்மிட்டன், ஸ்குவாஷ், கேரம்போர்டு, நெட், ஹெல்மெட்  இதையெல்லாம் விட்டுட்டியே. விளையாட்டு சம்மந்தமான உபகரணங்கள் செய்யும் தொழிற்சாலைகள் ஜலந்தர்ல அதிகம். நிறைய கடைகள் விளையாட்டு சாமான்களை நூறு வருஷமா விற்பனை செய்துட்டு இருக்காங்க. அரசாங்கமும் எங்களுக்கு சங்கம் எல்லாம் அமைச்சுத் தந்து வெளிநாட்டு விற்பனைக்கு உதவி செய்யுது”

“சோ நீங்கல்லாம் விளையாட்டா விளையாட்டிலே சம்பாதிச்சுட்டு இருக்கிங்க” அவனுக்குப் பிடித்த விஷயங்களைப் பேசினாள்.

வீட்டு நினைவு என்று அவனை நச்சரித்து ராஜேந்திரனை அழைத்து பேசச் செய்தாள். பரமசிவத்திடம் தனது நலத்தைத் தெரியப் படுத்தினாள்.

பேச்சு திசைமாறி ப்ரித்வி கல்லூரியில் செய்த கலாட்டாக்களை ராஜேந்திரனை சொல்லச் செய்து விளக்கம் கேட்டாள்.

“நந்து நான் ஒரு அப்பாவி, என்கிட்டே ஒரு பொண்ணும் பேசாதும்மா. இவனைப் பார்த்தா புலிப்பாய்ச்சல் பாய்ஞ்சு வந்து வாயை மூடாம பேசுவாங்க. ஆமாவா இல்லையான்னு நீயே கேளு” ஸ்பீக்கர் போனில் ராஜேந்திரனின் குரல் ஒலிக்க

“நந்தா… முறைக்காதே…. என்ன இருந்தாலும் அவங்களுக்கு ப்ரித்வி அண்ணன்கிட்ட மனசுவிட்டு பேசலாம். ஆனா ராஜேந்திரன் அத்தான்கிட்ட பேச அவங்களுக்கு வெட்கமா இருக்காதா?” என கவுன்ட்டர் அட்டாக் கொடுத்தான்.

கைப்பேசியை வைத்தவுடன்  யோசனையாக ப்ரித்வியைப் பார்த்தபடி கேட்டாள் நந்தனா

“அண்ணன் கூடத்தான் மனசுவிட்டுப் பேச முடியுமா? உங்ககூட பேச எனக்குத் தயக்கமே இல்லை ப்ரித்வி. அப்ப நீங்க ….” முடிக்க விடாமல் அழுத்தி அவள் வாயைப் பொத்தியது ப்ரித்வியின் கரம்

“ஷ்…. ஜானு வாயை மூடு…. கண்டிப்பா நான் உன் சகோதரனில்லை…. உன்னைப் பார்த்த நிமிஷத்திலேருந்து இப்ப வரைக்கும் அப்படி நினைக்கவுமில்லை. இனிமேலும் நினைக்க மாட்டேன். எங்க நீ என்னை அண்ணன்னு கூப்பிட்டுடப் போறியோன்னு பயந்துதான் உன்னை முதன் முதல்லா பார்த்த அன்னைக்கே  மிரட்டி உன் வாயால ஹலோ ப்ரித்வின்னு சொல்ல வச்சேன்”

“அப்ப நான் உங்களுக்கு என்ன வேணும்….. பிரெண்டா”

“பிரெண்டுக்கும் மேல ஜானு. நீயும் நானும் ஒரே மாதிரியான கஷ்டங்களை அனுபவிச்சவங்க. சின்ன வயசில பெற்றோரை இழந்து, இந்த உலகத்தில் போராட்டமே வாழ்க்கையா இருக்கிறவங்க. சொல்லப்போனா உன்னில் என்னைப் பார்க்கிறேன். நீயும் என்னில் உன்னைப் பார்க்கிற. ஆனா உனக்கு அதைப் புரிஞ்சுக்க இன்னும் கொஞ்சம் நாளாகும்ன்னு நினைக்கிறேன்”

ருட்டும் நேரம் வந்ததைக் கண்டு இருவரும் கிளம்பினர். வழியில் இருக்கும் ஒரு இடத்தில் நிறுத்தி கண் சிமிட்டாது பார்த்தான் ப்ரித்வி.

“என்ன ஆச்சு ப்ரித்வி”

கைகளால் அந்த இடத்தை சுட்டிக் காட்டியவன்

“இந்த இடத்துலதான் நந்தா என் அம்மா அப்பாவை தகனம் செஞ்சோம். பன்னெண்டு வருஷமாச்சு”

கீழே இறங்கியவள் அவன் வண்டியின் முன் சென்று அவன் முகத்தை அவள் புறமாகத் திருப்பினாள்.

“ப்ரித்வி…..  ஜானு சொன்னா கேப்பிங்கல்ல”

மௌனத்தை சம்மதமாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்தாள்.

“இன்னைக்கு உங்க அம்மா அப்பா நினைவுநாள்ன்னு தெரியும். அதுனாலதான் காலேஜைக் கட்டடிச்சுட்டு உங்களைப் பார்க்க வந்தேன். இன்னைக்கு முழுசும் அவங்களோட கழிச்ச இனிமையான அனுபவங்களை என்கிட்டே பகிர்ந்துகிறிங்க. அவங்க கூட போன இடத்துக்கெல்லாம்  என்னைக் கூட்டிட்டு போறிங்க. நீங்க வழக்கமா சாப்பிடற ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போறோம்”

ப்ரித்வியின் பைக் சீறிப் பாய்ந்தது. அம்மா சமைக்கும்  முறுகல் தோசை, அப்பா செய்யும் ஸ்வீட் லஸ்ஸி, அம்மா வெள்ளிக் கிழமைகளில் விஜயம் செய்யும்  தேவி தாலப்  மந்திர், அப்பா கற்றுக்கொடுத்த ஹாக்கி விளையாட்டு, குரு கோவிந்த் சிங்க் ஸ்டேடியத்தில் குடும்பத்துடன் கண்டு கழித்த புட்பால் மேட்ச்கள் என அடக்கி வைக்கப்பட்ட ப்ரித்வியின் நினைவுகள் நந்தனாவின் முயற்சியால் வெளி வந்தது.

“ப்ரித்வி ஜானுன்னா என்ன? “

“திடீருன்னு உனக்கேன் இந்த சந்தேகம் நந்தா”

“இல்ல நேத்து கர்ஜீவன் அங்கிள் கூட ஆன்ட்டியை ஜானுன்னு கூப்பிட்டாரா நான் அங்க போயி நின்னேன். அவரு ப்ரித்வியோட ஜானுவைக் கூப்பிடல என்னோட ஜானுவைக் கூப்பிட்டேன்னு சொன்னார். நீங்க வழக்கமா என்னை ஜானுன்னு தானே கூப்பிடுறிங்க  அதனால கேட்டேன்”

“உனக்கு எப்படி நந்தா புரியவைப்பேன். எங்கம்மாவை எங்கப்பா ஜானுன்னு கூப்பிடுவார். உங்கப்பா உங்கம்மாவை என்ன சொல்லிக் கூப்பிடுவார்”

“தெரியலையே ப்ரித்வி. அம்மாதான் நான் பொறந்தவுடனே செத்துட்டாங்களே”

“உன் பெரியம்மா பெரியப்பா விஷயத்தை சொல்லு”

“பெரியம்மா இருக்குறப்ப பெரியப்பா வாயே திறக்க மாட்டார், அவங்க இல்லாதப்ப கொஞ்சம் அந்த சனியனுக்குத் தெரியாம வத்தக் குழம்பு வச்சுத் தர்றியாம்மான்னு கேப்பார்”

சத்தமாக சிரித்தவன் “தப்பான உதாரணம் எடுத்துட்டோம் போலிருக்கு. உனக்கு தெரிஞ்ச வேற யாராவது ஆளுங்களைப் பத்தி நீயே சொல்லு”.

“எங்க ஊர்ல எல்லாரும் குழந்தை பேரை சொல்லி அவங்கம்மா, அவங்கப்பான்னுதான் சொல்லுவாங்க. லதாம்மா, ரவிஅப்பா இப்படி. ஹாங்… நினைவு வந்துடுச்சு என் ப்ரெண்டை அவ வீட்டுக்காரர் பாப்பான்னு தான் கூப்பிடுவாராம். நாம ஊர்லதான் வீட்டுக்கு ஒரு பாப்பா இருக்கே”

ப்ரித்வி குறும்புப் பார்வை பார்த்தான்

“அப்ப ஜானுன்னா பாப்பாவா. நான் பேபின்னு கூப்பிடக் கூடாதுன்னு சொன்னதால ஜானுன்னு சொல்றிங்களா”

“இப்போதைக்கு அப்படியே வச்சுக்கோயேன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 35

 “சாதிச்சுட்டிங்க பாபு” கை குலுக்கினார் ராஜு. “சாதிச்சுட்டோம்” திருத்தினான் ஜிஷ்ணு. அவனது உழைப்புக்குக் கிடைத்த பலன். முதன் முறையாக, கடன் போக லாபமாய் அரை கோடி அவன் கைகளில் நின்றது. சந்தனா பெயரில் ஒரு நூறுகிராம் தங்கக் கட்டி வாங்கினான். வேலை

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’

மும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ்.  “சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப ட்ரைன் லேட் அது இதுன்னு பயணம்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புல்தரையில் அங்கும் இங்குமாய் கூட்டம் நிறைந்திருந்தது. காதம்பரி கல்பனாவுடன் நுழைந்த பொழுது அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது உரையாடலை நிறுத்திவிட்டு காதம்பரியையே வெறித்துப் பார்த்தனர். அவர்கள் பார்வையிலிருந்து எதையுமே அவளால் ஊகிக்க முடியவில்லை. அங்கிருந்த சிலர் உடனிருந்தவர்களிடம்