Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’

அத்தியாயம் – 14

 

கௌமாரியம்மா என் மேல அன்பு செலுத்த இந்த உலகத்தில யாருமே இல்லையான்னு உன்னைக் கேட்டுட்டுத்தான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். ஆனா என்னைக் காப்பாத்தி புது வாழ்க்கை தந்த ப்ரித்வியை நல்லா வை. இனிமேலும் ப்ரிதிவியை சோதிக்காதே. அவர் ஆரோக்கியமா இருக்கணும். அவர் தொழில் நல்லபடியா இருக்கணும். சந்தோஷமா இருக்கணும்’

 

சந்தனநிறத்தில் கழுத்தை சுற்றி மரூன் வேலைப்பாடு செய்யப்பட்ட சுடிதார், மரூன் துப்பட்டா, அவள் திரும்போதெல்லாம் சேர்ந்து அசையும் குட்டி ஜிமிக்கி, நெற்றியின் மத்தியில் சிவப்பு மச்சமாய் அழகு சேர்த்த மரூன் பொட்டு, சின்ன மூக்குக்கு அரக்கு மூக்குத்தி என புதிதாய் ப்ரித்வி வாங்கித் தந்திருந்த அனைத்தையும் அணிந்து கொள்ளை அழகாய் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் நந்தனா. அவர்கள் பூஜை அலமாரியான சமையலறை அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அம்மனின் படத்தின் முன்பு கைகுவித்து, கண்மூடி சாமி கும்பிட்டவளின் முகத்தில் மாறி மாறி தோன்றிய உணர்வுகளைக் சமையலறைக் கதவின் மேல் சாய்ந்து நின்றபடி ரசித்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி.

 

“நந்தா… சாமிகிட்ட வேண்டுதலை சாயந்தரம் வந்து கண்டினியூ பண்ணு. காலேஜுக்கு நேரமாச்சு பாரு” அன்று முதல் நாள் கல்லூரி அவளுக்கு.

 

“ப்ரித்வி…. “ கைகளில் சாமிக்கு முன்பு வைக்கும் விபூதி குங்குமத் தட்டை எடுத்து அவன் முன்னே நின்றாள்.

 

“இன்னைக்கு முதல்நாள் காலேஜ் போறேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுறிங்களா”

 

“இதென்ன பழக்கம் நந்தா”

 

“எங்க ஊர்ல புதுசா ஏதாவது ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பெரியவங்கட்ட ஆசீர்வாதம் வாங்குவோம். நான் பி.எஸ்சி சேர்ந்தப்ப ராஜேந்திரன் அண்ணனோட அப்பாதான் ஆசீர்வாதம் செஞ்சாரு. ப்ளீஸ் ஆசீர்வாதம் பண்ணுங்களேன்”

 

காலில் வணங்கி எழுந்து, கண்மூடி முகத்தைக் காட்டினாள்.  திருநீரைப் பூசிவிட்டவன் கையோடு குங்குமத்தையும் வைத்துவிட்டான்.

 

“நல்லா படிச்சு, நல்ல பெயர் வாங்கு. புஸ்தகம் படிக்கிறது மட்டும் படிப்பில்ல. இந்த உலகத்தையும் கூட சேர்த்துக் கத்துக்கோ” தோள்களைத் தட்டி உற்சாகப் படுத்தினான்.

 

“எனக்கு இங்க யாரையும் தெரியாது ப்ரித்வி. பாஷை கூட சரியாத்  தெரியாது. பயம்மா இருக்கு” பயத்தால் கலங்கினாள்.

 

“ஜானு என்னைக் கூட போனமாசம் வரை உனக்குத் தெரியாது. இப்ப கதையே மாறிடுச்சுல்ல. இங்க வந்த அன்னைக்கே கர்ஜீவன் அங்கிள் குடும்பத்தோடு நல்லா பழக ஆரம்பிக்கல. அதே மாதிரிதான் பேபி. முதல் ரெண்டு நாள் பயம்மா இருக்கும். அப்பறம் பிரெண்ட்ஸ் குரூப்போட சேர்ந்துட்டு என்னை ஆடம் டீஸ் பண்ணுவ. சியர் அப் டியர்”

 

மென்மையாக அவளது முன்நெற்றியில் முத்தமிட்டவனைத்  தடுக்கத் தோன்றாமல் நின்றாள்.

 

ப்ரித்வியின் இரட்டைப் படுக்கையறை வீட்டில் ஒன்று ப்ரித்வியின் அறையாகவும் மற்றொன்று நந்தனாவின் அறையாகவும் உருமாறியிருந்தது.

 

காலையில் கம்பனி போகும்முன் கல்லூரியில் இறக்கிவிட்டு செல்வான் ப்ரித்வி. மதியம் கண்டிப்பாய் வெளியே நண்பர்களுடன்தான் சாப்பிட வேண்டுமென்பது அவன் கட்டளை. சிரமேற்கொண்டு முடிப்பாள். அனைவரிடமும் பேசினாலும் அவளது மனது ப்ரித்வியை திரும்பப் பார்க்கும் நொடியை நினைத்துக் கொண்டேயிருக்கும்.  மாலை கல்லூரியிலிருந்து நடந்து வீட்டுக்கு வந்துவிடுவாள். வீட்டில் முடிந்தால் இட்லி, தோசை, பொங்கல் என தமிழ்நாட்டு சமையல் செய்து கொண்டே அவளும் கர்ஜீவனின் செல்வங்களும் பாடம் படிப்பார்கள். தினமும் மித்தாலியும் பக்கத்து வீட்டிலிருந்து பைங்கன், ராஜ்மா, பஞ்சாபி கடி என எதையாவது சாப்பிடத் தந்தவாறே இருப்பார்.

 

“ப்ரித்வி நான் இந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாயிட்டேன்” குறை சொன்னவளை நெருங்கிய ப்ரித்வி இடது கையால் அவளது இடுப்பை வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருகைகளிலும் அலேக்காகத் தூக்கினான். அவனது ஷேவிங் கிரீமின் வாசம் முகருமளவுக்கு இருந்த நெருக்கத்தில் மூச்சடைத்துப் போனாள் நந்தனா

 

“ரொம்ப இல்ல நந்தா, ஒரு மூணு கிலோ வெயிட் போட்டிருப்ப” என்றவாறே தரையில் இறக்கினான். கூச்சத்துடன், பதில் பேசாமல் அவனுக்குக் காப்பி கலக்கும் சாக்கில் சமையலறைக்கு சென்ற நந்தனாவின் தரிசனம் மறுபடியும் ஒருமணி நேரம் கழித்துத்தான் ப்ரித்விக்குக் கிடைத்தது. என்னவென்று தெரியவில்லை ப்ரித்வி தொட்டால் அவளுக்குக் கூச்சமாக இருக்கிறது. ஆனால் அவனோ அதை உணருவதாகத் தெரியவில்லை. ஒருவேளை இப்படித் தொட்டுப் பேசுவது வடநாட்டு வழக்கம்போலும் சமாதானப்படுத்திக் கொண்ட நந்தனாவின் மனதுக்கு ப்ரித்வி தன்னைத்தவிர மற்ற பெண்களிடமிருந்து ஓரடி தள்ளியே நிற்பது உரைக்கவில்லை.

 

முதல் செமஸ்டர் விடுமுறையின்போது ப்ரித்வி தனது பேக்டரிக்கு நந்தனாவை அழைத்துச் சென்றான்.

 

“நந்தா இங்க நம்ம கிரிக்கெட் பால் தயார் செய்றோம். இதுக்கு உருண்டை வடிவமான கார்க் வேணும். அப்பறம் நாலு துண்டுகளாய் வெட்டப்பட்ட லெதர். இரண்டு இரண்டு துண்டுகளை இணைத்து இப்படி ரெண்டு செமி சர்க்கிள் கப்பா  கொண்டு வருவோம். அப்பறம் அதை வைச்சு இந்தக் கார்க்கை மூடி இரண்டு பாதியையும் அப்படியே தச்சுடுவோம். இந்தமாதிரி தைக்கிற வேலை கைலதான் செய்யணும். அது ஒரு அருமையான கலை. தைச்சப்பறமும்  பால்  உருண்டை வடிவத்துல இருக்காது. சோ மில்லிங் பண்ணுவோம். அதாவது இந்த மெஷின் அடில வச்சு அதுக்கு எல்லா திசைகளிலும் அழுத்தம் கொடுத்து உருண்டை வடிவத்துக்குக் கொண்டு வருவோம். அப்பறம் ரெண்டு சோதனைகளை செய்வோம். முதலாவது ரிங் டெஸ்ட். மூன்று வெவ்வேறு அளவிலான ரிங் உள்ள பாலோட எல்லா பக்கங்களும்  சிரமமில்லாம போய் வரணும். அப்பரம் வெயிட் 156-163 கிராம்கள் இருக்கணும். இது எல்லாத்திலையும் பாசானவுடனே அதுக்கு மேக்கப் போட்டு பளபளப்பாக்குவோம்” அவளுக்குப் புரியும்படி தெளிவாக சொன்னான்.

 

 

“அப்பா அம்மா இறப்புக்கு இழப்பீடா வந்த பணம், அப்பா பிசினெஸ்ல வந்த ஷேர், அப்பறம் வீட்டு வாடகை எல்லாமும் என் படிப்புக்கு உதவுச்சு. மிச்சமிருந்த பணத்தை சுத்தமா வழிச்செடுத்து இந்த கம்பனியை ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில ரொம்ப கஷ்டப்பட்டேன் நந்தா. சாப்பாட்டு செலவுக்கு மட்டும்தான் இதுலேருந்து வருமானத்துல இருந்து பணம் எடுப்பேன். மத்ததை அப்படியே தொழில்ல  போட்டுடுவேன். எப்படியோ இப்ப கிரிக்கெட் உபகரணங்கள் ஏற்றுமதி செய்யுற அளவுக்கு வந்திருக்கோம். இது தவிர கிரிக்கெட் பாட் செய்யுற பேக்டரி ஒண்ணும் ஆரம்பிக்கணும்” கண் சிமிட்டியபடி சொன்னான். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அவன் ஏற்றுமதி செய்வதையறிந்து ஆச்சிரியப்பட்டாள்.

 

 

 

“கஞ்சப்பிசுநாரி ப்ரித்வி…. இவ்வளவு பெரிய பேக்டரி வச்சுட்டு…  ஒரு குட்டி அப்பார்ட்மென்ட், ரயில் பயணம், ஓட்டை பைக்ன்னு ஊரை ஏமாத்திட்டிருக்கிங்க. இனிமே பாருங்க நீங்க சம்பாரிக்கிற காசை நான் எப்படி செலவு செய்யப் போறேன்னு” பைக்கின் பின்னே அமர்ந்தபடியே சொன்னாள் நந்தனா.

 

 

“உனக்கில்லாததா ஜானு…. தாராளமா செலவு செய். உன் முதல் குற்றச்சாட்டு, நம்ம அப்பார்ட்மென்ட், அது எங்க அம்மா அப்பா வாங்கினது. எத்தனை கோடி சம்பாதிச்சாலும் அதை விட்டுப் போக மாட்டேன். செகண்ட், ஐ லவ் ட்ரைன் ட்ராவல். சோ ட்ரைன்ல போறேன். அப்பறம் பைக் மாதிரி வசதி வேற எங்க வரும். அதெல்லாம் உனக்கு இப்ப சொன்னாப் புரியாது” என்றவாறு சடன் பிரேக் அடிக்க, நிலைகுலைந்து அவன் மேல் சாய்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டவள், சில வினாடிகளில் விலகினாள்.

 

“சாரி ப்ரித்வி, பிரேக் அடிக்கவும் பாலன்ஸ் பண்ண முடியல”

 

“அதனாலதான் இப்படி என்னைப் பிடிச்சுக்கோன்னு சொல்றேன்” அவளது கைகளை எடுத்துத் தனது இடுப்பைச் சுற்றிக் கொண்டான்.

 

ந்தனாவின் அறையில் பாதி நேரம் ஒன்பது வயது அனோக்கும் ஏழு வயது அனூப்பும் வாசம் செய்தனர். அவர்களுடன் பேசிப் பேசியே பஞ்சாபி கலந்த ஆங்கிலத் தொனி பழகிவிட்டது நந்தனாவுக்கு. வீட்டுப்பாடம் சொல்லித்தரும், அம்மாவைப் போல ஹிந்தி சீரியல் பார்த்து அழாமல் தங்களுடன் கார்டூன் பார்க்கும், கடைக்குக் கூட்டிப் போய் ஐஸ் கிரீம் வாங்கித் தரும், முக்கியமாய் அருமையான மசாலா தோசை ஒரு வாளி சாம்பாருடன்  செய்துத் தரும் தீதியை அந்தப் பொடியர்களுக்கும் பிடித்ததில் வியப்பில்லை. பாதி நாள் வீட்டிலேயே உறங்கிவிடுபவர்களை காலையில் அனுப்புவதாக அவர்கள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் நந்தனா.

 

ஹாலில் அவள் மேல் காலைப் போட்டவாறே தூங்கிய சிறுவர்களைப் பொறாமையோடு பார்த்தான் ப்ரித்வி.

 

“இந்த தடியனுங்க இப்படி உதைச்சா உன்னால எப்படித்  தூங்க முடியும்? டேய் எந்திருங்கடா” கடுப்போடு எழுப்பினான்.

 

“இருக்கட்டும் ப்ரித்வி. நான் தனியாவேதான் தூங்குவேன் தெரியுமா? சில சமயம் இருட்ல பயம்மா இருக்கும். ஆனா யாருமே பக்கத்துல இருக்க மாட்டாங்க. லைட் போட்டா பெரியம்மா திட்டுவாங்க. அதனால அவங்களுக்குத் தெரியாம சின்ன மெழுகுவர்த்தி ஏத்தி வச்சுப்பேன். இப்ப உங்க எல்லார் கூடவும்  இருக்குறப்ப தனிமையே தெரியல” புன்னகைத்தாள்.

 

என்ன நினைத்தானோ ப்ரித்வியும் தனது தலையணையை எடுத்துப் போட்டு ஹாலிலே உறங்கிவிட்டான். அன்றிலிருந்து நால்வருக்கும் டீவி பார்த்தபடி வரவேற்பரையில்தான் உறக்கம் என்றானது.  அதில் பாதிநாள், இரவில் ப்ரித்வி தன்னை இமை கொட்டாமல் பார்ப்பதை நந்தனா உணர்ந்தாளா?

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 10

“மாமியார் வீட்டுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி அம்மாவக் கும்பிட்டுக்கோ” பக்கத்து வீட்டு அவ்வா பார்வதியிடம் சொன்னார். சிவகாமியின் மறைவால் ஒரு வருடம் தள்ளிப் போயிருந்த திருமணம் அப்போதுதான் நடந்திருந்தது. கண்ணீருடன் படமாயிருந்த தாயை வணங்கிக் கிளம்பினாள் பார்வதி. கிளம்பும்போது ஒரு கேவல் எழுந்தது

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 3’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 3’

செந்தில் வீட்டுக்கு சிவபாலன் குடியேறினான். காலை ஏழுமணிக்கு அலுவலகம் கிளம்புபவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்புவான். இந்த சில நாட்களில் சிவா  கவனித்தவரை, அந்த வீட்டின் ராணி செந்திலின் மனைவி சோனாதான். மும்பையில் பிறந்து வளர்ந்தவள். மும்பையிலிருக்கும் ஒரு பெரிய கடையில் விற்பனைப்