Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’

அத்தியாயம் – 3

கைபேசி சரி செய்ய முடியாத அளவுக்கு பழுதாகிவிட்டதே… சரி செய்ய வேண்டுமென்றால் வெளியே செல்ல வேண்டும். இறுதித் தேர்வு முடிந்துவிட்டதால் வெளியே செல்ல பெரியம்மாவின்  ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

 

அப்படியே வெளியே சென்றாலும் இப்போதெல்லாம் ஈயென இளித்தபடி பிரதாப் வந்துவிடுகிறான். இப்போதெல்லாம் வாய்க்கால்பாறையை மறந்துவிட்டு பெரியகுளத்திலேயே டேரா போட்டுவிடுகிறான். அந்தப் பகுதியில் ஒரு மாதிரிப்பட்ட பெண்கள் வீட்டுக்கு தவறாமல் ஆஜராகிவிடுவதாக செவிவழிச் செய்தி.

 

“என்ன நந்து குட்டி வெளியே போறியா?”

 

அவனது மூஞ்சியும், துகிலுரியும் பார்வையும் கண்டாலே பிடிப்பதில்லை நந்தனாவுக்கு. பதிலே பேசாமல் விரைந்து நடை போடுவாள்

 

‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’ என சீட்டியடித்தபடி

“உனக்குத் துணையா வரத்தான் நான் பொறந்திருக்கேன். இதை நீ எப்ப புரிஞ்சுக்கப் போற”

 

“இது தெரிஞ்சிருந்தா நான் பொறந்திருக்கவே மாட்டேன்” அடிக்குரலில் சீறுவாள்.

 

“யாருடா பொண்ணுகிட்ட தகராறு பண்ணுற காவாலிபய” என்று எங்காவது குரல் கேட்கும்.

 

அதன்பின்தான் வேறு வழியில்லாமல் “அது என்னவோ தெரியல நந்துகுட்டி, நீ திட்டினாக் கூட இந்த மாமனுக்குக் கொஞ்சுறாப்பிலதான் இருக்கு. உன் திட்டே இவ்வளவு இனிமையா இருந்தா…. நீ என்னைக் கொஞ்சும்போது….. “ சிலிர்த்தபடி செல்வான். அருவருத்தபடி நகருவாள் நந்தனா.

 

இந்தத் தறுதலையால் நந்தனாவுக்கு வெளியே செல்லும் ஆசையே போய்விட்டது. தொடர்பு கொள்ள என்ன செய்வது என மாட்டுக்குக் கழனித்தண்ணியில்  தவிட்டைக் கலந்தபடியே யோசித்தாள் .

 

“ஸ்…. ஸ் … ” சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டு ராஜேந்திரன் மாட்டு கொட்டகையருகே  நின்றிருந்தான்.அவனை அண்ணன் என்று அழைத்தாலும் வயதுக்கு வந்தபின் நந்தனாவை அவனுடன் பேச அனுமதித்ததில்லை ஆரியமாலா. பெரியம்மாவின் மனம் தெரிந்து நந்தனாவும் வீட்டுக்கு சென்று அடைந்தாளானால் அடுத்தவரிடம் பேசுவதைத் தவிர்த்து விடுவாள்.

பணம், படிப்பு, கம்பீரம், முக்கியமாய் அம்மா இல்லை இதெல்லாம் கணக்குப் போட்டு ராதாவுக்கு அவனைப் பேசலாம் என்ற நினைப்பு ஆரியமாலாவுக்கு உண்டு. கணக்குத் தப்பி தன்  மகளை விட அழகும் பணமும் நிறைந்த நந்தனா அவன் மனத்தைக் கவர்ந்து விட்டால், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதல்லவா.

இவ்வளவு நாள் வெளியூரில் படித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரன் தொழில் தொடங்கப்போகிறேன் என்று ஊருக்கு வந்ததில் ஆரியமாலாவுக்குத் தான் வெகு வருத்தம்.

“தீவெட்டித் தடியன்…  எம்பிஏ படிச்சுபுட்டு வேலைக்குப் போவானா? கடை  வைக்கப்போறேன்னு இந்த ஊருக்குள்ளயே சுத்திகிட்டிருக்கான்” திட்டி மனதை ஆற்றிக் கொள்வாள்.

 

ராஜேந்திரனின் குரலுக்கு பதிலளித்தாள் நந்தனா

 

“சொல்லுங்கண்ணா”

 

“இந்தா என் போனை வச்சுக்கோ”

 

“வேண்டாம்னா”

 

“இது பழசுதான். நான் புது மாடல் வாங்கிட்டேன். இதுக்கு வேணும்னா பணம் வாங்கிக்கிறேன். ஆமா அந்த போன் எப்படித்  தண்ணில விழுந்தது”

 

“ஓரமாத்தான் வச்சிருந்தேன். பெரியம்மா கைதவறி போன் மேலத் தண்ணி கொட்டிடுச்சு. அப்ப கூட நம்பர்தான் டிஸ்ப்ளே ஆகல மத்தபடி வேலை செஞ்சது. பெரியப்பா சரி செஞ்சு வாங்கிட்டு வந்தார். அப்பறம் சுத்தமா வேலை செய்யல”

 

‘உன் பெரியம்மா கை தவறி தண்ணி கொட்டினாளா…. நம்பவே முடியல… ‘ மனதில் எண்ணியபடி. “சரி இந்த போனை யார் கண்ணிலும் படாம வச்சுக்கோ. நாளைக்குத்  தேனிக்குப் போறோம். உனக்கு ஏதாவது வேணுமா?” நந்தனாவின் இல்லை என்ற தலையாட்டலைக் பெற்றுக் கொண்டு தன் வீட்டுக்குள் சென்றான்.

 

அவனுக்குத் தெரியவில்லை மறுநாள் பொழுது அவர்களது வாழ்க்கையில் சடுகுடு விளையாடத் தயார் நிலையில் காத்திருக்கிறதென்று.

 

ண்ணுக்குத் தெரிந்தவரை பச்சைக் கம்பளி போர்த்தினாற்போல் பசுமை. மலை மங்கையின் தாவணியில் போட்ட டிசைன் போல, மலைகளுக்கு இடையே மெல்லிய கோடுகளாய் தெரிந்த மலைப்பாதை. அதில் எறும்பாய் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். காதுகளில் வந்து ரீங்காரமிட்ட வண்டுகள், அவற்றைத் தள்ளிவிட்டு ரகசியம் பேசிச் சென்ற வாடைக் காற்று, அதில் கலந்து வந்த ஏலக்காய் மணத்தை நன்றாக இழுத்து உள்வாங்கினான் ப்ரித்வி. சிறிதாக பெய்த தூறல் கூட அவனை வாழ்த்தும் பன்னீராய் கற்பனை செய்து கொண்டான்.

 

“என்னடா இந்த ஊர் இவ்வளவு அழகா இருக்கு. ஊட்டி கொடைக்கானல் மட்டும்தான் அழகுன்னு நெனச்சேன்.உங்க போடி அந்த எண்ணத்தைப் போடின்னு சொல்லிடுச்சு”

“அப்பறம்… போடினாயக்கனூருக்கு சும்மாவா ‘தென்னகத்து காஷ்மீர்’ன்னு பேர் வந்திருக்கும். அழகான ஊர், தேவதை மாதிரி பொண்டாட்டி ரெண்டையும் விட்டுட்டு வெளியூர் போக மனசு வராது. அதுமாதிரிதான் என் கதையுமாயிடுச்சு”

 

“முதல் பாயிண்ட் சரி. ரெண்டாவதா வந்த தேவதை யார்?”

 

“வித்யா… அவதான் தேவதை போதுமா?”

 

“மச்சான் இதுவரை நீ சொல்லவே இல்ல பாரு… ”

 

“இதன்னடா வம்பா போச்சு. நீதான் கேட்கவே இல்லையே”

 

“கேட்டாத்தான் சொல்லணுமா”

 

“சொல்லணும்னுதான் இன்னைக்குக் கூட்டிட்டு வந்தேன். இன்னமும் அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல.  வித்யா கோடங்கிப்பட்டில இருக்குறா. அவ பெரியம்மா வீடு நம்ம தெருவுலதான்  இருக்கு. அங்க வந்தப்ப ரெண்டு மூணு தடவை பாத்தேன். மனசுக்குப்  பிடிச்சுடுச்சு.  முதல்ல அவளைக் காமிக்கிறேன். அப்பறம் மத்த இடங்களைப் பார்த்துட்டு ஊருக்குக் போறோம்.”

 

வித்யாவை தூரத்திலிருந்து காட்டினான் ராஜேந்திரன். ‘இதுக்குத்தான் என்னை காலைல எழுப்பிக் கூட்டிட்டு வந்தியா. நம்பி வந்தேனேடா….  நீ ஜொள்ளு விட்டுட்டு வாடா மாப்பிள்ள. நான் கோவிலை சுத்திப் பாக்குறேன்’ என்று கழண்டு கொண்டான். அங்கிருந்தவர்களின் வாயிலாக இருநூறு வருடங்களாக வற்றாமல் தண்ணீர் கொட்டும் அக்க்ஷய தீர்த்தத்தின் பெருமையைக் கேட்டான்.

 

மழை பெரிதாக ஆரம்பிக்கவும் இருவரும் பெரியகுளம் திரும்பினர்.

“அப்பா போன் பண்ணார். அத்தைக்கு உடம்பு சொகமில்லையாம். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம். அவங்களைப் பாக்க அப்பா மதியம் திண்டுக்கலுக்குக் கிளம்பிட்டார். வர ரெண்டு நாளாகுமாம். உன்கிட்ட சொல்ல சொன்னார்.”

 

தலையாட்டினான் ப்ரித்வி. பின்னர் மதியம் தேனி பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தியேட்டரில் புது ரிலீஸ் படத்தைப் பார்த்து விசிலடித்து ஒரு அலப்பறை செய்தனர். படம் முடிந்தவுடன் தேனி இன்டெர்நேஷனல் ஹோட்டலில் பெப்பர் மட்டனை ஒரு பிடி பிடித்துவிட்டு பஸ் ஏறினர்.

 

“வழக்கமா இந்த நேரத்துல சுருளி, தேக்கடி, கும்பக்கரைன்னு களை கட்டும். வராதவன் வந்திருக்க… எல்லா இடத்தையும் சுத்திக் காமிக்கலாம்னு நெனச்சேன். இந்த வருஷம் என்னடான்னா வானம் இப்படி பொத்துகிட்டு  ஊத்துது. வராக நதிலயும் வெள்ளமாம். நீ ஓவரா நல்லவனா மாறிட்டியோ. வரப்ப மழையையும் கூட்டிட்டு வந்திருக்க”

 

“பரவால்ல இன்னொரு தடவை வரும்போது பார்த்துக்கலாம்” சமாதானப்படுத்தினான் ப்ரித்வி. இருவரும் தேனியில் சாப்பிட்டுவிட்டு பெரியகுளம் வர ஒன்பது மணியாகிவிட்டது. அந்த நேரத்திலேயே கடை கண்ணிகளை சாத்திவிட்டு அனைவரும் வீட்டினுள் அடைந்திருந்தனர். டீ வேண்டாம் என்று மறுத்த ராஜேந்திரனை வீட்டுக்குப் போக சொல்லிவிட்டு, திருமலை கடையில் டீ  குடித்துவிட்டு, முதல்நாள் அவனுக்குத் தர வேண்டிய டீ பாக்கியைத்  தீர்த்தான்.

 

மழையில்  வேகமாய் நடந்தவனுக்கு, கண்ணை மறைத்த மழையைப் பொருட்படுத்தாமல் வேகமாய் ஆற்றை நோக்கி ஓடிய  ஒரு உருவம் கண்ணில் பட்டது. நடந்ததை அவன் உணரும் முன்பே பெருக்கெடுத்தோடிய வராக நதியின் வெள்ளத்தில் குதித்து விட்டது. ஒரு வினாடி சுதாரித்தான். அவனிருக்கும் திசையில் ஓடி வந்த நதியில் குதித்தான். பத்து நிமிடப் போராட்டத்தில் நீளமான முடி கையில் சிக்க, போராடிக்  கரையை அடைந்தான். மயங்கியிருந்த அந்தப் பெண்ணை மின்னல் ஒளியில் உற்றுப் பார்க்க,

 

“நந்தா…” அவன் வாய் முணுமுணுத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39

காலையில், தீயாய் எரிந்த கன்னங்களைத் தடவியபடி கண்ணாடி முன் நின்றான் ஜிஷ்ணு. “சரவெடி… அடின்னா அடி பலே அடிடி. இந்த மாதிரி ஒரு அறையை நான் யார்கிட்டயும் வாங்கினதே இல்ல. உனக்கு என் மேல வெறுப்பு வரணும்னுதான் அந்த கிஸ்ஸை தந்தேன்.

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’

செந்தில் வேண்டா வெறுப்பாய் சிம்லாவுக்கு விமான டிக்கெட்டுகள் வாங்கித் தந்தான். சுமனுக்கு மறுக்கவும் முடியவில்லை. அவனுக்கும் இளம் மனைவியுடன் தனியே நேரம் செலவிட ஆசை. சுமன் கட்டிக்கொண்டிருக்கும் சில கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்தது. புதிதாய் சில ப்ராஜெக்ட்ஸ் கிடைத்தது.