Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07

இதயம் தழுவும் உறவே – 07

 

திருமண ஆரவாரங்கள் முடிந்த கையோடு யசோதாவை கவியரசன் கல்லூரியில் சேர்த்திருந்தான். “என்ன தம்பி கல்யாணம் ஆகி ஒரு வாரம் தானே ஆச்சு. அதுக்குள்ள புள்ளைய படிக்க அனுப்பற” என மீனாட்சி தான் குறைபட்டார்.

“அம்மா காலேஜ் தொடங்கி ஒரு மாசம் முடிஞ்சது. இதுவே தாமதம். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு போனா அவளுக்கு தான் கஷ்டம் மா” என கவியரசன் எடுத்துக்கூற, மகனுக்கு மருமகள் மேல் இருக்கும் கரிசனத்தில் மனம் நெகிழ்ந்து போனார் அந்த அன்னை.

இப்பொழுது பார்த்திருக்கும் கல்லூரி அவனின் வீட்டிற்கு அருகிலேயே அமைந்திருந்தது. யசோதா காலை பேருந்தில் சென்று மாலை பேருந்தில் வீடு திரும்பி விடலாம்.

கல்லூரியின் முதல் நாள், கவியரசன் தான் அவளை கல்லூரிக்கு அழைத்து சென்றான். செல்லும் வழியிலேயே எந்த பேருந்து நிறுத்தத்தில் அவள் ஏற வேண்டும் என்று காட்டிக் கொடுத்ததோடு, அவளது கல்லூரி பேருந்து நிறுத்தத்தையும் காட்டி கொடுத்தான். அவளை சிறுகுழந்தையைப் போன்று நடத்தும் அவனது செய்கையில் அவளுடைய தந்தையின் நினைவு மனதில் எழ, அவள் சற்று நெகிழ்ந்து போனாள்.

கல்லூரி வாசலில் யசோதாவை இறக்கி விட்டவன் மெலிதாய் கலங்கிய அவளது விழிகளைப் பார்த்து, “ஏன் ஒருமாதிரி இருக்க?” என அவளது முகத்தையே ஆராய்ந்தபடி கேட்க,

“அப்பா ஞாபகம்” என்றாள் மனதை மறையாது. என்ன சொல்லி தேற்ற என்று தெரியாதவன், ஆதரவாக அவளது இரு கரங்களையும் அழுத்தி பிடித்துக் கொண்டான்.

‘நான் உன்னை நல்லா பாத்துப்பேன்’ என நா வரை எழுந்த வார்த்தைகளை, இருவரும் தத்தம் கோபத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் சொல்ல பிடிக்காமல், தனக்குள் விழுங்கிக் கொண்டான்.

கவியரசனுடைய கரங்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளிடம், “ஆல் தி பெஸ்ட். என்ன தேவைன்னாலும் சொல்லு. உனக்குள்ளேயே வெச்சுக்க கூடாது” என கூறி வழி அனுப்ப, அவனிடம் சிறு தலையசைப்போடு விடைபெற்றாள் யசோதா.

கவியரசனின் மனதினில் மெலிதான இதம் பரவ, அந்த இதம் அவன் வீட்டிற்கு திரும்பி சென்ற சிறிது நேரத்தில் தொலைந்திருந்தது.

யசோதா கல்லூரி முடித்து திரும்பி வரும்போது தனக்காக காத்திருந்த கணவனை ஆச்சர்யமாக பார்த்தாள். மனம் ரகசியமாய் தித்திப்பை உணர்ந்தது. “காலையிலேயே வழி எல்லாம் காட்டி கொடுத்துட்டீங்களே” என வியந்து கேட்டவளிடம்,

“ஏன் வரக்கூடாதா?” என்றான் கோபமான குரலில்.

‘நான் எப்போ அப்படி சொன்னேன்? காரணமே இல்லாம இந்த கோபம் எதுக்கு?’ என மனதோடு நொந்தவள், அவளுக்கு இருந்த நல்ல மனநிலையில், “நீங்க வருவீங்கன்னு சொல்லலையேன்னு கேட்டேன். நான் கவனிக்காம போயிருந்தா…” என தன்மையாகவே விளக்கம் தந்தாள்.

தோளை குலுக்கியவன், “என் கவனம் தப்பாது” என்று சொல்ல, இவள் என்ன பதில் சொல்ல முடியும்? “ஓ…” என்றதோடு முடித்துக் கொண்டாள். அவன் ஏதோ கோபமாக இருப்பது மட்டும் தெளிவாக புரிந்தது. ஆனால், காரணம் தான் தெரியவில்லை. அவன் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வை உணர்ந்தும் எதுவும் பேசாமல் வண்டியை இயக்கினான். வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில், நோட்டுப்புத்தக கடையில் நிறுத்தி, அவளுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்ளும்படி கவியரசன் சொல்ல அவள் வெகுவாக தயங்கினாள். அவன் சற்றே முறைத்துப் பார்க்க, தேவையானவற்றை எல்லாம் வேகவேகமாக வாங்கிக் கொண்டாள்.

அப்பொழுதும் அவன் கோபம் குறையவில்லை. முதலில் ஏன் தயங்கி நின்றாள் என்பதாக அவனுக்குள் கோபம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. ஏற்கனவே வேறொரு கோபத்தில் இருந்தவனுக்கு, சின்ன விஷயம் கூட எரிச்சலை தந்தது. வீட்டிற்கு வந்து, தனியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவள் மீதான கோபம் அவளிடம் வெடிக்கவும் செய்தது.

“என்கிட்ட என்னடி வீராப்பு உனக்கு?” யசோதாவின் புஜங்களை அழுத்தி பிடித்து கவியரசன் காட்டமாய் கேட்க, எதுவும் புரியாமல் திருதிருத்தாள். கூடவே, அவனது நெருக்கம் அவளுள் மெலிதாய் பதற்றத்தை உருவாக்க திணறிப்போனாள்.

அவளுள் எழுந்த மெல்லிய தடுமாற்றம், படபடப்பு.. அவளது விழிகளில் தெரிந்த மிரட்சி… சிறிதே சிறிதாய் பிரிந்திருந்த இதழ்கள் என அவனுக்கு ஏதோ ஒரு நாளினை நினைவில் கொண்டு வர, அந்த நிமிடத்தின் கணம் தாங்காமல் அவளிடமிருந்து சட்டென்று விலகி நின்று கொண்டான்.

ஏன் இப்படி காரணமே இல்லாமல் கோபித்துக் கொள்கிறான் என சோர்ந்தவள், “அது… நீங்க தான் ஏற்கனவே நோட் எல்லாம் வாங்கி கொடுத்துட்டீங்களே, வேறென்ன வாங்கறதுன்னுதான் யோசிச்சேன். மத்தபடி எந்த வீம்பும் இல்லை” அவன் கோபத்தை தாங்க மாட்டாமல் அவன் முன்பு சென்று நின்று அவனுக்கு விளக்கம் தந்தாள். அவள் சொல்லாமல் கூட விட்டிருக்கலாம் தான், ஆனால், அந்த சிவந்த இறுகிய முகம், ஏதோ பெரிய விஷயம் என்பதை அவளுக்கு உணர்த்தியது. அதை புறக்கணிக்க அவள் மனம் விளையவில்லை.

இன்னும் கோபம் குறையாமல் உறுத்து விழித்தவனிடம், ‘இன்னும் என்ன?’ என்பது போல பாவமாய் பார்த்தாள்.

“காலையில அம்மா கிட்ட காசு கேட்டியா?” என சீற்றமாக கவியரசன் கேட்க,

“ஆமா, பஸ்ஸுக்கு போக வர வேணுமில்லை…” என உடனடியாக பதில் சொல்ல தொடங்கியவளுக்கு, அப்பொழுது தான் உரைத்தது அவன் கோபத்தின் மூலகாரணி எதுவென்று.

நுனி நாக்கை கடித்தவள், “அது… அது… எப்பவும் எங்க அம்மா கிட்ட தான் வாங்குவேனா… அந்த நியாபகத்துல… சாரி… அத்தை எதுவும் தப்பா எடுத்துட்டாங்களா?” என தவிப்போடு கேட்க,

“சமாளிச்சு வெச்சேன்” என்றான் எரிச்சலாக. அவனது குரலில் இருந்த பாவனையிலேயே சமாளிப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டிருப்பான் என்று அவளுக்கு புரிந்தது.

‘இதே போன்ற தவறை இரண்டாம் முறை செய்திருக்கிறோம்’ என்று புரிய அவளுக்கு அவள்மேல் சினம் தான் வந்தது. முகம் வாடி நின்றிருந்தாள்.

கணவனை சமாதானம் செய்யும் நோக்கத்தில், “வேணும்ன்னு சொல்லலைங்க” என பாவமாக கூறிவிட்டு அவன் முகத்தை ஏறிட்டாள். புரிந்து கொள்ளேன் என தவிப்பாய் அவள் ஏறிட, அவனுக்கு இருந்த எரிச்சலில் அவனால் அவளை புரிந்து கொள்ள இயலவில்லை.

“ஓ அதெல்லாம் தெளிவா… புரிஞ்சது… நீ வேணும்ன்னு செய்யலை. நான் வேணாம்ன்னு தான் செஞ்சிருக்க” என ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி நக்கல் தொனியில் சூடாக கேட்டான். அவனது வார்த்தைகள் தந்த வேதனையில், அவன் முன் அழக்கூடாது என்னும் சுயசட்டத்தை மறந்து யசோதா கண்ணீரை உகுத்திருந்தாள்.

அவளின் கண்ணீர் கண்ட பிறகே, அவனது வார்த்தைகளில் இருந்த கடினம் விளங்கியது. “ஸ்ஸ் யசோ… அழாதே! சாரி. தெரியாம… கோபத்துல…” அவளை நெருங்கி நின்றவன் அவள் கண்ணீரை துடைத்தபடி சமாதானம் கூற, தலையை மட்டும் உருட்டிக் கொண்டாள்.

“அம்மாவுக்கு ஏற்கனவே என் கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்ததேன்னு ரொம்ப கவலை. இப்போ தான் பரவாயில்லை. இப்ப நீ அவங்ககிட்ட இப்படி எல்லாம் கேட்டா, நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க. அவங்க எவ்வளவு வருந்துவாங்க தெரியுமா? அதான் கோபத்துல…” அவளது அழுகை நிற்காததால் தவிப்பாக சமாதானம் கூறினான்.

“சாரிங்க. இனி இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” என தேம்புபவளை பார்க்கவே பாவமாக இருந்தது. வெகுநேரம் போராடி தான் அவளை சமாதானமே செய்ய முடிந்தது.

யசோதாவின் விலகல், ஒதுக்கம் எல்லாம் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதோடு இவன் அவளிடமிருந்து விலகி இருப்பதையும் அவள் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் சாதரணமாக எடுத்து சொல்ல வேண்டிய விஷயங்களுக்கும் இந்த அளவு கோபம் வருகிறது என கவியரசனுக்கு புரிந்தது.

இதற்கு தீர்வாக யசோதாவின் மனம் மாறும் வரை அவளிடம் பேசுவதை குறைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்து கொண்டான். அதன்பிறகு, அதனையே பின்பற்றவும் செய்ய, அவளுக்கு அந்த வித்தியாசங்கள் புரியாத வண்ணம் அவளுடைய ஒவ்வொரு நாட்களும் வெகுவாக நீண்டு இருந்தது.

யசோதாவிற்கு கவியரசனின் வீட்டு சூழல் அழகாய் பொருந்தி போயிற்று. காலையில் எழுந்து கிளம்புவதற்கும், கணவனின் துணிகளையும், அவள் துணிகளையும் துவைப்பதற்கும் தான் நேரம் சரியாக இருக்கும். மாலை வந்து வீட்டை சுத்தம் செய்வது, இரவு சமையலுக்கு உதவுவது, பாத்திரங்களை ஒதுக்கி வைப்பது என எதையாவது செய்து தருவாள். இடையிடையே அந்த வீட்டின் குட்டி வாண்டு ஆதித்யாவுடன் விளையாட்டும்.

எழுத்து வேலை தான் சற்று அதிகமாக இருந்தது. கல்லூரி தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகு கல்லூரியில் இணைந்திருந்ததால், விட்டுப்போன பாடங்களையெல்லாம் உடன் படிக்கும் தோழிகளிடமிருந்து தினமும் நோட்ஸ் வாங்கி வந்து எழுதிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் படிப்பதும், கொஞ்சம் எழுதுவதுமாக அவள் இருக்க, கவியரசன் தான், “முதல்ல எல்லாத்தையும் உன் நோட்டுல எழுத்திக்க. அப்பறம் படிச்சுக்கலாம்” என அறிவுரை கூறினான்.

நல்ல அறிவுரை தான்! ஆனால், அவளால் அதை ஏற்க முடியாத சூழல். “இல்லை ரொம்ப நிறைய இருக்கு. ஒண்ணா எழுதவே முடியலை. கை ரொம்ப வலிக்குது. அதான்…” என தயக்கமாக அவனிடம் காரணத்தை கூறினாள்.

“ஓ…” என்றதோடு நிறுத்திக் கொண்டான். அவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால், தான் ஒதுங்கி இருக்கிறோம், பேசாமல் இருக்கிறோம் அப்பொழுதும் அதைப்பற்றி எந்த கவலையும் இன்றி திரிகிறாளே என்னும் கோபம் வேறு முணுமுணுப்பாய் இருந்து கொண்டே இருந்ததால் அவனது மன இளக்கத்தை அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.

அவன் ஒதுங்கி இருப்பது யசோதாவிற்கு புரிய தொடங்கியது. அதோடு, ‘அவன் ஏன் என்னை திருமணம் செய்தான்?’ என்னும் கோபமும் அவளுக்குள் குறையாதிருக்க, அவனை சமாதானப்படுத்தும் எண்ணம் அவளுக்கு அறவே இல்லை. அதேசமயம் அவனது ஒதுக்கமும் பிடிக்கவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்தது.

சில நாட்கள் சென்று, ஒருநாள் அவளாகவே அவனிடம் வந்து, “இன்னும் பத்து நாளுல இன்டெர்னல் எக்ஸாம்ஸ் வருது. அதுக்குள்ள இதெல்லாம் எழுதி முடிச்சு, படிச்சும் முடிக்கணும்” என்றாள் சலிப்புடன்.

மத்த பாடங்கள் என்றால் எழுதி வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவள் படிப்பதோ இளங்கலை கணிதம், அதற்கு கண்டிப்பாக நோட்ஸ் தேவைப்படும். ஆனால், அவளால் அனைத்தையும் ஒன்றாக எழுத முடியவில்லை.

அதோடு ஒரு வருட இடைவெளியின் பின் கல்வியை தொடர்வதாலும், ஒரு மாத காலமாக நடத்திய பாடங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து படிப்பதாலும் அவளுக்கு பல இடங்களில் பாடங்கள் புரியவில்லை. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கவியரசனும் கணித ஆசிரியர் தான். இவள் புரியாமல் விழிக்கும் பல பாடங்கள் அவனுக்கு அத்துபடி. அவன் நினைத்தால் இவளுக்கு ஓரளவு உதவ முடியும். ஆனால், அதற்கு இருவரில் யாரேனும் ஒருவர் கோபம் குறைத்து இறங்கி வர வேண்டுமே! அதற்கான அறிகுறியே தென்படவில்லை.

அவளுக்கு எழுதுவது நிறைய இருந்ததால், மாலை வீடு வந்ததும் தற்பொழுதெல்லாம் அதிக வேலைகள் செய்வதில்லை. எழுத அமர்ந்து விடுவாள். ஆனாலும் முடிக்க முடியவில்லை. அந்த வார விடுமுறையில் ஐந்து பாடங்களுக்கான நோட்ஸ்களையும் வாங்கி வந்துவிட்டாள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் எழுதிக் கொண்டேயிருக்க, கவியரசனுக்கே பாவமாய் போய்விட்டது. அப்பொழுது தான் அவனிடம் வந்து இவ்வாறு கூறினாள்.

இரவெல்லாம் எழுதிக் கொண்டே இருந்தவள் அசந்து போய் உறங்கியதும், அவன் எடுத்து எழுதத் தொடங்கி விட்டான். அவனுக்கு இரவு விழிப்பது பழக்கம் என்பதாலும், எழுதுவதில் வேகம் வரும் என்பதாலும் அவனால் நிறைய எழுத முடிந்தது.

காலையில் மீண்டும் எழுத தொடங்கிய யசோதா திகைத்துப் போனாள். கணவன் ஒரே இரவில் இரண்டு பாடங்களை முடித்திருந்தான். நேற்று கேட்டபொழுது எதுவுமே கூறாமல் வெறுமனே தலையசைத்தவன், அவனாகவே முன்வந்து உதவி செய்தது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

காலை உணவிற்கு கூட எழாமல் அயர்ந்து தூங்கும் கணவனைப் பார்க்க பாவமாய் இருந்தது. அவளுக்கிருந்த மகிழ்ச்சியில் அவன் உறக்கம் கலையா வண்ணம் மெல்லியதாய் சில முத்தங்கள் கூட பதித்தாள். ஆசையும், அன்புமாய் பரிமாறியவைகள்.

இந்த ஆசையை அவனிடம் நேரில் காட்ட தான் வெகுவாக தயக்கம். கப்பல் மூழ்கும் நிலையில் இன்னமும் மாற்றம் இல்லையே! தன்னுடைய குடும்பத்திற்கு தன்னால் எதுவும் உதவ முடியவில்லை என்னும் வருத்தம் அவளை இன்னமும் மிகுந்த குற்றவுணர்வில் ஆழ்த்துவது தானே! அதற்கு மூல காரணமாக அவள் கருதுவது தன் கணவனை மட்டும் தானே!

அதன்பிறகு யசோதா மேற்கொண்டு எழுத சென்றுவிட, உறங்கி எழுந்தவன், அவனாகவே வந்து அவளுக்கு பாடங்கள் சொல்லி கொடுத்தான். அவளுக்கு அத்தனை சந்தோஷம். தனது சந்தேகங்களை எல்லாம் கேட்டுக் கொண்டாள். பிறகு அவனே, “நீ படிக்க மட்டும் செய். நோட்ஸ் எல்லாம் நான் எழுதிடறேன்” என்று கூற,

அவள் தான் அவன் சிரமம் உணர்ந்து தயங்கினாள். தயக்கத்திற்கு மூல காரணம் அவன்மீது கோபத்தையும் வைத்துக்கொண்டு, அவனது உதவிகளையும் ஏற்றுக் கொள்கிறோமே என்னும் குற்றவுணர்வும் தான்.

அவளது தயக்கத்தில் சினந்தவனோ, “எக்ஸாம் வருது. நீ எப்போ எழுதி, எப்போ படிப்ப” என்று அக்கறையையும் சூடான தொனியில் தான் கேட்டான். தலையை தாழ்த்தியவள், “சாரி… தேங்க்ஸ்” என்றாள் மென்குரலில். “ஹ்ம்ம்..” என்றதோடு முடித்துக் கொண்டான்.

இருவருமே மெல்லிய நூலிழை தயக்கத்தை உடைக்க முன்வரவில்லை. சகஜமான பேச்சு வார்த்தைகள் இருவருக்குள்ளும் இல்லாத போதும், பாசம் மட்டும் குறைவில்லாமல் வளர்ந்தது. அது வெளிப்படும் நாள் தான் தெரியவில்லை.

1 thought on “சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிவகாமியின் சபதம் – முதல் பாகம்சிவகாமியின் சபதம் – முதல் பாகம்

வணக்கம் தோழமைகளே, சில காவியங்கள் என்றுமே நம் நினைவில் நிற்பவை. அத்தனை முறை படித்தாலும் புதிதாய் படிக்கும் உணர்வைத் தருபவை. அதில் எழுத்தாளர் கல்கி அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’ எனும் இந்தப் புதினமும் ஒன்று. முதல் பாகம் உங்களுக்காக. [scribd id=380391362

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27

உனக்கென நான் 27 சந்துருவின் கைபேசியை அன்பரசியின் அலைகள் அடையமுடியவில்லை. அவன் என்ன நினைத்திருப்பான் என சோகமாக அமர்ந்தாள். “விடுடி ஃப்ளைட்ல போயிகிட்டு இருப்பாங்க அப்புறமா ட்ரை பன்னு” என மலர் ஆறுதல் செய்தாள் அன்பரசியின் மனமோ வேதனையால் கனத்தது. “ஆமா

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 03அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 03

அலமுவும் எங்கள் அம்மாவும் பாலிய சிநேகிதமாம். ஆகவே, அடிக்கடி அவர்கள் வீட்டு விஷயங்களைப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க ஆரம்பித்தது. முதலிலே அம்மாதான் ஏதாவது பேச ஆரம்பிப்பார்கள். அந்தச் சுவாரஸ்யமான பேச்சை நான் முடிக்க விடுவதில்லை. கேள்வி மேல் கேள்வி போடுவேன். அது