Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 05

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 05

இதயம் தழுவும் உறவே – 05

 

யசோதா இப்படி பயந்த சுபாவமே கிடையாது. ஆனால், இந்த நாள் இப்படி அவளை பயம் கொள்ளச்செய்யும் என்று அவள் துளியும் நினைத்ததில்லை. ‘ஏன் அத்தையிடம் அப்படி பேசினோம்?’ என அவள் தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

இப்பொழுது, இந்த நிமிடம் அவளுக்கு இங்கிருக்கவே பிடிக்கவில்லை. தாயிடம் சென்று விட மாட்டோமா என ஏங்கி கலங்கிப் போனாள். கவியரசன் என்ன சொல்வானோ, என்னும் அச்சமே இந்த சிந்தனைகளுக்கெல்லாம் மூல காரணம்.

அவளது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் வண்ணம்தான் கவியரசனும் இறுகிப்போய் அமர்ந்திருந்தான். அந்த இறுக்கமே அவனை நோக்கி செல்ல விடாமல் அவளது கால்களை முடக்கியது. கரங்கள் கூட மெலியதாய் நடுங்க, வியர்க்க தொடங்கியது.

அவளுக்கு கெஞ்சவும் தெரியும், மிஞ்சவும் தெரியும். ஆனால், இரண்டுமே இப்பொழுது பயனளிக்காது என்று தோன்றியது. அவனுடைய கடுஞ்சொற்களுக்காக காத்திருக்கலானாள். ஏற்கனவே பிடிக்காத திருமணம், இன்னமும் இந்த இடத்தில் ஒன்றவில்லை. இந்த நிலையில் அவனது கடுஞ்சினத்தையும், வசைகளையும் கேட்டுக் கொள்ள இயலுமா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனாலும், வேறு வழி இல்லையே! மனதை திடப்படுத்த முயன்றாள்.

யசோதா உள்ளே நுழைந்ததும் கவியரசனுக்கு தெரியும், அவள் அசைய மறுத்து நிற்பதும் அவனுக்கு தெரியும். அவளாக வருவாள் என்று அவன் நினைத்திருக்க, வெகு நேரமாக அசையாமல் நிற்பவளை கோபத்தில் உறுத்து விழித்தான். அவன் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் கதவினை தாளிட்டு விட்டு, அவனருகே வந்து கட்டிலின் இன்னொரு முனையில் அமர்ந்தாள். உடலின் நடுக்கத்தில் அவளால் தொடர்ந்து நிற்க முடியும் என்று தோன்றவில்லை.

அவள் அமர்ந்ததுதான் தாமதம், “ஏன் அம்மாகிட்ட அப்படி கேட்ட?” என கவியரசன் கேட்க, சாதாரணமாக கேட்பது போல தெரிந்தாலும் அந்த குரலின் அழுத்தம், இறுக்கம் அவளுக்குள் இருந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது.

என்ன விளக்கம் சொல்வது என புரியாமல் யசோதா அவனை பாவமாக ஏறிட, அவ்வளவுதான் அவனுக்கு இருந்த கடுஞ்சினத்தில் வார்த்தைகள் சிதறின.

“என்னைப்பற்றி எங்க அம்மா என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? அப்படி என்ன நான் உன்னை பண்ணிட்டேன். என் அம்மா முன்னாடி என்னை இப்படி கேவலப்படுத்திட்ட? நேத்தே விருப்பம் இல்லைன்னா மறுத்து பேச வேண்டியது தானே?” பார்வையை கூர்மையாக்கி அவளை துளைக்க அவளுக்கு அவனது நியாயம் தெள்ளத்தெளிவாக புரிந்தது. ஆனால், அவளை அறியாமல் நடந்துவிட்ட செய்கையை நினைத்து அவளே நொந்து கொண்டிருக்கும் போது, இப்பொழுது அவள் என்ன செய்ய இயலும்? அத்தையிடம் தெரியாமல் எதையோ கேட்டாயிற்று, தெய்வாதீனமாக கணவனும் அதனைக்கேட்டு தன் தாயிடம் எதையோ சொல்லி சமாளித்தும் விட்டான். இனி என்ன செய்ய முடியும்?

அவளது அமைதியில் மேலும் கோபமடைந்தவன், “நேத்து எதுவும் பேசாம தான என்கூட…” என அவன் நேற்றைய இரவைப்பற்றி பேசத் தொடங்க, சட்டென அவளது கரங்கள் உயர்ந்து அவனது இதழ்களை அடைத்தது.

அந்தரங்கத்தை அரங்கேற்றும்போது அவளால் பெரிதாக எதிர்க்க முடியவில்லை தான். மனமோ, உடலோ எதுவோ ஒன்று அவளுக்கு ஒத்துழைக்கவில்லை. அவனிடம் முழுதாக சரணடைந்திருந்தாள். அவளது வலுவற்ற எதிர்ப்புகளும், திடமற்ற விலகளும்… தயங்கங்களாகவும், நாணமாகவும் அவனுக்குப் பட்டதில் வியப்பெதுவும் இல்லை.

எப்படி நடந்திருந்தாலும், அவளால் நிச்சயமாக தங்களது அந்தரங்கத்தை வாய்வார்த்தையாக பேச முடியாது. அதிலும் ஒரு சண்டைக்கு காரணியாக நிச்சயம் அவளால் உபயோகிக்க முடியாது. அவளது விரல்களின் நடுக்கத்திலும், விழிகளின் இறைஞ்சலிலும் என்ன கண்டானோ அவனாகவே பேச்சை மாற்றி விட்டான்.

அவளது கரங்களை விலக்கியவன், “ஏன் நீ மறுத்திருந்தா, நான் என்ன சொல்லிடப் போறேன்? என்னை பார்த்தா உனக்கு எப்படி தோணுது? அவ்வளவு மோசமானவனாவா? எனக்கு தேவை தான். என்னோட மனைவிங்கிற உரிமை இந்த தாலியை கட்டிட்டா மட்டும் வந்துடாதே!” என எரிச்சலாக தொடங்கியவன், என்னவென்றே வரையறுக்க இயலாத பாவனையில் முடிக்க அவளுக்கு சங்கடமாகிப்போனது.

இதுவரை மௌனமாக மட்டுமே அமர்ந்திருப்பவளைக் கண்டவன், ‘இவளிடம் பேசுவதே வீண்’ என்னும் மனநிலையில், மேற்கொண்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான். இன்னும் அவள் மீதிருந்த சினம் அடங்க மறுத்தது.

மனதில் ஒரு ஓரம், ‘திருமணமே சம்மதம் இன்றி தானே செய்து கொண்டாள். அப்படி இருக்கையில் வாழ்க்கையை தொடங்க காத்திருந்திருக்க வேண்டுமோ! அவளிடம் சம்மதம் பெற்று முன்னேறி இருக்க வேண்டுமோ!’ என்னும் எண்ணம் அவனை அலைக்கழித்தது.

அந்த எண்ணத்தை தாண்டியும், ‘தாயிடம் எதற்கு அவ்வாறு கூறினாள்? நேற்றே மறுத்திருக்க வேண்டியது தானே!’ என்னும் கோபமே மேலோங்கி இருந்தது. ‘அவளுக்கு விருப்பமில்லை என்பதை மறைத்துவிட்டாள், நாமும் அது புரியாமல் ஏதோ ஒரு ரீதியில் அவளை வற்புறுத்தி விட்டோம். என்னை இவ்வளவு கீழிறக்கி விட்டாளே! எல்லாம் அவளால் வந்தது’ என்னும் குற்றவுணர்வு அவனை கோபப்படுத்தியது. அதில் அவன் மனம் மிகவும் கடினமானது. அவளை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

யசோதாவிற்கும் அவனது விலகல் தான் தேவையாய் இருந்தது. அவனது ஒதுக்கம் அவளை பெரியதாய் பாதிக்கவில்லை. ‘நான் மறுத்தும் திருமணம் செய்து கொள்வானேன்?’ என்னும் வீம்பு அவளுக்கு. ஒருவேளை இந்த சூழலில் பொருந்தி கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டதோ, என்னவோ? அல்லது தன் கணவன், தன் குடும்பம் என்னும் முதிர்ச்சி யசோதாவிடம் இல்லையோ?

ஆனால், அவளது அடுத்தடுத்த செய்கைகளைப் பார்க்கையில் அவளுக்கு முதிர்ச்சி இல்லை என்றும் எண்ண முடியவில்லை. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் கணவனிடம் மட்டும் தான். மற்றபடி, குடும்பத்தில் தன் பொறுப்புணர்ந்து நல்ல மருமகளாக நடந்து கொண்டாள். ஒருவேளை தன் கணவன் என்னும் உரிமை இந்த தற்காலிக விலகளில் மாறிவிடாது என்று ஆணித்தரமாக நம்பினாளோ என்னவோ? அவளுக்கே வெளிச்சம்.

மறுதினம், குலதெய்வம் கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடு. அப்பொழுதும் வழக்கம்போல எளிமையாக கிளம்பி இருந்த மாமியாரைக் கண்டவள், “அத்தை ஒன்னு கேட்கவா?” என தயங்கி தயங்கி கேட்டு நின்றாள் யசோதா.

“என்ன மா என்ன வேணும்?” அவளுடைய தேவை எதுவும் போல என்றெண்ணி மீனாட்சி கேட்க,

“கொஞ்சம் எடுப்பா தெரியுற புடவை கட்டுங்களேன்! உங்களுக்கு நல்லா இருக்கும்” என சின்னவள் இழுத்தாள். ‘எப்படி எடுத்துக் கொள்வாரோ!’ என்று மனதில் சிறு அலைப்புறுதல்!

“அது வந்து மா… இத்தனை வயசுக்கப்பறம்…?” என மீனாட்சி தயங்க, அவரது தயக்கத்தில் கோபம் கொண்டாள், “அத்தை, போடற நிறத்துக்கும், வயசுக்கும் என்ன சம்மந்தம்? கண்டதையும் குழப்பிக்காதீங்க” என்றாள் சற்று உரிமையோடு அதட்டும் தொனியில்.

மேலும் தயங்கியவரை பேசிப்பேசியே சரி செய்து அவருக்கு பொருத்தமான உடையை அணிய வைத்தவள், கொண்டையில் அடக்கியிருந்த கூந்தலையும் பிரித்து பின்னல் போட வைத்தாள். அவருடைய தோற்றமே மாறி விட்டது. செல்லமாய் திருஷ்டி வேறு கழித்து அவருக்கு வெட்கத்தை வரவழைத்தாள்.

“என்னம்மா எனக்கே வித்தியாசமா இருக்கு” என பெரியவள் கண்ணாடியில் பார்த்து சங்கடப்பட, “இருங்க அத்தை நானே ஏதோ குறையுதேன்னு யோசிக்கிறேன்” என அவரை மேலிருந்து கீழாக ஆராய்ந்தவள்,

“ஹ்ம்ம் அத்தை கண்டு பிடிச்சுட்டேன். ஒரே செயின் போட்டு இருக்கீங்க. கழுத்துக்கு, கையில எல்லாம் இன்னும் கொஞ்சம் போடுங்க” என்று கூறினாள்.

“நகையெல்லாம் வித்யா கிட்ட இருக்குமா. இந்த வயசுக்கப்பறம் நான் போட்டா நல்லாவா இருக்கும். அதான் வெளிய, விசேஷத்துக்கு போயிட்டு வர அவ போடட்டும்ன்னு விட்டுட்டேன்” என வெள்ளந்தியாய் மாமியார் சொல்லும் போது, ‘இந்த வயசுக்கப்பறம்’ என்பதை விதைத்ததே வித்யாவாக இருக்குமோ என்னும் எண்ணம் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. நேற்று வந்த முதல்நாளே வித்யாவை கவனித்திருந்தாளே, தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் குறை தேடி, அதை வீட்டினர் முன்பு கடை பரப்பி, தன்னை மட்டம் தட்டுவதிலேயே குறியாய் இருந்தாளே. மாமியாரிடம் என்னவெல்லாம் சொல்லி அவரை இப்படி மாற்றி இருப்பாளோ என்றுதான் தோன்றியது.

என்னவோ அதை உடனே ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் வேகம். “உங்ககிட்ட இவ்வளவு புடவை தானா அத்தை? ரொம்ப குறைவா இருக்கிற மாதிரி தெரியுது?” என சின்னவள் இழுக்க,

“மாமா இல்லை தான யசோம்மா. அதான் நான் விசேஷங்களுக்கு அதிகம் போறதில்லை. எதுக்கு வீணா அடைஞ்சு இருக்கணும்ன்னு வித்யாக்கே தந்துட்டேன்” என பெரியவள் பதில் சொல்லியதும் யசோதாவிற்கு வித்யாவின் குணம் புரிபடத் தொடங்கியது. இந்த காலத்திலும் அமங்கலி என்பதை எப்படி பதிய வைத்து தனக்கு தேவையானதை எப்படி அபகரித்திருக்கிறார்? வித்யாவின் கீழ்த்தரமான செய்கைகளில் யசோதாவின் மனம் சீற்றமானது. இப்படியும் மனிதர்கள் என அவள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே,

அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் அறையினுள் நுழைந்த வித்யா, “தயாராகிடீங்களா?” என்று கேட்டவாறே பெரியவளின் தோற்றத்தை வினோதமும், அதிர்ச்சியுமாய் அளவிட, அவளின் பார்வையை யசோதா சரியாக கண்டுகொண்டாள்.

அத்தையின் இந்த தீடீர் மாற்றத்திற்கு காரணம் புதிதாய் வந்திருப்பவள் தான் என புரிந்து கொள்ள முடியாதளவு வித்யா மட்டி அல்லவே! அதில் யசோதா மீது எரிச்சல் வந்தது. அவளது தலையீடுகளை ஆரம்பத்திலேயே தட்டி வைக்க வேண்டும், அவள் நிலை எதுவென அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று மனதிற்குள் கருவினாள்.

யசோதாவின் முன்பு அத்தையிடம் எதுவும் சொல்ல விரும்பாதவளாய், யசோதாவை நோக்கி மட்டம் தட்டும் எண்ணத்தில், “என்ன யசோ நகை குறைவா போட்டிருக்க?” என்று கேட்டுவிட்டு, “ஓ மறந்துட்டேன் யசோ, உன் நகை மொத்தமாவே இவ்வளவு தானே!” என நக்கலை மறைத்த குரலில் வித்யா கூற,

யசோதா பதில் சொல்லும் முன்பு மீனாட்சி பதறினார். “என்ன வித்யா? என்ன பேச்சு இது?” என கண்டிக்க, சிறியவள் முன்பு அத்தை கண்டிக்கும் தொனியில் பேசியதில் வித்யாவிற்கு மேலும் எரிச்சல் தான் ஆனது.

அதை அதிகரிக்கும் வண்ணம், “ஆமா வித்தியாக்கா என் நகை மொத்தமே இவ்வளவு தான்” என, ‘நீ குத்திக்காட்டியது எந்த வகையிலும் என்னை பாதிக்கவில்லை’ என்னும் விதமாக புன்னகை முகமாக யசோதா கூற, அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

எரிச்சலை தற்பொழுது காட்ட முடியாத இயலாமையில், “சரி சரி சீக்கிரம் வாங்க. எல்லாரும் கிளம்பிட்டாங்க” என்றபடி வித்யா வரவேற்பறை நோக்கி சென்று விட்டாள்.

“எதுவும் தப்பா எடுத்துக்காத யசோம்மா. அவ கொஞ்சம் பட்டு பட்டுன்னு பேசிடுவா. நல்ல குணம் தான். ஆனா, வாய் தான் கொஞ்சம் அதிகம். நீ எதுவும் மனசுல வெச்சுக்காத” என மீனாட்சி தான மிகவும் வருந்தினார்.

“அச்சோ அத்தை இதையெல்லாம் போய் பெருசா எடுத்துப்பேனா. வாங்க போகலாம்” என்றாள் சின்னவள் பெருந்தன்மையாக. “நீ போம்மா, நான் இதோ வந்துடறேன்” என மீனாட்சி சொல்லிவிட,

வித்யாவை அத்தோடு விடும் எண்ணம் இல்லாத யசோதா உதட்டை இகழ்ச்சியாக சுளித்தபடி அவளை பின்தொடர்ந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 4பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 4

“நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டு எனக்கு அளவு கடந்த ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. என் எதிரே உட்கார்ந்துகொண்டு, சுமார் 20 வருஷங்களுக்கு முன்புதான் இறந்ததையும், சுடலையில் தன் பிணத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டதையும், தீ நன்றாகப் பிடித்துக் கொண்டதையும்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49

49 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “உன் நேம் என்ன?” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன?” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்?” “ஆதவ் இல்லை.. யாதவ் கரெக்டா சொல்லு..” “ஆ…தவ்..” என அவளுக்கு சரியாக

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 48ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 48

48- மனதை மாற்றிவிட்டாய் முந்தைய நாள் இரவு அனைவரும் நேரம் கழித்து தூங்கியதாலோ என்னவோ சற்று தாமதமாகவே எழுந்தனர். தாத்தா பாட்டி சேகர் அனைவரும் வந்து கூடத்தில் அமர ஈஸ்வரியும் வந்து அமர்ந்துகொண்டு என்ன இன்னும் ஒரு காபீ கூட யாரும்