Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),புறநானூற்றுக் கதைகள் ஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audio

ஒரு தயக்கம் – புறநானூற்றுச் சிறுகதை – Audio

 

 

 

து ஒரு வேடனின் குடிசை காட்டின் இடையே அமைந்திருந்தது. குடிசையின் முன்புறம் முசுண்டை என்ற ஒரு வகைக் கொடி படர்ந்திருந்தது. வீட்டிற்கு முன்புறம் பசுமைப் பந்தல் போட்டு வைத்தாற்போல் அடர்ந்து படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது அது. 

காட்டில் அங்கும் இங்கும் அலைந்து வேட்டையாடி அலுத்துப்போய் வந்த வேட்டுவன் முசுண்டைக் கொடி படர்ந்திருந்த நிழலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளே வெட்டுவச்சி அடுப்புக் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந் தாள். குடிசையின் வாயிலில் உரலில் இட்டு இடித்த தினையரிசி ஒரு மான் தோலின் மேல் உலர்வதற்காகப் பரப்பப்பட்டிருந்தது. குடிசையைச் சுற்றியிருந்த புல்வெளியில் மான்கள் இரண்டு மேய்ந்து கொண்டிருந்தன. ஒன்று கலைமான், மற்றொன்று பெண்மான். 

காட்டுக் கோழிகளும் இதல்’ என்னும் ஒருவகைப் பறவைகளும் உலர்ந்து கொண்டிருந்த தினையரிசியைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. ஏதோ காரியமாக வாயிற்புறம் வந்த வேட்டுவச்சி முசுண்டைக் கொடியின் நிழலில் கணவன் அயர்ந்து  உறங்குவதையும், பறவைகள் தினையைக் கொத்தித் தின்று கொண்டிருப்பதையும் கண்டாள். அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது

கோழிகளும் இதல்களுமாக அவள் உலர்த்தியிருந்த தினையில் பெரும் பகுதியை உண்டுவிட்டன; இன்னும் உண்டு கொண்டிருந்தன. 

சட்டென்று கையைத் தட்டி ஓசை உண்டாக்கிப் பறவைகளை ஓட்ட எண்ணினாள் அவள். பெரிய ஓசையை உண்டாக்குவதற்காகக் கைகளை வேகமாக ஓங்கினாள். 

கண்ணிமைக்கும் நேரத்தில் வேறோர் எண்ணம் வந்ததால் ஓங்கிய கை தயங்கியது. அவள் மனத்தில் மின்னலைப் போலக் குறுக்கிட்ட அந்த எண்ணம் என்ன? ஓங்கிய கைகளைத் தடை செய்த அந்த உணர்வுதான் யாது? 

அவளுக்கு வலப் பக்கமும் இடப் பக்கமுமாக அமைதி ஒன்றிலேயே நிகழ முடிந்த இரண்டு காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் கைகள் ஓசையை உண்டாக்குமானால் அந்த இரு காரியங்களும் குலைந்து போவது உறுதி. அந்த இரண்டு செயல்களும் குலைந்து போவதை அவள் விரும்பவில்லை. வலப் பக்கம் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆண் மானும், பெண் மானும் ஒன்றையொன்று நெருங்கிச் சொல்லித் தெரியாத கலையைக் கேளிக்கை மூலம் தெரியவைத்துக் கொண்டிருந்தன. அன்பு என்ற உணர்வு காதலாகிக் காதல் என்ற உணர்வு இன்பமாகி உடலும் உள்ளமும் சங்கம் முற்றிருக்கும் ஒரு நிலை. – இடப் பக்கம் கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான். விழித்திருக்கும் போது ஒரு சில அம்புகளைக் கொண்டே யானையைக்கூட வேட்டையாடிவிடும் அவ்வளவு வலிமை அந்த உடம்பிற்கு உண்டு. உறங்கிவிட்டாலோ தன்னை மறந்த உறக்கம்தான். 

ஓங்கிய கை நின்றது! வெளியே உலர்த்தியிருந்த தினை முழுவதையும் கோழி தின்றுவிட்டாலும் அவளுக்குக் கவலை இல்லை. அந்த மான்கள் துணுக்குற்றுப் பிரிந்துவிடக்கூடாது. ஆழ்ந்து உறங்கும் தன் கணவனின் உறக்கம் கலைந்துவிடக்கூடாது. அவ்வளவு போதும் அவளுக்கு. 

பேசாமல் உள்ளே மெல்ல நடந்து சென்றாள் அந்த வேட்டுவச்சி. மான் தோலை விரித்து அதன் மேல் உலர்த்தியிருந்த தினையைக் கோழிகளும் இதல்களும் சிறிது சிறிதாக உண்டு தீர்த்துக் கொண்டிருந்தன

வேடனின் உறக்கமும், மான்களின் இன்பமும், கோழி முதலிய பறவைகளின் வயிறும் நிறைந்து கொண்டிருந்தன. மான் தோலில் உலர்த்தியிருந்த தினை மட்டும் குறைந்து கொண்டே இருந்தது

மறுபடியும் அவள் வெளியே வந்தபோது கணவன் உறங்கி எழுந்திருந்தான். மான்கள் பழைய நிலையிலிருந்து பிரிந்து தனித்தனியே மேய்ந்து கொண்டிருந்தன. தினை உலர்த்தியிருந்த மான் தோலைப் பார்த்தாள். அதில் ஒன்றுமே இல்லை. ஆனாலும் அவள் மனம் என்னவோ நிறைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’

பிற்பகல் நேரம், அலுவலகத்தில், களைப்பைப் போக்க கைகளை நெட்டி முறித்த காதம்பரி எழுந்து நின்று கைகால்களை வீசி சிறிய பயிற்சிகளை செய்தாள். மரத்திருந்த கால்களுக்கு சற்று உணர்வு வந்தார் போல இருந்தது. தன் அறை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரே

வீரனின் இருப்பிடம் – புறநானூற்றுச் சிறுகதைவீரனின் இருப்பிடம் – புறநானூற்றுச் சிறுகதை

  அது ஒரு சிறிய வீடு தாழ்ந்தகூரையையும் அதனைத் தாங்கும் நல்ல மரத்தூண்களையும் உடையது. வீட்டின் வெளியே இருந்து கண்டால் அடர்த்தியான மலைப் பகுதியிலுள்ள ஒரு குகையைப் போலத் தென்பட்டது. மறக்குடியினராகிய வீரப் பெருமக்கள் வசிக்கின்ற வீதி அது.  அந்த வீட்டில்