Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘பரிசல் துறை’-5

கல்கியின் ‘பரிசல் துறை’-5

5

செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள்.

பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில் கள்ளுப் பானையை வைத்துச் சுற்றி சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள்! உண்மையில் அவர்களுடைய நிலைமை பார்க்கப் பரிதாபமாகத் தானிருந்தது. ஆனால், காளிக் கவுண்டன் மட்டும் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது அநேகம் பேருக்கு ஆச்சரியம் அளித்தது.

காளி அன்று சாயங்காலம் பழனிசாமியிடம் போய், “தம்பி! நாளைக்குப் பொழுது சாய எனக்கு அக்கரையில் கொஞ்சம் வேலையிருக்கிறது. என்னைப் பரிசலில் இட்டுப் போக வேணும்” என்றான்.

“அதற்கென்ன, மாமா? என்னுடைய பரிசல் இருந்தால் அதில் முதல் இடம் உங்களுக்குத்தான்” என்றான் பழனி.

அக்டோ பர் முதல் தேதி பிறந்தது. ஊரிலுள்ள ஸ்திரீ, புருஷர், குழந்தைகள் எல்லோரும் அன்று காலை எழுந்திருக்கும் போது ஒரே எண்ணத்துடன் தான் எழுந்தார்கள்; “இன்று முதல் கள்ளு, சாராயக்கடை கிடையாது” என்று. அநேகர் எழுந்ததும் முதல் காரியமாகக் கள்ளுக் கடையைப் போய்ப் பார்த்தார்கள். அங்கே கள்ளுப் பானைகள் இல்லாதது கண்டு அவர்கள் “இப்பேர்ப்பட்ட அற்புதமும் நிஜமாகவே நடந்து விட்டதா?” என்று பிரமித்துப் போய் நின்றார்கள்.

இந்தப் பரபரப்புக்கு இடையில் இன்னொரு செய்தி பரவிற்று. “பரிசல் துறையில் பரிசலைக் காணவில்லையாம்!” என்று. இது காளிக் கவுண்டன் காதில் விழுந்ததும், அவன் விரைந்து நதிக்கரைக்குப் போனான். அங்கே, பழனிசாமி முகத்தைக் கையினால் மூடிக்கொண்டு அழுது கொண்டு இருப்பதையும், நாலைந்து பேர் அவனைச் சுற்றி நின்று தேறுதல் சொல்லிக் கொண்டு இருப்பதையும் கண்டான். சமீபத்தில் போய் விசாரித்ததில், நேற்று ராத்திரி வழக்கம் போல் பழனி பரிசலைக் கரையிலேற்றி முளையில் கட்டிவிட்டுப் போனதாகவும், காலையில் வந்து பார்த்தால் காணோம் என்றும் சொன்னார்கள்.

காளிக் கவுண்டன், பழனியிடம் போய், “தம்பி! இதற்காகவா அழுவார்கள்? சீ, எழுந்திரு. ஆற்றோரமாய்ப் போய்த் தேடிப் பார்க்கலாம். அகப்பட்டால் போச்சு; அகப்படாமல் போனால், இன்னான் தான் போக்கிரித்தனம் பண்ணியிருக்க வேணுமென்று எனக்குத் தெரியும். கள்ளுக்கடைக் கவுண்டன் தான் செய்திருக்க வேண்டும். உனக்கு வரும்படி வரக் கூடாது என்று. அவனைக் கண்டதுண்டம் பண்ணிப் போட்டு விடுகிறேன். வா, போய்ப் பார்க்கலாம்” என்றான்.

அன்றெல்லாம் பரிசலைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; பரிசல் அகப்படவேயில்லை.

சாயங்காலம், நேற்றுக் கள்ளுக்கடை இருந்த இடத்தில் இன்று பஜனை நடந்தது. காளிக் கவுண்டனும் போயிருந்தான். பஜனையில் பாதி கவனமும், பரிசல் மட்டும் கெட்டுப் போகாமல் இருந்தால் அக்கரைக் கள்ளுக்கடைக்குப் போயிருக்கலாமே என்பதில் பாதிகவனமுமாயிருந்தான்.

கள்ளுக்கடை மூடி ஏழெட்டு தினங்கள் ஆயின. அந்த ஏழெட்டு நாளில் ஊரே புதிதாய் மாறியிருந்தது. அந்த கிராமத்தின் ஆண் மக்களில் கிட்டத்தட்டப் பாதி பேருக்கு மேல் குடித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரன் இருந்தான். ஆகவே, கள்ளுக்கடை மூடிய சில நாளைக்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் காசு மிஞ்சியிருந்தது. கடை சாமான்கள் முன்னை விடத் தாராளமாய் வாங்க முடிந்தது. மனுஷ்யர்களுடைய புத்தியும் அதற்குள் நன்றாய் மாறி ஸ்திரப் பட்டுவிட்டது. முன்னெல்லாம் குடித்துக் கெட்டு அலைந்ததை எண்ணிய போது அவர்களுக்கே வெட்கமாயிருந்தது. இப்படி மாறியவர்களில் ஒருவன் காளிக் கவுண்டன். அவன் ஒரு நாள் பழனியிடம், “தம்பி! பரிசலை எந்தப் பயலோதான் ஆற்றில் இழுத்து விட்டிருக்கிறான். உனக்கு அதனால் எவ்வளவோ நஷ்டம். அவனைக் கண்டால் நான் என்னவேணாலும் செய்து விடுவேன். ஆனாலும் ஒரு விதத்தில் பரிசல் கெட்டுப் போனதும், நல்லதாய்ப் போயிற்று” என்று சொன்னான்.

“அது என்ன மாமா, அப்படிச் சொல்றீங்க? பரிசல் கெட்டுப் போனதில் நல்லது என்ன?” என்று பழனி கேட்டான்.

காளி சிரித்துக் கொண்டு, பழனியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். “தம்பி, நீ குழந்தைப் பிள்ளை. உனக்கு ஒன்றும் தெரியாது. நான் என்னத்துக்காகப் பரிசலில் அக்கரைக்கு வரேன்னு சொன்னேன், தெரியுமா? இந்த ஊரிலே கள்ளுக்கடை மூடி விடறதினால, அக்கரைக் கடைக்கு போகலாமின்னுதான்…”

“அக்கரையிலே மட்டும் ஏன் கடைய வச்சிருக்காங்க?” என்று பழனி கேட்டான்.

“அது திருச்சிராப்பள்ளி ஜில்லா. அந்த ஜில்லாவிலே இன்னும் கடையை மூடலை. அடுத்த வருஷம் தான் மூடப் போறாங்களாம்.”

“ஏன் மாமா! அடுத்த வருஷம் நிச்சயம் கடை மூடிட்டால், அப்புறம் எங்க போறது?”

“நல்ல கேள்வி கேக்கறே. அப்புறம் எங்கே போறது? பேசாமல் இருக்க வேண்டியதுதான்!”

“அப்படி இப்பவே இருந்துட்டா என்ன, மாமா?”

“அதற்குத்தான் குடிகாரன் புத்தி பிடரியிலே என்கிறது. எப்படியோ, பரிசல் கெட்டுப் போனாலும் போச்சு, எனக்கும் கள்ளுக்கடை மறந்து போச்சு” என்றான் காளி.

பிறகு, எதையோ நினைத்துக் கொண்டவன் போல், “ஒரு சமாசாரம் கேளு, தம்பி… குமரி இருக்காள் அல்ல, அவள் நான் குடிக்கிற வரையில் கல்யாணம் கட்டிக்கிறதில்லை என்று ஆணை வைத்திருந்தாள். சுவாமி புண்ணியத்திலே குடிதான் இப்போ போயிருச்சே! இந்த ஐப்பசி பிறந்ததும் முகூர்த்தம் வச்சுடறேன். பேசாமே அவளை நீ கட்டிக்கோ. ரொம்ப கெட்டிக்காரி; அந்த மாதிரி பெண் உனக்கு அகப்படமாட்டாள்” என்றான்.

ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் பழனிசாமிக்கும் குமரி நங்கைக்கும் கல்யாணம் நடந்தது. ரொம்பக் கொண்டாட்டமாய் நடந்தது.

கல்யாணம் ஆனதும் பழனிச்சாமி வடக்கே போய்ப் புதுப் பரிசல் வாங்கிக் கொண்டு வந்தான். வழக்கம் போல் பரிசல் துறையில் பரிசல் ஓடத் தொடங்கியது. ஆனால் சாயங்கால வேளைகளில் மட்டும் பழனி குறிப்பிட்ட சில பேரைப் பரிசலில் ஏற்றிக் கொண்டு போக மறுத்து விடுவான்.

பழைய பரிசல் என்ன ஆயிற்று என்பது தெரியவேயில்லை. அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? பரிசலின் சொந்தக்காரனே நடு நிசியில் எழுந்து வந்து, பரிசலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் எறிந்து விட்டிருக்கும் போது, அந்த இரகசியத்தை அவனாகச் சொன்னாலன்றிப் பிறரால் எப்படிக் கண்டு பிடிக்க முடியும்?

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13

ராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை – ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. சைக்கிளைப் பிடித்துக் கொண்டு

சாவியின் ஆப்பிள் பசி – 9சாவியின் ஆப்பிள் பசி – 9

ஒரு வாரம் வரை கொலைக் கேஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்ஸ்பெக்டர் முனகாலா கூப்பிட்டு விடுவார் என்று சாமண்ணா தினமும் எதிர்பார்த்தான். யாரும் கூப்பிடவில்லை. வக்கீலிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை. அரிதாரம் பூசிக் கொள்ளாத நாட்கள் எல்லாம் அவனுக்கு அறவே

கல்கியின் பார்த்திபன் கனவு – 23கல்கியின் பார்த்திபன் கனவு – 23

அத்தியாயம் 23 சிவனடியார் கேட்ட வரம் ராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக் கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் “நில்லுங்கள்” என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில்