சாவியின் ‘ஊரார்’ – 08

8

ந்தாம் நாள் காலை.

இந்த நாலு நாள் காய்ச்சலில் சாமியார் அரை உடம்பாகிவிட்டார். குமாருதான் அவரைக் கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். வேளை தவறாமல் மருந்து கொடுத்தான். தலை அமுக்கி விட்டான். கஞ்சி கொடுத்தான்.

“இட்லி சாப்பிட்றீங்களா?”

“ஏதுடா?”

“கமலா கொடுத்தனுப்பிச்சு.”

“அதென்னடா சிவப்பா?”

“வெங்காய சட்னி.”

சாமியார் இட்லித் துண்டால் சட்னியை அமுக்கிச் சாப்பிட்டார். மண்ணாக ருசித்தது.

“நாக்கு செத்துப் போச்சு. நான் செத்திருக்கணும். தப்பிச்சேன். நாக்கு செத்துட்டுது. டாக்டர் என்னடா சொன்னாரு?”

“கொசுக்கடி ஜுரம்னாரு.”

“ஊரிலே இருக்கிற ஆடுமாடுங்க எல்லாம் அரசமரத்தடியிலே தானே வாசம்! கொசு உற்பத்தியே இங்கே தானே!”

“தங்கப்பனும் மேட்டுத்தெரு மேஸ்திரியும் வாராங்க…” என்றான் குமாரு.

சாமியார் தள்ளாடி குமாருவின் தோள்மீது கை ஊன்றி நின்றார். பலகீனம். தலையைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் பறந்தன.

“மயக்கமா வருதுடா” என்றார்.

“நீங்க கொஞ்சநேரம் அப்படியே உட்காருங்க” என்றான் குமாரு.

“இன்றைக்கு முகூர்த்த நாள். கோயில் வேலையைத் தொடங்கிடலாமா? மேஸ்திரி வந்திருக்காரு” என்றான் தங்கப்பன்.

“யாரு, பொன்னப்ப மேஸ்திரியா?” என்று கேட்டார் சாமியார்.

“ஆமாங்க” என்றான் மேஸ்திரி.

“அறுபதுக்குத் தொண்ணூறு அளவெடுத்துக்கோ. இப்பவே வேலையை ஆரம்பிச்சுடலாம். ரெண்டே மாசத்திலே கோயிலைக்கட்டி முடிச்சுடணும். தெரிஞ்சுதா?”

பொன்னப்பன் தலையாட்டினான்.

பிறகு, மூவருமாகப் போய் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்தினார்கள்.

முதன்முதல் ஈசான்ய மூலையில் போய் நின்று எலுமிச்சம் பழத்தை நசுக்கினார்கள். சாமியார் கந்தசாமி கோயிலருகில் வாங்கின சாம்பிராணியை எடுத்துக் கொடுத்துத் தூபம் போடச் சொன்னார். கடப்பாறையைத் தொட்டுக் கொடுத்தார். மேஸ்திரி அங்கே கடப்பாறையால் தரையில் ஓங்கிக் குத்திப் பள்ளம் செய்த இடத்தில் ஒரு கம்பைச் செருகினான். தங்கப்பன் அந்தக் குச்சிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மாவிலே கட்டினான். சூறை அடித்தான். பிறகு நாலு மூலைகளிலும் குச்சி அடித்து அந்த நாலையும் பிணைத்துக் கயிறுகட்டிச் சுண்ணாம்புக் கோடு போட்டுக் கொண்டார்கள். சிதறுகாய் பொறுக்கிக் கொண்டிருந்த சிற்றாட்களை மேஸ்திரி விரட்டி வேலை வாங்கினார். மளமளவென்று அஸ்திவார வேலை ஆரம்பமாயிற்று.

சாமியாருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. டீ குடித்தார்.

நாலு நாளாகப் பிரிந்திருந்த சார்மினாரை எடுத்துப் புகைத்தார்.

சற்று தூரத்தில் கமலாவும் கபாலியும் வருவதைக் கண்டார்.

“வா கபாலி, எப்ப வந்தே?”

“ராத்திரி லாஸ்ட் பஸ்ஸுலே வந்தேன். மணி ரெண்டாயிடுச்சு. அந்த நேரத்திலே உங்களை எழுப்ப வேணாம்னு…”

“கையிலே என்னது?”

“ஹார்லிக்ஸ். சாமியாருக்குத் தான் கொண்டு வந்தேன். உடம்பு சரியில்லேன்னு கமலா சொல்லிச்சு.”

“இந்தக் கட்டைக்கு ஹார்லிக்ஸ் ஒரு கேடா? வேணாம், எடுத்துட்டுப் போயிடு.”

“அன்போட தரேன்…”

“கமலாவைச் சாப்பிடச் சொல்லு. பாவம் இளைச்சிருக்கா… என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து வந்தயே, அதுவே எனக்கு ஹார்லிக்ஸ் சாப்பிட்ட மாதிரி!”

“இன்னைக்கு நல்ல நாளாம். கமலாவை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன். வாழ்த்தி அனுப்புங்க.”

“முதல்லே புள்ளையாரைக் கும்பிட்டுட்டு வாங்க…”

இருவரும் விநாயகரை வணங்கிவிட்டு வந்தார்கள். அப்புறம் சாமியார் காலில் வீழ்ந்து அவரது ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள்.

“நேரா பஸ்ஸுக்குத்தான் போறீங்களா?”

“ஆமாம், பத்து மணி பஸ்…”

“போய் லெட்டர் போடுங்க. சந்தோசமா சௌக்கியமா இருங்க. கமலாவை நல்லா கவனிச்சுக்கப்பா. நல்ல பொண்ணு… இப்பத்தான் அவள் முகத்திலே சிரிப்பைப் பார்க்கிறேன்…” என்றார் சாமியார்.

“உடம்பைப் பார்த்துக்குங்க சாமி. வரோம்” என்றாள் கமலா.

******

குமாரு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தான்.

“மாமன் இருக்கானாடா வூட்லே?”

“இருக்காரு. என்னவோ தெரியல்லே, பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திருக்காரு.”

“என்னடா விசயம்?”

“தெரியல்லே. தபால்காரர் வந்து லெட்டர் கொடுத்து விட்டுப் போனார். அதைப் படிச்சார். அதிலேருந்து இப்படி ஆயிட்டாரு”

“என்னடா விசயம்?”

“தெரியலையே.”

“அப்புறம் என்ன நடந்தது?”

“நாட்டாமைக்காரரும் மணியக்காரரும் வந்தாங்க. கதவைச் சாத்திக்கிட்டு மூணுபேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க முகமும் சரியில்லே…”

“என்னடா அதிசயமாயிருக்கு? என்ன விசயம்டா?”

“தெரியலையே!”

“என்ன பேசினாங்க?”

“தெரியலையே. கதவைச் சாத்திக்கிட்டு ரகசியமாப் பேசிக்கிட்டு இருந்தாங்க…”

“எல்லோரும் போயிட்டாங்களா?”

“போயிட்டாங்க. மாமா மட்டும் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்காரு…”

“ம்… பாப்பம். யாராத்தா செத்தாலும் பொழுது விடிஞ்சாத் தெரியுது” என்றார் சாமியார்.

ராத்திரியே தெரிந்து விட்டது. இரவு சாப்பாட்டுக்கப்புறம் குமாருவின் மாமன் வேதாசலம் ஏழெட்டுப்பேரோடு சாமியாரைப் பார்க்க வந்தான்.

“ஒரு முக்கியமான சமாசாரம் சாமி!” என்றான் வேதாசலம்.

நாட்டாமைக்காரர் மௌனமாக ஒரு கடிதத்தை எடுத்துச் சாமியாரிடம் நீட்டினார். சாமியார் “நீயே படி, கேட்கிறேன்” என்றார் இதற்குள் ஊரே அரச மரத்தடியில் கூடிவிட்டது. நாட்டாமை படித்தார்.

“காளிமாதாகி ஜே!

இதனால் சகல கனதனவான்களுக்கும் தெரிவிப்பது யாதெனில், இப்பவும் கடந்த மாதம் ஏழாம் தேதி இரவு உங்கள் ஊரில் நாங்கள் கொள்ளையடித்து விட்டுத் திரும்புகிற போது எங்களில் ஒருவனான மேத்தா என்பவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். அவனைக் கொன்றது நீங்கள்தான். உங்களில் யாரோ ஒருவன்தான் அவனைக் கொன்றிருக்கிறீர்கள். இப்பொழுது மேத்தா எங்களிடம் இல்லை. அவனுக்குப் பதில் உங்கள் ஊரிலிருந்து யாராவது ஒருவனை எங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் பழிக்குப் பழி! உயிருக்கு உயிர்! இல்லையேல் உங்கள் ஊரையே தீ வைத்துக் கொளுத்தி விடுவோம். வெடிகுண்டுகள் வீசி அழித்து விடுவோம்.

இம்மாதம் முப்பதாம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்கு அதே வராவதிக்கருகில் எங்கள் லாரி வந்து நிற்கும். நீங்கள் அனுப்பும் ஆள் அந்த லாரியில் வந்து ஏறிக் கொள்ள வேண்டும்.

போலீசுக்குத் தெரியப்படுத்தி எங்களை மடக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். எங்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. வெடிகுண்டுகள் இருக்கின்றன. யாரும் எங்களைப் பிடித்துவிட முடியாது. ஜாக்கிரதை!

இப்படிக்கு,

கொள்ளைக்கூட்டத் தலைவன்,”

“கையெழுத்துப் போட்டிருக்குதா?” சாமியார் கேட்டார்.

“போட்டிருக்குது. ஆனா ஒரே கிறுக்கலாயிருக்குது. எழுத்தைப் பார்த்தா இந்தி மாதிரி தோணுது. இங்கிலீஸ் மாதிரியும் இருக்குது” என்றார் நாட்டாமை.

“இதுக்கு என்ன செய்யலாம்?” – சாமியார் சாவகாசமாகச் சார்மினார் ஊதியபடி கேட்டார்.

“அதைக் கேக்கத்தான் உங்ககிட்டே நாங்க வந்திருக்கோம் சாமி!” என்றான் வேதாசலம்.

“வெறும் மிரட்டல் கடுதாசியா இருக்குமோ?…”-ஒரு குரல்.

“பதிலுக்கு ஆளை அனுப்பச் சொல்றாங்களே. இல்லேன்னா ஊரையே கொளுத்திப்பிடுவோம்னு சொல்றாங்களே!”

“எனக்கு ஒண்ணு தோணுது” என்றான் நாட்டாமை.

“என்னது?”

“முப்பதாம் தேதி ராத்திரி வாராவதியைச் சுத்தி போலீசை ஒளிஞ்சிக்கச் சொல்றது. நம்மில் ஒருத்தன் லாரிக்குப் போறது. கொள்ளைக்காரங்க வரப்போ பாய்ஞ்சு புடிச்சுடறது!”

“கொக்கின் தலையில் வெண்ணெய் வைக்கிறது… அந்த யோசனை கொள்ளைக்காரங்களுக்குத் தெரியாதா? அகப்படமாட்டாங்கப்பா. இதெல்லாம் தெரியாமலா அவங்க வருவாங்க? அதான் லெட்டர்லேயே எழுதியிருக்காங்களே”- சாமியார் சிரித்தார்.

“லாரியைச் சுற்றி வெடிகுண்டைப் போட்டுட்டு ஓடிடுவாங்க. நாம்தான் செத்துப் போவோம். எனக்குத் தோணுது. யாராவது ஒருத்தனை மரியாதையா பலி கொடுத்துட வேண்டியதுதான். என்ன சொல்றீங்க சாமி?” என்று கேட்டான் வேதாசலம்.

“இன்னம் யாருக்காவது லெட்டர் வந்திருக்காமா?”

“எனக்கு வந்திருக்கு. எனக்கு” என்று நாலைந்து பேர் சொன்னார்கள்.

“என்ன செய்யலாம் இப்போ? அதைச் சொல்லுங்க…”

“நம்மிலே ஒருத்தன் பலியாக வேண்டியதுதான். வேறே எந்த வழியும் இல்லே.”

“போலீசுக்குத் தகவல் கொடுத்தால் ஒருவேளை கெடுதலாகவும் முடியலாம். அதனாலே இந்த விசயத்தை நாமே போலீசுக்குத் தெரியாமல் தீர்த்துடறதுதான் நல்லது. இல்லேன்னா நம் எல்லோருக்குமே ஆபத்துதான்” என்றான் வேதாசலம்.

“யாராவது ஒருத்தனை அனுப்பலேன்னா கொள்ளைக் கூட்டம் நம்மைச் சும்மா விடப் போறதில்லை. அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க. அதனாலே…”

“அதனாலே…”

“ஒருத்தனை அனுப்பிடுவோம்.”

“அந்த ஒருத்தன் யாரு? அது தெரியணுமே! இப்ப அதுதான் கேள்வி…” என்றார் சாமியார்.

“நாங்க எல்லாரும் பேசிட்டுதான் இங்கே வந்திருக்கோம். எங்களில் யாருமே அதுக்குத் தயாராயில்லை. ஊர் தப்பணும்னா அதுக்கு ஒரே வழி…” என்று கனைத்துக் கொண்டான் வேதாசலம்.

“என்ன அது?”-சாமியார் கேட்டார்.

“நீங்க பலியாகறதுதான்” என்றான் நாட்டாமை.

“என்னையா பலியாகச் சொல்றீங்க? நான் ஏன் போகணும்? உங்களைக் காப்பாத்த நான் எதுக்குப் பலியாகணும்?”-சாமியார் கேட்டார்.

“ஆமாம். நீங்கதான் ஆண்டி. உங்களுக்குப் புள்ளே குட்டி கிடையாது. குடும்பம் இல்லே. அதனாலே…”

“நான் போயிட்டா அப்புறம் உங்களுக்கெல்லாம் யார் வைத்தியம் செய்வாங்க?”-சாமியார் கேட்டார்.

“அது பரவாயில்லை. வேறே டாக்டர் இருக்காரே!”

“அப்புறம் இந்தக் கோயிலை யார் கவனிச்சுப்பாங்க?”

“நாங்க கவனிச்சுக்கிறோம்…”

“கோயமுத்தூர்லே என் பெண்சாதியும் மகனும் இருக்காங்களே. திண்டிவனத்திலே என் தங்கச்சி இருக்காளே. அவங்களுக்கெல்லாம் என்ன கதி?”

“நாங்க காப்பாத்தறோம்…”

“குமாருவைப் படிக்க வைக்கணுமே…”

“நாங்க படிக்க வைக்கிறோம்.”

“என்னாலே எப்படி உங்களையெல்லாம் பிரிஞ்சு போக முடியும்? எனக்கு மட்டும் உயிர் மீது ஆசை இருக்காதா?”

“இப்ப வந்த காய்ச்சலில் செத்துப் போயிருந்தீங்கன்னா? அந்த மாதிரி நினைச்சுக்குங்களேன்.”

“அடப் பாவிங்களா!”-சாமியார் வயிற்றெரிச்சலோடு கூவினார்.

சாமியார், வேதாசலத்தைப் பார்த்தார். அவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். நாட்டாமைக்காரனைப் பார்த்தார். ரத்னாபாயைப் பார்த்தார். டெய்லர் கேசவனைப் பார்த்தார். ஆப்பக் கடை ராஜாத்தியைப் பார்த்தார். பிளேடு பக்கிரியைப் பார்த்தார். எல்லாரும் தலையைக் கவிழ்த்து கொண்டார்கள். ‘ம்… ம்’ சாமியார் ஒரு முடிவுக்கு வந்தார்.

“உங்களுக்காக, நீங்க வாழறதுக்காக என்னைப் போகச் சொல்றீங்க இல்லையா?” என்று அழுத்தமாக ஆவேசமாகக் கேட்டார்.

“ஆமாம், ஆமாம், ஆமாம், ஆமாம், ஆமாம், ஆமாம்…” – பல குரல்கள்.

“சரி, ஒரு நாள் அவகாசம் கொடுங்க. நாளைக்கு ராத்திரி பத்து மணிக்கு இதே இடத்துக்கு எல்லோரும் வாங்க. என் முடிவைச் சொல்றேன்” என்றார் சாமியார்.

“சரி; சரி; சரி; சரி; சரி; சரி;”

எல்லோரும் மெதுவாகக் கலைந்து சென்றார்கள். கூட்டத்தோடு சேர்ந்து குமாருவும் போனான். பல்லை நற நறவென்று கடித்துக் கொண்டே போறான்.

சாமியார் கட்டிலில் பானரை இழுத்துப் போட்டுக் கொண்டார். சிரித்தார். சார்மினார் பற்ற வைத்து ஊதினார். ஆட்டுக்கார அலமேலு புன்னகை பூத்தாள். “அலமேலு, உன்னை விட்டா போகச் சொல்றே?”

கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டார். வானம் நிர்மலமாயிருந்தது.

தூரத்தில், டெண்ட் சினிமாவிலிருந்து கண்ணதாசன் பாடல் ஒலித்தது.

“போனால் போகட்டும் போடா!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுக்லாம் பரதரம் விஷ்ணும்சுக்லாம் பரதரம் விஷ்ணும்

https://youtu.be/sVRq_FjwEBc   சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.    

உள்ளம் குழையுதடி கிளியே – 22உள்ளம் குழையுதடி கிளியே – 22

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இன்றைய பகுதியில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு கதையின் அடுத்தக் கட்டத்துக்கு உதவுமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா? உள்ளம் குழையுதடி கிளியே – 22 அன்புடன், தமிழ்